← தென்னிந்திய நினைவுகள் 5 ; தமிழக அமைச்சருடன் சந்திப்பு

காலை எழுந்ததும் எனக்குள் ஒரு அவசரம், ஆவல், பரபரப்பு என பல உணர்வுகள் நோய்க்கிருமிபோல தொற்றிக்கொண்டன.

இலங்கையில் அமைச்சர்கள் அதிகாரிகள் என பலருடன் பேசிப் பழகியிருந்தேன். நான் கடமையாற்றும் கால்நடைத் துறைக்குப் பொறுப்பான தொண்டமானை சந்தித்திருக்கிறேன். அநுராதபுரத்தில் பல சிங்கள அமைச்சர்களுடன் நான் பணியிலிருந்த மதவாச்சிய பிரதேசத்தை அபிவிருத்தி செய்வது விடயமாக பேசியிருக்கிறேன். இப்பொழுது சென்னையில் அகதியாக இருக்கும் காலத்தில் ஒரு அமைச்சரை பார்ப்பதற்கு அதுவும் மற்றவர்கள் தேவைக்காக சந்தித்து பேசுவது என்பது எனக்கு உற்சாகத்தை ஊட்டியது.

சென்னைக்கு வந்த பின்பு எனது உடைகளில் எனது கவனிப்பு குறைந்து விட்டது. சென்னை வெய்யிலும் புழுதியும் என்மீது படிந்தன. கால்நடையாகவோ அல்லது பஸ்சிலோ செல்வதால் வேர்த்து கசங்கி இந்த நகரத்தில் பிதுங்கி வழியும் இலட்சோபலட்சம் மனிதர்களில் நீயும் ஒருவன் என்ற சமத்துவ எண்ணத்தை மனத்தில் உருவாக்கிவிட்டது. யார் பார்ப்பது? யார் கேட்பது? மனைவியோ குடும்பமோ இல்லை. வேலையே அற்றவன்தானே என்ற நினைப்பு பெரும்பாலும். ரீ சேட்டுகளும் பாட்டா இரப்பர் காலணியோடு சென்னை வாசியானேன்.

அன்று வெள்ளை சேர்ட், நீளக்கால்சட்டையும், சப்பாத்தும் அணிந்து ஈழஏதிலியர் கழகம் சென்றேன். எனக்காக அங்கு காத்திருந்த காசி விஸ்வநாதன் மாஸ்டர் என்னிடம் ‘பொம்பிளை பார்ப்பதற்கு மாப்பிளை போல வருகிறாய். ஏதாவது சேட்டை விட்டால் அமெரிக்காவில் இருக்கும் மச்சானுக்கு அறிவித்து விடுவேன்’ .எனச் சொல்லிக் கொண்டு அங்கு நின்ற ஓட்டோவில் ஏறினார்.
பதிலளிக்காமல் அவரைப் பின்தொடர்ந்தேன்.

காசி விஸ்வநான் மாஸ்டரைவிட ஈழஏதிலியர் கழகத்தில் ஈழவேந்தன் மூன்று பேரைக் கொண்ட கட்சியை வைத்திருந்தார். அவருடன் பேசிய ஒவ்வொரு தடவையும் மேடம் இந்திராகாந்தியை சந்தித்தது பற்றியே உடைந்த கிராமப்போன் போல் பேசினார். அலுத்துப்போய் மனிதரை தவிர்த்து விடுவேன். சிலவேளைகளில் ஒளித்துவிடுவேன் . செல்வநாயகம் சந்திரஹாசன் வார்த்தைகளை அளந்து பேசுவார். வேறு பலர் இருந்தாலும் எனது பெரும்பாலான விடயங்கள் காசி விஸ்வநான் மாஸ்டரோடுதான் இருந்தது.அவரது மகனோடு படித்த என்னை தனது நண்பனாக நடத்திய அவரது சினேக மனப்பான்மை என்னைக் கவர்ந்தது. எந்த அரசியலிலும் சம்பந்தப்படாது தமிழ் மக்களுக்கு உதவி மட்டும் செய்வது என்ற மனப்பான்மை அவரிடம் இருந்தது. வலதுசாரி போக்காகவும் கொம்யூனிச எதிர்ப்பாளராகவும் அவர் இருந்தாலும் – பத்மநாபாவை ‘அவன்தான் இந்த இயக்கத்தவர்களில் ஒழுங்காகவும் நேர்மையாகவும் இருக்கிறான் என்றும் அடிக்கடி சொல்லுவார்.

பலகாலம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் ஆசிரியராக இருந்ததால் எல்லோரையும் போடா வாடா என்றும் அழைப்பார். அந்த வார்த்தைகளில் அன்பு கசிந்திருப்பதால் எவராலும் அவரைப் புறக்கணிக்க முடியாது. அத்துடன் நேர்மையாக நினைத்ததையே சொல்லிவிடும் இயல்புள்ளவர்.

அவரோடு பழகிய காலங்கள் எனக்கு இனிமையானவை.

அரங்கநாயகம் அமைச்சரை காண்பதற்காக நானும் காசி விஸ்வநான் மாஸ்டரும் அவரது வீட்டு முன்றலில் காத்திருந்தோம். தமிழ்ப் படங்களில் காண்பிப்பதுபோல் வெள்ளை வேட்டி சட்டை அணிந்து மீசையுடன் கரிய நிறத்தோற்றத்தில் அங்கு பலரும் இருந்தனர்.
வழுக்கையும் தொப்பையுமாக பெரும்பாலானவர்கள் அடையாளங்கள் .

83 வன்முறையின் பின்பு இலங்கையின் தெற்குப் பல்கலைக்கழகங்களில் தொடர்ந்தும் படிக்க முடியாது. தமிழ்நாட்டுக்கு வந்தவர்களை அந்த வருடங்களிலே தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கு ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற கோரிக்கை நாம் கைவசம் எடுத்துச்சென்ற கோப்பில் இருந்தது. எம்.ஜி.ஆரின் மந்திரிசபையில் கல்வி அமைச்சரான அரங்கநாயகத்திடம் அதனைக் கையளிக்கவிருந்தோம்.

அந்தக்கோரிக்கை மனுவில் தமிழகம் வந்த இலங்கை மாணவர்கள் சுமார் இருபத்தைந்துபேரின் பெயர்கள் வரையில் இருந்திருக்கலாம். இந்தவிடயத்தில் எங்களை முயற்சி எடுப்பதற்கு தூண்டியவர்கள் யாழ்ப்பாணத்தில் உண்ணாவிரதம் இருந்தபோது விடுதலைப்புலிகளால் தமிழ்நாட்டுக்கு கடத்தி வரப்பட்டவர்களே. அவர்களில் சிலர் ஓஃபர் என்ற ஈழஏதிலியர் கழகத்தில் வந்து இந்தக் கோரிக்கையை வைத்தார்கள். அவர்களால் மீண்டும் இலங்கைக்குப் போய் படிப்பைத் தொடரமுடியாது என்பது தெளிவானபோதே இதை மற்றவர்களுக்கும் ஏற்ற பொதுவான ஒரு கோரிக்கையாக முன் வைத்தோம்.

இப்பொழுது பார்க்கும்போது விடுதலைப்புலிகள் செய்த பொறுப்பற்ற பல செயல்களில் இதுவும் ஒன்றகத் தெரிகிறது. ஆனால் என்ன அந்த மாணவர்களைப் பற்றி எவரும் அக்காலத்தில் கவலைப்படவில்லை. அவர்களின் பெற்றோர்கள் மாத்திரம் தமக்குள் குமைந்தபடி இருந்திருக்கலாம். பலகாலமாக மதிவதனியின், தமிழ்ழாசிரியரான தந்தை ஏரம்பு மாஸ்டர் அவரது ஊரான புங்குடுதீவில் விடுதலைப்புலிகளை திட்டிக்கொண்டிருந்தாக அறிந்தேன்.

அமைச்சரிடம் கொடுப்பதற்கான கோரிக்கை மனுவை ஓஃபரை நடத்திய சந்திரகாசனும் காசி விஸ்வநான் மாஸ்டரும் தயாரித்திருந்தார்கள். என்னைப் பொறுத்தவரையில் நான் தமிழ்ப்படங்களில் எப்பொழுதும் கதாநாயகனுக்கு துணைவரும் துணை நடிகன் போன்று உடன் சென்றேன்.

அமைச்சருக்கு காத்திருந்தோம். எங்களது முறை வந்ததும் உள்ளே சென்றோம். வீட்டின் ஹோலில் அமைச்சர் அரங்கநாயகம் நீண்ட ஷோபாவில் சம்மணமாக வெள்ளை வேட்டி சட்டையணிந்து , புன்னகை செய்வதற்கு விருப்பமற்றவர் போன்று அமர்ந்திருந்தார். அவரைச் சுற்றி பலர் நின்றனர்.

அவர் எங்களை ஏறெடுத்து பார்த்தபோது விஸ்வநாதன் மாஸ்டர் வணக்கம் சொன்னார். நான் அவருக்கு பின்னால் நின்று இலங்கையில் அமைச்சர்களுக்கு சொல்வது போன்று குட்மோர்ணிங் என்றேன்.
அமைச்சர் வார்த்தைகளை வீணாக்க விரும்பாமல் இருந்திருக்கவேண்டும். அமைச்சர் என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஆனால் மாஸ்டரிடம் இருந்து அந்த மனுவை வாங்கிவிட்டு தலையை ஆட்டினார்.

அமைச்சருடனான சந்திப்பு அத்துடன் முடிந்தது. அமைச்சரின் புறக்கணிப்பு எனக்கு ஏமாற்றமாக இருந்தது. வீட்டின் வாசல்வரை திரும்பி வந்தபோது அவரது காரியதரிசி மிகவும் அவசரமாக வந்து கண்களை அகலமாக விரித்தபடி ‘அமைச்சருக்கு வணக்கம்கூட சொல்லத் தெரியாதா? என்ன படிப்பு படித்திருக்கிறாய்? என மிக சீரியசாககேட்டார்.

கறுத்த குண்டான முன் வழுக்கையான அந்த மனிதரைப் பார்த்ததும், அவர் கேட்டவிதம் எனக்கு சிரிப்பைமூட்டியது.

‘மிருகவைத்தியம் படித்தேன்” என்றேன்.

அந்தக காரியதரிசி முகத்தில் கோபம் அடங்காமல் பதில் பேசாமல் திரும்பிப் போய்விட்டார்.

‘இவங்களுக்கு தலைகுனிந்து வணக்கம் சொல்லவேண்டும். அது நீ செய்யவில்லை. அதுதான் பிரச்சினை’ என்றார்.

‘ நான் அப்படி இலங்கையில் புத்த பிக்குகளுக்கு மட்டுமே செய்திருக்கிறேன்’

இலங்கையில் இருந்தபோது அநுராதபுரம் வந்த பல இலங்கை அமைச்சர்கள் அரசாங்க அதிபரால் அறிமுகப்படுத்தப்பட்டதும் சிரித்து இரண்டு வார்த்தைகளாவது பேசுவார்கள். அக்கால விவசாய உதவி அமைச்சர் சந்திரா பண்டாரவோடு விவாதித்திருக்கிறேன். வவுனியா மாவட்ட அமைச்சர் மகிந்தசோம எனக்கு கை ஓங்கி அடிக்க வந்து பின்னர் மன்னிப்புகேட்டார்.

தமிழ்நாட்டில் நிலவுடமை சமுதாய அமைப்பு எப்படியான போலிக் கவுரவங்களை காவியபடி செல்கிறது என்பது எனக்குப் புரிந்தது.

இலங்கையில் பாதிக்கப்பட்ட சிறுபான்மை சமூகத்தில் இருந்து வந்த நான் இலங்கையில் அதிக சுயமரியாதையோடு வாழ்ந்ததாக அந்தச் சம்பவம் எனக்கு உணர வைத்தது.

அந்தக் காலத்து தமிழ்நாட்டு அமைச்சரவையில் பல ஈழத்து அனுதாபிகள் இருந்தார்கள். அதில் முக்கியமானவர் ஓரத்தநாட்டைச் சேர்ந்த சோமசுந்தரம்; அவர் மற்றும் முதலமைச்சரின் சிபார்சில் பல மணவர்கள் நேரடியாக தமிழக பல்கலைக்கழகங்களுக்குப் பிரவேசித்தார்கள். விடுதலைப்புலிகளால் கடத்தப்பட்டவர்களில் விடுதலைப்புலிகளின் தலைவருக்கு மனைவியாகிய மதிவதனியைத் தவிர ஏனையோர் இந்தியாவில் படிப்பைத் தொடர்ந்து நல்ல பதவிகளில்,தொழில் துறைகளில் இருப்பார்கள் என நம்புகிறேன்.
—-
நான் ஈழபுரட்சிகர விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் சந்தித்த விசாகனுடன் சேர்ந்து பாண்டிபஜாரில் உள்ள கல்யாணமண்டபத்தில் மேல்மாடியில் ஒரு சிறிய அறை எடுத்து தங்கினேன். அந்த இடம் போக்குவரத்து , உணவு என பல விடயங்களுக்கும் இலகுவாக இருந்தது. எங்கள் அறைக்குப்பக்கத்தில் சினிமாத் துறையை சேர்ந்தவர்கள்: உதவி இயக்குநர்கள் தங்கியிருந்தார்கள். அவர்களிடம் பேசுவதன் மூலம் சினிமாவைப்பற்றியும் நாங்கள் அறிந்தோம். அவர்களுக்கு ஈழத்து பிரச்சினையை விளக்கினோம்.

இதில் ஒரு முக்கியமான விடயம் தமிழ்நாட்டில் இலங்கைப்பிரச்சினையை அறிந்தவர்கள் என்றால் இடதுசாரிகள் மட்டுமே. அவர்களுடன் மட்டுமே புத்திசாலித்தனமாக உரையாடலை நடத்த முடியும்.

மற்றவர்கள் தமிழ் சிங்கள இனப்பிரச்சினையை – அதாவது சிங்களவர் தமிழரை கொல்கிறார்கள் என்ற தோரணையில் மட்டுமே புரிந்து கொண்டிருந்தார்கள். அக்காலத்தில் பலருக்கு சிலோன் என்ற பெயர் ஸ்ரீலங்காவாக மாறிவிட்டதும் தெரிந்திருக்கவில்லை.
இதற்கு ஏற்றாற் போலவே தமிழ்நாட்டு ஊடகங்களும் செய்திகளை வெளியிடுவார்கள். இலங்கையில் தென்பகுதியல் தமிழர்கள் வாழ்வதோ இஸ்லாமியர்கள் தமிழ் பேசுவதோ அவர்களுக்குத் தெரியாது. பெரும்பாலன தமிழ் இயக்கங்களும் இந்த விடயத்தை கறுப்பு- வெள்ளையாக வைத்திருப்பது நன்மை என நினைத்து அந்த உணர்வையே அங்கு வளர்த்தார்கள்.

இடதுசாரி இயக்கங்களான ஈழவிடுதலை அமைப்பு , ஈழப்புரட்சிகர விடுதலை முன்னணி என்பனவும் இதையே செய்தார்கள்.

நான் பாண்டிபஜாரில் இருந்த காலத்தில நடந்த சம்பவங்கள் பல சுவையானவை. குறிப்பிடத்தக்தவை
விடுதலைப்புலிகள் தமிழ்நாட்டில் அக்காலத்தில் பயிற்சி முகாம்களை நடத்தியபோது அந்த முகாம்களில் பயிற்சிக்குப் பொறுப்பான குகன் என்ற பொன்னம்மான் என்னை கோடம்பாக்கத்தில் தெருவில் ஒருநாள் தான் வந்த ஜீப்பை நிறுத்தி என்னைச்சந்தித்த போது ஆச்சரியத்துடன் வரவேற்றேன்.

குகனது வீடு இருக்கும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு அருகே இருக்கும் சீனியர் லேனில்தான் சிலகாலம் நாங்கள் குடியிருந்தோம்

எனது வீட்டுக்கு அருகில்தான் அவனது வீடும் இருந்தது. குகன் எனக்கு ஒரு வகுப்புக்கு கீழே இந்துக்கல்லூரியில் படித்தாலும் சிநேகிதமாக இருந்தோம்.குறைந்தது வாரத்துக்கு இருமுறையாவது எனது வீட்டுவாசலில் சைக்கிளை நிறுத்திப் பேசி விட்டுத்தான் போவான். இது நடந்த காலம் 1971- 1972 அளவில். இதேவேளை எனக்கு ஒரு மேல் வகுப்பு படித்த அவனது அண்ணன் நரேன், யோகி மாஸ்டர் என்ற பெயரில் பிற்காலத்தில் விடுதலைப்புலிகளின் அரசியல் பொறுப்பாளராக இருந்தவர் ஆனால்அவனுடன் பழகி இருந்தாலும் அதனை நட்பு என்று சொல்லமுடியாது உருவத்தில் மாத்திரமல்ல குணத்திலும் இருவரும் வேறானவர்கள். நரேன் காலையில் பறித்த திராட்சைபோலும் குகன் சுல்தானா போலும் இருப்பார்கள். குகன் உணர்வுமயமாகவும் நட்பாகவும் நடப்பான். நரேன் ஒரு கம்பனியை நடத்தும் முதலாளிபோன்ற தன்மையுடன் பழகுவான்

குகன் ஆரம்பத்திலேயே விடுதலைப்புலிகளில் சேர்ந்ததால் அவனுடைய குடும்பம் இலங்கை அரசாங்கத்தின் பல நெருக்கடிகளை சந்தித்ததை நான் அறிவேன். குகனில் நட்புடன் அவனது தன்னலமற்ற செயலால் அவன்மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருநதேன்.
சென்னைத் தெருவில் எதிர்பாராமல் அவனைக்கண்டது சந்தோசமாக இருந்தது.

‘இந்தியாவில் என்ன செய்கிறாய்?’ எனக்கேட்டு நேரடியாக விடயத்திற்கு வந்தான்.

‘ நான் ஓஃபர் நிலையத்துடன் தன்னார்வமாக வேலை செய்கிறேன்’

‘ இவர்கள் பிரயோசனம் இல்லாதவர்கள். எங்களிடம் வந்து உதவி செய். அத்துடன் உனது மனைவியால் எங்களுக்கு மருத்துவ உதவியளிக்கவும் முடியும். மாதம் வாழ்க்கைச்செலவுக்கு 3000 ருபாய் தருவதற்கு நான் பொறுப்பு’
அவசரமாக என்னை விலைபேசி முடித்தான்.

‘ எனக்கு பணம் பெரிதல்ல. நான் உங்களுக்கு முடிந்த உதவிகள் செய்ய சம்மதம். அதேவேளை மற்றவர்களுக்கும் நான் உதவிகள் செய்வது உங்களுக்கும் சம்மதமென்றால் நான் தயார்.’ என்றேன்.

‘ அது சரிவராது. நீ எங்களுடன் மட்டும்தான் இருக்கவேண்டும்’

‘ அது எனக்குச் சரி வராது. நான் சுதந்திரமான ஒரு சேவையில் ஈடுபடத்தான் விரும்புகிறேன்.” என்று சொல்லிவிட்டு தமிழ்விடுதலை இயக்கங்களின் ஒற்றுமையை வலியுறுத்தினேன்.

‘ உனது வீட்டில் வேறு ஒருவரை குடியேற்ற சம்மதமா?’ என்ற ஆத்திரமான குரல் அவனிடமிருந்து தொனித்தது.
மேலும் இவனிடம் பேசிப் பிரயோசனமில்லை என கதையை மாற்றினேன்.

‘ நான் இங்கு வந்து சில வாரங்கள்தான். என்ன செய்வது என யோசிக்கிறேன். மேலும் படிப்பதற்கும் ஒரு எண்ணமுள்ளது’ என்றேன்.

குகன் என்னிடமிருந்து விடைபெற்றான்.

விடுதலைப்புலிகளிடம் இருந்த ஏகபோகமான குத்தகைத்தன்மை அவர்களது தலைவரில் இருந்து வெளிநாடுகளில் அவர்களின் ஆதரவாளர்களர்கள வரையில் புற்றுநோய்போல் பரவியிருந்தது.இதுவே இவர்களது உயிர்க்கொல்லியாக மாறியது. இந்தத் தன்மையை பல தமிழ் புத்திஜீவிகள் புரிந்து கொள்ள முடியாது போனது கவலைக்கிடமானது. வேறு ஒரு நாகரீகமான சமூகத்தில் இப்படி ஒரு இயக்கத்தால் தலை எடுக்க முடியாதிருந்திருக்கும்.

விடுதலைப்புலிகளின் ஆரம்ப காலத்து அங்கத்தவர்கள் பலர் விடுதலைப் புலிகளில் இருந்து விலகியபோது வேறு காரணங்களைச் சொல்லியபோதும் இந்தமாதிரியான எதேச்சாதிகாரமான போக்கை ஷோபாசக்தி போன்ற ஓரிருவர் தவிர மற்றவர்கள் வெளிக்கொணரவில்லை.

இலங்கை அரசாங்கத்தையும் இராணுவத்தையும எதிர்ப்பதற்கு விடுதலைப்புலிகளின் எதேச்சதிகாரம்தான் வலுவான ஆயுதம் என நினைத்து மவுனம் காத்தார்கள்.

இதன் தொடர்ச்சிதான் பிற்காலத்தில் முழுச்சமூகமும் அழிந்து மீண்டும் புத்துயிர்ப்பு அடையவேண்டிய தேவையை உருவாக்கியிருக்கிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: