தென்னிந்திய-நினைவுகள்4;சிக்னல் பற்பசை தலையிடி மருந்தாகியது.


அமிஞ்சிக்கரையில் அடுக்கு மாடியில் ஒரு வீட்டில் காசி விஸ்வநாதன் மாஸ்டர் மனைவியுடன் இருந்தார். மாஸ்டரும் மனைவியும் ஏற்கனவே என்னுடன் படித்த செல்வகுமாரின் பெற்றோர்கள் என்பதால் ஏற்கனவே அறிமுகமானவர்கள்.
அவர்கள் வீட்டில் பரந்தாமன் என்ற சிறுவயது நண்பன் எனக்கு ஞானம் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், ஈழமக்கள் புரடசிகரமுன்னணியின் முக்கியஸ்தராகவும் காசி விஸ்வநாதன் மாஸ்டரால் அறிமுகப்படுத்தப்பட்டார்.

என்னுடன் படித்தவர்கள் இப்படி அரசியல் முக்கியஸ்தர்களாக இருப்பது ஒருவிதத்தில் ஆச்சரியமளித்ததுடன், அந்த அறிமுகம் எனக்கு அதிர்ச்சியையும் தந்தது.

அதுவரையும் இயக்கம் என்பது எனக்கு தெரியாத – சம்பந்தப்படாதவர்கள் என்ற சிந்தனைதான் இருந்தது. நான் நினைக்கிறேன். பல மத்திய வகுப்பினருக்கு பொதுவானதாக அந்த சிந்தனை இருக்கும். 83 கலவரம், தூரத்துப் பச்சையாக இருந்த ஆயுதக்குழுக்களை தங்களவராக நினைக்க வைத்திருக்கும் எமது யாழ்ப்பாணத் தமிழ் மக்களுக்கு. ஆனால் நான் சிங்களப்பகுதிகளில் வேலை பார்த்தபடியால் அந்த எண்ணம் என்னைத் தொற்றிக் கொள்ள இந்தியா வரவேண்டியிருந்தது. ஒருவன் வாழும் சூழ்நிலை, அவனது சிந்தனை, கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளை உருவாக்குகிறது என்பது எவ்வளவு சரியானது என்பதை அத்தருணத்தில் உணர்ந்தேன்

பரந்தாமன் ஒரு வித்தியாசமானவனாக மாணவனாக படிக்கும் காலத்தில் இருந்தான். யாழ்ப்பாணம் இந்துக்கல்லுரியில் வேறு வகுப்பில் படித்தாலும் ஒரே தரத்தில்தான் இந்துக்கல்லூரியில் சேர்ந்தோம். பல வருடங்கள் பழகிய நட்பு.அக்காலத்தில் விடுதியில் இருந்தபோது எமது பொதுவான பொழுதுபோக்கு தமிழ்சினிமாப் படங்கள் பார்ப்பது. இதைத்தவிர அக்காலத்தில் முக்கிய நடிகருக்கு இரசிகர்களாக இருந்து அவர்கள் பற்றி பேசுவதும் அவர்கள் பற்றிய தகவல்கள் சேரிப்பதும் எமது கல்லூரி வாழ்வில் முக்கிய அமம்சங்களாக விளங்கின.
நான் சிவாஜி கணேசனது இரசிகன். அதேபோல் பலர் எம்ஜி இராமச்சந்திரன், ஜெய்சங்கர் முதலானவர்களது இரசிகர்களாக இருந்தார்கள். ஆனால் அப்பொழுது சாந்தி நிலையம் என்ற திரைப்படத்தில் சிறுமியாக நடித்த மஞ்சுளாவுக்கு இரசிகனாகவும் அந்த சாந்திநிலையம் படத்தை ஒன்பது தடவைகள் பார்த்தவனாகவும் இருந்த நண்பன் பரந்தாமன் மட்டும்தான்.

அதனால் அவன் வித்தியாசமான சினிமா இரசிகனாக எம்மிடையே அறிமுகமானான். எப்பொழுதும் பரந்தாமனை பார்க்கும் போது நடிகை மஞ்சுளாவின் உருவம் எனக்கு மனதில் நிழலாடும்.

காலங்கள் கடந்து நான் பல்கலைக்கழகம் போனபின் பரந்தாமனது தந்தையார் இறந்தார் என்ற தகவல் காதில் விழுந்தது. வாழ்க்கை என்ற இரயில் பிரயாணத்தில் வேறு வேறு திசைகளில் பயணப்பட்டதால் நாங்கள் பிற்காலத்தில் பல வருடங்களாக சந்தித்துக்கொள்ளவில்லை

மாஸ்டர் வீட்டில் சந்தித்த பரந்தாமனைக்கண்ட வியப்பிலிருந்து மீள்வதற்கு முன்னால் பரந்தாமன் என்னிடம் ‘உனது நண்பர் குண்சி என்பவர் இங்கே இருக்கிறார்’ – என்றபோது இந்துக்கல்லுரியின் விடுதியில் இருந்த இடைக்காட்டைச் சேர்ந்த குணசேகரம் என்பவர் மனதில் வந்து சென்றார்.

அவரை நான் மதவாச்சியில் வேலை செய்யும் நாட்களில் ஒரு நாள் யாழ்ப்பாணம் பஸ்நிலையத்தில் சந்தித்தேன். அந்த மாலைநேரத்தில் தாடிவளர்த்த ஒருவர் கையில் சுரண்டியபோது திரும்பினேன். பார்ப்பதற்கு பிச்சைக்காரன்போல் தாடிவளர்த்து தலையில் ஒரு டவலால் மொட்டாக்கிட்டபடி இருந்தார்.

என்னிடம் ‘எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டுவிட்டு தாழப் பறந்து முகத்தருகே வந்துவிட்டு மீண்டும் பறந்து சென்ற பறவைபோல் மறைந்துவிட்டான். பின்பு யோசித்தேன் – அவன் வாழ்வு ஏதோ தலைமறைவு வாழ்வு போல் இருக்கிறது என்று.

‘வேறு யார் நமக்கு தெரிந்தவர்கள் நம்மோடு படித்தவர்கள் இங்கே இருக்கிறார்கள்?’ புதிய இடத்தில் அறிமுகமானவர்களை தெரிந்து கொள்ளும் சாதாரண விருப்புடன் கேட்டேன்.

‘குகனும், ஹரிசந்திரா என்ற இந்துக்கல்லூரியில் படித்தவர்கள் இருவர் புலியோடு இருக்கிறார்கள்.

‘அப்படியா ஹரிசந்திரா இயக்கத்தில் இருப்பான் என கற்பனை பண்ணமுடியாது எனக்கு.
இப்படி பேசிக் கொண்டிருந்தபோது ‘இரண்டு இளம்தாரியள் இருக்கிறீர்கள்’ எங்களை நோக்கி சொல்லிக்கொண்டு என ஒரு லீட்டர் பிளாக் அன்ட் வையிட் போத்தலை எங்கள் முன்பு வைத்தார் மாஸ்டர

அந்த போத்தில் மதுவோடு வேறு சில விடயங்களும் வெளியே வந்தன.

பரந்தாமன் இராணுவத்தால் பிடிக்கப்பட்டு ஜெயிலில் இருந்தது தெரியவந்தது. வாழ்க்கையில் பொலிஸ் ஸ்ரேஷனே போய் இராத எனக்கு இத்தகவல் பெரிய விடயமாக இருந்தது.

நான் படிக்கும் காலத்தில் வண்ணையானந்தன், மாவை சேனாதிராசா, காசியானந்தன் போன்றவர்கள் சிறையில் இருந்து வெளிவரும்போது அவர்களுக்கு நடந்த வரவேற்புக் கூட்டங்களையும் இரத்த திலகங்களையும் உணர்வு கொந்தளிக்க பார்த்திருக்கிறேன்.
அக்காலத்தில் சிறை மீண்ட செம்மல் என்ற வார்த்தைகள் எனக்கு அடிக்கடி காதில் விழுந்தன. சங்கிலித் திருட்டில் யாழ்ப்பாணத்தில் சிறைசென்றவர்களும் தங்களை சிறை மீண்ட செம்மல்களாக காட்டிக் கொண்டார்கள். படித்த இளைஞர்களுக்கு எப்பொழுதும் யாழ்ப்பாணத்தில் மரியாதை இருந்தது. பிற்காலத்தில் இப்படியான “செம்மல்களால்” அந்தச் செல்வாக்கு சரிந்தது உண்மையே.

‘அப்ப நமது பரந்தாமனும் சிறை மீண்ட செம்மல்தானே?”

‘உனக்கு நக்கலாக இருக்கு. மேலும் சிலநாட்கள் நான் இருந்திருந்தா நான் வெலிக்கடையில் கொலை செய்யப்பட்டிருப்பேன்.”

நான் கவலையடைந்த மனநிலைக்குப் போனேன்.

‘நான் குட்டிமணி , ஜெகன் போன்றவர்களோடு சிறையில் இருந்தேன். 83 ஜுலை கலவரத்ததுக்கு சிலநாட்கள் முன்பாகத்தான் வெளியே வந்தேன். இருந்திருந்தால் நானும் அம்போதான்.

‘அது சரி, குட்டிமணி தங்கத்துரை முதலானோர் பிடிபடுவதற்கு பிரபாகரன்தான் காரணம் என பலர் பேசுகிறார்கள். அதில் உண்மையுள்ளதா?” என்றபோது-

‘தம்பிமாரே இங்கே இந்த விழல் கதைகளை கதையாதீங்க” என்றார் மாஸ்டர்.

‘குட்டிமணியும் தங்கத்துரையும் அப்படி நம்புகிறார்கள். மேலும் குட்டிமணி “வெளியே சென்றபின் அந்த முழியனுக்கு நான் யார் என காட்டுகிறேன் என கூறியதை எனது காதால் கேட்டேன்” என்று பரந்தாமன் சொல்லியபோது மீண்டும் மாஸ்டர் ‘இந்தக் கதைகளை விடுங்க. உறுதிப்படுத்த முடியாதவை.’ என்றார்

81 ஆம் ஆண்டில் சித்திரை மாதம் தங்கத்துரை குட்டிமணி ஆகியோர் கடற்கரையில் காத்திருந்த போது அவர்களுக்கு பிரபாகரன் இந்தியா செல்ல படகோட்டியை ஒழுங்கு பண்ணுவதாக இருந்தது . அந்தப் படகோட்டிக்கு காத்திருந்த போது கைது செய்யப்பட்டதாக அரசல்புரசலாக சில கதைகள் யாழ்ப்பாணத்தில் உலாவின. ஆனாலும் மாஸ்டரின் வீட்டில் அவரது பிளக் அன்ட் வைட்டைக் குடித்துக்கோண்டு இதற்குமேல் கதைப்பது நாகரீகமில்லை என்பதால் அந்தப் பேச்சுகளை விஸ்கியுள் அமிழ்த்தினோம்.

மாஸ்டரின் மனைவி கொண்டு வந்த தோசையை சாப்பிட்டுவிட்டு அன்று இரவு அவரது வீட்டில் தங்கினேன் என்பதைவிட தரையில் கிடந்தோம் என்பதே உண்மை

பரந்தாமன் என்ற ஞானத்தின் அழைப்பின் பேரில் எபிக் என்ற ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் தகவல் நிலையத்திற்கு சென்றேன். சூளைமேட்டில் ஒரு கட்டிடத்தின் மேல்மாடியில் அது அமைந்திருந்தது. அங்கிருந்தவர்கள் இனிய முகத்துடன் தோழர் என வரவேற்றது மட்டுமல்லாமல் அன்று இரவு சாப்பாடும் தந்தார்கள்.

ஐந்து தமிழ், ஆங்கில பத்திரிகைகள் மற்றும் புத்தகங்கள் இருந்தன. இரண்டு மணிநேரம் அங்கு இருந்து விட்டு வெளியே வந்தபோது வாசலில் நான் கழற்றிப் போட்ட செருப்பைக் காணவில்லை. மற்றவர்களது செருப்பை எடுக்கவும் மனமில்லாமல் வெறும் காலோடு ஆர்காடுரோட்டில் அரைக்கிலோ மீட்டர் சென்று புதிய இரப்பர் செருப்பை வாங்கி அணிந்து கொண்டு அறைக்கு வந்து சேர்ந்தேன்
செருப்பை பறி கொடுத்தாலும் தோழமையான அந்த இடம் என்னைக் கவர்ந்து விட்டது. மேலும் எனது பால்யகால நண்பரான குண்சி – நீ எப்பொழுதும் இங்கு வரலாம் எனச் சொல்லியிருந்தர். தொடர்ச்சியாக புத்தகத்தை வாசித்துக்கொண்டு இருந்துவிடுவேன். அந்த இடத்தில் பேசுவதற்கு துணையும் வசிப்பதற்கு புத்தகங்களும் எனது முக்கியமான கவர்ச்சியாக இருந்தன.

சில இரவுகள் எபிககில் படுத்தும் உள்ளேன். அழுக்கான தலையணைகளை போட்டுக்கொண்டு தரையில் படுத்துவிடுவேன்;. நடு இரவில் எழும்பியபோது தலைக்கு கீழ் இருக்கும் தலையணை காணாமல் போய்விடும்.சுற்றியுள்ள சுவரில் உள்ள கார்ல் மார்க்ஸ், லெனின், ஸ்ராலின் போன்றவர்கள் படங்களில் இருந்து வெளியேறி ‘எப்பொழுது நீ கம்யூனிஸ்டாக மாறுவாய்’ என முறைத்தபடி இருந்தன.அங்கு மாவோவின் படம் இல்லாதது கொஞ்சம் ஆறுதலை அளித்தது. என்னைப் பொறுத்தவரை கம்யூனிசத் தத்துவங்களை படித்தறிய முடிந்த இடம் அந்த எபிக்கேயாகும். அவுஸ்திரேலியா வரும்வரைக்கும் அக்காலத்திலே மாவோ ஸ்ராலினை உலக வரலாற்றில் மாபெரும் கொலைகாரர்களாக இனம்கண்டு கொண்டாலும் லெனின்மீதும் கார்ல் மாக்ஸின் பாலும் இளம் சிவப்பு அபிமானம் இருந்தது.

84 ஆம் வருடம் வைகாசி மதிய வெயில்வேளை – நான் எபிக்கில் இருந்த போது ரோட்டில் பெரிதாக சத்தம் கேட்டது. மாடிப்படிகளில் இறங்கி எபிக் கட்டிடத்திற்கு அருகே உள்ள சிறிய பாதையைப் பார்த்தபோது பல ஈபிஆர்எல்எவ் தோழர்கள் ஒரு முப்பது வதான மனிதரை மொத்து மொத்தென அடித்தார்கள். அவன் அம்மே, அம்மே என சத்தமிட்டான்.

சிங்கள உளவாளி என சிலர் கூக்குரல் இட்டார்கள். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஒரு மனிதனை பலர் அடிப்பதை பார்ப்பது இதுவே முதலாவது தடவை.

ஒருவர் – அடிப்பதை நிறுத்திவிட்டு விசாரித்தபோது அந்த மனிதன் மலையாளி எனப்புரிந்தது.

அவன் அம்மே என்றது இவர்களுக்கு அவனை ஒரு சிங்களவராக அடையாளம் காட்டியிருக்கிறது.

இந்தச் சம்பவத்தை அதில் பங்கு பற்றியவர்கள் மறந்திருக்கலாம். ஆனால் என்னால் மறக்கமுடியாத சம்பவம் அந்த அடிவாங்கிய மலையாளத்து மனிதன் மெதுவாக திரும்பி பார்த்தபடி நடந்து போனது – அடித்தவர்கள் அவனிடம் மன்னிப்புக் கேட்டது – அடித்த தோழர்கள் பலர் மனம் நொந்து பேசியது என்பன என்னால் மறக்கமுடியாத காட்சிகள்.

நல்லவேளை அப்பாவியான ஒரு சிங்களவர் அகப்பட்டிருந்தால் அவரது நிலை எப்படி இருக்கும் என்பதையும் அந்தக்கணத்தில் எண்ணிப் பார்க்கவும் மனம் தவறவில்லை.

ஒரு மாலை நேரம் சினிமாவுக்குச் சென்றுவிட்டு ஒரு நாள் எபிக்கிற்கு போனபோது மிகவும் தலையிடியாக இருந்தது . அங்கிருந்த தோழர்களிடம் தலைவலி மருந்து கேட்டேன்.

எல்லோரும் இல்லை என்று சொன்னார்கள்.

அப்போது ஆறடி உயரமான நெய்யில் வளர்ந்த செழிப்பான உடலுடன் ஒருவர் சிரித்தபடி வந்தார். எனது வயதுதான் இருந்தாலும் – அவரது உடலும் புன்னகையும் அவரை மதிப்புக்குரிய மனிதராக உயர்த்தி விட்டது.

இயக்கத்தவர்கள் எல்லோரும் மெலிந்தவர்கள். அதுவும் ஈழமக்கள் புரட்சிகர முன்னணியினர் நித்திய பஞ்சத்தில் எத்தியோப்பியா சோமாலி நாட்டில் வாழ்ந்தவர்கள் போன்ற தோற்றம் உடையவர்கள். மேலும் அவர்களுக்கு கிடைக்கும் உணவைத்தான் நான் பார்த்திருக்கிறேன் . பகிர்நதிருக்கிறேன் . நிச்சயமாக இந்த மனிதர் அவர்களில் ஒருவராக இருக்க முடியாது என்பதை எனது உள்ளுணர்வு சொல்லியது.

அந்த செழிப்பான மனிதர் இதோ நான் மருந்து தருகிறேன் எனக் கூறிவிட்டு ஏதோ வெள்ளைப்பசையை எடுத்து எனது நெற்றியில் சூடு ஏறத் தேய்த்தார். நானும் மனிதர் ஏதோ வைத்தியம் தெரிந்தவர் என நினைத்து அவர் தேய்த்தபின்னர் எனது அறைக்குச் சென்று படுத்து விட்டேன். நிச்சயமாக தலையிடி குறைந்துவிட்டதாக உணர்ந்தேன்

அடுத்த நாள் நான் எபிக்கிற்கு சென்ற போது குன்சி அங்கு என்னை கையில் பிடித்து சமையல் அறைக்கு அழைத்துச் சென்று ‘நீ கொஞ்ச நாளைக்கு இங்கு வரவேண்டாம்’ எனச் சொன்னார். அதற்கு எதுவும் கேட்காமல் – நான் வெளியே வந்தபோது முதல்நாள் நான் சந்தித்த
அதே மனிதர் வந்து ‘எப்படி தலையிடி? என்றார் சிரித்தபடி

‘ஏதோ உங்கள் புண்ணியத்தில் இரவு தூங்க முடிந்தது’

‘நான் உங்களுக்கு நெற்றியில் தடவியது சிக்னல் பற்பசை’ என சிரித்து விட்டு தனது பெயர் விசாகன் யாழ்ப்பாணம்ப் பல்கலைக்கழகத்தில் படித்தேன் என அறிமுகமானார். அவருடன் அன்று அவரது பல்கலைக்கழக நண்பனான மகேஸ்வரராஜாவும் சேர்ந்து கொண்டார்.

எனது மனதில் எதற்கு என்னை வரவேண்டாம் என சொன்னார்கள் என்பது தலைக்குள் வண்டாக குடைந்து கொண்டிருந்தது. ஏதாவது ஓபரேசன் இலங்கையில் செய்யப்போகிறார்கள் என விசாகன் கோடி காட்டினார்.

ஏற்கனவே செல்வநாயகம் சந்திரகாசனோடு ஒஃபரில் தான்வேலை செய்வதாகவும் அங்கு வந்து தனக்கு ஒத்தாசை செய்யும்படியும் காசி விஸ்வநாதன் மாஸ்டர் கூறியிருந்தார்.

அடுத்த நாள் எக்மோரில் உள்ள ஒஃபரது அலுவலகத்திற்குப் போன போது மாஸ்டர் – ‘ஏன் இவ்வளவு நாளும் வரவில்லை?’ எனக்கேட்டார்.

‘ஞானத்தின் ஆட்களோடு இடத்திற்கு போய் வந்தனான்’ என்றேன்.

‘அவன்கள் சரிப்படான்கள். அவன் நாபா மட்டும்தான் நல்ல மனுசன். இவன்கள் தேவையில்லாத கம்யூனிசம் பேசிக்கொண்டு நேரத்தை வீணாக்குகிறார்கள். புலியளைப் பார் – அவர்கள் இந்த மாக்சிசம், கம்யூனிசம் என்று ஏதாவது பேசுகிறார்களா ? அவங்களுக்கு தெரியும் சிங்களவருக்கு எங்கேயடித்தால் விடயம் நடக்கும் என்று’ – என்று மாஸ்டர் பேசிய விடயங்கள் தெளிவாக புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்தன.

ஆனால் புலிகளின் போக்கு சரி என என்னால் எண்ண முடியவில்லை. என்னைப் பொறுத்தவரை ஆயுதப்போராட்டத்தை மறுக்க முடியாதபோதிலும் மனிதாபிமானமான விடயங்களில் ஈடுபடுவது சாலச்சிறந்தது என நினைத்தேன்.

‘பேராதனை – கொழும்பு என பல்கலைக்கழகத்தில் இருந்து அரைவாசியில் படிப்பு முடியாமல் பல மாணவர்கள் இங்கு வந்துள்ளார்கள். அவர்களுக்கு தமிழ்நாட்டில் பல்கலைக்கழகத்தில் இடம் எடுப்பது சம்பந்தமான வேலையை நான் செய்கிறேன். அது விடயமாக கல்வி அமைச்சர் அரங்கநாயகத்தை நாளை சந்திக்கவேண்டும். அதற்கு நீ வருகிறாயா’ எனக்கேட்டார் மாஸ்டர்.
அடுத்த நாள் கல்விஅமைச்சரை சந்திப்பதற்கு நான் தயாராகினேன்;.

“தென்னிந்திய-நினைவுகள்4;சிக்னல் பற்பசை தலையிடி மருந்தாகியது.” அதற்கு 2 மறுமொழிகள்

  1. ஶ்ரீஸ்கந்தகுமார். K. V. S. Avatar
    ஶ்ரீஸ்கந்தகுமார். K. V. S.

    இந்த ‘குண்சி’ குணசேகரம் உங்களுக்கு இந்து கல்லூரியில் சீனியரா? இடைக்காட்டு பைங்கிளி செல்வவேலின் உறவினரா?
    அப்படியானால், எனது வகுப்பில் இருந்தவரகளே இருவரும்.

  2. உண்மைதான் அவர் இ;காட்டைச்சேர்ந்தவர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: