நோயல் நடேசன்
மகாத்மா காந்தியின் பேத்தியென்றபோது காந்தியை நினைப்பது தவிர்க்க முடியாது. ஒரு ஆங்கிலேயர் எழுதிய புத்தகத்தில் பலகாலம் முன்பாக படித்தது: எப்பொழுதும் எனக்கு நினைவில் இருப்பது: இந்தியாவின் பிரிவினை காலத்தில் இந்திய வைசிராயாக இருந்த மவுண்ட் பேட்டன், காந்தியைச் சந்தித்து “என்னிடம் அரை இலட்சம் இந்தியப்படைகள், ஐம்பதினாயிரம் பிரித்தானிய துருப்புகள் உள்ளார்கள். பஞ்சாப் பிரியும்போது ஏற்படும் அசம்பாவிதங்களில் இருந்து என்னால் பார்த்துக்கொள்ள முடியும். நீங்கள் வங்காளம் சென்று அமைதியைப்பேணமுடியுமா? என்று கேட்டபோது, காந்தி வங்காளம் செல்கிறார். இறுதியில் வங்காளத்தில் பிரிவினை காலத்தில் எந்த உயிர்ச்சேதமும் நடக்கவில்லை. ஆனால் பஞ்சாப்பில் கொலைகள் பாலியல் வன்முறைகள் பல இலட்சக்கணக்கில் நடந்தன.
இவ்வருடம் மெல்பனின் இலையுதிர்கால மாலை நேரத்தில் மகாத்மா காந்தியின் பேத்தியும் அவரது இரண்டாவது மகனான மணிலால் காந்தியின் மகளுமான எலா காந்தியுடன் மற்றைய பத்திரிகையாளர்களுடன் இணைந்து உரையாடும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது.
ஒருகாலத்தில் அவுஸ்திரேலிய சுங்க அலுவலகமாக இருந்த கட்டிடம் தற்பொழுது குடிவரவாளர்கள் சம்பந்தமான நிரந்தர கண்காட்சியிடமாக மாறியுள்ளது. மெல்பன் டீக்கின் பல்கலைக்கழகத்தின் அனுசரணையில் மகாத்மா காந்தியின் வரலாறு டிஜிட்டல் முறையில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
இந்தியாவில் இருந்து இங்கிலாந்து, பின்பு தென்னாபிரிக்கா, பின்பு இந்தியா என்று காந்தியின் வாழ்க்கை வரலாறை இலகுவாக மெல்பன் இளைய சமூகத்திற்கு பார்க்க முடிந்தது. அந்துடன் இந்திய கலாசார நிகழ்ச்சிகளையும் தொடர்ந்து பல நாட்களாக அங்கு நடத்தினார்கள்.
மெல்பனில் நடந்த காந்தியின் கண்காட்சியின் பொருட்டு தென்னாபிரிக்காவில் இருந்து எலா காந்தி வந்திருந்தார். தென்னாபிரிக்காவில், தென்னாபிரிக்கா இந்திய காங்கிரஸ் அங்கத்தவராகவும், தொடர்ச்சியாக நிறபேத அரசுக்கு எதிராக போராடியதால் ஒன்பது வருடங்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு இருந்ததுடன், தனதுதொரு மகனையும் போராட்டத்தில் இழந்தவர்.
நட்டால் பகுதியில் 10 வருடங்களாக நாடாளுமன்ற அங்கத்தவராகவும் பல நாடளுமன்ற நிறைவேற்றுக் குழுக்களில் அங்கம் வகித்தவர். இந்திய அரசாங்கத்தால் பத்ம பூஷண் விருதையும் தென்னாபிரிக்கா அரசால் பலமுறை கவுரவிக்கவும்பட்டவர்.
நமது குடும்பத்தில் மூத்த பெண்மணி ஒருவருடன் உரையாடுவதுபோல் இருந்தது. எலாகாந்தியின் வாயில் இருந்து சொற்கள் புதிதாகத் தவழும் குழந்தையாக மெதுவாக வந்தபோதும் அவை காத்திரமானவை. பல பக்கங்களில் எழுதவேண்டிய விடயங்கள் சில சொற்களில் புகுத்தப்பட்டு, மந்திரித்த சுலோகம் வைத்த தாயத்தாகத் தெரிந்தது.
அவருடன் உரையாடியபோது மகாத்மா காந்தியுடன் சிறுமியாக இருந்த மூன்று மாதங்களை நினைவு கூர்ந்தார். அக்காலத்தில் பெரிய அரசியல் தலைவர்கள் வந்து போனபோதிலும் தாத்தாவிடமிருந்து கிடைத்த தொடர்ச்சியான கவனிப்பு தன்னால் இன்றும் மறக்க முடியாது. இப்படியான கவனிப்பு தற்காலத்தில் பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கு கிடைப்பது குறைவாக இருக்கிறது. அதிலும் ஆரம்ப காலத்தில் குழந்தைகளின் வாழ்வில் பெற்றோரின் கவனிப்பு முக்கியமானது. மேலும் குழந்தைகளைப் பற்றிக் கூறியபோது, குழந்தைகள் பெற்றோரிடமிருந்து உபதேசத்தைக் கேட்பதைவிடப் பெற்றோரது நடத்தைகளைப் பார்த்து வளர்கிறார் என்றார்.
இக்காலத்தில் உள்ள இளம் சந்ததியினருக்கு காந்தியினது வாழ்வில் இருந்த வன்முறையைத் ஒழித்தல், மட்டற்ற நுகர்வு கலாசாரத்திற்கு எதிரான கொள்கை, மற்றும் நமது சூழலைப் பாதுகாப்பது என்பன முக்கியமான செய்திகளாகும். அத்துடன், மேற்குறித்த விடயங்கள் வேறாகக் தோன்றிய போதிலும் ஆழமாகப் பார்த்தால் ஒன்றையொன்று சார்ந்தது புரியும் என்றார்.
உலகமெங்கும் நடக்கும் வன்முறையைப் பற்றிய கேள்விக்குத், தற்காலத்தில் நடக்கும் வன்முறைகள் மனிதர்களை வேறுவேறு கூட்டங்களாக பிரிப்பதாலே உருவாகிறது. நாம் முக்கியமாக வேறுபாடுகளாகக் கருதுவது மனிதர்களது இன,மத, நிற, மற்றும் பால் ரீதியான வேறுபாடுகள். இந்த வேறுபாடுகள் மதிக்கப் பழகவேண்டும். நண்பரையோ, அயலவரையோ- அவரது மதத்தையோ, இனத்தையோ, நிறத்தையோ கொண்டு நாம் அளவிடுவதில்லை. அதே போல் மற்றவர்களையும் வேறுபாடுகளைக் கடந்து மனிதராகப் பார்க்கத் தொடங்கும்போது குழுவாக, மதமாக, வேறு இனமாக நினைத்தல் நம் மனதில் இருந்து மறைந்துவிடும் என்றார்.
“எங்கு அநீதி, மனித உரிமை மீறல்கள் மற்றும் அப்பாவிகள் மீது துன்புறுத்தல் நடக்கும்போதும் நாம் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவேண்டும். எதிராக மற்றவர்களை ஒன்றாக அணி திரட்டவேண்டும் ” என்று கூறிவிட்டு, எலா காந்தி ‘சமூக அரசியல் மாற்றத்தை நாம் விரும்பினால், நீ அந்த மாற்றமாக இருக்கவேண்டுமென்ற’ மகாத்மா காந்தியின் வாசகத்தை நினைவு கூர்ந்தார்.
மகாத்மா காந்தியின் மனைவியாகிய கஸ்தூரிபாயை நினைவு கூர்ந்தபோது, அவர் மிகவும் திறமையும், தைரியமும் உள்ள பெண்மணி எனத் தனது தாயார் கூறியதை நினைவு மீட்டிவிட்டு, கஸ்தூரிபாயைப்பற்றி அதிகம் எழுதப்படவில்லை என்று விசனமடைந்தார்.
ஆண் பெண் சமத்துவமின்மை பற்றிய பேச்சில், இந்த சமமின்மையின் முக்கிய காரணம் பெண்கள், ஆண்களில் தங்கியிருப்பதுதான். முதலில் பெண்கள் தாங்களே பல விடயங்களைச் செய்யத் தொடங்கும்போது ஆண் பெண் சமத்துவம் தானாக உருவாகும் என்றார்.
வெளிநாடுகளில் வந்து குடியேறும் நம்மவர்கள் எப்படி இருக்கவேண்டும்? என்ற கேள்வியொன்றிற்கு வெளிநாடுகளில் வந்து மற்ற சமூகத்துடன் நாம் வாழும்போது அவர்களோடு சேர்ந்து வாழப்பழக வேண்டும். நாம் அவர்களில் இருந்து விலகிய சமூகக் குழுவாக நாம் இருந்தால் அவர்கள் எம்மை ஒரு குழுவாக விலக்கி வைப்பது தவிர்க்க முடியாதது என்றார்.
இளம் பரிஸ்டராக காந்தி 100 ஏக்கர் நிலத்தில் இந்தியர்கள் சமூகமாக வாழ்வதற்கு உருவாக்கிய பீனிக் குடியேற்றம் பல மாற்றங்களுடன் தற்பொழுது உலகத்தின் பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசமாக யுனெஸ்கோவால் அங்கீகாரம்பெற்றிருப்பதாக கூறினார்.
தென்னாபிரிக்காவில் ஜனாதிபதி மாற்றம், தற்போதைய அரசியல் நிலை வெள்ளை கருப்பின மக்களிடையே வாழ்வு நிலையில் உள்ள வேறுபாடுகளை அவரிடம் கேட்டபோது, அரசியல்வாதிகளை மக்கள் தேர்ந்தெடுப்பதுடன் மக்களது கடமை முடியவில்லை. தொடர்ச்சியாக அவர்கள்மீது கண்கண்காணிப்பாக இருக்கவேண்டும்.
தற்போது தென்னாபிரிகாவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், நல்லதைக் கொண்டுவரும். மேலும் மாற்றங்கள் மெதுவாக வருகின்றதன. தன்னால் முடிந்தவரையில் தானும் சமீபத்திய ஆட்சி மாற்றத்தில் பங்கு பற்றியதாகக் கூறினார்.
78 வயதான போதிலும் சமாதானத்திற்கும், சமூக மாற்றத்திற்காகவும் தொடர்ச்சியாகப் பயணங்கள் செய்தபடி பாடுபடும் எலா காந்தியிடம் நன்றிகூறி விடைபெற்றேன்.
மறுமொழியொன்றை இடுங்கள்