அடுத்த நாள் மாலையில்தான் சென்னைக்கு ரயிலில் பிரயாணம் செய்ய முடியும் என்பதால் இரவு இராமேஸ்வரத்தில் தங்க வேண்டும். பத்து ரூபாய்க்கு ஒரு ஹோட்டல் அறை அந்த இரவு தங்குவதற்கு கிடைத்தது மிகவும் ஆச்சரியமானது.
இலங்கையில் சாமானியர்கள் தங்குவதற்கு வசதியான இது போன்ற ஹோட்டல்கள் இல்லை. எங்கள் காலத்தில் யாழ்ப்பாணத்தில் தங்கும் வசதியுள்ள ஹோட்டல்கள் இருந்ததாகத் தெரியாது. இராமேஸ்வரத்தில் அன்று எனக்குக் கிடைத்த அந்த அறை குளியல் அறையுடன் சுத்தமானதாக இருந்தது. படுப்பதற்கு சிறிய கட்டிலும் எனது தேவைக்கேற்றபடியாக இருந்தது.
காலையில் எழுந்தபோது எப்படியும் பன்னிரண்டு மணிநேரமாவது இங்கு தங்கவேண்டும். இந்த ஊருக்கு வந்தோம். குறைந்த பட்சம் இராமாயணத்தில் இடம்பெற்ற கோயிலையாவது பார்ப்போம் என நடந்து சென்றேன். அதிக தூரமில்லை. அப்படி ஒரு பெரிய கோயிலை அதற்கு முன்னர் வாழ்க்கையில் பார்த்ததில்லை.
இராமேஸ்வரத்தில் கோயிலின் மண்டபங்கள், தூண்களைப் பார்த்துக் கொண்டிருந்தபோது உடல் பருத்த கருமையான மனிதர் ஒருவர் அரையில் கட்டிய அழுக்கான வேட்டியுடன் கறுத்தநிற பானை வண்டியுடன் என் முன் தோன்றி, கங்கா தீர்த்தம் எனச்சொல்லி சிறிய செம்பில் தண்ணீர் தந்தார்.
இதுபோன்ற தீர்த்தத்தில் நம்பிக்கை இல்லாதபோதும் தந்தவர் மனம் கோணாமல் இருக்கவேண்டும் என்பதால் அதைக் குடித்ததும், மீண்டும் ஒரு கிணற்றில் இருந்து செம்பு நிறைந்த தண்ணீரை எடுத்துத்தந்து, சரஸ்வதி தீர்த்தம் என்றார். அதனையும் மறுக்க முடியவில்லை. தொடர்ச்சியாக இப்படி கிட்டத்தட்ட இருபத்தைந்து தீர்த்தங்கள் குடித்தேன்.
அந்த மனிதர் கோயிலை தரிசிப்பதற்கு எனக்கு இடம் தரவில்லை. உடல்மொழியால் மற்றும் உதாசீனத்தால் அந்த மனிதரைப் புறந்தள்ள முடியவில்லை.பருத்தித் துணியில் பட்ட மசாலா குழம்பின் மஞ்சள் கறையாக என்மீது அவர் ஒட்டிக் கொண்டார்.
முதல்நாளே புதியநாட்டில் ஒருவருடன் கடுமையாகப் பேசி முகம் முறிக்க முடியவில்லை. முகத்தை முறிக்காத பெண்ணுக்கு காலம் முழுவதும் வயிற்றிலே குழந்தை என்பதுபோல் எனக்கு தண்ணீர் குடித்தே வயிறு நிரம்பிவிட்டது. அந்த மனிதருக்கும் மூச்சு வாங்கியும் விடவில்லை. மனிதர் கடைசியில் கோயிலின் வெளியே வந்துதான் ஓய்ந்தார். மனதில் அவரை பலதடவை கொலை செய்துவிட்டேன்.
இலங்கையில் நுவரெலியா பொலிஸிடம் அகப்பட்டிருந்தால் பரவாயில்லை என அன்றைய சம்பவம் நினைக்க வைத்தது. கடைசியில் அவர் என்னிடம் இருபத்தைந்து ரூபாய் கேட்டபோது கொடுக்க மறுத்தேன். தந்த தண்ணீருக்கு விலையா? நான் தண்ணீர் கேட்கவில்லையே என்று கூறியும் பிரயோசனம் இல்லை. அந்த விடாக்கண்டனுக்கு பத்து ரூபாயைக் கொடுத்து விட்டு இனிமேல் கோயில்களுக்கே செல்வதில்லை என எச்சரிக்கையாக இருந்தேன். இந்தக் கொள்கையை பிற்காலத்தில் இந்தியாவில் இருந்த மூன்று வருடங்களும் கடைப்பிடித்தேன். சிதம்பரம், மதுரை, திருச்சி என சென்றபோதெல்லாம் கோயில்களைத் தவிர்த்தேன்.மனைவி பிள்ளைகள் உள்ளே சென்றால் நான் அவர்களது காலணிகளுக்கு காவல்காரனாகினேன்.
இலங்கையில் எந்தக் கோயில்களிலும், எனக்கு நம்பிக்கையில்லாவிடிலும் அங்கு செல்லும் பழக்க உள்ள நான், இந்தியாவில் கோயில்களை தவிர்த்தேன்.
அன்றைய தினம் இராமேஸ்வரத்தில் விரைவாகவே அறைக்குத் திரும்பி வந்து படுத்தவாறு பழைய விடயங்களையும் அரசியல் புதினங்களையும்; அசைபோட்டேன். தனிமையில் இருக்கும்போது நினைவுகள் மட்டும்தானே நம்மோடு வரும்.
காங்கேசன்துறை வீதியில்தான் இந்துக்கல்லுரி உள்ளது. மேல் மாடியில் நின்றால் எங்களுக்கு நேர் கீழே வீதி தெரியும். எழுபதுகளில் ஒரு நாள் மாணவர் பேரவையின் ஊர்வலம் போவதாக கேள்விப்பட்டேன். யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் தாவரவியல் பரிசோதனைச்சாலை சென்றபோது எனது சகவகுப்பு மாணவர்கள் உடன் வந்தார்கள். வீதியிலே ஏனைய பாடசாலைகளின் சிரேஷ்ட மாணவர்கள் கொடும்பாவிகள் சகிதம் தாரை தப்பட்டைகளுடன் ஊர்வலம் போனார்கள். ஊர்வலத்திற்கு பொலிஸ் அனுமதியில்லை. எப்படியம் ஊர்வலத்தில் போனவர்களுக்கு பொலிசால் அடிவிழும் எனப் பலரும் பேசிக்கொண்டார்கள் .
பரிசோதனைச்சாலையில் நாங்கள் நின்று யன்னல் வழியே ஊர்வலத்தில் எமது பாடசாலையைச் சேர்ந்தவர்கள் யாராவது போகிறார்களா என பார்த்தேன். அப்போதைய கல்வி அமைச்சர் பதியுதீன் முகமத்தை போன்று வைக்கோலினால் செய்யப்பட்ட கொடும்பாவியை சிலர் தூக்கிக் கொண்டு சென்றார்கள்.
எனக்கு ஆச்சரியம் தரும்வகையில் எனது சக மாணவனாகிய செல்வவடிவேல் கையில் ஒரு உடுக்கையை தட்டியபடி மாடியில் நிற்கும் எம்மைப் பார்த்து சிரித்தபடி அந்த கொடும்பாவியின் பின்னால் போய்க் கொண்டிருந்தான். அவன்மீது எனக்கு அப்போது பரிதாபம்தான் தோன்றியது.
தம்பி பொலிசிடம் நல்ல அடி வேண்டப்போறான் என்று கவலைப்பட்டேன்.
மறு நாள் உடல் காயங்களோ வீக்கங்கள் போன்ற எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் இன்றி நிமிர்ந்த, நேர்கொண்ட பார்வையுடன் அவன் என்னைச் சந்தித்தபோதுதான் எனது கவலை தீர்ந்தது.
எங்கள் வகுப்பில் பெரும்பலானவர்களுக்கு எந்த மாதிரியான தரப்படுத்தல் வந்தாலும் நாம் பல்கலைக்கழகம் போக முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. மற்றைய சிலர் இலங்கையில் பல்கலைக்கழகம் போக முடியாவிடில் இந்தியா அல்லது இங்கிலாந்து சென்று படிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன், வசதியுடன் இருப்பவர்கள். இந்த மன நிலையில் ஊர்வலம், போராட்டம் குறித்து எமக்கு நம்பிக்கை இருக்கவில்லை. மேலும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் சென்று அடிவாங்கும் அளவுக்கு உடம்பிலும் பலமும், மனதில் தைரியமும் இருக்கவில்லை. இந்த நிலையில் சக மாணவ நண்பன் செல்வவடிவேலை அந்த ஊர்வலத்தில் கண்டது மிகவும் ஆச்சரியத்தைத் தந்தது.
செல்வவடிவேல் வித்தியாசமாக சிந்தித்து ஊர்வலம் போனான் என்பதுடன் அவனது அன்றைய சிரிப்பு இன்றளவும் எனது மனதில் நினைவாக தங்கியிருக்கிறது. எப்பொழுதும் வித்தியாசமானவர்கள், மாறுபட்ட நிகழ்வுகள் மனதில் அழுத்தமாக படியும். சாதாரணமான விடயங்களும் நாளாந்தம் சந்திப்பவர்களின் நினைவுகளும் மனஓடையில் ஓடும் நீர்போல் கடந்து போய்விடும் என்பதும் நியதிதானே.
போராட்டம் எனவரும்போது ஏராளமானவர்கள் அதை தவிர்க்கத்தான் விரும்புகிறார்கள். ஓடி தப்பிவிட முயலுகிறார்கள். ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அவர்களை அதில் இழுத்து விட்டுவிடுகிறது. எமது வகுப்பில் இருபது பேரில் அன்று ஒருவன் ஊர்வலத்துக்கு சென்றதுபோல் 95 வீதமானவர்கள் அன்று அந்த ஊர்வல போராட்டத்தை முடிந்தவரை தவிர்க்கவே விரும்பினார்கள். காரணம் பலருக்கு வாழ்க்கையே போராட்டமாக இருந்தது.
இதே வேளையில் போராட்டத்தின் வாடையே தம்மீது படியாமல் வாய்சொல்லால் உசுப்பேற்றியவர்கள் அக்காலத்திலும் இருந்தார்கள். எனக்குத் தெரிய வண்ணை ஆனந்தனின் பொறிபறக்கும் பேச்சுகள், காசி ஆனந்தனின் இரத்தத்திலகங்கள் அன்றைய காலகட்டத்தில் எப்படி உறைந்த இரத்தங்களை கொதிக்க வைத்தது என்பது எனது வயதுக்காரருக்குத் தெரியும். ஆனால் இப்போதைய இணையத்தில் ஆயிரக்கணக்கில், இலட்சக் கணக்கில் ஆனந்தன்கள் இருக்கிறார்கள். அக்காலத்தில் குறைந்தபட்சம் மக்கள் மத்தியில் வந்துபேசவேண்டும். சிறைவாசமும் அனுபவிக்கவேண்டும்.
நான் சொல்லும் 70 ஆம் ஆண்டு காலகட்டத்தில் அரசியல் என்பது நிழலாக எம்மைத் தொடர்ந்தது. நிழலுக்கு ஓடி மறைய முடியாது என்பதுபோல் இடைவிடாமல் துரத்தியது.
குடியரசு தினங்களில் பாடசாலைக்கு செல்லாதது மட்டுமல்ல மற்றவர்களையும் பகிஸ்கரிப்பு என்ற பெயரில் அப்படி செய்யத் தூண்டுவது எமது ஆரம்ப செயலாக தொடர்ந்து நடந்தது.
இதில் இரண்டு சம்பவங்கள் மனதில் நிற்பவை.
ஓன்று எனது நண்பன் சொன்னது. நான் நேரடியாக சம்பந்தப்படாதது.
‘முதலாவது குடியரசு தினத்தில் வைத்தீஸ்வரா பாடசாலையில் மாணவர்கள் பாடசாலையை பகிஷ்கரித்தபோது தலைமை ஆசிரியர் மணவர்களை அமைதியாக உள்ளே வரும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் பகிஸ்கரிப்பை ஒழுங்குபடுத்தியவர்கள் பாடசாலைக்கு கல்லெறிந்தபோது அந்த வழியால் சைக்கிளில் வந்த முதியவர் ஒருவர் ‘தம்பிமாரே படிக்கிற பாடசாலைக்கு ஏன் கல்லெறிகிறீர்கள் ? அப்படி கல்லெறிய வேண்டுமானால் இந்தா போகிறதே அரசின் இலங்கை போக்குவரத்து சபை பஸ் வண்டி. அதற்கு எறியுங்கள்’ என்றார்.
இது எப்படி இருக்கிறது?
யாவோ(Jehovah) கொடுத்த அருள்வாக்கின் பிரகாரம் இஸ்ரேலியர்களை எகிப்தில் இருந்து வெளியேற்றும் மோசஸே (Moses) வெளியேற்றினார்.
அதுபோல் அன்று பெரியவரின் அருள்வாக்குப் பிரகாரம் பாடசாலையை பதம்பார்த்த அந்தக் கல்லுகள், போக்குவரத்துச்சபை பஸ் வண்டிகளை நோக்கி எறியப்பட்டது. நானறிந்த மட்டில் அரசியல் காரணங்களுக்காக அதுதான் யாழ்ப்பாணத்தில் நடந்த முதலாவது கல்வீச்சு சம்பவம் என நினைக்கின்றேன். அதன் பின்பு யாழ்ப்பாணம் குடாநாடெங்கும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் வண்டிகள் சேவையில் இல்லாமல் போகும் வரையும் கல்லெறந்து உடைத்து, எரித்தது எமது வரலாறு.
இரண்டாவது சம்பவம், 75 ஆம் ஆண்டு என நினைக்கிறேன். யாழ்ப்பாணம் இந்துக்கல்லுரி மாணவர்கள் குடியரசுதினத்தில் கல்லுரியை பகிஸ்கரித்தார்கள். அது எங்களுக்கு இலகுவாக வரும் போராட்ட முறையாகும். நாங்கள் ஒழுங்காகப் படிப்பது வெளியே ரீயுசனில்தான். எங்கள் காலத்தில் ஓழுங்காக பாடசாலையில் படிப்பித்த பிரான்சிஸ் மாஸ்டர் வெளியே டியூட்டரி வைத்து எங்களைப் படிப்பித்தார். ஆனால் சென்ஜோன்ஸ் கல்லுரரி மாணவர்கள் பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு விரும்பமாட்டார்கள். காரணம் அங்கு ஆசிரியர்கள் அவர்களுக்கு கல்லுாரியில் ஒழுங்காக படிப்பித்தார்கள்.
இந்துக்கல்லூரி மாணவர்கள் முற்றாக பகிஷ்கரித்ததால் ஒருவித வெற்றிப் பெருமிதத்துடன் இராசாவின் ஊர்வலம்போல் சென்ஜோன்ஸ் கல்லூரிப் பக்கம் நடப்பதைப் பார்பதற்காக ஒரு நண்பன் சுந்தரேசனோடு சைக்கிளில் சென்றேன். சுந்தரேசன் சிறிது குள்ளமானவான். சைக்கிளை நிறுத்திவிட்டு கல்லூரி மதில்மேல் ஏறி எட்டிப் பார்த்தான். அவனது கெட்டகாலம் பின்னால் பொலிஸ் ஜீப் வந்து நின்றது.
இருவரையும் நாலு பொலிஸ் கான்ஸ்ரபிள்களும் ஒரு இன்ஸ்பெக்ரரும் சுற்றி வளைத்தார்கள்.
நாங்கள் பயந்தபடி, விறைத்து மதிலில் ஒட்டிய சுவரொட்டியானோம்
மதிலோடு நின்ற சுந்தரேசனை’ என்னடா எழுதினாய்’? என்று தலைமயிரில் பிடித்தபடி அரை குறைத்தமிழில் கேட்டார் அந்த சிங்கள இன்ஸ்பெக்ரர்.
அந்த மதிலில் “குடியரசு தினத்தை பகிஷ்கரிப்போம்” என சிவப்பு மையால் ஆங்கிலத்தில் ஏற்கனவே கொட்டை எழுத்தில் எழுதப்பட்டிருந்தது
‘ஐயா, நான் எழுதவில்லை’ என்றான் தழுதழுத்த குரலில் சுந்தரேசன்.
பொலிஸ் இன்ஸ்பெக்ரர் அவனை அடிக்க கையை ஓங்கிய போது ‘ஐயா இது சரியில்லை’ என்று கை கூப்பிய படி குனிந்து குறுகினான். அவனது முகத்தில் தோன்றிய பய உணர்வை இன்றும் எழுத்துகளால் என்னால் வர்ணிக்க முடியாது. சுருக்கமாக சொல்வதானால் அவனது முகம் பேயறைந்தவன் போலாகியது. வாழ்க்கையில் அந்தமாதிரியான பயத்தை முகத்தில் தேக்கியவாறு ஒருவர் அடியை தவிர்க்க குனிந்தால் கொதிக்க வைத்த இறாலின் கூனல்தான் ஞாபகத்துக்கு வரும். நண்பன் அவ்வாறு கூனிக் குறுகியதைப் பார்த்ததும் எனக்கு சிரிப்பு வந்து தொலைத்துவிட்டது.
வள்ளுவர் சொன்ன இடுக்கண் வருங்கால் நகுக என்பதுபோல் அன்று நான் சிரித்தது இலங்கை அரசின் நகர்காவலர்களுக்கு பிடிக்கவில்லை.
எனது நகைப்பு அவர்களுக்கு மட்டுமா சுந்தரேசனுக்கும் பிடிக்கவில்லை என்பது பிறகுதான் தெரிந்தது. அவன் பின்னர் தனக்குத் தெரிந்த சகல தூசண வார்த்தைகளாலும் என்னைத் திட்டியபோதுதான் அவனது கோபம் பொலிஸை விட என்னிடம்தான் அதிகம் என்பதை புரிந்துகொண்டேன்.
இன்ஸ்பெக்டர் அவனை கண்டிக்க முனைந்தவிதம் எனக்கு நகைச்சுவையாகியது. எனது சிரிப்பு அவருக்கும் பிடிக்கவில்லை. என்னிடம் திரும்பி முகத்தை கடுமையாக்கிக் கொண்டு
‘எந்தப் பாடசாலை ?’எனக்கேட்டார்.
‘இந்துக்கல்லூரி’
‘அப்ப ஏன் இங்கு வந்தீர்கள்’
‘எனது உறவினரது வீட்டுக்கு’
‘விலாசம் என்ன?’
எனது வருங்கால மனைவியின் வீடு சென்ஜோன்ஸ் கல்லூரிப் பக்கம்தான் இருந்தது. அந்த வீட்டின் விலாசத்தைக் கொடுத்தேன்.
‘ஓடுங்கடா’ என இருவரையும் துரத்தினார்கள் பொலிஸார்.
அந்தச்சம்பவத்திற்குப் பிறகு பல நண்பர்கள் சுந்தரேசனை எங்காவது கண்டால் “ஐயா இது சரியில்லை” என்பார்கள்.
இனி யாழ்குடாநாட்டிலிருந்து இராமேஸ்வரத்துக்கு வருகிறேன்.
அன்று மாலையில் சென்னை செல்வதற்கு ரயில் ஏறினேன். அது எனக்கு நீண்ட பயணமாக இருந்தது. மனிதர்களின் முகங்களை துருவிப்பார்ப்பது எனக்கு மிகவும் விருப்பமான பொழுது போக்கு. எழுதுவதற்கான உந்துதலும் இதிலிருந்துதான் வந்திருக்கவேண்டும்.
யாழ்ப்பாணம் இந்துக்கல்லுரி விடுதியில் இருந்த காலத்தில் சினிமா கருப்பு வெள்ளையில் இருந்து வர்ணப்படங்களாக வெளிவந்த காலம். அந்தக்காலத்தில் சினிமா எனக்கு போதையாகவே இருந்தது. ஆரம்பத்தில் சினிமாத் தியேட்டரில் வேலை செய்யவேண்டும் என்பதே எதிர்கால கனவாகவும் இருந்தது. அந்த அளவு நிழலாக இருந்தவற்றை நேசித்தேன். இந்துக் கல்லூரி விடுமுறைக்குப்பின்னர் தொடங்கும் முதல்நாளில் விடுதியில் இருந்த எங்களுக்கு எதுவித நேரக் கட்டுப்பாடும் இல்லை. எந்த நேரத்திலும் வரலாம் போகலாம் என்பதால் ஒரே நாளில் மூன்று படங்களைக் கூடப் பார்த்திருக்கிறேன்.சிவாஜி கணேசனின் ரசிகன் .
இப்படி தென்னிந்திய சினிமாவைப் பார்த்ததால் எங்களது மனதில் இந்தியா ஒரு வர்ணமயான தோற்றத்தைக் கொடுத்தது. வண்ணக்கோட்டு சூட்டுகள் மட்டுமல்ல சிவப்பு, வெள்ளை என சப்பாத்து போடும் எம்ஜியார், சிவாஜி என திரையில் பார்த்திருந்தோம். இது மட்டுமா பெண்கள் எல்லோரும் அப்பிள் முகத்தில் அலைந்து திரியும் காட்சிகள் மனதில் இருந்தன. நாங்கள் படித்த தமிழ் கதைப்புத்தகங்களிலும் கருப்பானவர்களை மாநிறமானவர்கள் என்றுதான் சொல்வார்கள். எனக்கு மாநிறமென்றால் அரிசிமா கோதுமை மாவுதான் நினைவுக்கு வரும். அது எப்படி மனிதர்கள் மா நிறத்தில் இருக்கமுடியும்? என்ற கேள்வியும் நீண்ட நாட்களாக இருந்தது.
இப்படி சொல்கிறாய் ஜெயகாந்தனின் கதைகளைப் படிக்கவில்லையா? அவரது சித்தரிப்புகளில் புரிந்திருக்குமே? சேரிமக்கள்தானே அவரது கதை மாந்தர்கள். என்று இதனைப்படிப்பவர்கள் கேட்கக்கூடும். ஆனால் எனக்கோ இந்தியாவில் மாந்தர்கள் நான் பார்த்த சினிமாவிலும் படித்த கதைகளிலும் வந்தவர்கள் போல்தான் இருப்பார்கள் என்ற எண்ணம்தான் இருந்தது.
அன்றைய பயணத்தில் முழு ரயிலிலும் கோட் சூட் போட்ட மனிதர்களை காணமுடியவில்லை. இதை ஒரு சிரிப்பிற்காக எழுதவில்லை. தென் இந்திய கலாச்சாரத்தின் யதார்த்தத்தை தமிழ் சினிமாவும் கதைப்புத்தகங்களும் வெளியே இருப்பவர்களிடம் அக்காலகட்டத்தில் எவ்வாறு கொண்டு சேர்த்தன, எவ்வாறு நாம் உள்வாங்கிக் கொண்டோம் என்பதற்கு நானும் ஒரு சாட்சியாகிறேன்.
மறுமொழியொன்றை இடுங்கள்