
ஈழத்திலிருந்து இந்தியா வந்த அகதி மக்களுக்காகவும், ஈழ விடுதலை இயக்கங்களின் தேவைக்காகவும் அமைந்த எமது நிறுவனம், மேலும் போரில் அங்கங்களை இழந்தவர்களுக்கும் உதவ விரும்பினோம். காலிழந்தவர்களுக்கான சேவையை அளிப்பதற்காக ஜெய்ப்பூர் காலை உருவாக்க,அதைத் தயாரித்த மருத்துவர் சேத்தியை சந்தித்து செய்த உடன்படிக்கையில் ஜெய்ப்பூர் வைத்தியசாலையில் பல இளைஞர்களுக்கு செயற்கைக் கால்களை செய்வதற்குப் பயிற்றுவித்தோம். அவர்களில் பலரை அழைத்துக்கொண்டு ஜெய்ப்பூர் சென்றோம். ஆனால் நானும் டாக்டர் சிவநாதனும் அக்காலத்தில் பலதடவை சென்றபோது கூட ஜெய்ப்பூர் நகரத்தில் எந்த இடத்தையும் பார்க்கவில்லை. இப்பொழுது நினைத்துப் பார்த்தால் கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது.
இரு காரணங்கள்- எமது சேவையில் ஒரு முகப்பட்டிருந்தோம். இரண்டாவது பொதுப்பணத்தில் எமது பிரயாணம் அமைந்திருந்தது. பிற்காலத்தில் அவுஸ்திரேலியா வந்தபின் இரு முறை உல்லாசப் பிரயாணியாக ஜெய்ப்பூர் சென்று பார்த்தேன்.
ஜெய்ப்பூருக்கு செல்வது இரண்டு நாட்கள் நீண்ட இரயில்ப் பயணம் . இரயிலில் செல்லும்போது இடையில் புதுடில்லியில் தங்கி நிற்பது வழக்கம். அது பற்றிய சில நினைவுகளை எழுதுவது இங்கு பொருத்தமாக இருக்கும்.
ஒரு முறை புதுடில்லியில் கோடைக்காலம். மணலுடன் போட்ட வேர்க்கடலைபோல் வெயில் எம்மை வறுத்துவிடும்.
நாம் தங்கிய இடங்களில் காற்றாடியோ குளிரூட்டியோ இருக்கவில்லை. பாதைகளில் நடக்கும்போது அடிக்கடி தண்ணீர் குடித்தபடி இருக்க வேண்டும். அங்குதான் மிளகு போட்டு தண்ணீர் குடிக்கலாம் என அறிந்துகொண்டேன். முகத்தைத் தழுவும் அனல்க்காற்று, அனலைதீவு புகையிலைச் சூளையை நினைவுக்குக் கொண்டு வரும். ஆனால் என்ன, இங்கு புகையில்லை. மணல் இருந்தது. தார் பாலைவனத்து மணலென்றார்கள். இரவில் படுத்தால் நித்திரை வராது. ஒரு நாள் படுக்கும் போது நிலத்தில் தண்ணீரை ஊற்றிவிட்டு அதில் பொலித்தீன் விரிப்பை போட்டுப் படுத்தது நினைவுக்கு வருகிறது.
புது டெல்லியில் நின்ற பெரும்பாலான நாட்களில், காலையும் மாலையும் சப்பாத்தியும் பருப்பும் கிடைக்கும். அல்லது பாண் கிடைக்கும். பல இடங்களில் உணவுண்பதற்கு பயம் . ஏற்கனவே இலங்கையில் நோய் வந்து அனுபவப்பட்டதால் இந்தியாவில் இருந்த நாட்களில் தைபோயிட்டோ அல்லது ஈரல் அழற்சியோ வரக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். அதற்காகப் பட்டினியாக இருந்த நேரங்கள் உண்டு. ஒரு நாள் நண்பரொருவரோடு புதுடெல்லி ஆந்திரா பவனுக்கு சென்றேன். உணவு உருசியாக இருந்தது, ஆனால் அழுதபடி சாப்பிட்டேன். இந்தியாவில் இருந்த காலத்தில் இலங்கையில் அம்மா இறந்துபோது அம்மாவின் உடலைப் பார்க்க முடியாததால் அழுதேன். பல இரவுகள் தலையணையை நனைப்பேன். ஆனால் என்னைப் பகலில் கண்ணீரைவிட வைத்தது ஆந்திராபவனின் மதிய உணவே.
புதுடெல்லியில் நின்ற ஒரு நாள் கனவில் கருங்கண்ணிப்பாரை மீன் அலைக்கழித்தது. காலையில் உடுத்திருந்த சாரத்துடன் மீன் வாங்குவதற்காகற்காக ஓட்டோவில் அலைந்தோம். நியுடெல்லியில் இறுதியில் ஆக்கிமிடிஸ்போல் கூவாத குறையாக மீன் விற்குமிடத்தைக் கண்டுபிடித்தோம்
பெரிய மார்கட் அல்ல . சில பெண்கள் மீன்களைக் கூடையுடன் விற்றுக்கொண்டிருந்தார்கள் . பார்ப்பதற்குக் கடல் மீனாகத் தெரியவிலை- குளத்து மீன். மற்ற காலங்களில் நெருங்கியிருக்கமாட்டேன். நான் இதுவரை யாழ்ப்பாணத்தில் தின்ற நல்ல மீன்களையும், சோற்றில் கூழ்போல் படிந்து, உள்ளிறங்க மறுக்கத் தேங்காய் பாலில் செய்த தீவுப்பகுதி மீன் குழம்பையும் கற்பனை செய்தபடி, அந்த மீன் வியாபாரப் பெண்ணை அணுகியபோது அந்தப் பெண் எனது சாரத்தை பிடித்தபடி ஏதோ கேட்டார். அதில் கல்கத்தா என்ற வார்த்தை மட்டும் புரிந்தது.
நான் சாரம் கழலாமல் இருக்க இரு கைகளாலும் இறுக்கிப் பிடித்தபடி அந்தப் பெண்ணை முழித்தேன். எங்களது யாழ்ப்பாண வழக்கப்படி சாரம் அணிந்திருந்தேன்-உள்ளே ஒன்றுமில்லை. படுக்கையில் எழுந்ததும் மீன் நினைவு வந்ததால் உடனே போயிருந்தேன். அத்துடன் நம்மை இங்கு யாருக்குத் தெரியும் என்ற நினைப்பு
பக்கத்தில் நின்ற என் இந்திய நண்பன் சிரித்தபடி விளக்கம் சொன்னான். “எப்போது கல்கத்தாவில் இருந்து வந்தாய் ? அங்கு என்ன புதினமென இந்தப் பெண் கேட்டார்.”
“அதைச் சாரத்தை இழுக்காமல் கேட்டிருக்கலாமே? “
“இப்படிக் கோடிட்ட சரத்தை இங்கு வங்காளிகளே உடுப்பார்கள் அவர்கள் இந்தக்கோட்டு துணியில் உள்ளேயும் போட்டிருப்பார்கள். இங்கு மீன் உண்பவர்களும் விற்பவர்களும் வங்காளிகளே . சாரத்துடன் வந்திருப்பதால் அவர்களில் ஒருவன் என்று நினைத்து விட்டார் “ என்றான்
இதே அனுபவம் சென்னையில் நடந்தது. ஆரம்பத்தில் பலர் மீன் வாங்கும்போது மலையாளமா எனக் கேட்பதுண்டு. சிரித்து விட்டு விலகி விடுவேன் பிற்காலத்தில் பல இலங்கையர்கள் தமிழகம் வந்ததால் சிலோனா என்பார்கள். அதன் பின்பாக சென்னைவாசிகள் பலர் சிலோன்காரர் வந்து மீன்விலையை ஏற்றியதாகத் திட்டியதையும் கேட்டபடி நகர்ந்துள்ளேன்.
இப்படி ஒரு நாள் புது டெல்லியில் நானும் டாகடர் சிவநாதனும் தங்கியிருந்தபோது பத்மநாபாவிடமிருந்து ஒரு செய்தி வந்தது
‘அசோகா ஹோட்டலுக்கு வரவும். இங்கு ஏராளமான பியர்கள் உள்ளன’
அப்பொழுது ஐந்து ஈழ இயக்கத்தினரும் புது டில்லி வந்துள்ளார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். 32 வருடங்களின் பின்பு எழுதுவதால் காலங்கள் சரியாக நினைவில்லை. இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கு முன்னோடியான காலம் . ரெலோ இயக்கத்தை விடுதலைப்புலிகள் அழித்த பின்பான காலம்.
ரோ எனப்படும் இந்திய உளவுத்துறையைச் சேர்ந்த ஒருவர் கறுப்புக் காரில் வந்து எங்களை அழைத்துச் சென்றார். அந்த ஹோட்டல் புது டெல்லியில் எந்தப்பகுதி என்பது தெரியாது . முன்னிரவு நேரம் நானும் சிவநாதனும் பின் சீட்டில் இருந்தபடி பிரயாணித்தோம்..
புது டெல்லியில் ஹோட்டலுக்கு நாங்கள் வந்ததும் பத்மநாபாவுடன் சாந்தன், யோகசங்கரி வந்து எங்களைக் கூட்டிச் சென்றனர். அதன்பின் என்னைப் பார்த்து பேசியவர்கள் ஈரோஸ் பாலகுமாரன், ரெலோ செல்வம் என்பவர்கள். அப்பொழுது போதையில் மிதந்தபடி ஈரோசின் ஸ்தாபகராகிய இரத்தின சபாபதியும் வந்தார். ஏற்கனவே சிவநாதனுடன் அடே எனப்பேசும் நட்புக்கொண்டவர் . நான் அவரிடம் கொஞ்சும் விலகியே இருப்பவன்.
எங்களை வந்து பார்க்காதவர்கள் பிரபாகரனும் உமாமகேஸ்வரனும்தான். ஆனால் இருவருக்கும் அருகருகே அறைகள் கொடுக்கப்பட்டிருந்தன.
எனக்கு மனதில் திக்கென்றது. இருவரும் எப்ப இந்த இடத்தை விட்டுப் போகலாம் என நினைவில் இருப்பார்கள் என நினைத்துக்கொண்டேன்.
இந்திய உளவுத்துறையின் கண்காணிப்பில் ஹோட்டலில் அறைகளில் இருக்கிறார்களே! தமது மக்களுக்காக ஏன் ஒன்றாக இருக்க மறுக்கிறார்கள்?
சில நிமிடத்தில் முன்னுக்குப்பின் முரணான சிந்தனைகள் வந்துபோனது.
அந்த நேரத்தில் இரத்தினசபாபதி “வாங்கடா நான் தம்பியையும் உமாவையும் பார்க்கலாம். அழைத்துச் செல்கிறேன் ” என இருவரையும் கையில் பிடித்து இழுத்தார் . உமாவை உண்ணாவிரதகாலத்தில் சந்தித்தாலும் பிரபாகரனை அருகில் சென்று சந்திக்காதவன்.
‘இல்லை நான் வரவில்லை’என்றேன். என்னைப் பார்த்தபின் டாக்டர் சிவநாதனும் போகவில்லை .
அதன் பின்பு எனது பாடசாலை நண்பனாகிய யோகசங்கரி தனது அறையின் உள்ளே அழைத்துச் சென்றார் . அன்னியோன்னியமாக அவரது படுக்கையில் இருந்து பேசிவிட்டு அங்கிருந்த சில பியர் போத்தல்களுடன் வெளியேறிய நாம் மீண்டும் காரில் எமது இடத்திற்கு வந்தோம்.
அன்றிரவு உமாவையும் பிரபாகரனையும் அறையில் சந்திக்க மறுத்தது என்னைப் பொறுத்தவரையும் இன்றும் பெருமையான ஒரு எதிர்ப்பாக நினைக்கிறேன். காரணம் மற்றைய தலைவர்களும் கொலை செய்யக் கட்டளை இட்டிருக்கலாம். ஆனாலும் இவர்கள் இருவரும் நேரடியாக இரத்தக்கறைபடிந்தவர்கள் என்ற எண்ணம் எண்பதுகளிலே என் மனதில் ஏற்பட்டுவிட்டது.
நண்பர் யோகசங்கரி விடுதலைப்புலிகளால் பிற்காலத்தில் கொலை செய்யப்பட்டபோது அன்று அசோகா ஹோட்டலில் கட்டிலில் இருந்து இருவரும் பேசியது மேலும் நினைவுக்கு வந்த துக்கத்தை அதிகப்படுத்தியது.
நான் சென்னையில் இருந்த இறுதி நாட்களில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்ணணி பிரிந்தது. அவர்களது சென்னை அலுவலகத்தில் எனது நண்பர்களாக இருந்து மித்திரன், மகேஸ்வரராஜா போன்றவர்கள் டக்ளஸ் தேவானந்தாவோடு சென்றனர். அதற்குப்பின்பாக நடந்த சூளை மேட்டுச் சம்பவத்தை பற்றிக் கேள்விப்பட்டேன். ஒருநாள் அவர்களது எபிக் என்ற அலுவலகத்திற்குச் சென்றபோது சில நிமிடங்களுக்கு முன்பு தான் டக்ளஸ் தேவானந்தா வந்ததாகவும் வாய்த்தர்க்கம் நடந்ததாகவும் அறிந்தேன் .
அக்காலத்தில் அவர்களது பிரிவு கவலையைக் கொடுத்தபோதும் குறைந்த பட்சமாக பிரிந்து, ஆட்சேதமற்று செல்லக்கூடிய ஒரு கலாச்சாரத்தை உருவாக்கியிருந்தார்கள் என்பது மகிழ்வாக இருந்தது. மற்றைய தமிழ் இயக்கங்கள் மட்டுமல்ல , தமிழ் அரசியல்கட்சிகள் பிரிந்தவர்ககளைத் தரோகிகளாக மாற்றினார்களே!
ஈழப்போராட்டம் மட்டுமல்ல, இந்தியப் பின்தளம் மற்றும் தமிழ் இயக்கங்கள் எல்லாம் முடிவுக்கு வரும் என்பது அதிக அரசியலறிவற்ற எனக்கு புரியத் தொடங்கியது. அதுவரையும் அவுஸ்திரேலியாவுக்கும் அமெரிக்காவிற்கும் செல்வதற்கான அழைப்பு இருந்த போதிலும் புலப்பெயர்வை பின்போட்டபடியிருந்தேன். மனைவியின் பெற்றோர் மகளையும் பிள்ளைகளையும் நான் கொடுமைப்படுத்துவதாக குற்றஞ்சாட்டிவிட்டு அவுஸ்திரேலியாவுக்குச் சென்று விட்டதோடு தொடர்ச்சியான அழுத்தத்தை மனைவியிடம் கொடுத்தனர்.
இறுதியில் 87 மத்தியில் அவுஸ்திரேலியா கிளம்புவதற்கு தயாரான காலத்தில், எனது பாடசாலை நண்பனும் பிற்கால வட கிழக்கு மாகாணசபைக்கான நிதியமைச்சருமான கிருபாகரன், இந்தியப்படைகள் இராமநாதபுரத்தின் கரைப்பகுதில் இருப்பதாகச் சொன்னான்.
விமான நிலையம் வந்து என்னை வழியனுப்பவிருந்த செந்தில் என்ற குண்சி ‘மச்சான் நான் வர ஏலாது. இந்தியர்கள் எங்களை அழைக்கிறார்கள்’ என்று சொன்னபோது, நான் இருந்த வீட்டின் திறப்பை அவனிடம் கொடுத்துவிட்டு விமான நிலையத்திற்குப் புறப்பட்டேன் .
தமிழர் மருத்துவ நிறுவனத்தில் டாக்டர் தணிகாசலம் வந்து தொடர்ச்சியான மருத்துவ வேலைகள் நடந்தது. தலைமைப் பொறுப்பில் டாக்டர் சாந்தி இராஜசுந்தரம், நிதிப்பொறுப்பில் டாக்டர் சிவநாதனும் இருந்தார்கள் ஒரு லட்சத்திற்குக் கீழே பணமும் இருந்தது .
எனது செயலாளர் பொறுப்பை எனது சிறுவயது நண்பனாகிய டாக்டர் பொன் இரகுபதியிடத்தில் (பிற்காலத்தில் பேராசிரியர் ) கொடுத்தேன்.
மூன்று வருடங்களும் இரண்டு மாதங்களும் இந்தியாவில் இருந்த காலம் பேராதனையில் நான்கு வருடங்கள் மிருகவைத்தியம் கற்றது போன்று புதிய பாடங்களைக் கற்பித்தது. நான் திறந்த மனதுடன் இருந்ததால் நான் சென்ற இடங்கள், சந்தித்த மனிதர்கள், எல்லோருமே எனக்கு ஆசிரியர்களாகினர்கள். மூன்று வருடத்தின் முன்பு தலைமன்னாரில் கப்பல் ஏறியபோது இருந்த கலங்கிய மனம்தான் சென்னையில் விமானமேறியபோது இருந்தாலும் நான் அவுஸ்திரேலியாவிற்கு விமானமேறும்போது இந்தியாவில் பெற்ற அனுபவம் என்பனவே கூட வந்தது. எனது மனைவியும் குழந்தைகளும் அவுஸ்திரேலியாவைப்பற்றிய பிரகாசமான எணணத்தில் என்னைத் தொடர்ந்தனர்.
Shan Nalliah க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி