எக்சைல் 84 : தமிழ் மக்கள் விடுதலைக் கழகத்தின் பிடிபட்ட ஆயுதங்கள்


சென்னையின் வெப்பகாலம் . ஒரு மதிய நேரத்தில் டாக்டர் சிவநாதன் வேர்வை முகத்தில் சிந்தியபடி வந்து, “இவன் முகுந்தனோடு பெரிய கரைச்சல் ” என்றபோது அவரது முகம் அட்டகோணத்தில் இருந்தது.

ஆரம்பத்தில் புரியவில்லை. தமிழ் மக்கள் விடுதலை இயக்கத்தின் தலைவர் உமா மகேசுவரனைக் குறிப்பிடுகிறார் எனப்புரிந்ததும் “ஏன் என்ன நடந்தது?’ என்று விசாரித்தேன்

“புளட் – ஒஃபீசில் வேலை செய்த பிள்ளையொன்று இங்கு வந்து வேலை கேட்கிறது. அங்கே இருக்கமுடியாது என்று அழுகிறது. ”

“நாமள் அதுக்கு என்ன செய்வது?”

“பாவம் கலியாணம் கட்டாத பிள்ளை. இவங்களுக்கு நிக்கவரட்டிய வங்கிக் கொள்ளையில் உதவியதால் அங்கிருக்க முடியாது இந்தியா வந்திருக்கு.”

” உதவியவர்களுக்கு உதவாத இவன்கள் எப்படி மக்களுக்கு உதவப்போகிறார்கள் ” என்று எனது ஆற்றாமையை வெளியிட்டேன்.

எங்களது மருத்துவ நிலயத்தில் ஏற்கனவே ஒரு பெண் லிகிதர் வேலை செய்கிறார் . அதற்கு மேல் ஒருவரை நியமித்து பணம் கொடுக்க வழியில்லை.

மாதத்தில் ஒரு நாள் நடக்கும் கூட்டத்தில் நியமனங்கள் மற்றும் முக்கிய முடிவுகளின் அங்கீகாரம் அவர்களிடம் பெறவேண்டும் அக்காலத்தில் இருந்த ஐந்து பெரிய இயக்கங்களில் இருந்தவர்களும் அந்த நிர்வாக சபையில் இயக்குநர்களாக இருந்தார்கள். அதில் புளட் இயக்கத்தினரும் இருந்தார்கள். புளட் இயக்கத்தில் இருந்து விலகி வந்த ஒருவர் எங்களிடம் வேலை செய்யும்போது நிட்சயமாக எதிர்ப்பார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.

பெயர் நினைவில்லாத, போதும் சராசரிக்கு மேற்பட்ட அழகான அந்தப் பெண்ணின் சோகமான முகம் எனக்கு இன்னமும் நினைவிற்கு வருகிறது.

எனது இதயமும் அனலிடை மெழுகாகியது. குறைந்த பட்சம் அடுத்த கூட்டம் நடக்க ஒரு மாதமிருக்கிறது. அத்துடன் கூட்டத்தை கொஞ்சம் பின் தள்ள முடியும். அந்த இடைவெளியில் வேறு இடத்தில் அந்தப் பெண்ணால் வேறு வேலை தேடமுடியம். இது ஒரு அவசரமான தேவைக்கான வேலை என்று மனத்தைத் சமாதானப் படுத்திக் கொண்டு வேலை கொடுத்தோம். மாதத்திற்கு முன்நூறு இந்திய ரூபாய்கள் கொடுக்க முடிந்தது.

சொல்லி வைத்தாற்போல் எமது கூட்டம் நடந்தது. அதற்கு ஐந்து இயக்கத்தினரும் வந்திருந்தனர் .

காரியதரிசி என்ற முறையில் மற்ற விடயங்ககளை) எல்லாம் என்னால் எடுத்து கூட்டத்தில் பேசமுடிந்தது இந்த நியமன விடயத்தை இறுதியில் எடுப்பதென்ற நோக்கத்தோடு நான் இருந்தேன்.

புளட்டின் சார்பாக வந்த வாசுதேவாவிற்கு எனது தாமதம் பிடிக்கவில்லை. நான் பேசியதை இடைநிறுத்தி , “இயக்கத்தில் இருந்து விலகியவர்களுக்கு நீங்கள் ஆதரவு கொடுக்கக்கூடாது . இப்படி நடந்தால் எங்கள் ஒற்றுமை குலையும். மற்றவர்களும் இதேபாணியில் வெளிக்கிடுவார்கள் ” என்றார்.

எங்களது கூட்டத்தில் பேசும் விடயங்களைக் கேட்டபடி அந்தப் பெண் பக்கத்து அறையில் இருக்கிறார்.

எனக்குப் படு ஆத்திரம். ” அக்காலத்தில் ஏற்கனவே 250 பேருக்குமேல் ஓரத்தநாட்டில் நீங்கள் கொலைகளை செய்துவிட்டிருந்தீர்கள். இயக்க ஒற்றுமையைப் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். அதைவிடத் தீப்பொறி குழு என்று புளட்டில் இருந்து பிரிந்து வெளியே சென்ற காலம் . பல விடயங்களைக் கேட்க நினைத்தாலும் கேட்க முடியாதவாறு எனது வாய் கட்டப்பட்டிருந்தது.

மேசையைச் சுற்றி இருந்தவர்களில் என்னெதிரே இருந்த டாக்டர் சிவநாதனைப் பார்த்தேன். அவர் கீழே பார்த்தபடியிருந்தார்.
கோபம் வந்தால் அவருக்கு வார்த்தைகள் தடக்குப்படுவதுடன் தூசணமும் வெளிவரும். பேசாதிருப்பது நல்லது. தலைவரான டாக்டர் சாந்தி இராஜசுந்தரமும் பேசவில்லை.

நான் சொன்னேன்.

“உங்கள் இயக்கத்திலிருந்து பிரிந்து வந்ததாக எங்களுக்குத் தெரியாது . இலங்கையைச் சேர்ந்த ஒருவர் உதவி கேட்டபோது செய்தோம் அதுவும் இடைக்கால உதவியாக.”

உமா மகேசுவரனுக்கு வாசுதேவா இறுதிவரையும் உண்மையாக இருந்த ஒருவர். மற்றவர்கள் பிரிந்தபோது கடைசிவரையும் துணையாக இருந்தவர் என்பதால் நிட்சயமாக இது உமாவின் அறிவுறுத்தலாகத்தான் இருக்கும். அப்பொழுது ஊரில் கொம்பேறிமூக்கனைப்பற்றி ஒரு கதை சொல்லுவார்கள் . அது நினைவுக்கு வந்து தொலைத்தது. அந்தப் பாம்பு ஒருவனைக் கொத்தினால் அவன் இறந்தபின் சுடுகாட்டில் எரிவதை மரத்தில் இருந்து பார்க்குமென்பார்கள்

எங்களது கூட்டம் முடிந்ததும் அந்தப் பெண் கலங்கிய கண்களுடன் வெளியே சென்ற காட்சி என் மனதில் நிழலாகப் படிந்திருக்கிறது. என்னை ஒரு கையாலாகாதவன்போல் உணர்ந்தேன்.

உண்மை, நியாயம் என்பவற்றைவிட இயக்கங்களினது ஒற்றுமையை நினைத்தால் நாங்கள் அன்று கோழையாகினோம் .

கூட்ட முடிவில், புளட் இலங்கையில் எதுவிதமான இராணுவத் தாக்குதலில் ஈடுபடாத போதிலும் அன்று பெரிய விடயத்தை சாதித்த நினைவோடு வாசுதேவா போயிருக்கலாம்.
——

இந்த விடயம் நடந்து சில காலங்கள் உருண்டோடின. ஒரு நாள் வாசுதேவா தனியாக வந்தபோது, நானும் டாக்டர் சிவநாதனும் பேசினோம் . ஆனால் வாசுதேவாவுக்கு வார்த்தைகளை நாங்கள் வினாத்தாளில் கோடிட்ட இடத்தில் நிரப்புவது போன்று நிரப்ப வேண்டியிருந்தது. உடல் அடித்துக் கொன்று மூலையில் எடுத்தெறியப்பட்ட பிராணி போன்று என் முன்னால் நின்றார்.

ஏற்கனவே தமிழ்நாட்டில் உமாமகேசுவரன் சென்ற கார் சாலை விபத்தில் தப்பித்தது கேள்விப்பட்டேன் . ஆனால் அதில் வாசுதேவாவும் சென்றிருந்ததாக அன்றே அறிந்தேன்.

சிவநாதன் அவர்களோடு பழகியவர் . என்னிடம் தனியே வந்து ” அவன் முகுந்தன் காசில்லை என்று கையை விரித்து விட்டானாம் வாசுதேவாவிற்கு மருத்துவ சிகிச்சைக்கு காசு தேவையாம் “என்றதும் நான் சிவநாதனை முறைத்தேன்.

இதுவரை மருந்துகள் மற்றும் சிகிச்சையாக இயக்கத்தவர்களுக்கு உதவி செய்திருக்கிறோம். ஆனால் பணமாக கொடுப்பதற்கு விதியுமில்லை . விதியை நெளிப்பதற்கு எனக்கு மனமுமில்லை .

சிவநாதன் எனது தோளில் கையைப் போட்டு “அவனது குடும்பம் மிகவும் கஷ்டப்படுகிறது . இரண்டு பிள்ளைகளுக்கு நோயிருப்பதால் வாசுவின் மனைவி பாவம்.

மருத்துவ நிலையத்தின் நிர்வாகப்பொறுப்பில் இருந்து வாசுவின் வக்கீல் ஆகினார்.

மூவாயிரம் ரூபாயை எடுத்து வாசுவிடம் கொடுத்தேன்.

உமாமகேஸ்வரனுக்கு தன்னோடு சென்று காயமடைந்த வாசுதேவாவின் மருத்துவத்திற்குச் செலவழிக்க பணமில்லையா? அல்லது மனமில்லையா என்ற கேள்வி இன்றுவரை நிழலாக தொடருகிறது.

85 ஆண்டு ஏப்ரில் மாதம் இந்திய சுங்கத்திணைக்களம் சென்னையில் தமிழ் மக்கள் விடுதலைக் கழகம் என்ற புளட் இயக்கத்திற்கு இதயத்தில் ஆப்பொன்றை வைத்தார்கள். 1400 துப்பாக்கிகளும் 300 இயந்திரத் துப்பாக்கிகளும் மேலும் பல தகவல் தொடர்பு உபகரணங்கள் ஒரு கன்ரயினரில் வந்த போது இந்திய சுங்க உத்தியோகத்தினர் அதைத் திறந்து பார்த்து விட்டு, அதைப் பறிமுதல் செய்து விட்டார்கள். அதன் பெறுமதி 300000 அமெரிக்க டொலர்கள். இது எல்லோருக்கும் தெரிந்த கதை . இதன் பின் 300000 டொலர்களை ஒரு பாலஸ்தீன ஆயுத வியாபாரியிடம் கொடுத்து ஏமாந்ததாக பின்பு படித்தேன் .

இந்த ஆயுதப் பறிமுதலுக்கு பின்னணியில் இதயத்தை உருக்கும் ஒரு கதை என்னிடம் உள்ளது.

86 களில் அடிக்கடி ஒருவர் வருவார் . அக்காலத்தில் 40 வயதிருக்கும். சுத்தமான வெள்ளை சேர்ட் அணிந்திருப்பார். அவரைப் பார்த்தால் மதிப்போடு பேசத் தோன்றும். கனவானாகத் தோற்றமளிப்பார் . அமைதியாக சொற்களைக் கோர்த்து பேசுவார்.

அவர் எந்த வைத்தியத் தேவைகளுக்கும் வரவில்லை. எங்களோடு பேச மட்டும் வருவார். அதுவும் என்னோடு அதிகம் பேசுவார் . அவர் புளட்டில் இருந்து விலகியவர் என்று என்னோடு பேசியபின்பு தெரிந்தது.

அக்காலத்தில் பல சிறிய ஈழவிடுதலை இயக்கங்கள் தீபாவளி பட்டாசாக உடைந்து சென்னையெங்கும் சிந்தியது. அந்த இயக்கங்களில் இருந்தவர்கள் விநாயகர் சதுர்த்தியின் பின்பாக கடலில் எறிந்த பிள்ளையார் சிலைகளாகினர். அப்படியானவர்கள் சிலர் எங்களோடு ஆறுதலாக வந்து பேசிப்போகும் ஆலமரமாக இருந்தோம் . அதிலும் டாகடர் சிவநாதன் சீனசார்பு இடதுசாரியாகவும் அவர் பிறந்த இடம் கரவெட்டியானதால் பலர் தேடி வருவார்கள்

இந்த வெள்ளை சேர்ட் மனிதர் பேசிய பின்பு, அவரது பூர்வீகம் மனைவியின் ஊராகிய காங்கேசன்துறை எனத்தெரிந்தது. பாடசாலைகள் ஊர்கள் என வரும்போது யாழ்ப்பாணத்தவர்களாக நாங்கள் நெருங்கிப் பேசும் போது எங்களுக்கு உள்ளே ஓடும் இரத்தம் மெதுவாகச் சூடேறும். இதயத்தால் நெருங்கி உண்மைகளைப் பேசுவோம். இக்காலத்தில் எப்படியோ தெரியாது.

இந்த மனிதர் புளட்டிற்கு வந்த கதையை எனக்குச் சொன்னார் .

தோற்றம் இலங்கையராக இருந்தாலும் சிங்கப்பூரில் மிகவும் வசதியாக வாழ்ந்தவர். ஈழப்போராட்ட அபிமானத்தில் புளட்டோடு தொடர்பு வைத்துக்கொண்டதுடன் இந்த ஆயுத கடத்தலிலும் சம்பந்தப்பட்டார் .

தாய்வானில் இருந்து சிங்கப்பூருக்கு கொண்டு வந்த ஆயுதங்கள் மீண்டும் பழைய காகிதங்கள் கொண்ட ஒரு கன்டயினருக்கு இரவிரவாக சிங்கப்பூரில் மாற்றப்பட்டது. அதைத் தனியாக பலரைச் சேர்த்து வேலைசெய்யமுடியாத காரியம் என்பதால் அதைத் தனது கையால் இரவோடு இரவாகச் செய்ததாகக் கூறினார்.

சிங்கப்பூரில் இருந்து வந்த கன்ரயினர் சென்னையில் பிடிபட்ட செய்தி வந்ததும் இந்த மனிதர் உடனே கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார். அந்தச் சித்திரவதையில் ஒரு பகுதியாக குளிர்அறையில் பல மணி நேரம் அடைக்கப்பட்டார். இறுதியில் மரணதண்டனை விதிக்கப்பட்டார்.
அக்காலத்தில் சிங்கப்பூரில் ஜனாதிபதியாக இருந்த ஒருவர் உடனடியாக பதவி விலகப்பணிக்கப்பட்டபோது அந்த ஜனாதிபதி ஏற்கனவே இவரை அறிமுகமாக இருந்ததால் தனது பதவிக்காலத்தின் இறுதி நாளில் ஜனாதிபதி மன்னிப்பு கொடுத்தார்.

இவர் விடுதலையாகும்போது இவருக்கு மோதிர விரலில் ஒரு சிறியபகுதியும் ஒரு கடவாய் பல்லும் காணாமல் போய்விட்டது. அவரது கதையை அவர் சொல்லியதாக நான் இங்கு எழுதிய போதிலும் அவரது தொலைந்த அங்கங்களை நான் பார்த்தேன்.

இந்த மனிதருக்கு மன்னிப்புக் கொடுத்தாலும் அவரது பணம் சொத்துகள் எல்லாம் சிங்கப்பூர் அரசால் பறிமுதல்செய்யப்பட்டது. இவர் நாடு கடத்தப்படவேண்டும் என்ற விதிப்படி அவரிடம் இலங்கையா அல்லது இந்தியாவா எனக்கேட்டபோது இந்தியா என்றார் .
விமானம் வரையும் வந்து வழியனுப்பிய காவலர்களுக்கு நான் இந்தச் சிங்கப்பூருக்கு தமிழ் ஈழத்தின் தூதுவராக வருவேன் என்று சொல்லி விட்டு வந்ததாகக் கூறினார் .

அப்பொழுது எனது கண்கள் கலங்கியது. எப்படியான வாழ்க்கையை ஒரு மனிதன் தியாகம் பண்ணியிருக்கிறான் என்பதைவிட அவருக்கு ஈழவிடுதலையில் இருந்த ஆழமான நம்பிக்கை என்னைப் புல்லரிக்க வைத்தது.

“நான் மலையாக நம்பிய உமா எவனையும் சந்தேகத்துடன் பார்க்கிறான் . தேநீர்கூட பிளாஸ்கில் எடுத்து வைத்துக் குடிக்கிறான். வாகனத்தில் போனாலும் சாரதிக்குப் பின்னால் ஒருவரை அமர்த்திவிட்டு அடுத்த பக்கத்தில் இருக்கிறான் ” என்றார்.

இறுதியாக நான் சந்தித்தபோது சென்னையில் தோசைக்கடையொன்று போட இருப்பதாகச் சொல்லிவிட்டுச் சென்றார் . இவ்வளவு விடயங்களைச் சொன்ன மனிதர் தனது குடும்ப விடயங்களைப் பற்றி எதுவும் பேசவில்லை . அவர் மட்டுமல்ல ஏராளமானவர்கள் தாய், தந்தை, மனைவி, பிள்ளைகள் என்று குடும்பங்களையும் உயிர்களையும் ஒறுத்து வேள்வியில் குதித்தார்கள்.

ஆனால் பலன்?

கடைசியாக, விரக்தியோடு அந்த மனிதன் எமது சூளைமேட்டு கட்டிடத்தில் இருந்து வெளியேறி நடப்பதை மாடியில் நின்று அதிக நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன்.

“எக்சைல் 84 : தமிழ் மக்கள் விடுதலைக் கழகத்தின் பிடிபட்ட ஆயுதங்கள்” அதற்கு 3 மறுமொழிகள்

 1. முருககபூபதி அவுஸ்திரேலியா Avatar
  முருககபூபதி அவுஸ்திரேலியா

  மேற்கு இலங்கையில் நீர்கொழும்பு இலங்கை வங்கியையும் கொள்ளையிடும் எண்ணம் அந்த இயக்கத்திடம் இருந்தது. உமா மகேஸ்வரனுக்கு நெருக்கமான ஒருவரை அங்கு அனுப்பியிருந்தார்கள். அவர் வவுனியாவில் க.பொ. த. சாதாரண தரம் படித்துக்கொண்டிருந்தவர். இடையில் படிப்பைக்குழப்பிக்கொண்டு வீட்டுக்குத் தெரியாமல் தலைமறைவாகி இந்தியா சென்று அந்த புளட் இயக்கத்தில் பயிற்சி பெற்றவர். எனினும் நீர்கொழும்பு வங்கிக்கொள்ளை நடக்கவில்லை. அந்த மாணவர் தற்போது குடும்பஸ்தனாக அய்ரோப்பிய நாடொன்றில் எதுவும் தெரியாத அப்பாவியாக இருக்கிறார். இப்படி எத்தனை மாணவர்களின் எதிர்காலம் கல்வியில் முன்னேற முடியாமல் பாதியில் நின்றது…?

 2. Parathan Navaratnam _ facebook – பெண் விடயம் அலுவலத்தில் இருந்தவர்கள் அப்போதே சொன்னவிடயம் தான் .
  2- 250 கொலைகள் நடக்கவில்லை 50-60 இருக்கும் பெற்றோரை விட்டு நாட்டுக்காக போராட உங்களை நம்பி வந்த ஒருவரை கொலை செய்தாலும் அது பிழையே . 3- உங்களிடம் வந்தவரின் பெயர் பற்குணராசா .நல்லூர் தொகுதியில் பிரபல தமிழரசு கட்சி பேச்சாளர் .இவரையும் இன்னும் இரு இளைஞர்களையும் இந்த ஆயுதம் வியாபாரம் தொடர்பாகத்தான் நாட்டை விட்டு கடத்தினார்கள் .இவர் சென்னையில் தங்கிவிட்டார் .மற்ற இருவரையும் புளொட் பணத்தில் தான் ஜெர்மனிக்கு அனுப்பினார்கள் .இவர் ஒரு மைனர் .பெரிய தடித்த பவுண் சங்கிலி ,மோதிரம் அணிந்திருப்பார் .TRRF அமைப்பில் இவர் தலைவர் .நான் காரியதரிசி ,உமாவின் மைத்துனர் துரையர் பொருளாளர் .ஒரு சின்ன டிவிஎஸ் மோட்டர் சயிக்கில் கூட வாங்கி கொடுத்திருந்தார்கள் .உமாவை பற்றி அவர் சொன்னது முழுக்க பொய் . நாங்கள் இருந்த வீட்டிற்கு உமா சயிக்கிலிலும் வந்திருக்கின்றார் .அவர் நாடகம் போட்ட காசை அடித்துக்கொண்டு ஓடியது என்பது பொய் .அந்த நாடகம் ,வள்ளுவர்கோட்டத்தில் நட்சத்திர இரவு எல்லாம் நாங்கள் ஒன்றகாத்தான் செய்தோம் .
  4- வாசு பற்றி கேட்கத்தேவையில்லை .பொய்யின் மறு உருவம் .குடும்பத்துடன் இருந்தது பத்தாது சின்ன வீடும் வைத்திருந்தார் .அப்ப செலவு வரும்தானே . சும்மா காச்சலுக்கே தனியார் ஆசுப்பத்திரில் போய் படுத்த ஆள் அவர் . 5-உமா செய்த கொலை அரசியல் அனைவரும் அறிந்ததுதான் ஆனால் அவருக்கு வேறு ஒரு முகமும் இருக்கு . எங்களுடன் எல்லாம் மிகவும் நல்லமாதிரி பழகுவார் .சரியான திறமைசாலி கெட்டிகாரரும் கூட .அஜீவனை கேட்டால் தெரியும் . எல்லாம் காலம் செய்த கோலம் .

 3. Ajeevan Veer from facebook
  50 பேர் விடயத்தில் எனக்கும் பரதனுக்கும் சிறு விவாதம் ஒன்று நடந்தது. நான் சொன்ன விடயத்தில் பரதனுக்கு உடன்பாடில்லை.

  இந்த விடயம் குறித்து எனக்கு தெரிந்ததை பதிவு செய்கிறேன். சென்னையில் அனைத்து இயக்கங்களையும் இணைத்துக் கொண்டு ஒரு மாநாடு நடந்தது. அது ஶ்ரீசாபாரத்தினத்தை புலிகள் கொலை செய்த சூடான நேரம். செல்வம் அடைக்கலநாதன் டெலோ சார்பாக முதல் முறையாக மேடையில் அப்போது புதிய தலைவராக அறிமுகமானார். அதில் அனைத்து இயக்க தலைவர்களும் பங்கு பற்றினர். பிரபாகரன் வரவில்லை. அவர் சார்பாக திலகர் வந்திருந்தார்.

  அங்கு உமாமகேஸ்வரன் (PLOTE) – லோரன்ஸ் திலகர் (LTTE) – ரட்ணசபாபதி (EROS)- பாலகுமார் (EROS) – பத்மநாபா (EPRLF) – செல்வம் அடைக்கலநாதன் (TELO) இன்னும் சிலர் கலந்து கொண்டனர். முதல் நாள் அந்த நிகழ்வை நான் வானோலிக்காக ஒலிப்பதிவு செய்தேன்.அடுத்த நாட்களில் வீடியோ செய்தேன். அந் நிகழ்ச்சியை EROS ஒழுங்கு செய்திருந்தினர் என நினைக்கிறேன். அவர்கள் புளொட் பேச்சுகளை அல்லது நிகழ்வை தவிர வேறெதையும் ஒளிப்பதிவு செய்யக் கூடாது என எனக்கு சொன்னார்கள். நான் விவாதிக்கவில்லை. சரியென்று சொல்லிவிட்டு அனைத்தையும் ஒளிப்பதிவும் ஒலிப்பதிவும் செய்தேன். (அது எப்படி என்பது வேறு கதை)

  அன்று ஜேர்மனியில் இருந்து வந்த சிலர் உமாவிடம் முகாம்களில் 250 பேர் வரை கொலை செய்யப்பட்ட விடயம் தொடர்பாக கேள்வி கேட்ட போது “இது போராட்ட களங்களில் நடக்கக் கூடிய சாதாரண ஒரு நிகழ்வு” என சொல்லி அதை எதிர்க்காமல் சில கருத்துகளை முன் வைத்தார். கேள்வி கேட்டவர்கள் அதற்கு மேல் பிரச்சனைப்படவில்லை. உமா மிக சமர்த்தியமாக எந்த கேள்விகளுக்கும் முகம் கொடுக்கக் கூடியவர் என்பதை நான் உணர்ந்த தருணம் அது. அதை உமா மறுதலிக்கவில்லை.

  பரதன் சொல்வது போல சிவா சின்னப்பொடிக்கு இவர்களை பெரிதாக தெரியாது. பற்குணராசாவும் நானும் பரதனும் அன்டனி ( வாமதேவனின் மருமகன்) இன்னும் சிலரும் ஒன்றாக இருந்தோம். ஏதிலிகள் என்ற அமைப்பு ஒன்றுக்காக பரதனும் பற்றியரும் செயல்பட்டதாக நினைவு. அதற்காத்தான் நட்சத்திர இரவை வள்ளுவர் கோட்டத்தில் நடத்தினார்கள்.

  நான் தமிழீழத்தின் குரல் வானோலியின் சிங்கள பகுதி மற்றும் ஒளிப்பதிவு ஆகியவற்றில் இருந்ததால் அந் நிகழ்ச்சிக்காக நான் ஜீப்பில் எனவுன்சிங் செய்தேன்.என்னோடு சில நேரங்களில் சிவா சின்னப்பொடியும் இணைந்திருந்தார். அந்த நிகழ்ச்சி பொறுப்புகளில் அநேகமானவற்றை பரதன் செய்தார். எனக்கு அப்போது பரதனோடு பெரிதாக நெருக்கம் இல்லை. அதன்பின் T3S கல்லூரியில்தான் நாங்கள் அறிமுகமானோம். என்னைவிட பரதன் பற்றியரோடு நெருக்கமாக இருந்தார். பற்றியரோடு இருந்தவர்கள் ஜெர்மனிக்கு அனுப்பப்பட்டது உண்மை.

  (பரதன் யாரோ ஒருவர் எழுதுவதாக குறிப்பிடுபவரது பதிவை என்னால் பார்க்க முடியவில்லை.அவரை நானோ அல்லது அவரோ புளொக் பண்ணி இருக்கலாம்.)

  சில விடயங்கள் கட்டுக் கதைகள் போல ஊகத்தில் சிலரால் பொய்யுரைக்கப்படுபவை. தனக்கு தெரியாததைக் கூட தனக்கு தெரியும் என சொல்ல முயல்வார்கள். பம்மாத்து வாசு குறித்து அனைவருக்கும் தெரியும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: