இமயமலை சிறு குழந்தைபோல் ஒவ்வொரு வருடமும் வளர்ந்து வருகிறது.இமயமலையின் வயது 50 மில்லியன் வருடங்கள்
அவுஸ்திரேலியாவின் மத்தியில் 348 மீட்டர் உயரமான கல் மலையுள்ளது. அதனது வயது 500 மில்லியன் வருடங்கள்.அது வளரவில்லை.
மத்திய அவுஸ்திரேலியாவில் உள்ள இந்த மலை ஐயேர் கல்மலை(Ayers Rock) ஒரு காலத்தில் என்று கூறப்பட்டது. இந்துக்களுக்கு இமயமலை எப்படி புனிதமானதோ,அப்படி அவுஸ்திரேலிய ஆதிவாசிகளுக்கு உலறு கல்மலை புனிதமானது . அனன்கு(Anangu) என்ற அவுஸ்திரேலிய ஆதிவாசிகள் இனக்குழுவிற்கு சொந்தமான பிரதேசத்தில் இந்த உலறு கல்மலையும் அதற்கு 25 கிலோமீட்டர் தூரத்தில் பல கல்மலைகளது சேர்க்கையால் உருவாகிய கடா ருயுரா(Kata-Tjuta) என்ற இன்னொன்றும் இருக்கிறது. இவற்றிலிருந்தே உயிர்களது தோற்றம் ஏற்பட்டதென இந்தப்பகுதி ஆதிவாசிகள் நம்புகிறார்கள். அதனால் அனன்கு இனக்குழுவின் புனிதப்பிரதேசமாக நம்பப்படுகிறது.
22,000 வருடங்கள் முன்பே இந்தப் பகுதியில் மனிதர்கள் வாழ்ந்த ஆதாரங்கள் உள்ளது. அவுஸ்திரேலிய அரசு 1985ம் ஆண்டு இந்த கல்மலைகள் உள்ள பகுதியை தேசிய வனமாக அங்கீகரித்து அனன்கு ஆதிவாசிகளிடம் கையளித்துவிட்டது. அவர்களிடமிருந்து 99 வருட வாடகைக்குப் பெற்று இந்தப் பகுதியில் சுற்றுலா மையம் ஒன்றை அமைத்து உள்ளது. இந்தப் புனிதப்பகுதிக்கு சிறிது தூரத்தில் விமான நிலயம், ஹோட்டேல்கள் மற்றும் இங்கு வேலைசெய்பவர்களுக்குத் தங்கும் வசதிகள் என்று தற்போது உருவாக்கியிருக்கிறார்கள். இந்த இடம் தற்பொழுது ஐக்கிய நாடுகளின் கல்வி கலாச்சார நிறுவனத்தால் உலகின் முக்கிய இடங்களில் (World Heritage )ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது
540 மில்லியன் வருடத்திற்கு முன்பாக அவுஸ்திரேலியாவின் மத்திய பகுதிகள் பரவைக்கடலாக இருந்தன. இந்தக் கடல் பசுபிக் சமுத்திரத்துடன் இணைந்திருந்தது. பிற்காலத்தில் படிப்படியாக நடந்த கண்டங்களின் நகர்வால் இந்தக் கற்பாறைகள் உருவாகியதாகச் சொல்கிறார்கள் .
இந்தக் கல் மலைகள் தனியான பாறையல்ல. தொடர்ச்சியான அழுத்தத்தால் மண், கல் மற்றும் கனிப்பொருட்கள் சேர்ந்து உருவாகிய சாண்ட் ஸ்ரோன்(sand stone) வகையானவை . நிலத்தின் மேல் தெரிவது மிகவும் குறைவானது. நிலத்தின் கீழ் கிட்டத்தட்ட 4-5 கிலோ மீட்டார்கள் இந்தக் கல்மலைகள் புதைந்து இருப்பதாகச் சொல்கிறார்கள்.
இந்தக் கல்மலையில் இரும்பு போன்ற தாதுப்பொருட்கள் இருப்பதால் சூரிய உதயத்தின் போதும், மறையும் போதும் பல வர்ணத்தில் தெரியும் . இதனால் கல்மலைகளைச் சுற்றிய திறந்த வெளியில் மக்கள் கூடுவார்கள், உணவுண்ணுவார்கள், மற்றும் ஆங்கிலேயரது காலத்தில் ஆவ்கானிஸ்தானியரால் அவுஸ்திரேலியாவிற்கு கொண்டு வரப்பட்ட ஒட்டகங்களில் சவாரி செய்வார்கள். இதை விடப் பகலில் சூரிய வெளிச்சத்தை உள்வாங்கி இரவில் ஒளிரக்கூடிய கண்ணாடிக்குமிழ்கள் இருப்பதால் இருண்ட இரவில் இந்தப் பகுதி ரியூலிப் மலர்களின் வனம்போல் காட்சி தரும்.
இரண்டு நாட்கள் இந்த காட்சிகளைப் பார்த்தோம். மூன்றாவது நாள் ஆதிவாசிகளது வாழ்வை அறிவதற்கும், அவர்கள் வாழ்ந்த இடங்களைப் பார்ப்பதற்கும் ஒரு நாளை ஒதுக்கினோம். அதற்கான பிரயாணப்பதிவை செய்துவிட்டு அங்குள்ள அருங்காட்சியகத்திற்கு சென்றேன்.
“ இதுவரை எமது மண்ணில் இருந்து பெரிதளவு செல்வத்தை எடுத்தீர்கள். அதிலிருந்து சிறிது பணத்தை இந்த உண்டியலில் போடுங்கள் “ என்ற வார்த்தை ஆதிவாசிகளின் அருங்காட்சியகத்தின் உள்ளே சென்றபோது கதவருகே உள்ள கண்ணாடி உண்டியலில் அருகே ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.
வார்த்தைகளின் வலிமையை உணர்ந்தேன். அந்தக் கூர்மையான சொற்கள் என்னிதயத்தில் ஆழமாகத் தைத்தது.
1770 அவுஸ்திரேலியாவில் இறங்கிய ஆங்கிலேயர் மட்டுமல்ல அதன் பின்பு வந்த ஐரோப்பியர்கள் மற்றும் என் போன்ற ஏராளமான குடியேற்றவாசிகளும் இந்த நாட்டின் செல்வத்தை அனுபவிக்கிறோம். அவுஸ்திரேலியா, இரும்புத் தாதையும் கரி , வைரம் , மற்றும் தங்கம் அலுமினியம் என்று நிலத்தில் பெறப்பட்ட பொருட்களிலே அன்னிய செலாவணியை ஈட்டும்போது அந்த வார்த்தைகள் மேலும் அழுத்தமான அர்த்தமுள்ளதாகின்றன.
இதுவரையில் அவுஸ்திரேலிய சனத்தொகையில் 3 வீதமான மக்கள் மட்டுமே ஆதிவாசிகளாக இருக்கும்போது சிட்னி, மெல்பன் போன்ற நகரங்களில் வாழ்ந்தால் எந்த ஆதிவாசிகளையும் சந்திக்காது பிறந்து, வாழ்ந்து, இறந்துவிடலாம். சிட்னியில் படிக்கும் காலத்தில் ரெட்பேண் என்ற பகுதியில் வாழ்ந்த ஆதிவாசிகளையும் பின்பு பயணம் சென்றபோது அங்கொன்று இங்கொன்றாக கண்டதல்லாது ஆதிவாசிகளோடு பழகிய அனுபவம் எனக்கில்லை. எவ்வளவு படித்தாலும் மியுசியங்களைப் பார்த்தாலும் இரத்தமும் சதையுமான மனிதர்களோடு பழகும் அனுபவம் வித்தியாசமானது என்பதை இம்முறை அறிந்துகொண்டேன்.
ஒரு நாள் எங்களை அந்த தேசியவனத்தை சுற்றிகாட்ட ஒரு அனன்கு ஆதிவாசியான வழிகாட்டியை ஒழுங்கு செய்தோம். இருபத்தாறு வயதான கெல் வட்சன். அவனது மனைவியுடன் வந்தான்.
கிட்டத்தட்ட நூறு கிலோமீட்டருக்கு அந்த தேசியவனத்தில் நாள் முழுவதும் பிரயாணம் செய்தோம். நகர மக்களாகிய நாங்கள் அங்கு தனித்து விடப்பட்டால் ஒரு நாள் தாங்கமாட்டோம். வருடத்திற்கு 250 மி மீட்டார்கள் மழை பெய்யும் பாலைவனம்.விரிந்த ஒரே அமைப்பைக் கொண்ட மணற் பிரதேத்தில் இரும்புத்தாது கலந்து இருப்பதால் செம்மண் பிரதேசம் – இடைக்கிடை பாலைவன ஓக்கெனும் மரம் நீண்டு வானத்தை நோக்கியிருந்தது . அதைக் கூர்ந்து பார்த்தால் கசூர்ரினா எனப்படும் சவுக்குமரம். அந்தச் சவுக்கு மரத்தின் கீழ் மாடே தின்னாத கடற்க்கரைக் கள்ளிபோன்ற புல்லு வளர்ந்திருந்தது. இடைக்கிடை ஆவாரம் செடி போன்ற மல்கா மரங்கள் பற்றைகளாக ஆள் உயரத்திற்கு வளர்ந்திருந்தது.
நாங்கள் சென்ற காலம் குளிர்காலமானதால் பச்சையாகத் தெரிந்தது. மழைக்காலத்தில் காட்டு பூக்கள் பூத்து அழகாகத் தெரியுமென்றார்கள். பாறைக்கற்கள் கொண்ட பிரதேசத்தில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கியிருக்கும். இந்தப்பிரதேசத்தில் தற்பொழுது ஒட்டகங்கள் கட்டாக்காலியாக ஆட்சி செய்கின்றன. 800000-1 மில்லியனாக இவை பெருகி அந்த வனத்தை நாசம் செய்கின்றன. பாலைவனத்தில் வாழும் மற்றைய உயிரினங்களைப் பகலில் காண்பது அபூர்வம்.
இப்படியான இடத்தில் மனிதர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று எண்ணியபோது நாம் சென்ற வாகனம் ஒரு இடத்தில் நின்றது. அந்த இடம் ஆதிவாசி மக்கள் தங்கி செல்லும் பிக்னிக் பிரதேசம். தற்பொழுது உல்லாசப் பிரயாணிகள் தங்கிச் செல்வதால் கழிப்பறை அமைந்துள்ளது.
அங்குள்ள சிறிய தகரக்கொட்டிலின் உள்ளே எங்களுக்கு தேநீர் தந்தார்கள். சுற்றிப் பார்த்தபோது செட்டைகள் பல நிறத்தில் குவிந்து பறவைகளின் சுடுகாடாகத் தெரிந்தது..
ஒரு மரத்தாலான ஈட்டியை கெல் வட்சன் எம்மிடம் தந்து தூர எறியச்சொன்னான். நான் எறிந்தபோது 50 அடிகள் கூடபோகவில்லை. ஆனால் அவன் எறிந்தபோது 200 அடிகள் தூரம் சென்றது.
“இந்த ஈட்டியால் பெரிய மிருகங்களைத் தாக்குவோம்” என்றான்
“இந்தச் செட்டைகள் என்ன ?— என்றபோது “அது – பறவைகளை உண்டிவில் கொண்டு தாக்கி நெருப்பில் வாட்டுவோம் . அப்படியான செட்டைகளே நீங்கள் பார்ப்பது” என்றான்.
எங்களுடன் இருந்து தேநீரைக் குடித்தபடி “நான் எனது கதை சொல்லப் போகிறேன் “என்றான் .
நாங்கள் கதை கேட்கத் தயாராகினோம். நான், எனது மனைவி, எங்கள் வயதொத்த ஒரு அவுஸ்திரேலிய தம்பதிகள். ஐந்தாவதாக இருபத்தைந்து வயதான கைலி என்ற இளம் பெண் கொண்ட சிறியது எமது குழு .எல்லோரும் மணல் பரப்பில் இருந்த மரக் குற்றிகளில் இருந்தோம்.
எமது அருகில் குந்தியிருந்து கொண்டு தனது சிறிய பையில் இருந்து கருப்பு வெள்ளை படத்தில் உள்ள வயதான ஆதிவாசி மனிதரைக் காட்டி “ இவர் எனது பூட்டன். இவரே எமது இனக்குழுவுக்குத் தலைவர். மூன்று மனைவிகளை வைத்திருந்தவர். ஒரு நாள் நண்பர்கள் இருவருடன் சேர்ந்து ஒட்டகம் ஒன்றை ஈட்டியால் கொன்றுவிட்டார். இதனால் அலிஸ்பிரிங்கிலிருந்து ஒரு பொலிஸ் குழு வந்து அவரைப் பிடித்து கை கால் கழுத்து எல்லாம் சங்கிலி போட்டு அலிஸ்பிரிங் கொண்டு சென்றார்கள். இரவானதும் வழியில் இளைப்பாறியபோது பொலிசாரிடமிருந்து தப்பியதால் பூட்டன் தொடர்ச்சியாகத் தப்பி ஓடிக்கொண்டிருந்தார் இறுதியில் தென் அவுஸ்திரேலியாவில் ஆயிரம் கிலோமீட்டர் அப்பால் பிடிபட்டபோது நீதிபதியால் தென் அவுஸ்திரேலியாவில் இருக்கக்கூடாது என்ற எச்சரிக்கையுடன் விடுதலை செய்யப்பட்டார். பிற்காலத்தில் இந்தப் பிரதேசத்தை ஆதிவாசிகளுக்கு உரிமையானதென்ற போராட்டத்தை எடுத்தபின் சிறிதுகாலத்தில் இறந்துவிட்டார். எனது குடும்பத்தில் எல்லோரும் கஸ்டப்பட்டு வளர்ந்தபோது, எனது அம்மா அவுஸ்திரேலிய வெள்ளை விவசாயி ஒருவருக்கு வேலை செய்தபோது ஏற்பட்ட உறவால் நான் பிறந்தேன். நான் ஒரு அரைசாதி ”என்று தனது கோதுமை நிறமான தோலைக்காட்டினான் கெல் வட்சன்
அவனைப் தனியாக மெல்பேனில் பார்த்தால், கூரிய நாசியுள்ள கர்நாடகா அல்லது ஆந்திரப் பிரதேச இந்தியன் என நினைத்திருப்பேன்.
மற்றொரு வரைபடத்தை எடுத்து தனது பூட்டன் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தப்பி ஓடிய பாதையை காட்டினான் .
“அம்மா குடிகாரியாகி விட்டதால் என்னை, எனது பேத்தியே வளர்த்தார் .இப்பொழுது எனது மனைவியும் இதே குழுவை சேர்ந்தவர். என்றான்.
எங்களோடு வந்தாலும் அவனது மனைவி வெட்கத்துடன் அங்குள்ள சவுக்கு மரத்தருகே நின்றாள். அவள் கருமையான நிறமும் ,விரிந்த மூக்குடன் பொதுவான ஆதிவாசியின் தோற்றத்தைக் கொண்டவள்.
“எனது பூட்டனின் பெயர்தான் உலறு. இந்த கல்மலையின் பெயர் உலறு. “
கெல் வாட்சன் ஒருவிதத்தில் ஆண்ட பரம்பரை என நினைத்தேன்.
ஆரம்பத்திலே ஆதிவாசிகள் அவர்களை மட்டுமல்ல அவர்கள் வீடுகள் என்பவற்றைப் படமெடுப்பதை விரும்புவதில்லை எனச் சொல்லப்பட்டிருந்தது.
வாகனத்தில் சிறிது துரம் சென்றதும் அங்கு ஒரு மரத்தின் வேரைக் கிண்டி அந்த வேரின் நடுவில் உள்ள ஒரு கூட்டு புழு வைக்காட்டி ( witchetty grub) “இது எங்களது உணவு ” என்று காட்டியபோது என்னால் போட்டோ மட்டும் எடுக்க முடிந்தது . பின்பு நெருப்பில் வாட்டியபோது அதைத் தின்றேன். இறாலுக்கும் கணவாய்க்கும் இடைப்பட்ட சுவையாக இருந்தது.
வேறொரு இடத்தில் ஒரு மரத்தின் கிளையை உடைத்து அதில் வேர்வைபோல் கசிந்திருந்ததைக் காட்டி “இதில் தேன் துளிகள் இருக்கு” என்றபோது நான் நம்பவில்லை .
“பாலைவனத்தில் தேனியிராது ஆனால் இந்த மரத்தில் கசிவதை நக்குவோம்” என்றபோது நானும் நக்கினேன்- இனிப்பாக இருந்தது.
“இந்தப்பிரதேசத்தில் தண்ணீர் எப்படி —–?” என்ற போது கல்லுப்பாறைகளில் தேங்கி நின்ற தண்ணீரைக் காட்டினான் . அப்படியான இடங்களில் பெண்கள் தண்ணீர் விட்டு உணவை அரைப்பார்கள். ஆவரை போன்ற ஒரு மரத்தின் காய்களை அரைத்துத் தின்னுவார்கள் என அதற்கான கல்லையும் எடுத்துக்காட்டினான்.
அவுஸ்திரேலிய ஆதிவாசிகள் தனித்தன்மையானவர்கள் 500 மேற்பட்ட இனக்குழுவினர் 750 மொழிகள் பேசியவர்களிடம் தற்பொழுது 40 மொழிகளே எஞ்சியுள்ளது .
கற்கால மனிதர்களாக எந்தப் பயிர் செய்கை இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவை உண்டார்கள் . கப்டன் குக் வரும்போது கிட்டத்தட்ட 3 இலட்சம் மக்களே இந்தப்பெரிய நிலப்பரப்பில் வாழ்ந்தார்கள். அதிக உணவுத்தேவை இருக்கவில்லை. இயற்கையில் கிடைத்ததே போதுமானதாக இருந்தது. இறுதி வரையும் நாடோடிகளாக இருந்ததால் வீடு அல்லது உறைவிடமற்று வாழ்ந்திருக்கிறார்கள். எதிரிகளே இல்லை . பாதுகாப்புத்தேவை இல்லாதபடியால் அரசோ , ஆயுதங்களோ தேவையில்லை. பறவைகள் மற்றும் கங்காரு போன்ற மிருகங்களை வேட்டையாட மர ஈட்டி மட்டுமே போதுமானதாக இருந்தது. மற்றைய சமூகங்களில் கற்காலம், தாமிரக்காலம், இறுதியாக இரும்பு – பின் உருக்கு காலமென வந்தது.
போரில்லை என்பதால் ஆயுதத் தேவையில்லை.எமக்கு மக்கள் தொகை கூடி உணவுத்தேவை வந்தால் பயிரிடுகிறோம். கால் நடை வளர்க்கிறோம். கலாச்சாரங்கள் தேவைகளை வைத்தே மாற்றமடைகின்றன. ஆயுதம் உணவுப்பொருள் தேவையற்வர்களாக இருந்தவர்களை ஆதிவாசிகள், அல்லது நாகரிகமற்றவர்கள் எனப் பெயரிடுகிறோம்.
வீட்டுக்குள் இருக்கும் எங்களுக்கு இரவு ஒன்றே. அல்லாவிடில் முன்னிரவு பின்னிரவு என்போம். வெளியே தூங்கும் ஆதிவாசிகளின் மொழியில் இரவை எட்டாகப் பிரித்து சொல்வார்கள். அவர்களிடம் எழுத்து மொழியில்லை. அரசு இருந்து வரி வசூலித்தால் அவர்களுக்கு மொழியில் பதிவு வைக்கவேண்டிய தேவையிருக்கும். அரசு இல்லை. ஆனபடியால் எழுத்துத் தேவையில்லை .
அவர்களிடம் கதைகள் பாட்டு நடனம் உண்டு. இலக்கியமுள்ளது. கெல் வட்சன் என்னிடம் கூறிய கதை அவனுக்கு வாய்வழியாக பாட்டி சொன்னது. அவர்களது கதைகள் கனவுகளைக் கொண்டவை. அவைகள் பாடலாகவும் அழகான சித்திரமாகவும் வரையப்படுகிறது. தலைமுறையாக கடத்தப்படுகிறது. அவுஸ்திரேலிய ஆதிவாசிகள் ஓவியம் உலகத்திலே தனித்தன்மையானது. 20ம்நூற்றாண்டில் ஆரம்பக்காலத்தில் பிக்காஸோ போன்றவர்களால் உருவாகிய அரூபமான(Abstract) ஓவிய வகை ஐரோப்பாவைச் சேர்ந்தது. அவுஸ்திரேலிய ஆதிவாசிகளின் புள்ளிகளாலான ஓவியம் எத்தனை ஆயிரம் வருடங்கள் முந்தியது? கனவுகளையும் காட்சிகளையும் உருவங்களாக்காது, புள்ளிகளாக்கி அரூபமாக வெளிப்படுத்துகிறார்கள்.
இறுதியில் கெல் வட்சனும் மனைவியும் எமக்கு விடை கொடுத்துவிட்டு தங்கள் குடியிருப்பை நோக்கிச் சென்றபோது எனது விழிகள் அவர்களது முதுகில் இருந்தது. இதயத்தில் குற்ற உணர்வு நிறைந்திருந்தது. கலங்கிய மனத்துடன் ஒட்டகத்திற்கு கூடாரத்தைக் கொடுத்த வழிபோக்கனது கதையை நினைத்தபடி அங்கிருந்து வந்தேன்.
மறுமொழியொன்றை இடுங்கள்