பிரேசிலில் ரியோ டி ஜெனிரோவோடு சென்ற போது ஒலிம்பிக் நடந்து ஒரு மாதமாகியிருந்தது. லத்தீன் அமரிக்காவில் மட்டுமல்ல உலகத்திலே பெரிய நகரங்களில் ஒன்று ரியோ டி ஜெனிரோ. அதிகமாக உல்லாசப்பிரயாணிகள் செல்லும் இடம். ஆனால் பல மேற்கத்திய ஊடகங்கள் நகரம் பாதுகாப்பற்றதும், வன்முறையும், போதைமருந்துகளும் மலிந்த இடமென்பதால் இவர்கள் எப்படி ஒலிம்பிக்கை நடத்துவார்களென சொல்லிக்கொண்டிருந்தபோதே வெற்றிகரமாக ஒலிம்பிக்கை நடத்தி முடித்தார்கள்.
ஊடகங்களின் வெருட்டலால் நாங்கள் கொப்பகானா என்ற பிரபலமான இடத்தில் தங்கினோம். மேல்தட்டு உல்லாசப் பிரயாணிகள் நிற்பதுடன் பாதுகாப்பானது. அத்துடன் இங்குள்ள கடற்கரை பிரசித்தி பெற்றது.
நாங்கள் இரவில் போய் சேர்ந்தபோது எங்கள் ஹோட்டலில் இருந்து எப்பொழுதும் கலகலப்பாக கொப்பகானா கடற்கரை தெரிந்தது. மங்கிய ஒளியில் கருநீலமான அத்திலாந்திக் கடல் திரண்டுவந்து வெண்மணற்பரப்பில் அடித்து விளையாடிக்கொண்டிருந்தது.. வீசிய காற்று வாயில் பட்டு உப்பாகக் கரைந்தது. அந்த முழுக் கடற்கரையும் நீச்சலுடை அணிந்த பெண்களாலும் ஆண்களாலும் நிறைந்திருந்தது. கடற்கரை அருகே செல்லும் பாதை வாகனங்களாலும் மக்களாலும் ஏதோ திருவிழாவாக கலகலப்பாக இருந்தது. ஹோட்டலின் அருகே இருந்த உணவகத்திற்குச் சென்ற போது போர்த்துக்கேயரும் ஆபிரிக்காவினரும் கலந்த புதிய இனமாக இருந்தது. பிரேசிலியர்கள் மற்றைய ஸ்பானியர்களைவிட உருவத்தில் மட்டுமல்ல பழகுவதிலும் வித்தியாசமாக இருந்தனர்.அடுத்த நாள் வரும்வரை வாழ்வதற்கு காத்திராதவர்கள்போல் தென்பட்டார்கள். நடுநிசி கடந்த பின்பும் உறங்காத நகரமாகத் தெரிந்தது.
பிரேசில் தென்னமரிக்காவில் பெரிய நாடு மட்டுமல்ல போர்த்துக்கீய மொழி பேசும் ஒரே நாடு. போர்த்துக்கேய கடலோடிகள் வந்ததும் ரியோ டி ஜெனிரோ அழகில் மயங்கிவிட்டார்கள்.சிட்னி மாதிரி அழகான குடாக்கடலானதால் கப்பல்களுக்குப் பாதுகாப்பானது என்பதால் உடனே கோட்டையைக் கட்டினார்கள். அதன் பின்பு ஆப்பிரிக்க அடிமைகளின் முக்கியமான இறக்குமதி துறைமுகமாகவும், அடிமைகளை ஏலம் விடும் சந்தையாகியது.
அமேசன் ஆறும் அதைச் சுற்றியுள்ள காடும் தற்போது பெரும்பகுதி ஓட்சிசனை உற்பத்தி செய்து உலகின் சுவாசப்பையாக உள்ளது என்கிறார்கள்.
இப்படியான நாட்டில் ரியோ டி ஜெனிரோ நகரத்திலே எங்களது மூன்று நாள்ப்பயணம் சுருக்கமாக முடிந்தது என்பது கவலையான விடயமாக இருந்தது.
நகரத்தின் மத்தியில் உள்ள சுகர்லோவ் மவுண்டின் தனி ஒரு கல்மலை எனப்படும் குன்றில் இருந்து கேபிள் கார் செல்கிறது அதிலிருந்து முழு ரியோ டி ஜெனிரோ நகரத்தையும் துறைமுகப்பகுதியை பார்ப்பது அழகான காட்சியாகும்.அங்கு அழகான கட்டிடங்கள் புதிதாகக் கட்டப்பட்டிருந்தன.
துறைமுகத்தில் அக்கால கப்பல்களை காட்சிப்பொருளாக வைத்திருந்தனர். 150 கடலோடிகளுடன், சில குதிரைகள், ஒன்று அல்லது இரண்டு பீரங்கியுடன் வந்து உலக நிலப்பரப்பில் கணிசமான பகுதியைக் கைப்பற்றியிருக்கிறார்கள் என்பது எனக்கு நம்ப முடியாமல் இருந்தது. அதேபோல் அடிமைகளை வைத்திருந்த இடங்கள் பார்த்தபோது மனத்தில் அருவருப்பு ஏற்பட்டது. கிட்டத்தட்ட 15 மில்லியன் அடிமைகளை அமரிக்க கரைகளுக்கு கடத்தியதில் பெரும்பகுதியை செய்தவர்கள் போர்த்துக்கேயர்களே.
கடலைக் கடந்தவர்கள் 15 மில்லியன் எனக்கணக்கானால் இடையில் இறந்தவர்களது கணக்கு எங்வளவு?
யேசுநாதரின் 38 மீட்டர் உயரமான பிரசித்தி பெற்ற கைவிரித்த சிலை கொறவாடோ 700 மீட்டர் ((Corcovado) மலையில் உள்ளது அதைச் சுற்றி பாதுகாக்கப்பட்ட காடு உள்ளது. அந்தக் காட்டின் ஊடாக மின்சார ரெயிலில் செல்வது வித்தியாசமான அனுபவம். இந்தச் சிலை மாபிள் போன்ற சோப்ஸ்ரோனில் செய்யப்பட்டது. ஐரோப்பிய சிற்பிகள் மற்றும் என்ஜியர்களால் வடிவமைக்கப்பட்டது தற்போது ரியோ டி ஜெனிரோவின் முக்கிய அடையாளமாகிறது. பிரேசிலின் கத்தோலிக்க மதத்தின் நினைவாக உருவாக்கப்பட்டது, உலக அதிசயமாகவும் உல்லாசப்பிரயாணிகள் செல்லும் முக்கிய பகுதியாக பேணப்படுகிறது.
நாங்கள் அங்கு சென்று இரண்டு மணிநேரம் நின்றாலும் யேசுவின் முகத்தை சில நிமிடநேரம்தான் பார்க்க முடிந்தது. காரணம் ஈரலிப்பான மலைப்பிதேசமானதால் முகில்கள் வந்து படிந்து விடும். ஒரு தொகையான முகில்கூட்டம் கடந்து செல்ல, மற்றைய முகில்கூட்டம் சிலையை மறைந்துவிடும். கமராவும் கையுமாக இரு மணிநேரம் கண்ணாம்பூச்சி விளையாடி சில படங்களையெடுத்தோம். அந்த மலைப்பகுதியில் இருந்து நகரத்தை தெளிவாகப் பார்க்கமுடியம்.
நமது நாட்டில் கிடைக்கும் வாழைப்பழம், மாம்பழம், இரம்புட்டான், திராச்சை என எல்லாப் பழங்களும் கிடைக்கும். நாங்கள் கொறவாடோ மலைப்பிரதேசத்தில் பலா மரங்கள் காடாக இருந்ததைக் கட்டோம் . ஏதோ காரணத்தால் பலாப்பழங்களை உண்ணவில்லை. பழச்சந்தைக்கு சென்றபோதும் பலாப்பழத்தைத் தவிர, மற்றவை எல்லாம் இருந்தன.
உலகத்தில் மிகவும் பிரபலமானமானது சம்பா காணிவல். அக்காலத்தில் பிரேசில் களை கட்டிவிடும். எனக்குத் தெரிந்த பலர் அவுஸ்திரேலியாவில் இருந்து அந்த காணிவல் பார்க்க பிரேசில் செல்வார்கள்.
ஆபிரிக்காவில் இருந்து அடிமைகயோடு இந்தச் சம்பா நடனம் மேற்காபிரிக்கப் பகுதியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. தற்பொழுது பிரேசிலில் பல இடங்களில் கிளையாகப் பிரிந்து வேறுபடுகிறது. உடலை நிமிர்த்தியபடி பாதத்தையும் முழங்காலையும் சங்கீதத்திற்கு ஏற்றபடி மேல் அசைத்தபடி நடக்கும் இந்த நடனம் கண்ணைக்கவரும் உடைகளால் மிகவும் பிரசித்தி பெறுகிறது.ரியோவில் பல சம்பா பாடசாலைகள் உள்ளது. எமது வழிகாட்டி பல கட்டிடங்களைக் காட்டி இவையெல்லாம் சம்பா பாடசாலைகள் என்றார்கள்.
எங்களை அழைத்துச் சென்ற சம்பா நடன நிகழ்வில் ஆட முன்பு அந்த அழகிகள் வந்து எம்முடன் படமெடுப்பார்கள். அந்தப்படத்தை எம்மிடம் பின் விற்பார்கள்.
நடனம் தொடங்கியதும் உண்மையில் அந்த இரண்டு மணிநேரமும் போனது தெரியவில்லை. பெண்களது உடைகள்,உடைகளற்ற பகுதிகள், நடனங்கள் என்பற்றைவிட இளைஞர்கள் என்னை மிகக் கவர்ந்தார்கள். தங்கோவில் இருந்தது போன்ற நளினம், சம்பாவில் எனக்கு தெரியவில்லை. ஆனால் கண்ணுக்கும் காதிற்கும் விருந்தாக இருந்தது.
உலகத்தில் நிலவுடைமை சமுக அமைப்பிலே பெரும்பாலான நடனங்கள் உருவாகின. அவற்றில் பொழுதுபோக்கு அம்சத்துடன் நிட்சயமாக பால்க்கவர்ச்சியின் தன்மைகள் இருக்கவேண்டும். மற்றவை உழைக்கும் சமூகத்தின் சந்தோசத்தைப் பிரதிபலிக்கும் கிராமிய நடனங்கள் . சம்பா ஆப்பிரிக்க குடிமக்களின் தன்னெளிர்ச்சியை பிரதிபலிக்கும் நடனம் ஆனால் தற்பொழுது பால்க்கவர்ச்சியைச் சேர்த்துப் பரிமாறுகிறார்கள்.
பிரேசிலின் சேரிகள்
நான் ரியோவில்போக விரும்பிய இடம் சேரிகள்( Favela) என்பாடும் சேரிப் பகுதி தொலைவில் இருந்தே பார்த்தோம். உள்ளே போகமுடியவில்லை. பாதுகாப்புக் காரணம் என வழிகாட்டி சொன்னார். பிரேசிலின் பல நகரங்களில் சேரிகள் உள்ளன. இவை நமது சேரிகள்போல் குடிசைகள் அல்ல, ஆனாலும் நெருக்கமாக அமைந்துள்ளன. அடிப்படை வசதிகள் குறைவாகவும்- பாடசாலைகள், வேலை வாய்ப்புகள் அற்றவை. அத்துடன் கொலைகள், போதைவஸ்து, சண்டியர்கள், துப்பாக்கிச்கூடுகள் எனப் பல குற்றச் செயல்கள் நடக்குமிடமாக மாறியுள்ளது.
இவைகள் உருவானதற்கு முக்கிய காரணம் ஆப்பிரிக்க அடிமைகளை விடுதலையாக்கியதும் அவர்களுக்கு நிலங்கள் கொடுக்கப்படவில்லை. இதனால் வாழ்விற்காக அவர்கள் வேலைதேடி நகரத்திற்கு வருகிறார்கள். நகரங்களில் கீழ் மட்டதொழில்கள், வீட்டுவேலைகள் என்பனவற்றில் அவர்கள் தங்களது வருவாயைப் பெறும்போது நகரத்தின் புறநகர்ப்புகதிகளில் காலிநிலங்களில் அல்லது அரசாங்க நிலங்களில் தங்கள் முயற்சியால் வீடுகளை உருவாக்கும்போது, எழுந்தமானமான குடியிருப்புகளை உருவாக்குகிறார்கள். உலகத்திலே இப்படியான சேரியுருவாக்கம் நடந்த நாடுகள் இந்தியா, தென்ஆபிரிக்கா மற்றது பிரேசில். இந்த மூன்று நாடுகளிலும் சிறுபகுதியியினர் பெருஞ்செல்வத்தை வைத்திருப்பதுடன் இன்னமும் பொருளாதார சீர்திருத்தம் நடக்கவில்லை. பலகாலமாக கீழ்மட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டதாக இருக்கிறது.
தற்போது ஊழல் குற்றங்கள் வைக்கப்பட்டபோதும், கடந்த பதினைந்து வருடங்கள் பிரேசிலின் பொற்காலங்கள்.தொழிலாளர் கட்சியின் லுலா டி சில்வா ஆட்சியிலும் பின்பு அவரது வாரிசான டில்மா ருஸ்சோவின் வருடங்களும், ஏராளமான மக்கள் வாழ்க்கைத்தரம் உயர்த்தப்பட்டு பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்து. இக்காலத்தில் பெட்ரோல், இரும்பு உட்பட்ட கனிமப் பொருக்களின் விலையேற்றமும் இதற்கு முக்கிய காரணம். தற்பொழுது மீண்டும் பெட்ரோல் கனிமப்பொருட்களின் விலை உலகச் சந்தையில் குறைந்ததும் வலதுசாரிகளின் கையோங்கியுள்ளது. தற்பொழுது மக்களிடையே பல போராட்டங்கள் தொடர்ச்சியாக நடக்கின்றன.
ரியோவில் இருந்து மீண்டும் சந்தியாகோவிற்கு திரும்பியபோது ஏர்போட்டில் நடந்த சம்பவம் இங்கு குறிப்பிடவேண்டும். விமானத்தில் இறங்கி சுங்கத்தைக் கடந்து வந்தபோது சாதாரண உடையில் இருவர் என்னையும் மனைவியையும் மறித்தனர்.
என்னவென ஏறிட்டபோது, நாங்கள் போதைவஸ்துப் பொலிஸார் எனக்கூறி தங்களது அடையாள அட்டையைக் காட்டினர். எங்களது பெட்டிகளைச் சோதிக்க வேண்டும் என்றனர்
நாங்கள் எங்களது பாஸ்போட்டைக் அவர்களில் ஒருவரிடம் கொடுத்தேன்.
அதில் எனது பாஸ்போட்டில் எனது நடுபெயராக நேருடா என்ற பெயர் இருந்தது.
‘உங்கள் பெயரில் எங்கள் கவியொருவர் இருக்கிறார் தெரியுமா?’
‘அவரால்த்தால்தான் என் பெயர் வந்தது’
‘நீங்கள் அவரது வீட்டைப் பார்த்தீர்களா?
‘வந்த முதல் நாளே பார்த்தேன் நானும் கதைகள் எழுதுபவன்’ என்றதும் எனது எங்கள் பாஸ்போட்டைத் தந்துவிட்டு இருவரையும் கை குலுக்கு விடைகொடுத்தனர்
நான் எழுதுவது எனக்குப் பெருமை ஆனால், எந்தப் பிரயோசனமும் இல்லை, வீண் செலவு. நான் காதலிக்கும்போது எழுத்தாளர் என்றால் கைவிட்டிருப்பேன் என்று அடிக்கடி சொல்லும் மனைவியை திரும்பிப் பார்த்தபோது முகத்தில் சிரிப்பு வந்தது.
நான் அதைப்பற்றிப் பேசவில்லை. பேசியிருந்தால் அந்தப்பேரால் தான் விட்டார்கள் எனத் தர்க்கித்திருக்கலாம்.
முன்பு தங்கிய அதே ஹோட்டலில் தங்கினோம் அது நகரின் மத்தியில் இருந்தது. தென்னமரிக்காவில் நாங்கள் தங்கும் கடைசி இரவு. உணவருந்திவிட்டு நண்பனின் மனைவியும் சியாமளாவும் ஹோட்டேலுக்கு சென்றபோது “நாங்கள் நடந்து விட்டு வருகிறோம்” என்று ஹோட்டேலைச் சுற்றிய பகுதியால் நடந்தோம். இரவு பத்துமணி ஆனால் பகல் மாதிரி வெளிச்சமும் மக்களும் இருந்தார்கள்.
நடந்துவிட்டுத் திரும்பும்போது ஹோட்டலின் பின்பகுதியில் இருந்து சங்கீதம் வந்தது. சரி உள்ளே போவோம் என்றால் கையில் எதுவித காசுமில்லை. கடன் அட்டையே இருந்தது. வாசலில் ஒருவரிடம் கேட்டபோது “அது நைட்கிளப்” என்றார் எனது நண்பனிடம் 20 அமரிக்க டாலர்கள் இருந்தது
அதைக்காட்டியபோது ஆரம்பத்தில் அமரிக்க டாலர் எடுப்பதில்லை என மறுத்தார் பின்பு உள்ளே போய் கேட்டு வந்தபின் உள்ளே விட்டார்கள்.
இருளான மாடிப்படிகளில் ஏறிச்சென்றபோது எவருமில்லை. வெறுமனே சிறிய மேடை. அங்கிருந்த ஆசனத்தில் அமர்ந்தோம். சிறிது நேரத்தில் நடனம் தொடங்குமென்றார்கள். எங்களுக்கு மது பானங்களை வாங்கும்படி கூற- நான் ஏற்கனவே சாப்பிட்டதால், கோக்கை மட்டுமே வாங்கினேன்
நடனம் ஆரம்பமாகியது. மெல்பேனில் பார்த்த போல் நடனம்தான். ஸ்பானிய சங்கீதத்துடன், லத்தீன் பெண் வித்தியாசமாக இருந்தது. நடன நிகழ்வை இரசித்தபடி இருக்கும்போது இரண்டு பெண்கள் வந்திருந்து, ஸ்பானிசில் பேசியபோது புரியவில்லை. எங்களிடம் போனைக் கேட்டபோது நாங்கள் கொடுக்கவில்லை. தங்கள்,போனை எடுத்து கூகிளில் தட்டியபோது அது ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது. தங்களுக்கு மது வாங்கித்தரும்படி கேட்டார்கள். கொஞ்சம் வித்தியாசமான இடம் எனப் புரிந்தாலும் பணமில்லை. மீதியிருந்த 10 அமரிக்க டாலரில் இரண்டு பெண்களுக்கும் மது வாங்கியதும் அவர்கள் மிகவும் சரளமாகக் குடித்தார்கள். ஸ்பானிசில் பேசுவது பரியவில்லை. மிகவும் நெருங்கி வந்து இருந்தார்கள்.
பசிபிக் தீவுகளின் பெண்கள் இருவரும் மிகவும் செழிப்பாக இருந்தார்கள். எனக்கு மூச்சு இரைக்கத் தொடங்கியது.
“எழும்புவோமோ? என எனது நண்பனிடம் கேட்டபோது அவனும் தயங்கியபடி எழுந்தான்
அப்பொழுது அவர்களது மோபைலைக் காட்டினார்கள்
அதில் ரிப்ஸ் என்று இருந்தது.
கிட்டத்தட்ட 5 டாலர்கள் சில்லறையாக மிச்சமிருந்தது அதைக் கொடுத்துவிட்டு வெளியேறினோம்.
அறைக்கு சென்றபோது என்ன இவ்வளவு நேரமும் என்ற கேள்விக்கு பதில் சொல்லவேண்டியிருந்தது. விடயத்தை சொன்னாலும் நெருங்கி மோதியதை மறைத்து விட்டோம்
தென்-அமரிக்கப் பயணத்தின் கடைசி அத்தியாயம் இரண்டு ஈஸ்டர் ஐலண்ட் பெண்களைச் சந்தித்ததில் முடிந்தது.
மறுமொழியொன்றை இடுங்கள்