புவனஸ் அயர்ஸ் நகரத்தின் மத்தியில் உள்ள மெற்றப்போலிட்டன் தேவாலயத்திலிந்து வீதியைக் கடந்து சென்றபோது, எதிரில் உள்ளது மே சதுக்கம் ( Plaza de Mayo) இதை அன்னையர்களின் சதுக்கம் என்பார்கள். ஆர்ஜன்ரீனா மே மாதத்தில் ஸ்பானியர்களிடம் இருந்து சுதந்திரமடைந்ததை நினைவுகொள்ளும் பொருட்டு அரசகாரியாலயங்கள் முன்பாக இந்தச் சதுக்கம் அமைக்கப்பட்டது.
பிற்காலத்தில் முக்கியமாக இராணுவ ஆட்சிக்காலத்தில் ஆட்சிக்கு எதிரானவர்களாக கருதியவர்களைக் கடத்தி கொலை செய்யப்பட்டவர்களின் தாய்மார் கூடி ஆர்ப்பாட்டம் செய்யும் போராட்டமையமாக மாறியது. தாய்மார்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தியதால் அடையாளப் போராட்டத்தில் இருந்து அரசியல் இயக்கமாக வளர்ந்தது. ஆர்ஜின்ரீனாவிற்கு மட்டுமான போராட்டமாக இல்லாமல் தென் அமரிக்காவிற்கும் முன்னுதாரணமாக இருந்தது. அக்காலத்தில் தென்னமரிக்காவின் பல நாடுகள் இராணுவ ஆட்சியின் கீழ் இருந்ததால் ஆட்சியாளர்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருந்தார்கள். உதாரணத்திற்கு சிலி நாட்டின் இராணுவ அதிருப்தியாளர்கள் தப்பிவந்தபோது ஆர்ஜன்ரீனாவில் உளவுப் படையினரால் கொலை செய்யப்பட்டார்கள்.
மே சதுக்கம் சகல அரசியல் ஆர்ப்பாட்டங்களுக்கும் எதிர்ப்புகளை வெளியிடுவதற்கு எதிர்க்கட்சிகளும் அதிருப்தியைத் தெரிவிக்க மக்களும் கூடும் இடமாக மாறியது. அரசியல் காரணங்களால் குண்டுகள் வெடிப்பதும் ஆகாயப்படையினரால் விமானத் தாக்குதலுக்கு உள்ளாகியதும் இந்தச் சதுக்கமே.
ஒரு சம்பவம் எக்காலத்திலும் மறக்கமுடியாது. 1955 ம்ஆண்டு ஜுன் 16 ம் திகதி வியாழக்கிழமை கோடைக்காலத்து நண்பகலில் 30 விமானங்கள் ஒன்றாக இந்த எதிர்ப்புரட்சியில் ஈடுபட்டன. அவர்கள் போட்ட முதலாவது குண்டு தள்ளுவண்டியில் இருந்த குழந்தைகளையும், பஸ்சில் பயணம் செய்த அப்பாவிப் பொதுமக்களின் உயிர்களைக் அன்று காவுகொண்டது.
விமானப்படை இராணுவம் மற்றும் கடற்படைகள் அரசாங்கத்திற்கு எதிராகப் புரட்சியில் ஈடுபட்டபோது இந்தச் சதுக்கத்தில் பெரோனுக்கு ஆதரவாகக் கூடியிருந்த மக்கள்மீது விமானப் படையினர் குண்டு வீசியதால் 300 சாதாரண குடிமக்கள் இறந்தார்கள். இராணுவம் இரண்டாகப் பிரிந்து அரசாங்கத்திற்கு ஆதரவான பகுதியினர், இறுதியில் எதிர்ப் புரட்சியை முறியடித்தார்கள். கத்தோலிக்க பீடம் புரட்சியாளர்களுக்கு ஆதரவாக இருந்தது என்பதால் பெரோனின் ஆதரவாளர்கள்; பல தேவாலங்களைக் தீயிட்டார்கள். அன்று ஏற்பட்ட புரட்சி முறியடிக்கப்பட்டாலும், அந்த வருட இறுதியில் பெரோனது ஆட்சி இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட.து. இந்தச் சதுக்கத்தில் மனிதக் குருதியோடியதுடன் நிற்காமல், சுற்றியுள்ள பல கட்டிடங்களில் இன்னமும் குண்டுகள் புதைந்து இருண்ட இறந்தகாலத்தை நினைவூட்டுவதாக எமது வழிகாட்டிச் சொன்னாள்.
அந்த இடத்தின் மையத்தில் நின்றபடி புகைப்படம் எடுப்பது இலகுவான காரியமல்ல. 300 அப்பாவி மக்களின் உயிர்களை அநியாயமாகப் பறிக்கப்பட்ட இடம் என்பதால் அவர்களும் எங்களைப் பார்த்திருப்பது போன்ற எண்ணம் ஏற்பட்டது. கிரேக்க காவியங்களில் வந்த கடவுள்களைத் தவிர பூமியில் உலாவிய ஒவ்வொரு மனிதனும் இறப்பது நிட்சமெனத் தெரிந்த பின்பும் மற்றவர்களைக் கொல்லுவதற்கு எவரும் தயங்குவதில்லையே.
இடதுசாரிகளையும் பெரோனின் ஆதரவாளர்களையும் களை எடுக்கும் வேலையை இராணுவ ஆட்சியினர் 74 ல் இருந்து 83 வரையும் நடந்தினார்கள். அமரிக்க அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் ஆயுத ஆதரவும் இதற்கு உறுதுணையாக இருந்தது. அர்ஜின்ரைனாவில் பிற்காலத்தில் உருவாகிய ஜனநாயக அரசுகளால் இறந்தவர்களது குடும்பங்களுக்கு நட்ட ஈடு கொடுக்கப்பட்டது. மனிதர்கள் இறப்பிற்கு பணம் விலையாக இருக்காவிட்டாலும் காயங்களை ஆற்றுவதற்கு உதவும் என்பதை ஏன் பலர் சிந்திக்க மறுக்கிறார்கள்? இந்த பணம் ஆயுதங்களுக்கும் போர் வீரர்களுக்கும் செலவழித்ததோடு ஒப்பிட்டால் சுண்டைக்காய் என்பது உண்மை.
புவனஸ் அயர்ஸ் நகரத்தில் லாபொகா என்ற ஒரு புறநகர் உள்ளது இங்குதான் அர்ஜின்ரீனாவின் பிரபல கால்பந்தாட்டு வீரர் டியூகோ மரடோனா ஆரம்பத்தில் சேர்ந்து விளையாடிய உதைப்பந்துக் கிளப் உள்ளது என்று வழிகாட்டி சொன்னபோது பொக்கா ஜூனியர் என்ற இந்த கிளப்பையும் அதற்கு உரிய விளையாட்டு மைதானத்தையும் கடந்து சென்று லாபொகா உள்ள கமின்ரோ என்ற தெருவில் இறங்கினோம்.
‘மரடோனாவுக்கு என்ன நடந்தது?’
‘போதை மருந்துகளின் பாவனையால் மிகவும் உடல்நலம் குன்றி ஊதியிருக்கிறார்.’
‘எனக்கு மிகவும் பிடித்த கால்ப்பந்தாட்டகாரர்’; என்றார் என் நண்பன்
‘புகழும் பணமும் சில நேரங்களில் ஒருவரைக் கெடுத்துவிடும்.’
‘ஆரஜின்ரீனாவின் அடையாளமாக இருந்த கால்ப்பந்தாட்டகாரர்.எங்களுக்கெல்லாம் ஆஜன்ரினாவைத் தெரிந்து கொள்ளும் முன்பாக அறிமுகமானவர்.’ என்றேன்
நாங்கள் சென்ற லாபொகா ஆரம்பத்தில் ஆப்பிரிக்க அடிமைகளை வைத்திருந்த இடம். அதன் பின்பு புறக்கணிக்கப்பட்ட விளிம்பு நிலை மனிதர்கள் வாழும் இடமாக இருந்தது. அங்கு குற்றங்கள், விபச்சாரம் என்பன நடந்தன. இரண்டாவது உலக யுத்தத்தின் விளைவாகக் கடந்த நூற்றாண்டுகளில் ஐரோப்பாவிலும், முக்கியமாக இத்தாலிய குடியேற்றவாசிகளால் புறநகராக உருவாகியது.
இதைப்போல் மெல்பேனில் குறைவான வாடகையில் வெளிநாட்டவர்கள் குடியிருந்த இடங்களான சில புறநகர்கள் பத்து வருடத்தில் வீடுகள் விலையேறியதும் அடிமட்ட மக்களை வெளியே தள்ளிவிடுவதைப் கடந்த 20 வருடத்தில் பார்த்தது நினைவுக்கு வந்தது.
நகரங்கள் தொடர்ச்சியாக மாற்றங்கள் அடைவது மிகவும் ஆச்சரியமானது 20 வருடங்கள் முன்பு நான பார்த்த மெல்பேன் தற்பொழுது இருக்காது. 80 களில் நான் வசித்த சென்னையில் பத்து வருடங்களின் பின்பு அதேபகுதிகளைப் பார்த்தபோது அடையாளம் தெரியவில்லை.
லாபொகாவில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் இங்கு குடியேறியதால் முக்கிய புறநகராக வளர்ந்து, தற்போது உல்லாசப் பிரயாணிகள் தவறாமல் செல்லுமிடமாகியுள்ளது.. இங்குள்ள வீடுகள், கடைகள் மற்றும் உணவுச்சாலைகள் எல்லாம் கண்ணைக் கவரும் வர்ணத்தில் திறந்தவெளி மியுசியமாக்கியிருக்கிறார்கள். இரயில்வே தண்டவாளங்கள் இருந்த இடத்தை தற்பொழுது வீதியாக்கி அதில் உணவுச்சாலைகள் மற்றும் சித்திரக்கூடங்கள் அமைந்திருக்கும் இடம் கமினிரோ (Caminito)
தொழிலாளர்களும் சமூகத்தின் அடிமட்டத்தில் உள்ளவர்களும் தகரக்கொட்டகை மற்றும் சிறிய குடிசைகள் அமைத்து வாழ்ந்த இடத்தை இப்படியான ஒரு இடமாக மற்றியவர் குயின்கெலா மாட்டின் (Quinquela Martín) என்ற ஓவியர். இந்த இடத்தில் பிறந்து வளர்ந்து இங்குள்ள இரவுப் பாடசாலையில் கல்விகற்ற ஓவியர் 1950 ஆண்டில் தனது முயற்சியால் இந்தப் பகுதியை அழகுபடுத்தினார். இதன் பின்பாக அரசாங்கம் இந்த இடத்தைத் திறந்தவெளி அருங்காட்சியகமாக பிரகடனம் செய்துள்ளது.
கமினிரோ கடைவீதியில் கடையின் முன்புறத்தில் அழகாக உடையணிந்து ஆணும் பெண்ணும் தங்கோ நடனம் ஆடுவார்கள். இந்த நடனத்தை எவரும் இலவசமாகப் பார்க்கலாம். இது கடைகளுக்கு வாடிக்கையாளர்களைக் கவர்வதற்கான ஒரு விளம்பரம் அது மட்டுமல்ல. அந்தப்பகுதிக்கு மக்களை வரவழைக்கும் விளம்பரமாகிறது. அந்தப் பகுதியில் இளம் பெண்கள் தங்களை அலங்கரித்தபடி நிற்பார்கள். அந்தப் பெண்களோடு படமெடுக்கமுடியும். தங்கோ நடனம் தெரிந்தால் நாங்களும் ஆடமுடியும் தெரியவிட்டால் குறைந்தபடி அவர்கள் மெய் தீண்ட முடியும் ஆனால் இவற்றிற்கு பணம் கொடுக்கவேண்டும். எனது நண்பர் அங்கு பெண்களுடன் ஆடுவதற்கு நின்று மசிங்கியபோது அங்குள்ள பெண்கள் முகத்தில் பூப்பூத்தது. கைகளைத் தூக்கியபடி நின்றார்கள். ஏற்கனவே அந்த இடத்தில் பிக்பொக்ட் அதிகம் என்பதால் அவரை இழுத்தபடி பெண்களைக் கடந்து சென்றோம்.
அர்ஜின்ரீனாவின பிரபலங்கான சேகுவாரா ஜாஜ் போகேஸ் மரடோனா மற்றும் பாப்பாண்டவர் பிரான்சிஸ் போன்றவர்களின் படங்கள் ஆளுயரத்தில் அங்கு இருந்தன. நீங்கள் வாங்கலாம் அல்லது அவற்றோடு புகைப்படம் எடுக்கலாம். நாங்கள் சென்ற நண்பகல் நேரத்தில் ஆட்டமும் பாட்டுமாக அந்த இடம் ஒரு களியாட்ட மைதானமாக இருந்தது. எவ்வளவு நேரமும் அங்கு செலவழிக்கமுடியும்.
ஆர்ஜினரீனாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் ஜோஜ் போகஸ்(Jorge Luis Borges) ) அடிக்கடி வந்து போகும் கபே என் சொல்லியபோது அதைப் பார்க்க சென்றபோது அந்த கபே மூடப்பட்டிருந்தது. முன்கதவின் கண்ணாடியூடாக பார்த்தபோது கபே மிகவும் சிறியது. உள்ளே முதலாவதாகப் போடப்பட்ட கதிரை மேசையில் இருவரது உருவங்கள் சிலையாக இருந்தன. அவற்றில் இடதுபக்கமாக இருந்தவர் ஜோஜ் போகஸ். பின்நவீனத்துவ எழுத்தாளராகவும் மாயயால யதார்த்த எழுத்தின் தந்தையாகவும் கருதப்படும் இவர் மிக குறைந்த வயதில் கண் பார்வையை இழந்தாலும் ஐரோப்பா மற்றும் அமரிக்கா சென்று பல்கலைக்கழகங்களில் தனது விரிவுரை நடத்தினார்.
அவரைப் பார்த்ததும் அவர் புவனஸ் அயர்ஸ் நகரைப் பின்புலமாக வைத்து எழுதிய சிறுகதையான எம்மா சுன்(Emma Zunz) நினைவு வந்தது. பின்னவீனத்திற்கு உதாரணமாகப் பல்கலைக்கழகங்களில் குறிப்பிடப்படும் கதையது.
கதையில் வரும் புவனஸ் அயர்ஸ் இரயில்வே லைன் துறைமுகம் எமா வாழ்ந்த பகுதிகள் எல்லாம் மனத்தில் ஓடியது.
18 வயதான எமாவுக்கு தந்தை நஞ்சருந்தி மரணமடைந்ததாகக் கடிதம் வருகிறது 6 வருடங்களுக்கு முன்பாக பணமோசடியில் கைதாகி சிறையில் இருந்த தந்தை தான் இதைச் செய்யவில்லை மனேஜராக இருந்தவரே அதைச் செய்தார் என்பதாகச் சத்தியம் செய்திருந்தார். இதை இரகசியமாக வைத்திருந்த எமா தந்தையின் அவமானம் மரணத்திற்குப் பழிவாங்க தீர்மானித்திருந்தாள். அவள் வேலைசெய்யும் தொழிற்சாலையின் முதலாளியே தந்தையை அவமானப்படுத்தியவர் என்பதைத் தெரிந்திருந்தாள்.
புழிவாங்கும் திட்டமாக தொழிற்சாலையின் முதலாளியிடம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்திற்குத் தயாராவதாகவும் வன்முறையை விரும்பாத நான் அதன் தகவல்களை மாலையில் வந்து தருவதாக உறுதியளித்தாள். அதன்பின்பு துறைமுகத்திற்குச் சென்று ஏற்கனவே புறப்படத்தயாராக இருந்த கப்பலின் அசிங்கமான ஒரு மாலுமியைத் தெரிவுசெய்து உடலுறவு கொண்டாள். எமா இதுவரையும் கன்னிகழியாதவள் மட்டுமல்ல ஆண்கள் நினைவு அவளுக்கு அருவருப்பையூட்டும்.
தொழிற்சாலையின் முதலாளியிடம் சென்று விடயத்தைச் சொல்லும்போது விக்குகிறாள். அவர் அதைக் கேட்டு விட்டு உள்ளே தண்ணிர எடுக்சென்று வரும்போது அவரது மேசையின் லாச்சியில் இருந்து துப்பாக்கியை எடுத்து அவரைச் சுடுகிறாள். அவரது தொலைபேசியை எடுத்து அலுவலகத்துக்கு வரும்படி அழைத்து என்னிடம் முறைகேடாக நடந்க முயற்சித்ததால் சுட்டேன் போலீசிடம் சொன்னாள்
ஏமா வினது கதையில் அவளது கதையில் உடலுறவிற்கு உள்ளானது, அவமானமடைந்தது என்பன உண்மை
ஆனால் யாரால் ?
மாலையில் எங்களுக்காக ஒரு தங்கோ நடன நிகழ்ச்சி ஒழுங்கு பண்ணியிருந்தார்கள். தங்கோ ஆர்ஜன்ரீனாவில் உருவாகியது. துற்பொழுது உலகின் பல இடங்களிற்குப் போய்விட்டது. ஆரம்பத்தில் ஆப்பிரிக்க மங்களும் ஐரோப்ய அடிமடடமக்களுக்கான இந்த நடனம் தற்பொழுது யோகா என்றால் இந்தியா நினைவுக்கு வருவதுபோல் தங்கோ என்றால் ஆர்ஜன்ரீனா நினைவுக்கு வருவதுடன் கலாச்சார அடையாளமாக யுனெஸ்கோவில் பதிவாகியுள்ளது.
தங்கோ நடனம் அவுஸ்தித்ரேலியாவில் பல தடவை பார்த்தாலும் முதலாவதாக நான் பார்த்து இரசித்தது கியுபாவில்.
எங்களுடன் பல வெளிநாட்டவர்கள் இந்த இந்த ஷோவுக்காக வந்திருந்தார்கள் இந்த அதே ஹாலில் உணவும் பரிமாறப்பட்டவுடன் நடனம் நடக்கும். நாங்கள் எதிர்பார்க்காமல் எங்களுக்கு இந்த நடனம் பயிற்றப்படவும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது நாங்கள் எதிர்பார்க்காதது. நடனத்தைப்பார்த்து இரசித்துவிட்டுப் நினைத்த எனக்கு இது கொஞ்சம் அதிகமாக இருந்தது.. தவிர்க்க முடியாமல் தங்கோ நடனம் எங்களுக்குப் பயிற்ப்பட்டது . இரண்டு மணிப்பயிற்சியல் கால்கள் பின்னியது. ஆனால் மனைவிக்குப் பிடித்தது எனக்கும். புது அனுபவமாக இருந்தது .
இரவு விருந்திற்குப் பின்பாக நடந்த தங்கோ நடனம் என்னை மிகவும் கவர்ந்தது . இங்கே ஆடுபவர்கள் எல்லோரும் முப்பது வயதிற்கும் ஐம்பது வயதிற்கும் மேற்பட்டவர்கள். ஆனால் மிகவும் கவர்ச்சியானது என்பதைவிட மனத்தைக் கவரும் வகையானது.பெண்களைப் பொறுத்தவரை உயரமான ஹீலகளுடன் இலவாக ஆடுவது இலகுவானதல்ல. ஆனால் அன்று ஆடியவர்களுக்கு அது பிரச்சனையல்ல. நிச்சயமாக மிகவும் பிரபலமானவர்களாக இருக்கவேண்டும்.
மறுமொழியொன்றை இடுங்கள்