
நடேசன்.
ஆங்கில நாவல் வரலாற்றில் போர் நாவலாகச் சொல்லப்படுவது த ரெட் பாட்ஜ் ஒஃப் கரேஜ் (The Red Badge of Courage is a war novel by American author Stephen Crane ). இதை எழுதியவர் அமரிக்காவின் உள்நாட்டுப் போர் நடந்து ஆறு வருடத்திற்கு பின்னர் பிறந்தவர். இது மிகவும் சிறிய நாவல். உள்நாட்டுப் போரில் பங்கு பற்றிய ஒரு சாதாரண வீரனின் கதையைச் சொல்கிறது. ஆரம்பத்தில் போர்முனையில் பயந்தவன் பின்பு எப்படி வீரனாகிறான் என்பதே கதையாகும்.
இரண்டு வருடத்தின் முன்பாக எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் எனக்குத் தந்த சில புத்தகங்களில் ஒன்று மு.பொன்னம்பலம் எழுதிய சங்கிலியன் தரை. அவரைக் கவிஞராக அறிந்திருந்தமையால் அந்த நூல் ஏதோ ஒரு கவிதைப்புத்தகம் என நினைத்து, எனது புத்தக அலுமாரியில் வைத்துவிட்டேன். சில நாட்களுக்கு முன்பாக அதை எடுத்துப் பார்த்தபோது 205 பக்கங்கள் கொண்ட நாவல்தான் அந்த நூல் எனக் காலம் தாழ்த்தி புரிந்து கொண்டேன்.
2015இல் குமரன் பதிப்பகத்தால் வெளிவந்த பிரபலமான மூத்த எழுத்தாளரது நாவலை இருட்டடிப்பு செய்வதில் இலங்கை தமிழ் ஊடகங்களும் சஞ்சிகையாளர்களும் வெற்றி கொண்டுவிட்டார்கள் என நினைத்துக்கொண்டேன். கூகிளில் நாவலின் பெயரைப் போட்டுப் பார்த்தபோது எவரும் நாவலைப் பற்றி எழுதியதாகத் தெரியவில்லை.
இந்த நாவல் போரில் இறந்த அனைத்து இயக்கப்போராளிகளுக்கும் அர்ப்பணமாக்கப்பட்டிருப்பது பிடிக்கவில்லையோ? எழுத்தாளரைப் பிடிக்கவில்லையா? அல்லது பதிப்பகம் புத்தகத்தை பதிப்பித்துவிட்டு தங்கள் கடமை முடிந்துவிட்டது என்று ஒதுங்கிவிட்டதா ? முதலான கேள்விகள் எழுந்தன.
இத்தகைய மூத்த எழுத்தாளர் தமிழகத்தில் இதனை எழுதியிருந்தால், அங்கு நிச்சயமாக பலரால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும். தமிழ்நாட்டில் இருந்து கற்கவேண்டியவை பல. ஆனால், நாங்கள் பன்னாடையாக நல்லதை தவிர்த்துவிடுகிறோம்.
நாவலைக் கையில் எடுத்தவுடன் என்னை புத்தகத்துள் இழுத்து என் கையுடன் ஒட்டிக்கொண்டது. நாவல் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட விதம் இறந்தகால அகஉணர்வின் சிந்தனைகளில் உருவாகியிருக்கிறது. இந்த இறந்தகாலத்தில் இருந்து கதை சொல்வது மிகவும் நுணுக்கமானது. வோதறிங் கையிட்( Wuthering Heights )என்ற நாவலில் இதையே எமிலி புரண்டே (Emily Brontë’)பாவிக்கிறார். கதை நடந்து முடிந்த பின்பு சொல்லும் உத்தியை நான் அசோகனின் வைத்தியசாலையில் பாவித்தேன்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தை விமர்சித்ததால் கொலைத்தண்டனை விதிக்கப்பட்டு, பிரான்சுக்குத் தப்பியோடி, சிறிது காலத்தின் பின் ஊருக்கு வந்த வந்த தவம் என்ற இளைஞன், தனது வீடு, குடும்பம், சகோதரி ,தாய், தந்தை ஆகியோருடன் தான் விட்டுச்சென்ற ஊரைத் திரும்ப எண்ணிப் பார்ப்பதாக கதை தொடங்குகிறது. பாழடைந்த வீடு, சிதைந்த அவனது குடும்பத்தையும் சமூகத்தையும் உருவகப்படுத்துகிறது.
“எப்படி அக்கா யாருக்கும் சொல்லாமல் ஒருவனோடு ஓடிப்போய் அப்பாவைச் சாகடித்தாளோ, எப்படி அண்ணன் அம்மாவின் கடையை சுவீகரித்துக் கொண்டு அவளுக்கு எதுவும் கொடுக்காமல் அவளையும் அவனையும் வஞ்சித்தானோ, அப்படியே கடைசியில் இவனும் தனது நாடு ஆபத்தில் சிக்கி இவனது தியாகத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் நாட்டைவிட்டோடி தனது நாட்டுக்குப் பெரும் துரோகத்தைச் செய்துவிட்டான் ”
முழு நாவலின் மொத்த கருவும் மேலே உள்ள இந்த வசனத்தில் உள்ளது.
தனது முன்னுரையில் மு . பொன்னம்பலம் இந்த நாவல் தமிழ் பேசும் மக்களின் உரிமைப்போராட்ட வரலாற்றின் ஒரு வெட்டுமுகமென்கிறார். அது உண்மை- மணம் மட்டுமே உள்ள கூழான பலாப்பழத்தின் வெட்டுமுகத்தை காட்டுகிறார்.
“புதிய ஓட்டு வீட்டின் ஒரு பக்க யன்னல் சிறகொடிந்த பறவைபோல் தொங்கிக் கொண்டிருக்கிறது- ஊரில் வீடுகள் இருந்தாலும் வாழ்வதற்கு எவருமற்ற ஊராக அந்தப் பிரதேசம் போய்விட்டதற்கான வர்ணிப்பு. மனத்திரையில் அந்த ஊரையும் மக்களையும் வாசகர் மனதில் சித்திரமாகக்(Evocation) கொண்டு வர பல காட்சியாக்கும் சித்தரிப்புகள் உள்ளன.
ஒரு பூனை கூட நுழையமுடியாத அளவுக்கு இறுக்கமாக அடைக்கப்பட்டிருந்த பின்னல் வேலி எனயாழ்ப்பாணத்து வேலிகளை நனவிடைதோயும் காட்சிகள் இங்கு வர்ணிக்கப்படுகின்றன.
அழகான புனைவு மொழியில் மனதில் வாசிப்பவன் தனது கற்பனையில் பின்புலத்தை உருவாக்குவதற்காக எழுதப்பட்டிருப்பதோடு தனது வாழ்விடம், விழுமியம் மற்றும் கலாசாரத்தை இழந்த சமூகத்திற்கு மீண்டும் நாவலாசிரியர் தனது வார்த்தைகளால் கட்டி நம் முன்னே கொண்டு வந்து வைத்திருப்பது எனக்குப் பிடித்திருந்தது.
நாவல் அரசியலையும் போர் வன்முறைகளையும் பேசுகிறது. எல்லா இயக்கங்களையும் சாடும் அதேவேளையில் விடுதலைப்புலிகளது நடவடிக்கைகள் பிரதான கருவாகிறது. அவர்கள் தங்கள் செயல்களை எவ்வளவு இரகசியமாகவும் வைத்திருப்பதுடன் இறுதியில் எதுவரை கொண்டு போகிறார்கள் என்பதையும் மெதுவாக அவிழ்க்கிறது.
கடைசிவரையும் கதையின் முக்கிய முடிச்சு அவிழ்க்கப்படாது வைக்கப்பட்டிருப்பதே இந்த நாவலின் சிறப்பம்சம். வழமையான போரையும் அதில் பங்குபற்றியவர்களையும் எடுத்துச் சொல்லி வரலாற்றை மீண்டும் அரைக்கும் மற்றைய நாவல்களில் இருந்து தன்னை தனித்து வெளிப்படுத்துகிறது மு .பொ.வின் சங்கிலியன் தரை.
குடும்பத்தில் இருந்து விடுதலைப் போராட்ட வேட்கையில் காதலனோடு வீட்டை விட்டு ஓடிய தமிழினி, எண்பதுகளில் வட- கிழக்கில் விடுதலைக்காகச் சென்ற பெண்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வேளையில் அவள் எப்படி ஆணாதிக்கத்திற்கு உட்பட்டுத் துன்பப்படுகிறாள் என்பதை முன்வைப்பதால் இது பெண்ணியத்தை முன்னிலைப்படுத்தும் நாவலாக வருகிறது.
வழக்கமான தமிழ் நாவல்களில் இருந்து வேறுபட்டு பெண்ணின் மன உணர்வுகளை பொதுவெளியில் வைப்பதிலும் நாவல் தவறவில்வை. தமிழனி படித்த யாழ்ப்பாண மத்திய வர்க்கத்தின் பிரதிநிதியாக வருகிறாள். அவளது செயல்கள் ஆரம்பத்தில் உணர்வுகளின் மேலீட்டால் ஏற்பட்டபோதிலும், பின்பகுதிகளில் தான் ஏமாற்றபட்டதை உணர்ந்தபோது அறிவு சார்ந்து செயல்படுகிறாள்.
இந்த நாவலில் சிறப்பாகத் தெரியும் விடயங்கள் பல:-
நாவல் ஆரம்பத்திலே வாழ்ந்த வீட்டின் இறந்த காலமும் தற்போதைய நிகழ்காலமும் விபரிக்கப்படும்போது ஒரு தேர்ந்த வாசகனுக்கு இரண்டு காலத்தையும் சுற்றியே கதை விரிகிறது என்பது புரிகிறது. அதாவது அகமுரண்பாடு ( internal conflict)அந்த உருவகத்தின் மூலம் காட்டப்பட்டு கதையின் உள்ளே எம்மைக் கைபிடித்து அழைத்துச் செல்கிறது.
ஆரம்பத்தில் தவத்தின் மன ஓட்டத்தினுடாகக் கதை வளர்ந்த போதிலும் பின்பு முக்கிய பாத்திரமாக தமிழினியின் வார்த்தைகள் மற்றும் எண்ணங்களுடாக நாவல் நகருகிறது.
பல இடங்களில் கனவுகள் மற்றைய மனதில் சிந்தனைகள் மூலம் புறவயமான யதார்த்தத்தில் இருந்து விலகி மாயஜால யதார்த்த நிலைக்குக் கொண்டு செல்லப்படுகிறது.
எதிர்பாராத திருப்பங்கள் அற்று சம்பவங்கள் திட்டமிட்டு நடத்தப்படுகிறது.
கதையின் முடிவும் எதிர்பாராத முடிவாக அமைந்திருப்பது இந்த நாவலின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்கள்
நாவலின் குறைபாடுகள் பல இடங்களில் எழுத்துப்பிழைகள். நாவல் மீண்டும் மற்றும் ஒருவரால் பார்க்கப்படவில்லை என்பது தெரிகிறது. புத்தகத்தை பிரசுரித்த குமரன் பதிப்பகம் ஏனோ தானோ எனச் செய்துள்ளது.
தமிழினி என்ற பெயர் சில இடங்களில் யாழினி என வந்துள்ளது. இதைவிட பெரிய தவறு 34 ஆம் பக்கத்தில் “அவன் பன்னிரண்டுவயதுச் சிறுவனாக இருந்தபோது அவள் சங்கிலியன் தோப்பை விட்டு நாகராசனோடு ஓடிப்போவதற்கு இரண்டொரு கிழமைக்கு முந்தி சொன்ன கனவு அவள் நினைவில் அருட்டியது” எனவருகிறது. ஆனால் 15ஆம் பக்கத்தில் தமிழினி தம்பியாரை இயக்கம் கொலை செய்ய முயற்சித்தபோது தப்பிச் செல்ல உதவினாள் எனக் கூறப்படுகிறது. பல்கலைக்கழகத்திற்கு பிரவேசிக்கும் புகுமுகப்பரீட்சையில் தேர்ச்சி பெற்றகாலத்திலே தவத்திற்கு விடுதலை இயக்கத்தால் பிரச்சினை வந்தது. முதல் பக்கங்களில் எழுதியதை படிக்காத அலட்சியம் தெரிகிறது.
அதேபோல் 58 கலவரம் வெடித்தபோது நான் சின்னப் பையன் என்ற மோகன், பிற்காலத்தில் இயக்கங்களை விடுதலைப்புலிகள் தடைசெய்தகாலத்தில்(1986) – அப்படி ஒரு இயக்கத்தில் இருந்து வெளியேறியவன், வட்டக்கச்சியில் தமிழினியை சந்திக்கும்போது குறைந்தபட்சம் 30 வயதுக்கு மேற்பட்டவனாக இருந்திருப்பான். 80 களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் படித்த தமிழினிக்கு தம்பியாக இருக்கமாட்டான். ‘தமிழினி ஏனடா தம்பி படிப்பை குழப்பினாய்? என்பது காலம் பொருத்தமற்று இருக்கிறது.
இலங்கையின் அரசியல் வரலாற்றை காட்சிப்படுத்தியிருந்தால் இன்னமும் நன்றாக இருக்கும். பத்திரிகையில் வருவதுபோல் சொல்லியது போரடிக்கிறது. நாவலின் முடிவு, இதுவரையும் தீர்க்கமான சிந்தனையுள்ளவளாக காட்டிய தமிழினிக்கு ஏற்பாக இல்லை.
இங்கே நான் காட்டும் தவறுகள் நாவலின் முக்கியத்துவத்தை சிதைக்கவில்லை. செம்மைப்படுத்துவதற்காக இரண்டாமவருடன் நாவலாசிரியர் பேசாததால் ஏற்பட்ட தவறுகள். முக்கியமாக ஒருவரால் செம்மைப்படுத்தியோ அல்லது பதிப்பகத்தினர் கவனித்திருந்தாலோ குறித்த தவறுகள் அகற்றப்பட்டிருக்கலாம். மேற்கூறியவற்றை களைந்து இரண்டாம் பதிப்பாக வந்தால் இது ஒரு சிறந்த ஈழ வரலாற்று நாவலின் இடத்தைப் பெறும்.

மறுமொழியொன்றை இடுங்கள்