மழை வீழ்ச்சி அதிகமில்லை என்பதால் அமரிக்காவில் கலிபோணியா, நெவாடா போன்ற பசிபிக் சமுத்திரத்தை ஒட்டிய மேற்கு பகுதிகளில் பால்மாடுகள் வளர்க்க முடியாது.பல இடங்கள் பாலை நிலங்கள். ஆங்காங்கு தொலைதூரங்களில் புல் இருந்ததால் மாடுகளை சாய்த்துச் சென்றே மேய்க்கவேண்டும். நடந்து திரியும் மாடுகள் பால் அதிகம் சுரக்காது. இப்படியான இடத்தில் இறைச்சி மாடுகளே வளர்க்க முடியும். இறைச்சி மாடுகள் வளர்க்கும் விவசாயிகளுக்கு உதவியாக இளைஞர்கள் குதிரைகளில் சென்று மேய்த்துவிட்டு மாலையில் மாடுகளைப் பத்திரமாக பண்ணைக்குக் கொண்டு வருவார்கள்- இவர்கள் அமரிக்காவில் கவ் போய்கள் எனப்படுவோர்.
அமரிக்காவின் மேற்குப் பகுதியில் எந்த வேலையும் கிடைக்காமல் ஊர் சுற்றும் இளைஞர்களுக்கு இறைச்சிக்காக மாடு வளர்க்கும் பண்ணைகளில் கிடைப்பது இந்த வேலை. இப்படியான பண்ணைகளை ரான்ஞ் என்பார்கள். பிற்காலத்தில் இதுவே அமரிக்க கலாச்சாரத்தின் ஒரு கூறாகத் தொடங்கி பல நாவல்கள்(வேர்ஜினியன்) மற்றும் திரைப்படங்களாக வந்தது. இவற்றை வெஸ்ரேன் அல்லது கவ் போய் படங்கள் என்றார்கள். இதில் நடித்து பலர் பிரபலமாகினார்கள். இவர்களில் முக்கியமானவர் கிளின்ட் ஈஸ்ட் வூட். இவரது குதிரை சாகசங்களை இந்துக்கல்லுரியில் இருந்த காலத்தில் யாழ்ப்பாணத்துத் திரைகளில் பார்த்துவிட்டுப் பல மணிநேரம் பேசுவோம்.
மணல்த்தரையில் காய்ந்த கள்ளிச் செடி காற்றில் உருண்டு செல்வதும், குதிரையில் கடைவீதியுடாக சென்று ஒருவன் ஒரு வைன் பாரின் முன்பாக குதிரையைக் கட்டுவதும், பாலையான நிலத்தில் இருக்கும் ஒற்றை மரத்தின் கிளையில் ஒருவன் கழுத்தில் கயிறுடன் தொங்குவதும் எனது மனத்தில் சிறுவயதில் படிமமான காட்சிகள். அமரிக்காவில் தற்பொழுது கவ் போய் படங்கள் காணாமல்ப் போய்விட்டது.
இதற்குச் சமமாக அவுஸ்திரேலியாவில் அவுட்பாக் என்பார்கள் முக்கியமாக, வடக்கு அவுஸ்திரேலியாவில் இப்படியான பண்ணைகளில் குதிரைகளில் மாடு மேய்பவர்களும் அவர்களது நாய்களும் இருந்தன. பிற்காலத்தில் மோட்டார் சைக்கிள் வந்ததும் இப்படியான கவ் போய்கள் இல்லாமல் போனதுடன் அவுஸ்திரேலியாவில் இருந்த குதிரைகள் தற்பொழுது காட்டுக் குதிரைகளாக, பிரம்பி என்ற பெயருடன் திரிகின்றன. ஓட்டப்பந்தயத்தில் பாவிக்கப்படும் தரோபிறட் குதிரைகளைத் தவிர மற்றவை, உலகில் மதிப்பற்றுப் போய்விட்டது.
இந்த இரு நாடுகளைப்போல் உள்ள ஒரு நாடு ஆஜின்ரீனா. கிட்டத்தட்ட இந்தியாவின் நிலமும் 4 கோடி மக்கள் மட்டும் வாழும் தேசம். விசாலமான நிலப்பரப்பு. ஏராளம் புல் நிலமுண்டு. இறைச்சி மாடுகளின் பண்ணைகள் பல உள்ளது. மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கும் நாடு. ஐரோப்பியர்கள் வந்தபோது பல பண்ணைகளை உருவாக்கினார்கள். மாடுகளை அவர்களது குதிரையில் சாய்த்து செல்பவர்கள், குதிரையில் செய்யும் சாகசங்கள் என்று அவர்களைச் சுற்றி ஒரு கலாச்சாரம் உருவாகியது. தற்பொழுது பொருளாதார நிலையில் அவுஸ்திரேலியா, அமரிக்கா போல் கவ்போய்களும் குதிரைகள் அவர்களது ரான்ஞ்சுகள் முக்கியமிழந்தபோது, உல்லாசப்பிரயாணிகளைக் கவரும் அம்சமாக வைத்திருக்கிறார்கள். அப்படியான ஒன்றிற்கு எங்களுக்கு ஒரு நாள் ஒதுக்கப்பட்டது.
புவனஸ் அயர்ஸ் நகரத்தின் வெளியே இரண்டு மணிநேரம் புல்வெளிகள், சிறிதும் பெரிதுமான கட்டிடங்கள் என்பவற்றிற்கூடாக சென்ற பஸ்சில், எங்களைத் தவிர மற்றவர்கள், மற்றைய தென்னமரிக்கநாடுகளில் இருந்து வந்தவர்கள். பெரும்பாலும் ஸ்பானிய மொழி பேசினார்கள். மொழியைத் தெரியாது என்ற கவலை இப்படியான இடத்தில் மனதில் ஏற்படும். எனது உடல் மொழியையும் அவர்களுக்குத் தெரிந்த சிறிது ஆங்கிலத்தையும் கலந்தபோது எனக்குப் எதிரில் உருகுவெயில் இருந்து குழந்தைகளுடன் வந்த குடும்பத்துடன் கொஞ்சம் பேசமுடிந்ததும் அந்தப் பெண் நாங்கள் அவுஸ்திரேலியாவில் இருந்து தென்னமரிகாவிற்கு வந்தவர்கள் என்பதால், உருகுவே நாட்டிற்கு வரும்படி தட்டுத் தடுமாறிய ஆங்கிலத்தில் வேண்டுகோள் விடுத்தாள்.அவளது வேண்டுகோள் நமது ஊரில், தம்பி வீட்டுக்கு வந்போ என சிறுவயதில் மாமிமார் அழைப்பதுபோல் இயல்பாக இருந்தது.விசா, பாஸ்போட் பணமில்லாமல் இருந்தால் பக்கத்து நாடுதான் எனப் போய் வந்திருக்கலாம்.
ரான்ஞ்சுக்குச் சென்றதும் எங்களைப்போல் பலர் இருந்தார்கள். ஆர்ன்ரீனா வைனையும், எம்பனாடோவையும் தந்து உபசரித்தார்கள். அந்த ரான்ஞ் தற்பொழுது முற்றாக உல்லாசப் பிரயாணிகளுக்காக இயங்குகிறது. பரந்த புல்வெளியின் மத்தியில் வீடு. அதன் பெரிய உணவுக்கூடம் மேடையுடன் இருந்தது. அங்குள்ள ஒரு வீட்டைச் சுற்றிப்பார்த்தபோது 17ம் நூற்றாண்டுகளில் உயர் வம்சக் குடும்பங்கள் வாழ்ந்தது எப்படி எனத் தெரிந்தது. அவர்களது பாத்திரங்கள், படுக்கை என்பன மியுசியமாக இருந்தது. ஐரோப்பியர்கள் அதிலும் மேல்மட்டத்தினரது வாழ்க்கையை பிரதிபலித்தது.
ஐரோப்பியர்கள் சமையலறை, குளியலறை மற்றும் கழிவறைகள் என்பன வீடுகளோடு சேர்ந்திருப்பது அவர்களின் குளிர்கால நிலைமைக்காக. ஆனால் வெப்பமான எமது நாடுகளிலும் தற்பொழுது அதைப் பின்பற்றுகிறோம். யாழ்ப்பணத்தில் டச்சுக்காரரால் உருவாக்கப்பட்ட 17ம் நூற்றாண்டு கட்டிடக்கலையான இன்னமும் தவறாமல் பின்பற்றுகிறோம்!
இன்னமும் ஏதாவது நாற்சாரவீடு தப்பியிருக்கிறதா?
அந்த வீட்டில் இரண்டு விடயங்கள் மனத்தில் பதிந்தது. நமது வீடுகளில் பூசை அறை இருப்பதுபோல் ஒரு தேவாலயத்தை சிறிய மடமாக வீட்டின் அருகில் வைத்திருந்தார்கள். அங்கு மாதா சொருபமும் சிலுவையில் அறையப்பட்ட யேசுநாதரின் படமும் இருந்தது.அங்கு பல இருக்கைகள் இருந்தன. நிட்சயமாக அந்த வீட்டினரைத் தவிர மற்றவர்களும் பாவித்திருக்கலாம் என எண்ணியபோது எங்களது வழிகாட்டி
‘அக்காலத்தில் பெரிய நகரங்களிலே மட்டும் தேவாலங்கள் இருந்தது. இப்படித் தொலைவில் வசிப்பவர்களுக்காகப் பாதிரி ஒருவர் வந்து குறிப்பிட்ட நாளில் ஆராதனை நடத்துவார்கள். அதில் அருகில் உள்ளவர்கள் கலந்து கொள்வார்கள்’ என்றாள்;.
‘நடமாடும் தேவசேவை’ என்று சொல்ல நினைத்தாலும் வார்த்தையை, மற்றவர் என்ன நினைப்பார்களோ என்பதால் விழுங்கிவிட்டேன்.
மிருக வைத்தியரான எனக்கு குதிரைக்கு நலமடித்தல், குழம்புக்கு இரும்படித்தல் போன்ற விடயங்களை விவசாயிகளே செய்வததற்கான உபகரணங்கள் அங்கிருந்தது தெரிந்தது.
ரான்ஞ்சுக்கு வந்தவர்கள் குதிரைச் சவாரி செய்வதற்கு தயாரானார்கள். இதில் நான் கலந்து கொள்ளவில்லை. குதிரைச் சவாரி, யானைச்சவாரி என்பனவற்றை முடிந்தவரை தவிர்கிறேன். குதிரையில் ஏறாதவர்களுக்குக் குதிரை வண்டி சவாரி ஒழுங்கு செய்திருந்தார்கள். நானும் மனைவியுடனும் நண்பர்களுடன் அதில் சவாரி செய்தேன். 1885ம் ஆண்டு காள்ஸ் பென்ஸ் காரை உருவாக்குவதற்கு முன்பான விடயங்களைப் பார்க்க சிறுவர்கள் மட்டுமல்ல, பெரியவர்களும் விரும்புகிறார்கள் என்பது தெரிந்து.
இந்தச் சவாரிகள் முடிந்த பின்பு நடந்ததுதான் எனக்குப் பிடித்த விடயம். பல கவ் போய்கள் பேனாவையும் பென்சிலை உயர்த்தியபடி குதிரையில் 60 கிலோ மீட்டர் வேகமாக வந்து உயரமான கயிற்றில் தொங்கவிடப்பட்ட மோதிரத்திற்குள் மிக இலாவகமாக அக்காலப் போர்வீரர்கள் ஈட்டியைப் எதிரியின் உடல்மேல் செலுத்துவதுபோல் பென்சிலை செலுத்துவார்கள். பென்சிலைத் தூக்குவது தெரியும். பின்பு அவர்கள் கையில் உள்ள பேனாவில் வெள்ளி மோதிரம் இருக்கும். பலர் பல முறை செய்தபோது என்னால் அவர்கள் பேனாவைச் செலுத்தும் தருணத்தில் பார்க்க முடியவில்லை. எனது கனன் கமராவை தன்னியக்கமாக விட்டும் பதிவு செய்ய முடியவில்லை. குதிரையின் விட்டை புழுதியாக எழுந்து அதன் வாசனையை மூக்கிற்கு வந்தது. வேகமாக வந்த ஐந்து குதிரைகளின் குளம்பொலிகளும் தெளிவாகக் கேட்டன. கவ் போய்கள் கையை உயர்த்தியபோது ஆவலுடன் பார்ப்பேன். வேகப்பந்து வீசும் கிரிக்கட் வீரரது பந்து துடுப்பைபை அணுகும்போது மறைந்துவிடுபதுபோல் இங்கும் நடந்தது. அவர்களது கையில் மோதிரமிருக்கும். அவர்களைக் கைதட்டியபடி கூக்குரல் எழுப்புவார்களில் அழகான பெண்களுக்கு அந்த மோதிரத்தைப் பரிசாக கொடுப்பார்கள். ஒரு யப்பானிய ஆண் ஒருவர் அப்படி ஒரு மோதிரத்தைப் பெறுவதற்கு ஒவ்வொரு கவ்போய்களிடமும் ஓடியபோதும் அவருக்குக் கிடைக்கவில்லை.
மதிய உணவும் அங்கே ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அதில் முக்கியமானது மாட்டிறைச்சி. ஆர்ஜர்ரீனாவில் மாட்டிறைச்சியை நெருப்பில் வாட்டுவார்கள். வெளிப்பகுதி நெருப்பில் வாட்டப்பட்டாலும் உள்ளே இறைச்சியின் இரத்தம் கசியும் ஆரம்பத்தில் கொஞ்சம் கஸ்டமாக இருந்தது. ஆதிமனிதர்கள் நிட்சயமாக இப்படி உண்டுதானே பரிணாபம் அடைந்தார்கள் என்ற எண்ணம் வந்ததும் சிவப்பு வைனை குடித்துவிட்டு அந்த இறைச்சியைக் கடித்தபோது ஆரம்பத் தயக்கத்தை அந்த வைன் கரைத்துவிட்டதுபோலத் தெரிந்தது. பாம்பு தின்னும் ஊருக்குச் சென்றால் நடுமுறி நமக்கு என ஊரில் சொல்லும் பழமொழி மனத்தில் நினைவாகியது. வயிறு நிரம்பியபோது இசை, தங்கே நடனம் என்று காதுக்கும், கண்ணுக்கம் விருந்து படைத்தார்கள்.
——-
புவியில் உள்ள ஏழு இயற்கையின் அதிசயங்களில் ஒன்றாகக் கொண்டாடப்படுவதும், அவற்றில் முதலாவதாக சாதாரண மக்களால் வாக்களிக்கப்பட்டது ஆர்ஜன்ரீனாவுக்கும் பிரேசிலுக்கும் எல்லையாக இருக்கும் இகசு அருவி; இதன் 2.7 கிலோமீட்டர் நீளத்தையும் 275 மொத்தமான நீர்வீழ்ச்சிகளையும் பார்த்து அதிசயித்த அமரிக்க ஜனாதிபதியின் மனைவி திருமதி ரூஸ்வெலட் பார்துவிட்டு ‘பாவம் நயகரா’ என்றார். நான் நயகராவையும் விக்ரோயா அருவியையும் பார்த்திருக்கிறேன். விக்ரோறியா அருவி உயரமானது .இகாசு அருவி அதிகமான நீரை இறைப்பதுடன், அமைந்திருக்கும் பிரதேசம் செழிப்பான காடுகள் நிறைந்த பிரதேசம். பிரேசில் பகுதியில் இருந்துவரும் பரண ஆறு இரும்பு மற்றும் பல கனிமப் பொருட்களை சுமந்து கொண்டு வருவதால் விழும் தண்ணீர் பொன்னிறக் கம்பளமாக விரியும்.
புவனஸ்அயர்சில் இருந்து விமானம் ஆரஜன்ரீனாவின் இகாசு நகரத்திற்குப் போவதற்கு காலநிலையால் இரண்டு மணி தாமதமானது. மாலை ஆறு மணியுடன் அந்த இடத்திற்குப் போக முடியாது என்பதால் ஹோட்டலுக்குப் போகாமல் நேரடியாக விமான நிலையத்தில் இருந்து வந்த வாகனத்தில் நேரடியாக அருவிக்கு சென்றுறோம். நாம் அங்கு சென்றபோது கிட்டத்தட்ட இரண்டு மணியாகிவிட்டது வாகனத்தில் இருந்து இறங்கி அரை மணி நேரம் சில கிலோமீட்டர்கள் ஆற்றின் மீது போட்ட பாலங்களில் நடந்து சென்றோம்.
அந்த ஆற்றில் முதலைகள் உள்ளது என்றாள் எமது வழிகாட்டி. ஆற்றைத் திரும்பிப் பார்த்தபோது எதிரே வந்தவர்கள் என்மீது மோதினார்கள். சகலரும் தொப்பலாக நனைந்திருந்தார்கள். பலர் மழையுடுப்பு போட்டிருந்தார்கள். நாங்கள் நேரடியாக அணிந்த உடையுடன் வந்ததால் அருவியில் குளித்தாக நினைத்துக் கொள்ளவேண்டியதுதான் என்று நினைத்தேன்.
‘இங்குதான் 80 வீதமான நீர் வீழ்கிறது. 200 மேற்பட்ட துண்டுகளாக பிரிந்து டெவில் கழுத்து என்ற அரைவட்டமான பகுதிகள் அவை மறைந்து விடும் இப்படி விழும் தண்ணீரைப் பார்க்க பிரேசிலுக்குகு போகவேண்டும்’
நீர் வீழ்ச்சி அருகே செல்லுமுன்பே, அங்குள்ள பாலங்களில் நடந்துபோகும்போது நனைந்துவிட்டோம். எங்கும் தண்ணீர் தங்கமாக மாலை வெயிலில் ஒளிர்ந்தபடி பெரிய திரைக்கம்பளமாக விழுந்து கிடந்ததது. அடிக்கும் நீர் துவாலைகளால் வரும் தேகத்தில் ஏற்படும் சிலிர்ப்பு உணர்வு மயிர் கூச்செறிய வைத்தது. இடி முழக்கத்தை உருவாக்கிய அருவியைப் பார்க்கும்போது அசையாத பொருளாக இருந்தது. முழுத் தண்ணீரும் அப்படியே அரைவட்டமான டெவில் கழுத்து என்றபகுதியில் மறைந்துகொண்டிருந்த காட்சியை வாயைத் திறந்தபடி பார்த்துக் கொண்டேயிருக்கலாம் எனத்தோன்றியது
‘செப்டம்பரில் தண்ணீர் குறைவு ஜனவரி மாதங்களில் இங்கு நிற்க முடியாது’ என்றாள் வழிகாட்டி.
பிரேசில், ஆர்ஜின்ரைனா எல்லை
நான்குமணிக்கு அருவியில் படகோட்டம், ஏற்கனவே ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததால் விரைவாக அங்கு சென்றோம். நாங்கள் நின்ற இடத்தில் இருந்து தண்ணீர் விழுந்து ஆறாக ஓடுமிடத்தில் படகில் ஏற்றி, கொட்டும் தண்ணீருக்கு கொண்டு செல்லப்பட்டோம். விழும் தண்ணீரால் ஆற்றில் உருவாகும் அலை சமுத்திரத்தில் புயல் அடித்தபோது ஏற்படுவதுபோல் இருந்தது. எமது இயந்திரப் படகை இரப்பர் பந்துபோல் தூக்கிப்போடும். இந்த வள்ளம், அருவி அருகே செல்லுவது நீர்வீழ்ச்சியோடு மோதுவது போன்று அனுபவத்தைக் கொடுக்கும் இதனால் உள்ள இருப்பவர்கள் கத்தியபடியே இருப்பதால் கண்ணுக்கு மட்டுமல்ல இந்த வீழ்ச்சியின் இயக்கத்தில் பங்குகொள்ளும் அனுபவம் ஏற்படும். இந்த நிகழ்வில் மழைக்கோட்டு அணிந்திருந்தாலும் தொப்பலாக நனைந்து விட்டோம்.
அருவி இருக்கும் பிரேசில், ஆர்ஜின்ரைனா எல்லைப் பிரதேசத்தில் காடுகளை இரு நாடுகளும் தேசியவனங்களாக பிரகடனப்படுத்திப் பாதுகாக்கிறார்கள். பல மிருகங்கள், பறவைகள் மற்றும் பலவகையான வண்ணத்துப் பூச்கள் இந்தப் பிதேசத்திற்க பிரத்தியேகமானவை. எங்களுக்கு அவசரத்தால் ஒரு சில வண்ணத்து பூச்சிகள் மட்டுமே பார்க்க முடிந்தது.
அடுத்த நாள் பிரேசில் பகுதிக்கு வாகனத்தில் சென்றோம். இரண்டு நாடுகளையும் ஒரு மதகே பிரிக்கிறது.
பிரேசின் பகுதியில் டெவில் கழுத்தில் நீர் பொன்னிறமாக விழுவதைப் பார்க்கமுடியும். அருகில் நின்று போட்டோ எடுப்பதற்கு நீர் உள்ளே போகாத கமராவை வைத்திருந்தால் இலகுவாக இருந்தது.
கடைசித் தடவையாக இகசு அருவியை ஹெலிகப்டரில் ஏறி முழுவதையும் பார்க்கவேண்டும் என்ற பொச்சத்தைத் தீர்க்க பார்த்தபோது சிறிது ஏமாற்றமாக இருந்தது. விக்டோரிய நீர்வீழ்ச்சியால் ஹெலிகப்டரில் பார்த்தபோது, நடந்து நேராக பார்ப்பதிலும் அழகாக இருந்தது. இகசு நேரடியாக நின்று பார்ப்பதே அழகு என முடிவுக்கு வந்தேன். வாழ்வில் இறுதிவரையும் மனத்தில் இருக்கும் இயற்கையின் பதிவு இகசு அருவி என்பதில் சந்தேகமில்லை
“இகசு அருவி” மீது ஒரு மறுமொழி
Wow! You are the only writer Who are focusing travel stories! Great!