தென்னமரிக்காவில் விடுவிக்க முடியாத விடுகதையாக இரண்டு விடயங்கள் உண்டு.1000 இலாமாக்களில் ஏற்றப்பட்ட தங்கம் கப்பமாக ஸ்பானியரிடம் கொடுக்கப்படவிருந்தது. அக்காலத்தில் வார்த்தையை மீறி இன்கா அரசரைக் கொலை செய்ததால் அந்தத் தங்கம் காட்டுக்குள் மறைக்கபட்டுளளது. அந்த தங்கத்தையே பலர் தென்னமரிக்கா முழுவதும் தேடினார்கள். அதுபோல் பொலிவியாவில் கொலைசெய்யப்பட்ட சேகுவராசின் உடல் புதைக்கப்பட்டிருந்தது என்பது 30 வருடங்களாகவும் புதிராக இருந்தது. அந்த இடத்தைப் பார்க்க விரும்பினாலும் நேரமும் காலமும் இல்லாததால் உலகத்தின் முதலாவது சரித்திர ஆசிரியரான ஹெரிடிற்றசைப்( Herodotus) ) பின்பற்றிய மற்றவர்களிடம் துருவி விடயத்தைப் பெறுவது எனமுடிவு செய்தேன்.
‘ஏற்கனவே வாக்களித்தபடி எனக்கு இப்பொழுது சேகுவாரவின் விடயத்தைத் சொல்லிவிட முடியுமா?’ என ஆய்மாரா பெண் வழிகாட்டியிடம் காலையில் லா பஸ் விமான நிலயத்திற்கு போகும்போது கேட்டேன்.
‘1997ல் வலாகிராண்டே(VALLEGRANDE) விமான நிலய ஓடுபாதையின் அருகே கண்டுபிடித்த பெரிய புதைகுழியில் ஏழு பிரேதங்களில் ஒன்று கைகள் இல்லாமல் இருந்தது. அது எமது மக்களை இராணுவ ஆட்சியில் இருந்து மீட்க வந்த சே என்று சொல்லி விட்டு கண்ணீரைத் துடைத்தாள்.
மக்கள் இப்படியான அனுதாப உணர்வும், மரியாதையையும் அரை நூற்றாண்டுகளின் பின்பு ஒருவர் மேல் வைத்திருப்பது அரிது. தொடர்ச்சியான பரப்புரையால் இரஸ்சியாவில் லெனின் மீதும், சீனாவில் மாவோ மீதும் உருவாக்கலாம். ஆனால் எந்தப் பரப்புரையுமற்று தென்னமரிக்காவில் சேகுவாராவின் மீதான பற்று 60 வருடங்கள் கடந்து இருக்கிறது. சேகுவாராவின் படங்கள், உடைகள் மற்றும் பலவிதமான சுவனியர்கள் விற்கப்படுகின்றன.
கியுபா சென்றபோது ஹவானாவின் மத்தியில் உள்ள சேகுவாராவின் உருவத்தின் முன்பாக தன்னை வைத்து புகைப்படம் எடுக்கும்படி 20 வயது ஆரஜனரீனாப் பெண் கேட்டாள். தென்னமரிக்கா எங்கும் சேகுவாரா புனிதமாக்கப்பட்ட கிறிஸ்தவ குருவாக்க்கப்பட்ட(Saint) நிலைதான் தற்போது உள்ளது.
சேகுவாரா பொலிவியாவில் கொல்லப்பட்ட (La Higuera) என்ற சிறிய கிராமம், தற்பொழுது உலகத்தின் பல திசைகளிலுமிருந்து பலர் யாத்திரை செல்லுமிடமாக மாறியுள்ளது ஒரு நாள் மட்டுமே பொலிவியாவில் நிற்பதால் அங்கு செல்லமுடியாமல் குறைந்தபட்சமாக சேகுவாராவின் நினைவுகள் காவிச் செல்ல நினைத்தேன்.
உலகத்தில் உள்ள இளைஞர்களைக் கவர்ந்த சேகுவாரா என்னையும் கவர்ந்தார். இலங்கையில் அவரது பெயரில் புரட்சியைத் 71ல் ஜேவிபியினர் தொடக்கினார்கள். அக்காலத்தில் அதன் அர்த்தம் புரியவில்லை. தாடி வளர்த்தவர்களை சேகுவாராக்காரர்போல் இருப்பதாக தாய்,தந்தையினர் யாழ்ப்பாணத்தில் பேசியதைக் கேட்டுள்ளேன். 75 ஏப்பிரலில் நான் பேராதெனியா பல்கலைக்கழகம் சென்றபோதே அதன் அர்த்தம் புரிந்தது. 71 ம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியின் புரட்சி முயற்சியில் கைதாகியவர்கள், சிறைகளிலும் பின்பு புனர்வாழ்வு முகாங்களிலுமிருந்து இருந்து வெளியேறிப் படித்து பல்கலைக்கழகம் வந்திருந்தார்கள். அவர்கள் மற்றவர்களால் சேகுவாரக்காரர் என அழைக்கப்பட்டார்கள். பலர் தாடியுடனும் இருந்தனர். என்னுடன் மிருகவைத்தியம் படித்த நெருங்கிய நண்பன் ஜோதிரத்னா அவர்களோடு நெருங்கியிருந்தவன். 87ல் மீண்டும் தொடங்கிய ஆயுத கிளர்ச்சியின்போது இராணுவத்தால் கொலை செய்யப்பட்டான்.
84-87 காலத்தில் இந்தியாவில் நானும் மார்க்சிய புத்தகங்களை அதிகமாகப் படித்ததால் சேகுவாரா மீது ஈர்ப்புக் கூடியது. அதன் முக்கிய காரணம் காஸ்ரோ போன்றவர்கள் தன்நாட்டை விடுவிக்கப் போராடினார்கள் ஆனால் சேகுவாரா உலகம் எங்கும் அடிமைத்தளை நீங்கப் போராடினார்.
2008 ல் இப்படியான உந்தலால் கனடா சென்றபோது அங்கிருந்து கியுபாவுக்கு சென்றேன். ஹவானாவில் இருந்து காரில் சென்று சாந்தா குருஸ் நகரில் உள்ள சேகுவாராவின் அருங்காட்சியகத்தை எனது நண்பர் முருகபூபதியுடன் பார்த்தேன்.
தென்னமரிக்காவில் வறிய நாடு பொலிவியா. அங்கு அரைவாசிக்கு மேற்பட்ட மக்கள் அந்தீய சுதேசி மக்கள். அப்படியான ஒரு நாட்டை நோக்கி தனது புரட்சியை விதைக்கச் சென்றது சரியா, இல்லையா என்பதுடன், மேலும் ஒரு இடத்தில் கொரில்லாத் தாக்குதலை நடத்தும்போது அங்கு ஆதரவு ஏற்படும் என்ற வாதங்களுக்கு அப்பால் தொடர்ச்சியாக என்னைக் கவர்ந்த மனிதராக இருந்தார். இம்முறை பொலிவியாவில் சேகுவாரா இறந்த இடத்திற்குப் போகவிரும்பினாலும் என்னோடு வந்தவர்களையும் ஏற்கனவே நீண்ட பிரயாணமாக படிந்தால் தவிர்த்தேன்.
சேகுவாராவைப்பற்றிய சில விடயங்கள் பலகாலமாக மர்மமாக இருந்தது.
லா ஹிக்குரா வில் சே குவாரா
Oct. 8, 1967 ல் லா ஹிக்குரா கிராமத்தில் சே குவாராவை மற்றைய ஆறு பேருடன் பிடித்து கொலை செய்தார்கள். பல சன்னங்களால் துளைக்கப்பட்டபோதும் மரணமடையாத சேகுவாராவை இறுதியில் மிக அருகில் வைத்து சுட்டுக்கொலை செய்து வலாகிராண்டே வைத்தியசாலையில் 24 மணி நேரம் வைத்திருந்தார்கள். கைகளை மட்டும் வெட்டியை விட்டு லா கிராண்டே விமான ஓடுபாதை அருகில் இரவோடு இரவாக புல்டோசரால் புதைகுழியைத் தோண்டி புதைத்துவிட்டு அதன்மேல் ஒரு ரைக்டரை ஓடவிட்டு நிலத்தை சமப்படுத்தினார்கள்.
இந்தப் பகுதியில் கொலையைச் செய்து புதைத்ததை 30 வருடங்கள் பின்பாக ஒத்துக்கொண்டவர் அதில் பங்கு பற்றிய இராணுவ அதிகாரி(Vargas Salinas ). பதவியில் இருந்து இளைப்பாறிய பின்பு உடல்கள் உறவினர்களிடம் சேரவேண்டும் என்பது இவரது நோக்கம். ஆனாலும் இவரால் சரியாகப் புதைத்த இடத்தைக் காட்ட முடியாததால் இவர் தலைமறைவாக வேண்டியிருந்தது.
1967 ஆரஜன்ரீனா, கியுபா மற்றும் பொலிவிய அரசாங்கத்தின் கூட்டு முயற்சியால் அந்த இடம் மிகவும் பிரயத்தனத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. சேகுவாரா கொலை செயலில் முக்கியமான ஒருவராக அமரிக்கா சி ஐ ஏ ஏஜெண்ட பங்கு பற்றினார். அவர் கியுபாவைச் சேர்ந்தவர் அவரைப் பொறுத்தவரை சேகுவாரவைக் கொல்வதை மட்டுமல்ல, கியுபா அரசாங்கத்தை அழிப்பதைத் தனது இலட்சியமாகக் கொண்டவர். முதலாவதில் வெற்றியடைய செகுவாராவைத் தொடர்ந்து கொங்கோ சென்றார். அப்பொழுது தன்சானியாவுக்கு சேகுவாரா தப்பியதாக சொல்கிறார் இதன் பின்பு பொலிவியாவற்கு சேகுவாராவைத் தொடர்ந்தார். அக்கால இராணுச அரசாங்கம் அவருக்கு ஒத்துழைப்பை வழங்கியது. பல மாதங்கள் பொலிவியாவில் தனது பெயரை மாற்றி தென் பொலிவிய காடுகளில் சஞ்சரித்துள்ளார்.
அவரது பேட்டியை அமரிக்கப் பத்திரிகையில் படித்தேன். பழி வாங்குவது எங்வளவு உந்தலைக் கொண்டது என்பதற்கு உதாரணமாக இருந்தது.
கஸ்ரோவ் விலோடோ (Gustavo Villoldo) சேகுவாரா புதைத்தவன் என்ற தலைப்பை அமரிக்கப் பத்திரிகைத் தலையங்கமாகக் கொண்டு கட்டுரை வெளியிட்டிருந்தது.
சேகுவார கொல்லப்பட்டதும் கியுபாவிற்கு சடலம் வருமென பிடல்காஸ்ரோ காத்திருந்தார். சேகுவாரவைக் கொன்றது பொலிவியா வலதுசாரி இராணுவ அரசாங்கத்திற்கும், அமரிக்காவிற்கும் சாதனையான விடயம். அதைப் பறைசாற்ற உடலை ஹவானாவிற்கு அனுப்புவார்கள் என்பதே காஸ்ரோவின் எதிர்பார்ப்பு.ஆனால் சேகுவாராவிற்கு மரியாதைக்குரிய மரண நிகழ்வு நடக்கக்கூடாது. அத்துடன் இடதுசாரிகளுக்கு சேகுவாராவின் உடலோ,சமாதியோ யாத்திரைத்தலமாக மாறக்கூடாது என்பதை வலோடோவே தீர்மானித்து இரவோடு இரவாகப் புதைத்தார்கள்.
இதை ஏன் கஸ்ரோவ் விலோடோ செய்தான்?
கஸ்ரோவ் விலோடோ தந்தையார் கியுபாவில் அவர்கள் பிடல் காஸ்ரோபோல் ஸ்பானிய பரம்பரையினர். வசதியான நிலச்சுவாந்தார். அமரிக்க கார் கம்பனிக்கிளையை ஹவானாவிலும் நகரத்திலும், வெளியே பெரிய பண்ணையை வைத்திருந்தார். கஸ்ரோவ் விலோடோ சிறுவயதில் மியாமியிலும் பின்பு ஜோர்ஜியாவில் இராணுவப் பாடசாலையில் படித்துவிட்டு ஹவானாவில் தந்தையின் கார் கம்பனியில் 23 வயதில் வேலை செய்கிறார். பணக்கார இளைஞனுக்குரிய பெண்களோடு திரிதல், ஸ்போட்ஸ் கார் ஓட்டம், நீந்துதல் எனச் சகல விடயங்களிலும் ஈடுபடுகிறான்
56ம் ஆண்டு படகில் காஸ்ரோ குழுவினர் வந்து புரட்சிக்கான தயாரிப்புகளைச் செய்து கொண்டிருந்தார். அதன் பகுதியாக 1958 ல் கஸ்ரோவ் விலோடோவின் கார் கம்பனியில் இருந்து 20 கார்களை எடுத்துச் சென்றனர். அத்துடன் பல தடவை தந்தையினதும் பட்டிஸ்டா தலைமை அரசாங்கத்தினதும் உறவையும் மற்றும் அமரிக்காவுடனான தொடர்புகளையும் விசாரண செய்த்தார்கள். புரட்சியாளர்கள் கஸ்ரோவ் விலோடோ தந்தையிடம் அவரது சொத்துகளை தங்களுக்குத் தரும்படி பணித்திருந்தார்கள். இதன் தொடர்பாக கஸ்ரோவ் விலோடோவையும் சகோதரனையும் சிலநாட்கள் சிறை வைத்திருந்னர். இக்காலத்தில் சேகுவாரா இவர்களது வீட்டிற்கு இருமுறை சென்று விலோடோ தந்தையிடம் தற்கொலை, அல்லது எமது துப்பாக்கியால் மரணமா எனத் தேர்ந்தெடுக்கும்படி கூறியிருக்கிறார். இறுதியில் கஸ்ரோவ் விலோடோவின் தந்தை தூக்கமாத்திரையை எடுத்து தற்கொலை செய்திருக்கிறார் .
கஸ்ரோவ் விலோடோ மியாமிக்கு தப்பியோடிய பின்பு, அங்குள்ள காஸ்ரோவுக்கு எதிரானவர்களோடு இணைந்து கியுபாவில் தாக்குதல் நடத்த முயன்றபோது கஸ்ரோவ் விலோடோவைப் மியாமி நகரப்பொலிசால் கைது செய்யப்பட்டிருக்கிறார். அக்காலத்தில் சிஐஏ கஸ்ரோவ் விலோடோவைத் தொடர்பு கொண்டார்கள்.
பே ஒவ் பிக் ( 18 April 1961- Bay of pig ) என்ற கியுபா எதிர்ப் புரட்சியாளர்களது தாக்குதல் மத்திய அமரிக்கநாடுகளான நிகரகுவா, குவாத்தமாலா போன்ற இடங்களில் இருந்து ஒழுங்கமைக்கப்பட்டது அமரிக்காவின் ஆதரவில் முக்கிய விமானியாகச் சென்று கஸ்ரோவ் விலோடோ தப்பிய போதிலும் 1000 மேற்பட்டவர்கள் பிடல் காஸ்ரோவால் கியுபாவில் சிறைப் பிடிக்கப்பட்டார்கள்.
பே ஒவ் பிக் முயற்சி தோற்றபோது இரஸ்சிய – அமரிக்க பிணக்கு உச்சமடைந்து, கியுபாவில் இரஸ்சிய அணுவாயுதங்கள் நகர்த்தப்பட்டு, உலகம் அணுவாயுதப் போரின் விளிம்பில் சென்று வந்ததும் நாம் மறக்கமுடியாது.
இந்த தோல்வியால் மனமுடைந்திருந்த கஸ்ரோவ் விலோடோவை சி ஐ ஏ மீண்டும் தனது முழுநேர அதிகாரியாக உத்தியோகபூர்வமாக சேர்த்துக் கொண்டது.
இதன் பின்பு கியுபாவிற்கும், பிடல் காஸ்ரோக்கு எதிரான பல நடவடிக்கைகளுக்கு கியுபா போய் வந்ததாகவும் மற்றைய லத்தீன் அமரிக்க இடதுசாரி கொரில்லாக்களுக்கு எதிராக இயங்கியதாகவும் சொல்லும் கஸ்ரோவ் விலோடோ, சேகுவாராவுக்கு எதிராக தொடர்ந்து இயங்குகிறார். மூன்று மாதங்கள் ஆப்பிரிக்க கொங்கோவில் சேகுவாராவைக் கொல்ல முனைந்தாலும் அதிஸ்டத்தில் தப்பிவிட்டதாக சொல்கிறார்.
பொலிவியாவுக்கு சென்று அங்கு பலமாதங்கள் சேகுவாரவைத் தேடி அலைவதுடன் அக்கால பொலிவியா ஜனாதிபதியிடம் எப்படியும் பொலிவியாவில் இருந்து சேகுவாரா உயிரோடு தப்பக்கூடாது என உறுதி வாங்குகிறார்
இறுதியில் சேகுவாரா கொலையுடன் பின்பு கியுபாவுக்கெதிரான (October 12, 1971)மற்றொரு ஒரு தாக்குதலுக்கு (the Boca de Sama invasion) தலைமை தங்குகிறார். அதுவும் தோல்வியில் முடிந்தது
1988 ல் கஸ்ரோவ் விலோடோ சீ ஐ ஏயில் இருந்து விலகி மா மரப்பண்ணை வைத்திருந்தார். இவரது விலாசம், தொலைப்பேசி இலக்கம் ஒருவருக்கும் தெரியாது. இன்னமும் மறைந்தே வாழுகிறார்
ஆயுதத்தால் கியுபா அரசை வீழ்த்த முனைந்து தோல்வி கண்ட கஸ்ரோவ் விலோடோ மீண்டும் சளைக்காது பிடல் காஸ்ரோவுக்கு எதிராக சிவில் வழக்கைத் தொடுத்து அதில் வெற்றி பெற்றிருக்கிறார். அவரது சொத்துக்கள் மற்றும் இழப்புக்கள் என்பதற்கு ஈடாக அமரிக்காவிலே வரலாற்றில் அதிக அளவில் நட்டஈட்டுத்தொகையை (1.178 பில்லியன்) பணத்தை கியுபா கொடுக்கவேண்டுமென அமரிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கஸ்ரோவ் விலோடோ இருமுறை திருமணம் முடித்து விவாகரத்தில் முடிந்தது. தனது தந்தைக்கு நியாயம் கிடைப்பதற்காக முயற்சித்ததால் தனது குடும்ப வாழ்க்கையில் சீராக நடத்த முடியவில்லை என்கிறார்.
தற்பொழுது பிடல் காஸ்ரோ, சேகுவாரா இல்லை. அமரிக்கா கியுபாவை அங்கீகரித்துள்ளது.
நானும் நண்பர் முருகபூபதியும் ஹவனா கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தபோது பொலிசார் அங்கிருந்த உல்லாசப் பிரயாணிகளை எதுவும் கேட்கவில்லை ஆனால் உள்ளுர் மக்களைத் தொடர்ந்து விசாரித்தார்கள். அப்பொழுது பார்க்க எனக்கு விந்தையாக இருந்தது. மியாமியில் இருந்த கியுபா எதிர்புரட்சியாளரது இரண்டு பெரிய இராணுவ நடவடிக்கைகள் இப்படியான விழிப்புணர்வாலே முறியடிக்கப்பட்டது.
கியுபாவில் மக்களது ஆதரவு இன்னமும் அரசாங்கத்திற்கு இருந்தாலும் புரட்சியின்போது உயிர் உடைமைகளை இழந்தவர்கள் மனம் மாறுவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும்?
மறுமொழியொன்றை இடுங்கள்