
ஜூலை 13 வெள்ளிக்கிழமை:
நினைக்கப்படவேண்டியவர்களின் நினைவு தினம்!
அருமைத்தம்பிமாரும் “My Boys” களும் செலுத்திய நன்றிக்கடன்!?
தமிழர்களின் எதிரிகள் யார்….? உறைபொருளும் மறைபொருளும்!
முருகபூபதி
யேசுநாதர் ஒரு வெள்ளிக்கிழமையன்று 12 பேருடன் (அவருடன் சேர்த்து மொத்தம் 13 பேர்) விருந்துக்குச்சென்றபோதுதான் யூதாஸ் என்பவனால் காட்டிக்கொடுக்கப்பட்டு சிலுவையில் அறையப்பட்டதனால் கிறீஸ்தவர்களில் பலர் 13 ஆம் திகதி வரும் வெள்ளிக்கிழமை தினத்தை கவலையோடுதான் எதிர்நோக்குவார்கள்.
ஐரோப்பிய நாடுகளில் 13 ஆம் திகதி வெள்ளியன்று வந்தால் வேலைக்குச்செல்வதற்கும் சற்று தயங்குவார்களாம்!
அவ்வாறு ஒரு 13 ஆம் திகதியன்று இலங்கையில் அவலச்சம்பவம் ஒன்று நடந்தது. ஆனால், அது ஒரு வியாழக்கிழமை வந்தது.
ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் வரும்போது, எனக்கு மனதில் இனம்புரியாத கலக்கம் வரும். இம்மாதத்தை தமிழில் ஆடி மாதம் என அழைப்பர். அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் வாழ்வு ஆடி, அடங்கியதும் இம்மாதம் இன்றைய திகதியில்தான். அவருடன் இருந்த பாவத்திற்காக வெற்றிவேல் யோகேஸ்வரன் அவர்களும் அன்று (1989 ஜூலை 13 ஆம் திகதி) உயிரிழந்தார்.மு. சிவசிதம்பரம் சூட்டுக்காயத்துடன் உயிர்தப்பினார்!
1983 இல் ஜூலை மாதம் 22 ஆம் திகதி திருநெல்வேலியில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதன் எதிரொலியாக கொழும்பில் கலவரம் தொடங்கியது.
1999 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09 ஆம் திகதியன்றுதான் யாழ்ப்பாணம் நவாலி புனித பேதுருவானர் தேவாலயத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு நூறுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இவ்வாறு கறுப்பு ஜூலை சம்பவங்கள் பல இலங்கையில் நடந்துள்ளன. இந்தப்பின்னணிகளுடன்தான் எங்கள் தமிழ்த்தலைவர்கள் கொல்லப்பட்ட தினங்களையும் நினைவுகூரவேண்டியிருக்கிறது.
02 செப்டெம்பர் 1985 ஆம் திகதி தமிழர் விடுதலைக்கூட்டணியைச் சேர்ந்த மானிப்பாய் நாடாளுமன்ற உறுப்பினர் வி. தருமலிங்கம், அதே கட்சியைச்சேர்ந்த ஆலாலசுந்தரம் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
05 ஜூலை 1997 ஆம் திகதி தமிழர் விடுதலைக்கூட்டணியைச்சேர்ந்த மூதூர் நாடாளுமன்ற உறுப்பினர் அ. தங்கத்துரை மூதூரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
யோகேஸ்வரனின் துணைவியார் சரோஜினி யோகேஸ்வரன் 17 ஆம் திகதி மே மாதம் 1998 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மேயராக பதவியிலிருந்த காலத்திலேயே அவரது இல்லத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
29 ஜூலை 1999 ஆம் திகதி நீலன் திருச்செல்வம் கொழும்பில் தற்கொலைக்குண்டுதாரியினால் படுகொலை செய்யப்பட்டார்.
05 ஜனவரி 2000 ஆம் திகதி தமிழ்க்காங்கிரஸ் தலைவர் குமார் பொன்னம்பலம் கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இங்கு குறிப்பிடப்படும் தமிழ்த்தலைவர்களில் குமார் பொன்னம்பலம் தவிர்த்து ஏனையோரை படுகொலை செய்தவர்கள், சிங்களவரோ சிங்கள இராணுவத்தினரோ அல்ல என்பது ஊர்ஜிதமானது.
குமார் பொன்னம்பலத்தை யார் கொலைசெய்தார்கள்? என்பது இன்றும் மர்மம்தான்!?
இந்தியா இலங்கையின் அண்டை நாடாகவிருந்தமையாலும், “தாய் நாடு சேய்நாடு” மந்திரம் தொடர்ந்தும் உச்சரிக்கப்பட்டுக்கொண்டிருந்தமையாலும், இலங்கையில் இந்தியாவின் தலையீடு இரண்டு நாடுகளும் சுதந்திரம் பெற்ற காலம் முதலே ஆரம்பித்துவிட்டதை அவதானிக்க முடிகிறது.
1972 இலிருந்தே இலங்கையில் இனப்பிரச்சினை சூடுபிடிக்கத்தொடங்கியதும், இந்தியாவின் கரமும் பாக்கு நீரிணையைத்தாண்டி நீளத்தொடங்கியது.
தந்தை செல்வநாயகத்தின் மருமகனான ஏ.ஜே. வில்சன் ஜே.ஆர்.ஜெயவர்தனாவின் நண்பருமாவார். இந்திரா காந்தியினது அழுத்தங்கள் இலங்கையில் தொடர்ந்து நீடிப்பதை விரும்பாத ஜே.ஆர், தனது நண்பரும் அமெரிக்காவில் அரசியல் துறையில் பட்டம் பெற்றவருமான ஏ.ஜே. வில்சனிடம், மாவட்ட அபிவிருத்திச்சபை சட்ட நகல் அறிக்கையைத் தயாரிக்கும் குழுவுக்கு தலைவராக நியமிக்க விரும்பினார். ஆனால், வில்சன், “தயாரிக்கத்தயார், ஆனால் குழுவுக்கு தலைவராக முடியாது” என மறுத்தார். ஓய்வு பெற்ற நீதியரசர் விக்டர் தென்னக்கோனை தலைவராக நியமித்தார் ஜே.ஆர். அந்தக்குழுவின் அறிக்கை ஜே.ஆருக்கு திருப்தி தரவில்லை. மீண்டும் வில்சனை தனியாக அழைத்த ஜே.ஆர்., மற்றும் ஒரு புதிய அறிக்கையை கேட்க, அவரும் தயாரித்தார்.
ஒரு தமிழர் தயாரித்த அறிக்கை என்பதனாலோ என்னவோ, அன்றைய ஜே.ஆரின் அமைச்சரவை அதனை ஏற்க மறுத்தது. எனினும் மாவட்ட அபிவிருத்திச்சபைச்சட்டத்தை, நிறைவேற்று அதிகாரம் கொண்டிருந்த அந்த அதிபர் அமுல்படுத்தி தேர்தலுக்கும் நாள் குறித்தார்.
அதன் பின்னர் வடக்கில் நடந்த தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் ஜே.ஆரின் ஐக்கிய தேசியக்கட்சியில் இணைந்திருந்த முன்னாள் தமிழ்க்காங்கிரஸ் வட்டுக்கோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. தியாகராஜா தமிழ் இளைஞர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டார். நாச்சிமார் கோயிலடியில் நான்கு பொலிஸார் சுட்டுக்கொல்லப்பட்டதும், யாழ்ப்பாணம் ரணகளமானது. அதன் பின்னர் நடந்த சம்பவங்கள் யாவும் தெரிந்த செய்திகளே! புதிதாக சொல்வதற்கு எதுவும் இல்லை.
யாழ்ப்பாணத்தில் பொலிஸார் நடத்திய அட்டூழியத்தையடுத்து இலங்கை அரசுடன் தமிழர் விடுதலைக்கூட்டணித்தலைவர்கள் பேச்சுவார்த்தைகள் நடத்தக்கூடாது என்று இளைஞர்கள் அழுத்தமும் அச்சுறுத்தலும் விடுக்கத்தொடங்கினர். அதற்கு அடையாளமாக அரசுடன் இணைந்திருந்த ஆ. தியாகராஜாவை முதல் களப்பலியாக்கியிருந்தனர்.
அதற்கு முன்பு ஶ்ரீமா பண்டாரநாயக்காவின் ஆட்சியின் போது அவருக்கும் அவரது கட்சிக்கும் விசுவாசமாக இருந்த யாழ். மேயர் அல்ஃபிரட் துரையப்பாவை 27 ஜூலை 1975 ஆம் திகதி பொன்னாலை வரதராஜப்பெருமாள் ஆலய முன்றலில் சுட்டுக்கொன்றிருந்தனர்.அவரைச் சுட்டவரான வேலுப்பிள்ளை பிரபாகரனும் 2009 மே மாதம் கொல்லப்பட்டுவிட்டார்.
இன்று ஜூலை மாதம் 13 ஆம் திகதி எழுதப்படும் இந்தப்பதிவில் இடம்பெறும் தமிழினத்தலைவர்களில் வேலுப்பிள்ளை பிரபாகரன் தவிர்ந்து ஏனையோர், ( அல்பிரட் துரையப்பா, ஆ.தியாகராஜா, தங்கத்துரை, தருமலிங்கம், ஆலாலாசுந்தரம், அமிர்தலிங்கம், வெ. யோகேஸ்வரன், நீலன் திருச்செல்வம், சரோஜினி யோகேஸ்வரன்) யாரால் கொலை செய்யப்பட்டார்கள் என்பதற்கு இங்கு ஆதாரங்களை அடுக்கவேண்டிய தேவை இல்லை.
இவர்கள் தவிர்ந்து , இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் பல தமிழ் இயக்கத்தலைவர்களும் தமிழ் அதிபர்களும் தமிழ் கல்விமான்களும் தமிழ் சமூகப்பணியாளர்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
வடபிரதேச கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் விஜயானந்தன், நவசமசமாஜக்கட்சியைச் சேர்ந்த அண்ணாமலை, சர்வோதயத்தைச் சேர்ந்த கதிரமலை, யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் ரஜனி , தமிழர் ஆசிரியர் சங்கத்தைச்சேர்ந்த வணசிங்கா, டெலோ ஶ்ரீசபாரத்தினம், புளட் உமா மகேஸ்வரன், வண. பிதா சந்திரா பெர்ணான்டோ, தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக்கழகத்தின் ஸ்தாபகர் சட்டத்தரணி கே. கந்தசாமி, சென். ஜோன்ஸ் கல்லூரி அதிபர் ஆனந்தராஜா, யாழ். மத்திய கல்லூரி அதிபர், யாழ். அரசாங்க அதிபர் , மட்டக்களப்பு அரசாங்க அதிபர், மாவட்ட அபிவிருத்திச்சபை உறுப்பினர் வேல்முருகு, மகேஸ்வரி வேலாயுதம், லக்ஷ்மண் கதிர்காமர், ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ், மகேஸ்வரன், குமாரசாமி விநோதன், கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ரவீந்திரநாத் ….. இந்தப்பட்டியல் மேலும் நீளும். இவர்களுடன், 19 ஜூன் 1990 ஆம் திகதி, பத்மநாபா, கிருபாகரன், யோகசங்கரி, திவ்வியநாதன், கமலன், லிங்கன், செல்வராஜா, கோமளராஜா, அன்பு முகுந்தன், இந்திரகுமார், பத்மநாதன், புனிதவதி, புவனேஸ்வரி ஆகியோரும் தமிழ்நாட்டில் கோடம்பாக்கத்தில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் தமிழ்பேசும் தமிழர்களே! இவர்களை கொன்றவர்கள் சிங்கள பேரினவாதிகளோ, சிங்கள கடும்போக்காளர்களோ, சிங்கள இராணுவத்தினரோ அல்ல என்பது ஊடகவியலாளனாக பயணித்துவரும் எனக்கும், என்னைப்போன்ற ஊடகவியலாளர்களுக்கும் அரசியல் வரலாறு எழுதிவரும் ஆய்வாளர்களுக்கும் நன்கு தெரிந்த சங்கதிதான்.
இதில் தெரியாத சங்கதி ஒன்றும் இருக்கிறது. அதனைச்சொல்வதற்காகத்தான் இதனை இன்று எழுதநேர்ந்தது.
1977 இல் அறுதிப்பெரும்பான்மையுடன் பதவிக்கு வந்த ஜே.ஆர். தலைமையிலான ஆட்சியின்போது தமிழ் மக்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியும் வந்தது. இடதுசாரிகள் அனைவரும் படுதோல்வி கண்டனர். ஶ்ரீமாவின் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு எதிர்க்கட்சியாக வரும் சந்தர்ப்பமும் கிட்டவில்லை.
அதிர்ஷ்டம் தமிழர் விடுதலைக்கூட்டணிப்பக்கம் வந்தது. இந்த எதிர்பாராத சந்தர்ப்பம் சும்மா வரவில்லை என்பதை அன்றைய ஜே.ஆரின். ஆட்சியில் இருந்த அவரது கட்சியின் கடும்போக்காளர்களான சிறில் மத்தியூ, நெவில் பெர்ணான்டோ முதலானவர்கள் நன்கறிந்து வைத்திருந்தனர்.
“தமிழீழம் அமைப்பதற்காகவே ஆணை கேட்டு தேர்தலில் போட்டியிடுகிறோம் ” என்றே அமிர்தலிங்கம் மேடைகளில் முழங்கினார். அதற்காக வடபகுதித்தமிழர்களுக்கு உலக அரசியல் வரலாற்றுப்பாடமும் கற்பித்திருந்தார். அயர்லாந்து விடுதலைப்போராளிகள், 1920 ஆம் ஆண்டளவில் நடந்த தேர்தலில் வெற்றிபெற்றதும், நிழல் அரசாங்கம் அமைத்தது போன்று, தாங்களும் தமிழீழ நிழல் அரசாங்கம் அமைக்கமுடியும் என்று நம்பிக்கையூட்டினார். தங்களது தேர்தல் பரப்புரைக்கான அறிக்கையில், தமிழீழ தேசியப்பேரவை – (National Assembly of Tamil Eelam) உருவாகும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
———–
அமிர்தலிங்கம், வட்டுக்கோட்டை பண்ணாகத்தில் சாதாரண குடும்பத்தில் 1927 ஆம் ஆண்டு பிறந்தவர். சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரியிலிருந்து கொழும்பு பல்கலைக்கழகம் சென்று சட்ட பீடத்தில் பயின்று பட்டம் பெற்று சட்டக்கல்லூரியில் இணைந்து சட்டத்தரணியானவர். படிக்கும் காலத்திலேயே சிறந்த பேச்சாற்றல் மிக்கவராகத்திகழ்ந்திருந்தவர். அவரது வாழ்வு தமிழரின் அரசியல் பக்கம் திரும்பியதனால், தந்தை செல்வநாயகம் தொடங்கியிருந்த தமிழரசுக்கட்சியில் சேர்ந்து முதலில் 1952 இல் நடந்த தேர்தலில் வட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு, தோல்வி கண்டிருந்தாலும், அதன்பின்னர் 1956 இல் அதே தொகுதியில் நடந்த மற்றும் ஒரு தேர்தலில் போட்டியிட்டு வென்று நாடாளுமன்றம் சென்றார்.
சிங்கள ஶ்ரீ எதிர்ப்பு போராட்டம், யாழ். கச்சேரி சத்தியாக்கிரகம், காலிமுகத்தில் நாடாளுமன்றத்திற்கு முன்பாக நடந்த அகிம்சைப்போராட்டம் முதலானவற்றிலெல்லாம் பங்குபற்றி பொலிஸாரின் தாக்குதலுக்கும் இலக்காகியிருப்பவர். பனாகொடை இராணுவ முகாமிலும் தடுத்துவைக்கப்பட்டவர். 1972 இல் ஶ்ரீமாவின் ஆட்சிக்காலத்தில் புதிய அரசியலமைப்பை எதிர்த்தமைக்காகவும் கைதாகி தடுத்துவைக்கப்பட்டு, ட்ரயல் அட் பார் நீதிவிசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டார்.
1955 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் திகதி பண்டாரநாயக்கா நாடாளுமன்றத்தில் முன்மொழிந்த தனிச்சிங்களச்சட்டத்தை எதிர்த்து அன்றைய தினமே சத்தியாக்கிரகம் செய்து, தலையில் பலத்த அடிவாங்கி இரத்தம் சிந்தச்சிந்த நாடாளுமன்ற அவைக்கு வந்த அமிர்தலிங்கத்தைப்பார்த்து, பிரதமர் பண்டாரநாயக்கா, “விழுப்புண்ணுடன் வரும் வீரரே வருக வருக” என வரவேற்று சிரித்து ஏளனம் செய்தார்.
அவ்வாறெல்லாம் களம்கண்டு வந்திருக்கும் அமிர்தலிங்கம் அவர்களை, மேலும் தீவிர தமிழ் உணர்வு பேசுவதற்கு கால் கோள் இட்டது 1970 இல் நடந்த தேர்தல். வட்டுக்கோட்டை தொகுதியில், கல்லூரி அதிபராகவிருந்த ஆ. தியாகராஜா ( தமிழ்க்காங்கிரஸ்) என்பவரிடம் தோற்றபோது, 1972 இல் அமுலுக்கு வந்த புதிய அரசியலமைப்புச்சட்டம் அமிருக்கு மேலும் உற்சாகத்தை ஊட்டியது.
வட்டுக்கோட்டை தீர்மானத்துடன், 1977 இல் மீண்டும் தேர்தலை அவர் சந்தித்தபோது எதிர்பாராதவிதமாக, அவரது விழுப்புண்ணை 1955 இல் ஏளனம் செய்தவரின் ஶ்ரீல.சு. கட்சியை, 1972 இல் அவரை சிறைக்குள் தள்ளிய அதே கட்சியின் தலைவியை முந்திக்கொண்டு அதிகப்படியான தொகுதிகளுடன் எதிர்க்கட்சித்தலைவரானார்.
இந்தியா – பாகிஸ்தான் ( இந்து – முஸ்லிம்) இனமுறுகள் தோன்றிய காலம் முதல் இந்தியாவில் ஜாஹிர் ஹுசேய்ன், அப்துல் கலாம் ஆகியோர் ஜனாதிபதிகளாக வந்துள்ளனர்.
ஆனால், இலங்கையில் சபாநாயகராக வரும் தகுதிகூட இன்றளவும் தமிழர்களுக்கோ, முஸ்லிம்களுக்கோ கிடைக்கவில்லை. பாக்கீர் மாக்காருக்கு அந்தப்பதவி சிறிது காலத்திற்கே கிடைத்தது. அதனையும் பொறுத்துக்கொள்ள முடியாத சிங்கள கடும்போக்காளர்களின் அழுத்தத்தினால், அவரும் பதவி இறக்கப்பட்டு அமைச்சரவை அதிகாரம் அற்ற அமைச்சராக வாழ்ந்து மறைந்தார்.
இந்தப்பின்னணிகளுடன்தான் அமிர்தலிங்கம் அன்று ஏற்றுக்கொண்ட எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் அவதானிக்கவேண்டியிருக்கிறது.
அவருக்கு அந்தப்பதவி கிடைத்தபோது கொழும்பில் வெளியான தினபதி பத்திரிகை ( ஆசிரியர் எஸ்.டி. சிவநாயகம்) ஒரு செய்தியை இவ்வாறு வெளியிட்டது: “தமிழ் ஈழம் கேட்ட அமிர், அரசின் வீடும் காரும் ஏற்பாரா!?”
இந்தத்தலைப்பின் இருமருங்கும் வீடும் – காரும் படங்களையும் பதிவுசெய்து அவரை ஏளனப்படுத்தியது அந்த தமிழ்ப்பத்திரிகை!
ஜே.ஆர். – வில்சன் எண்ணத்தில் உருவான மாவட்ட அபிவிருத்திச்சபைத்தேர்தலின் போது யாழ்ப்பாணத்தில் தோன்றிய அசாதாரண சூழ்நிலைகளையடுத்து, அந்தப்பிரசேத்தை அடக்கி ஆள்வதற்காக, தனது மருமகனான பிரகேடியர் திஸ்ஸ வீரதுங்காவை சர்வ அதிகாரமும் கொண்ட தளபதியாக நியமித்து யாழ்ப்பாணத்திற்கு அனுப்பினார் ஜே.ஆர்.
ஒருபுறம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி – மறுபுறம் யாழ்ப்பாணத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு எதனையும் செய்யத் தயாராகியிருக்கும் அவருடை மருமகன். இவற்றுக்கிடையே ஆயுதம் ஏந்திய தமிழ் இளைஞர்கள். அடிக்கடி கொழும்பிலிருந்து ஏளனம் செய்யும் தமிழ் ஊடகங்கள் ( தினபதி – சிந்தாமணி) இவ்வாறு பல முனையிலிருந்தும் அவரைநோக்கி அம்புகள் பாய்ந்தன.
இதுஇவ்விதமிருக்க, 1981 ஜூலை மாதம் 23 ஆம் 24 ஆம் திகதிகளில் நாடாளுமன்றில் எதிர்க்கட்சித்தலைவர் அமிர்தலிங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் கடும்போக்காளர்கள் சிலர் கடுமையான விமர்சனங்களை வைத்தனர்.
அவரை காலிமுகத்தில் கழுவிலேற்றி தண்டனை வழங்கவேண்டும் என்றும் உரத்துக்கத்தினர். கூக்குரல் எழுப்பினர்.
அந்த விவாதம் வந்தபோது அமிர்தலிங்கம் பேசுவதற்கும் சந்தர்ப்பம் தரப்படவில்லை. ஆளும் கட்சியினரின் 121 வாக்குகளை மாத்திரம் அந்தத்தீர்மானத்திற்கு ஆதரவானது என்று ஏற்று ஹன்சார்ட் பதிவுசெய்துகொண்டது. ஆனால், அந்தத்தீர்மானத்தை முன்மொழிந்த கடும்போக்காளர் நெவில் பெர்ணான்டோவின் எம்.பி. பதவியை ஜே.ஆர். தனது அதிகாரத்தினால் பறித்தார்.
பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் – தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளிவிடுதல் முதலான முன்னோர் மொழிகள் இச்சந்தர்ப்பங்களில்தான் எமது நினைவுகளுக்கு வருகின்றன.
இவ்வாறு ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் வரவிருக்கும் தகவலைத்தெரிந்துகொண்ட பிரதமர் பிரேமதாச அன்றைய தினம் ஒரு வெளியூர் நிகழ்ச்சியை ஒழுங்குசெய்துகொண்டு மறைந்துவிட்டார்.
அந்த விவாதத்தில் எவரும் சுதந்திரமாகப்பேசமுடியும் என்ற அனுமதியை ஆளும்கட்சியின் கூட்டத்தில் முடிவெடுத்த பின்னரே கடும்போக்காளர் நெவில் பெர்ணான்டோ அன்று வரம்பு மீறிப்பேசினார்.
அந்த வரம்பு மீறலிலும் அவர் சொன்ன கருத்து இங்கு முக்கியமானது.
” தனது வாழ்நாள் முழுவதும் பிரிட்டிஷாரை எதிர்த்து, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நடத்திய மகாத்மா காந்தியை எந்த ஒரு பிரிட்டிஷ் பிரஜையோ எந்தவொரு வெள்ளை இனத்தவரோ சுட்டுக்கொல்லவில்லை. காந்தி நேசித்த தேசத்தில் அவரது மதத்தில் பிறந்த ஒருவனே அவரைச் சுட்டுக்கொன்றான். இவ்வாறு தெரிவித்தவர் ஆளுநராக இருந்த மவுண்ட் பேர்ட்டன். இதனைத்தான் எதிர்க்கட்சித்தலைவர் அமிர்தலிங்கத்திற்கும் சொல்லி வைக்கின்றேன். நீங்கள் வளர்த்த கடாக்கள் உங்கள் மார்பில் பாயும் காலம் வரலாம் என்று எச்சரிக்கின்றேன்”
——-
“ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் வரும்போது, மனதில் இனம்புரியாத கலக்கம் வரும் ” என்று இந்தப்பதிவில் நான் எழுதியிருந்தமைக்கான காரணத்திற்குரிய பதிலும் இந்தப்பதிவிலேயே இடம்பெற்றுள்ளதை அவதானிக்கலாம்.
அமிர்தலிங்கமும் யோகேஸ்வரனும் 1989 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13 ஆம் திகதி மாலை வேளையில் கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டதன் பின்னணியில் உறைபொருளாகவும் மறைபொருளாகவும் பல கதைகள் இருக்கின்றன.
இதுபற்றி புலனாய்வு செய்வதற்கு இன்று எவரும் இல்லை. சம்பந்தப்பட்ட பலரும் பரலோகம் சென்றுவிட்டனர். முக்கியமாக விடுதலைப்புலிகளின் தலைவர், ஆலோசகர், யோகி, மகேந்தரராஜா என்ற மாத்தையா, இவரது வலதுகரமாக விளங்கிய வடமராட்சி அரசியல் துறைப்பொறுப்பாளர் விசு எனப்படும் இராசையா அரவிந்தராசா, மற்றும் அலோசியஸ், சிவகுமார் மற்றும் அன்றைய ஜனாதிபதி பிரேமதாச, பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்தின ஆகியோர் மேல் உலகத்தில் அமிர்தலிங்கத்துடனும் யோகேஸ்வரனுடனும் உரையாடுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்துபார்க்கலாம்.
1972 ஆம் ஆண்டு முதல் 1987 ஆம் ஆண்டுவரையில் இலங்கை அரசியலில் நேர்ந்த மாற்றங்களை ஒரு ஊடகவியலாளனாக அருகிலிருந்து அவதானித்துவிட்டு, புலம்பெயர்ந்துவந்த பின்னரும் அந்த பழக்கதோஷத்தினால் தொடர்ந்தும் அவதானித்துவருகின்றேன்.
அமிர்தலிங்கம் அவர்கள் சார்ந்திருந்த அரசியலுடன் உடன்பாடுகொள்ளமுடியாத மாற்றுச்சிந்தனையாளர்களதும் அபிமானத்திற்குரியவராகவே அவர் திகழ்ந்தார். சிறந்த நாடாளுமன்ற ஜனநாயகவாதியாகவும் செயல்பட்டவர்.
மாறி மாறி பதவிக்கு வந்த இலங்கை அரசுகளின் ஆத்திரமூட்டும் செயல்களை அண்டை நாடான இந்தியாவிடம் எடுத்துச்சொல்லி, இந்தியாவின் ஆதரவுடன் ஈழத்தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வைப்பெற்றுக்கொடுப்பதற்கு தன்னாளியன்ற அனைத்துவழிகளிலும் ( கடும்போக்காளரின் விமர்சனங்களுக்கும் ஆயுதம் ஏந்திய தமிழ் இயக்கங்களின் அழுத்தங்கள் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் ) போராடினார்.
அவர் தமிழர்களுக்காக மாத்திரம் குரல் எழுப்பவில்லை. சிங்களவர்கள், முஸ்லிம்களுக்காகவும் நாடாளுமன்றில் பேசியவர் என்பதற்கு ஆதாரமான பல தகவல்களை நாடாளுமன்ற பதிவேடுகளில் பார்க்கமுடியும்.
சிங்கள ஊடகவியலாளர்களின் உரிமைக்காகவும் துணிந்து குரல்கொடுத்திருக்கிறார். அது பற்றியெல்லாம் இங்கு விரிவஞ்சி தவிர்க்கின்றேன்.
ஒரு வரவு -செலவு திட்ட விவாதத்தின்போது அவர் ஆற்றிய ஊரையை நாடாளுமன்ற பார்வையாளர் (களரி) பிரிவிலிருந்து அவதானித்துக்கொண்டிருந்த, அன்றைய இராஜாங்க அமைச்சர் ஆனந்த திஸ்ஸ டீ அல்விஸ்ஸின் மனைவியார், வீடு சென்று அமிர்தலிங்கத்தை விதந்து பாராட்டி விரிவான கடிதம் எழுதி அனுப்பி வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.
தமிழ் அரசியல் தலைவர்களில் இராசதுரைக்கு அடுத்ததாக நான் பல தடவைகள் சந்தித்துப்பேசியிருப்பவர் அமிர்தலிங்கமாகத்தான் இருப்பார். இராசதுரைக்கு எதிராக காசி. ஆனந்தனை மட்டக்களப்பு தேர்தலில் நிறுத்தியது, ஆலாலசுந்தரத்தை யாழ்ப்பாணம் பல நோக்கு கூட்டுறவுச்சங்க ஊழல் குற்றச்சாட்டுக்களிலிருந்து காப்பாற்ற முனைந்தது போன்ற ஒரு சில விடயங்களில் அவரிடத்தில் எனக்கு ஏமாற்றங்கள் இருந்தபோதிலும், மேற்கிலங்கையில் எங்கள் ஊரும் 1981 இல் இனவாத சக்திகளினால் தாக்கப்பட்டபோது எதிர்க்கட்சித்தலைவராக இருந்த அவரிடம்தான் ஓடிச்சென்று முறையிட்டேன். அந்தவேளையிலும் அவர் அருகில் இருந்தவர்தான் யோகேஸ்வரன். அமிர் அண்ணன், எமக்காகவும் நாடாளுமன்றில் குரல் எழுப்பினார்.
1983 மார்ச் மாதம் எமது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கொழும்பில் நடத்திய பாரதி நூற்றாண்டு விழாவிலும் உரையாற்றி கண்காட்சியையும் பார்வையிட்டார். பாரதியின் ” கேட்டிருப்பாய் காற்றே…” என்ற கவிதை வரிகளை தலைப்பாகக்கொண்டு நீண்டதொரு சிறப்பான உரையை பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் நிகழ்த்தினார். அதுவே அவர் இலங்கையில் நிகழ்த்திய இறுதியான இலக்கிய உரை!
1983 வன்செயல்களையடுத்து தமிழகத்தில் தஞ்சமடைந்து தமிழக அரசின் சட்டசபை உறுப்பினர்கள் தங்கும் விடுதியில் அவர் குடும்பத்தினருடன் வாழ்ந்தபோது, ஏப்ரில் மாதம் நண்பரும் எழுத்தாளருமான காவலூர் ஜெகநாதனுடன் சென்று பார்த்துப்பேசியிருக்கின்றேன். அவர் தமிழகத்திலிருந்து அவுஸ்திரேலியா உட்பட ஐரோப்பிய நாடுகளுக்கெல்லாம் பயணம் மேற்கொண்டு ஈழத்தமிழர்களுக்காக ஆதரவு திரட்டினார்.
அவுஸ்திரேலியாவுக்கு அவர் வந்து மெல்பன் வை. டபிள்யூ. சீ. ஏ. மண்டபத்தில் பேராசிரியர் இலியேஸர் தலைமையில் உரையாற்றியவேளையில் அந்த மண்டபத்திற்கு வெளியே இங்கிருக்கும் சிங்கள கடும்போக்காளர்கள் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அச்சமயத்திலும், அவர், வெளியே நின்று ஆர்ப்பாட்டம் செய்யும் “சிங்களச் சகோதரர்கள்” என்றுதான் கண்ணியமாக விளித்துப்பேசினார்.
அதே மண்டபத்தில்தான் அவருக்கான இரங்கல் கூட்டத்தையும் 1989 ஜூலை மாதம் இங்குள்ள இலங்கைத்தமிழ்ச்சங்கம் நடத்தியது. ஆனால், அது கண்டனக்கூட்டமல்ல. வெறும் அஞ்சலிக்கூட்டம்தான். “பெரிய கம்பனியின்” அழுத்தங்களும் அதற்குக்காரணம்!
அமிர்தலிங்கம் மறைந்து சில வருடங்களின் பின்னர், அவுஸ்திரேலியா சிட்னிக்கு திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் வருகை தந்தார். 2001 ஆம் ஆண்டென நினைக்கின்றேன்.
சிட்னியில் வதியும் அன்பர் பட்டயக்கணக்காளர் திரு. துரைசிங்கம் ஊடாக தொடர்புகொண்டு, மெல்பனில் அமிர்தலிங்கம் நிகழ்த்திய உரையின் காணொளித்தொகுப்பை பெற்றார்.
அதன் பிரதியை அமிர்தலிங்கத்தின் நண்பரும் மெல்பனில் சட்டத்தரணியாக நீண்ட காலம் வதிபவருமான அன்பர் செல்வத்துரை ரவீந்திரன் அதனை பாதுகாப்பாக வைத்திருந்து சேர்ப்பித்ததுடன், திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கத்துடனும் உரையாடினார்.
அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளை 26 ஓகஸ்ட் 2002 இல் வரலாற்றின் மனிதன் என்ற ஆவணத்தை வெளியிட்டுள்ளது. அதனை பத்திரிகையாளர் சு. மகாலிங்க சிவம் (மாலி) டொக்டர் பாஞ். இராமலிங்கம் ஆகியோர் தொகுத்துள்ளனர். இந்திரா காந்தி முதல் பலரும் அமிர் பற்றிய தமது எண்ணங்களை பகிர்ந்துள்ளனர். மு. நித்தியானந்தன், சு. மகாலிங்க சிவம் (மாலி) டொக்டர் பாஞ். இராமலிங்கம் மற்றும் கே. கிருஷ்ணராஜாவும் இணைந்து மற்றும் ஒரு ஆவணத்தை அமிர்தலிங்கம்: ஒளியில் எழுதுதல் என்ற பெயரில் பல அரிய அபூர்வமான ஒளிப்படங்களை தொகுத்து வெளியிட்டுள்ளனர்.
வரலாற்றில் மனிதன் என்ற நூலில் “கேட்டிருப்பாய் காற்றே…” என்ற தலைப்பில் அமிர் அவர்களின் நினைவுகளை நானும் பகிர்ந்திருக்கின்றேன்.
அமிர்தலிங்கம் – யோகேஸ்வரன் ஆகியோர் அன்றைய தினம் (13-07- 1989) வாயிலில் பாதுகாப்பு கடமைக்கு நின்ற ஊழியரின் முன்னெச்சரிக்கையை அலட்சியம் செய்தமையும் அந்த அவலத்திற்கு காரணம் என்று கருதினாலும், அவர்களின் விதி காலனை அவர்களிடம் நெருங்கிவரச்செய்துவிட்டது எனக்கூறி, விதியின் மீது நாம் எளிதாக பழியை சுமத்திவிடமுடியும்!
அவர்களை மேல் உலகம் அனுப்பியவர்களின் இயக்கம் ” தாங்கள் அதைச்செய்யவில்லை” என்றே தொடர்ச்சியாக வாதிட்டு வந்தது.
அமிர்தலிங்கம் அந்த இயக்கத்தலைவரை “தம்பி” என்றும் இயக்கத்தவரை “தம்பிமார்” என்றுமே அழைத்து வந்தவர்.
இந்தியாவின் தலையீட்டை நிராகரிப்பதற்காகவும் இந்தியப்படையை வெளியேற்றுவதற்காகவும் அதிபர் பிரேமதாசா, அந்த இயக்கத்தவரை, ” My Boys” என்றே அழைத்து, தலைநகரில், ஹில்டன் ஹோட்டலில் தங்கவைத்து உபசரித்தார்.
அருமைத்தம்பிமாரும் My Boys களும் இறுதியில் அவர்களுக்கு என்ன செய்தார்கள்!? என்பதை வரலாற்று ஏடுகள் சொல்லிக்கொண்டே இருக்கின்றன.
—0—
மறுமொழியொன்றை இடுங்கள்