நௌஸாத்தின் கொல்வதெழுதல் 90


கொல்வதெழுதல் 90, ஆங்கிலத்தில் பைனரி(Binary) எனப்படுவது வகையை சேர்ந்தது. எளிமையான புளட்(simple Plot). நாவல் முத்துமுகம்மது என்ற இளைஞனது பாத்திரத்தை சுற்றியே கதை செல்கிறது. அதிகம் கல்வியோ, வசதியோ அற்று ஊரில் மற்றவர்களால் ஏளனப்படுத்தப்படும் சாதாரணமான கிழக்கு மாகாணத்தில் உள்ள பள்ளிமுனைவாசி, அரசியலில் ஈடுபட்டு பாராளாமன்ற அங்கத்தவராகுவது கதையின் சுருக்கம்.

முத்துமுகம்மது என்ற கதாநாயகனுக்கு மிகவும் சவாலான, கொடுமையான, வில்லானாகச் சப்புச்சுல்தான். மாமி மகள், மைமுனா முத்துமுகமதின் காதலி. இந்த மூவரையும் பிரதானமான பாத்திரங்களாக கதை பின்னப்படுகிறது. ஒருவிதத்தில் சினிமாக்கதை போன்று முடிகிறது.

இப்படியான ஒரு எளிமையான கதை நல்ல நாவலாகியதற்கான காரணமென்ன?

கொல்வதெழுதல் 90 பெயருக்கு ஏற்ற மாதிரியே கிழக்கு மாகாணம் கொலைக்களமாக இருந்த காலத்தில் நடந்த கதை. இங்கு அரசியல் அல்லது வரலாற்றின் ஒரு துளி நாவலாக்கப்படுகிறது. நாவல்,சமூகத்தில் வாழும் சாதாரணமான மனிதர்களைத் தழுவியபடி செல்கிறது. பள்ளிமுனை என்ற முஸ்லீம் கிராமம் நாவலின் பகைப்புலமாக படைக்கப்படிட்டிருகிறது.

ஒரு இலக்கிய நாவலுக்கு ஏற்றதாகப் பாத்திரங்கள் கதையை நகர்த்துகிறார்கள்.பாத்திரங்களின் குணாதிசயம் , ஆசாபாசங்கள் மற்றும் தேவைகள் நாவலின் உந்து சக்தியாக இருக்கிறது. நாவலாசிரியர் படைப்பாளருக்கு உரிய சுதந்திரத்தை கடிவாளமாக எடுத்து கதையை நகர்த்துகிறார்.

இதுவரை இலங்கைத் தமிழ் போர்க்கால நாவல்களில் நாவலாசிரியர் தவிர்ந்தவர்கள், அதாவது விடுதலை புலித்தலைத் தலைவரோ இல்லை அவரது புலனாய்வுத்துறைப் பொறுப்பாளரோ, இலங்கை அரசாங்கத்தின் ஜனாதிபதியோ, இராணுவமோ கதையை நகர்த்துவதால் நாவல்களில், நாவல் எழுதியவருக்குச் வேலை குறைவு.

கதாபாத்திரங்களை வளர்த்தெடுப்பதில் நௌஸாத்தின் படைப்பாளுமை தெரிகிறது.

வரலாற்று நாவல் என்பது வரலாற்றைச் சொல்வதல்ல. வரலாற்றை சொல்வது வரலாற்றாசியர்கள் மற்றும் இதழாளர்களது வேலை. நாவலாசிரியன் வரலாற்றுச் சம்பவங்களின் மீது அதற்கு சமாந்தரமாக கற்பனையில் கதை சொல்லுவதே அவனது தொழில். இதற்கு ஆங்கில நாவலாசிரியர் சேர் வால்டர் ஸ்கொட் (Sir Walter Scot) ஸ்கொட்லாந்து கிளர்ச்சியை வைத்து எழுதிய வேவலி(Waverley) என்ற நாவலே முன்னுதாரணம். இந்த நாவலே பிற்காலத்தில் போரையும் அமைதியையும் (War and peace) எழுத டால்டாய்கு உந்துசக்தியாக இருந்தது எனச்சொல்லப்படுகிறது.

கொல்வதெழுதல் 90 கற்பனையான பாத்திரத்தை வரலாற்றில் ஏறி நடைபோட வைத்திருக்கிறது. நாவலின் உச்சக்கட்டமாக எனக்குப் பிடித்தது மைமுனா சப்பைச் சுல்தானால் லொட்ஜ்ல் வைத்து கெடுக்கப்பட்டதை ஒலி நாடாவால் அனுப்புவதும், தனக்கு நடந்ததை விபரமாக அதேவேளையில் விவரணத்தைத் தவிர்த்து சொல்லும் வேளையில் தன் மச்சானிடம் எதுவித பழி வாங்கலிலும் ஈடுபடவேண்டாமென கெஞ்சுவது நாவலை மேன்மையாகிறது.

ஒலி நாடாவைப் பெற்ற முத்துமுகம்மதுவின் தாய் இறக்கும்வரையில் மகனுக்கு அந்த ஒலிநாடாவைக் காட்டாது இருப்பது தாய் மகனைப் பாதுகாக்க விரும்பியதைக் காட்டுகிறது. இதை ஆசிரியர் நேரடியாகச் சொல்லாது விடுவது என்பது பொருள் மயக்கம் (Ambiguity).அது அழகிய கண்ணியாக நாவலுக்கு தெரிகிறது.

அக்காலத்தில் முஸ்லீம்கள், இந்திய இராணுவம், விடுதலைப்புலிகள் என்போரால் தாக்கப்பட்டபோது இலகுவாக ஒரு தமிழ் சமூக எதிர்ப்பு நாவலாக எழுதி இருக்க முடியும். எதுவித வெறுப்போ அல்லது பழிவாங்கல் போன்ற விடயங்களை எழுதாமல், தனிமனிதரது பாதிப்புகள், ஆசைகள், பதவிப்போட்டிகள் என்பதைக் கொண்டு நாவலை வளர்த்திருப்பது என்னால் பார்க்க முடிந்தது.

முத்துமுகம்மதுவின் காதலி மைமுனாவை, லொட்ஜ்ல் வைத்துவிட்டு முத்துமுகம்மதையும், தம்பி யாசினையும், கொழும்பில் வேறு இடத்தில் கொண்டு வந்து விட்டு சப்புச்சுல்தான் தப்பிவிடுகிறான். அப்பொழுது முத்துமுகம்மது தனது காதலியை அவன் என்ன செய்வான் எனக் கலங்குவதும் காதலிக்கு எதுவும் நேராது இருக்கவேண்டும் அவலப்படுவதும், அங்கலாய்ப்பதும் மிகவும் பிடித்த பகுதிகள்.

அரபிய சொற்களை கலந்து எழுதுவதால் பல இஸ்லாமியர்கள் எழுதிய படைப்புகளைப் படிப்பதற்கு கஸ்டப்படும் எனக்கு நௌஸாத்தின் மொழி தொடர்ந்து படிப்பதற்கு இலகுவாக இருந்தது.

கதை நகர்ந்த விதம் புத்தகத்தை வைப்பதற்கு மனமற்ற நிலையை உருவாக்கியது என்பதும் படைப்பின் வெற்றி.

இதுவரையும் ஒரு வாசகனாக எனது வாசிப்பனுபவத்தை வைத்துவிட்டேன். ஆனால் ஒரு விமர்சகராக நான் சொல்ல விரும்புவது இங்கு முக்கியமாகிறது.

நாவலில் உச்சக்கட்டமாக மூன்று சம்பவங்கள் வருகின்றன. முதலாவது கொழும்பில் முத்துமுகம்மது தனித்து விடப்பட்டு பதறி அலையும் தருணம். இரண்டாவது ஒலி நாடாவைக் கேட்டுவிட்டு சப்புச் சுல்தானை கொலை செய்ய நினைத்து அவனது வீடு செல்வதும் – அங்கு பார்த்த விடயங்கள். மூன்றாவது தலைவரை குண்டெறிந்து கொலை செய்ய முயற்சி செய்தபோது அதைத் தடுத்து மூன்று விரலை இழத்தல் என்பனவாகும்.

இந்த மூன்று சம்பவத்தில் கொழும்பில் முத்துமுகம்மது அலைய விடுவது சப்புச் சுல்தானின் திட்டமிட்ட செயல். அதற்கான அவனது குணநலன்கள், முன்காரணங்கள் நாவலில் தெளிவாக விவரிக்கப்படுகிறது. அதேபோல் சப்புசுல்தானை கொலை செய்ய நினைப்பதற்கும் தேவையான காரணங்கள் உள்ளது .சப்புச் சுல்தானை விடுதலைப்புலிகள் கொலை செய்தது மற்றும் கொலை நடந்த விவரணம் நம்பும்படி யிருக்கிறது. மூன்றாவது சம்பவம்- தலைவர் மேல் குண்டுடெறிந்தது. அது விடுதலைப்புலிகள் செய்ததோ அல்லது மற்றவர்கள் செய்ததா என்பது விவாதமில்லை. ஆனால் அந்த குண்டெறிதலில் விரலை இழப்பதும், தலைவரைக் காப்பதும் தற்செயலான சம்பவமாக உருவாகிறது. அதாவது ஆண்டவனோ அல்லது விதி மற்றும் கர்மம் போன்ற சொற்கள் இங்கு பொருந்தும்.

நாவலாசிரியன் நாவலைப் படைக்கும்போது அவனது சம்பவங்கள் தற்செயலாக நடந்தால் அது அவனது கற்பனையின் பலத்தைக் குறைத்துவிடுகிறது. ஒவ்வொரு விடயத்திற்கும் காரணத்தை காட்டவேண்டும். தலைவரை கொல்லதற்கான ஏதாவது காரணம் அல்லது எதிரிகளது சதித்திட்டம் வாசகர்களுக்குத் தெரியப்படுத்தவேண்டும். இதைத்தான் பிரபல திரைப்பட டைரக்ர்(Hitchcock) ஒருவன் துப்பாக்கியால் சுடப்படும்போது அந்தத் துப்பாக்கி எப்போதாவது பார்ப்பவர்களுக்கு காட்டப்படவேண்டும் என்கிறார். கதைக்கு இது ஒரு முன்னறிவிப்பாகும்(foreshadowing) செயலாகும்

எதிர்பாராது குண்டுகள் இக்காலத்தில் வெடிப்பதும், சாதாணமானவர்கள் இறப்பது வழக்கம். ஆனால் அதை இலக்கியத்தில் கொண்டு வரமுடியாது. நமது வாழ்வின் சம்பவங்கள் ஒழுங்கற்றவை.கட்டுப்படுத்த முடியாதவை. ஆனால் இலக்கியம், சினிமாவில் அதை ஒழுங்காக்கிறோம் இதை (Create Order from Chaos) என்பார்கள்.

மேற்கூறிய இந்த ஒரு விடயம் மட்டுமே என்னை நெருடியது.

கிழக்குமாகாணத்தில் போரைப்பற்றி விமல் குழந்தைவேல் எழுதிய கசகரணம்போல் நாம் கொண்டாட வேண்டிய நாவல் கொல்வதெழுதல் 90.

காலச்சுவடு வெளியீடு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: