
நத்தார் விடுமுறை ஆரம்பித்து விட்டது. சந்திரனுக்கு ஓய்வாக இருந்தது. வேலை எதுவும் செய்யவில்லை. பெப்ரவரி மாதம் மெல்பேனில் வேலைக்கு போக வேண்டும். மார்கழி இறுதி வரையும் கொலசிப் காசு கிடைக்கும். மெல்பேணில் முதல் சம்பளம் எடுக்கும்வரை சேமிப்பில் குடும்பம் நடத்த வேண்டும். சோபா பெற்றோருடன் வெளியே போயிருந்தாள். சந்திரன் மட்டும் தனியே இருந்தான். கார் சாவியோட சேர்ந்திருந்த ஜுலியாவின் வீட்டு சாவி இவனை நெருடிக் கொண்டிருந்தது.
“இந்த திறப்பை கடிதத்தோடு அனுப்புவது தான் நல்லது. மெல்பேனுக்கு இடம் மாறுவதையும் கூறிவிடவேண்டும். துரோகம் நிறைந்த பிரிவு என்றாலும் இரண்டு வருடம் நட்பு என்பதால் கடிதம் எழுத வேண்டும் “.
“இத்துடன் ஜுலியாவுக்கு உனது வீட்டுச் சாவியை அனுப்புகிறேன். உன்னை நேரில் பார்த்து தர மனம் இடம் தரவில்லை. நடந்தவற்றை இரை மீட்கவும் விருப்பம் இல்லை. ஜனவரி இறுதியில் மெல்பேண் செல்கிறேன். என்றாவது உன்னை சந்தித்தால்” ஏன் இப்படி ஜுலியா?” என்று மட்டும் கேட்க நினைக்கிறேன்.” எழுதிய கடிதத்தை திரும்பவும் பார்த்தான். திருப்தி இல்லை. மொட்டையாக, முழுமை இல்லாமல் இருந்தது. இரண்டு வருட காலத்தில் அவளால் ஏற்பட்ட சந்தோசம் பின்பு ஏற்படுத்திய துரோகமும் மாறிமாறி தராசு போல் ஏறி இறங்குவது போல இருந்தது. “நான் ஜுலியாவிடம் கோபப்பட எதுவும் இல்லை. அவள் பக்க நியாயங்கள் நான் கேட்கவில்லை. அவள் சொல்வதற்கு சந்தர்ப்பம் கொடுக்கவில்லை. அவள் எனக்கு இரு தடவை தொலைபேசி எடுத்தாளே.” கடைசியில் ஜுலியாவின் வீடு சென்றுவர முடிவு செய்தான்
ஜுலியா வீட்டுக்கு போய்விட்டு வந்தவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இராசநாயகம் சுமனை தூக்கியபடி நின்று கொண்டிருந்தார். “தம்பி, சோபா தன் மருந்துகளை அதிகம் குடித்து விட்டாள். அரைமணி நேரத்துக்கு முன் அம்புலன்ஸ் வந்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயிருக்கு.” “எந்த ஆஸ்பத்திரி மாமா? “வெஸ்மீட் ” அப்படியே காரில் ஏறி வெஸ்மிட் சென்றவனுக்கு எதுவும் புரியவில்லை. “ஏன் சோபா தற்கொலை செய்ய முயற்சித்தாள். மனநோய் காரணமா எவ்வளவோ குணமாகி வந்திருந்தாளே. லட்சுமி ஏதாவது சொல்லி இருப்பாளா நான்தான் மூன்று மாதமாக ஜீலியாவிடம் போகவில்லையே.” கேள்விகளுடன் அவசர சிகிட்சை வாட்டுக்கு சென்றான். வெளியே நின்ற இராசம்மா சந்திரனை கண்டதும் “தம்பி இப்படி செய்து விட்டாளே? ஏன் எதற்கு என்று கூட சொல்லவில்லை. கறுப்பு போத்தலில் இருந்த குளிசைகளை எடுத்து வாய்க்குள் போடும்போது எனக்கு சந்தேகம் வரவில்லை பின்பு போத்தலை கையில் கவிட்டு கொட்டியபோது தான் சந்தேகம் வந்தது.” என்ன செய்கிறாய்?” என்றதும் சாகப்போகிறேன் என்றாள் நான் கையால் தட்டியபோது போத்தில் தான் கீழே விழுந்தது. முழு குளிசையும் வாய்க்குள் போட்டு விட்டாள். ஆம்புலன்ஸ்சுக்கு போன் பண்ணிவிட்டேன். அவளோடு ஆம்புலன்சில் வந்து சேர்ந்தேன்.” நடந்த விடயத்தை கேட்டு திகைத்து போன சந்திரனிடம் வெண்ணிற உடையணிந்த நர்ஸ் “ஒரு பிரச்சனையும் இல்லை சோபா சந்திரன் ஓகே “ என்றாள்.
“உள்ளே போகலாமா? “ என்றான் சந்திரன்.”
“இல்லை மயக்கமாக இருக்கிறாள்”.
அடுத்த நாள் ஆஸ்பத்திரியில் இருந்து சந்திரன் காரில் கூட்டி வந்தான். எதுவும் பேசவில்லை. வெளியே பார்த்தபடி காரில் இருந்தாள். சந்திரனுக்கு எதுவும் கேட்க துணிவில்லை. பொலிசார் வந்து விசாரித்தனர் “பைபோலர்” நோய்க்கான மருந்துகளில் இருந்ததால் பொலிஸ் விசாரணை இலேசாக இருந்தது. இரண்டு நாட்கள் கடந்து விட்டது.
இராசரத்தினத்தாரும் இராசம்மாவும், சுமனும் சிட்னி முருகன் கோயிலுக்கு பிரார்த்தனை செய்யப் போய்விட்டனர். சந்திரன் மட்டும் ஹோலில் பத்திரிகை படித்துக் கொண்டு இருந்தான்.
“சந்திரன் இந்தக் கடிதம் நீங்கள் எழுதியதுதானே?” என்றபடி ஒரு காகிதத்தை நீட்டினாள்.
சந்திரனுக்கு தலையில் ஒரு வெடிகுண்டு ஒன்று விழுந்தது போல் இருந்தது. ஜுலியாவுக்கு எழுதி விட்டு அரைவாசியில் எறிந்த கடிதம் அது. சந்திரன் பொய் சொல்ல தயாரில்லை. இந்தக் கடிதத்தை படித்துவிட்டே தற்கொலை முயற்சி செய்திருக்கிறாள். இனி மேல் உண்மையைக் கூற வேண்டியதுதான்’.
“ஆம், நான் எழுதிய கடிதம் தான்”
“யார் இந்த ஜுலியா?
“ கோல்கோஸ்ட்டில் இருந்து இரண்டு நாட்கள் முன்பு நடந்ததுவரை அப்படியே கூறினான்.
“இதில் ஏதாவது பொய் இருக்கிறதா? “ என சந்திரனின் தலைமயிரைப் பிடித்தாள்.
“சுமனின் மேல் சத்தியம் செய்கிறேன்”
“இப்போது என்ன செய்வதாக உத்தேசம்.? “
“நான் எல்லாவற்றையும் மறந்துவிட்டேன். என்னை மன்னித்துவிடு” என்றான்.
சந்திரன் உங்களை மன்னிக்கும் தாராளமான மனநிலை எனக்கு இல்லை. இதே போல் இந்த விடயத்தை அப்பா அம்மாவுக்கு சொல்லி அவர்களை கவலைப்படுத்தவும் எனக்கு விருப்பமில்லை. தயவுசெய்து இப்போதே மெல்பேணுக்கு போங்கள். உங்களுக்கு வீடு தங்க தேவைதானே. நீங்கள் இங்கே இல்லாமல் இருந்தால் எனக்கு மனம் ஆறுதல் எற்படலாம். தயவு செய்து இன்றைக்கே போய்விடுங்கள்.”
அவள் குரலில் இருந்த அதிகார தோரணை சந்திரனுக்கு வியப்பாக இருந்தது.
“இந்த நிலையில் உன்னை விட்டுவிட்டு . . “.என இழுத்தான்.
“நான் எக்காலத்திலும் பார்க்க மன உறுதியாக இருக்கிறேன். நான் இனி மேல் சாக முயற்சிக்க மாட்டேன். உங்களை நம்பி சுமனை எப்படி விடுவது?. நான் இந்த விடயத்தில் மிகவும் உறுதியாக இருக்கிறேன்.” ஒரு வேலைகாரனைத் துரத்தும் தன்மை அவளது குரலில் தெரிந்தது.
சந்திரன் எந்த விதமான விவாதத்திலும், ஈடுபடக்கூடிய மனநிலையில் இல்லை.
“நீ மெல்பேன் வருவாய்தானே.?
“எனக்கு தற்போது மன ஆறுதல் ஏற்பட சில காலம் தேவை.”
சந்திரன் எழுந்து மெல்பேனுக்கு செல்லும் பஸ் கொம்பனியின் தொலைபேசி இலக்கத்தை தேடினான்.
சந்திரனை சுமந்தபடி அந்த இரட்டைத் தட்டு பஸ் அதிகாலையில விக்ரோரிய மாநில எல்லையைத் தொட்டது.
சுற்றியுள்ள பசும் புல்தரையில் மேயும் பால் மாடுகள் ஜுலியாவின் நினைவை தட்டி எழுப்பியது. இறுதியாக அவளது வீட்டில் நடந்தவை குறும் திரைப்படம் போல் ஓடீயது. சந்திரன் மனதில் அவளை சந்தித்து பேசினால் மட்டுமே இருவருக்கும் நல்லது என நினைத்து எழுதிய கடிதத்தை வீசிவிட்டு தொலைபேசியில் அவளது இலக்கத்தை அழுத்தினான்.
“ஜுலியா பேசுகிறேன்.” மறுமுனையில் அவள் குரல் ஒலித்தது.
“சந்திரன்”
“எப்படி சுகம் சந்திரன்”
“நான் நன்றாக இருக்கிறேன். நான் வந்தால் சந்திக்க முடியுமா? “
“எப்பவும் வரலாம் .”
“ஒரு மணி நேரத்தில் வருகிறேன்.”
“நான் தனியத்தான் இருக்கிறேன்.”
சந்திரன் காரை எடுத்துக்கொண்டு வேகமாக ஓட்டினான். வீட்டில் எவரும் இல்லை. சோபாவும் வெளியில் இருந்து வர சிலமணி நேரம் செல்லலாம். அதற்குள்ளே நான் வந்துவிடலாம். மார்கழி மாதத்து வெயில் கடுமையாக இருந்தது. காரின் எயர்கண்டிசனை போட்டுக் கொண்டான்.
“இவளிடம் என்ன பேசுவது? ஏன் இப்படி செய்தாய்? உனக்கு என்னை தேவையில்லை என்றால் நாகரிகமாக செல்லி இருக்கலாம் தானே. உன்னை எவ்வளவு உயர்வாக எண்ணிக் கொண்டிருந்தேன்.” இந்த நினைவுகள் எழுந்ததும் சந்திரனின் கண்கள் பனித்தன..
வாசலில் வந்து கதவை தட்டினான். வாசலை திறந்தவள்
“வாங்க “ என்று உள்ளே அழைத்தாள்.
எதுவும் சொல்லாமல் அவளைப் பின்தொடர்ந்தான். ஹோலை அடைந்தவன் கதிரையில் இருக்காமல் நின்றான்.
“தயவு செய்து உட்காரவும் “ எதுவும் பேசாமல் அந்த கூடத்து புகைக் கண்ணாடிக் கதவைப் பார்த்தான்.
“குடிக்க ஏதாவது வேண்டுமா? “ குரலில் வாஞ்சை குழைத்து ஜ+லியா கேட்டாள்..
“இல்லை. எனக்கு மெல்பேணில் வேலை கிடைத்திருக்கிறது.” என்று சந்திரன் அவளிடம் கூறவந்த விடயத்தை உடனடியாக தொட்டான்.
“எவ்வளவு நல்ல விடயம் “ என கூறியபடி அருகே வந்து கன்னத்தில் முத்தமிட்டாள். சந்திரன் அதற்கு எந்தவிதமான உணர்வுபூர்வமான பிரதிபலிப்பையும் காட்டவில்லை..
“ஜீலியா இந்த திறப்பை தரத்தான் வந்தனான். எனக்கு இனிமேல் தேவைப்படாது” என கூறிக்கொண்டு பொக்கட்டில் இருந்த திறப்பை எடுத்துக் கொடுத்தான்.
தேவையும் தேவையீனமும் தன்னால் மட்டுமே தீர்மானிக்கப்படுகின்றது என்பது போன்ற ஆணாதிக்க மேலாண்மை அவன் குரலிலே ஒலித்ததை ஜுலியா அவதானித்தாள்.
திறப்பைக் கையில் வாங்கியபடி “நான் மனம் வருந்துகிறேன் “ என்றாள்.
“எதற்காக” என்றான் குத்தலாக. சந்திரனது குரலிலும் கண்களிலும் ஏளனம் ததும்பியது.
“அன்றிரவு நடந்ததற்காக”
“இனி அதைப்பற்றி பேசி என்ன பிரயோசனம்.? “
“சந்திரன் எப்பொழுதுமே ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் உண்டு. எனது விளக்கத்தை நீ ஏற்க வேண்டும் என்று நான் வற்புறுத்த வில்லை. குறைந்த பட்சம் செவி கொடுத்து கேள். உனக்கு சொல்லிவிட்டேன் என்ற திருப்தி ஏற்படும். எங்களது இரண்டு வருடகால நட்புக்கு மதிப்பு கொடுத்து இதை நீ கேட்க வேண்டும். நான் பழகிய எவரிலும் பார்க்க உன்னை நான் விரும்புகிறேன். தயவு செய்து கேள்” மன்றாடும் குரலில் ஜுலியா ஒவ்வொரு வாக்கியமாக உச்சரித்தாள்.. அவளது கண்ணீர் விழிகள் அவள் உணர்ச்சி வசப்படுகிறாள் என்பதைக் காட்டின. அவள் முகத்தில் வேதனை அலைமோதுவதைச் சந்திரன் உணர்ந்தான்.
அவனுடைய கண்களிலும் கண்ணீர் உடைப்பு எடுத்துவிடும் போல் முட்டியது. “சரி நான் கேட்கிறேன்.” என கூறிவிட்டு சந்திரன் சோபாவில் உட்கார்ந்தான். ஜுலியாவும் பக்கத்தில் வந்து அமர்ந்தாள். இருவருக்கும் இடையில் வழக்கத்துக்கு மாறாக ஓர் இடைவெளி இருந்தது.
“சந்திரன், எனது ஓவியக் கண்காட்சியில் முதல் நாள் இரவு நாம் சந்தித்தபோது அன்று என்னுடன் சார்ள்ஸ் இருந்தான் உனக்கு தெரியும் தானே. எனது ஓவியக் கண்காட்சி முடிந்தபின், சிலநாள்களில் நான் அவனுக்கு நன்றி செலுத்துவதற்காக ஒரு விருந்துக்கு அழைத்திருந்தேன். அந்த விருந்தில் உன்னோடு எனக்கிருந்த உறவைப் பற்றி பேச்சு வந்தது. சார்ல்ஸ் ஏற்கனவே ஊகித்து இருந்தாலும் இதற்கு முன் இந்த விடயம் பற்றி பேசவில்லை. அன்று அந்த விருந்தில் இந்த உறவு ஏற்புடையது இல்லை. இந்த தொடர்பு தெரிய வந்தால் உனது குடும்ப வாழ்க்கை பாதிக்கப்படும் என சார்ள்ஸ் வாதிட்டான். உனது மனைவியின் நிலையை பற்றி தெரிந்து கொண்டதும் நான் ஒரு இளம் குடும்பத்தை பிரிப்பதாக என்னைக் குற்றம் சாட்டினார். அவரது வாதத்தில் உள்ள உண்மையை நான் உணர்ந்து கொண்ட போதும் இது பற்றி மேலும் பேச வேண்டாம் என்று அன்று கூறிவிட்டேன். இதன்பின் சார்ள்சுடன் பல வாரங்கள் நான் முகம் கொடுத்து பேசவில்லை. இக்காலத்தில் நீ ஆய்வுக்கட்டுரை எழுதவேண்டும் எனகூறி மூன்று மாதங்களுக்கு மேல் சந்திக்காமல் இருந்தாய். இந்தக் இடைவெளியின் போது என்னால் எமது உறவுகளில் உள்ள தீமைகளை பற்றி சிந்திக்க முடிந்தது. விளைவுகள் உன்னை மட்டும் அல்ல, உன் இளம் குடும்பத்தையும் பாதிக்கும். உனக்கும் எனக்கும் உள்ள பதினைந்து வயது வித்தியாசம் என்பவற்றை என்னால் உணரமுடிந்தது. எமக்கு இடையில் உள்ள உறவு வெளியே தெரியாமல் இருந்தாலும் முடிவுக்கு கொண்டுவருதலே உன்மீது நான் கொண்டுள்ள அன்புக்கு மரியாதை செலுத்தவதாக இருக்கும் என நான் நினைத்தேன். இந்தகாலத்தில் சார்ஸ்சோடு எனக்கு எந்த உறவும் இருக்கவில்லை. பலமுறை சாப்பிடுவதற்கு அழைத்தான். தட்டிக் கழித்து விட்டேன். இந்த கால கட்டத்தில் ஏற்கனவே உடல் நலமற்று இருந்த அவன் மனைவி இறந்து விட்டாள். சார்ஸ்ஸை அடிக்கடி பார்த்து ஆறுதல் கூற வேண்டிய நிலையில் நான் இருந்தேன். சிறந்த ஓவியனும் நண்பனுமாகிய அவன் மனைவியின் இறப்பால் மனமுடைந்து போக நான அனுமதிக்க முடியவில்லை.
அவனுககு ஆறுதலாக நான் தினமும் அவனது வீடடுக்கு செல்லும்போது சார்ஸின் என்னுடன் நெருங்கி வந்தான். எனக்கு மிகவும் கஸ்டமாக இருந்தது. இதைப் பற்றி உனக்கு எடுத்து சொல்ல அன்று உன்னை வரச் சொன்னேன். நீ வரமுடியாது என கூறினாய். அன்று மாலை சார்ஸ் வந்ததும், நடந்தவையும்; எதிர்பாராத விடயங்கள். இதுதான் நடந்த உண்மை. நம்புவதும் நம்பாததும் உன் விருப்பம்…” உதடுகள் துடித்தன. கண்களில் கண்ணீர் வடிந்ததும் முகத்தைத் தன் கைகளிலே பொத்தியபடியே கேவிக் கேவி அழுதாள் கண்ணீர் அவளுக்கு வடிகாலாக அமையட்டும் என சந்திரன் சிறிது நேரம் காத்திருந்தான்.
“உண்மை கசப்பாக இருக்கிறது. எமது உறவு நல்ல மாதிரி முடிதிருந்தால் மனதில் அமைதியடைந்திருப்பேன் “.
“என்னை மன்னித்துவிடு சந்திரன்” என அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.
“ இதிலே என்ன மன்னிக்க இருக்கு?. நீ எவ்வளவு கண்ணியமாக நடந்திருக்கிறாய். நான்தான் மிகவும் சுயநலமாக நடந்திருக்கிறேன். குரோத மனப்பான்மையுடன் பல முறை வெறுத்திருக்கிறேன். ஏன் உன்னைக் கொலை செய்வதாக கனவு கூட கண்டேன்.” உண்மையின் சந்நிதானத்தில் சந்திரன் உடைந்தான்.
“உனது கண்ணியம் எனக்கு தெரியும். எந்த கெட்ட விடயத்தையும் உன்னால் செய்ய முடியாது.” என்றாள் உறுதியான குரலில் இருவர் மனதிலும் வெறுப்புகள், வக்கிரங்கள் வெளியேறி இறுக்கம் குறைந்து மனங்கள் இலேசாகுவதையும் சுற்றுப்புறத்திலும் மாற்றம் தெரிந்தன. சந்திரனது கண்களில் ஜுலியாவின் கனவு உலக ஓவியங்கள் தெரிநதன. அந்த ஹோல் ஒரு சித்திரகூடமாகவே அவன் மனதில் பதிவாகியது.
“ஜுலியா சார்ள்சின் இந்த தொடர்பு நிரந்தரமானதுதானா?”“ கேட்கக் கூடாத கேள்வியைக் கேட்டுவிட்டதான குற்ற உணர்வில் நாக்கைக் கடித்தான்.
அதனை சகஜமாக எடுத்துக்கொண்ட ஜுலியா மந்தகாசமாகச் சிரித்தாள். “புறவைகள் விதைப்பதுவுமில்லை. அறுப்பதுமில்லை என்று நல்லாயன் கூறிய உவமை நினைவுக்கு வருகிறது” என்று சொல்லி மார்பு குலுங்க சிரித்தாள்.
அந்தச் சிரிப்பு ஜுலியாவுக்கு எப்போதும் கவர்ச்சியை அப்பும். பால்மாடுகளும் செம்மறியாடுகளும் வளர்ந்த பண்ணையிலே பிறந்து வளர்ந்து கன்னிப்பருவம் காணாத வயதிலே வாழ்க்கையைத் தொலைத்தும், நம்பிக்கையுடன் வாழ அந்த நற்செய்தி உதவுகிறதா என ஒரு கணம் சந்திரன் வியந்தான்.
சிரிப்பை நிறுத்தி “எனக்கு எந்த தொடர்பு நிரந்தரமாக இருந்தது?. உனக்கு தெரியும்தானே. சார்ஸ் எனக்கு பலகாலமான நண்பர். மென்மையான குணம். சமீபகாலத்தில் மனைவியை இழந்தவர் எந்த பிடிப்புகளும் அற்ற ஒரு புத்திஜீவி.அதற்கான ஒரு துணை”
“உனக்கு எனது வாழ்த்துக்கள் மெல்பேணில் கிடைத்த வேலையை பற்றி கூறவும் திறப்பையும் தருவதற்குமாக மிகவும் பாரமான மனதுடன் வந்தேன். அந்தப் பாரம் இறங்கி விட்டது. உன்னை என்னால் எப்போதும் மறக்க முடியாது. உன்னை என் நல்ல நண்பியாக எப்பொழுதும் நினைவில் வைத்திருப்பேன் அவகாசம் கிடைக்கும்பொழுது தொடர்பு கொள்வேன். உனக்கு ஆட்சேபனை இல்லைதானே” என கூறி எழுந்தான்.
எழுந்தவனிடம் “சந்திரன், சந்திரன் என்னைக் கட்டியணைத்து நட்பினை உறுதி செய்து விட்டுப்போ” என சிறுபிள்ளை போல் அவனைத் தழுவினாள். அந்த அணைப்பிலே சிநேகிதத்துக்கு ஓர் அழுத்தமான அர்த்தத்தை இருவரும் கற்பித்தனர்..
முடிவுற்றது
மறுமொழியொன்றை இடுங்கள்