அந்தீஸ் மலைமேல் இரயிலில் பிரயாணம் செய்த புனா நகரத்திற்குவர இரவாகி விட்டது. வாகனத்தில் வந்து ஹோட்டேலுக்குள் சென்றுவிட்டோம் குறைந்த பிராணவாயுவை சுவாசித்தபடி செய்த பிரயாணத்தால் ஏற்பட்ட களைப்பில் படுத்துவிட்டோம்.
காலையில் எழுந்து ஹோட்டலின் உணவுக் கூடத்திற்கு வந்தபோது திவ்வியமான கனவுக்காட்சியாக விரிந்தது. எங்களது ஹோட்டேலில் இருந்து நூறு மீட்டரில் இருந்தது தித்திக்கா வாவி. வாவி நீரின் மையப்பகுதி காலை சூரிய ஒளிபட்டுப் பொற்கடலாக மினுங்கியது.. வாவியின் புருவங்கள் புற்கள் வளர்ந்து நீர் மேலாக பச்சை நிறத்தில் இருந்தது. எதிரே கரை தெரியாமல் கண்ணுக் கெட்டியதூரம் தண்ணீராக விரிந்திருந்தது. வாவியின் இடதுபக்கம் மலைக்குன்றுகளாகவும் வலதுபக்கத்தில் கட்டிடங்கள் இருந்தன. எங்களது ஹோட்டேலுக்குக்கும் வாவிக்கும் இடைப்பட்ட புற்றரையில் கரையில் ஏராளமான கினிப்பிக்குகள் மேய்ந்தபடியிருந்தன. நீர்க்கரையில் கொக்குகளும் சில ஐபிஸ் பறவைகளும் பொறுமை காத்தன. அதன் பின்னணியில் சிறிய இறங்குதுறை அருகே வாவியில் பல வள்ளங்கள் கட்டப்பட்டு தெரிந்தது.
தித்திக்கா வாவிதான் தென்னமரிக்க மக்களின் வரலாற்றின் தொடக்கப்புள்ளி. அந்தீஸ் மலைமேல் இருந்து உருகிய பனிக்கட்டிகளால் உருவாகியது இந்த வாவி. உலகத்தின் பிரதான நாகரீகங்கள் ஆற்றுக்கரைகளில் உருவாகியதுபோல் தென்னமரிக்கர்களின் வரலாற்று இங்கு இந்த வாவிக்கரையில் உருவாகியிருக்கிறது. இங்கிருந்து மக்கள் தோன்றியதாக ஐதிகக் கதைகள் உள்ளது. இன்கா நான்கு சகோதரர்களும் சகோதரிகளும் இங்கிருந்து உருவாகியதாகச் சொல்கிறார்கள்.இன்காபோல் ஒரு நாகரீகம் மட்டுமல்ல சிறிதும் பெரிதுமாகப் பல மனித நாகரிகங்கள் வித்தியாசமான மொழி பேசியவைகளின் கருப்பையாக தித்திக்கா வாவி உள்ளது.
விஞ்ஞானத்தில் நாம் புரிந்துகொள்ள விரும்பினால் ஆரம்பத்தில் மீனையும் அவற்றை நாடிவரும் பறவைகளிலும் மற்றைய காட்டு மிருகங்களிலும் உணவிற்குத் தங்கியிருந்த மக்கள் ஏற்கனவே காட்டுப் பயிராக மலையடிவாரங்களில் விளைந்திருந்த இருந்த சோளம், உருளைக்கிழங்கை என்பவற்றைப் பயிரிட்டு ஆரம்ப விவசாயம் தொடங்கியுள்ளார்கள்.மலைச்சாரலில் படிமுறைகளை அமைத்து வாவியின் நீரைப் பாவித்து நீர்ப்பாசனமும் செய்திருக்கிறார்கள். இங்குள்ள புற்களில் படகுகளை செய்து போக்குவரத்து செய்திருக்கிறார்கள். மக்கள் தொகை கூடும்போது மற்றைய இடங்களுக்குக் கூட்டமாகப் பரவியிருக்கிறார்கள்.
அக்கால மனிதர்களின் வரலாற்றில் ஒரு பகுதியை நினைத்துப் பார்க்க பார்க்க முடிந்தது என்று எண்ணியபடி அந்த உணவுக்கூடத்தின் கதிரையில் உறைந்திருந்தேன்.
இந்த வாவியைச்சுற்றி தற்பொழுது ஏராளமானவர்கள் வாழ்கிறார்கள். தற்பொழுது வாவி அசுத்தமாகிவிட்டது என்கிறார்கள்
இப்படித்தான் நீங்கள் ஹொலிடே வந்தால் பேசாமல் விட்டுவிடுவேங்க. நான் இனி உங்களுடன் வரமாட்டேன் ‘ என்ற மனைவியின் குரல் சுயநிலைக்கு கொண்டுவந்தது.
அப்பொழுது அங்குள்ள கினிப்பிக்குகளை பார்க்க நான் எழும்பியபோது தன்னை இந்த இடத்தில் வைத்து படம் பிடிககும்படி கேட்டார்
உணவுக்கூடத்திற்கு வெளியே கமராவுடன் சென்றேன். மெதுவான குளிர்காற்று முகத்தில் அடித்தது.
உயிரியல் விஞ்ஞானம் படித்தபோது ஒவ்வொரு மருந்துகளைப் பரிசோதிப்பது கினிபிக்கே பாவிக்கப்படும். அநியாயமாக ஒருவரைப் பாவித்து உங்களது கொள்கைகளையோ, தேவைகளுக்குப் பரிசோதிப்பதும், பலிகொடுப்பதும் கினிப்பிக்காக பாவிக்கும் படிமமாக மாறிவிட்டது. நமது நாடுகளில் அரசியல்வாதிகள் ஒரு விதத்தில் விஞ்ஞானிகளே.ஸ்டாலின் மாவோ ஹட்லர் எல்லாம் தங்களது கொள்கைகளைப் பரிசோதிக்க சாதாரண மக்களை கினிப்பிக்காக பாவிக்கிறார்கள் என்பது என்மனத்தில் வந்துபோனது. கினிப்பிக்குகளை
அவுஸ்திரேலியாவில் கினிப்பிக்குகளை நான் வளர்ப்புப் பிராணியாக பார்த்தேன். தென்னமரிக்காவில் இறைச்சிக்குப் பயன்படுத்துகிறார்கள்
எங்களது வழிகாட்டி வந்தார். இம்முறை வயதாகியாரானாலும் திடகாத்திரமானவர். இந்தளவு உயரத்தில் உயிர்வாழ்வதே சவாலாகும். நான் பார்த்த படகுத்துறைகக்கு சென்று அங்குள்ள படகில் ஏறினோம் அந்தப் படகு மோட்டார் பொருத்திய மரப்படகு. அவருடன் எங்கள் பயணம் வள்ளத்தில் தொடங்கியது.. எமது வள்ளம் வாவியில் வளர்ந்து இருந்த புல்லுகளைக் கிழித்தபடி சென்றது. அவர்கள் கொண்டு செல்லவிருந்த இடம் மிதக்கும் தீவுகளில் ஒன்று.
போகும் வழியில் பெரிய கப்பல் ஒன்று நின்றது. அதைக்காட்டி ‘இது பிரித்தானிய பணக்காரர் ஒருவர் வாவியின் மத்தியில் சொகுசு ஹோட்டலை உருவாக்கினார் ஆனால் இடையில் நிற்கிறது’ என்றுவிட்டு ‘இந்தப் புல்லில் உருவாக்கியதுதான் நீங்கள் பார்க்கப் போகும் தீவு’ என்றபோது ஆச்சரியமாக இருந்தது புல்லால் தீவு உருவாக்குவது என்பது முடியாத காரியம் என்ற எண்ணமே எனது மனத்தில் இருந்தது.
எங்களது படகு சிறிய குடிசைகள் புற்களால் வேயப்பட்ட இடத்திற்குச் சென்றதும் பலவர்ண உடைகளைஉடுத்தபடி தொப்பியணிந்த ஒரு உரோஸ் குடும்பம் எம்மை வரவேற்றது. அதில் இரண்டு ஆண்கள் நான்கு பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் இருந்தார்கள். மூன்று தலைமுறையினர் அங்கு ஒன்றாக வாழ்கிறார்கள்போல். இவர்கள் முகம் சீனர்களைப்போல் உயரம் குறைந்து இடுங்கிய கண்களுடன் களிம்பு ஏறிய பித்தளைச் செம்பின் நிறத்தில்இருந்தாலும் பரந்த உடலும் பெரிய தலையுடன் விரிந்த தோள்களுடன் பார்பதற்கு திடகாத்திரமானவர்களாக இருந்தார்கள்
அந்தத் தீவில் கால் வைக்க நமது நமது ஊரில் கிணற்றில் ஊறிய தென்னோலையின் மணம் மூக்கையடைந்தது. கால் வைத்தபோது பாதங்கள், கால் சேற்றில் வைப்பதுபோல் புதைந்தது ஆனால் மீண்டும் பாதங்கள் வந்தது. எனது கால்கள் வாவிக்குள் போய்விடுவோமோ என்ற அச்சம் ஆரம்பத்தில் இருந்ததால் மெதுவாகக் கால்களை வைத்து அந்தப் புல்மேல் ஆம்ஸ்ரோங் சந்திரனில் நடந்ததுபோல் நடந்தேன். ஆனால் பின்பு பழகிவிட்டது. எங்களுக்கு புல்லால் செய்த பென்ஞ்சைத் தந்து அதில்இருக்கும்படி உபசரித்தார்கள். எங்களது இருக்கைக்குப் பக்கத்தில் பறவைகள், மீன்கள் ஒரு கூடையில் உயிரற்று கருவாடு என்ற பெயரில் கிடந்தன.
ஊரோஸ் தீவுகள் என்பது திக்ரிக்கா வாவியால் உள்ள மனிதர்களால் புல்லில் செய்யப்பட்ட மிதக்கும் 70க்கு மேற்பட்டதீவுகள். இந்தத் தீவில் வசிப்பவர்கள் ஊரு மக்கள் என்பார்கள். இவர்கள் இன்கா நாகரிகத்திற்கு முன்பானவர்கள். இந்த வாவியில் மிதக்கும் தீவுகளை அமைத்து வாழ்வது பாதுகாப்பிற்காக ஆனால் இன்காக்கள் இவர்களை அடிமைகளாக வைத்திருந்தார்கள். மிதக்கும் தீவுகளாக வாவியில் வாழும் இவர்கள் இங்கேயே உணவுகளைத் தேடிக் கொள்வார்கள் பெரும்பாலும் ஒரு தீவில் உறவினர்களே வசிப்பார்கள். தற்போழுது வாவிக்கரைகளில் இந்தத் தீவுகள் உள்ளன.
நாங்கள் சென்றபோது தங்களது குடிசைகளை மற்றும் வள்ளங்களை எப்படிச் செய்வது என விளக்கினார்கள்.இவர்கள் வள்ளங்கள் இலேசானதல்ல சிலர் இந்தப்புல்லால் செய்த வள்ளங்களில் பசிபிக் சமுத்திரத்தையே கடந்திருக்கிறார்கள்.இந்த வாவியைப் பொறுத்தவரையில் மீனும் அங்கு வரும் பறவைகளும் இவர்களது உணவாகும். இந்தப்புல்லின் பகுதிகள் மருந்தாகப் பாவிக்கிறார்கள். பல நூற்றாண்டுகளாக இவர்கள் தன்னிறைவான, சுதந்திரமான மனிதர்களாக வாழ்ந்திருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட தற்பொழுது ஊரு மக்கள் மொத்த எண்ணிக்கை 1200. இவர்களும் இன்கா மக்கள்போல் சூரியனின் பிள்ளைகளாக தங்கள் ஐதிக கதையை வைத்திருக்கிறார்கள். தங்கள் குளிரை உணர்வதில்லை என்பார்கள். இறந்தவர்களைக் வாவியின கரைகளில் புதைப்பார்கள் தற்பொழுது கரைகளில் வாழும் அய்மாறா மக்களோடு கலந்து அவர்களினது மொழியைப் பேசுகிறார்கள் புனேமற்றும் பொலிவியாவில் வாழ்பவர்கள் அய்மாறாAymara)இனமாகும்
மண்ணறிறமான( Totora) என்ற இந்தப் புல்லு இந்த வாவியில் வளர்கிறது. இவற்றின் நீரின் கீழ் உள்ள வேர்ப் பகுதியில் பனை மரத்து வேர்போல் இறுக்கமாக ஒன்றோடு ஒன்று சேர்ந்திருக்கும். அத்துடன் நீளமானது. அவற்றை அடுக்கி அந்தப்புல்லையே திரித்து உருவாக்கிய கயிற்றால் தெப்பமாகக் கட்டி அதன்மேல் மேலும் புல்லுகளைப் போட்டு மிதக்கும் தீவு உருவாக்கப்படும். பின்பு அந்தத் தீவுகளில் குடிசைகள் அமைப்பார்கள். இந்தத் தீவுகளில் நீரில் உள்ள கீழ்ப்பகுதி அழுகும்போது தொடர்ச்சியாக மேலே புல்லை அடுக்குவார்கள் கிட்டத்தட்ட 30 வருடங்கள் ஒரு தீவு பாவிக்க முடியும் என்றார்கள். அந்தத்தீவுகளின் இடையே இந்தப் புல்லால் உருவாக்கப்பட்ட தோணிகளில் பயணம் செய்வார்கள்.
எங்களது பயணம் இப்படி ஒரு தீவுக்கு இருந்தது அந்தத்தீவு மக்கள் உடைகளை நெய்தல் படம், வரைதல் என்ற கலைகளில் ஈடுபட்டுள்ளார்கள். வறிய மக்களாக இருப்பதால் இவர்களிடம் உல்லாசப்பிராணிகள் போகும்போது பலவற்றை வாங்குதலும் இவர்களது வள்ளங்களில் சவாரி செய்வதற்கு பணமும் கொடுக்கிறார்கள்.
தக்கீலா தீவு Taquile Island) என அழைக்கப்படும் தீவொன்று இந்த வாவியில் உள்ளது ஐந்து கீலோ மீட்டர் நீளமும் ஒன்றரைக் கிலோ மீட்டர் அகலமுமான இந்தத் தீவில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் வசிக்கிறார்கள்.இவர்களது துணிநெசவு திறமை மிகவும் பிரசித்தியானது என்பதால் யுனெஸ்கோவால் இவர்களது நெசவுக்கலையை பாரம்பரிய கலையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது இதில் உள்ள விசேசம் ஆண்கள் மட்டுமே இவர்களில் நெசவு செய்வார்கள்.இவர்களது துணிகளில் ஆண்கள் திருமணமானவர்கள் மனைவியை இளந்எதவர்னகள் எனப் பல வித்தியாசங்களை வர்ணத்திலும் நெசவு முறையிலும் வைத்து நெய்வார்கள். தற்போது இவர்கள் தங்களுக்குள் ஒரு கூட்டுறவு முறையில் விவசாயத்தையும் நெசவையும் செய்வதுடன் மிருக வளரப்பும் செய்கிறார்கள். இந்தத் தீவில் மதிய உணவுக்கு எங்களை அழைத்துச் சென்றார் எமது வழிகாட்டி
அந்தத் தீவில் இறங்குதுறையில் நங்கூரமிட்டு இறங்கியதும் ஆரம்பத்திலே ‘உங்களால் நடக்க முடியுமா?’ எனக்கேட்டார்.
என்ன இப்படிக் கேட்கிறார்? அதுவும் மச்சுபிசு பகுதியை எல்லாம் ஏறிய எம்மைப் பார்த்துஎன மனத்தில் நினைத்தாலும் அவரிடம் சொல்லவில்லை.
‘ஆம் ‘ என்றதும் அந்தத் தீவின் உயரத்தைக்காட்ட ‘அதே அங்குதான் உணவுச்சாலை உள்ளது’.
4100 மீட்டர் (14451அடி) கடலில் இருந்து உயரமானது. பார்த்தபோது உயரமாகத் தெரியவில்லை அதிக மரங்கள் அற்ற கற்பாறைகள் அதிகம் கொண்ட நில அமைப்பு. பாறைகளால் உருவாக்கப்பட்ட ஒற்றை வழிப்பதை மெதுவாகச் சுற்றியபடிஏறத் தொடங்கியதும் மூச்சு வாங்கியது. நேரடியாகப் பார்த்தபோது அதிக உயரமற்று தெரிந்த இடம் இப்பொழுது சுற்றிப் போகவேண்டும் வேறு வழியில்லை. மதியநேரம் வெயில் எங்களை வறுத்தது.
அப்பொழுது ஒருவர் தலையில் பல வர்ணத்தில் உடையணிந்து தலையில் தொப்பியுடன் எதிரில் தோன்றினார். முகத்தில் பெருமிதமான சிரிப்புடன் ஏதோ அவரது மொழியில் பேசினார்.
‘இவர்தான் இந்தத் தீவின் தலைவர் இவரிடம் நாங்கள் பணம் கொடுக்கவேண்டும்’ என்றார் வழிகாட்டி
‘இந்தத் தீவு ஒரு கூட்டுறவு முறையில் நடைபெறுகிறது இங்குள்ளவர்கள் கத்தோலிக்கர்கள். ஆனால் கச்சுவா என்ற இன்காக்களின் மொழியைப் பேசுபவர்கள் இதுவரையும் இந்தத்தீவுகள்ளே திருமணம் செய்கிறார்கள். இதனால் தற்போது பல உடற்குறைகள் ஏற்பட்டுள்ளது’ என்றார்
நமது ஊருகளிலே உறவினரைத் திருமணம் செய்யும் பழக்கம் மாறவில்லையே! இவர்களாவது தங்கள் கலாச்சாரம், மொழி என யோசிக்கிறார்கள்.
இந்தத் தீவின் மண் சிவப்பாக இருந்தது. மரங்கள் அதிகம் இல்லை அப்படி வளர்ந்திருந்த சில மரங்களும் குட்டையாக இருந்தன.
500 மேற்பட்ட படிகளையும் ஒரு மணித்தியாலத்தில் அட்டைபோல் ஊர்ந்து உச்சிக்குச் சென்றபோது ஒரு வீடும் அதன் வெளியே முன்பகுதியில் படங்குகளால் பந்தல் போட்டு மிகவும் எளிமையான உணவகம் இருந்தது. மீனோடு உணவு பரிமாறினார்கள். அதன் பின்பு அவர்களது பாரம்பரிய நடனத்தை ஆண்களும் பெண்களும் சேர்ந்து ஆடினார்கள்.; அவர்களது நெய்த துணிகள் விற்பனைக்கு வைத்திருந்தார்கள்.
தக்கீலா தீவின் இறங்குதுறைக்கு வரும்போது நீல நிறமான நிறமான வாவியையும் அதைச்சுற்றிப் பனி படர்ந்த அந்தீஸ்மலைகளையும் பாரக்க முடிந்தது
‘அதோ அந்த மலைகள் இருக்கும் பகுதி பொலிவியா’ என்றார்;
புனிபடர்ந்த மலைகளைப் பார்த்துவிட்டு கீழே பார்க்கும்போது இங்கும் வாவிக்கரையில் வட்ட நிலா முகத்தோடு ஒரு சிறுமி காத்திருந்தாள், யாராவது தன்னைப் படமெடுப்பார்களா என்று.
மறுமொழியொன்றை இடுங்கள்