உன்னையே மயல் கொண்டால் – பாகம் பதின்மூன்று

 

ஆய்வுக்கூட மேசையில் சந்திரனுக்கு வந்த கடிதங்கள் இருந்தன. அதில் ஒரு கடிதத்தை உடைத்ததும் உள்ளே அழைப்பிதழ் ஒன்று இருந்தது. சிட்னியின் ஹிளிப் பகுதியில் ஜுலியாவின் ஓவியக் கண்காட்சி நடப்பதாக இருந்தது.

தொலைபேசியை எடுத்து ஜுலியாவின் இலக்கத்தை அழுத்தினான். மனத்தில் பதிந்து விட்ட சில தொலைபேசிகளின் இலக்கங்களில் இதுவும் ஒன்று.

“எனக்குத் தெரியாதே…! எப்போது ஒழுங்கு செய்தாய்? “ என பரபரப்பாக பேசினான்.

“சந்திரன் ஆறுதலாகக் கேள். நான் சொல்லுகிறேன். ஹிளிப்பில் உள்ள பாடசாலையில் வாரவிடுமுறை நாட்களில் இந்த எக்சிபிசன் நடக்கிறது. எனது நண்பர்கள் எல்லாருக்கும் அழைப்பு விடுத்திருக்கிறேன்.”

“என்னால் வந்து உதவி செய்ய முடியும். எப்போது வந்தால் நல்லது?.”

“வருகிற வெள்ளிக்கழமை இரவு ஹிளிப் பாடசாலைக்கு எனது ஓவியங்களை கொண்டு செல்லவேண்டும். இரவு வரமுடியுமா? “

“வீட்டுக்கு வரவா? அல்லது பாடசாலைக்கு வரவா?.”

“பாடசாலையில் நிற்பேன் அங்கு வா.”

நூல்நிலையத்தில் விஞ்ஞான கட்டுரைகளைச் சேகரிக்க வேண்டும். என நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு ஜுலியாவின் எக்சிபிசன் தடையாக வந்தது. ‘இந்த நேரத்தில் எப்படி அவளுடன் உறவை முறிக்க போகிறேன் என கூறமுடியும். உடல்உறவு தவிர்ந்த நட்பாக இதனைத் தொடரலாம் என்ற நம்பிக்கை சந்திரனுக்கு இல்லை. ஆணுக்கும், பெண்ணுக்கும் உடலுறவு சமமான தேவை என்றாலும் ஆணிண் உடம்பு பெட்ரோல் போல் பற்றிக் கொள்கிறது. பெண் உடல் நிலக்கரிபோல் மெதூவாக சூடேறுகிறது. ஜுலியாவை நினைத்தவுடன் உணர்வு உடலெங்கும் பரவுகிறது. ஆழமான கடலில் ஆழ்ந்தெடுத்த முத்தை பார்த்த சந்தோச திருப்தியில் மனம் திளைக்கிறது. ஜுலியாவிடம் உடல் உறவின்பின் ஆன்மிகம், பொருளாதாரம், ஏன் அரசியல் கூட பேச முடிகிறது. சோபாவின் உடல் அழகு மனதைக் கவர்ந்தாலும் அவள் ஒரு நோயாளி என்ற எண்ணம் மனதை நெருடுகிறது. இவள் தற்காலிக சந்தோசத்திற்காகவோ கணவனை திருப்திப்படுத்த வேண்டும் இல்லாவிட்டால் நம்மை விட்டு போய்விடுவான் என்ற உணர்வில் இருக்கிறாளோ என ஐயப்பட வைக்கிறது. இதையெல்லாம் மீறி காதல் உணர்வுகள் உச்சக்ட்டம் செல்லும் பொழுது அடிபட்ட சிறுபறவை போல துன்பப்படுகிறாள். சிறுவயதில் காயமடைந்த இவளிடம் நான் காமத்தை வெளிப்படுத்துவது சரியா என்று மனதில் கேள்வி குறி இருக்கிறது. நோயாளிப் பெண்ணாக எண்ணி பராமரிப்பதா, மனைவியென எண்ணி சுகபோகங்களில் சம்போகிப்பதா?’ மனத்தில் பல கேள்விகள் கேட்டுக்கொண்டு ஹிளிப் பாடசாலையை அடைந்தான் சந்திரன்.

பாடசாலையின் மண்டபத்தில் ஜுலியாவும் மகன் மைக்கலும் தாடி வைத்த உயரமான அறுபது வயது மதிக்க தக்க ஒருவரும்; நின்றார். சந்திரனை தழுவி நன்றி கூறிவிட்டு மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள். “இது எனது நண்பன் சாள்ஸ்;.” “இவரும் ஒரு ஓவியர்தான். பலகாலமாக எனது நண்பன் “ என சந்திரனுக்கு அறிமுகப்படுத்தினாள்.

எல்லோரும் சேர்ந்து ஓவியங்களை அந்த மண்டபத்து சுவர்களில் மாட்டி ஓவியம் பற்றிய விபரங்களை கீழே எழுதி ஒட்டினார்கள். சார்ள்ஸ் பலதடவை கண்காட்சி நடாத்தியபடியால் அவரது அறிவுரையின் படி மற்றவர்கள் செயல்பட்டனர். மைக்கல் ஆறு அடி உயரமான அழகான இளைஞன். முகம் ஜுலியாவைப்போல் அப்படியே உரித்து ஒட்டி வைத்தது போன்று இருந்தது.

சந்திரன் வந்து அரைமணி நேரத்தில் மைக்கல் தனது சிநேகிதியிடம் போவேண்டும் என கூறிவிட்டு விடைபெற்றுக் கொணடான்.

சாள்ஸ்ம் சந்திரனும் இரவு ஒரு மணி வரையில் மண்டபத்தில் ஒழுங்கு படுத்தினார்கள். பணி முடிந்ததும் சாள்ஸ் விடைபெற்று கொண்டார். சந்திரன் தன் காரில் ஜுலியாவுடன் ஏறினான்.

“எங்கே உன் கார்,  ஜுலியா?

“மைக்கல் எடுத்துக் கொண்டு போய்விட்டான்.”

காரில் வந்து வீட்டில் இறங்கிய ஜுலியா “சந்திரன் சாப்பிட்டாயா?” என்றாள்.

“நான் வரும்போதே சாப்பிட்டேன். நான் எனது அறைக்கு போகிறேன். நீயும் காலையில் எக்சிபிசனுக்கு போகவேண்டும்தானே.”

“இல்லை இல்லை இவ்வளவு தூரம் இந்த நேரத்தில் போகாதே” எனக்கூறி கையைப்பிடித்து இழுத்தாள்.

வேறுவழியின்றி சந்திரன் அங்கே தங்கினான்.

ஜுலியாவின் படுக்கையில் அவள் அருகே நித்திரையின்றி புரண்டு கொண்டிருந்தான்.

குளிர்காலமாகையால் ஹீட்டரின் கணகணப்பு இருந்தது. ஜுலியா அரைநிர்வாணமாக தூங்கிக் கொண்டிருந்தாள். உடல் களைப்பு போலும் உடனே தூங்கி விட்டாள். சந்திரனுக்கு நித்திரை வரவில்லை.

சிறிதுநேரத்தில் வாசல் கதவால் “மம் “ என்றபடி மைக்கல் நுழைந்தான்.

சந்திரனுக்கு தூக்கிவாரிப் போட்டது. “மகன் வருகிறான் நான் தாயோடு படுத்திருப்பதை பார்த்தால் என்ன நினைப்பான்?’

தலையைத் திருப்பி “மைக்கல், லைட்டைப் போடாதே. நான் அரை நிர்வாணமாக படுத்திருக்கிறேன்.”

“ஓகே” என்றபடி பக்கத்து அறைக்கு சென்றுவிட்டான்.

சந்திரனது முகத்தை பார்த்துவிட்டு “டோன்ட் வொரி” என்றாள்.

“குட்நைட் மம் “ எனும் குரல் கேட்டது.

சந்திரனுக்கு பதட்டம் தீரவில்லை. திரும்பித் திரும்பி படுத்தான்.

“சந்திரன் படுத்து தூங்கு. நான் காலையில் எழும்பவேண்டும் “

இதயத்துடிப்பு குறைந்தாலும் நித்திரை வரமறுத்தது.

‘இவளால் எப்படி நித்திரை கொள்ள முடிகிறது. நான் மட்டும் குற்ற மனப்பான்மையுடன் தவிக்கிறேன். பதினெட்டு வயதான மகன் பக்கத்து அறையில் தூங்குகிறான் நான் தாயுடன் கட்டிலில் படுத்திருக்கிறேன். குற்ற மனப்பான்மை என்பது சமூக சூழலுக்கு உட்பட்டது விரும்பிய நண்பரோடு தாய் படுத்திருப்பது மைக்கலுக்கு தவறாக தெரியவில்லை. நான் என்னை நம்பிய பெண்ணை விட்டுவிட்டு இங்கு படுத்திருப்பது குற்றம்தானே? இவள் குற்ற்வாளியில்லை. நேர்மையாக சலனம் அற்று என்னுடன் அரைநிர்வாணமாக படுக்கையில் இருக்கிறாள். இவளுக்கு தூங்க முடிகிறது. தவறு செய்யும் என்னால் தூங்க முடியவில்லை. இப்படியான எனது நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வந்தேன். அதை செய்யாமல் உறவு கொண்டுவிட்டு படுக்கையில் கிடக்கிறேன். இவளது உடல் குளிர்ந்து ஆசுவாசமாக இருக்கிறது. நான் அங்கலாய்த்தவாறு இளைப்பாற முடியாது படுக்கையில் புரளுகிறேன். இவளுக்கு எதுவும் சொல்லாமல் எழுந்து போய்விடவேண்டும் .நாளை இவளுக்கு முக்கியமான நாள். நான் இவளை கஸ்டப்படுத்த கூடாது.’

காலையில் எழுந்ததும் ஜுலியாவை முத்தமிட்டு “உனது கண்காட்சிக்கு எனது வாழ்த்துக்கள். நான் வரமுடியாது. சோபாவை டாக்டரிடம் கொண்டுபோகவேண்டும்.”

“சரி சரி டார்லிங் “ என பாதிக்கண்களை திறந்தபடியே சிணுங்கினாள்.

சந்திரனது ஆய்வுச் செய்முறைகள் முடிவடைந்து அதன் முடிவுகள் எழுதுவதற்கு மூன்று மாதகாலம் கொடுக்கப்பட்டது அவனது போராசிரியரால். இந்தக் காரணங்களுக்காக வீட்டுக்கு செல்வதையும் குறைத்து விட்டான். ஜுலியாவை காண செல்வதும் குறைந்து விட்டது. ஆரம்பத்தில் கடினமாகத்தான் இருந்தது. மனத்தின் அங்கலாய்ப்பும் ஆவலாகவும் இருந்தது. ஓவியக் கண்காட்சி முடிந்ததும் ஜுலியாவின் உறவை முறிக்க நினைத்தான். ஆனால் சொல்ல வாய் வரவில்லை. ஸ்கொலசிப் பணம் வருட இறுதியோடு முடிவதால் பொருளாதார நெருக்கடி தவிர்க்கப்பட வேண்டும்.

கடைசியாக மனதை திடப்படுத்திக் கொண்டு பலமுறை ஒத்திகை பார்த்தபின் ஒருநாள் நேரிலே சென்று மூன்று மாதங்களில் ஆய்வினை எழுதி முடிக்க வேண்டும் உன்னை என்னால் பார்க்க முடியாது எனத் தயங்கியவாறு கூறினான்.

“சந்திரன் உனக்கு எப்போது என்னை பார்க்க வேண்டும் என நினைக்கிறாயோ, அப்போது என்னடம் வா நீ என்னை அடிக்கடி சந்திக்கா விட்டாலும் நீ எனக்கு வேண்டியவன். உனது செயல்களில் எனக்கு அக்கறை உண்டு” எனக்கூறி அணைத்தாள்.

அவனுக்கு ஏதோ ஒரு பாரம் தலையில் இருந்து இறங்கியது போல் இருந்தது. தற்காலிகமாக வேனும் குற்ற உணர்வுகளில் கைதியாக இல்லாமல் ஜாமினில் இருக்கலாம். இப்படியான தொடர்பு வெளிக்கு தெரியாமல் இருந்த தனது அதிர்டத்தை மனதில் பாராட்டிக் கொண்டான்.

சோபாவிடம் “மூன்றுமாதம் வீட்டுக்கு வரமுடியாது “ என்று சொன்னவுடன் திடுக்கிட்டாள். அழத் தொடங்கிவிட்டாள்.

“சோபா என்னைப் புரிந்துகொள். மூன்று மாதத்தில் எனது ஸ்கொலசிப் பணம் நின்றுவிடும். எனது போராசிரியரால் ஓரிரு மாதங்கள் நீடிக்கலாம். இந்தக் காலத்துக்குள் எழுதி முடிக்காவிட்டால் ஏதாவது சாப்பாட்டுக் கடைகளில் தான் வேலை செய்ய வேண்டும். அதில் வரும் பணம் எமக்குக் காணாது. இரவு வேலை செய்துவிட்டு வீட்டைப் பார்ப்பதும் படிப்பதும் நடக்குமா? “

“அப்ப என்னைப் பார்க்க மூன்றுமாதம் வரமாட்டீர்களா”? என அப்பாவி போல கேட்டாள்.

“மடச்சி, மடச்சி! என்னை எப்படி உன்னால் பார்க்காமல் இருக்க முடியும். சுமனை பார்க்கவேண்டும் . இப்போது போல் வெள்ளிக்கிழமை வந்து திங்கள் போகமுடியாது. முக்கியமாக வார விடுமுறை நாட்களில் வரமுடியாது. வேலை நாள்களில் வந்து போவேன். கவலைப்படாதே “ என சமாளித்தான்.

‘எனது வார்த்தைகளை இவள் எளிதாக நம்புகிறாள். அவளது நம்பிக்கைக்கு பாத்திரமாக நான் நடக்க வேண்டும.நான் உண்மையாக நடக்கவில்லை என தெரிந்தால் எப்படி நடந்து கொள்வாள்?  சாதாரண பெண்களிலும் பார்க்க மனத்தளர்ச்சி உள்ள இவளுக்கு உள்ளத்தில் என்ன மாற்றம் ஏற்படுமோ? இவளது மனதையோ, உடலையோ எவ்வளவு பாதிக்கும்? நான் நெருப்புடன் விளையாடுகிறேன். எனது குடும்பத்தை பணயக்காயாக வைக்கும் செயலில் ஈடுபடுகிறேனா?’

சந்திரன் ஒழுங்காக வீட்டுக்கு வராத நாட்களில் சுமனைப் பார்க்க அம்மா இருப்பதால்; ஆங்கில வகுப்பொன்றில் சேர்ந்தாள் சோபா. கொழும்பில் இருந்து ஆங்கிலம் கற்றாலும் அவுஸ்திரேலிய உச்சரிப்பு புரியவில்லை. திருமணமாகியவுடன் பிள்ளைத்தாய்ச்சி ஆனபடியால் எதுவும் கவனிக்க வில்லை. குழந்தை சுகவீனம் என பல காரணங்கள் அவளைத் தடுத்தன. ‘இப்போது இவரும் இல்லை. அம்மா பிள்ளையை பார்க்க இருக்கிறா’ என்ற துணிவில் பரமற்றாவில் உள்ள தொழிற்கல்லூரியில் ஆங்கில வகுப்புக்குச் சேர்ந்தாள். ஆரம்பத்தில் தகப்பனுடன் சென்றவள் பின்பு தனியாக போனாள். பலருடன் பேசுவது தனியாக செல்வது சோபாவுக்கு பிடித்திருந்தது. ஆரம்பத்தில் இருந்த பயம் விலகியது. ஒவ்வொருவரும் தன்னை ஒரு பொருட்டாக வந்து பேசுவதும் சிரிப்பதும் புதிய உணர்வை பாய்ச்சியது.

பல நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு மூன்றுமாத காலம் ஆங்கிலப் பயிற்சியை இலவசமாக அவுஸ்திரேலிய அரசாங்கம் கொடுக்கிறது. தொழிற்கல்லுரிகளுக்கு அரசாங்கம் பணம் கொடுத்து இந்த வகுப்பை நடாத்துகிறது.

ஹேலன் என்ற பெண் ஆசிரியர் காலை மூன்று மணி நேரமும் ரொபேட் என்ற ஆண் ஆசிரியர் சாயந்திர வேளையும் ஆங்கிலம் கற்பித்தார்கள். ஹேலன் ஆறடி உயரமான பெண். சிரித்தபடி எல்லோருடனும் பழகுவாள். சோபாவும் இவ்வளவு உயரமான பெண்ணை இதுவே முதல்தரம் பார்க்கிறாள். ரோபேட்டும் நட்புடன் பழகுவார். ஆசிரியர்கள் நட்புடன் பழகுவது சோபாவுக்கு முதல் அனுபவமாக இருந்தது. மாணவர்களில் பெரும்பான்மையானோர் அரேபியார்களும், சீன தேசத்தவர்களும். இந்தியா இலங்கை போன்றவர்கள் என்றால் சோபாவுடன் மூவர்தான். லட்சுமி என்ற யாழ்ப்பாணத்து பெண்ணும் ராமி என்ற டெல்கியைச் சேர்ந்தவர்களுமே ‘கறிகள்’ ‘ என்ற தெற்காசியப் பிரிவுக்குள் அடங்குவர்.. இவர்கள் மூவருக்கும் ஆங்கிலம் ஏற்கனவே தெரிந்திருப்பதால் வகுப்புகளை எளிதாக நடாத்தக் கூடியதாக இருந்தது. மூவரும் வகுப்பில் அருகருகே இருப்பது வழக்கம்.

லட்சமி ஒரு வருடத்துக்கு முதல் தான் இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு வந்தவள். இவளது கணவன் இரவில் ரெஸ்ரோரண்ட்லில் வேலை செய்வதும் பகலில் விளம்பர தாள்களை வினியோகிப்பதிலும் ஈடுபட்டான். இவர்கள் சோபா வசிக்கும் இடத்துக்கு பக்கத்து ஊரான பேரலாவில் வசிக்கிறாள். ராமியின் கணவன் கொம்பியூட்டர் என்ஜினியர். ஏதோ ஒரு கம்பனியில் வேலை செய்கிறான்.

லட்சமியும் ராமியும்,  சோபாவை ரெஸ்ரோரன்டுக்கு மதியம் கூட்டிச் சென்றனர். இவர்களுக்கு ஒருமணி நேர இடைவேளையுண்டு. பல தடவை சொப்பிங் செய்திருக்கிறார்கள். ரேஸ்ரோரன்ட்க்கு போவது முதல் தடவை என்பதால் சோபா தயங்கினாள்.

“ஏன் சோபா வரவில்லையா? “ என்றாள் ராமி ஆங்கிலத்தில்.

“இல்லை நீங்கள் போங்கள்” என்றாள் சோபா ஆங்கிலத்தில்.

“நாங்கள் உனது உணவுக்குப் பணம் செலுத்துகிறோம். நீ வா” என தமிழில் கூறி கையை பிடித்து இழுத்தாள்; இலட்சுமி.

“இல்லை. ஒருநாளும் போனதில்லை”

இறுதியாக இருவரும் கட்டாயப் படுத்தியதால் ரெஸ்ரோரன்ட்டில் உணவு அருந்தினாள்.

“சோபா உனக்கு இருபது வயதுதானே எப்படி ஒரு பிள்ளயை பெற்று விட்டாய்? “ என்றாள் லட்சுமி.

“நான் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போதே திருமணம் முடிவு செய்யப்பட்டது.”

“உனது கணவன் உறவுக்காரரா? “ என்றாள் ராமி.

“தூரத்து உறவினர்.”

“யாழ்ப்பாணத்தில் எல்லோரும் தூரத்து உறவினர்தான் “ என்று இடையில் வெட்டினாள் லட்சுமி.

இப்படி மூவரும் கலகலப்புடன் பேசிக்கொண்டு ஆங்கில வகுப்புக்கு திரும்பிச் சென்றனர்.

சோபாவின் மனதில் ‘நான் இளவயதில் திருமணம் செய்தும் எனது அனுபவம் இன்மைக்கு காரணம். அம்மா அப்பா தங்கள் பிரச்சையை தீர்க்க உடனே என்னை இப்படி திருமண உறவில் மாட்டி விட்டார்கள் போல இருக்கிறது’ என்கின்ற எண்ணம் எழுந்தது.

“என்ன சோபா வலுவான யோசனை போல் இருக்கிறது” என கேட்டார் ஆங்கில ஆசிரியர் ரொபேர்ட்.

“அப்படி இல்லை”என தன்னை சுதாகரித்துக் கொண்டாள் சோபா.

இந்த ஆங்கிலக் கல்லூரி சோபாவுக்கு உற்சாகத்தை கொடுத்தது. சிநேகிதிகள் கிடைத்ததும் காரணம். ஆங்கில வகுப்பில் வீட்டு வேலைகளும் இருந்தது. அத்துடன் ஆசிரியர்கள் ஆங்கில ரேடியோவின் நிகழ்ச்சிகள் கேட்க தூண்டினார்கள்.

சோபாவில் ஏற்பட்ட மாற்றம் சந்திரனுக்கும் ஆச்சரியமாக இருந்தது. இரவு நேரங்களில் வந்து அதிகாலையில் செல்லும் சந்திரனால் சோபாவின் மாற்றத்தை புரிந்து கொண்டதும் சந்தோசம் ஏற்பட்டு. மேலும் நிம்மதியாக தனது வேலைகளில் ஈடுபடத் தூண்டியது.

மொத்தமாக ஆய்வு எல்லாவற்றையும் எழுதிவிட்டு பேராசிரியரிடம் இருந்து வரும் திருத்தங்கள் பெற்று மீண்டும் திருத்திக் கொண்டான்.

ஒருநாள் தொலைபேசியில் ஜுலியா பேசினாள். “சந்திரன் எப்படி போகிறது?. உனது ஆராய்ச்சிகள்? “

“எழுதி முடித்துவிட்டேன். இப்போது திருத்தங்கள செய்து கொண்டிருக்கிறேன்.”

“ஒரு மாதத்தில் டொக்டர் சந்திரன் என கூற வேண்டுமா? “ என கலகலத்தாள்.

“நீ எப்படி அழைத்தாலும் நான் உனது சந்திரன் தான்”

“உன்னோடு நான் பேசவேண்டும். இன்று இரவு உன்னால் வரமுடியுமா? “

“இன்றைக்கு வரமுடியாது. நாளைக்கு வருகிறேன்.”

“சரி. அப்ப நாளைக்கு சந்திக்கிறேன்.”

காலையில் வந்த ஜுலியாவின் தொலைபேசி சந்திரனின் மனத்தைக் குடைந்தது.

‘அவள் வரச் சொல்லி கேட்டாளே. நான் வரமுடியவில்லை என்றேன். ஜுலியாவைப் பார்த்து இரண்டு மாதங்களாகி விட்டன’.

சந்திரனது மனதில் ஜுலியாவின் நினைவுகள் வந்ததும் உணர்வுகள் ஊஞ்சலாடத் தொடங்கியது. தொடர்ச்சியாக புத்தகங்கள், கொம்பியூட்டர், எழுதும் கடதாசி எங்கும் ஜுலியாவின் முகம் தெரிந்தது. சந்திரனால் பொறுக்க முடியவில்லை. மதியத்தில் பேராசிரியரிடம் ஏதாவது திருத்தம் இருக்கிறதா எனக் கேட்டு வாங்கி மாலை நாலு மணி வரை திருத்தங்களை முடித்தான் வெளியேறுவதற்கு முன்பு தொலைபேசியில் சொல்லலாம் என நினைத்தாலும் பின்பு எதிர்பாராமல் செல்வதில் தான் எதிர்பார்ப்பும், ஆனந்தமும் இருக்கும் என நினைத்தான். சந்திரனிடம் ஜுலியாவின் முன்கதவுத் திறப்பு இருந்ததால் சொல்லவேண்டிய அவசியம் இல்லை எனவும் நினைத்தான்.

காரில் ரிச்மண்டுக்கு சென்று கடைவீதியில் உள்ள கடைஒன்றில் பெரிய ஓர்கிட் பூச்செண்டு ஒன்றை ஐம்பது டொலர் கொடுத்து வாங்கினான். வாங்கிய பூச்செண்டை காரின் பின் சீட்டில் வைத்துவிட்டு பலமுறை சீட்டில் இருந்து விழுந்து விடுமோ என காரின் பின்பக்கம் கண்ணாடியூடாக அடிக்கடி பார்த்துக் கொண்டான்.

ஜுலியாவின் வீட்டை அடைய எட்டு மணியாகி விட்டது. கதவை தட்டாமல் ஆச்சரியமாக இருக்கட்டும் என நினைத்து கதவை திறந்தான். வழக்கமாக நிற்கும் காரையும் காணவில்லை. வாசலுக்கு பக்கத்தில் உள்ள ஜுலியாவின் படுக்கை அறை இருட்டாக இருந்தது. தெருவிளக்கின் மெல்லிய வெளிச்சத்தில் கட்டிலில் உள்ள வெள்ளை விரிப்பு தெரிந்தது. ஜுலியா எங்காவது போய்விட்டாளோ?. நான் இவ்வளவு தூரம் வந்தது வீண்தான் போல் இருக்கு. நான் போன் பண்ணிவிட்டு வந்திருக்க வேண்டும். எதற்கும் ஹோல் வரைக்கும் போய் வருவோம் எனநினைத்துக் கொண்டு இருள் மங்கிய அந்த கொரிடோரின் ஊடாக நடந்தான். கொரிடோர் கதவு கலங்கிய கண்ணாடியால் ஆனது. கதவை தட்டியவனுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. கதவு பூட்டியிருந்தது. எப்போதும் திறந்திருக்கும் கதவு அது.

கலங்கிய கண்ணாடியூடாக பார்த்தபோது ஹோலில் உள்ள குளிரைப்போக்கும் கணகணப்பு அடுப்பில் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. மற்றப்படி ஹோலும் இருட்டாக இருந்தது. ‘எப்படி ஆட்கள் இல்லாமல் குளிர் அடுப்பு எரியும்.?’ என்ற கேள்விக்குறியுடன் கண்ணை மிக அருகே வைத்து பார்த்தபோது எதுவும் தெரியவில்லை. திறப்பு துவாரத்தினூடாக பார்த்தபோது நிர்வாணமாக ஒரு ஆணின் உருவம் தெரிந்தது. தாடியும் உடல் அமைப்பையும் பார்த்தபோது ஓவியம் வரையும் சார்ள்ஸ் என சந்திரனுக்கு விளங்கியது.

கதவை தட்டியபடி “ஜுலியா இல்லையா? “

“ஜுலியா இல்லை” என பதில் சாவித்துவாரத்தினூடாக வந்தது.

சந்திரனுக்கு நிலைமை புரிந்தது.

“ஜுலியாவும் சார்ள்ஸ்ம் ஒன்றாக இருக்கிறார்கள்.ஜுலியா தன்னைக் கண்டதும் ஒளித்து விட்டாள்”
.
திரும்பிய சந்திரனுக்கு தலையை சுற்றியது. “இரண்டு மூன்று மாதம் பிரிந்து இருந்ததால் ஜுலியா வேறு ஒருவரிடம் போய்விட்டாளே. இவளை எவ்வளவு நேசித்தேன். எவ்வளவு உயர்ந்த இடத்தில் வைத்திருந்தேன். இவள் ஒரு மட்டரகமான விபச்சாரி போல் நடந்து கொண்டாளே” என மனத்தில் கறுவிக்கொண்டு ஓர்க்கிட் மலர் செண்டை கதவருகில் எறிந்துவிட்டு அதன்மீது வாயில் உள்ள எல்லா எச்சியையும் காறித் துப்பினான்.

காருக்குள் ஏறியவன் காரை ஸ்டாட் பண்ணாமல் உள்ளேயே இருந்தான். வரும் வழியெங்கும் ஜுலியாவோடு இன்று இரவு முழுதும் படுக்கையில் இருக்கவேண்டும் இரண்டு மாதமாக பட்டினி போட்ட உடம்பிற்கும் மனதுக்கும் தீனி போடவேண்டும் என்ற சிந்தனைகளை உடல் எங்கும் காமத்தை தேங்கிய படி வந்தவனுக்கு ஊசியால் குத்திய பலூனின் காற்று போல் எல்லாம் இறங்கிவிட்டது.

தற்போது ஜுலியா மேல் ஆத்திரம் குமிறி எழுந்து அவளை கொலை செய்தால் என்ன என்று கூட மனம் சிந்தித்தது. கைகள் பதறவும் உடலில் ஏதோ வெப்பம் ஏறியது போன்று இருந்தது. தேகத்தில் ஒரு நடுக்கமும் பதட்டமும் பற்றிக் கொண்டன.

மெதுவாகக் காரை செலுத்தி ரன்விக் சந்தியில் உள்ள மதுச்சாலையை அடைந்தான். உள்ளே சென்றபோது அதிக கூட்டம் இருக்கவில்லை. மேசை நாற்காலிகள் காலியாக இருந்தன.

“என்ன வேண்டும் நண்பனே”? என்றான் மதுபானம் பரிமாறுபவன்.

“டபிள் ஸ்கொச் விஸ்கி வித் ஐஸ்” என்று கூறிவிட்டு நின்றான். வந்த மதுவைச் சில நிமிடங்கள் நின்றபடி குடித்தான். இதற்கு மேல் குடித்தால் கார் ஓட்ட முடியாது. ஆத்திரமும் நிறைவேறாத காம உணர்வுகளும் மனதில் நிரம்பி வழிந்தாலும் அற்ககோல் அளவு கூடினால் கார் ஓடமுடியாது என்பதை மறக்க வில்லை.

ரன்விக் மதுசாலைக்கு சிறிது தூரத்தில் பியூட்டி ஸ்ருடியோ என்ற பெயரில் ஒரு விபசார விடுதி நடப்பபது சந்திரனுக்கு நண்பர்கள் மூலம் தெரியும். மதுசாலையை விட்டு வெளியே வந்தான். அந்த ஸ்ருடியோவின் காம்பவுண்டுக்குள் நுழைந்தான். கறுப்பாக இருந்த கதவில் சிறிய வெள்ளை பித்தான் இருந்தது. அதை அழுத்திய போது கதவு திறந்து கொண்டது.

“உள்ளே வாருங்கள”; என அழைத்தவாறு ஒரு நடுத்தர வெள்ளைக்கார பெண் வந்தாள்.

தயங்கி தயங்கி உள்ளே சென்றான் சந்திரன்.

“இதுதான் முதல் தரமா?” “

“ஆம் “; என தலையாட்டினான்.

கறுப்புத்ததோல் கதிரைகள் பல இருந்தன. சிவப்பு நிறவண்ணம் அடித்த சுவரும் சிவப்புகலர் விளக்கும் எல்லவற்றையும் சிவப்பாக காட்டின,அந்தக் கறுப்புக் கதிரைகளை தவிர.

சந்திரன் அமர்ந்திருந்த கதிரையின் முன்பாக ஒருவன் அமர்ந்தபடி குனிந்து ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருந்தான். விபசார விடுதிக்கு வந்து புத்தகம் படிக்கிறானே என நினைத்துக் கொண்டு தனது முந்திய எண்ணத்தை மாற்றிக் கொண்டான். இவனுக்கு என்ன பிரச்னையோ? எனக்கு ஜுலியாவால் எற்பட்டது போல் இவனையும் யாரோ ஒருத்தி ஏமாற்றி இருப்பாள். 

வரிசையாக நான்கு பெண்கள் வந்து கதிரையில் இருந்தவனிடம் கையை கொடுத்து அறிமுகமான பின் சந்திரனிடமும் தங்கள் பெயர்களை சொல்லித் தாங்கள் எந்த மாதிரியான உடல் உறவை செய்து கொளவார்கள் என்பதை சொன்னார்கள். ஒவ்வொருத்தியும் அறிமுகம் முடிந்தவுடன் பின்பகுதியை நெளித்து மீண்டும் சிரித்தார்கள். நெளிக்கும்போது இவர்கள் இடையில் சுற்றியிருந்த உடை விலகி கறுப்பு உள்ளாடையை பளிச்சென்று காட்டியது. தொழிலுக்கு விளம்பரம் செய்யும் நியான் விளக்கு போல் அவர்களது செய்கை இருந்தது.

சந்திரனுக்கு எவளையும் பிடிக்கவில்லை. எந்த ஒருத்தியும் அவன் உணர்வுகளை தூண்டவில்லை.

இரண்டு ஆசிய பெண்கள் வந்து மற்றவர்கள் மாதிரி அறிமுகமானார்கள். பின்பு அதே மாதிரி நெளித்துவிட்டுச் சென்றார்கள்.

அந்த நடுத்தர வயது பெண்மணி சந்திரனுக்கு பக்கத்தில் வந்து நெருக்கமாக அமர்ந்தாள்.

“யாரையாவது பிடித்திருக்கா? “
“இல்லை”
“இன்னும் ஒரு பெண் இருபது நிமிடத்தில் வருவாள். நான் கோப்பிக்கு ஓடர் பண்ணுகிறேன் “ என மிகவும் உபசரிப்போடு பேசினாள்.

அவளது உபசரிப்பும் கண்ணியமும் சந்திரனுக்கு ஆறுதலாக இருந்தது. “கோப்பி வேண்டாம் “ என்றான்.

முன் கதிரையில் இருந்தவன் “சீலா” என்றதும் அந்த நடுத்தர வயதுப் பெண் சீலாவை கூப்பிட்டாள்.
உள்ளே இருந்து வந்த பெண் அவனைக் கூட்டிக்கொண்டு உள்ளே போய் விட்டாள்.

நடுத்தர வயது பெண் தனது மேசைக்கு போய் விட்டாள்.

தனிமையில் விடப்பட்ட சந்திரன் சுற்றிப் பார்த்தான். சுவரெங்கும் அரைகுறை ஆடைகளுடன் பெண்களின் படங்கள் மாட்டப் பட்டிருந்தது. ஆபாசமாக இல்லாமல் அதேநேரத்தில் கிளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக கறுப்பு வெள்ளை படங்களில் சிவப்பு ஒளி பட்டு தெறிவித்தது. யன்னல் சீலைகளும் சிவப்பு நிறத்திலேயே போடப்பட்டிருந்தது.

சுற்றி பார்த்தபின் அங்குள்ள மேசையில் இருந்த மகசீன் ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தான்.

எல்லாவற்றிலும் பெண்களின் அந்தரங்கத்தை வெளிப்படுத்தும் வகையறவை சேர்ந்தவை. மகசீன் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அருகில் கிளுகிளுத்த சிரிப்பு சத்தம் கேட்டது. திரும்பி பார்த்தவனுக்கு அருகாமையில் இரண்டு சீனப் பெண்கள் நின்றார்கள். அதில் ஒருத்தி சிரித்தபடி “யாருக்காக காத்து இருக்கிறீர்கள்” என்று கேட்டாள்;.

“தெரியவில்லை.”

“எங்கள் இருவரையும் ஒன்றாக நீங்கள் அழைத்துப்போகலாம் “. என்றாள் முதல் கேள்வி கேட்டவள்.

“உண்மையாகவா.”

“ஆம்”.

சந்திரன் பதில் அளித்தாலும் அவனது மனத்தில் ஜுலியாவின் மேல் ஏற்பட்ட குரோதம் புகைந்து கொண்டு வேறு எந்த உணர்வுகளுக்கும் இடமளிக்க இல்லை. தீச்சுவாலை மட்டும் அணைந்த எரிந்த காடு போன்று கனன்றது.

மௌனமாக இருந்த அவனை விட்டு அந்த சீன அழகிகள் சென்று விட்டனர்.

மதுவின் மயக்கத்தில் அந்தக் கதிரையில் சாய்வாக உட்கார்ந்தான்.

ஏதோ உணர்வில் ரோட்டுக்கு வந்தவன் நேரடியாக ஜீலியா வீட்டுக் வேகமாக சென்றான். வாசலை அடைந்ததும்நின்று சுற்றி எல்லாப் பக்கத்தையும் பார்த்து விட்டு எந்த வாகனமும் வரவில்லை என உறுதி செய்து விட்டு ஜுலியாவின் வீட்டுப் படிகளில் ஏறினான். கதவில் இருந்து பத்தாம் நம்பர் இலக்கத்தை கைவிரல்களால் தடவி உறுதிப் படுத்திக் கொண்டான். யன்னல் திரைசீலை மூடிக் கிடந்தது. ஜுலியாவின் படுக்கை அறை இருள் மூழ்கிக்கிடந்தது.

சார்ஸ் இவளோடு உடலுறவு கொண்டு விட்டு போய்விட்டான். இவள் நிம்மதியாக தூங்குகிறாள்.

எக்காலத்திலும் ஏற்படாத வன்ம உணர்வு சந்திரனுக்கு மனதில் எழுந்தது. கெட்ட வார்த்தைகளையே பாவித்தறியாத அவனது மனத்திலும் உடலிலும் கொலைவெறி புகுந்துகொண்டது. பல்லை நறநற வென கடித்தத்துக்கொண்டு மெதுவாக கண்களை திறந்தான். திறந்த கதவை சத்தம் எழுப்பாமல் மெதுவாக தள்ளியபடி பூனை போல் கால்களை வைத்து உள்ளே சென்று இடது பக்கத்தில் உள்ள ஜுலியாவின் படுக்கை அறை கதவை திறந்தான்.

வெண்ணிற போர்வையால் கழுத்தை போர்த்திய படி சரிந்தபடி ஜுலியா படுத்திருப்பது மங்கலான தெருவிளக்கில் தெரிந்தது. அழகான தோள்களைப் பார்த்து சிலகணம் யோசித்தான். எத்தனை முறை அந்தக் கழுத்தையும் தோள்களையும் முத்தமிட்டு இருப்பேன்? எத்தனை இரவுகள் இவளை நினைத்திருப்பேன்? சந்திரனுக்கு திடீரென்று அழகான நல்லபாம்பு ஒன்று படுத்திருப்பது போன்ற தோற்றம் கண்ணில் பட்டது. அதே படம் எடுத்த பாம்புக் கழுத்து என்று நினைத்துக் கொண்டு அதே நினைவில் இவளைக் கொல்வதுதான் நல்லது என அருகில் மேசையில் இருந்த பெரிய வெண்கல சிலையை தூக்கினான். தூக்கியவனது கை மேலே எழுந்தபோது மெதுவாக ஜுலியா திரும்பி “சந்திரன்” என்ற போது திடுக்கிட்டு விழித்தான்.

“கொஞ்சம் அதிகம் குடித்து விட்டாய் “. என்றாள் அந்த விபசார விடுதியில் முன்மேசையில் இருந்த நடுத்தர வயது பெண்.

“என்னை மன்னிக்கவும்.” என்று அந்தப் பெண்ணிடம் கூறிவிட்டு வெளியே வந்தான். காருக்குள் அமர்ந்து இப்போது எங்கே போவது என யோசித்தான்.

நல்லவேளை எந்த பெண்ணும் எனக்கு பிடிக்காமல் போனது. ஜுலியாவின் மீது ஏற்பட்ட கோபத்தில் என்னையே கெடுத்திருப்பேன்.

சந்திரன் விபசாரத்தை எந்தக் காலத்திலும் விமர்சித்தது கிடையாது. விபசாரம் தனிநபர் ஒழுக்கமின்மையோ, சமூகபிறழ்வோ என்று பல வாதங்களை கேட்டிருந்தாலும் பலாத்காரம் இல்லாமல் தனது முழுவிருப்புடன் பெண்கள் இந்த நாட்டில் ஈடுபடுகிறார்கள். பணநோக்கமோ ஒரு திரில் நோக்கத்திலேயோ ஈடுபடலாம். பல ஆண்களுக்கும் விபச்சாரம் நடத்தும் பெண் ஒரு தேவையான வடிகாலாக இருக்கலாம். அரசாங்கம் இதை ஒரு தொழிலாக அங்கீகரித்து லைசென்ஸ் கொடுத்துள்ளது. தனிப்பட்ட முறையில் விபசாரியுடன் உறவு கொள்ள சந்திரன் விரும்பவில்லை.

சந்திரன் தங்கி இருக்கும் ரிச்மண்டுக்கு செல்ல ஒரு மணி நேரமாகும். வீட்டுக்கு செல்ல அரை மணியாகும்.

‘வீட்டுக்கு போனால் ஏன் குடித்துப் போட்டுவந்தாய் என சோபா கேட்பாள். அவளுக்கு என்ன பதில் சொல்வது? அவளுக்கு மட்டுமல்ல அவள் பெற்றோருக்கும் தெரியவருமே. சரி தெரிந்தால் என்ன் நண்பன் ஒருவனின் விருந்துக்கு போய் வருகிறேன் என்று சொல்னால் சரி’ என தனக்குதானே சமாதானம் சொல்லிவிட்டு காரை ஓபனுக்கு செலுத்தினான்.

மனம் முழுவதும் ஜுலியா பிறந்தமேனியாகச் சார்ள்சுடன்; படுத்துக்கிடக்கும் காட்சி வந்து கொண்டிருந்தது.

‘குறைந்த பட்சம் இவள் எனக்கு சொல்லி இருக்கலாமே,   நான் சார்ள்ஸை விரும்புகிறேன்’ என்று. சந்திரனது அடிமனதில் ‘ஜுலியாவின் நேர்மையை எதிர்பார்க்க எனக்கு என்ன தகுதி இருக்கிறது. மனைவியுடன் ஜீலியாவுடனும் ஒரே காலத்தில் உறவு கொணட போது உனது நேர்மை எங்கே போனது? எனக்கு ஒரு நியாயம். அவளுக்கு ஒரு நியாயமா? ஜுலியா என்னை நேற்று வரச்சொன்னது இதைப்பற்றி சொல்ல இருக்கலாம் இல்லையா?’

ஒருபுறத்தில் ஜுலியாவைக் கரித்துக் கொண்டும் மறுபுறத்தில் அவளுக்காக சமாதானம் பேசிக்கொண்டும் காரை ஓட்டினான்.

‘எப்படியும் ஜுலியாவின் வீட்டுத் திறப்பை கொடுத்துவிட வேண்டும். அவளது திறப்பை சட்டைப் பையில் வைத்திருப்பது அணையாத சிகரெட்டை பொக்கட்டுக்குள் செருகியது போல் இருக்கிறது. இந்த திறப்புக்கு சந்திரனுக்கு ஒருகாலத்தில் காம உணர்வை ஏற்படுத்தும் தன்மையிருந்தது. கதவை சத்தமிடாமல் பலமுறை திறந்து கொண்டு படுக்கை அறைக்குள் செல்லும் கருவியானது. இப்போது சந்திரனது மார்பு பக்கெட்டில் இருந்து தீ போல் சுடுகிறது. இதயத்தை பனி போல் உறைய வைக்கிறது. இந்த தீயை அணைக்க பனியை உருக்க வழி என்ன?’

சந்திரன் வீட்டை அடைந்தபோது வீட்டில் விருந்தினர்கள் நடுஹோலில் இருந்தார்கள். அவர்களுக்கு ஹலோ சொல்லி விட்டு படுக்கை அறைக்கு சென்றவன் உடனடியாக குளியல் அறைக்கு ரவலுடன் சென்றான்.

“என்ன இப்படி திடீர் என சொல்லாமல் வந்திருக்கிறியள்? “ என்றவாறு சந்திரனை தொடர்ந்து குளியல் அறைக்குள் வந்தாள் சோபா.

“ஏன் வரக்கூடாதா? “ என வெடுக்கென கேட்டான்.

சோபாவின் முகம் சுருங்கி விட்டது. அதைக் கண்டதும் தனது தவறை உணர்ந்தவனாக “சொறி சோபா எனது நண்பனுக்கு பரமாற்றாவில் பேத்டே பார்ட்டி நடந்தது. நான் திரும்பி ரிச்மண்டுக்கு போகாமல் இங்கே வந்தேன்.”

பொய் சொல்லுவது சிலமணி நேரத்துக்கு முன்பு குடித்த மதுசாரத்தை விட வாயில் கசந்தது. வேறு வழியில்லை. சமாளிக்க வேண்டும்.

“உங்களுக்கு லட்சுமியையும் கணவரையும் அறிமுகப்படுத்துகிறேன். முகம் கழுவி விட்டு வாருங்கள்.”

சந்திரன் ஹோலுக்கு வந்தவுடன் லட்சுமியும் அவளது கணவன் விசுவநாதனும் அறிமுகமானார்கள்.

விசுவநாதன் சந்திரனிடம் ஏற்கனவே அறிமுகம் ஆனவன் போல முகபாவனையிலும் உடல் மொழியாலும் நடந்து கொண்டான். இதனைச் சந்திரன் அவதானித்தாலும் பெரிதாக பொருட்படுத்தவில்லை.

பலவிடயங்கள் தொட்டந் தொட்டமாக இழுபட்டுக் கடைசியாக இலங்கையில் நடக்கும் உள்நாட்டு போரில் வந்து நின்றது..

“ஊரில் ஏதோ குண்டு வெடித்து பலபேர் இறந்தார்களாம் “ என்றாள் லட்சுமி.

“அப்படியா” என சுவாரசியம் இல்லாமல் சோபா கேட்டாள்.

சோபாவுக்கு இலங்கை மடடுமல்ல,  பொதுவாக அரசியல் சமூகவிடயங்களில் அக்கறை இல்லை. தற்போதைய அவுஸ்திரேலிய பிரதமரின பெயர் தெரிந்திருககுமோ என்பது கேள்விக்குறி.

சந்திரனுக்கு இலங்கை பிரச்சனையை விட முக்கியமான பிரச்சனை மனதில் இருந்தது. அவனும் அக்கறை இல்லாதது போல் காட்டிக்கொண்டதால் பேச்சு தடைப்பட்டு வந்த விருந்தினர் விடைபெற்றுக் கொண்டு போயினர்.

அன்று இரவு சோபாவைவிடம் இருந்து விடுபட்டு வெளியே ஹோலில் உள்ள கதிரையில் படுக்கலாம் என நினைத்து “தலைவலி” என்று சாக்குபோக்குச் சொன்னான்.

“குடித்ததால் தான் வந்தது. ஏன் குடித்தீர்கள் “?

“எனக்கு பலமுறை குடிக்காமலும் தலைவலி வந்துள்ளது “ என்று குத்தலாக பதில் அளித்தான்.

இவனுக்கு மூட் சரியில்லை என நினைத்துக் கொண்டு பதில் பேசாமல் உள்ளே போய்ப் படுத்தாள் சோபா.

திரும்பி திரும்பிப் படுத்தும் சந்திரனுக்கு நித்திரை வரவில்லை. ஆரம்பத்தில் ஜுலியாவின் மீது ஏற்பட்ட குரோதம் கலந்த வெறியும் ஆத்திரமும் சிறிது தணிந்து விட்டது. பாலியல் ஏமாற்றமும் நீறு பூத்துவிட்டது.

‘ஒரு விதத்தில் இப்படி நடக்காவிட்டால் இந்த தொடர்வு நீடித்திருக்கும். ஏதாவது வழியில் சோபாவுக்கு தெரியவரும் போது மானம் கப்பல் ஏறிக் குடும்பம் சிதையும். நான் பலர் முகத்தில் முழிக்கமுடியாது. இந்த விதத்தில் ஜுலியா தனக்கு ஏற்ற படி சார்ள்ஸை துணையாக ஏற்றுக் கொண்டாள’;. என நினைத்தபடி புரண்டு படுத்தான்.

“என்ன இன்னும் நித்திரை கொள்ளவில்லையா. இப்போது இரண்டு மணியாகிவிட்டது “என்றாள் சோபா கதவருகில் நின்றபடி.

“இல்லை.”

“நான் ஏதாவது குடிக்க கொண்டு வரவா? “

“வேண்டாம் நீ படுத்துக்கொள். நீ உனது ஆங்கில வகுப்புக்கு போவேண்டும் “ என மற்றப்பக்கம் முகத்தை திருப்பினான்.

சந்திரன் மனதை ஒருமுகப்படுத்தி எங்கும் செல்லாமல் இரண்டு வாரங்கள் உழைத்தான். ஆராய்ச்சியின் திருத்தங்களை முடித்துவிட்டு அறையை காலி செய்வதற்கும் நோட்டீஸ் கொடுத்தான். இக்காலத்தில் இருமுறை ஜீலியாவிடம் இருந்து தொலைபேசி வந்தது. சந்திரன் ரெலிபோனை எடுக்கவில்லை. சிண்டி எடுத்து ரெலிடீபான் இலக்கத்தை கொடுத்தும் சந்திரன் பேசவில்லை.

சந்திரனிடம் ஜுலியாவின் திறப்பு இருந்தது

‘கொடுத்துவிட்டு ஏன் இப்படி செய்தாய் என்று ஒருமுறை கேட்கவேண்டும். சோபாவோடு; சிலகிழமைகள் வீட்டில் தங்கிவிட்டுதான் இதை செய்யவேண்டும் என முடிவு செய்தான். சோபாவுடன் சந்தைக்கும் கோயிலுக்கும் போவதுமாக ஒரு வாரம் கழிந்தது. சோபாவின் முகம் சந்தோசமற்றுக் கிடந்தது.

“நான் உங்களிடம் ஒன்று கேட்கவேண்டும் “ எப்படி கேட்பது எனத் தெரியவில்லை எனத்; தட்டுத்தடுமாறி;னாள்.

“கேளேன் “

“எனது பிரெண்ட் லட்சுமி சொன்னாள்,  தனது கணவன் உங்களை ஒரு பெண்ணோடு கண்டவராம்.”

உள்ளத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியை மறைத்துக்கொண்டு “எங்கே என்னைக் கண்டவராம்? “.

“ரன்விக் பக்கமாம் “

“அவர் அங்கே என்ன செய்தார்.? “

“அவர் அந்தப் பகுதியில் பேப்பர் போடுகிறவர் “

“நான் என் நண்பனிடம் போவது உண்டு அங்கே அவனது மனைவியுடன் கண்டிருக்கலாம.; “

“அவள் வெள்ளைக்காரியோ? “

“ஆம்”

“இப்பத்தான் எனக்கு மனஆறுதலாக இருக்கிறது. இரண்டு நாளாக இதை எப்படி உங்களிம் கேட்பது என்று மனதுக்குள் குழம்பிக் கொண்டிருந்தேன்.”

இப்போது சந்திரனுக்கு குழப்பம் வந்தது. சிட்னியில் பல தமிழர்கள் வீடுகளில் விளம்பரங்கள், பத்திரிகைகள் வினியோகிப்பதை பார்த்திருக்கிறான். ‘என்னை சந்தித்தபோது விசுவநாதன் அறிமுகமானவன் போல் காட்டிக் கொண்டதற்கு இதுதான் காரணமா? சோபா நான் பொய் கூறியதை நம்பியதால், தற்போது விடயம் ஆறி விடும் என் கையில் உள்ள திறப்பை கொடுக்க வேண்டும் தபாலில் அனுப்பலாம் ஆனால் ஏன் இப்படி நடந்து கொண்டாய் எனக் கேட்க சந்தர்ப்பம் வராதே’ இவ்வாறு நினைவுகள் குமிழ் விட்டன.

சந்திரனது ஆய்வினை அங்கீகரிக்கும் பகுதிதான் பாக்கி இருந்தது. அதற்கு மூன்று மாதம் ஆகும். சந்திரன் வேலை தேடத்தொடங்கி பல விண்ணப்பங்கள் போட்டான். பல நேர்முகங்களுக்கு சிட்னியில் சென்றான். மேல்பேணில் இருக்கும் அரச விவசாய நிறுவனத்தின் நேர்முகம் தொலைபேசியில் நடந்தது. முடிவில் ‘வேலை தந்தால் மெல்பேண் வந்து தங்குவாயா’ என கேட்டார்கள். சந்திரன் தயக்கமில்லாமல் சரி என்று சொல்லி விட்டான். ஒருமாதத்தில் வேலையை ஏற்கும்படி கடிதம் வந்தது.

சந்திரனுக்கு வேலை கிடைத்தது மட்டுமல்ல சிட்னியை விட்டு வெளியேறுவதும் ஒரு தேவையாக இருந்தது. சிட்னி உலகத்தில் வாழ்க்கை செலவு கூடிய நகரங்களில் ஏழாம் இடத்தில் இருக்க்pறது. மத்திய தரத்து வாழ்;க்கை வாழ முடியும். ஆனால் வசதியுடன் வாழ்வது கடினம். வீட்டு வாடகை மிகவும் அதிகமானது. சந்திரனை பொறுத்தவரை சோபாவின் பெற்றோர் எப்போதும் மகளது குடும்பத்தை விட்டு விலக செல்லமாட்டார்கள். சுற்றிச்சுற்றி எப்படியும் மகளை வளைய வருவார்கள். எல்லோரும் சேரந்து இருப்பதற்கு குறைந்தது மூன்று அறை வீடாவது வேண்டும்.

இராசம்மாவில் சந்திரனுக்கு இருந்த வெறுப்பு மிகவும் குறைந்துவிட்டது. சோபாவையும் சுமனையும் பராமரிக்க மாமியால் தான் முடியும். இதனால் தான் சோபாவும் ஒருஅளவு குணமாகி வருகிறாள். நான் இந்த ஆய்வினை குறித்த காலத்துக்குள் முடிப்பதற்கும் மாமியே காரணம். சுயநலம் கலந்த நன்றி உணர்ச்சி இராசம்மாமேல் சந்திரனுக்கு சுரந்தது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: