குஸ்கோ- இன்கா நகரம்

dscn0203
கொலம்பியாவின் போகொட்டா விமான நிலயத்தில் காத்திருந்தபோது சில பெண்கள், குழந்தைகளை அழகான துணியால் கட்டி தோளில் ஊஞ்சலாக வைத்திருந்ததை கண்டேன். குழந்தைகள் அழாமல் அமைதியாக சிரித்தபடியே இருந்தார்கள். அந்தீஸ் மலைப் பகுதியில் வாழும் பெண்களிடம் இன்னமும் இந்த வழக்கம் மாறாமல் உள்ளது. மலையேறும்போது இலகுவாக பாரத்தைத் தூக்க ஏற்ப்பட்டது இப்பொழுது விமானமேறும் போதும் கடைப்பிடிக்கப்படுகிறது. விமான ஊழியர்களுக்கு இவர்கள் குழந்தைகளின் பிராமை கொண்டு செல்லும் வேலையைக் கொடுக்கவில்லை.

3310 மீட்டர் உயரத்தில் உள்ள குஸ்கோ எனப்படும் நகரம் பெரு நாட்டின் அந்திஸ் மலையின் ஒரு பள்ளத்தாக்கில் உள்ளது. விமானம் மலைக்கு மேலாக பறந்து தரை இறங்குவது மிகவும் அழகானது மட்டுமல்ல. மனத்துக்குள் மலைமுகட்டிலும் தட்டுப்படாது தரை இறங்கவேண்டும் என்ற பயத்தைக் உருவாக்கும்.

இன்கா மக்கள் இந்த நகரத்தை அவர்களது கச்சா மொழியில் குஸ்கோ என்பது தொப்புள் எனப் பொருள்படும்;. ஸ்பானியர் வந்தபோது இதுவே 11 மில்லியன் மக்கள் வாழ்த சாம்ராச்சியத்தின் தலைநகரம். தற்பொழுது கொஸ்கோவில்; 0.25; மில்லியன் மக்கள் வசிக்கிறார்கள். இந்த கச்சுவா மொழி பேசுவதாதால் கச்சுவா மக்களென தற்போது அறிப்படுவார்கள். இவர்களில் பெரும்பகுதியினர் அந்தீஸ் மக்களாக அடையாளம் காணமுடிந்தாலும் பெரும்பாலான ஸ்பானிய கலப்பு தெரிகிறது.

தென்னமரிக்காவின் முக்கிய உல்லாசப் பிராணிகள் செல்லும் இடமாகிய மச்சுபபிச்சுவுக்கு இங்கிருந்து நடந்தோ அல்லது இரயிலிலோ போகவேண்டும்.

ஆசிய நாட்டவர்களான எமக்கு தென்அமரிக்க தொலைவான நிலப்பகுதியாக இருப்பதன் காரணம் தூரத்தில் இருப்பது மடடுமல்ல. காலனித்துவ மரபில் வந்த நமது செய்திப் பத்திரிகைகள் தொடர்ச்சியாக எதிர்மறைச் செய்திகளையே நமக்கு காவிக் கொண்டுவருகின்றன. காலனி ஆதிகம் நீங்கிய பின்பாக இந்த நாடுகளில் நடப்பது இராணுவ ஆட்சியும், இடதுசாரி கொரில்லாக்களின் யுத்தமுமே என எதிர்மறைத் தோற்றத்தை பரப்பும் தேவை காலனித்துவ ஊடகங்களுக்கு இருக்கின்றன. நமது ஊடகங்களும் அதைப் பின்பற்றி விடயங்களை கொண்டு வருவதால் ஓரிரு அரசியல் தலைவர்கள் பெயர்களைத் தவிர மற்றவை நமக்கு நினைவுக்கு வருவதில்லை.

தென் அமரிக்காவும் மத்திய அமரிக்காவுமே நாம் உண்ணும் உணவில் பெரும்பாலானவையை எமக்கு கொடுத்தது. சோளம் உருளைக்கிளங்கு மிளகாய் கறி- மிளகாய் நிலக்கடலை எல்லாம் அங்கிருந்தே நமக்கு கிடைத்தன. தென்னமரிக்காவில் பன்னிரண்டாயிரம் விதமான உருளைக்கிழங்கு வகையில் 1200 வகை பெருவில் உள்ளது. நிலத்திற்கும் நீர்த்தன்மைக்கேற்ப பொருத்தமான கிழங்குவகையைப் பயிரிடுவார்கள். உருளைக்கிழங்கே இன்கா மக்களில் பிரதான உணவாக இருந்தது. வரலாற்றில் எக்காலத்திலும் பஞ்சத்திற்கான தடங்கள் இங்கில்லை.

இன்கா இனமக்கள் மிவும் பெரிய சாமராச்சியத்தை ஆண்டவர்கள். இவர்களது இராட்சியம் தற்போதய பெரு, சிலி,பொலிவியா, ஈகுவடோர் மற்றும் ஆஜர்ரீனா, கொலம்பியாவின் சில பகுதிகளை உள்ளடக்கியது. 5500 கிலோமீட்டர் வீதிகளை அமைத்து ஆண்டவர்கள். இவர்களது கச்சுவா மொழி 5000 வருடங்கள் பழமையானது. இதே அளவு பழமை வாய்ந்ததே களிமண்தட்டுகளில் எழுதிய பாபிலொனியரது எழுத்து வடிவமும. அந்த வகையில் கச்சுவா புராதன மொழிகளில் ஒன்றாகிறது. இவர்களது எழுத்துகள் கீப்பு என நூல் முடிச்சுகளில் அமைந்துள்ளது. ஐரோப்பியர் 15ம் நூற்றாண்டிலே பூச்சியத்தை ஏற்றுக்கொண்டார் ஆனால் அதற்கு முன்பாகவே இனகாவின மக்கள் பூச்சியத்தை பாவித்தார்கள்.

இவர்களது கட்டிடங்களையும் ஆடைகளையும் பார்த்த எனக்கு ஆச்சரியத்தை கொடுத்த சில விடயங்கள் உள்ளது. பொன், வெள்ளி, செப்பு போன்ற உலோகங்களை பிரித்து அதில் மிக அழகான உலோக வேலைகளை செய்தவர்கள், வெங்கல காலத்தைத் தாண்டி இரும்புக் காலத்திற்குள் செல்லவில்லை. இந்தியாவும் மத்திய கிழக்கினரும் 3500 வருடங்கள் முன்பு இரும்பையும், கரியையும் கலந்து உருக்கை செய்தார்கள்.இன்கா இனமக்கள் சக்கரங்கள் பாவிக்கவில்லை என்ற உண்மை தெரிந்தபோது மிகவும் வியப்பாக இருந்தது. பாரத்தை இழுக்கும் மாடுகள் இல்லை. வேகமாக செல்ல குதிரைகள் இல்லை. ஆனால் மாபெரும் சாம்ராச்சியத்தை 200 வருடங்களாக ஆண்டார்கள்.இவர்களது கண்டு பிடிப்புகள் இவர்களதே. எங்கிருந்தும் கடன் வாங்கவில்லை. இவர்களது ஆன்மீகம் ,மதம் என்பவை முக்கியமானவை. அவையும் உள்நாட்டில் உருவாகியவை

நாங்கள் குஸ்கோவில் தங்கிய இடம் ஓரு காலத்தில் இன்காகளின் அரச மாளிகையாக இருந்தது. பின்பு 16ம் நூற்றாணடில் குஸ்கோவை கைப்பற்றிய ஸ்பானியத் தளபதி தனக்காக புனருத்தாரணம் செய்த கவர்னர் மாளிகை. தற்பொழுது நவீன வசதிகளுடன் ஹோட்டேலாக்கப்பட்டிருந்தது. ஹோட்டேலின் வெளிச் சுவர்கள் முகப்பு மற்றும் பிரதான கட்டுமானங்கள் எல்லாம் இன்காவால் கட்டப்பட்டது. இன்னமும் உறுதியாக உள்ளது. வெளிசுவர்கள் சாந்து பூசாது பலகோணங்களைக் கொண்ட கருங்கற்களை அடுக்கி எதுவித இடைவெளியில்லாது கட்டப்பட்டிருந்தது. இப்படி கல்லுகள் எப்படி பொருந்துகின்றன என்பதை இன்னமும் தெளிவாக விளக்க முடியவில்லை. கருங்கற்கள் அமிலத்தால் ஒன்றாகின என்றும் ஒரு விளக்கமுள்ளது. எப்படிப் பார்த்தாலும் இன்காவின் கட்டிடக்கலை மிகவும் நுட்பமானது. முழுமையான குஸ்கோ நகரத்துத் தெருக்கள் சதுர வடிவமானது(Grid) மெல்பேனை நினைவுக்கு கொண்டு வந்தது. முழு நகரமும் பூமா என்ற புலியையின் வடிவத்தில் உள்ளது.

இயற்கைப் பாதுகாப்பு கொண்ட பள்ளத்தாக்கில் நகரம் அமைந்திருப்பது போர்வீரர்களால் இலகுவாக பாதுகாக்க முடியும். குஸ்கோவின் நான்கு பக்கத்தையும் வெளியூரோடு இணைக்கும் பாதைகள் மலைகளில் ஊடாக சென்றன.
இன்காவின் கட்டிடங்கள் புவி அதிர்சியைத் தாங்கக்கூடியவை என முன்பே அறிந்திருந்தேன். ஆனால் கட்டிடத்தைப் பார்த்தபோது அதன் உண்மை புரிந்தது கட்டிடத்தின் சுவர்கள் செவ்வகமானவையல்ல. ஒரு கூம்பு வடிவமானவை (trapezoidal) அந்த அமைப்பு புவியத்திர்ச்சியைத் உள்வாங்கும். கட்டிடங்களின் அத்திவாரத்தின் கீழ் சரளைகல்லுகள் பரவி இருப்பதால் முழுக்கட்டிடம் புவி அதிர்வின்போது நகர்ந்துவிட்டு மீண்டும் பழய நிலைக்கு திரும்பிவரமுடியும். தற்பொழுதுதான் கலிபோனியாவில் இப்படியான கட்டிடங்களுக்கு அத்திவாரம் போடுகிறார்கள்.

மதியத்தில் ஹோட்டேலுக்குள் போய் சேர்ந்ததும் எங்களுக்கு கொக்கோ இலையில் வடித்த தேநீர் தந்தார்கள். உயரத்தில் இருப்பதால் காற்றில் தேவையான அளவு பிராணவாயு இல்லை. அங்கு வாழ்ந்து பழக்கப்படாத எங்களுக்கு பிராணவாயு குறைவால் தலையிடி தலைசுத்தல் ஏற்படும். அதற்கு இந்த தேநீர் நல்லது என்றார்கள். இங்குள்ள ஹோட்டேல்களில் பிராணவாயு சிலிணடர்கள் வைத்துள்ளார்கள். தேவையானபோது கொண்டு வருவார்கள்

ஹோட்டலை விட்டு வெளியேறியறி வீதிக்கு வந்தபோது மெதுவான குளிர் வெயிலுடன் இருந்தது. காற்றில் கடப்பது போன்ற உணர்வு இருந்தது. மதியம் பசிக்கும் நேரமாகிவிட்ட போதிலும் பசி ஏற்படவில்லை.
வீதியில் வட்டமான முகத்துடன் மஞ்சள் நிறத்தில் சீனத்தோற்றத்தை அளித்தபோதும் விரிந்ததோள்களும் பலமான கைகளும் கால்களும் கொண்டவர்கள் இந்த கச்சுவா மக்கள். பலரில் ஸ்பானியக் கலப்புத் தெரிந்தது.

எமது ஹொட்டலுக்கு சிறிது துரத்தில் சான்டோ டொமிங்கே என்ற கிறிஸ்துவ ஆலயம் இருந்தது. அதில் ஏராளம் உல்லாசப் பிரயாணிகள் நின்றார்கள். முன்பகுதியில் கத்தோலிக்க ஆலயமாகவும் மற்றய பகுதிகள் தற்பொழுது இன்காக்களின் பகுதியாக பராமரிக்கப்படுகிறது. இந்த முழு பகுதியும் சூரியனுக்கான ஆலயம் (Sun temple – Qoricancha)) இருந்து. இந்துக்களுக்கு காசிபோல் புனிதமனது. 13ம் நூற்றண்டுகளில் கட்டப்பட்ட இந்த ஆலயம் முழு குஸ்கோ நகரை பூமா புலியின் வடிவமாகப் பார்த்தால் இந்த ஆலயம் வாலாக அமைந்து இருக்கிறது. உள்பகுதி நாலு பகுதிகளாக பிரிக்கப்பட்டு சந்திரன் நட்சந்திரங்கள் இடிமுழக்கம் வானவில் என்பற்றின் பகுதிகளாக இருந்தது. இதில் இன்கா அரச மம்மிகள் வைத்திருந்தார்கள் ஆலயத்தின் உள்புறம் வெளிப்புறம் மற்றும் கூரை அக்காலத்தில் தங்கத்தகடுகளால் சுவர்கள் மறைக்கப்பட்டிருந்தன். ஆலய முன்றலில் தங்கத்தில் பறவைகள் ஜகுவார் உருவங்கள் இருந்தன. ஸ்பானியர்கள் கைப்பற்றியதும் முழுத்தங்கமும் உருக்கப்பட்ட ஸ்பெயினுக்கு அனுபியதுடன் மம்மிகளை எரித்து ஆலயத்தை இடித்தார்கள். ஆலயத்தின் பெரும்பகுதிகளை இடிக்க முடியாதபோது அந்தப் பகுதிகளோடு செங்கட்டியால் கத்தோலிக்க தேவாலயம் கட்டினார்கள

1650 ல் இந்த பிரதேசத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் ஸ்பானியர்களால் கட்டப்பட்ட சகல கட்டிடங்களும் பாதிப்படைந்தன இந்த தேவாலயத்தின் ஸ்பானியரின் கட்டுமானம் சிதைந்து மீண்டும் இன்கா ஆலயம் வெளித்தெரிந்தது. மீண்டும் தளராமல் கத்தோலிக்க மதகுருமார்களும் ஸ்பானிய காலனியினரும் பல கத்தோலிக்க தேவாலங்;களையும் மடாலாயங்களையும் புனருத்தாரணம் செய்தார்கள.

1950ல் மீண்டும் வந்த நில அதிர்வில் ஸ்பானியர்களது கட்டிடங்கள் உடைந்து இன்காகளின் கட்டங்கள் மீண்டும் வெளிவந்ததால் தற்பொழுது குஸ்கோவில் இன்கா கட்டிடங்களைக் கொண்ட நகராக வெளித்தெரிகின்றது.
வழிகாட்டியுடன் இரண்டு நாளில் ஆலயத்தின் உள்ளே செல்வதற்காக ஏற்பாடு உள்ளதால் நகரத்தை நோக்கி நடந்தோம். பாதைகள் எல்லாம் கருங்கற்கள் பதித்த நகரம் தற்பொழுது நகரில் அரைவாசியினர் உல்லாசப்பிரயாணிகளாகத் தெரிந்தனர்.

யார் இந்த இன்கா மக்கள்?

சூரிய வம்சத்தில் உதித்தவர்கள் எனக் தங்களைக்க சொல்லும் இவர்கள் பொலிவியாவுக்கும் பெருவிற்கும் இடையே உள்ள மிகப் பெரிய வாவியில் இருந்து வந்தார்கள் என அவர்கள் ஐதிகம் சொல்லுகிறது. ஆண்டவனால் களிமண்ணில் இருந்து படைக்கப்பட்ட நாலு ஆண்களும் நாலு பெண்களும் வளமான பிரதேசத்தை தேடிப் பயணம் செய்து இறுதியில் குஸ்கோ பள்ளத்தாக்கை அடைந்தார்கள் அவர்கள் கையில் வைத்துதிருந்த கோலை ஊன்றிய இடம் இந்த ஆலயம் அமைந்திருக்கும் இடமாகும் என அவர்களது ஐதீகக்கதைகள் சொல்கிறது இந்த இடத்தில் தங்களது தந்தையான சூரியனுக்கு கட்டிய ஆலயம் என்பதால் தொடர்சியாக இந்த ஆலயம் அவர்களுக்கு முக்கியத்துவமானது.இவர்களது ஆட்சியில் ஒரு தாரதிருமணம் அதுவும் 20 வயதுக்கு மேல் ஆண் செய்யமுடியும். குற்றங்களைத் தண்டிப்தற்காக சட்டங்கள் உருவாக்கப்பட்டன.

இன்கா மன்னர்களில் 1438-1471 ) இருந்த பச்சக்குட்டி (Pachacuti ) மிகவும் பெருவீரனாக இன்கா சாம்ராச்சயத்தை விஸ்தரிததபோது; வென்ற இடங்களில் எல்லாம் சூரியனுக்கு ஆலயத்தை, குஸ்காவில் உள்ள ஆலயத்தின் பிரதியாகக் கட்டும்படி பணித்தான்
pachacuti-conquestpachacuti
இன்கா மக்கள் மூதாதயர்களை வழிபடுவதால் தங்களது இறந்தவர்களை மம்மியாக்கி காப்பதுடன் பண்டிகை காலங்களில் அவைகளை வெளியே கொண்டுவந்து உணவுகள் கொடுத்தும் ஊர்வலமாக கொண்டாடுவாகள். இதற்கப்பால் மற்றய பிரதேசங்களை வெல்லும்போது அவர்களது மம்மிகளும் குஸ்கோவுக்கு இங்கு கொண்டு வரப்படும். இதன் மூலம் புதிதாக வந்தவர்கள் தங்களது மூதாதயர்களின் மம்மிகள் இருந்த இடத்தின் மீது பற்றாக இருப்பது, தொடர்ந்தும் இன்காக்களின் சாம்ராச்சியத்தைப் பெரிதாக்க உதவியது

பொது இடங்களான பிளாசா, ஆலயங்கள் மற்றும் வீதிகளைப் தொடர்சியாக பராமரிப்பதற்பதும், நாட்டின் சனத்தொகை கணக்கெடுப்பு, உணவுகள் பாதுகாப்பது, விநியோகிப்பதை என்ற விடயங்களை கவனிக்க முழு பிரதேசத்திற்கும் அதிகாரிகள் கணக்காளர்களை நியமித்திருந்தார்கள்.

மியுசியத்திற்கு சென்றபோது தென்அமரிக்காவில் இன்கா இனமக்களின் அரசிற்கு முன்பு பல நாகரீகங்கள் உருவாகி அழிந்துள்ளது புரிந்தது. கடற்கரைப் பிரதேசத்தில் இருந்தவர் பிற்காலத்தில் இயற்கையின் அழிவால் (El Nino) அவர்கள் உள்நாட்டுக்கு சென்று படிப்படியாக சென்றார்கள். அவர்கள் ஒருவருடன் ஒருவர் மோதியழிந்தும்,கலந்து உள்வாங்கி பல நாகரீகங்களை உருவாக்கியுளளார்கள். அந்தீஸ் மலைப் பிரதேசத்திலும் இருந்தவர்கள் தொடர்சியாக அமேசன் பிரதேசத்தில் உள்வர்களோடு தொடர்பு கொண்டு வாழ்தார்கள்.

தென்னமரிக்காவில் ஒரே ஒரு படைப்பு கடவுள் மனித உடலில் புலி முகம் கொண்டதன் பிரதிபலிப்பாக இருந்தது. (Fang Deity) இவற்றுடன் தொடர்சியாக தொடர்பு கொள்ளும் ஷமனிசம் (Shamanism)) இருந்தது. நோய்கள் எல்லாம் கெட்டஆவிகளால் உருவாகுவதாகவும் நல்ல ஆவிகள் தொடர்ந்து புவியில் வசிப்பதாகவும் நம்பினார்கள் . இதனாலயே மம்மிகளை உருவாக்கி பாதுகாத்தார்கள். எகிப்தியர்களுக்கு இரண்டாயிரம் வருடங்கள் முன்பாக தென்னமரிக்க மக்கள் மம்மிகளை உருவாக்கினார்கள் என்பது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. எகிப்தியர்கள் மன்னர்களையும் பிரபுக்களையும் மம்மிக்கினார்கள் இங்கு சாதாரண மக்களது உருவங்களும் மம்மியாக்கப்படும். மம்மிகளுக்கு உணவுடன் இவர்களது பாரம்பரியமான பியரையும் வழங்குவார்கள்.

தங்கத்தையும் வெள்ளியையும் அகழ்தெடுத்து அதில் ஆபரணங்கள் செய்தல் இவர்களிடையே இருந்தாலும் இவைகள் பெறுமதி கொண்டவையாக இருக்கவில்லை. இறுதிவரையும் பண்டமாற்று வர்த்தகமே இருந்தது. தங்கம் வெள்ளியில் செய்தவை அலங்காரப்பொருளாகவே பாவித்திருக்கிறார்கள் என்பதை பாத்திரங்கள் பொம்மைகள் உருவாக்கியதில் தெரிகிறது. செம்பையும் தகரத்திலும் ஆயுதங்கள் உருவாக்கி வைத்திருந்தார்கள். கட்டிடவேலைக்கு மரங்களையும் ஆகாயத்தில் இருந்து வந்த கல்லையும் சுத்தியலாக பயன்படுத்தியிருக்கறார்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: