
“உங்களிடம் நான் ஒன்று கேட்கிறேன். உண்மையை சொல்ல வேண்டும். என்னைக் கல்யாணம் செய்வதற்கு முன்பு யாரையாவது காதலித்தீர்களா? “
சந்திரனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
‘இரு வருடங்களில் கேட்காத கேள்வியை கேட்கிறாளே! யாராவது அவளிடம் சொல்லி விட்டார்களா? இலங்கைத் தமிழர்கள் அதிகம் வாழும் ஏரியா தான் ஓபன். சோபாவோ பெற்றோரோ மற்றவர்களோடு பேசிப் பழகுவது குறைவு. தாங்களும் தங்கள் குடும்பமும் என வாழ்பவர்கள் இவர்கள். பாடசாலையில் ஒன்றாக படித்தவர்களை தவிர மற்றவர்களை தெரியாது. ஏன்இப்படி தனியாக இருக்கிறார்கள் என சந்திரன் கூட நினைத்தது உண்டு. இப்படியான தனிமை குடும்ப உறவுகளில் ஓர் இறுக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. இராசம்மாவின் மகளுக்கு திருமணம் நடந்த பின்னும், சோபா தனக்கு உரிமையானவள் என்ற உணர்வும், அதன் விளைவுகளும் சந்திரனைப் பல தடவை பாதித்தது.
“ஏன் பதில் இல்லை. காதலித்தீர்களா? பல்கலைக்கழகத்தில் எல்லோரும் போய் பிரெணட், கேள் பிரெண்ட வைத்திருப்பார்கள் என கேள்விப்பட்டேன்.”
“அப்படி கேள்பிரெண்ட இருந்தால் என்ன? நான் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது நீ பக்குவப்பட்டு இருக்க மாட்டாய்.” என சிரித்தான்.
இதைக்கூறியபோது மெய்யாகவே சந்திரனுக்கு சிரிப்பு வந்தது.
“சுற்றி வளைத்துப் பேச்சை திருப்பாமல் உண்மையாக சொல்லுங்க .இருந்ததா, இல்லையா? “
“உனக்கு பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நான் படித்த காலத்தில் என்னோடு ஒன்றாகப் படித்த பெண் ஒருவளோடு சிநேகிதம் இருந்தது. அதற்கு மேல் ஒன்றுமில்லை.”
“அவளது பெயர் என்ன? “
“மஞ்சுளா”
“ஏன் அவளைக் கல்யாணம் செய்யவில்லை? “
“உன்னை கல்யாணம் செய்யவேண்டும் என எனக்கு தலையில் எழுதப்பட்டிருந்தது.”
“மழுப்பாமல் சொல்லுங்கள் ஏன் அவளது குடும்பத்தில் ஒத்துக் கொள்ளவில்லையா?ஏதாவது சாதிப் பிரச்சனையா? “
“என்னைப் பார்த்தால் சாதி வித்தியாசம் பார்ப்பவன் போலவா தெரிகிறது?. மஞ்சுளாவின் தந்தை படித்துக் கொண்டிருக்கும்போது அகாலமரணம் அடைந்து விட்டார். ஐந்து பிள்ளைகளில் அவளே மூத்தபிள்ளையாக இருந்ததால் குடும்ப பொறுப்பு அவளது தலைமேல் விழுந்தது. மஞ்சுளாவிற்கு நைஜீரியாவில் வேலை கிடைத்ததும் போய்விட்டாள். அவளது பொறுப்புக்களை தானே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறிவிட்டாள். அவளை தடுத்து அவளது பொறுப்புக்களை நான் எடுத்துக் கொள்வேன் எனகூற எனக்கு துணிவு இல்லை. நீயே பார்க்கிறாய் அவுஸ்திரேலியாவின் ஸ்கொலசிப்பில் பணத்தில் நாலு வருடங்களாக படிக்கிறேன். இருவரும் மனஒற்றுமையுடன் விலத்திக்கொண்டோம். இப்படியான பிரிவை காதல் தோல்வி என மஞ்சுளாவும் எடுத்துக் கொள்ளவில்லை. நானும் பெரிதுபடுத்த வில்லை.”
“நீங்கள் எவ்வளவு சுலபமாக எடுத்துக் கொண்டீர்கள்? “
“நான் தமிழ் சினிமா நாயகன் போல் நடக்கவில்லை என்றா சொல்கிறாய்.? “
“மஞ்சுளாவை மறந்து விட்டீர்களா?.”
“மஞ்சுளா எனது காதலி என்பதை மறந்து விட்டேன் இன்னும் சிநேகிதி என்று மனதில் நினைக்கிறேன். உனக்கு ஏதாவது சிநேகிதம் இருந்ததா? “ எனக் கேட்டு பேச்சை மாற்ற முயன்றான்.
“ஒருவரும் இல்லை. மீனா என்று பெண் சிநேகிதி இருந்தாள். சமீபத்தில் அவளுடன் ரெலிபோனில் பேசினேன். தெரியுமா? அவள் கனடாவில் இருக்கிறாள்”.
“அப்படியா?”
“ஓரு விடயம் சொல்லவேண்டும் நான் இரண்டு மணி நேரம் அவளுடன் பேசினேன் “
“அடிப்பாவி, ரெலிபோன் பில் கட்ட இந்த மாத சம்பளப்பணம் முடிந்துவிடும். ஏன் அம்மா இல்லையா? நீ பேசும் போது.”
“என்னைப் பேச வேண்டாம். நானும் நல்ல மூட்டில் இருந்தேன். அப்பா அம்மா கோம்புஸ் போய் விட்டார்கள்.”
சந்திரனுக்கு மனத்தில் “இவளுக்கு நோய் குணமாகி வருகிறது. என நினைத்தேன். இன்னுமா மாறிவரும் மனநிலையில் இருக்கிறாள “.
மௌனமாக படுத்திருந்த சந்திரனிடம் “கமோன் கமோன் “ என அணைத்தாள்.
“ஏய் என்ன ரன்விக்கில் குதிரைப் பந்தயத்தில் ஓடும் ரேஸ் குதிரைகளை கூப்பிடுவது போல் கூப்பிடுகிறாய்”
“தயவு செய்து வாருங்கள் நான் உங்களோடு சண்டை பிடிக்க மாட்டேன். நீங்களும் என்னில் பிழை காணக் கூடாது.”
வேறுவழியில்லாமல் சோபாவை அணைத்தான். அன்றைய இரவு சோபாவின் இரவாக நீண்டது.
————-
சந்திரனால் மனத்தை ஒருமுகப்படுத்த முடியவில்லை.
நாலு வருடங்கள் செய்த ஆய்வின் தரவுகளை வைத்துக்கொண்டு மூன்று மாதத்தில் எழுதி முடிக்க வேண்டும். பேராசிரியர் முடிவுகளை கட்டுரையாக எழுதி விஞ்ஞான இதழ் ஒன்றில் வெளியிடவேண்டும் என கூறிவிட்டார். அவரை பொறுத்தவரை கட்டுரை தரமான விஞ்ஞான இதழில் வந்தால் தான் அந்த ஆய்வுக்கு மதிப்பு உண்டு. அதைக் கொண்டே ஆராய்ச்சிக்கு பணம் பெறமுடியும். ஆய்வுக்கு பணம் பெறுவதும் ஒருவிதத்தில் ஒலம்பிக்கில் வெற்றி பெறுவது போல் போட்டி நிலவும். பேராசிரியர் பணம் பெற்றால்தான்ஆராய்ச்சி மாணவர்களை நியமிக்க இயலும்.
மேசையில் இருந்து சிந்தித்து கட்டுரை எழுத முடியவில்லை. சோபாவும் ஜீலியாவும் மாறிமாறி வந்து போனார்கள். மனவோடை கலங்கி கிடக்கிறது. இந்த விடயத்தை எவரிடமும் பகிர்ந்து கொளளவும் இல்லை. இரகசியம் உடலில் வந்த கட்டிபோல நாள் போகப் போகப் பாதித்தது. இவ்வளவு காலம் மறைத்தது போதும். பிரண்ட்ஸ் யாரிடமாவது எனது அந்தரங்கங்களை பகிர்ந்து கொள்ளவேண்டும் என சந்திரன் தீர்மானித்தான்.
குண்டல்ராவின் அறைக்க சென்று “குண்டல்,உன்னிடம் ஒரு விடயம் பேச வேண்டும்”
“பேசு… எனக்கு நேரம் இருக்கிறது.”
“இங்கே பேச இயலாது. இரவு எனது அறைக்கு வருகிறாயா?” “
“ அப்படி என்ன இரகசியம்? “ என்றான் சிரித்தபடி.
“அப்படி இரகசியமில்லை. ஆனாலும் – -.”
“அப்ப என்வீட்டுக்கு வா நீ தனியேதான் இருக்கிறாய். எங்கள் வீட்டில் இரவு சாப்பிடலாம்.”
“தயவு செய்து என் வீட்டுக்கு வா” என்றான் திட்டவட்டமாக.
“எட்டு மணியளவில் வருகிறேன்.”
அன்று இரவு சந்திரன் குண்டல்ராவுக்காக காத்திருந்தான். வீட்டில் இருக்கும் தென் கொரியத் தம்பதிகள் வெளியே போய்விட்டார்கள். ஆட்டிறைச்சியை வெட்டி சமைத்து விட்டு பியர் குடித்தபடி காத்திருந்தான்.
கதவை தட்டிக்கொண்டு உள்ளே வந்த குண்டல்ராவ் நேரடியாக பிரிஜ்க்கு சென்று ஒரு பியர் போத்தலை கையில் எடுத்தபடி “எங்கே கொரிய தம்பதிகள்? என்ன அவசரமான விடயம்? என்ன சமையல்” என்று பல கேள்விகள் அடுக்கிக் கொண்டே போனான்.
குண்டல்ராவின் பழக்கமே அப்படிதான். முதல் கேள்விக்கு விடையை எதிர்பார்க்காமல் அடுத்த கேள்விக்கு தாவுவான்.
“குண்டல், நான் ஒரு புயலில சிக்கி இருக்கிறேன். நீ என்னோடு கோல்ட்கோஸ்ட் வந்தது நினைவிருக்கிறதா? நீ இரண்டுநாளில் கொன்பிரன்ஸ் முடித்துவிட்டு வந்து விட்டாய் நான் அங்கு ஓர் இரவு அதிகமாகத் தங்கி வந்தேன். அன்று தொடங்கியது எனது பிரச்சனை” என்று எதையும் மறைக்காமல் கூறினான்.
“அடப்பாவி இவ்வளவு விடயங்கள் நடந்திருக்கு, எப்படி எனக்கு சொல்லாமல் விட்டாய்? “ என்று ஆச்சரியத்துடன் கேட்டான்.
இவை எல்லாம் சொல்லக் கூடியதா? “ எனச் சந்திரன் ஆத்திரத்துடன் பதில் கொடுத்தான்.
“இப்ப என்ன செய்யப் போகிறாய்.?”
“எனக்கு அதுதான் தெரியவில்லை. இரண்டு பெண்களிடம் தொடர்பு வைத்திருப்பது எனது ஆத்மாவுக்கு அசிங்கமாக இருக்கிறது.” ஒவ்வொரு முறையும் பொய்யாக நடப்பதும் மறைப்பதும் எவ்வளவு கஸ்டமாக இருக்கிறது தெரியுமா? “
“ஜுலியாவுக்கு உனது நிலைமைளை விளக்கிக் கூறிவிட்டு தொடர்பை துண்டித்துக்கொள். இதுதான் நீ செய்யக் கூடிய ஒரே காரியம் “
“ஜுலியாவிடம் எப்படி சொல்வேன். நட்பை துண்டித்துக் கொள்ளுதல் எவ்வளவு கஸ்டம். சோபாவை மனநல மருத்துவரிடம் கொண்டு செல்ல கூறி முகவரியை தந்ததும் ஜுலியாதான். எனது நிலையில் அவளது நட்பு எனது வலிக்கு ஒத்தடமாக இருக்கிறது.”
“அப்ப என்ன செய்யப் போகிறாய?”
“என்னால் எதுவும் முடிவு எடுக்க முடியவில்லை. இவ்விடயத்தை உன்னோடு பகிர்ந்து கொள்ளும் போது ஆறுதலாக இருக்கிறது. எங்கள் நாட்டை சோர்ந்தவர்களோடு இதைப்பற்றி பேசினால் என்னை சமூக விரோதியாக பிரகடனம் செய்து விடுவார்கள். சிண்டி போன்றவர்களுக்கும் நான் படும் அவலம் புரியாது. உயிருள்ள பிராணியை அப்படியே விழுங்கியது போன்ற உணர்வுகள் ஏற்படுன்றது. உன்னோடு பேசியதில் கொஞ்சம் பாரம் குறைந்துள்ளது.”
“அடுத்த கிழமை என் வீட்டுக்கு வா”.
தனது கையில் உள்ள வெறும் பியர் போத்தலை குப்பைக் கூடைக்குள் போட்டுவிட்டு வெளியேறினான்.
வாசலில் பனிப்புகையை ஊடறுத்துக் கொண்டு குண்டலாவ் நடப்பது தெரிந்தது. அவனது உருவம் மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்த சந்திரன் முதல்முறையாக குண்டல்ராவை பார்த்துப் பொறாமைப் பட்டான். “ஏன் என் வாழ்க்கையும் இவனது வாழ்க்கைபோல் நேராக சலனமின்றி ஓடும் நதிபோல் இருக்க கூடாது”.
சமையல்அறையின் பிறிஜில் இருந்து மீண்டும் ஒரு புதிய பியர் போத்தலை ஒன்றை எடுத்து அதன் மூடியை திருகினான்.
தொடரும்
மறுமொழியொன்றை இடுங்கள்