
சோபா காலையில் படுக்கையில் இருந்தபடி தனது கடந்த காலத்தை இரை மீட்டுக் கொணடிருந்தாள். எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளபோது நினைக்க கூடியது கடந்தகாலம் மட்டும்தானே. எதிர்காலம் இல்லாத முதியவர்கள் மட்டும் தான் கடந்த காலத்தை நினைப்பார்கள். பதினெட்டு வயதில் திருமணமாகி பத்தொன்பது வயதில் குழந்தையைப் பெற்று இருபதாவது வயதில் கடந்த காலத்தில் மிதப்பவளின் மனோநிலையை என்னவென்று சொல்வது?
“தங்கச்சி இந்தா கோப்பி” என்று கையில் கொடுத்தார் இராசநாயகம்.
கையை நீட்டி மெதுவாக வாங்கியவள் தகப்பனின் முகத்தை பார்க்க வில்லை.
“பிள்ளை என்ன யோசிக்கிறாய்? “
………………
“மருந்தெடுத்தனியே? “ என அங்கலாய்த்தார்.
“அப்பா என்னை நீங்களும் நோயாளியாக்குகிறீர்கள் சந்திரன் அப்படி நினைத்துதான். வீட்டை விட்டுவிட்டு போய்விட்டார். நீங்களும் அப்படி என்னை நடாத்தாதீர்கள்.” என எரிச்சலுடன முனகினாள்.
“பிள்ளை, நான் என்ன சொல்லிப்போட்டன். மருந்து எடுத்தனியோ என்றுதான் கேட்டேன். இரவு முழுக்க ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்தாய். அது தான் எனக்கு கவலையாக இருந்தது.”
“மருந்து எடுத்தனான், நல்லா இருக்கிறன். இப்ப போதுமா!” என்றபடி யன்னலை பார்த்தாள்.
காலை பத்து மணி இருக்கும் நீலம் போட்டு வெளுத்த வெண்மையான வானத்தில் புகைநிறத்தில் சில மேககூட்டங்கள் சிட்னி சாலையில் ஓடும் வாகனங்கள் போல் ஓடின. பலவித தோற்றங்களில் ஓடும் மேகங்களில் ஒன்று புகைநிற மேகக் கப்பல் போல் அமைந்திருந்தது.
‘இப்படி ஒரு கப்பலில் தானே யாழ்ப்பாணம் சென்றேன். மற்றவர்களை எல்லாம் அலைகளின் ஆட்டத்தில் கப்பலின் உள்ளே வாந்தி எடுத்தனர் கப்பல் எங்கும்,வாந்தியின் புளித்த மணம் நிறைந்திருந்தது. அப்பா அம்மா கார்த்திக்கூட வாந்தி எடுத்தார்கள். ஏன் எனக்கு மட்டும் வரவில்லை. அம்மாவின் மடியில் தலை வைத்திருந்தேன். ஆதனால் தான் வாந்தி வரவில்லையா? ஒருவீதியில் ஜீப்பின் வெளிச்சத்தில் இரத்தம் வழிய நின்றேனே. அதேபோல அம்மாவுக்கு முன் நிர்வாணமாக நின்றது நினைவுக்கு வரவிலை. பாத்ரூமில் கூட ஏன்டி உடுப்புடன் குளிக்கிறாய் என சத்தமிடுவாளே.
சுகமான நினைவுகள் இந்த மேக கூட்டம் போல் வேகமாக ஓடுகின்றன. கெட்ட நினைவுகள் துர்நாற்றம் போல் அந்த இடத்தை விட்டு விலகினாலும் மணக்கிறதே. உடலில் பட்ட அழுக்கை சோப்பால் கழுவ முடிகிறது. மனதில் பட்ட அழுக்கை என்ன செய்வது?
நல்ல உணர்வுகளும், கெட்ட உணர்வுகளும் மாறிமாறி வருவதைத்தான் ‘பைப்போலர் நோய்” என்கிறார்களா? என்னால் எப்படி கெட்ட நினைவுகளில் இருந்து மீள முடியும்? அப்பா அம்மாவுக்கு கூட புரியாது. என்னை நோயாளி என நினைத்து சிறு குழந்தை போல் கவனிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். சந்திரனும் என்னை விட்டு போய்விட்டாரா? வாழ்க்கையில் என்னோடு தொடர்ந்து வருவார் என நினைத்திருந்தேனே. வாரத்துக்கு ஒருமுறை வீட்டுக்கு வருகிறது என்னைப் பார்க்கவா, அல்லது மகனைப் பார்க்கவா.?’
மனதின் ஓட்டத்தை இராசம்மா கலைத்தாள். “இந்தா சுமனைப்பிடி. நான் அரிசி போடவேண்டும்”.
சுமன் அரிசிப்பல்லைக் காட்டி சிரித்தான்.
“எனக்கு மிகவும் அவசரமாகப் பிறந்து என்னை தாயாக்கியதுமல்லாது இவரது அச்சொட்டாக பிறந்து இவரை நினைவுபடுத்துகிறானே” என்று கூறியபடி அணைத்து முத்தம் கொடுத்தாள்.
“வாடா, உங்கப்பனுக்கு போன் பண்ணுவம்.” என கூறிக் கொண்டே சுவரில் தொங்கிய தொலைபேசியின் நம்பரை அழுத்தினாள்.
தொலைபேசியில் சந்திரன், “எப்படி இருக்கிறாய்.” என அன்பாக விசாரித்தான்.
“நல்லா இருக்கிறேன். எப்ப வீட்டை வருகிறீர்கள்? “
“வெள்ளிக்கிழமை வருகிறேன்.”
“எனக்கு உங்களைப் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது. இப்படியே விட்டால் என்னை மறந்து விட்டுவிடுவீர்கள்”
“விசர்க்கதை கதைக்காதே. சுமன் எப்படி? “
“நல்லா இருக்கிறான். இன்றைக்கு வருவீர்களா? “
“எவ்வளவு வேலை இருக்கு. உடன் வரச்சொல்கிறாய்”?
“உங்களுக்கு என்னில் அன்பில்லை என்றால் ஏன் கல்யாணம் செய்ய வேண்டும்…….;?” என இழுத்தாள்
“இங்க பார். இந்த பேச்சை நிறுத்து. .சரி வாறன். ஆனால் ஏழுமணி செல்லும்.”
சந்திரனுக்கு தர்ம சங்கடமாகி விட்டது. இரண்டு பெண்களுக்கு இடையில் அகப்பட்டு அவதிப்படும் நிலைமை. ஜுலியாவிடம் இன்று வருவதாக உறுதியளித்தான. வார இறுதியில் சோபாவிடம் செல்வதும் வாரநாட்களில் ஜுலியாவிடம் செல்வதும் வழக்கமாகி விட்டது. ‘இன்றைக்கு இப்படி வரச்சொல்லி சோபா கட்டாயப்படுத்துகிறாளே ஜுலியாவுக்கு வருவதாக சொல்லிவிட்டேன் இரண்டு பேரையும் எப்படி சமாளிப்பது. ஓரே வழிதான். மதியத்துடன் ஜுலியா வீட்டுக்கு சென்று விட்டு மாலை சோபாவிடம் செல்லலாம். இரவு நேரங்களிலும் வேலை செய்வதால் ஆராச்சியை எழுதுவதில் எதுவித பிரச்சனையில்லை. சிண்டியிடம் சொல்லிவிட்டு மதியத்தோடு புறப்படலாம்’.
புறப்பட்ட ஒருமணி நேரத்தில் ஜுலியாவின் வீட்டுக்கு முன்பாக நின்றான். சிட்னி நகர வாகனங்கள் எல்லாம் இவனது ஏக்கத்துக்கு இணங்கி வழிவிட்டது. போல் இருந்தது. முன்வாசல் சாவி இப்போது சந்திரனின் கைவசம் உள்ளது. கதவை தட்டாமல் மெதுவாக திறந்தான்.
“ஏன் உங்களுக்கு வேலை செய்ய மனமில்லையோ? “ என்றாள் ஜுலியா.கட்டிலில் படுத்திருந்தபடி.
“உன்நினைப்பு சிட்னியின் மேற்குப்பகுதியில் இருந்த என்னை தென்கிழக்குக்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது” என்று கூறியபடி அவளது போர்வையை உயர்த்தினான். முழுநிர்வாணமாக படுத்ததிருப்பது கண்டதும் நாக்கில் உள்ள ஈரம் காய்ந்தது.
“என்ன இப்படி?” எனக்கூறி காலணிகளை கழட்டினான்.
““இப்போதுதான் குளித்துவிட்டு வந்தேன். நீ வருவாய் எனத்தெரியும்.”
“நாலுமணிக்கு தானே வருவதாக இருந்தேன். இப்போது இரண்டுமணிதானே ஆகிறது.”
“நீ வரும்வரை உன்னை நினைத்துக் கொண்டு நிர்வாணமாக படுத்திருப்பது எனத் தீர்மானித்தேன்”
‘நல்லவேளை நான் வந்தது. இல்லாவிட்டால் எவ்வளவு ஏமாற்றம். எதிர்பார்த்திருந்து காத்திருப்பது கொடுமையானது’ என நினைத்தபடி போர்வைக்குள் தஞ்சமாகினான்.
உடல் உறவில் ஈடுபட்டாலும் உள்ளத்தில் ஒருமூலையில் சோபாவைக் காண வீட்டுக்குப் போக வேண்டும் என்ற எண்ணம் காலணிக்குள் சிக்கிய சிறிய சரணைளக்கல் போல் உறுத்தியது. தூக்கி எறியவும் முடியவில்லை. அதேவேளையில் பொறுத்துக் கொள்ளவும் முடியவில்லை.
“ஏன் சந்திரன் ஏதாவது பிரச்சனையா? “
‘எவ்வளவு துல்லியமாக கணக்கு போடுகிறாள்’ என்று நினைத்துக் கொண்டு “பெரிதாக எதுவும் இல்லை இன்றைக்கு சோபா போன் பண்ணி வீட்டுக்கு வரும்படி வற்புறுத்தினாள்.நான் உனக்கு ஏற்கனவே வருவதாக சொல்லியிருந்தேன்”.
“நீ சோபாவிடம் போயிருக்க வேண்டும். எனக்குத் தொலைபேசியில் சொல்லி விட்டுச் சென்றிருக்கலாம். மனபிறழ்ச்சியில் இருப்பவளுக்கு உனது ஆதரவு தேவை.”
“உனக்கு ஏமாற்றமாக இருக்கும் என நினைத்தேன்.”
“சந்திரன் உன்னை எனது நல்ல நண்பனாக கருதுகிறேன். நீ திருமணம் ஆனவன் என தெரிந்து கொண்டே உன்னுடன் உறவு கொள்கிறேன். இது சரியா பிழையா என தற்போது நான் சிந்திக்க போவதில்லை. ஒருவிதத்தில் உனக்கும் எனக்கும் இப்படியான உறவு தேவையாக இருக்கிறது. ஓருவரை ஒருவர் புரிந்து கொண்ட அதே வேளையில் எங்களையும் நாங்கள் ஏமாற்றவில்லை. உன்மனைவி மகனுக்கு நீ முதலிடம் தரவேண்டும். அவர்கள் உன்னை நம்பி வாழ்கிறாரகள். நீ வராமல் இருந்தால் எனக்கு ஏமாற்றம் இராது என பொய் சொல்ல நான் தயாராக இல்லை. ஆனால் கோவிக்க மாட்டேன்.”
சந்திரன் எதுவும் பேசவில்லை.
‘இவளால் எப்படி இப்படி பேசமுடிகிறது. நான் இவளுடன் உறவாடும்போது குற்ற உணர்வுடனும் அதேவேளை இவளால் நியாயமான உணர்வுகளுடன் எப்படி இருக்க முடிகிறது.?
“ஜுலியா உன்மேல் எனக்கு அன்பா, ஆசையா ,இல்லை மதிப்பா என தெரியவில்லை?.”
“சரி குளிப்பதற்கு வா. இல்லாவிட்டல் மனைவியிடம் பிடிபட்டு விடுவாய்.”
சவரின் கீழ் சந்திரனை சிறுகுழந்தையை குளிப்பாட்டுவது போல் குளிப்பாட்டினாள்.
‘எப்படி இவளால் எந்த பொறாமையும் எரிச்சலும் இல்லாமல் உன் மனைவியிடம் போ என கூறமுடிகிறது. இப்படிப்பட்ட பெண்களின் நட்பு கிடைக்க நான் அதிஸ்டம் செய்திருக்க வேண்டும். அவளது மனம் கூட எவ்வளவு காயம்பட்டு உள்ளது. இவள் கடந்த பாதை எவ்வளவு கடினமானது. பெண்கள் விடயத்தில் நான் அதிஸ்டசாலியானதால் நல்ல மூன்று பெண்களை சந்தித்தேன். அதேவேளை என்னை துரத்தும் தூரதிர்ஸ்டத்தால் இவர்கள் ஒருவரோடாவது சரியாக வாழ முடிவில்லை. இதற்கு என் வளர்ப்புத்தான் காரணமாக இருக்கவேண்டும்.. நான் வாழ்ந்த சமூகவாழ்வியல் தான் அடிப்படைக்காரணி. மகிந்த அடிக்கடி சொல்லும் “சரியான யாழ்பாணத்தான்” என்ற வார்த்தையில் உண்மை உள்ளதுதான்’.
ஜுலியாவின் வீட்டை விட்டு வெளியேறும்போது ஆறுமணிக்கு மேல் ஆகிவிட்டது. மேற்கு சிட்னி செல்லும் பிரதான பாதையில் கார் நத்தை போல் ஊர்ந்து சென்றது.
மெதுவாக கார் சென்றதால் மனசாட்சியின் நெருடல் பலமாக இருந்தது. காலியான பக்கத்து சீட்டில் மனச்சாட்சி உட்கார்ந்துகொண்டு, அதுவும் சீட் பெல்ட் போடாமல் சந்திரனை எச்சரித்தது. “நீ ஒரு மனிதனா? அந்நிய பெண்ணிடம் உடல் உறவில் ஈடுபட்டு விட்டு உன்னை ஆவலுடன் எதிர்பார்க்கும் மனைவியிடம் போகிறாயே.”
“எனக்கு சோபாவிடம் வாழும் வாழ்க்கை நிறைவில்லை. மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் அவளை நெருங்க முடியவில்லை. எனது காதல் வாழ்க்கை ஆபிரிக்கா நாடுகளின் அகதிகளின் உணவு நிலை போன்று உள்ளது. எவ்வளவு காலம் இப்படி வாழ்க்கை நடத்த முடியும்?. மனிதாபிமானத்தில் நான் சோபாவோடு ஒன்றாக வாழ்ந்தாலும் அது எப்படி தாம்பத்திய வாழ்க்கையாகும்.” இது சந்திரனின் சமாதானம். மனச்சாட்சி விடவில்லை.
“இப்பொழுது ஜுலியாவுடன் வாழும் வாழ்க்கை எவ்வளவு காலம் நீடிக்கும்?. சமூகத்தைப் புறக்கணித்தாலும் இது கள்ள காதல் தானே? உன்னிடம் ஜுலியாவுக்கு எவ்வித எதிர்பார்ப்பும் தற்போது இல்லை. எவ்வளவு காலத்துக்கு எதுவித எதிர்பார்ப்பும் இல்லாது ஆண் -பெண் உறவு நீடிக்கும்?. பணம், சமூகஅந்தஸ்து இப்படியான எதிர்பார்ப்பு ஏற்படலாம்தானே. குறைந்த பட்சம் வெளியே சென்று வருவதல், ஒன்றக உணவு அருந்துதல் இப்படியான சிறிய எதிர்பார்ப்புகளை புறக்கணித்தாலும் மனத்தளவில் எதிர்பார்ப்பு ஏற்படலாம் தானே. குறைந்தபட்ச தேவைகளை உன்னால் நிறைவேற்ற முடியுமா? இதன் வெளிப்பாடுகள் வெகுவிரைவில் உன்னை பாதிக்கும். அபபெழுதுதான் நீ திணறுவாய்”. மனச்சாட்சி சாபம் கொடுத்தது.
அப்போது மெதுவாக மழைதூறல் விழுந்தது. இந்த தூறல் அபாயமானது பாதைகளை வழுக்கப் பண்ணிவிடும். கவனமாக காரை செலுத்த எண்ணம் காரில் உள்ள தமிழ் சினிமா பாட்டு சிடிக்கு மாற்றினான்.
ஏதோ ஒரு காதல் பாட்டு வந்து மனதை நிறைத்து உள்ளத்தை வருடியது. மனசாட்சியின் குறுகுறுப்பு நின்றுவிட்டது.
வீட்டுக்குச் சமீபமாக கார் வந்து நின்ற போது மனதில் குற்ற உணர்வு மீண்டும் தலைதூக்கியது. உடலை அழுத்தி சோப்பை தேய்த்து வென்நீரில் குளித்தாலும் ஜுலியாவின் வாசனை நீங்கியதாக தெரியவில்லை. போட்டிருந்த ஆடைகள் காரணமோ?.
தலையைத் தடவி ஏதாவது பொன்னிற மயிர்கள் ஒட்டி வந்துவிட்டதா என்று கையால் தலையை தடவியும் பின்பு காரின் கண்ணாடியிலும் பார்த்தான். சேட்டின் பின்புறத்திலும் பாரக்க வேண்டும் என நினைத்தபடி வீட்டின் கீழ் உள்ள கராஜில் காரை நிறுத்திவிட்டு காரின் முன்பக்க லைட்டில் தனது காலணிகளை பார்த்துக் கொண்டான்.
வாசலுக்கு சென்றானுக்கு ஒரு தட்டிலே கதவு திறந்தது. இடுப்பில் சுமனை வைத்தபடி சோபா நின்றாள்.
“எப்படி இருக்கிறாய்? “ என சுமனை வாங்க முயன்றான்.
சுமனோடு விலகியபடி “இப்பத்தான் எங்களை தெரிகிறதா? “ என்றாள் கோபத்துடன்.
கண்கள் சிவந்து கலங்கி இருந்தது. இமைகள் கசக்கியதால் வீங்கி தடித்திருந்தது. அழுதிருக்க வேண்டும்.
“ஏன் அழுகிறாய்? நீ சொல்லிய உடனே வந்துவிட்டேனே” என சமாளித்தான்.
“எத்தனை நாட்கள் நாங்கள் தனியே இருப்பது.? “
“திங்கள்கிழமைதானே போனேன். வெள்ளிக்கிழமை வர இருந்தன். இன்று புதன்கிழமை .ஏன் கோபப்படுகிறாய்? அதுவும் வாசலில் வைத்து”,
“சரி உள்ளே வாங்க.”
ஹோலில் தொலக்காட்சியில் செய்திகளை பார்த்துக் கொண்டிருந்த இராசநாயகம் “தம்பி வாங்கோ” என எழுந்து வந்தார்.
“நீங்க இருங்க மாமா. நான் உள்ளே போறேன்”. எனக் கூறியபடி அறைக்குள் சென்றான்.
கட்டிலில் சுமனைக் கிடத்தினாள் சோபா. கட்டில் அழகாக விரிக்கப்பட்டு நீலநிற வெல்வெட்டு துணியால் மூடப்பட்டிருந்தது. எந்த பொருட்களும் வெளியே தெரியாமல் அறை சுத்தமாக இருந்தது. சோபாவின் காலணிகள் கட்டிலின் கீழ்வரிசையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
சுமனது தொட்டில் கூட வெள்ளைத்துணியால் மூடப்பட்டிருந்தது. சோபா எந்தக் காலத்திலும் படுக்கையை விரிப்பதில்லை. சிறுவயதில் பழகவில்லை என் நினைத்தான். மற்ற விடயங்களோடு இதை ஒப்பிட்டு சந்திரன் பெரிது படுத்துவதில்லை. பலமுறை கட்டிலை ஒழுங்குபடுத்தி விரித்து விடுவான்.
ஒருவேளை இவளது மருந்து வேலை செய்கிறதோ அல்லது பைபோலரில் உள்ள சந்தோசமான நிலையில் இருக்கிறாளோ?.
“என்ன உங்கம்மாவை காணவில்லை. இன்றைக்கு என்ன பெரிய சமையலோ? “
“சமையலை விடுங்கள். என்னைப் பார்க்க ஏதும் வித்தியாசமாக தெரியவில்லையா?”
“இல்லை.” தலையை ஆட்டினான்.
“நான் உங்கள் கவனத்தில் இல்லை. அதுதான் தெரியவில்லை.”
“என்னைக் குற்றம் சாட்டாமல் நேரடியாக விடயத்தை சொல்லு”,
“இதோ நீங்கள் வேண்டித் தந்த தோடு” என கூறி தலையை திருப்பினாள்.
திருமணம் முடித்த சிலநாட்களில் சிட்னியில் உள்ள ஒரு நகைக்கடையொன்றில பெரிய முத்துப் பதித்த தோட்டை வாங்கி பரிசளித்தான். ஆரம்பத்தில் சில நாட்கள் அணிந்துவிட்டு காதில் வெட்டுவதாக கூறி பெட்டிக்குள் வைத்து விட்டாள்.
“உனக்கு நன்றாக இருக்கிறது”
“அப்படியே என்னைக் கட்டிப்பிடித்து சொல்லுங்கள்” என கூறியபடி சந்திரனின் மடியில் விழுந்தாள்.
வழக்கமாக சோபாவின் நெருக்கம் இரத்ததை சூடாக்கி இதயத்துடிப்பை அதிகரிக்கும். இன்று யாரோ இனம் தெரியாதவன் ஒருவன் பஸ்சில் பயணம் செய்யும்போது மடியில் தவறி விழுந்தால் ஏற்படுவது போன்ற உணர்வு ஏற்பட்டது. நடுப்பகலில் ஜுலியாவுடன் உடலுறவு கொண்டதால் ஏற்பட்ட உடல் சோர்வும் குற்ற உணர்வும் சேர்ந்து சோபாவை அன்னியப்படுத்தியது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.
“என்ன சின்னபிள்ளை போல் மடியில் விழுகிறாய? சுமன் பார்த்து கொண்டிருக்கிறான்.” என நாசூக்காக அவளை ஒதுக்க முயற்சி செய்தான்.
“என்னை கட்டிப்பிடித்தால் அவனுக்கு விருப்பம்தானே? அம்மா சந்தோசமாக இருப்பததை மகன் விரும்புவான்தானே?.
“சரி வா” எனக் கட்டிப்பிடித்தான். யாரோ தூரத்து பெண் உறவினர் ஒருவரை மரணவீட்டில் அணைத்து ஆறதல் சொல்வது போன்ற பாவனை இருந்தது. சோபா பாய்ந்து வரும் முயல்குட்டியை போன்று தாவி கழுத்தை கட்டிப்பிடித்து சூடான காற்றை சந்திரனது தோளில் சுவாசித்தாள். கழுத்தில் இருந்த அவளது கைகளால் அவனது தலைமயிருக்குள் விட்டு கோதியபடி “சந்திரன் என்னை விட்டு போகவேண்டாம் . தயவு செய்து போக வேண்டாம் பிளீஸ்” என காதருகே முணுமுணுத்தாள்.
“தங்கச்சி அவரை சாப்பிட சொல்லு” என்று இராசம்மாவின் குரல் சமையல் அறையிலிருந்து ஒலித்தது.
“எழும்பு. எனக்கும் பசிக்கிறது.” என் சந்திரன் எழும்ப எத்தனித்தான்.
“அம்மாவுக்குச் சமையலைத் தவிர வேறு வேலை இல்லை” என கூறிவிட்டு சோபா எழுந்தாள்.
ஹோலில் உள்ள மேசையில் சாப்பாடு இருந்தது. கோழிக்கறி முருங்கைக்காய், வெண்டிக்காய் என இலங்கை மரக்கறிகள் இருந்தன.
“மாமா கோம்புஸ்க்கு போனீங்களா? “ என்றபடி கதிரையில் அமர்ந்தான்.
“ஓம் தம்பி.அங்கைதான் நல்லதா பார்த்து வாங்க முடியும். அதை விடுங்க. உங்களது படிப்பு எப்படி போகிறது? “ என்றபடி மற்றைய அறையிலிருந்து வந்தார் இராசநாயகம்.
“ஓரளவு ஆராய்ச்சி முடிந்து விட்டது. எழுத தொடங்கி விட்டேன். இன்னும் ஆறுமாதங்கள் ஏழுமாதங்கள் செல்லும் என நினைக்கிறேன். நீங்களும் வந்து சாப்பிடுங்கோ”
“நான் ஒவ்வொருநாளும் சாப்பிடுகிறனான்தானே. பிள்ளையும் நீங்களும் சாப்பிடுங்கோ”
மிக அமைதியாக சில வார்த்தைகள் மட்டும் பேசும் இராசநாயகத்தாரை சந்திரனுக்கு மிகவும் பிடிக்கும். பலமுறை இராசம்மாவை புறக்கணித்து அவரோடு மட்டும் பேசி இருக்கிறான். சோபா வந்து உணவைப் பரிமாறியபோது “சோபா, நான் எடுத்துச் சாப்பிடுகிறேன் நீரும் சாப்பிடும்” எனக்கூறினான்.
“நீங்கள் சாப்பிடுங்கள்”
கோப்பையில் இருந்த சாப்பாட்டில் இருந்து குழைத்து சோபாவின் வாய்க்குள் வைத்தான். எதிர்பாராத இந்த செய்கை சோபாவின் வாயை மட்டுமல்ல, கண்களையும் அகல விரிய பண்ணியது. ஊட்டிய சோறு புரைக்பேறியதும் சந்திரன் கைகளால் அவளது தலையை தட்டினான். சோபாவின் கண்களில் இருந்த வந்த கண்ணீரை தனது மறுகையால் துடைத்தான்.
‘இப்படியான அப்பாவிப் பெண்ணை ஏமாற்றி நான் இரட்டை வாழ்க்கை வாழுகிறேனே. இனிமேல் ஜுலியாவின் பக்கம் போககூடாது அவளுக்கு தொலைபேசியில் விளக்கமாக சொல்லி விடவேண்டும் உடலுறவு சுகம் இல்லாவிட்டாலும் நோய்காரியாக இருந்தாலும் உண்மையானவனாக இவளுடன் வாழ்வது ஆத்மாவுக்கு நல்லது இரட்டை வாழ்வு மற்றவர்களுக்கும் தெரியாமல் இரகசியாக வைத்திருந்தாலும் என்னை ஏமாற்றுகிறேனே. இது தவறு என்பதால் குற்ற உணர்வு உள்ளத்தில் ஏற்படுகிறது. நல்ல கணவனாக வாழாவிட்டாலும் குறைந்த பட்சம் சுமனுக்கு நல்ல தகப்பனாக வாழவேண்டும்.’
“என்ன பேசாமல் இருக்கிறியள். சாப்பிடவில்லையா? “ என கேட்டபொழுது சிந்தனை கலைந்தது.
“நான் உங்களுக்கு தீத்திவிடவா “ என சோபா ஆசையாகக் கேட்டாள்..
“ஓம்”
சந்திரனது கோப்பையில் இருந்த உணவை எடுத்து அவனது வாயில் ஊட்டினாள்.
இப்படியான நிலை கடந்த மூன்று வருடத்தில் ஒருநாளும் நடந்ததில்லை. ஏனோதானோ என்று சந்திரன் சாப்பிடுவான். சில நேரம் வீட்டில் சமையல் சாப்பாடு இராது. பாண், பட்டர், ஜாம் என பல நாட்கள் வயிற்றை நிரப்பி இருக்கிறான்.
“இவளுக்கு நோய் குணமாகி விட்டதா? எனக்கு மனைவி கிடைத்து விட்டாளா? எனக்கு மனைவி கிடைப்பதைவிட சுமனுக்கு அம்மா கிடைக்க வேண்டும். மாமா மாமி எவ்வளவு காலம் இவளோடு இருக்க முடியும்?.”
சந்திரனது தட்டில் இருந்த உணவை இருவரும் பகிர்ந்ததால் தட்டு வெறுமையாகியது. வெறும் கோப்பையை சமையல் அறையில் வைத்துவிட்டு சிறு கிண்ணத்தில் தண்ணீரும் கொண்டு வந்தாள். எக்காலத்திலும் நடந்திராத படி கைகளை அந்த கிண்ணத்தில் உள்ள தண்ணீரில் கழுவினான்.
சந்திரனுக்கு வியப்பாக இருந்தது.
“ஏன் இன்று ராஜஉபசாரம் நடக்கிறது.”?
“ராஜா பலகாலத்தின் பின் ராணியிடம் வந்ததால் அப்படி உபசரிப்பு நடக்கிறது” என்றாள் சோபா சிரித்துக்கொண்டே.
சந்திரனும் சோபாவும் ஹோலில் இருந்து கதைப்பதை பார்த்துவிட்டு பெற்றோர்கள் அறைக்குள் இருந்து விட்டனர்.
“அறைக்குள் வாருங்கள் அப்பா அம்மா சாப்பிட வேண்டும்” என்றாள் அதிகாரம் தொனித்த குரலில்
ஏதுவும் பேசாமல் அவளை பின்தொடர்ந்தான். கட்டில் அருகில் சென்றவனை தள்ளி கட்டிலில் விழுத்தி விட்டு தானும் கட்டிலில் படுத்தாள் சோபா.
“சோபா வயிறு நிரம்பி இருக்கு. பேசாமல் படு.”
“எப்படி படுக்க முடியும்? நீங்கள் எனக்காக ஆவலாக காத்திருப்பீர்கள் என நினைத்தேன். என்மீது விருப்பம் இல்லையா?” என சிணுங்கினாள்.
“உன்மீது பிரியம்தான். அது உனக்கு புரிவதில்லை” என யன்னல் பக்கம் பார்த்தபடி கூறினான்.
“உங்களிடம் நான் ஒன்று கேட்கிறேன்.
மறுமொழியொன்றை இடுங்கள்