மூன்று தலைமுறையாக இலங்கை அரசியலில் ஒலிக்கும் இரண்டு எழுத்துக்கள்
நூற்றுக்கணக்கான மலர் மாலைகள் மண்ணில் சருகாகின!
65 பவுண் தங்கமாலைக்கு என்ன நேர்ந்தது….?
முருகபூபதி
1965 ஆம் ஆண்டு. எனக்கு 14 வயதிருக்கும். அந்த ஆண்டு இலங்கையில் நடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி வெற்றிபெற்றது. அந்த அரசில் டட்லி சேனாநாயக்கா பிரதமரானார். தமிழரசுக்கட்சியும் அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் கட்சியும் அந்த அரசுக்கு ஆதரவு அளித்தன. இவ்வாறு அன்றும் ஒரு நல்லிணக்க ஆட்சி வந்தது!
டட்லி, இக்கட்சித் தலைவர்களிடம் தமது அமைச்சரவையிலும் இணைந்து கொள்ளுமாறு கேட்டபொழுது செல்வநாயகமும் ஜி.ஜி.பொன்னம்பலமும் அதனை ஏற்கவில்லை. ஆனால், தமது தரப்பில் நியமன அங்கத்தவரான வழக்கறிஞர் திருச்செல்வம் அவர்களை சிபாரிசு செய்தார்கள். இவர்கள் மூவரும் எப்படிப்பட்ட புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் என்பதை ட்ரயல் அட்பார் விசாரணையில்தான் பார்த்தேன். இம்மூவரும் விசாரணை முடிந்து நீதிமன்ற வளாகத்தைவிட்டு வெளியே வந்தபொழுது அவர்களை ஒன்றாக நிற்கவைத்து எமது வீரகேசரி படப்பிடிப்பாளர் ரொட்றிகோ எடுத்த படம் பிரசித்தமானது.
அதனையே கொழும்பில் மெய்கண்டான் கலண்டர் அச்சடித்த தமிழ் முதலாளி பாவித்து, ஆயிரக்கணக்கில் கலண்டர் அச்சடித்து விற்பனைக்கு விட்டார்!
அதற்காக அந்த முதலாளி, இவர்கள் மூவருக்கும் குறிப்பிட்ட படப்பிடிப்பாளருக்கும் ரோயல்டி கொடுத்தாரா? என்ற விபரம் தெரியவில்லை.
அன்று அந்தக்கலண்டர் காலத்துக்கு ஏற்ற கலண்டராக தமிழர் இல்லங்களில் அக்காலத்தில் அலங்கரித்தது.
1965 ஆம் ஆண்டு அமைந்த அரசில் உள்ளுராட்சி அமைச்சுப்பதவி திருச்செல்வத்திற்கும் துணை சபாநாயகர் பதவி உடுப்பிட்டி தொகுதியில் ஜி.ஜி.பொன்னம்பலத்தின் அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் சார்பில் வெற்றிபெற்ற மு. சிவசிதம்பரத்திற்கும் கிடைத்தது.
எங்கள் நீர்கொழும்பு இந்து வாலிபர் சங்கத்தில் முக்கிய பதவிகளில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் இருந்தனர். நீர்கொழும்புத் தொகுதி அவ்வேளையில் ஐக்கிய தேசியக்கட்சி வசமானது. குவின்டின் பெர்ணான்டோ என்பவர் எம்.பி. ஆனார்.
இந்து வாலிபர் சங்கத்தில் அங்கம் வகித்த பலரும் இந்த ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் தமிழரசு, தமிழ்க்காங்கிரஸ் ஆதரவாளர்கள்தான். கொழும்பில் மாநகராட்சித் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு வென்ற யானைபீடிக்கம்பனி, பம்பலப்பிட்டி கிறின்லண்ட்ஸ் ஹோட்டல் முதலானவற்றின் முதலாளி நீதிராஜாவும் அன்றைய அரசில் செனட் சபைக்கு தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
இவரை நீர்கொழும்பு இந்து வாலிபர் சங்கம் தனது காப்பாளராக நியமித்து கௌரவம் வழங்கியிருந்தது.
ஒருநாள் இந்து வாலிபர் சங்கம் தமிழ்த் தலைவர்களுக்கு கடற்கரை வீதியில் கோலாகலமான வரவேற்பு வழங்கி, ஊர்வலமாக அழைத்து வந்து சங்க மண்டபத்தில் பாராட்டுக்கூட்டமும் நடத்தியது. தந்தை செல்வா, தருமலிங்கம், ஈ.எம்.வி நாகநாதன், திருச்செல்வம் முதலான பலர் வந்தார்கள். நாகநாதனும் திருச்செல்வமும் தமிழில் பேசச் சிரமப்பட்டனர். தந்தை செல்வா தமிழில் மெதுவாகப் பேசியதை தருமலிங்கம் ஒலிவாங்கியில் உரத்துச்சொன்னார்.
இந்த வர்க்கம் அனைத்தும் எப்படி அன்று ஒன்றாக இணைந்தன என்பது பற்றி சீர்தூக்கிப்பார்க்கும் வர்க்க அரசியல் பற்றி எதுவுமே தெரியாத அக்காலப்பகுதியில் ஒரு சனிக்கிழமை முற்பகல் வீட்டில் எனது அக்காவுடன் பல்லாங்குழி விளையாடிக்கொண்டிருந்தேன்.
எனது தாய்மாமனார் பெயர் சுப்பையா. அவரை ஊரில் பாலா அண்ணர் என்றும் அழைப்பார்கள். அவருக்கு நீர்கொழும்பு கடற்கரை வீதியில் ஒரு பலசரக்கு கடை இருந்தது. கூப்பனுக்கு அரிசி வழங்கும் அந்தப்பிரதேசத்தின் பிரபலமான கடையாகவும் அதுவிளங்கியது . அதனால் நீர்கொழும்பு வாழ் பெரும்பான்மை கத்தோலிக்க கடற்றொழிலாளர் குடும்பங்களுக்கு அதன் பெயர் பாலா கடை.
எமது மாமாவுக்கு கடைத்தெருவில் செல்வம் ஸ்டோர்ஸ் என்ற புடவைக்கடை வைத்திருந்த தில்லைநாதன் அவர்கள் நெருங்கிய நண்பர். அவர் புங்குடுதீவைச் சேர்ந்தவர்.
( நீர்கொழும்பிலும் அதற்குச்சமீபமாகவும் இருந்த கொச்சிக்கடை, தங்கொட்டுவை, நாத்தாண்டியா முதலான பிரதேசங்களிலெல்லாம் தீவுப்பகுதி முதலாளிகளின் வர்த்தக நிலையங்கள், அடவுக் கடைகள், புடவைக்கடைகள், சுருட்டுக் கம்பனிகள் நிரம்பியிருந்தன. தீவுப்பகுதி வர்த்தகர்கள் ஒரு காலத்தில் இலங்கைத்தீவு பூராவும் வர்த்தகத்தில் எப்படி செல்வாக்குடன் விளங்கினார்கள் என்பது பற்றி எழுதுவதற்கும் ஏராளமான தகவல்கள் இருக்கின்றன.)
இருவரும் ஒரு காரில் வந்து கெதியா வெளிக்கிடுமாறு என்னையும் அக்காவையும் அழைத்தார்கள். ” எங்கே மாமா…” எனக்கேட்டேன்.
“உங்களுக்கு நீர்கொழும்பு விமான நிலையம் காண்பிக்கப்போகிறோம் ” என்றார். மாமாவின் பிள்ளைகளை ஏற்கனவே அழைத்துச்சென்று அங்கே விட்டு விட்டு வந்துதான் மாமா என்னையும் அழைத்திருக்கிறார் என்பது பின்னர் தெரிந்தது.
எனக்கு மாமா மீது பயம் கலந்த மரியாதை. அதனால் அவருடன் பேசுவதற்கும் தயக்கம். உடன் வந்த செல்வம் ஸ்டோர்ஸ் முதலாளியிடம் விமான நிலையத்தில் என்ன விசேடம் எனக்கேட்டேன்.
“எங்கள் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம் பற்றி உனக்குத் தெரியுமா? ”
“தெரியாது!”
” ஐக்கிய நாடுகள் சபை பற்றி உனக்குத்தெரியுமா?”
” தெரியாது!” ”
” அந்தச் சபை உலகில் மிகப் பெரியது. அங்கே எங்கள் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம் எங்கள் நாட்டின் சார்பில் பேசிவிட்டு இன்று வருகிறார். அவருக்கு பெரிய வரவேற்பு கொடுக்கின்றோம்.” என்றார் அந்த முதலாளி.
எனக்கு விமான நிலையம் பார்க்கும் ஆசைதான் இருந்தது. அவர் சொல்லும் தலைவர், அந்தச்சபை பற்றி மேலும் அறியும் ஆவல் இல்லை.
அந்தக்காரில் அழகிய பெரிய பூமாலை ஒன்றும் இருந்தது.
புறப்படும்பொழுது,”தலைவர் வரும் விமானம் தாமதமாகிறது என்பதை தெரிந்துகொண்டதனால்தான் மீண்டும் வந்து உன்னையும் அக்காவையும் அழைத்துச்செல்கின்றோம்” என்றும் அவர் சொன்னார்.
மனதுக்குள் அன்று நான் முன்னர் பார்த்திராத அந்தத்தலைவரையும் அவரை ஏற்றிவந்து சேர்வதற்கு தாமதிக்கும் விமானத்தையும் வாழ்த்தினேன்.
கட்டுநாயக்காவில் அவ்வேளையில் சர்வதேச விமான நிலையம் இல்லை. பின்னர் அதே ஆண்டில் சற்றுத் தொலைவில் டட்லி காலத்திலேயே சர்வதேச விமான நிலையம் அங்கு அமைந்து – அதனை அமைத்துக்கொடுத்த கனடா நாட்டுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நீர்கொழும்பு – கொழும்பு பிரதான வீதியிலிருந்து அங்கு செல்லும் வீதிக்கு கனடா – இலங்கை நட்புறவு வீதி என்றும் டட்லி பெயர் சூட்டினார்.
தலைவர் ஜி.ஜி. பொன்னம்பலம் வந்திறங்கிய பழைய விமான நிலைய முன்றல் கோலாகலமாக காட்சி அளித்தது. பெருவாரியான தமிழர்கள் குழுமிநின்றனர். அதிகம் ஆண்கள்தான் வந்திருந்தார்கள். நாம் சென்று இறங்கிய பின்னர் சுமார் அரை மணிநேரம் கழித்துத்தான் அந்த விமானம் மேலும் தாமதமாக வந்தது. வெய்யில் சுட்டெரிக்க நாம் நின்ற அந்த விமான நிலைய முன்றலில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மேடைக்கு தலைவரை அழைத்து வந்தார்கள். அவரது மனைவியும் உடன் வந்தார்.
மேடையில் ஏறிய தலைவர் நின்றுவாறே கைகூப்பி வணக்கம் தெரிவித்தார். கரகோஷம் எழுந்தது. எங்கள் தலைவர் வாழ்க…. ஐக்கிய நாடுகள் சபையில் முழங்கிவிட்டு வந்துள்ள எங்கள் தலைவர் வாழ்க… என்ற கோஷம் எழுந்துகொண்டிருந்தது.
அவர் மேடையில் நிற்கும்பொழுது ஒவ்வொருவராக மேடையேறி பெரிய பெரிய பூமாலைகளை அவருக்கு சூட்டினார்கள். அவை அவரின் முகம் மறைக்கும் வரைக்கும் உயருவதற்கு முன்னர், அருகில் நின்ற ஒருவரைப்பார்த்து தனது உருட்டும் விழிகளினால் கண்சாடை செய்தார். அந்த அன்பர் உடனே வந்து போடப்பட்ட மாலைகளை ஒவ்வொன்றாக கழற்றினார். கழற்றக் கழற்ற மாலைகள் வந்து விழுந்துகொண்டிருந்தன.
அப்படி ஒரு கண்கொள்ளாக்காட்சியை அதற்கு முன்னரும் பின்னரும் நான் பார்த்ததே இல்லை. அதனால்
மறக்கமுடியாத சித்திரமாக அந்தக்காட்சி மனதில் இன்றளவும் பதிந்திருக்கிறது.
“மாலைகளை கழற்றியவர்தான் மு.சிவசிதம்பரம், துணை சபாநாயகர்” என்று எனது மாமாவுக்கு செல்வம் ஸ்ரோர்ஸ் முதலாளி சொன்னார். அவரும் மேடையேறி மாலை அணிவித்தார்.
சிவசிதம்பரம் கழற்றிய மாலைகள் அந்த மேடையில் சிறிய குன்றுபோல் உயர்ந்துகொண்டிருந்தது. பின்னர் மற்றும் இருவர் அவற்றை அகற்றி மேடைக்கு அருகில் நின்ற ஒரு வாகனத்தில் ஏற்றினார்கள். இந்த மாலை அணிவிக்கும் சடங்கு சுமார் அரைமணிநேரம் நீடித்தது. அதனால் தலைவர் களைத்துவிட்டார். பூமாலைகளின் வாசனையை எவ்வளவு நேரத்துக்குத்தான் தாக்குப்பிடிக்க முடியும்!?
அவர் மெதுவாக” இனிப்போதும்…போதும்…”என்றும் சொல்லிப்பார்த்தார். பல மணிநேரங்கள் விமானத்தில் அமர்ந்து களைத்திருந்த அவருக்கும் அவர் துணைவியாருக்கும் அன்பர்களின் அந்த மாலைகள் புளகாங்கிதம் தந்திருந்தாலும், அவை அனைத்தும் வெய்யிலில் காய்ந்து சருகாகிப்போகின்றவைதானே!
ஆனால், அதன்பின்ர், சருகாகி கருகாகிப்போகாத ஒரு மாலையை அந்தத்தலைவரின் ஊர்மக்கள் சில மாதங்களில் அவருக்கு வழங்கினார்கள்.
1901 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் திகதி பிறந்தவர் கணபதி காங்கேசர் பொன்னம்பலம். அவர்தான் பின்னாளில் அரசியலிலும் நீதிமன்றங்களிலும் பத்திரிகைகளிலும் பெரிதும் பேசப்பட்ட ஜி.ஜி.பொன்னம்பலம்.
அன்று கட்டுநாயக்கா விமான நிலைய வரவேற்பு மாலை அணிவிப்புக்குப்பின்னர் அவர் ஆசனத்தில் அமர்ந்தார். அருகில் நின்ற அவரது துணைவியாரும் அமர்ந்தார். துணைவியாரின் சேலையின் முந்தானையின் ஒரு புறம் கணவர் அமர்ந்த ஆசனத்தின் ஒரு காலில் சிக்கி விட்டது. அந்த மேடைக்கு அருகில் நான் நின்றேன். மேடையில் விளிம்பை பிடித்துக்கொண்டு நின்றதால் எனக்கு சேலை சிக்கிய காட்சி நன்கு தெரிந்தது.
அங்கிருந்த புகழ் அமளியில் அவரோ தலைவரோ அதனை கவனிக்கவில்லை.
“அம்மா” என்றேன். தலைவரின் திருமதி திரும்பிப்பார்த்தார்.” உங்கள் சேலை ” என்றேன். அவர் சிரித்துக்கொண்டு, அப்பொழுதுதான் கணவர் அமர்ந்திருக்கும் அந்த ஆசனத்தின் ஒரு காலைப்பார்த்தார்.
அப்பொழுது தலைவர் தமது விருப்பத்துக்குரிய சிகரட்டை ஒரு சிறிய வெண்ணிற குழாயில் இணைத்து பற்றவைத்துக்கொண்டிருந்தார். எனது அப்பாவும் சிகரட் புகைப்பவர்தான். ஆனால், அப்படி ஒரு துணைக்குழாயை அதற்கு முன்னர் எங்கும் கண்டதில்லை. கணவரின் சிகரட் பற்றுதலை குலைக்க விரும்பாத திருமதி, அதன் பிறகு என்னைப்பார்ப்பதும் அந்த ஆசன காலைப்பார்ப்பதுமாக இருந்தார். அவருக்கு ஏதோ தயக்கம் இருப்பது தெரிந்தது.
நான் சற்றும் தாமதிக்காமல் ” அய்யா” என்றேன். தலைவர் புகையை விட்டபடி திரும்பிப்பார்த்தார். அந்த முகத்தில் ஏனோ புன்னகை இல்லை. பயணக்களைப்பு சோர்வுதான் தென்பட்டது.
” அய்யா, அம்மாவின் சேலை.” என்றேன். உடனே எழுந்து ஆசனத்தை சரிசெய்துகொண்டு அமர்ந்தார். அவர்அதன் பிறகு என்னைத்திரும்பியும் பார்க்கவில்லை. ஆனால், அந்த அம்மா என்னை கனிவோடு பார்த்தார்.
தலைவர் கூடியிருந்த மக்களைப்பார்த்துப் பேசினார். ஆனால், அவர் பேசியதிலிருந்தும் மற்றவர்கள் பேசியதிலிருந்தும் எதுவுமே புரியவில்லை. எனது ஆர்வம் முழுவதும் அந்த கட்டுநாயக்கா விமான நிலையத்தை சுற்றிப்பார்ப்பதில்தான் இருந்தது. எம்மை அழைத்துவந்தபெரியவர்களுக்கோ அந்தத்தலைவரின் பேச்சுத்தான் ஆர்வமாக இருந்திருக்கவேண்டும். என்னை எங்கும் சென்றுவிடவேண்டாம் என்று அந்தமேடையருகிலேய என்னை அழைத்துவந்த பெரியவர்கள் தடுத்துவைத்திருந்தனர்.
தலைவருக்கு அந்த ஆண்டு 65 வயது பிறந்தது. அதனை முன்னிட்டும் அவர் ஐ.நா. சபைக்கு சென்று வெற்றியுடன் திரும்பியதற்காகவும் அவருடைய ஊரில் பெரிய பாராட்டு விழாவும் அவரை கௌரவிக்கும் முகமாக 65 பவுணில் ஒரு தடித்த தங்க மாலையும் அணிவித்தார்கள்.
அன்று கட்டுநாயக்கா வரவேற்பில் அவருக்கு அணிவிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மலர் மாலைகள் எதனையும் அவர் தமது மனைவியிடம் கொடுக்கவில்லை. அவை அனைத்தும் ஒரு வாகனத்தில் ஏற்றப்பட்டு சருகாகி காய்ந்து எவருக்கும் பயனற்றுப்போயிருக்கலாம்!
தற்காலத்தில் தமிழ்நாட்டில் மயானங்களுக்கு வரும் பூதவுடல்களுக்கு அணிவிக்கப்படும் மலர் மாலைகள் மற்றும் மலர் வளையங்களை தாவரங்களின் பசளையாக உரத்திற்கு பயன்படுத்தவிருப்பதாக ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது.
இதுபோன்ற செய்திகள்,முயற்சிகள் அக்காலத்தில் வெளிவரவில்லையே என்பது எனது தற்கால ஆதங்கம் அவ்வாறே இந்தப் பொன்னாடைகளுக்கும் ஏதும் சமூகப்பயன்பாட்டு மாற்று வழிகளை யாராவது கண்டு பிடித்தால் தமிழ் சமூகம் முன்னேறி விடும். ஏழைப்பெண்கள், குழந்தைகளுக்கு ரவிக்கை, பாவாடை தைப்பதற்கு கொடுக்கலாம்!
“தலைமுடி மீண்டும் வளரும் என்றநம்பிக்கையில்தான் நேர்த்திக்காக மொட்டை அடிக்கிறார்கள்” என்று. தந்தை பெரியார் சொல்வார்! நேர்த்திக்காக எவரும் தமது கையை வெட்டிக்கொள்ளமாட்டார்கள். ஏனென்றால், அது மீண்டும் வளராது என்றும் பெரியார் சொல்லிவிட்டுப்போய்விட்டார். ஆனால், இன்று பந்தயத்திற்கும் பலர் மொட்டை அடிக்கின்றனர். ஆசைக்கும் அடிக்கின்றனர். வெய்யில் காலத்திலும் அடிக்கின்றனர்.
மலர் மாலைக்கு அது கழுத்தில் இருக்கும் வரையில்தான் மதிப்பு மரியாதை. அதன் பின்னர் சருகுதான். ஆனால், தங்கத்தில் செய்த மாலை அப்படி அல்லவே.
ஊரில் தனக்கு அணிவிக்கப்பட்ட 65 தங்கப்பவுண் மாலையையும் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம் தமது சமூகத்திற்கு பயன்படுத்துவதற்காக திரும்பவும் தரப்போவதாக மேடையில் அறிவித்த செய்தி வெளியான வீரகேசரி, தினகரன் பத்திரிகைகளை பார்த்திருக்கின்றேன்.
அந்த மேடையில் அருகில் நின்றவர்களில் ஒருவர்தான் பின்னாளில் நல்லூர் தொகுதியில் 1970 ஆம் ஆண்டு எம்.பி.யாக தெரிவான அருளம்பலம் என்ற அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் வேட்பாளர். அந்த 1970 ஆம் ஆண்டு தேர்தலில் ஜீ.ஜீ பொன்னம்பலம் யாழ்ப்பாணம் தொகுதியில் தோற்றார் என்பது மற்றும் ஒரு செய்தி.
அந்த 65 பவுண் தங்கமாலையை விற்று அதில் கிடைக்கும் பணத்தில் அந்த ஊரில் ஒரு நெசவு சாலையை அமைத்துத்தரவிருப்பதாக அன்று அந்த மேடையில் தலைவர் ஜீ.ஜீ.சொல்லியிருந்தார்.
“ஆமாம், தலைவர் சொன்னபடி நிச்சயம் செய்வார்” என்றுதான் அன்றைய பத்திரிகைகளும் தமிழ் மக்களும் நம்பினார்கள். ஏனென்றால் அவர் முன்பு இலங்கை அரசில் அமைச்சராக இருந்தபொழுது பரந்தன் இராசயனப்பொருட்கள் தொழிற்சாலையையும் வாழைச்சேனை காகித ஆலையையும் காங்கேசன்துறையில் சீமெந்து ஆலையையும் அமைத்து எங்கள் தேசத்துக்கே – குறிப்பாக அந்தந்த பிரதேசத்து தமிழ் மக்களுக்காகவே கொடுத்தவர்.
அத்துடன் நில்லாமல் தான் பிரதிநிதித்துவம் செய்த யாழ்ப்பாணம் தொகுதியில் ஒரு தமிழ்ப்பல்கலைக்கழகமும் அமைத்துத் தரவிருப்பதாகவும் வாக்குறுதி அளித்தவர்.
அவர் அமைச்சராக இருந்த காலத்தில் மூன்று தொழிற்சாலைகளை தமிழர் பிரதேசங்களில் அமைத்து பேரும் புகழும் பெற்றது போன்று, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தையும் அமைத்து அந்தப்பெயரையும் வரலாற்றின் ஏடுகளில் பொறித்துவிடுவாரோ என்ற பொறாமையில், வட்டுக்கோட்டையில் தமிழ்க்காங்கிரஸ் வேட்பாளர் ஆ.தியாகராஜவினால் தோற்கடிக்கப்பட்ட அமிர்தலிங்கம் உட்பட பல தமிழரசுக்கட்சி அங்கத்தவர்கள், “திருகோணமலைதான் தமிழர் தலைநகரம். அங்குதான் தமிழ்ப்பல்கலைக்கழகம் வேண்டும்” என்ற மொக்கையான வாதத்தை முன்வைத்து, அன்று டட்லி காலத்திலேயே கிடைக்கவிருந்த யாழ்.பல்கலைக்கழகத்தைஇல்லாமல் செய்தார்கள்.
அதன்பின்னர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் தலைமையில் 1970 அமைந்த கூட்டரசாங்கம் யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக வளாகம் அமைத்தபொழுதும், அதே தமிழரசுத்தலைவர்கள் அதனையும் எதிர்த்து அறிக்கை விட்டார்கள். இவர்களின் ஊதுகுழல் சுதந்திரன் கோவை மகேசனும், யாழ். பரமேஸ்வராவையும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரியையும் அந்த வளாகத்திற்காக இடம்மாற்றவேண்டாம் என்று சூளுரைத்தார்.
தனக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை, எதிரிக்கு சகுனப்பிழை வரவேண்டும் என்ற எதிர்ப்பு அரசியலையே தொடர்ந்து முன்னெடுத்து வந்தவர்கள், அன்றும் ஜீ.ஜீ.யின் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கனவை கலைத்தார்கள். அந்தப்பல்கலைக்கழகத்தில்தான் புலிகள் பொங்கு தமிழ் விழா நடத்தினார்கள் என்பது வேறுகதை! அங்குதான் முள்ளிவாய்க்கால் பேராழிவு நினைவேந்தல் தூபி அமைக்க முயற்சிப்பது மற்றும் ஒரு கதை!
இந்தப்பின்னணிகளுடன் ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்களுக்கு கிடைத்த அந்த 65 பவுண் தங்கமாலைக்கு என்ன நடந்தது? என்பதைக்கேட்பது ரிஷி மூலத்தையும் நதி மூலத்தையும் ஆராயும் செயல்.
ஆனால் , இதுபற்றி நண்பர் சி. சுதந்திரராஜா தமது நாவல் மழைக்குறியிலோ அல்லது வேறு ஒரு படைப்பிலோ குறிப்பிட்டிருக்கிறார் என்பது நினைவிலிருக்கிறது.
அந்த 65 பவுண் தங்கமாலைக்கும் நெசவு சாலைக்கும் என்ன நடந்தது என்று கேட்டு அறிவதற்கும் நல்லூர் அருளம்பலம் இன்றில்லை. ஆனால், அவருடைய மக்கள் தொடர்பாளராக சிறிது காலம் நல்லூர், யாழ்ப்பாணத்தில் கலக்கிய மூத்த பத்திரிகையாளர் எஸ்.தி. என்ற கனடாவில் வதியும் திருச்செல்வம் அவர்களுக்கு ஏதும் தெரியுமா…? என்பதும் தெரியவில்லை!
பொதுவாக எமது தமிழ் சமூகத்தில் தங்க நகைகள் குடும்பங்களில் வாரிசுக்கென்றே வழங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை அறிவீர்கள். எனக்குத்தெரிந்த மெல்பனில் வதியும் ஒரு தமிழ்க்குடும்பத்து பெண் பிள்ளை நடன அரங்கேற்றம் செய்தபொழுது அவருடைய தாயார் தமது மறைந்துவிட்ட பாட்டியாரின் திருமணச்சேலையையே நீண்ட காலம் பாதுகாப்பாக வைத்திருந்து தனது பிள்ளைக்கு அதில் அரங்கேற்ற ஆடைகளை (Costumes) தைத்துக்கொடுத்து மேடையேற்றினார்.
பூட்டியின் சீதனமாக அந்தக்குழந்தைக்கு அது கிடைக்கப்பெற்றது.
அந்த விருப்பத்துடன்தான் அந்தப் பூட்டி தனது இறுதி மூச்சையும் விட்டுள்ளார். அதுபோன்று தமது விதவைத்தாயின் தாலியில் தமது திருமண மாற்று மோதிரம் செய்து மனைவிக்கு அணிவிக்கும் மரபும் சில தமிழ்க்குடும்பங்களில் இருக்கிறது.
தனது மனைவியும் தாயைப்போன்று தன்னை பராமரிக்க வேண்டும் என்ற சென்டிமென்டா என்பது தெரியவில்லை. அப்படியாயின் தனது தந்தையைப்போல் தனக்கு கணவன் அமையவேண்டும் என்று எதிர்பார்க்கும் பெண்ணின் சென்டி மென்டுக்கு அவளின் தந்தையின் அன்பளிப்பு, சீதனம் என்ன என்பதும் தெரியவில்லை.
எனக்கு நீண்ட காலமாக அந்த 65 பவுண் தங்க மாலை பற்றி யாரிடமாவது கேட்டு அறியவேண்டும் என்ற ஆவல். நிச்சயமாக அந்த ஊர்மக்களின் நன்கொடையில் தயாரிக்கப்பட்டு தலைவர் ஜீ.ஜீக்கு அணிவிக்கப்பட்ட அந்த மாலையின் பின்னால் பல ஏழைக்குடும்பங்களின் உழைப்பு இருக்கும்.
பரம்பரையின் நீட்சியாக மூன்றாவது தலைமுறை இலங்கை அரசியலில் ஜீ.ஜீ. என்ற புகழ் பெற்ற இரண்டு எழுத்துக்களுடன் வாழ்கிறது.
அன்று 1965 இல் தலைவர் ஜீ.ஜீ.பொன்னம்பலம், ஐக்கிய நாடுகள் சபைக்குச்சென்று முழங்கிவிட்டு வந்து நூற்றுக்கணக்கான பூமாலைகளும் 65 தங்கப்பவுண் மாலையும் பெற்றார். இன்று அவருடைய பேரன், அந்தத்தாத்தா மறையும்பொழுது சுமார் மூன்று வயதுக்குழந்தையாக இந்த உலகைப்பார்த்த கஜேந்திர குமார் பென்னம்பலம் தமது தாத்தாவின் வழியில்… தந்தையின் அரசியல் தடத்தில் வந்து இன்று ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபைக்குச்சென்று முழங்குகிறார்.
இந்த அற்புதக்காட்சியை காண்பதற்கு தந்தையும் இல்லை. தாத்தவும் இல்லை.
தங்கப்பவுண் நகை பரம்பரை பரம்பரையாக வாரிசுகளுக்கு வருவதுபோன்று அரசியல் வாரிசும் பரம்பரை பரம்பரையாக தொடருகின்றது.
ஆனால் – சிறிய வித்தியாசம். அன்று அரை நூற்றாண்டுக்கு முன்னர் 1965 இல் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் ஜீ.ஜீ.பொன்னம்பலம் என்ற பெரிய தலைவரை வரவேற்க நூற்றுக்கணக்கில் எமது தமிழ்ப்பெரியவர்கள் மலர் மாலைகள் சகிதம் கால்கடுக்க வெய்யிலில் காத்து நின்றனர். ஜீ.ஜீ.யின் ஊர் மக்கள் 65 பவுண் தங்கமாலையுடன் காத்து நின்று கொடுத்தனர்.
இன்று அவர் வாரிசாக ஈழத்தமிழர்களின் குரலாக ஒலிக்கச்சென்றுவரும் அவர் பேரன் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை அவ்வாறு வரவேற்க யாராவது பெரியவர்கள் எங்கள் ஊரிலும் யாழ்ப்பாணத்திலும் இருக்கிறார்களா…? என்பதும் தெரியவில்லை.
ஆனால் , கடந்த அரைநூற்றாண்டு காலமாக வழக்கறிஞர்கள் நிரம்பி வழியும் தமிழரசுக்கட்சி, அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ், மற்றும் நாள் தவறினாலும் கடிதம் எழுதத்தவறாத அண்ணன் ஆனந்த சங்கரியின் தமிழர் விடுதலைக்கூட்டணியிடமும் எனக்கும் பலருக்கும் எதிர்பார்ப்புகள் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.
கத்தோலிக்கர்கள் வேளாங்கண்ணி மாதாவிடமும் மன்னார் மடுத்திருப்பதிக்கும் அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கும், மும்மதத்தினர் கதிர்காமத்திற்கும் பௌத்தர்கள் புத்தகாயாவுக்கும் கண்டி தலதா மாளிகைக்கும், இஸ்லாமியர்கள் மக்கா, மதீனாவுக்கும் சைவர்கள் நல்லைக்கந்தனிடமும் வல்லிபுர ஆழ்வாரிடமும் சாயி பக்தர்கள் புட்டபர்த்திக்கும் வருடாந்தம் புனித யாத்திரை செல்வதுபோன்று எங்கள் சட்ட மேதைகளான தமிழ்த்தலைவர்களும் வருடாந்தம் புனித பூமியாம் ஜெனீவா நகரில் அமைந்த ஐக்கிய நாடுகள் சபைக்கு புனித யாத்திரை சென்று வருகிறார்கள்.
ஆனால் – ஒரு சிறிய வித்தியாசம்.
மேற்சொன்ன மதங்கள் சார்ந்த புனித திருத்தலங்களுக்கு செல்லும் பக்தர்களும் அடியார்களும் அங்கு வரும் மற்றவர்களை சந்தித்து உரையாடி, புன்னகைத்து உறவாடுவார்கள். புதிய நட்பை உருவாக்குவார்கள். ஜெனீவாவுக்கு வருடாந்தம் புனித அரசியல் யாத்திரை செல்லும் எமது தமிழ் சட்டமேதைகள் சிலர் ஒருவர் முகத்தை ஒருவர் ஏறெடுத்தும் பார்க்காமல், முகத்தை நீட்டிக்கொண்டு இருந்துவிட்டு அறிக்கைப்போர்கள் நடத்துகிறார்கள்.
வன்னியில் போர் முடிந்து ஒன்பது ஆண்டுகள் ஓடிவிட்டன.
ஆனால், வன்னியின் பெயரைச் சொல்லி சொல்லியே எமது தமிழ் தரப்பு அரசியல் சட்டமேதைகளின் அறிக்கைப்போர்தான் இன்னமும் முற்றுப்பெறவில்லை.
அதனை தடுத்து நிறுத்துவதற்காகவாவது தமிழர்களின் தேசியத்தலைவர்,யேசுநாதர் போன்று உயிர்த்தெழுந்து வரமாட்டாரா…? என்ற ஏக்கமும் பலருக்கு இன்று வந்துவிட்டது.
மறுமொழியொன்றை இடுங்கள்