கிழக்குத் தீமோர், அவுஸ்திரேலியாவுக்கு மிக அருகில் இருக்கும் நாடு. அத்துடன் எனது நெருங்கிய நண்பர் ஒருவரது நாடு. முன்பு ஒரு முறை அந்த நாட்டின் சுதந்திரத்தின் பின்பாக போயிருந்ததால், காலத்தின் மாற்றங்களை அறிந்து கொள்ள இம்முறை ஈஸ்டர் விடுமுறையில் அங்கு சென்றேன்.
டெலி(Dili) என்பதே கிழக்குத் தீமோரின் தலைநகர். எந்த சோதனைகளுமற்று இறங்கியபோது 30 அமெரிக்க டொலரில் விசா கிடைத்தது. எனக்காக நண்பன் விமான நிலையத்தில் காத்திருந்தான். காலனிய காலத்து வசதியான அவனது வீட்டில் அறையொன்று எனக்காகக் காத்திருந்தது.
“பல் துலக்குவதற்கு போத்தல் தண்ணீர் பாவிக்கவும். இந்த நகரமே சிற்(Shit Pit)பிற்றாக மாறுகிறது” எனச்சொன்னான்.
மலகூடங்கள் நிலத்தில் குழிகளாக அமைக்கப்படுவதால், பக்கத்தில் கிணறுகளில் பொசிவதை சொன்னான். நமது யாழ்ப்பாணமும் அப்படித்தானே என நினைத்துக்கொண்டேன்.
ஈஸ்டர் பண்டிகையின்போது கத்தோலிக்கர் இறைச்சிவகை உண்பதில்லை. இரவு முழுவதும் கடல்வாழ்ந்த உயிரினங்கள் எமது வயிற்றில்.மீன், ஓய்ஸ்ரர், நண்டு, கணவாய் என்று எல்லாம் எம்மைத் தேடிவந்தன.
ஈஸ்டர் வெள்ளிக்கிழமை அங்கு பெரும்பாலான கடைகள், அலுவலகங்கள் எல்லாம் மூடியிருந்தன. “நான்கு நாட்களும் இப்படித்தான் இருக்கும்” என்றான். அவனது முகத்தை ஏறிட்டபோது, ‘இது கத்தோலிக்க நாடு. இப்படியாகத்தான் இருக்கும்’ என்றபோது எனக்கு மனதில் உறைத்தது. மதவிடயங்களை அதிகம் பொருட்படுத்தாத அவுஸ்திரேலியாவில் இருப்பதால் வெளிநாட்டில் அதன் முக்கியத்துவம் தெரிந்தது. அந்த வீட்டருகே இருந்த தேவாலயத்தில் அன்று மக்கள் நிரம்பி வழிந்தனர்.
ஊர் சுற்றி பார்க்க ஜீப்பிற்கு பெற்றோல் இடவேண்டும் என்பதால் திறந்திருக்கும் பெற்றோல் நிலையங்களைத் தேடி அலைந்தபோது , இறுதியில் சீனர்கள் நடத்தும் பெற்றோல் நிலயத்தைக் கண்டுபிடித்தோம். சீனர்களது மதம் பணம்தான் என பலர் நக்கலடித்தாலும் , நல்ல வேளை சீனர்கள் இல்லையென்றால் நம்பாடு அதோ கதிதான். அவுஸ்திரேலியாவில்கூட கம்பியூட்டரில் இருந்து உள்ளாடைகள் கால்வாசி விலை குறைந்திருப்பதன் காரணம் அவர்களே. சீனர்களது முக்கியத்துவம் அம்பாந்தோட்டையில் மட்டுமல்ல ஆசியாவில் எங்கும் தெரியும்.
கிழக்குத்தீமோர் நடுப்பகுதி மலைகள் கொண்டதீவு. சனானா குஸ்மாவைத்(Xanana Gusmao தலைவராகக் கொண்ட போராளிகள் பலகாலம் கரந்துறைய அந்த மலைப்பிரதேசம், விடுதலைப்புலிகளுக்கு வன்னிப்பிரதேசம்போல, உதவியது.
கிழக்குத்தீமோர் விடுதலையடைந்தபின்னர், சனனா குஸ்மாவுக்கு தங்கச் சங்கிலி அணிவித்து ஈழம் விடுதலையாகினால் அங்கீகரிக்க கிழக்குதீமோரை தயார்படுத்தியிருந்தார். அக்காலத்துத் தமிழர் ஒருங்கிணைப்பு தலைவர் தில்லை ஜெயக்குமார். இறுதியில் அந்தக்சங்கடம் சனானாவுக்கு வரவில்லை.
எனது நண்பன், சனானா குஸ்மாவின் தீர்க்கதரிசனம் பற்றி கூறிய ஒரு விடயம் என்னை மிகவும் சிந்திக்கப் பண்ணியது. சுதந்திரமடைந்தபோது கிழக்கு தீமோரில் இருந்த இந்தோனேசியப் படையணி , இந்தோனேசியப் பகுதியான மேற்குத்தீமோருக்கு பின் வாங்கும்போது, பல கட்டிடங்களை எரித்ததுடன் நூறுக்கு மேற்பட்ட கிழக்குத் தீமோர்வாசிகளையும் கொன்றது.
அக்காலத்தில் எது நடந்தாலும் விடுதலைப்படையினர் திருப்பித் தாக்கக்கூடாது என்று கடுமையான கட்டளை சனானா குஸ்மாவால் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
“அக்காலத்தில் அப்படியில்லாது திருப்பித் தாக்கியிருந்தால் ஆயிரக்கணக்கானவர் கிழக்குத் தீமோரில் கொலை செய்யப்பட்டிருப்பார்கள்” என்றான் என் நண்பன்.
பலமான எதிரியைத் திருப்பித் தாக்கினால் வீரமென்று கருதுபவர்கள் நாம் ஆனால் விவேகம் வென்று புதுநாடாக திகழ்கிறது.
தற்பொழுது இந்தோனேசியாவை எதிரியாகக் கருதாமல், பெரும்பாலான வர்த்தகம் இந்தோனேசியாவுடனேயே நடைபெறுகிறது. பெட்ரோலில் இருந்து நூடில்ஸ்வரை இந்தோனேசியாவில் இருந்து வருகிறது.
எமது நாட்டில் விஜயன் கதை மாதிரி, கிழக்குத் தீமோருக்கு ஒரு கதையுண்டு. தனது கூட்டத்திலிருந்து தப்பிய முதலைக்குட்டியொன்று கடற்கரையில் ஒரு சிறுவனை கண்டு அவனைத் தனது முதுகில் ஏற்றியபடி உலகை வலம் வந்தது. முதலைக்கு வயதாகியதும் அந்தச் சிறுவனை கிழக்கு தீமோரில் இறக்கிவிட்டு, ‘இனி எனக்கு வயதாகிவிட்டது. நீ உன் சந்ததியை பெருக்கி இங்கே வாழ்ந்துகொள் ‘ என்றதாம். மகாவம்சத்தில் சிங்கத்துடன் உறவுகொண்டு குழந்தை பிறந்தகதையை நம்புவதுபோல் அந்தச் சிறுவனின் சந்ததியினர் எந்தப் பெண்ணுமில்லாது உருவாகினர் என்பதையும் 300 வருடங்கள் வாழும் முதலை எப்படி வயதாகியது என்பதையும் அதே நேரத்தில் எப்படி சிறுவன் தொடர்ந்தும் சிறுவனாக இருந்தான் என்பதையும் ஆராய வேண்டியதில்லை.
அவுஸ்திரேலியா – ஆசியா என்ற இரு கண்டத்தினது மோதலில் உருவாகியது கிழக்குத் தீமோர் என்று புவியியலாளர்கள் சொல்கிறார்கள்.
மலேய இனம் மற்றும் மெலனீசியர்களது கலப்பு இனமாக இருந்த மக்கள், சிறிய தலைவர்களைக் கொண்ட தனித்தனி குலங்களாக இருந்தார்கள். சந்தனமரங்கள் அதிகமாக இருந்ததால் இந்திய, சீன வியாபாரிகள் கடல் வழிப்பாதையில் வந்து போனார்கள் . இறுதியாக 16 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர் ஆண்டார்கள். இரண்டாம் உலகயுத்த காலத்தில் சிலவருடங்கள் யப்பானியர்கள் கிழக்குத் தீமோரை கைப்பற்றி வைத்திருந்தார்கள். அவர்கள் தோற்கடிக்கப்பட்டதும், 1974வரை போர்த்துக்கேயர் மீண்டும் ஆண்டார்கள். அவர்கள் விலகியபோது இந்தோனேசியர்கள் உள் நுழைந்து 2002 வரையும் இருந்தார்கள்.
நான் ஒரு நாள் இரவு விருந்துக்குச் சென்ற இடத்தில் இருந்தவர்களில் ஒவ்வொருவரது சாடையும் வேறாக இருந்தது . வீட்டின் சொந்தக்கார் தனது தாத்தா கல்கத்தா இந்தியர். பேத்தியார் போர்த்துக்கேயர் என்றார். அதேபோல் ஆப்பிரிக்க கலப்பு, ஐரோப்பியர் மற்றும் சீனர் எனப் பல நிறத்தில் இருந்தார்கள்.
கிழக்குத் தீமோரை 500 வருடங்கள் போர்த்துக்கேயர் ஆண்டதால் போர்த்துக்கல் காலனிகளான கோவா, அங்கோலா, மொசாம்பிக், மக்கா(Macao) என்ற சீனாவுக்கு சொந்தமான தீவு என்று எல்லாப் பகுதியிலும் இருந்தவர்கள் இங்கு வந்து உள்ளூர்வாசிகளோடு கலந்திருக்கிறார்கள்.பிற்காலத்தில் ஆண்ட இந்தோனேசியரும் கலந்து கிழக்குத் தீமோர் மக்கள் உலகத்தின் சகல மானுடவர்க்கத்தின் கதம்பமாக இருப்பார்கள். “மலை உச்சியில் கூட ஒரு வீதம் தூய கிழக்கு தீமோர் மக்களாக இருக்கமாட்டார்கள் ” என்றான் எனது நண்பன். இந்த விதத்தில் எந்த விதமான இனபேதமற்ற நாடு உலகத்தில் உண்டென்றால் இதுவேயாகும். இங்கு 95 வீதமான கத்தோலிக்க மக்கள் வாழ்ந்தாலும், சுதந்திரப்போராட்டத்தில் பங்கு பற்றிய ஏமன் நாட்டு வம்சாவளி இஸ்லாமியரே பிரதமராக உள்ளார். அவரை நான் மரக்கறி சந்தையில் சந்தித்தேன். அவரும் எனது நண்பனும் சிறுவயதில் ஒன்றாகப் படித்தவர்கள்.
1975களில் அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியர்களது ஆசிர்வாதத்துடனே இந்தோனேசியர்கள் கிழக்குத்தீமோருக்குள் வந்தார்கள். கால்நூற்றாண்டுகளின் பின்பு இந்தோனேசியாவிடமிருந்து சுதந்திரமடைந்ததற்கு அங்கு ஆயுதம் தாங்கிப் போராடியவர்களைவிட, கத்தோலிக்க திருச்சபையே காரணம். தொடர்ச்சியாகப் பிரசாரம் செய்து மேற்கு நாடுகளையும் முக்கியமாக ஐரோப்பிய சமூகத்தையும், அவுஸ்திரேலியாவையும் தன்பக்கம் திருப்பினார்கள்.
சாதாரண கிழக்குத் தீமோர் மக்கள் ரெட்ருன் (Tetun) என்ற உள்ளுர் மொழியையும் மத்திய வர்க்கத்தினர் போர்த்துக்கேய மொழியையும் பேசியபோது, இந்தோனேசியாவின் ஆட்சியில் இந்தோனேசிய மொழியைக் கட்டாய பாடமாக்கிப் போர்த்துக்கல் மொழியைப் புறக்கணிக்கத்தார்கள். கத்தோலிக்க மதகுருக்கள் ரெட்ருன் மொழியை தேவாலயங்களிலும் பாடசாலைகளிலும் பயன்படுத்தினர்.
சுதந்திரமடைந்தபோது அப்போதைய பாப்பாண்டவர் ஜோன் போல் 11 கிழக்குத் தீமோருக்கு விஜயம் செய்தார். அவரது மிகவும் அழகான பிரமாண்டமான சிலையொன்று தலைநகர் டெலியில் உள்ளது. பல சிலைகளைப் பார்த்தாலும் என்னை இந்தச் சிலை மிகவும் கவர்ந்தது. கிழக்குத்தீமோரின் தலைநகரான டெலியில் ரியோடி ஜெனிரோவில் உள்ளதுபோல் யேசுவின் சிலை ஒன்று மலையுச்சியில் உள்ளது. அந்த மலைக்கு செல்லும் வழியில் யேசுநாதர் சிலுவையைச் சுமந்தபடி சென்ற வரலாற்றைப் பதிந்திருக்கிறார்கள்.
தற்போது நாட்டின் வருமானம் பெரும்பகுதி கடலில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்யில் பெறப்படுகிறது. கிழக்குத்தீமோர் பாலித்தீவுபோல் கடல் வளம் கொண்டது. உல்லாசப்பிரயாணிகளை கவரமுடியும். ஆனால் உல்லாப்பயணத்துறை தொடக்கப்புள்ளியிலே உள்ளது. மிகவும் சிறந்த கோப்பி விளையும் இடமாக கிழக்குத் தீமோர் உள்ளது.
பல உயர் மட்டத்தில் உள்ளவர்களைச் சந்திக்க முடிந்தது.வசதியானவர்கள் வாழ்வதற்கு எண்ணெய் வருமானம் உதவுகிறது. அவுஸ்திரேலியாவில் இருந்துபோனவர்கள் பலர் வியாபாரங்களை உருவாக்கியுள்ளார்கள். சாதாரண மக்களது மாத வருமானம் மிகக் குறைவானது. புதிய நாடாக இருப்பதால் அரசாங்கத்தில் ஊழல் பல பகுதியில் தெரிந்தது. வருங்காலத்தில் பப்புவா நியுகினி போன்ற ஊழல் நிறைந்த நாடாக உருவாகுவதோ, இல்லை சிங்கப்பூர் போன்ற ஒருநாடாக வருவதோ அங்குள்ள அரசியல்வாதிகளைப் பொறுத்தது.
அவுஸ்திரேலியா – இந்தோனேசியா என்ற இரு நாடுகளினதும் நலன்கள் கிழக்குத் தீமோரில் உள்ளது. அதேவேளையில் சீனா பெருமளவு முதலீடுகளைச் செய்து வருகிறது. இந்த மூன்று நாடுகளின் நலன்களையும், சொந்தமக்களின் நலன்களையும் அனுசரித்துப் போகவேண்டிய கட்டாயத்தில் வாழும் புவியியல் கிழக்குத் தீமோர் பகுதியில் அமைந்துள்ளது.
மறுமொழியொன்றை இடுங்கள்