வெளியே வந்த சந்திரனுக்கு தெருவிளக்கின் வெளிச்சம் கண்களைக் கூச வைத்தது. திருடிக் கொண்டு வெளியேறும் திருடன் போல் தன்னை யாராவது பார்க்க்pறார்களா என சுற்றுமுற்றும் பார்த்தான். தெரிந்தவர்கள் யாராவது நடந்தோ காரிலோ போகிறவர்கள் தன்னை அவதானிக்கலாம் என்ற எண்ணம் அவனை தாக்கியது. அவசரமாக காரை நோக்கி எட்டிக்கடந்து காரில் ஏறினான். காரை ஓட்டும் போது உடல் உறவில் ஏற்பட்ட ஒரு அமைதி நிலையுடன், குற்ற உணர்வும் சேர்ந்து யாழ்பாணத்தில் ஒரு முறை உயர வளர்ந்த தக்காளி தோட்டத்தின் உடாக வெற்றுடம்போடு ஓடியதால் ஏற்பட்ட நமச்சலை நினைவுக்கு கொண்டு வந்தது.
உடல் உணர்வு இப்படீ இருந்த போது அகத்தில் வேறுபாடான முரண்பாடுகளின் அகப்பட்ட மனநிலையில் இருந்தான். முதல்முறை திருடியவன் திரவியங்கள் எடுத்த திருப்தி இருந்தாலும் களவு எடுத்து விட்டேன் என்ற குற்ற உணர்வு அவனை தாக்கியது.ஜுலியாவின் நிர்வாண உடம்பின் வாசனை அவனை கொடியாக சுற்றிப் படர்ந்திருப்பது போல் உணந்தான். குளித்தால் மட்டுமே இதைப் போக்க முடியும் என நினைத்து கடிகாரத்தை பார்த்தான். நேரம் ஒன்பது மணிக்கு மேல் இருந்தது.
‘சோபா படுத்திருப்பாளா?, இல்லை சுமனோடு இருப்பாளா? துன்பப்படுபவளுக்கு துணையாக இருப்பதை தவிர்த்து இப்படி ஒரு விடயத்தில், ஈடுபட்டு விடுகிறேனே! . இந்தநிகழ்ச்சி என்னால் திட்டமிட்டு நடத்தப்படவில்லை என்று மனதில் ஏதோ மூலையில் சமாதானம் ஒலித்தாலும் மனதுக்கு சாந்தி கொடுக்கவில்லை. ஜுலியாவைப் பார்க்க வேண்டும் என நினைத்துத் தானே இந்தப்பகுதிக்கு வந்தேன். நான் நினைத்திருந்தால் ஒவ்வொரு படிகளிலும் தடுத்திருக்கலாம். அப்பாவித்தனமாக உடலுக்கு மசாஜ் செய்தவளை அணைத்தது நான் தானே! ’.
இரவு நேரமானதால் தெருக்கள் சிறிது அமைதியாக இருந்தது. முன்சென்ற கார்கள் வேகமாக சென்றதால் சந்திரனது காரும் வேகமாக சென்றது. மனம் இன்னும் வேகமாக சிந்தனையில் பறந்தது. கார் பல இடங்களை தாண்டி வீட்டருகே நிற்கும் வரை சந்திரனின் சிந்தனை ஓயவில்லை.
காரை கராஜில் நிறுத்திவிட்டு வீட்டை திறந்து நேரடியாக குளியல் அறைக்குள் சென்றான். சேட்டில், உள்ளாடையில், தேகம் எங்கும் யூலியாவின் மணம் நிறைந்து இருந்தது. உடுப்புகளை அழுக்கு கூடையில் போட்டுவிட்டு குளியலறையில் சவரை திறந்து குளித்தான். பலதடவை சம்போ வைத்து தலையை அலம்பி அழுத்தமாக சோப்பு போட்டுக் குளித்தான். வழக்கமாக பத்துநிமிடத்தில் முடியும் குளியல் அரைமணி நேரம் சென்றது. அதுவும் வெந்நீர் முடிந்து குளிரும்போதே சவரை நிறுத்தினான்.
ரவலைக்கட்டியபடி படுக்கை அறைக்குள் சென்றவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வழக்கத்துக்கு மாறாக புத்தகம் ஒன்றை படித்தபடி கட்டிலில் அமரந்திருந்தாள் சோபா.
“சுமன் நித்திரைதானே? “
பதில் இல்லை.
அடுத்த அறையில் தொட்டிலில் தூங்கும் சுமனுக்கு முத்தம் கொடுத்து விட்டு வாட்ரொப்பில் இருந்த சாரத்தை எடுத்தான்.
“ஏன் இவ்வளவு நேரம்?” என்றாள் சோபா.
“நான் நியூசவுத்வெல்ஸ் பல்கலைக்கழகம் செல்வதாகச் சொல்லி விட்டுத்தானே சென்றேன்”. என்றான் சிறிது கடுப்பாக.”
“நான் தனியே பிள்ளையுடன் இருக்கிறேன் என்ற எண்ணம் இல்லாமல் ஊர் சுற்றிவிட்டு வருகிறீர்கள். “
“உன்னைப்பற்றிய எண்ணத்தில்தான் ஊர் சுற்றினேன். உனக்கு புரியாவிட்டால் நான் என்னசெய்வது?.”
“சாப்பிட்டீர்களா? “
“எனக்கு பசிக்கவில்லை நான் ஒரு விடயம் சொல்கிறேன் உன் அப்பா அம்மாவிடம் சொல்வதில்லை என சத்தியம் செய்ய வேண்டும்.”
“என்ன பீடிகை போடுகிறீர்கள்.? “
“நீ சத்தியம் செய்தால் மட்டுமே சொல்வேன்.”
“சரி சத்தியம் “. சந்திரன் தலையில் கைவைத்தாள்.
“இதோ பார் நாங்கள் திருமணம் முடித்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன எங்கள் இருவருக்கும் இடையில் ஒத்து வருகிறதில்லை நான் உம்மில் பிழை கூறவில்லை. நீர் செல்லமாக வளர்க்கப்பட்டிருக்கலாம். நான் கூட மனத்தளவில் உமக்கு ஏற்றவனாக இல்லாமல் இருக்கலாம். நான் உன்னை விரும்புகிறேன். நாங்கள் இருவரும் தொடர்ந்து சந்தோசமாக வாழவேண்டும் என்றால் உமது ஒத்துழைப்பு தேவை.”
“இப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்.”
“நானும் நீயும் ஒரு சைக்கியாட்டிரிக்கிடம் போய் கலந்தாலோசனை செய்வோம். நம்மில் எவரிலாவது குறை இருந்தால் அதை அவரது சொல்படி திருத்த முயலுவோம்.”
“நீங்கள் எனக்கு விசர் என்று நினைக்கிறீர்களா? “
சோபாவின் கண்கள் இரண்டும் சந்திரனது முகத்துமேல் எறிந்த ஈட்டிபோல் குத்திடடு நின்றன. அவனது நெஞ்சின் இடப்புறத்தில் சுருக்கென வலி ஏற்பட்டது. கண்களை கீழே நோக்கி தாழ்த்திய படி “இல்லை. இப்படியாவது ஏதாவது வழி கிடைக்குமா என் பார்ப்போம். நம்மட ஊரில் கோயில், குளம் என்று தீர்த்தயாத்திரை போகலாம் இந்த நாட்டில் வேறு என்ன செய்யலாம்.? “
“இங்கேயும் கோயில் இருக்குத்தானே” எனச்கூறி திடீரென சிரித்தாள். அவளது கண்ணில் இருந்து கண்ணீர் கசிந்தது.
“ஆனால் குளம் இல்லை”. எனச் சற்திரன் சிறிது நிம்மதியுடன் பதிலுக்கு சிரித்தான்.
அவள் சிரித்தாள் மீண்டும்.
“நீ இப்படி சிரிப்பது சந்தோசமாக இருக்கிறது.”
“நீங்கள் சைக்கியாற்றிடம் வரச்சொன்னால் வருகிறேன். உங்களைப் பார்க்காமலே சிட்னி வந்து இறங்கினேனே.”
“உண்மையாகவா சொல்கிறாய்!”
“சத்தியம் செய்யவா”!
“உன்னை நம்புகிறேன் “.
சோபாவை கட்டிப்பிடித்து முத்தமிட்டான். கட்டிப்பிடிக்கும்போது ஜுலியாவின் நினைவு வந்தது. இப்படி அப்பாவியான பெண்ணை ஏமாற்றுகிறேனே. இவள் செய்யும் செயல்கள் மனம் அறியாமல் செய்பவை. நான் செய்வதுதான் துரோகம். ஜுலியாவை இனிப் பார்ப்பது இல்லை என மனத்தில் உறுதி எடுத்துக் கொண்டான்.
டொக்டர் கந்தசாமியின் கிளினிக். சிட்னியின் பெரிய வைத்தியசாலைக்கு பக்கத்தில் இருந்தது. கோம்புஸ்சில் இருந்த சோபாவின் பெற்றோரிடம் சுமனை விட்டுவிட்டுச் சந்திரனும் சோபாவும் டாக்டரிடம் வந்தனர்.
சோபாவின் முகத்தில் சோபை இல்லை. கோடை வெய்யிலில் வாடிய பூச்செடிபோல் காட்சியளித்தாள். சந்திரனுக்கு அவள்மேல் அனுதாபமாக இருந்தது.
‘இவள்வேறு யாரையாவது மணமுடித்திருந்தால் சந்தோசமாக இருந்திருப்பாள். என்னால் தான் கஸ்டப்படுகிறாளோ?’
“என்ன சோபா மௌனமாக இருக்கிறாய்? “ எனச் சந்திரன் பேசுவதற்கு முயன்றான்.
“அப்படியொன்றுமில்லை.” என்றாள் காருக்குள் வெளியே பார்த்தபடி
“ஏன் உனக்கு விருப்பம் இல்லை என்றால் சொல்லு திரும்பி விடலாம்”.
பதில் பேசவில்லை. கண்கள் கலங்கியிருந்தன. மூடிய காரின் கண்ணாடியில் கன்னத்தை வைத்துக் கொண்டிருந்தாள். சந்திரன் அவளது கையை எடுத்து தனது மடியில் வைத்தான். சோபா வெளியே வெறித்து பார்த்தபடி இருந்தாள்.
டாக்டரின் வரவேற்பு அறையில் எவருமில்லை. ரிசப்சனில்; இருந்த வெள்ளைக்கார பெண்மணி உடனடியாக உள்ளே போகும்படி கூறினாள்.
உள்ளே சென்றதும் டாக்டர் எழுந்து அழகு தமிழில் “வாருங்கள் வாருங்கள்.. அமருங்கள்” என வரவேற்றார்.
டாக்டரது அறையில் அவரது நாற்காலியை தவிர இரண்டு நாற்காலிகள் இருந்தன. மற்ற வைத்தியர்கள் போல உடல் அங்கங்களின் படங்கள் இல்லாது அறையின் சுவர் மெதுவான பச்சை நிறத்தில் வண்ணமடிக்கப்பட்டு சுத்தமாக இருந்தது. மேசையின் மூலையில் சில புத்தகங்கள் மட்டும் இருந்தன.
“மிஸ்டர் சந்திரன் யாழ்ப்பாணத்தில் எந்த இடம்? “என ஆறுதலாகக் கேட்டார்.
“நான் நல்லூர். சோபா கொழும்பில் பிறந்து வளர்ந்தவள்.”
“நானும் யாழ்ப்பாணம்தான். சிறுவயதில் கொழும்பிலும் பின்னர் இங்கிலாந்திலும் இருந்தேன் யாழ்ப்பாணம் எப்படி என தெரியாது.” என கூறிய டாக்டர் இலேசாக சிரித்தார்.
மீண்டும் சோபாவைப் பார்த்து “சோபா என கூப்பிடலாம் தானே.? என்றார்.”
சிறிய சிரிப்புடன் சோபா தலையை ஆட்டினாள்.
“நீங்கள் எவ்வளவு காலம் திருமணமாகி வாழ்கிறீர்கள் உங்கள் திருமணம் காதல் திருமணமா?” என இருகேள்விகளை ஒன்றாகக் கேட்டார்.
“நாலு வருடமாக சிட்னியில் படித்துக் கொண்டிருக்கிறேன். இரண்டு வருடத்துக்கு முன்பு சிட்னியில் எங்கள் திருமணம் நடந்தது. சோபா உறவுமுறைப் பெண்” என்றான்.
“நீங்கள் இருவரும் இளம்தம்பதிகள.; சந்தோசமாக இருக்கிறீர்கள் தானே.? “
“சந்தோசம்தான் டாக்டர். . “
சந்திரனுக்கு வார்த்தைகள் வரவில்லை. மனதில் உள்ள எண்ணங்கள் மொழியின் வரி வடிவம் பெற மறுத்தன.
மொழியற்ற ஆதிகாலத்துக்கு தற்காலிகமாக தள்ளிவிடப்பட்டி
“சோபா, சந்திரனுக்கு சொல்ல முடியவில்லை போல் இருக்கிறது. நீங்கள் சொல்லுங்கள்.”
சோபா சந்திரனைப் பார்த்தாள். தெருவின் சந்திப்புக்கு வந்தபின் எந்த பாதையால் போவது என விழிக்கும் வழிப்போக்கனை போல் காணப்பட்டாள். சந்திரனும் அதே மனநிலையில் தான்இருந்தான்.
சந்தர்ப்பத்தின் இறுக்கத்தை கலைக்க விரும்பிய டாக்டர், “சரி இருவரும் ஒன்றாக இருந்தால் பேசுவது கஸ்டமாக இருக்கும் ஒருவர் வெளியே இருங்கள். சந்திரன் ,பெண்களுக்கு முன்னுரிமை கொடுப்போம். நீங்கள் வெளியே போய் இருங்கள். சோபாவிடம் பேசிவிட்டு உங்களிடம் பேசுகிறேன்.”
சோபா தனியே விடப்பட்டாள். நாற்காலியின் விளிம்பில் உட்கார்ந்திருந்தவளை பார்த்து, “ஆறுதலாக சாய்ந்து உட்காருங்கள்” என்றார் டாக்டர்.
“உங்களது வீட்டில் எத்தனை பேர் சோபா? “
“நானும் அண்ணாவும். ஆனால் அண்ணா விபத்தில் இறந்துவிட்டார்.
“ஐ அம் சொறி, எப்படி இறந்தார்? “
“83ம் ஆண்டு இனக்கலவரத்தின் பின் யாழ்ப்பாணத்தில் வசித்தோம். அப்பொழுது அவன் ஒரு விடுதலை இயக்கத்தில் சேர்ந்து இந்தியாவில் பயிற்சி பெற்றுக் கொண்டு இலங்கை திரும்பினான்;. மற்ற இயக்கத்தினர் அவனைச் சுட்டுக் கொன்று விட்டனர்.”
“இந்த சந்தர்ப்பத்தின் பின் கொழும்பு போனீர்கள்தானே அங்கு எதுவும் நடந்ததா? “
“இல்லை ஆனால் கலவரத்தால் பாதிக்கப்பட்டோம். “
“உமக்கு எதுவும் நடந்ததா? “
“கலவரத்தில் வீடு எரிக்கப்பட்டது. சிங்கள காடையர்களால் நான் துரத்தப்பட்டு அகதி முகாமில் இருந்து கப்பலில் யாழ்ப்பாணம் வந்தோம் “ என நடந்தவற்றை விரிவாக டாக்டரிடம் கூறினாள் சோபா.
இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை வைத்தியரிடம் சோபாவை கூட்டிச் செல்லும்போது வைத்தியர் சந்திரனை வெளியே வைத்துவிட்டு சோபாவிடம் பேசினார்.
இப்படி இரண்டுமாதம் கடந்தபின் சந்திரனிடம் “சோபாவுக்கு “பைபோலர் டிஸ்ஓடர்” என்ற நோய் இருக்கிறது. இது பெரிய நோய் அல்ல. மருந்துகளினால் கட்டுப்படுத்தலாம் “என்று சந்திரனிடம் கூறினார்..
“அது என்ன பைபோலர் வருத்தம் “ என்று கலவரமடைந்த சந்திரன் கேட்டான்.
.
“சந்திரன் தயவுசெய்து ரிலாக்ஸ்; நீங்கள் நினைப்பது போல் இது பாரதூரமான நோயில்லை. இதை “மூட் டிஸ்ஓடர்” என்றும் சொல்லலாம். எல்லோர் மனதிலும் கவலையும், சந்தோசமும் மாறிமாறி வரும் இந்த மாற்றம் உங்களுக்குத் தெரியாமலே நடக்கும். கவலை அடையும்போது எரிச்சல் ஏற்படும். சோபாவின் இளம்வயது சம்பவங்களும் இதற்கு ஒரு காரணம். மனத்தின் சமநிலையை இந்த சம்பவங்கள் பாதித்துவிட்டன. மனதில் ஏற்படும் இந்த நிலையால் மற்றவர்களிடம் இருந்து இவர்கள் விலகி இருக்க முனைவார்கள். மருந்துகள் உதவி செய்யும். அதேவேளையில் குடும்பத்தில் உள்ளவர்களது அரவணைப்பும் பராமரிப்பும் தேவைப்படும். நான் எதற்கும் சீடி ஸ்கானுக்கும் தைரொயிட்டு ஓமோன் டெஸ்டுக்கும் ஒழுங்கு பண்ணுகிறேன். மீண்டும் ஒருமாதத்தில் வந்து பார்க்கவும்.”
சோபாவைச் சமாதானப்படுத்த எந்த ஆறுதல் வார்த்தைகளும் பலனளிக்கவில்லை. வெளியே பார்த்தபடி காரின் கண்ணாடியிலே முகம் புதைத்திருந்தாள். அவளது கண்ணிமைகள் மட்டும் காயம் பட்ட பட்டாம் பூச்சி நிலத்தில் விழுந்து எழும்பி பறக்க முடியாமல் மெதுவாக தன் சிறகுகளை அசைப்பது போல் இருந்தது.
வீடு சென்றதும் “அம்மாவிடம் சொல்லாதே” என்றான்.
உள்ளே சென்றதும் இராசம்மாவின் கையில் இருந்து சுமனை பறித்து எடுத்தாள்.
“ஏனடி இப்படிப் பிள்ளையை இழுக்கிறாய? உனக்கு என்ன நடந்து விட்டது.? என்றாள் இராசம்மா.
எதுவித பதிலும் சொல்லாமல் உள்ளே சென்றாள்.
“தம்பி என்ன டாக்டர் சொல்கிறார்? “
இராசம்மாவைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.
“சின்ன விடயங்களுக்கு கவலைப்படுவதால் மனதில் தளர்ச்சி ஏற்பட்டுள்ளதாம் “. என பட்டும் படாமலும் சந்திரன் சொன்னான்.
“தம்பி நாங்கள் உங்களோடு வந்து இருந்தால் நல்லதுதானே? பிள்ளைக்கும் ஆறுதலாக இருக்கும். நீங்கள் காலமை போனால் இரவுதானே வருகிறீர்கள். பிள்ளையும் மொட்டு மொட்டு என்று தனியாக இருக்கிறாள்”.
இராசம்மாவின் கூற்றில் நியாயம் இருந்தது. இராசநாயகம் அமைதியானவர். பேசும்போது வார்த்தைகள் மெதுவாகத்தான் வெளிவரும் அவருக்கு கோபம் வந்ததையோ, உரத்துப் பேசியதையோ சந்திரன் பார்த்ததில்லை. இராசம்மாவோடு சந்திரன் வாய்த் தாக்கத்தில் ஈடுபட்டபோது கூட அவர் மௌனமாக இருந்தார். முப்பத்தைந்து வருடம் கிளாக்காக கொழும்பில் வேலை செய்ததால் பெற்ற பயிற்சியோ அல்லது அவரது சுபாவமோ தெரியவில்லை.
“மாமி நான் எனது ஆய்வினை முடிக்க எப்படியும் ஒரு வருடத்துக்கு மேல் செல்லும். நீங்கள் உங்கள் கோம்புஸ் பிளாட்டை விட்டுவிட்டு இங்கு வந்து இருக்கலாம். நான் யுனிவசிற்றிக்கு பக்கத்தில் ஒரு நண்பனுடன் இருப்பேன். வாரவிடுமுறையில் வரலாம் தானே.? “
“தம்பி நீங்கள் வெளியே இருந்து வருவது சரியல்ல. எங்கள் சமூகம் என்ன சொல்லும்?. “
“இல்லை, எனக்கு உங்களோடு எந்த பிரச்சனையும் இல்லை. அங்கிருந்தால் லாப்பில் இரவில் வேலை செய்யலாம். விரைவாக ஆராய்ச்சியை முடிக்க உதவும். மேலும் என்னிலும் பார்க்க நீங்கள் சோபாவுக்கு உதவியாக இருப்ப்Pர்கள்.”
“தம்பி யோசித்து முடிவெடுங்கள்” என்றார் இராசநாயகம். இதுவரையும் இவர் பேசாமல் இருந்தவர்.
“இதில் யோசிக்க ஒன்றுமேயில்லை. நாளைக்கே நீங்கள் பிளாட்டை விடுங்கள். நான் எனது காரைக் கொண்டு வருகிறேன். உங்கள் சாமான்களை கொண்டு வரமுடியும். “
உள்ளே சென்ற சோபா யன்னலினூடாக மற்ற வீடுகளையும் அப்பால் செல்லும் வீதியையும் வெறித்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள்.
“என்ன யோசிக்கிறாய்” என ஆறுதலாக சோபாவின் தோளில் கையை வைத்தான்
“சுமனைத் தா”
அப்படியே சுமனை அணைத்தபடி திரும்பி “எனக்கு விசர் வந்து விட்டது என விலகிப் போகிறீர்களா? “ என சோபா கரைந்தாள்
நெஞ்சில் எப்போதோ சிகரெட் நெருப்பு பட்ட நினைவு வந்தது. சந்திரனுக்கு இவளது கேள்வியில் உண்மை இருக்கிறதா எனக்கேட்டு பார்த்து சமநிலை அடைய சில கணங்கள் தேவைப்பட்டது.
“டாக்டர் சொன்னதை நீயம் கேட்டாய் தானே. நான் இரவு வரும் வரையில் நீ தனியே இருக்க வேண்டாம் என நினைக்கிறேன். உனது நன்மையை மனதில் வைத்து இந்த முடிவுக்கு வந்தேன்.”
“நீங்கள் எங்களோட இருக்கலாம் தானே? “ என கழுத்தை வெட்டினாள்.
“நீயே யோசித்துப் பார். இரண்டு அறை கொண்ட பிளாட்டில் எப்படி எல்லாரும் இருப்பது முன்பு இருந்தபோது வீண் மனஸ்தாபம் ஏற்பட்டதுதான் மிச்சம்.”
“நீங்கள் அதை வைத்துத்தான் இப்படி சொல்கிறீர்கள்.”
“என் ஆய்வை முடிப்பதற்கு உதவியாக இருக்கும். பட்டம் பெற்று எனக்கு நல்ல உத்தியோகம் கிடைத்தவுடன் பெரிய வீடு பார்க்கலாம். நான் வெள்ளிக்கிழமை வந்துவிடுவேன். சுமனைப் பார்க்காமல் எப்படி இருக்க முடியும்?. தயவு செய்து என்னைப் புரிந்துகொள்.”
சுமனால் பெற்றோரின் விவாதத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. “யப்பா…… ப்பா” என கூறமுயன்று அவனது வாயில் எச்சில் வடிந்தது.
“சரி முகத்தை தூக்கி கொண்டு இராதே” எனக் கூறிவிட்டு தமிழ்படம் ஒன்றை வீடியோவில் போட்டான்.
சோபாவின் மனதில் ஒரு எரிமலை குமுறிக்கொண்டு புகையையும் கங்குகளையும் தள்ளுவதும், உள்வாங்குவதுமாகவும் இருந்தது. ஆழமோ அகலமோ தெரியாத இத்த எரிமலையின் வெப்பம் மட்டும் உணரமுடிகிறது. மனத்துக்குள் வீசும் காங்கையை எப்படியும் அணைக்கவோ குறைக்கவோ முடியவில்லை.
‘எப்போது எனக்கு இந்த மனநிலையில் மாற்றம் வந்தது?. எண்பத்தி மூன்றில் காடையர்கள் நிர்வாணமாக்கியபோதா? கார்த்திக் எரிந்த உடலை பார்த்தபோதா? கார்த்திக்கும் அவனது நண்பர்களும் எப்படி தோட்டங்கள் வீடுகள் என ஒளித்தபோது துரத்தி துரத்தி சுட்டான்கள் என கார்திக்க்pன் நண்பன் விபரித்தபோதா? என்று பலவாறு சோபாவின் மனம் குமைந்தது.
மனம் சிறிது அடங்கியதும் குப்புற தலையணையில் முகத்தில் புதைத்தபடி படுத்திருந்தவளுக்குப் பின்னால் குரல் கேட்டது.
“தங்கச்சி உனக்கு ஏதாவது வேணுமா? “, என்றபடி கதவருகில் நின்று கேட்டாள் இராசம்மா.
“எனக்கு எதுவும் வேண்டாம். சுமனுக்கு பாலை குடுங்கோ. எவரும் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம்” எனக் கூறிவிட்டு தலையணையில் முகம் புதைத்தாள்.
தொடரும்