அரசியல் தற்கொலை செய்யும் ஒரு சமூகம் (22/11/2011 by noelnadesan)

Exile -Prime Minister

கம்போடியாவில் ரொன்லி சப் (tonle Sap); என்ற பெரிய ஏரி மீகொங் ஆற்றுடன் தொடர்பான 2500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டது. அந்த ஏரியை சுற்றியெல்லாம் கோடைகாலத்தில் வயலில் விதைத்து நெற்சாகுபடி செய்யமுடியும். மழைக் காலத்தில் அந்த ஏரி நீர் 13000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு அதாவது ஐந்து மடங்காக பெருகும் போது அந்தப் பகுதி மக்கள் ஆளுக்கு 100 கிலோ மீன்பிடிப்பதன் மூலம் தங்கள் உணவுத் தேவையை தீர்த்துக்கொள்வார்கள். கம்போடியாவின் அரைவாசிப்பேருக்கு உணவு வழங்கும் அமுதசுரபியாக இந்த ஏரி அமைந்துள்ளது

இதே போலத்தான் வன்னிப்பிரதேசத்திலும் கணுக்கால் அளவு நீர் நிறைந்திருந்த போது வயலாக நினைத்து நாற்று நடலாம். ஆனால் மழைக் காலத்தில் குளமாகிவிடும் இப்படியான தாழ்ந்த பகுதியில் நாற்று நடுவோம் என யாராவது அடம் பிடித்தால் எப்படியான உணர்வு உங்களுக்குத் தோன்றும்?.

அவ்வாறு அடம்பிடிப்பவர்களிடத்தில் எனக்கு அனுதாபம் தோன்றும்.

முப்பது வருடங்களுக்கு முன்பு போரும் அடக்குமுறை அரசியலும் நடந்த நாடுகளான கம்போடியா வியட்னாம் சீனா கியூபா போன்ற நாடுகளுக்கு நான் சென்ற போது அந்த நாடுகளில் சமீபத்திய வருடங்களில் பல வரவேற்கத்தக்க மாற்றங்கள் நடக்கின்றன. அங்கு அதிகாரத்தை தம்வசம் வைத்திருக்கும் தலைவர்கள் உலக சூழலுக்கு ஏற்ப மக்கள் நன்மை கருதி நடக்கத் தொடங்கி விட்டார்கள்.

நமது இலங்கை சமூகத்தில் இத்தனை அழிவுகளின் பின் நமது அரசியல் தலைவர்களின் நடத்தையில் மயிரளவு மாற்றமாவது தெரிகிறதா?

83ஆம்ஆண்டு ஜுலையின் பின் நிச்சயமாக இலங்கை அரசுகளை எதிர்த்து வன்முறைப் போராட்டத்தை நடத்த பெரும்பாலான தமிழர்கள் தள்ளப்பட்டது உண்மை. அந்த வன்முறை போராட்டத்தில் எமக்கு இந்தியா உதவி செய்தது. எம்மை பொறுத்தவரை பெரிய உதவியாக இருந்தது. இந்த உதவியை இராஜதந்திரமாக கையாண்டு இலங்கை அரசுகளோடு பேரம் பேச கிடைத்த சந்தர்ப்;பங்களை நழுவ விட்டோம். பின்பு இந்திய அமைதிப்படை வந்த போது அவர்களுடன் போர் புரிந்து உலகத்தில் இரண்டாவது பெரிய இராணுவத்தை தோற்கடித்ததாக வாய் சவடால் அடித்தோம்.

அந்தக் காலத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் வேட்டி கட்டியபடி சென்னைக்கும் டெல்லிக்கும் பிரயாணம் செய்து விடுதலைப்புலிகளிடம் இருந்து தங்கள் உயிர்களுக்கு பாதுகாப்புத் தேடினார்கள்.

இதன் பின் இந்தியா கசந்தவுடன் விடுதலைப் புலித்தலைவர்கள் கோட்டும் சூட்டும் போட்டு;க் கொண்டு மேற்கு நாட்டு தலைநகரங்களான ஒஸ்லோ ஜெனிவா என பல்லைக்காட்டியபடி திரிந்தார்கள். அப்பொழுது உயிர் பிழைத்த தமிழ் தலைவர்கள் இலங்கை அரசிடம் பாதுகாப்பு பெற்று கொழும்பில் பெட்டிப் பாம்பாக அடங்கி இருந்தார்கள்.

விடுதலைப்புலிகளுக்கு உதவ நோர்வே வந்தது. தேசியத் தலைவர் மாவிலாற்றில் சிங்களவர்களுக்கும் மூதூரில் இஸ்லாமியர்களுக்கும் பாடம் புகட்ட விரும்பி போர் தொடுத்தார்

அவரோடு மற்றும் கோட்டு சூட்டு போட்ட புலித்தலைவர்கள் இப்பொழுது ஆவியாகிவிட்டதால் இப்பொழுது பழைய தலைவர்கள் தங்கள் கல்லறைகளில் இருந்து ரிரான்சில்வேனியா ட்ரகுலாக்கள் போன்று புனர்ஜென்மம் பெற்று அமெரிக்கா போகிறர்கள்.

விடுதலைப்புலிகள் மாதிரித்தான் தமிழ்த் தலைவர்களது சிந்னையிலும் மாற்றமில்லை. பேசும் விடயங்கள் ஒன்றாகத்தான் இருக்கின்றன. வடக்கு கிழக்கை இணைக்க வேண்டும். சிங்கள குடியேற்றம் தடுக்கப்படவேண்டும். என்று சொல்லிக்கொண்டு தமிழ்த் தேசியத்தை வலியுறுத்துவார்கள்

இந்த கோசங்கள் தொடங்கி அரைநூற்றாண்டுக்கு மேலாகிவிட்டது.

ஆற்றில் ஏராளம் தண்ணீர் ஓடிவிட்டது. குமரியாக இருந்த பொம்பிளைக்கு இப்ப முலை மட்டும் வற்றவில்லை. பல்லும் போய் கையில் பொல்லும் வந்தாகிவிட்டது.

பல விடயங்கள் மாறிவிட்டன

சில நூறு இரணுவத்தினரைக்கொண்டு வல்வெட்டித்துறை ஊடாக நடக்கும் கள்ளக் கடத்தலைத் தடுப்பதற்கு பலாலியில் முதன் முதலாக இராணுவ முகாம் அமைக்கப்பட்டது. இதற்குப் பின் கள்ளத்தோணியில் இந்தியாவில் இருந்து வருபவர்களைக் கட்டுப்படுத்த ஆனையிறவு இராணுவமுகம் அமைக்கப்பட்டது. இப்படியாக பல்வேறு காரணங்களால் வடபகுதிக்கு வரத் தொடங்கிய இராணுவம் இன்று யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு வீட்டுத் தாழ்வரத்திலும் முகாமடித்துக் கொண்டுள்ளது

வன்னிப்பகுதியில் ஒரு சில இராணுவ முகாம்கள் இருந்தாலும் 83 ஆம் ஆண்டுவரை சாதாரண மக்களுக்கு பெரிய பாதிப்பு இருக்கவில்லை. விடுதலைப்புலிகள் வன்னியில் வாழ்ந்த மக்களின் காணிகளை சுவீகரித்தனர். விமானத்தளம் அமைத்தனர். பங்கர்கள் அமைத்து வன்னி பிரதேசத்தை இராணுவமயப்டுத்தி கட்டாய இராணுவசேவையில் சிறுவர்கள் பாடசாலை மாணவர்களை மட்டுமன்றி; முதியவர்களையும் ஈடுபடுத்தினர்;. விடுதலைப்புலிகளின் இந்த நடவடிக்கைகளை களிப்போடு பார்த்து அதற்கு உதவி செய்தவர்கள் வெளிநாட்டுத்தமிழர். அங்கு சென்று புலித்தலைவரோடு இறால்கறி விருந்து உண்டு களித்தார்கள் பாதிரிமார்கள். வெளிநாட்டு இஞ்ஜினியர்கள் விடுதலைப்புலிகள் தலைவருக்கு பங்கர் கட்டினார்கள். அவுஸ்திரேலியா கனடா என வெளிநாடுகளில் இருந்து சென்ற வெதுப்பல் இளசுகள் ஆயுதங்களுடன் மற்றும் சயனைட் குப்பிகளுடன் போட்டோ எடுத்து அவர்களை பெற்ற தாய் தந்தையருக்கு ஈமெயிலில் அனுப்பி சில கண நேரத்து விடுதலைப்போராளிகள் என அகம் மகிழ்ந்தார்கள். இப்பொழுது இந்த விடயங்கள் அறுவடைக்கு வந்து அவர்களைத் தாக்குகின்றன.

இப்படியான முன் உதாரணங்களை உருவாக்கியபின் இந்த தமிழ் சமூகம் தனது நட்டங்களைக் குறைத்துக் கொள்ள குறைந்த பட்சமாவது கடந்த இரண்டு வருடத்தில் முயலவில்லை. தமிழ் அரசியல்வாதிகளும் அப்படியே. ஆனால் அப்பொழுது இருந்தவர்களிலும் பார்க்க நேர்மையும் அறிவும் குறைந்தவர்கள். பலருக்கு இலங்கையில் பேசும் மற்றைய மொழிகளான சிங்களம் ஆங்கிலம் தெரியாது. ஆனால் நல்லூர்த் திருவிழாவில் விற்கப்படும் அதே சுவிங்கத்தை மீண்டும் அரசியலாக கயிறு இழுக்கிறர்கள். இந்த முரண்பாடுகளை புரிந்துகொள்ள முடியாத ஊடகங்கள் இவர்களைப்பற்றி எழுதி பக்கம் நிரப்புகின்றன. பிரபாகரனையும் தமிழ்ச்செல்வனையும் தமிழ் தலைவர்களாக்கிய இவர்களிடம் மேற்கொண்டு என்ன எதிர்பார்க்க முடியும்?

முன்பு புலம் பெயர்ந்த நாடுகளில் விடுதலைப்புலி தலைவர்களாக இருந்தவர்களில் சண்டியர்கள் மாபியாகாரர்கள் என பல குறைபாடுகள் இருந்தாலும் இயக்க விடயத்திலும் பண விடயத்திலும் நேர்மையானவர்களாக இருந்தார்கள். தற்பொழுது அவர்கள் ஓரங்கட்டப்பட்டு பக்கா திருடர்களும் பொய்யர்களும் எந்தக்காலத்திலும் பொதுச் சேவையில் ஈடுபடாத தற்குறிகள் வந்து சேர்ந்து ஒன்றை ஒன்று கொலை செய்யும் நோக்கத்தில் திரிகின்றன. விநாயகம் குழு நெடியவன் குழுவை தீர்த்துக்கட்ட திரிகிறார்கள். இதற்கு லண்டன் பாரீஸ் சம்பவங்கள் உதாரணம். பிரபாகரனுக்கு அந்திரட்டி செய்ய துணிவில்லாத இந்த கோஷ்டிகள் இரண்டு மாவீரர் தினம் வைத்தாலும் ஆச்சரியமில்லை. இந்த தற்குறிகளின் செயல்களால் இலங்கை அரசாங்கம் இராணுவத்தை தமிழர் பிரதேசத்தில பலமாக வைத்திருக்க விருப்புகிறது

இது இவ்விதம் இருக்க நாட்டில் பழைய புலிக்கோஷ்டிகள் தங்களது நலனை பேணுவதற்கு வன்னி நிலங்களை விடுதலைப்புலிகள் பணம் கொடுத்துத்தான் மக்களிடம் வேண்டினர்கள் எனச் சொல்லி இராணுவம் நிலங்களை எடுப்பதை நியாயப்படுத்துகிறார்கள்.

இவர்களால் சாதாரண தமிழர்களுக்கு தொடர்ச்சியாக துன்பங்கள் தொடர்கின்றன.

என்னைப் பொறுத்தவரை இந்தத்தமிழ் அரசியல்வாதிகளும் இந்த வெளிநாட்டு உள்நாட்டு கோஷ்டிகளும் போபால் விச வாயு உற்பத்தி தொழிற்சாலை போன்றவர்கள். தொடர்ச்சியாக விசவாயு உற்பத்தி செய்து தமிழ்மக்களை மேல் உலகத்துக்கும் வெளிநாட்டுக்கும் அனுப்பிக்கொண்டிருப்பார்கள் போல் தெரிகிறது.

தமிழ் சமூகமும் மகாபாரதத்தின் காந்தாரி, துரியோதனாதிகளை உற்பத்தி செய்தது போல் தற்குறிகளைத் தலைவர்களாக தொடர்ந்து உற்பத்தி செய்கிறது என்பதை வயிற்றெரிவுடன் கூற வேண்டி இருக்கிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: