லெனின் சின்னத்தம்பி நாவலைப் படித்தபோது அவுஸ்திரேலியாவில் ஒரு பஞ்சாபி உணவகத்தில் நான் வேலைசெய்த காலத்தை நினைவூட்டியது. இரண்டு மாதங்களாக பாத்திரம் கழுவிய என்னால் இறுதி வரையும் சப்பாத்தியை வட்டமாக போடத் தெரியவில்லை. இதனால் சமையல்காரரின் உதவியாளராக வரும் வாய்ப்பு கிடைக்கவில்லை. வரியற்று கையில் பணம் வரும் வேலை என்பது கவர்ச்சியாக இருந்தபோதிலும் நமக்கு இது சரி வராத சங்கீதம் என அங்கிருந்து விலகினேன்.
எந்தத் தொழில் திறமையுமற்றவர்களையும் ஏற்று வேலையளிக்கும் ஒரே இடம் இந்த உணவகங்கள். விசேடமாக மாணவர்களும், புதிதாக குடிபுகுந்த வெளிநாட்டவர்களும் இந்த உணவகங்கள் இல்லாது போனால் அதோகதிதான். ஐரோப்பா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற அதிக வருமானவரி வசூலிக்கும் நாடுகளில் இந்த உணவகங்களில் குறைந்த சம்பளம் ஆனால் வரியற்று கொடுப்பார்கள்.
வரி விடயத்தில் அரசாங்கத்தை ஏய்ப்பதற்கு யாருக்கு விருப்பமில்லை?
லெனின்சின்னத்தம்பி என்ற நாவலில் உணவு தயாரிக்கும் தொழிற்சாலையில் உள்ளவர்களது தொழில் சார்ந்த உறவுகளையும், அங்கு நடக்கும் வேலையையும் விரிவாக ஜீவமுரளியால் எழுதப்பட்டுள்ளது. படிக்கும்போது நமக்கும் சமயற்கலையில் தெளிவு பெற்றுகொள்வது போன்ற எண்ணம் உருவாகிவிடும். கதையின் இறுதியில் முதலாளியினால் எப்படி அந்த தொழிற்சாலை திவாலாக்கப்படுகிறது என்பதும் அங்குள்ளவர்களுக்கு அதனால் வேலையற்றுபோவதுமே இந்நூலின் கருப்பொருள்.
ஜீவமுரளியினது எழுத்தில் மிகவும் விபரமாகவும் துல்லியமாகவும் உணவு தயாரிப்பு, அதன் வினியோகம் எழுதப்பட்டிருக்கிறது. அக்காலத்து இடதுசாரி மணம் கமழ்ந்தாலும் எவருமே இதுவரையில் தொடாத பகுதியை தொட்டுள்ளது. ஒருவர் செய்யும் தொழில் சார்ந்த விடயங்களை தமிழில் எழுதப்பட்டது குறைவு. அத்துடன் இதுவரையும் இலங்கைப் போரையே தொடர்ச்சியாக முப்பது வருடங்களாக அரைக்கும் எழுத்துகளின் மத்தியில் தமிழுக்கு முக்கிய நூலாக வந்துள்ளது.
இந்தநூலில் முதலாளியால் உணவு உற்பத்திச்சாலையை நடத்திய கம்பனி திவாலாக்கப்பட்ட விடயம் என்பது கதையில் தெரியும் முரண்பாடாகத்(conflict)) தெரிகிறது. இதை தொழிலாளர்களுக்கு எதிரான விடயமாக எடுத்துச் சொல்வது கதையின் மூல நோக்கமாக இருந்திருக்கிறது.
இந்த முரண்பாடு எவ்வளவு வலிதானது எனப் பார்ப்போம்.
அவுஸ்திரேலியாவில்கூட சிறுகொம்பனிகள் உருவாக்கப்பட்டு பத்திற்கு ஒன்பது அந்த வருடத்திலே திவாலாகிவிடுகிறது. திவாலாவதற்கு பல காரணங்கள். உருவாக்குபவர்களது நிர்வாகத் திறமையின்மை, சரிவரத் திட்டமிடாமை, குறைவான முதலீடு எனப் பல காரணிகள் இருக்கும். இப்படிப்பட்ட தொழில்களை உருவாக்குவது நாட்டின் பெருமுதலாளிகளோ, இல்லை தொழிலாளர்களோ அல்ல. நாட்டில் உருவாகியுள்ள மத்திய தரவகுப்பினரே. இவர்கள் பெரும்பாலும் தங்கள் உடைமைகளை வங்கிகளில் வைத்து பணம் பெறுவதால் தொழில் திவாலாகிய போதிலும், இவர்களது தனிப்பட்ட வீடு என்பன பாதுகாக்கப்படவேண்டும் என்பதனாலே கொம்பனி என்ற அமைப்பில் தொழில் தொடங்குவார்கள். திவாலாகினால் கொம்பனி இழுத்து மூடப்படும்.
மேற்கு நாடுகளில் அரைப் பகுதியினருக்கு தொழில் வாய்ப்பை அளிப்பது இந்த சிறு தொழில்க் கம்பனிகளே. இந்தக் கொம்பனி முறை இல்லாதபோது எவரும் தொழில் தொடங்கமாட்டார்கள். அமெரிக்க ஜனாதிபதியாக இருக்கும் டொனால்ட் ட்ரம்ப் ஆறு தடவைகள் திவாலாகியவர்.
இந்தக்கதையில் வருவதுபோல் ஒருவர் பல கம்பனிகள் வைத்திருந்தால் சில கொம்பனிகளை திவாலாகிபோது மற்றய கம்பனிகளை தொடர்ந்து நடத்தமுடியும்.
ஆனால் தொழிலாளர்களுக்கான காப்புரிமை மற்றும் பென்சன் பணத்தை தொடர்ச்சியாக செலுத்திக்கொண்டிருப்பதால் வேலை இழந்த தொழிலாளர்கள் பாதுகாக்கப்படுவார்கள். அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் தொழிலாளர் நல சட்டங்கள் பாதுகாப்பானவை.
நானும் ஒருவிதத்தில் சிறிய கொம்பனியை கால்நூற்றாண்டு காலமாக நடத்துவதால் இவைபற்றித் தெரிந்து கொண்டேன். இப்படியான கொம்பனிகள் மேற்கத்தைய பொருளாதாரத்தை கொண்டு செல்லும் சக்கரங்கள். இந்தமுறை இல்லாதபோது மொத்த பொருளாதாரமும் நின்றுவிடும்.
இப்படியான ஒரு விடயத்தை சாதாரண மக்கள் புரிந்து கொள்ளும்படியாக ஜீவ முரளி எழுதியிருப்பது இங்கு முக்கியமானது.
வேலைத்தலத்தில் அக்சல் குறுப்ப, சண்டைக்காரன், மற்றும் ரீவன் என்று பலருடைய இயல்புகள் நடத்தைகள் அலசப்பட்டுள்ளது. சிறிதளவானவர்கள் வேலை செய்யுமிடத்திலும் அவர்களது பதவிகள், தரங்கள் எப்படி பேணுகிறார்கள் என்பது சுவாரசியமானது. இப்படியான பல புத்தகங்கள் ஆங்கிலத்தில் உண்டு. தாஸ்தாவஸ்கிகூட சைபீரிய சிறையனுபவத்தில் அங்குள்ள சிறைக்கைதிகளை அலசி ஆராய்வார். உண்மையாக நடந்த விடயத்தை எழுதியிருப்பதால் இந்தப் புத்தகம் நமக்கெல்லாம் புதிதான விடயத்தை தருகிறது.
கதையின் ஆரம்பத்தில் கடிகாரத்திடமிருந்து ஒளிய விரும்பியதாக லெனின் சின்னத்தம்பியை காட்டியதும், நேரத்துக்கு அந்தரப்பட்டு ஓடி வேலை செய்யும் மனிதன் மிகவும் குளிரான காலத்தில் சிகரட்டை பனிபெய்யும் நேரத்தில் கதவைத் திறந்துவைத்தபடி புகைத்ததும் மிகவும் அழகான சைக்கோலஜியை தொட்டுக் காட்டும் தொடக்கமாக இருந்தது.அதுபோல் கதையின் இறுதியில் வேலை இழந்த லெனின் சின்னத்தம்பி அன்று இரவு மனைவியின் மார்பில் கையை வைக்கும்போது அவள் தட்டிவிடும் வேகம், வேலை இழந்தவன் மனைவியால் ஒதுக்கப்படுவதை பார்வையாளருக்கு சிந்திக்க பண்ணும் அழகான படிமம்.
கதையின் நடுப்பகுதியில் தொடர்ச்சியான உணவு தயாரிக்கும் பகுதியைப் பற்றிய விவரிப்பு இரண்டு நாட்கள் வெளியால் இருந்து இழகவேண்டிய உறைந்த வாத்து இரண்டு மணியில் கொதிதண்ணியில்போட்டு சமைத்ததுபோல் இருந்தது.
இந்த புத்தகத்தை நாவலாக எடுத்தால் அதில் உள்ள குறைகளாக நான் கருதுவது 19ஆம் நூற்றாண்டில் எழுதியவர்களைப் பின்பற்றி ஒரு கமரா தொடர்வதுபோல் சொல்லும் கதையை ஆசிரியர் சொல்கிறார்.
லெனின் சின்னத்தம்பியின் மன ஓட்டங்களை வெளியில் கொண்டு வரவில்லை. புறவயமான விடயங்கள் மட்டுமே அதிகம் சொல்லப்படுகிறது. எழுதப்பட்ட மொழி நேரடியாக வருகிறது. படிப்பவரை இழுத்து பங்கு பற்றவைக்கும் விடயம் குறைக்கப்பட்டுள்ளது. புளட் எனப்படும் பகுதியற்று சாதாரண சம்பவங்களே இடம்பெறுவதால் நாவல் என்ற சட்டகத்தில் போட முடியவில்லை.
மேலும் நாவல் என்பது பாத்திரங்களை வளர்த்தெடுத்து அவர்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஊடகம். அப்படியான தருணங்கள் மிக குறைவாக உள்ளது.
முழுப்புத்தகத்தில் ஒரு இடத்திலேதான் லெனின் சின்னத்தம்பி உணர்ச்சி வயப்படுகிறார்.
இந்தப்புத்தகத்தில் நிறுத்தியோ, அத்தியாயங்களாக,அல்லது பாகங்களாக பிரிக்கவில்லையென்பதால் என்பதால் லெனின் சின்னத்தம்பியை குளத்துத் தண்ணீருக்குள் அமுங்கியபடி இருப்பதுபோல் வாசித்து முடித்தேன்
வாசகனை மூச்சுத் திணறவைப்பது எழுதுபவர்களுக்கு நல்ல உத்தியல்ல.
உண்மைச் சம்பவமாக, அதாவது அபுனைவாக லெனின் சின்னத்தம்பியைப் படித்தால் தமிழின் முக்கிய புத்தகமாகிறது.
உண்மையான சம்பவங்களை நாவலாக்குவது காட்டுமிருகத்தை விலங்கு காட்சிசாலையில் வைத்து அவைகளின் இயற்கையான குணத்தை மாற்றுவது போன்ற செயலாகும். இதைத் தமிழில் பலர் செய்கிறார்கள். எனது மூன்று நாவலைப் படித்தவர்களைவிட அபுனைவான வாழும் சுவடுகளைப் படித்தவர்கள் அதிகம். தமிழினியின் கூர்வாளின் நிழலில் இலங்கையில் 6000 பிரதிகள் விற்றதாக அறிந்தேன். எந்த போர்க்கால நாவலும் அந்த எண்ணிக்கையை அடைந்திராது.
உண்மைக்கு எப்பொழுதும் அதிக மரியாதையுண்டு.
லெனின் சின்னத்தம்பி- பெர்லினில் வாழும் ஜீவமுரளியால் எழுதப்பட்டது
உயிர் மெய் பதிப்பகம்
கருப்புப் பிரதிகள் விநியோகம் சென்னை.
karuppupradhigal @gmail.com
மறுமொழியொன்றை இடுங்கள்