காலை முழுவதும் இரயில் பிரயாணம் செய்து மாலையில் மச்சுப்பிச்சியை பார்த்துவிட்டுத் திரும்பும்போது இரவாகிவிட்டது அதன் பின்பு காலையில் எழுந்து சன்கேட் எனப்படும் மலைக்குச் சென்று மதியத்தின் திரும்பி மீண்டும் ஹரன் பிங்கம் இரயில் ஏறினோம். இடையில் இரயில் நிலயம் செல்வதற்கு பஸ் அதுவும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்த ஒழுங்கு சிறப்பாக இருந்தாலும் அதுவே இராணுவத் தன்மையை அளித்தது. பல இடங்களுக்குத் திரிந்து தொலைந்த பாக்கியம் கிடைக்கவில்லை.
மச்சுபிச்சுவிலும் குறிப்பிட்ட அளவாக உல்லாசப்பிரயாணிகளை அனுமதிப்பதால் பெரும்பாலானவர்கள் குழுவாக வந்துபோகிறார்கள். இது போன்ற கட்டுப்பாடு எதிர்காலத்தில் முக்கிய பழமையான இடங்களைப் பாதுகாப்பதற்கு அவசியம்என நினைக்கிறேன். பிரான்சில் உள்ள கற்கால மனிதர்களின் ஓவியங்கள் பலரது வருகையால் அவர்களது சுவாசத்தில் வெளிவரும் நீராவியும் கரியமிலவாயும் கலந்து அமிலமாகி, அழிந்துபோனதால் தற்பொழுது அந்தக்குகையை மூடிவிட்டு அதனது மாதிரியைத் தற்பொழுது உருவாக்கியிருக்கிறார்கள். தாஜ்மகாலில் பளிங்குகள் தேய்ந்திருப்பதை அவதானித்தேன். பல தலைமுறைகளுக்கு இப்படியான அரும் செல்வங்களை பாதுகாக்க இப்படியான கட்டுப்பாடுகள் தேவை.
மீண்டும் இரயில் ஏறி அமர்ந்ததும் எனது மனத்தில், பெருவில் பலகாலமாக இருந்த மாவோயிஸ்ட் கொரில்லா அமைப்பான சைனிங் பாத் என்ற குழுவுக்கு என்ன நடந்தது என்பதை நான் ஏற்கனவே அறிந்தாலும், வழிகாட்டிப் பெண் சொன்னது நினைவுக்கு வந்தது.
தென்னமரிக்காவில் புரட்சியாளர்களாக இருந்தது சோவியத் சார்பான குழுக்களே. பல நாடுகளில் அவை கியூபாவில் நடந்த புரட்சியில் உத்வேகமடைந்து உருவானவை. அபூர்வமாக பெருவில் சீன சார்பாக இருந்தது இந்த சைனிங் பாத்.
அபிமல் குஸ்மான் (Abimael Guzmán) என்ற தத்துவப் பேராசிரியர் இதன் தவைவராக இருந்தார். பல்கலைக்கழக்தில் தத்துவத்திணைக்களத் தலைவராக இருந்தவர். அந்தீஸ் மக்களின் கச்சுவா மொழியைப் படித்தவர். சீனா சென்று திரும்பியதும் சைனிங் பாத்தின் முக்கிய கொரில்லா புரட்சியாளராக மாறி அரசாங்த்துக்கு எதிராகத் தொழிற்பட்டார். சைனிங்பாத்தங்களுக்கு எதிரானவர்கள், தங்களது போராட்டங்களில் பங்கு கொள்ளாதவர்கள், மற்றைய இடதுசாரிகளின் மேல் நடத்தியது. பெருவில் அரசாங்கம் ஸ்தம்பிக்கும் நிலை உருவாகியது. இறுதியில் அல்பேட்டா பிஜிமோரி (Alberto Fujimori )யின் அரசாங்கம் அபிமல் குஸ்மானை கைது செய்தது.
நான் ஒரு நாள் பி பி சியில் காரில் சென்றுகொண்டிருந்தபோது தற்செயலாக கேட்ட ஒரு செவ்வி மிகவும் சுவாரசியமானது.பி பி சியின் பழைய நிகழ்வை மீண்டும் ஒலிபரப்பினார்கள். எப்படி அபிமல் குஸ்மானைப் பிடித்தார்கள் என்று ஒரு துப்பறியும் பொலிசாரின் வாக்குமூலம்.
‘தொடர்ச்சியான விசாரணையில் லிமாவில் அபிமல் புஸ்மானை இருப்பதாகத் தெரிந்தாலும் அதற்கு மேலான குறிப்பிடத்தக்க தகவல் இல்லை. ஆனால் தொடர்ந்து பயங்கரவாத செயல்கள் நடந்துகொண்டிருந்தன.
நெருக்கடியானகாலகட்டம்.
அப்பொழுது சிறு தகவல் கிடைத்தது. பெருவின் தலைநகரான லீமாவில் மிகவும் பணக்காரர்கள் வாழும் பகுதியில் உள்ள பலே நடனம் கற்பிக்கும் நடன ஆசிரியர் கரிடோ லீக்கா (Garrida Lecca) மட்டும் வாழும் வீட்டில் அதிகமான குப்பைகள் சேருகிறதுஎன உருவாகிய சந்தேகத்தால் அவரது வீட்டைக் கண்காணிப்பதுடன் குப்பையையும் அலசத் தொடங்கியபோது சொராசிஸ் மருந்துப் பெட்டிகள் அந்தக் குப்பையில் இருந்தன. இது மேலும் சந்தேகத்தைக் கூட்டியது. அபிமல் குஸ்மானுக்கு சொறாசில் உள்ளது என்பது ஏற்கனவே பொலிசாருக்குத் தெரிந்த விடயம்.. இந்த பலே நடன ஆசிரியரிடம் முக்கியஸ்தவர்களின் பிள்ளைகள் வந்து படிப்பார்கள் என்பதால் உடனே விசாரிக்க முடியாது. பல நாட்களாக வீட்டைக்கண்காணித்து ஒருநாள் அபிமல் குஸ்மானைப பிடித்தார்கள்.அந்த வீட்டின் மேல் மாடியில் இருந்தே பல பயங்கரவாத செயல்களை ஒருங்கிணைத்ததற்கான பல ஆதாரங்கள் எமக்குக் கிடைத்தது.’
25000 மேற்பட்டவர்களைக் கொண்ட கொரில்லா இயக்கத்தில் தற்பொழுது 500 பேர் மட்டும்; இருப்பதாகத் தெரிகிறது. யப்பானிய பரம்பரையில் வந்தவரான அல்பேட்டா பிஜிமோரியை இன்னமும் மக்கள் இதற்காக நன்றியுடன் நினைவுகூர்கிறார்கள் . அதேநேரத்தில் மூன்றாவது முறையும் அரசாள்வதற்காகச் சட்ட அமைப்பை மாற்ற முயற்சி செய்தபோது தோற்கடிக்கப்பட்டார். அவர் மீது லஞ்ச குற்றச்சாட்டுகள் உள்ளது. சமீபத்தில் நடந்த தேர்தலில் அவரது மகள் மிகவும்குறைந்த வாக்குகளின் வித்தியாசத்தில் தோற்றார்.
அடுத்த நாள் காலையில் பல இடங்களுக் சென்றாலும் முக்கியமான இடம் சக்சவாமன் (Saksaywaman ) என்ற இடம் குஸ்கோ அருகில் உள்ளது. இதை பெருவில் உள்ளவர்கள் செக்சி வூமன் எனச் சொல்வார்கள். கச்சா மொழியில் கருடன் எனஅர்த்தப்படும. இலகுவில் வெளிநாட்டவர்கள் புரிந்து கொள்ளும் நல்நோக்கத்துடன் செக்சி வூமன் என்பார்கள். இது இன்காக்களின் கோட்டைநகராக இருந்தாலும் இன்காவம்சத்தனர் தோன்ற 500 வருடங்கள் முன்பாக கில்கே வம்சத்தவரால் கட்டப்பட்டது. கிட்டத்தட்ட குஸகோவைப் பார்த்தபடி இருக்கும் 3700 மீட்டர் உயரமான மலையின்பீடபூமியில் மிகப்பெரிய கற்களால் உருவாக்கப்பட்டது.
ஸ்பானியர்கள் ஒரு ஆயுதங்களைச் சேகரித்து வைக்கும் இன்காக்களின் கோட்டைஎன தங்கள் குறிப்புகளில் வர்ணித்திருக்கிறார்கள்
கடைசி இன்காவான மான்கோ இன்கா ஸ்பானியரை எதிர்த்து நடத்திய போரில் சக்சவாமன் முக்கியமான இடமாகிறது. இந்தக் கோட்டையை ஸ்பானிய படைகள் தாக்கியபோது பல போர்வீரர்களை இழந்துதுடன் பிரான்சிஸ் பெசரோவின் சகோரனையும் போரில் இழந்தார்கள்.ஸ்னிபானியர் இறுதியில் இந்த இடத்தைக் தங்கள் கைவசம் கொண்டு வந்தார்கள்.
நாங்கள் சென்றபோது இந்தப்பிரதேசம் ஒரு இராஜதானியாக இருந்த இடம் என்பதை அந்த இடத்தின் நில அமைப்பு காட்டியது. அந்தப் பிதேசத்தில் முன்றிலில் இன்கா அரசர்களினது ஓவியங்கள் இருந்தது. அவர்களது ஆடையலங்காரங்கள் கவர்ச்சியான வர்ணங்களைக்கொண்டது.
அங்கிருந்து நடந்தபோது தற்போது மிகுதியாக இருந்த கோட்டைப் பகுதிக்கு வந்தோம் கோட்டையின் பின்னால் யேசுநாதரின் சிற்பம் ஒன்று இருந்தது.
அக்காலத்தில் கொஸ்கோ நகரம் பூமாவின் உருவ அமைப்பில் வடிவமைக்கப்பட்டபோது இருந்தால் சக்சவாமன் நகரம் தலைப்பகுதியாகவும் இங்கு அமைக்கப்பட்ட கோட்டை பகுதி பூமாவின் பற்களாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோட்டையின் வெளிச்சுவர்கள் தனிகற்களால் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டு இருந்தது. அந்த இணைப்பு இடைவெளியற்றது. அதைச் சுற்றி நாங்கள் நடந்த பகுதி பெரிய மைதானம்போல் இருந்தது அதில் பத்தாயிரம் பேர் நிற்க முடியும். கோட்டைவாசல் தனிகற்களால் ஆனது உள்ளே சென்றால் அப்பகுதிகள் பல அறைகள், சூரியனுக்கான கோவில் உள்ளது
ஸ்பானியார்கள் கூற்றுப்படி ஆயிரம் வீரங்கள் வாழ்வதற்கும் அவர்களுக்கான ஆயுதங்கள் உணவுப்பொருட்கள்சேமிக்கக்கூடிய இடம்.
சக்சவாமன கோட்டையைக் கைப்பற்றிய ஸ்பானியர்கள் தங்களது மாளிகைள் தேவாலயங்களைக் கட்டுவதற்கு இங்கிருந்து கல்லுகளை எடுத்து விட்டார்கள். தற்பொழுது மீதமாக இருப்பவை அவர்கள் அகற்ற ஏலாதவை என்றார் எமதுவழிகாட்டி.
தற்பொழுது இந்தப்பகுதியில் மக்கள் தங்களது பண்டைய பண்டிகைகளை மீண்டும் கொண்டாடுகிறார்கள். இன்கா மக்களின் கச்சுவா மொழியும் தற்பொழுது பெருவில் அரச மொழியாக அங்கீகரிக்கப்பட்டிருப்பதால் கலாச்சார மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. தங்களது அடையாளங்களை மீண்டும் புதுப்பிக்கிறார்கள் என்பதுடன் ஸ்பானியர்களது வருகையின்போது 11 மில்லியன்களாக இருந்த இவர்களது சனத்தொகை 90 வீதம் அழிந்து தற்பொழுது மீண்டும் அதேஅளவிற்கு வந்துள்ளார்கள் என அறிந்தேன். ஜனத்தொகை மீண்டும் அதே அளவு வருவதற்கு கிட்டத்தட்ட 500 வருடங்கள் தேவையாகவிருந்தது
குஸ்கோவுக்கு அருகில் உள்ள ஒரு இயற்கையாக அமைந்த இன்காமக்களின் வழிபட்ட குகைக் சென்றபோது அதுவழிபாட்டு இடமாகவும் இறந்தவர்களை மம்மியாக செய்வதற்குமான இடமாகவும் பாவித்ததாகத் தெரிந்து. இயற்கையாக உருவான குகைகள் மற்றைய இனங்களால் வழிபாட்டுத் தலங்களாக்கப்பட்டிருப்பது இங்கும் காணமுடிந்தது.
தென்அமரிக்காவின் அந்தீஸ் மலைப்பகுதியில் வாழும் மக்களது வாழ்வில் முக்கியமான கால்நடைகள் கமலயிட் எனப்படும் ஒட்டகக் குடும்பத்தைச் சேர்ந்தவை . இவை நான்கு வகையானவை. அதில் லாமாவை அண்டிய மக்கள் இறைச்சிக்காக வளர்ப்பார்கள் இவற்றின் உரோமம் தடிப்பானது அதனால் கயிறுகள் செய்வதற்குப் பாவிப்பார்கள். 30 கிலோபாரத்தை தூக்கக்கூடியவை. இவைகளின் முக்கியத்துவத்தைச் சொல்வதற்கு அந்தீஸ் மக்கள் வண்டிச்சக்கரத்தை கண்டுபிடிக்கவில்லை .அத்துடன் குதிரை ஒட்டகம் எருது போன்ற பாரத்தை இழுக்கும் மிருகங்கள் தென்னமரிக்காவில் இல்லை.இன்காக்கள் 5000 கிலோமீட்டர் தூரமான பாதைகளைப் போட்டிருந்தபோதும் அவைகள் அகலமானவையல்ல.மனிதர்களும் இலாமாக்கள் செல்வதற்காக மட்டும் அமைக்கப்பட்டவை. வரிசையாக அவை பாதைகளில் செல்லும்
அல்பக்காவின் உரோமத்தால் அமைந்த உடைகளை விற்கும் கடைகளுக்கு அழைத்துச் சென்றார்கள். இது ஒரு தன்னார்வ நிறுவனத்தால் உல்லாசப்பயணிகளின் வருகையை இங்குள்ள அந்தீஸ் மக்களது வாழ்க்கைக்கு உதவும் முகமாக இருந்தது. இந்த இடத்திற்குச் சென்றபோது எப்படி வர்ணங்கள் எடுக்கிறார்கள் என்பதைக் காட்டினார்கள். தற்காலத்தில் செயற்கையாகஎந்த வர்ணத்தையும் தயாரித்துவிடலாம். அக்காலத்தில் ஏராளமான வர்ணங்களைப் பாவித்தார்கள் என்பதை இலைகள் வண்டு போன்ற உயிரினங்கள் மற்றும் காளான் போன்றவற்றில் இருந்து எடுத்த வர்ணங்களை காட்டினார்கள்.;
இன்கா காலத்தில் வர்ணங்கள் முக்கியமானவை. அவர்களைப் பார்த்தால் தற்போழுது அவர்களது பிரகாசமான வர்ண உடைகளே நம்மை முதல் கவரும். ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் நகரங்களில் ஐரோப்பிய உடை அணிந்தாலும் கிராமங்களில் இன்னமும் பாரம்பரிய உடையை உடுக்கிறார்கள் .இந்த வர்ணங்கள் மிக முக்கியமானவை. அரசர்கள் மற்றும் பிரதானிகள் மற்றும் போர்வீரர்கள் என வர்ணம் அவர்களைத் தரம் பிரிக்கும். குலங்களையும் வர்ணங்கள் வேறுபடுத்தும்.
இன்காக்களின் கீப்பு என்பதே அவர்களது மொழியாகவும் இலக்கமாகவும் பாவிக்கப்படுகிறது. கயிறுகளும் அதில் உள்ளமுடிச்சுகளில் இந்த வர்ணம் மொழியாகிறது.
தென்னாமரிக்காவில் பருத்தியை ஆடைகளுக்கும் மற்றைய தேவைகளுக்கு பாவிக்கிறார்கள் அத்துடன் அல்பக்கா உரோத்தை குளிருக்காகப் பாவிக்கிறார்கள். இவர்கள் கைத்தறிகளில் நெய்வது எங்வளவு மேன்மையானது என்பதைக் காட்ட பிற்காலத்தில் இவர்கள் நெய்த ஆடையை பலூனாக்கி சூடான வாயுவை அடைத்து பலுனில் வானில் பறந்தார்கள். காற்று போகாமல் நெய்வதற்கான திறமை இவர்களுக்குள்ளது.
ஆல்பக்கா உரோமமே பெரும்பாலான கம்பிளியை இவர்களுக்குக் கொடுக்கிறது இதில் நெய்த உடுப்புகள் செம்மறியின் கம்பளிபோல் உடலில் கடிக்காதது மட்டுமல்ல, தண்ணீர் ஒட்டாது. அத்துடன் மென்மையானது இதனால் தற்பொழுது ஆல்பக்கா உரோமத்தையே மிகவும் உயர்ந்த உடைகளைச் செய்ய பாவிக்கிறார்கள் .அல்பக்காவில் இரண்டு சாதிகs; உள்ளது அதில் ஹயுகயா(Huacaya) மிகவும் அடத்தியாக உரோமத்தை உற்பத்தி செய்வதுடன் பட்டுபோன்று மெனமையாளது ஆனால் சூரிஸ்(Suris) நீளமான பட்டுப் போன்றது. அத்துடன் பல விதமான நிறங்களில் உரோமம் உள்ளது. 22 வர்ணத்தில் அல்பக்காகள் உரோமத்தைக் கொண்டுள்ளன. சிறு குட்டி அல்பக்க்களின் உரோமம் மிகவும் சிறந்தது. அதற்கு மிகவும் மவுசு அதிகம்.
விக்குனா (Vicuna) எனப்படும் மிருகம் சிறியது ஆனாலும் இவற்றில் உள்ள உரோமமே மிகவும் மெல்லியது. ஆனால் வளர்க்கப்படுவதில்லை. இன்காகள் காலத்தில் வருடாந்த வேட்டையாடுகல் மூலம் இவை பிடிக்கப்பட்டு இவற்றின் உரோமத்தை வெட்டிவிட்டு மீண்டும் காட்டில் விடுவார்கள் இவற்றின் உரோமத்தில் நெய்த உடைகளை அரசகுடும்பத்தினர் அணிவார்கள்.
இந்தக் குடும்பத்தில் நாலாவது குவானகே (Guanaco) இவை பொருளாதாரத்தில் அதிக முக்கியமற்றது காட்டில் வாழும் இலாமாவின் உயரத்தை ஒத்தது.
“செக்சிவூமன் (Saksaywaman)” அதற்கு 2 மறுமொழிகள்
Dear Nadesan,
Read
History :Interesting
https://en.wikipedia.org/wiki/Sacsayhuam%C3%A1n
Thanks
VAAN
24 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 12:45 அன்று, Noelnadesan’s Blog எழுதியது:
> noelnadesan posted: ” காலை முழுவதும் இரயில் பிரயாணம் செய்து மாலையில்
> மச்சுப்பிச்சியை பார்த்துவிட்டுத் திரும்பும்போது இரவாகிவிட்டது அதன் பின்பு
> காலையில் எழுந்து சன்கேட் எனப்படும் மலைக்குச் சென்று மதியத்தின் திரும்பி
> மீண்டும் ஹரன் பிங்கம் இரயில் ஏறினோம். இடையில் இரயில் நில”
>
Thanks for Great service to Tamil World!
You have a special place in our hearts!