நருக் சக்கரபோத்தியா தனது சிவப்பு பொமரேனியன் நாயுடன் எதுவித முன்னறிவித்தலும் இல்லாது எமது மிருகவைத்தியக் கிளினிக்கிற்கு வந்திறங்குவார். குழந்தையைத் தூக்கி வருவதுபோல காவியபடி வந்து தனது நாயின் பிரச்சினையை சொல்வார்.
பெரும்பாலும் மதிய வேளைகளில் நான் இல்லாதபோது வந்து தெள்ளு மற்றும் புழுவுக்கான மருந்துகள் பெறுவார். பலவருடங்களாக அறிமுகமானவர்.கல்கத்தாவில் பிறந்து வளர்ந்து மெல்பேனில் வசிக்கிறார்.சில காலத்துக்கு முன்பாக இளைப்பாறிவர். அறுபத்தைந்து வயதிற்கு மேற்பட்டவர் என நினைக்கிறேன்.
மூச்சுத்திணறும் குழந்தையை அவசரமாகத் தூக்கியபடி இந்திய அரசாங்க வைத்தியசாலையின் நீண்ட கொரிடோரில் ஓடிவரும் அம்மாவின் பிம்பத்தை அவரில் பார்க்கமுடியும். ஆனால், அப்படி பெரிய பிரச்சினைகளைக் கொண்டதாக அவரது நாய் இராது.
இதுவரை காலமும் அந்த நாய் நடந்து வந்து எமது கிளினிக் உள்ளே பிரவேசித்ததில்லை. அதன் எஜமானர் உயரத்திலும் குறைந்தவர். மெலிந்த தோற்றம் உடையவர். முகத்தில் மங்கோலிய அமைப்பு. கறுப்பு நிறமானவர் தொடர்ச்சியாக இடைவெளிவிடாது பேசுவார். பேசாத நேரத்திலும் அவரது வாயின் கீழ்த்தாடை கொல்லனது துருத்தியாக தொடர்ந்து அசைந்தபடி இருக்கும்.
பற்கள் அவரது பழுப்புக்கும் கறுப்புக்கும் இடையே பல தரத்தில் இருக்கும். அவரில் அவதானித்த மறுவிடயம் உள்ளே வரும்போது மட்டுமல்ல, வெளியே செல்லும் போதும் கொதிக்கும் வெயிலில் வெறும் காலோடு நடப்பது போன்று துள்ளியபடி நடப்பார்.
நாய்க்கு தடைமருந்து போட்டபின்பு, வரவேற்பு மேசையருகே தனது தோளில் குழந்தையைப்போல் நாயைப் சுமந்தபடி நின்று பணத்தை செலுத்தினார். நான் அவரருகே நின்று அவரைப் பார்த்தபடி நின்றேன்.
அவசரமாக என் பக்கம் திரும்பியவர், நான் கேட்காமலே தான் ஒரு பிராமணன் என்று சொன்னார்.
சுவாரசியமற்று அப்படியா என்று கேட்டு வைத்தேன்.
பெற்றோர்கள் இந்துக்களென்ற போதிலும் எனது தனிப்பட்ட கருத்தில் கடவுள் நம்பிக்கை எனக்கு இல்லை. இக்காலத்தில் மதம், சாதி என்பன தேவையற்ற சுமைகள் என நினைப்பவன் நான். கிறீஸ்தவர் வந்து தான் பாதிரியார் என்றோ அல்லது முஸ்லீமொருவர் வந்து தான் முல்லா என்றாலும் எனது பதில் அப்படியே இருக்கும்.
தனிப்பட்ட நினைவுகளுக்கு அப்பால் தொழிலிலும் இன மதத்திற்கு அப்பாற்பட்டு இயங்கி வருவதோடு மதத்தை சாதியைச் சொல்லும்போது கேட்பதற்குக் பாதணி வார் அறுந்து காலைவாரும்போது ஏற்படும் சங்கடத்தை உணர்வேன்.
சக்கரபோத்தியா, “அப்படியா” என நான் சொன்னதைக்கேட்டு, நான் அவரது பேச்சை நம்பவில்லையோ என நினைத்து, தனது சேர்ட்டின் உள்ளே இருந்து அரசன் தனது வாளை உருவுவது போல் உருவி பூணுலை எடுத்துக் வெளியே காட்டினார்.
வங்காளப் பிராமணர்களைப் பற்றி புத்தகங்களில் படித்தும் திரைப்படங்களில் பார்த்தும் இருப்பதால்,
“நீங்கள் மீன் தின்னமுடியும் இல்லையா?” என்றேன் .
“நான் தின்பதில்லை” என்றார்.
பின்பொரு நாள் வந்து என்னிடம் தான் பங்களாதேசம் சென்று அங்குள்ள உறவினர்களைப் பார்க்க இருப்பதாகவும் சொல்லி, அதுவரையும் தனது மகள்தான் நாயைப் பராமரிக்கப்போவதாகவும் சொல்லி விட்டு முழுப் பரிசோதனையையும் செய்யும்படி கேட்டார். நாய்க்கு ஏதாவது பிரச்சினை வந்தால் எனது தொலைபேசி எண்ணைக் கொடுக்க விருப்பதாகவும் சொன்னார்.
அக்காலத்தில் பங்களா தேசத்தில் பல பயங்கரவாத சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அதைச் சொல்லி அவரிடம் அங்கு போவது பிரச்சினை இல்லையா என்றபோது, ” ஒரே மொழி பேசுபவர்களாக உறவினர்கள் இருப்பதால் எந்தப் பிரச்சினையும் வராது. ஆனால், இஸ்லாமியரால்தான் பிரச்சினையென்றார்.
அந்தக்கூற்றை நான் பெரிதாக எடுக்கவில்லை. மத ரீதியில் நாட்டைப் பிரித்ததில் யாருக்குத்தான் சம்மதம். அதுவும் மேற்க்குப் பகுதியில் உருது பேசுபவர்கள். அவர்களுக்கு மதமும் மொழியும் வேறாக இருந்தது. ஆனால், வங்காளிகள் மொழியால் ஒன்றுபட்டவர்கள். மதத்திற்காகத் தேவையில்லாமல் பிரிந்தது என்ற கருத்து முஸ்லீம் வங்காளிகளுக்கும் உள்ளது என்பதை அறிவேன்
நான் எனது கிளினிக்கில் சில மாதங்கள் பகுதி நேர வேலை செய்ததால் இரண்டு வருடங்களாக அவரைக் காணவில்லை. அவரது பொமரெனியனுக்கு இப்பொழுது 12 வயதாகிவிட்டது. ஆனாலும் தொடர்ந்து வருவதாக எனது நேர்ஸ் சொன்னாள்.
சமீபத்தில் அவர் மீண்டும் வந்தபோது அவராகவே சொன்னார்: “உங்களுக்குத் தெரியுமா சரியாக ஒரு வருடம் முன்பு எனக்கு பெரியதொரு அறுவைச் சிகிச்சை செய்தார்கள். நினைக்கவே ஆச்சரியமாக இருக்கிறது. அவுஸ்திரேலியாவில் மருத்துவம் மிகவும் திறமையானது”
“என்ன நடந்து?” எனக்கேட்டேன்.
“எனது தாடை எலும்பில், எலும்பு புற்றுநோய் வந்ததால் அதை முற்றாக எடுத்துவிட்டு, எனது காலில் இருந்த எலும்பை எடுத்துப் பொருத்தினார்கள்” எனச்சொன்னவாறு தனது காற்சட்டையை உயர்த்தி காலில் எலும்பெடுத்த இடத்தைக் காட்டினார்.
” முகத்தில் எந்த வித்தியாசமும் தெரியவில்லையே. காலில் கூட தழும்பில்லையே?” என்றேன்.
“உண்மையில் திறமான வேலை செய்தார்கள். அதைச் செய்தவர் பாகிஸ்தானில் இருந்து வந்த முஸ்லீம் சத்திரசிகிச்சை நிபுணர். மிகவும் திறமைசாலி.” என உற்சாகமாகச் சொன்னார்.
என் மனதில் தோன்றிய சிந்தனைகளைப் புறந்தள்ளிவிட்டு, “எப்படி உங்களுக்கு தாடைஎலும்பில் புற்றுநோய் வந்தது?” எனக்கேட்டேன்.
“பான்பராக் போடுவதால் எனச் சொல்கிறார்கள்” என்றார்.
“நானும் சிறுவயதில் இலங்கையில் அம்மாவிடமிருந்து வெற்றிலை எடுத்து போட்டதுண்டு. அந்தப் பழக்கத்தை அவுஸ்திரேலியா வந்ததும் தொடரவில்லை. ஆனாலும் இப்படி புற்றுநோய் வரும் எனப் பலருக்கும் தெரியாது. இந்தமுறை இந்தியா போனால் நீங்கள் பான்பராக்குக்கு எதிராக பிரசாரம் செய்யவேண்டும். அவுஸ்திரேலியாபோல் இந்தியாவிலோ பங்களாதேசத்திலோ இப்படி அறுவை சிகிச்சை நிபுணர்கள் கிடைத்தாலும் அங்கிருக்கும் எல்லோராலும் பணம் கொடுக்க முடியாதே?” என்றேன்.
“உண்மைதான். நான் என்னைச் சந்திப்பவர்களுக்கெல்லாம் எனது அனுபவத்தை எடுத்துச் சொல்லி வருகிறேன்.” என்றுஉறுதியளித்து விட்டு தனது தோளில் தனது பிரியத்திற்குரிய நாயை சுமந்தபடி வாசலைக் கடந்து சென்றார் நருக் சக்கரபோத்தியா.
மறுமொழியொன்றை இடுங்கள்