உன்னையே மயல் கொண்டு –பாகம் ஆறு


சந்திரனது மேசையில் அவனது ஆய்வுகளுக்கு உதவும் சஞ்சிகைகள், புத்தகங்கள், ஒலிப்பிரதிகள் என பரவலாக இறைந்து கிடந்தன. வாரம் ஒருமுறை மேசையை துப்பரவாக வைத்தாலும, வார இறுதியில் மீண்டும் அதேமாதிரி வந்துவிடும். இதனை உணர்ந்து அடுக்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்து சிண்டி “என்ன அவுஸ்திரேலியா கிளினப் டேயா” என்று கேட்டாள். கேள்வியின் கேலியை புரிந்தபடி “யேஸ் மிஸ் பேர்பெக்ட்” என்று முணுமுணுத்தபடி அடுக்கினான். அப்பொழுது சிறுதுண்டொன்றில் எழுதப்பட்ட தொலைபேசி இலக்கம் கிடைத்தது.

இதுதானே அன்று சிண்டி தந்து நான் பதில் போன் பண்ணவில்லையே என தன்னை நொந்து கொண்டு அந்த நம்பரை அழுத்தினான்.

தொலைபேசியின் எஞ்சித தயக்கமின்றி அவுஸ்திரேலிய தொனியில், “ஜுலியா பேசுகிறேன்” என்று மறுமுனையில் வந்தது.

“சந்திரன் பேசுகிறேன் என்னை மன்னிக்க வேண்டும். உங்கள் தொலைபேசி எண்ணை தொலைத்து விட்டேன் இப்போது தான் தேடி எடுத்தேன். தங்களுக்கு என்னைத் தெரியுமா?”“

“என்னை தெரியவில்லையா? கோல்ட் கோஸ்ட் ஹொட்டலில் சந்தித்தோம்.”

கோல்ட்கோஸ்ட் என்றதும் ஹொட்டேல், கசினோ எல்லாம் நினைவுக்கு வந்தன. எத்தனைமுறை அவளை நினைத்திருக்கிறேன். என நினைத்துக் கொண்டு “மன்னிக்க வேண்டும் உங்களை நான் மறக்கவில்லை. ஆனால் பெயர் மறந்து விட்டது.”

“அடுத்த பதினொராம் திகதி எனது பிறந்தநாள். வீட்டுக்கு வரமுடியுமா”?

“வருகிறேன். விலாசத்தை தாருங்கள்.”

வருகிறேன் என்று சொல்லி விட்டாலும்,  சோபாவுடன் போகமுடியாது ஜீலியாவுடன் ஏற்பட்ட சந்திப்பை விபரிக்க முடியாது. பல்கலைக்கழக விருந்து என சொல்லி விட்டு போவது தான் நல்லது என முடிவு எடுத்தான்.

1798 ல் பொட்னிபேக்கு ஆங்கிலேய மாலுமி கப்டன் குக் வந்த பொழுது அங்கிருந்த ஆதிவாசிகளை மனிதர்களாக கருதவில்லை. அதனால் வெறுமையான கண்டமாக கருதினார். ஆங்காங்கு ஆதிவாசிகள் கொல்லப் பட்டார்கள். மற்றயோர் தொற்றுநோயால் மடிந்தார்கள். இந்தவேளையில் இரண்டு நூற்றாண்டுகள் பின்னர் சிட்னியின் வடபகுதி செல்வவந்தர்கள் சீவிக்கும் இடமாகவும், தென்பகுதி மத்திய வகுப்பினரது வசிப்பிடமாகவும், மேற்குபகுதி இரண்டாம் உலக யுத்தத்தின் பின்வந்த தொழிலாளர் வர்க்கத்தினரால் தொடர்ச்சியாக வளர்ந்து கொண்டு வந்தது. மேற்குப் பகுதியிலேதான் பெரும்பாலான இலங்கைத் தமிழர்கள் வசிக்கிறார்கள். இப்படி மூன்று சமூகமும் சந்திக்கும் இடத்தில் சிட்னி பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்தப் பல்கலைக் கழகத்தை சுற்றியுள்ள பிரதேசம் ரெட்பேண் எனப்படும். இந்தப் பகுதியில் ஆதிவாசிகள் வசிக்கிறார்கள். இவர்கள் சிட்னியில் சட்டம் ஒழுங்கு முறைகளுக்கு சவால் விட்டுக் கொண்டு விளிம்புநிலை மக்களாக இப்போது வாழ்கிறார்கள். சிட்னி வாழ் நாகரிக மக்களுக்கு மறுவாக தெரியும் ரெட்பேண் உண்மையில் அஸ்திரேலிய ஆதிவாசிகள் தொடர்ச்சியாக சரணடையாது தங்களது நாட்டை ஆக்கிரமித்தவர்களோடு போராடும் இறுதிப் பாசறையாகும். இவர்களை அகற்றப் பலமுறை அரசாங்கங்கள் முயன்றன. ஆனால் முடியவில்லை.

சந்திரன் சிட்னியின் மேற்குப் பகுதியிலிருந்து ரெட்பேணை கடந்து கிழக்குப் பகுதிக்கு திரும்பியபோது சிண்டியின் மூலம் அறிந்த ரெட்பேண்ணில் வரலாறு நினைவுக்கு வந்தது. கிழக்கு புறத்தில் ரன்விக் சென்று ஜீலியாவின் வீட்டை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படவில்லை. பச்சைநிறமான கதவு அடையாளம் தெரிந்தது.

காரை சிறிது தூரத்தில் நிறுத்திவிட்டு நடந்து சென்றான். அழைப்புமணியை அழுத்தியதும் நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. வீட்டுவாசலில் நின்று தெருவைப் பார்த்தான். மாலை நேரமானதால் பலர் தங்கள் வளர்ப்பு நாய்களுடன் நடந்து சென்றார்கள்.

கதவு திறந்ததும் “வாருங்கள் உள்ளே”, என கூறிய ஜீலியாவின் குரலுடன் நாயின் குரைப்பும் ஒலித்தது.

“கவலைப்படாதீர்கள. ரைகர் கடிக்காது.”

உறுதிமொழியைக் கேட்டதும் உள்ளே காலை வைத்த சந்திரன் கையில் வைத்திருந்த ஓர்க்கிட் மலர்கொத்தை கொடுத்தான்.

“நன்றி” என்றபடி சந்திரனின் கன்னத்தில் முத்தம் ஒன்றையும் பதித்து விட்டு உள்ளே சென்றாள். சந்திரன் அவளைப் பின்தொடர்ந்தான்.

சிட்னியில் உள்ள வீடுகளின் ஒப்பீட்டு அளவில் இது சிறியவீடு என்றுதான் சொல்லவேண்டும். இரண்டு அறைகளைக் கடந்து சென்றான். சிறிய லவுன்ஸ். அதன் பின்புறமாக ஒரு படுக்கை அறையும், சமையல் அறையும் கொண்ட வீடு. இங்கிலாந்து வீடுகளின் அமைப்பில் இருந்தது. வீடு அரை நூற்றாண்டுகளுக்கு மேற்பட்டதாக இருக்கலாம். லவுன்ஸ் சுவரில் பல ஓவியங்கள் மாட்டப்பட்டிருந்தன. ஓவியங்களில் பூக்களை ஏந்திய தேவதைகளும், அவரகளின் தலைகளின் மேல் பறந்துகொண்டிருககும் பறவைகளும், கீழே தரையில் மிருகங்களும் ஆக ஒரு கனவு உலக பிரதிபலிப்பாக இருந்தன. ஓவியங்கள் அந்த இடத்தை சித்திரக்கூடமாக மாற்றியதான தோற்றத்தை தந்தது.

ஜீலியாவின் நாய் சந்திரனது கால்களுக்கு இடையில் தலையை நீட்டி மோப்பம் பிடித்து கொண்டிருந்ததை பார்த்து “ரைகர் வெளியே போ” என்றாள்.

கால்களுக்கு இடையே வாலை வைத்தபடி அந்த கறுத்த ரொட்வீலர் வெளியே சென்றது.

“இந்தப் படங்கள் எல்லாம் நீங்கள் வரைந்ததா? “

“ஆமாம் நல்லா இருக்கா”.

“அழகாக இருக்கு. எனக்கு ஓவியங்களை பற்றி மருந்துக்குகூட அறிவு இல்லை. இந்த சித்திரங்களை ஏதோ கனவு உலகத்தில் சஞ்சரிக்கும் ஓவியரின் தூரிகைகள் தான் வரைந்திருக்கின்றன என்பது மட்டும் புரிகிறது.”

“ஓவியத்தைப் பற்றி அறிவு இல்லை என்று கூறிவிட்டு இவ்வளவு சரியாக எப்படி சொல்ல முடிகிறது உண்மைதான் அடிமனதின் கனவுலகக் காட்சிகளைத்தான் நான் அப்படியே வரைந்துள்ளேன். பறவைகள், மிருகங்களில் எனக்கு மிகவும் ஈடுபாடு உண்டு.”

சுந்திரன், ஒருமுறை சுற்றிப்பார்த்து விட்டு “வீட்டில் ஒருவரும் இல்லை போல் இருக்கிறது உங்கள் பிறந்தநாளில் ஒருகூட்டமே இருக்கும் என நினைத்தேன்.”

“இருங்கோ” என சோபாவை காட்டிவிட்டு “மகன் வந்துவிட்டு போய்விட்டான். மகள் கோல்கோஸ்ட்டில் இருந்து தொலைபேசியில் பேசினாள்”. இந்தத் தகவல்களைக் கூறியபடி சந்திரனுக்கு முன்னாள் அமர்ந்தாள்.

“பிறந்தநாள் மெழுதுவர்த்திகளைக் காணவில்லையே? “

புன்னகையுடன்; “கொழுத்திய மெழுகுவர்த்திகளை மறைத்துவிட்டேன். நீங்கள் வந்து எனது வயதைக்கண்டு பிடித்தவிடுவீர்கள் அல்லவா” எனச் சிறுவயதுப் பெண் போலச் சிரித்தாள்.

“பெண்களின் வயதைக்கேட்கக் கூடாது என்ற நாகரிகம் தெரிந்து வைத்திருக்கிறேன் ” என்று சொன்னாலும் மனதுக்குள் நாற்பது வயதிருக்கலாம் என மதிப்பிட்டான்.

“சந்திரன், நான் ஒரு தனிப்பட்டகேள்வி கேட்கிறேன் ஆட்சேபணை இல்லையே”?”

“கேளுங்கள்.”

“உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா? “

சிறிது தடுமாறிய சந்திரன் “எனக்கு திருமணமாகி ஆறு மாதத்தில் குழந்தையுண்டு என்மனைவியின் பெயர் சோபா.”

“நீங்கள் அதிர்ஸ்டசாலிதான்.”

குரலில் சிறிய ஏக்கம் தொக்கி நின்றது.

“இப்பொழுது எனது முறை. நான் உங்களிடம் கேட்கவேண்டும். உங்கள் கணவன் உங்களோடுதான் இருக்கிறாரா? “

“சமீபத்தில்தான் விவாகரத்து பெற்றேன். எனக்கூறிக் கொண்டு சமையல் அறைக்குள் நுழைந்து.மீண்டும் வந்து
ஒரு தட்டை சந்திரனுக்கு முன்பாக வைத்துவிட்டு “ சாப்பிடுங்கள்.” என்றாள்.

தட்டில் இருந்த கேக்குடன் வடை, லட்டு, சமோசா என்ற இந்திய பலகாரங்களும் இருந்தன.
“இதென்ன இப்படி சாப்பாடு சமைக்க தெரியுமா “?”

தலையை திருப்பி கழுத்தை வெட்டி, லாவகமாக கண்ணடித்து “கோம்புஸ் என்ற இடத்தில் வாங்கினேன்”. எனச் சிரித்தாள்.

“இவற்றின் பெயர்கள் எப்படி தெரியும்?.”

“அது மிகச் சுலபம் அந்த இந்திய உணவுக்கடைகாரரிடம் இலங்கையர் ஒருவரை விருந்துக்கு அழைத்துள்ளேன். அவர்களது சாப்பாடு என்ன என்று கேட்டேன் “.

“நன்றி” என சந்திரன் கூறியதும் சந்திரனது கையில் அழுத்திவிட்டு “இவ்வளவு மென்மையாக இருக்கிறதே” எனப் புன்னகைத்தாள்..

“கடினமான உழைப்பு வேலை எதுவும் செய்தது கிடையாது”, என கூறியபடி வடையை கடித்தான்.

“உங்கள் பூர்விகம் சிட்னிதானா? “

“நாங்கள் மேற்கு விக்டோரியாவில் வாணம்பூல் என்னும் இடத்தில் செம்மறியாடுகள், பால் மாடுகள் வைத்திருந்தோம். அம்மா ஐரிஸ் வம்சாவழி. அப்பா ஸ்கொட்லண்ட் வம்சம. மூன்று தலைமுறைக்கு முன்பு இங்கிலாந்திலிருந்து பத்து பவுண்கள் கொடுத்து கப்பலில் வந்தவர்கள். இதனால் எங்களை ‘பத்து பவுண் குடியேற்றவாசிகள்’ என அஸ்திரேலியாவில கூறுவார்கள். ஆரம்பத்தில் உருளைக்கிழங்கு சாகுபடி செய்து பின்பு பண்ணை விலங்குகள் வளர்க்கத் தொடங்கினோம். பண்ணையில் பிறந்து வளர்ந்த எனக்கு அக்கா உண்டு மெல்பேணில் ஒரு இத்தாலியரை மணந்து இரண்டு பிள்கைள் உண்டு. எனது வரலாறு அக்காபோல எளிதானதான நேர்கோடாக இருக்கவில்லை. நான் வந்த பாதை கரமுரடான காட்டுவழி. சமீபத்தில் இதோ என் துணைவரிடமிருந்து விவாகரத்து பெற்றேன் “. என ஒரு போட்டோவைக் காட்டினாள்.

சந்திரனுக்கு அதிரச்சியாக இருந்தது. வெஸ்ட் இந்திய கிரிக்கெட் வீரர் விவியன் ரிச்சாட்டை போல் இருந்தார். “என்ன விவியன் ரிச்சாட்டை போல் இருக்கிறது”?

“டோன்ட் பி சில்லி. இது சாலிய. சாலிய கானாவை சேர்ந்தவர்”.

“எவ்வளவு காலம் மணம் முடித்து வாழ்ந்தீர்கள்?”

“மூன்று வருடங்கள்.”

“என்னை மன்னிக்கவேண்டும் நான் தேவையில்லாமல் உங்கள் நினைவுகளைக் கிளறி விட்டேன்.”

“இல்லை. இல்லை. சாலியாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பில் இருந்து ஆறுதல் அடைய மகளைச் சந்திக்க வந்தேன். அப்போதுதான் உங்களையும் கோல்ட் கோஸ்டில் சந்தித்தேன். உங்களை சந்தித்தது என் மனதில் நல்ல தெளிவை ஏற்படுத்த உதவியது. சிறிய கெட்ட சம்பவங்கள் மனத்தை பாதிப்பதுபோல் நல்ல வியடங்கள் நடக்கும்போதும் மனம் ஆறுதலாகும். அன்று முன்னறிமுகம் இல்லாத என்னிடம் நீங்கள் நடந்து கொண்ட விதமும் உதவிசெய்த தன்மையும் ஆண்வர்க்கத்தின் மேல் நம்பிக்கையை இழந்து விடாமல் பண்ணியது. சாலியாவின் நடத்தை ஆண் வர்க்கத்தின மேல் பாரிய கசப்பை எனக்கு ஏற்படுத்தி இருந்தது. மெல்பேணில் நானும் சாலியாவும் விவாகரத்து பெற்றுக்கொண்டோம். சாலியா கானாவில் இருந்து வந்த அகதி. என்னைத் திருமணம் செய்ததால் இங்கே வசிக்க முடிந்தது. விவாகரத்தால் எந்த பிரச்சனையும் அவரது குடியுரிமைக்கு வரக்கூடாது என நான் நினைத்தேன். இதனால் விவாகரத்தை தள்ளிப்போட்டேன். எனது பிள்ளைகளுக்கு அது விருப்பமில்லை. இதுதான் எனக்குச் சிக்கலாக இருந்த பிரச்சனை.”

“உங்களுக்கு மிகவும் அற்புதமான மனம். நீங்கள் விரும்பாத ஒருவருக்கும் பிரச்சனை உருவாக்கக் கூடாது என்று நினைக்கிறீர்களே. இந்த மனசு எல்லாருக்கும் வராது.”

“எங்கள் மனங்கள் பிரிந்துவிட்டன. சாலியாவோடு நான் இணைந்து வாழ விரும்பவில்லை. அதற்காக நான் பழிவாங்வும் விரும்பவில்லை.”

“உங்கள் கூற்றில் உண்மையும் நியாயமும் இருக்கிறது. நேரம் போய்விட்டது. நான் போய்வருகிறேன்.” எனக்கூறி எழுந்தான்.

“மீண்டும் வாருங்கள். என் வீட்டுக் கதவுகள் திறந்திருக்கும் “.

வாசல்வரை வந்த ஜீலியாவை ரைகரும் தொடர்ந்தது. கதவைத் திறந்தவள் “நன்றி” எனக்கூறிக் கொண்டு சந்திரனுக்கு மிக அருகில் வந்தபோது அவளது மூச்சுக்காற்றின் சூடு சந்திரனை தீண்டியது. தடுமாறியவனிடம் “எனது பிறந்தநாளுக்கு முத்தம் இல்லையா? “, என்றாள்.

தன்னை மறந்த சந்திரன் அவளது கழுத்தில் கைகளை வைத்தபோது அவளது உதடுகள் கன்னத்தில் பதிந்து பிரிந்தது. ஆனால் சில விநாடிகள் இருவரும் பிரியாமல் நின்றபோது ரைகரின் குலைப்பு இருவரையும் பிரித்தது.

“நேரம் ஆகிவிட்டது என ரைகர் சொல்லுகிறான்”;. என்றபடி வெளியேறினான் சந்திரன்.

சந்திரன் வீட்டை அடைந்தபோது நடுஇரவாகி விட்டது. வீட்டில் எரிந்த லைட் சோபா இன்னும் நித்திரை கொள்ளவில்லை என்பதை காட்டியது. கதவை தட்டமுன்பே கதவு திறந்தது.

“என்ன இவ்வளவு நேரமும் படுக்காமல் இருக்கிறாய்” என ஆச்சரியம் கலந்த குரலிலே கேட்டான்.

“உங்களைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன்” எனக்கூறியபடி தன்னைத் திருப்பி சந்திரனுக்கு காட்சிப் பொருளாக்கினாள். நீலநிற நைட்டி உள்ளே அணிந்நதிருந்த பிராவின் கருப்பு நிறத்தை காட்டியது. சென்டின் நறுமணமும் வந்தது. அவளது ஆடைபற்றி குறிப்பிடாமல் சந்திரன் “எங்கே சுமன்?;” என்றான்.

“நல்ல நித்திரை கொள்கிறான்.”

“நீ இவ்வளவு நேரம் ரிவி பார்த்தாயா? “ எனக் கூறிக்கொண்டு தனது உடையை கழட்டினான்.

“வீடு முழுக்க சுத்தப்படுத்தினேன். ஒரு அழுக்கு உண்டா பாருங்கள்.? “

“இந்த நேரத்திலா”?

“யெஸ் கிஸ்மீ”என்றாள் ஆங்கிலத்தில்.

“என்ன, நல்லமூட்டில இருக்கிறாய்? பலநாட்களின் பின்னால்”. என்றபடி மெதுவாக கன்னத்தில் முத்தமிட்டான்.

சோபாவின் கண்களில் ஏமாற்றம் தெரிந்தது. ஜீலியாவை ஆரத்தழுவி முத்தமிட்டதால் அவளது உடல் மணம் தன்னில் இன்னமும் ஒட்டிக்கொண்டு இருப்பதுபோல் இருந்தது. குற்றமனம் குறுகுறுத்தது சந்திரனுக்கு.

“இவ்வளவுதானா இன்றைக்கு?”.

“இவ்வளவுதான் இன்றைக்கு. நடுஇரவாகிவிட்டது”

“உங்களுக்காக எவ்வளவு நேரம் காத்திருந்தேன்.”

“சரி வா அறைக்குப் போவோம்.”

சந்திரன் உள்ளே சென்று கதவைச் சாத்தியதும் நைட்டியை அப்படியே தரையில் நழுவவிட்டாள். கறுத்த பிராவும் வெள்ளை நிக்கரும் மட்டுமே உடம்பில் இருந்தது. சந்திரனது இதயத் துடிப்பு அதிகமாகி நாக்கில் எச்சில் வற்றியது.

‘திருமணமாகி ஒருநாள் கூட இவள் இப்படி வெளிச்சத்தில் நின்றதில்லை உடைமாற்றும் போதே தன்னை உள்ளே இருக்க விடமாட்டாள். இப்போ இவளுக்கு என்ன வந்தது?. ஆங்கிலப்பட கதாநாயகிகள் போல் பின்பகுதியை நெளித்துக் கொண்டு காட்சியளிக்கிறாளே!’ இவ்வாறான நினைவோட்டம் மனதில் எழுந்தது.

“ஒருநாளும் இப்படி மூட்டில் இருக்கவில்லையே!” என்றான் ஒப்புக்காக.

“உங்களை பல நாட்கள் காய வைத்துவிட்டேன் “, என லைட்டை அணைத்தாள்.

ஜுலியாவால் உசுப்பப்பட்ட சந்திரனின் ஆண்மை சோபாவிடம் புகலிடம் பெற்றது. சோபா பலநாள் பட்டினியாக இருந்தவள் உணவைக் கண்டதும் ஏற்படும் வேகத்தில் செயல்பட்டாள். சந்திரன் அவள் போக்கில் நடந்து கொண்டான்.

இருவருக்கும் இடையில் திருமணமாகி நடந்த உடல் உறவுகள் எல்லாம் சோபாவால் ஆரம்பிக்க பட்டவை. சுமன் பிறந்தபின்பு எதுவும் நடக்கவில்லை. சந்திரன் காம வசப்பட்டு சோபாவை தடவிகொடுத்து வசப்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகள் தட்டிக்கழிக்கப்படும் சில நாள்களில் கேவிகேவி அழுவாள். சந்திரனால் புரிந்து கொள்ள முடியவில்லை. உடல் உறவுக்கான வாய்ப்புகள் கிடைக்கிறபோது சந்தோசமும் கிடைக்காதபோது இவள்மீது பரிதாபத்திலும் பல இரவுகளை நித்திரையின்றி தவித்தான். இவள் ஒரு புதிர்தான் என நினைத்துக் கொண்டு போர்வையை இழுத்தபோது, “இஞ்சருங்கோ இதுக்குள் படுக்கிறிங்களே” என முகத்தில் தட்டினாள்.

“நாளைக்கு எழும்புவதில்லையே? “

“நாளைக்கு சனிக்கிழமைதானே”, என சிணுங்கியபடி காலை தூக்கி சந்திரனின் மேல் போட்டாள்.

“ராசாத்தி நாளைக்கும் கொஞ்சம் மிச்சம் வைக்கவேண்டும். இன்றைக்கு இது போதும்”, என அவளது வெற்றுடம்பை அணைத்தான்.

“சரி உங்களுக்கு மேல் படுத்து நித்திரை கொள்கிறேன்” என கூறியபடி அவனது பதிலுக்கு காத்திராமல் சிறுகுழந்தை போல் ஏறினாள்.

இப்படித்தான் மஞ்சுளாவும் பேராதனையில் படிக்கும்போது மகாவலி கங்கைக் கரையை ஒட்டிய சீமென்டு பெஞ்சுகளில் ஒருநாள் என்மீது படுத்தாள். இப்போது நைஜீரியாவில் எந்த மூலையில் இருக்கிறாளோ?

மஞ்சுளா பல்கலைக் கழகத்தில் விவசாயப்பிரிவில் சந்திரனுடன் படித்தாள்.. அவளது கையைழுத்து அடுக்கிவைக்கப்பட்ட கடல்சோகி போல் இருக்கும். சந்திரனுக்கு தனது நோட்டு புத்தகத்தில் ஆசிரியரின் விரிவுரை வேகத்துக்கும் சந்திரனது எழுதும் வேகத்துக்கும் இடைப்பட்ட இடைவெளிகளை நிரப்ப மஞ்சுளாவின் நோட்டுக்கள் உதவும். இருவரும் நண்பர்களாக இருந்தார்கள்.

ஒன்றாக படித்த ஒரு சிங்கள நண்பரின் தந்தையார் காலியில் இறந்து விட்டார் என்று மற்ற மாணவர்கள் பலருடன் சந்திரனும் மஞ்சுளாவும் காலிக்கு மரணவீட்டுக்கு பஸ்ஸில் சென்றனர். திரும்பிவரும் வழியில் கொழும்பில் பஸ் ஊழியர்கள் நடாத்திய ஸ்ரைக்கால் மாலை ஆறுமணிக்கு பின்பு எந்த பஸ்சும் கண்டிக்கு போகவில்லை. சந்திரன் மஞ்சுளாவின் உறவினர் வீட்டில் வெள்ளவத்தையில் தங்கினான். அக்காலத்தில் ஏற்பட்ட நெருக்கம் இருவருக்கும் இடையில் நேசஉணர்வுகளாக பரிணமித்தது. இருவரும் அதை காதல் என கூறாவிட்டாலும் மாலை நேரங்களில் சந்திரன் மஞ்சுளாவுடன் செலவிடும் நேரம், சுற்றிய இடங்கள் ஆகியன அதனைக் காதல் என மற்றவர்களுக்கு இனம் காட்டியது.

இவர்கள் விவகாரம் சந்திரன் குடும்பத்திற்கு எட்டியது. கந்தையா வாத்தியாருக்கு மகனின் காதல் கசந்தது. அக்கால நிலவரத்தில் பல இலட்சங்களுக்கு சீதனம் வாங்கி மகனுக்கு ஊரில் பெரிதாக திருமணம் நடத்த கனவு கண்டவர். உடனடியாக கண்டிக்கு வந்து “தம்பி படிப்பை கவனி காதல், கத்தரிக்காய் என இறங்காதே” என எச்சரித்துவிட்டு சென்றார்.

சந்திரனது நிலைமை மஞ்சுளாவுக்கு தெரிந்தாலும் காதல் தொடர்ந்தது. கடைசிப்பரீட்சை வரையும் தொடர்ந்தது. இந்த காலகட்டத்தில் மஞ்சுளாவின் தந்தை திடுதிடுப்பென இறந்துவிட்டார். குடும்பபாரம் அவள் தலையில் விழுந்தது.

சந்திரனுக்கு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாராக நியமனம் கிடைத்தபோது மஞ்சுளாவிற்கு நைஜீரியாவில் ஆசிரியையாக நியமனம் கிடைத்தது. சந்திரனுக்கு மஞ்சுளாவை வேலைக்கு போகாமல் தடுக்க முடியவில்லை. இதேபோல் சந்திரனால் மஞ்சுளாவின் குடும்ப பொறுப்புக்களை ஏற்க முடியவில்லை.

அன்று மஞ்சுளா, “சந்திரன் எனக்கு நைஜீரியாவிற்கு செல்ல விமான டிக்கட் வந்துவிட்டது.” என்றாள்.

“அப்படியா,“

“வாருங்கள் பூங்காவிற்கு செல்வோம்.”

விஜயவர்த்தனா பெண்கள் விடுதியில் இருந்து ஏறியதும் ஐந்து நிமிடத்தில் பேராதனை பூங்காவில் பஸ் நின்றது. மகாவலி கங்கை கரையை இருவரும் நோக்கி நடந்து சென்று கரையில் உள்ள புல்வெளியில் அமர்ந்தனர். மகாவலி ஆறு இருவரது மனங்கள் போல் வற்றிக் கிடந்தது. தண்ணீர் அற்றுப் பல இடங்களில் வெறுமையாக திட்டி, திட்டியாக மணல் மேடுகள் சிவப்பான தீவுகள் போல் தெரிந்தது.

“என்ன செய்யப் போகிறாய் மஞ்சுளா?” “

“நான் வேலைக்கு போனால் தான் எங்கள் குடும்பத்திற்கு ஏதாவது செய்யலாம். இந்தநிலையில் நீங்கள் உங்களின் குடும்பத்துக்கு மாறாக என்னை திருமணம் செய்தாலும் எங்கள் குடும்பபாரம் உங்கள் மேல் விழும். உங்கள் அப்பா, அம்மாவின் எதிர்பார்ப்புகள் வீணாகும். காதலின் பேரால் வாழ்க்கை உங்கள் வீணாகும். என் தங்கைகளை நான் பாராமரிக்காவிட்டால். அவர்களால் எப்படி படிக்க முடியும்? அப்பா இருந்தவரை நான் எதுவும்; நினைக்கவில்லை. சாதாரண கிளாக்கராக இருந்து ஐந்து பெண்பிள்ளைகளை எப்படி வளர்த்தாரோ? அம்மாவால் தனியே என்ன செய்யமுடியும? எனக்கு வேறு வழிதெரியவில்லை.”

சந்திரனின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

“சின்னபிள்ளை மாதிரி அழுதால் நான் எப்படி போகமுடியும்?;. நான் பொம்பிளை இப்படி துணிவாக போகிறேன்.”

“எனது காதலை எனது கண்ணீரில் கரைத்து இந்த மகாவலி கங்கையில் விடுகிறேன்.” என அவன் விரக்தியுடன் சிரித்துக்கொண்டு கண்ணீர் விட்டான்.

“சந்திரன் உனது மார்பில் படுக்கிறேன். உனது நினைவுகளை மட்டுமல்ல, உனது சுவாசக்காற்று, உடலின் மணம்
எல்லாவற்றையும் எனது இதயத்தில் பதித்துக்கொண்டு நைஜீரியா கொண்டு செல்லப்போகிறேன்”

சிலமணிநேரம் படுத்திருந்துவிட்டு விஜயவர்த்தனா விடுதியில் முகப்புக்கு நடந்து வந்ததும் சந்திரன் தயங்கினான்.

“சந்திரன், உள்ளே வரவில்லையா? “

“இல்லை. நான் வரவில்லை”.

“நாளை கொழும்புக்கு பஸ் ஏத்த வருவீர்கள் தானே?” “

“ஆம்” என தலையாட்டினான்.

மஞ்சுளாவின் பிரிவாலும், தன் காதலை தொலைத்துவிட்ட விரக்தியாலும்; சந்திரன் தாடியும் மீசையுமாக சிலகாலம் வழ்ந்தான். இக்காலத்திலேயே அவனுக்கு அவுஸ்திரேலியாவுக்கு புலமைப்பரிசில் கிடைத்தது.

சுற்றுசூழல் விஞ்ஞான பேராசிரியர் பாமர் இவனை சலிபடைய விடாமல் வேலை கொடுத்தார். சந்திரனின் முதுமானிப்பட்டம் முடிந்து தாயும் தகப்பனும் கடிதம் மேல் போட்டு ஒரே மகனை திருமணத்துக்கு இணங்கும் படி வற்புறுத்தினர். இக்காலத்திலே தூரத்து உறவு என்கின்ற பரிந்துரையுடன் சோபாவின் படம்; வந்தது. இவளில் ஏதோ சிறிதளவு மஞ்சுளாவின் சாயல் தெரிந்ததும் திருமணத்துக்கு சம்மதித்ததற்கு ஒரு காரணமாகும்.

தொடரும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: