இரண்டாவது உலகயுத்தத்தில் 25 மில்லியன் சோவியத் மக்கள் அதில் 13 லட்சம் ரஸ்சியர்கள் மரணமடைந்தார்கள் என்பதைப் பலர் கேள்விப் பட்டிருந்தோம். 3 மில்லின் ரஸ்சியர்கள் முதலாவது உலகப் போரிலும், அதற்கப்பால் ஸ்ராலின் காலத்தில் பல மில்லியன் மக்கள் இறந்ததாக வரலாறு உள்ளது. மாபெரும் தேசம் அங்கு அழிவுகளும் அதிகமென நினைத்த எனக்கு ரஸ்சியப் பயணத்தில் மேலும் அங்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது
1812 ம் ஆண்டு மாஸ்கோவுக்குப் பக்கத்தில் நடந்த யுத்தத்தில் ஒரு நாளில் 75000 படைவீரர்கள் சண்டையிட்டு இறந்தார்கள். உலகப் போர் வரலாற்றில் இது முக்கியமான ஒரு சம்பவம். நெப்போலியனது படைகளுக்கும் ரஸ்சியப்படைகளுக்கும் இடையில் நடந்த யுத்தத்தை நினைவுக்குக் கொண்டுவர 115 மீட்டர் கன்வஸ்சில் யுத்தம் நடந்த இடத்தில் ((Borodino) ரஸ்சிய ஓவியரால் (Franz Roubaud) வரையப்பட்டு அழகான போர் நினைவு மண்டபத்தின் உள்ளே பனோராமிக் வடிவத்தில் உள்ளது.
வரலாற்றின், நாங்கள் இருநூறு வருடங்களுக்கு முன்பாக பயணப்பட்டு கண்ணெதிரே அந்த சண்டையை பார்ப்பது போன்ற உணர்வைத் தந்தது. ஓவியர் ரோபட்டின் ஓவியங்கள், பொரடினாவில் அன்று நடந்த சண்டையை , மீண்டும் அதே இடத்தில் தூரிகையால் தத்ருபமாக கொண்டு வந்திருப்பதை பாரத்தபோது அதிசயித்தேன். ரஸ்சிய படையினரது உடைகள் பிரான்சியரது உடைகள், மற்றும் படைவீரர்கள் அதிகாரிகளது இலச்சினைகள், பதக்கங்கள், தொப்பிகள், மற்றும் அவர்களது குதிரைகள் எல்லாம் தத்துருபமாக வரையப்பட்டு இருந்தது.
அந்தச் சண்டைக்கு ரஸ்சிய சார்பாகத் தலைமை வகித்த ஜெனரல் குத்துஸ் கம்பீரமாக குதிரையில் அமர்ந்திருக்கும் சிலை கட்டிடத்தின் முன்பாக உள்ளது.
இந்த நாங்கள் பார்த்த இடத்தில் உள்ள சிறிய குடிசையிலே 1812ல் ஜெனரல் குத்தூஸ் மற்றைய அதிகாரிகளுடன் அமர்ந்து ஆலோசனை நடத்தினார். படையெடுத்து வரும் பிரான்சியப்படை அக்காலத்தில் மிகவும் பயிற்சி பெற்றதுடன் தேவையான அளவு ஆயுதங்களும் கொண்டு முழு ஐரோப்பாவிலும் இருந்து தெரிந்தெடுக்கப்பட்ட வீரர்களைக் கொண்ட படை, ரஸ்சியாவின் பகுதிகளைக் கைப்பற்றியபடி மாஸ்கோவை நோக்கி வந்தபோது மாஸ்கோவைப் பாதுகாக்கவேண்டுமென சகலரும் விரும்பினர். ஆனால் குத்தூஸ் நகரத்தின் உள்ளே வந்த பின்பு யுத்தம் செய்ய நினைத்தார். ஆனால் அதற்கு முன்பாக பிரான்சிய படைக்குப் பெரிதான தாங்குதலை நடத்தி நிலைகுலை செய்வதற்காகவே இந்த யுத்தம் நடந்தது
நெப்போலியன் ரஸ்சியாவைக் கைப்பற்ற முழு ஐரோப்பியர்களையும் படையில் சேர்த்து (286000) நடத்திய போரின் திருப்பு முனையாக இருந்தது இந்தப் போரே.
தோல்விகளைச் சந்தித்த ரஸ்சியா 67 வயதான இளைப்பாறிய ஜெனரல் குதூஸை (kutuzov) மீண்டும் ராணுவத்தில் அழைத்த பின்பு நடந்த இந்த யுத்தத்தில் ரஸ்சியர்கள் பலமான அழிவுகளை உருவாக்கி விட்டுப் பின்வாங்கினார்கள்.அதேநேரத்தில் 50000 மேல் ரஸ்சிய ராணுவம் படையினரை இழந்தது
மிகுந்த இழப்போடு நெப்போலியன் இறுதியில் மாஸ்கோவை கைப்பற்றிய பின்பு, ரஸ்சியரகள் சரணடைவார்கள் என எதிர்பார்த்திருந்தபோது, கொரில்லா யுத்தத்தை ஆரம்பித்தார்கள் இதில் கொசாக்கியாரது பங்கு பெருமளவானது.
இறுதியில் தோல்வியடைந்த நெப்போலியன் 23000 படைவீரர்களுடனே பிரான்சுக்கு திரும்ப முடிந்தது.
1812 ல் நெப்போலியனோடு நடந்த யுத்தத்தை தேசத்தைக் காப்பாற்றிய யுத்தமெனவும் பின்பு 1942ல் நடந்ததை தேசத்தைக் காப்பாற்ற நடந்த மகா யுத்தமென ரஸ்சியாவில் கூறுவார்கள்
மறுமொழியொன்றை இடுங்கள்