மாதா கோவில் மணி கேட்டதும், எங்களை எழுப்புவதற்காக போடிங் ஹவுஸ் வார்டன் அதிகாலை நேரத்தில், பிரம்பால் அடிப்பார். அதே போன்ற அடி, காலில் விழுந்தது போல இருந்தது.
கனவு கலைந்து திடுக்கிட்டு எழுந்தேன். இருந்தும் அதன் துண்டு நினைவுகளும், அதிலிருந்து விடுபட்ட பல அத்தியாயங்களும் காற்றில் மிதக்கும் இறகுகளாக, என்னைச் சுற்றிச் சுழன்றது.
எனது சிறுவயதுப் பாடசாலை நிகழ்வுகளின் பாத்திரங்களாக வகுப்பில் என்னுடன் படித்த பால்ய நண்பர்களை கனவு கண்டுகொண்டிருந்தேன். பழய நினைவுகள் இப்பொழுது மீண்டும் வருகிறது. இவற்றின் பெரும்பகுதி சிறுவயது நிகழ்வுகளே. இதைப் பற்றி நான் சொல்லும்போது ‘இளைப்பாறிய உங்களுக்கு கிழடு தட்டிவிட்டது’ என்பாள் மேரி. இதனால், இம்முறை கனவைப்பற்றி பேச்செடுக்காமல், பக்கத்தில் எழுந்து கண்ணைக் கசக்கிக் கொண்டிருந்த அவளிடம் ‘யார் இறந்து விட்டார்கள்?’ என்றேன்.
’எனக்கெப்படித் தெரியும்? இன்றைக்குத்தானே உங்களோடு வந்ததேன். என்றபடி எழுந்தாள் மேரி.
கையில் கட்டிய கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தபோது நடுநிசியைத் சில நிமிடங்கள் தாண்டியிருந்தது. யாராவது இறந்தால் மட்டும் கோவிலில் மணியடிக்கும் பழக்கம் எங்கள் ஊரில் இருந்தது. மீன்பிடிக்கிராமமாக இருந்ததால் கடலுக்குப் போனவர்கள் பற்றிய எதிர்பாராத செய்திகளைப் அறிவிக்க பாவித்த மணி, பிற்காலத்தி;ல் இறப்பை மட்டும் தெரிவிக்கும் தந்தியாக பயன்பட்டது. பலருக்கு சாத்தானின் வருகையை தெரிவிக்கும் ஓசையாகக் கேட்டது. வயதானவர்களுக்கு நாட்களை எண்ணத்தூண்டி இதயத்தில் அதிர்வைக் கொடுக்கும். உடனே யார் யார் உடல் நலம்குறைந்து இருக்கிறார்கள்; என்பதை மற்றவர்களுக்கு நினைக்கவைக்கும். இளையவர்களுக்கு நித்திரையைக் குலைக்கும் இடையூறாகத் தோன்றும்.
கோயிலுக்கு அருகாமையால் எமது வீடு இருந்ததால் மணியோசை எங்களைக் கடந்தே காற்றோடு போகவேண்டும்.
காலையில் கொழும்பில் இருந்து வந்ததால் இரவு நித்திரை பஸ் பயணத்தால் குளம்பியிருந்தது. அதையும் சேர்த்து இன்றிரவு டபிளாகக் கொள்ள இருவரும் முடிவெடுத்ததினால், மாலை எட்டுமணிக்கு தமிழ்நாட்டு மெகா சீரியல் முடிந்ததும் சாப்பிட்டுவிட்டுப் படுத்தோம். மார்கழி மாதத்து வாடைகாற்று மிதமான ஈரலிப்போடு திறந்த யன்னலூடாக வந்து உடலைத் தழுவித் தாலாட்டி கதவின் மேற்பகுதியூடாகச் சென்றது. மலைநாட்டில் மூடி மூடி வைத்திருந்த யன்னல் கதவுகளை இங்கு திறந்து விடுவதில் ஒரு சந்தோசம்தான்.
இரண்டு மாதங்கள் முன்பாக ஆசிரியர் தொழிலில் இருந்து இருவரும் ஓய்வு பெற்றோம். கனடாவில் கர்ப்பமாக இருக்கும் மகள் கூப்பிடும் வரைக்கும் சொந்த ஊரில் கடற்கரையில் கால் புதைத்து சிலகாலம் நடப்பதற்கு முடிவுசெய்து பழய குடும்ப வீட்டை திருத்தியிருந்தோம். கடந்த முப்பது வருடமாக சண்டை நடந்ததால் ஊர்ப்பக்கம் வரவில்லை என்பது குற்ற உணர்வாகக் குறுகுறுத்தது. இதுவரையும் நுவரலியாவில் இருவருக்கும் வேலையிருந்ததால் அங்கேயே இருந்துவிட்டோம் என்பது காரணமாக இருந்தது. அந்தக் காரணம் இப்பொழுது காலாவதியான மருந்தாகிவிட்டது.
மணியோசையைக் கேட்டதும் நடு இரவு என்று பார்க்காமல் நானும் மனைவியும் வந்தோம் என பெருமிதமாக நினைத்துக்கொண்டிருந்தபோது மாதா கோவிலில் கிராமசபைத் தலைவர் உட்பட, குழந்தைகளுடன் ஆண்களும் பெண்களுமாக நின்றார்கள். பலர் சுற்று மதிலருகிலும் நின்று எட்டிப் பார்த்தார்கள். அவர்களில் பலரது வாயிலிருந்து புகை வந்து கொண்டிருந்தது. நேரத்தை வீணாக்க அவர்கள் விரும்பவில்லை போலும்.
கத்தோலிக்க கிராமமானதால் மாதாகோயிலே கிராமத்தின் இதயம். விரும்பியோ விரும்பாவிட்டாலும் பாதிரியாரது சொல்லே வேதவாக்கு. தற்போதய பாதிரியார் சமிபத்தில்த்தான் மாதாகோவிலுக்கு வந்தாலும் இதே ஊரைச் சேர்ந்தவர்.
மாதாகோயிலின் மண்டபத்தில் விலையுயர்ந்த வெள்ளைநிற பிரேதப்பெட்டி வைக்கப்பட்டிருந்தது. அதனருகே வலதும் இடதுமாக இரண்டு மெழுகுவர்த்திகள் எரிந்தன. பைபிளை கையில் வைத்தபடி தலைப் பகுதியில் பாதிரியார் நின்றார.; அவரின் அருகில் அந்தோனியும் செபமாலையும் நின்றனர். இருவரும் பாதிரியாருக்கு உதவி செய்பவர்கள். அருகில் சென்று எட்டிப் பார்த்த எனக்கு அதிசயம் காத்திருந்தது. வெள்ளை நிறமான பெட்டியின் உள்ப்புறத்தில் வளர்த்தியிருந்த பூதவுடலை, முப்பது வருடத்தின் பின்னரும்; அடையாளம் கண்டுகொண்டேன்;. கூர்மையான மூக்கில் சிவப்புக்கல்லு மூக்குத்தி யாரெனக் காட்டியது. ராஜாத்தி மாமி அமைதியாக சிறிய பெட்டிக்குள் படுத்திருந்தார். சிவப்பு நிறப்பட்டு சேலையுடுத்து ரோஸ் கலரில் ரவிக்கை அணிந்திருந்தார். அந்த ஊரிலேயே உருண்டு திரண்ட கணுக்காலும் நடந்தால் நிலத்தில் படாத காற்சிறுவிரலுக்கும் சொந்தக்காரி இராஜாத்தி மட்டுமே. அவரது நாலு பெண் பிள்ளைகளில் ஒருவருக்கும் அப்படியான பாத அமைப்பில்லை. அவரது உருவம் அந்தப் பெட்டிக்குள் சிறிய பறவை ஒன்று மழைக்காலத்தில் கூட்டுக்குள் ஒதுங்குவதுபோல் இருந்தது. மாமி இறந்ததாகத் தெரியவில்லை. தற்காலிகமான மயக்கம் ஏற்பட்டதால் படுக்க வைக்கப்பட்டிருப்பதாக காட்சியளித்தார்.
அவசரமாக குழந்தைகளையும் பெண்பிள்ளைகளையும் இழுத்து வந்த பெண்கள் ஆண்கள் முகத்தில் கவலை தெரியவில்லை. பெண்களின் முகத்தில் ஏதோ விரும்பிய விடயம் நடந்ததுபோல் ஆறுதல் தெரிந்தது. ஆண்கள் முகத்தில் ஏளனமான புனமுறுவல், திருப்தி. எல்லோரும் பாதிரியாரின் முகத்தைக் கண்டதும், சீரியசான முகமூடியை எங்கிருந்தோ வரவழைத்துக்கொண்டனர்
பிரான்சில் பிள்ளைகள் பேரப்பிள்ளைகளுடன் சில வருடங்கள்; வாழ்ந்துவிட்டு ஊர் வந்து ஆறுமாதமாக ஊரில் நிற்கும் இராசாத்தி மாமிக்கு ஏதோ கான்சர் எனக் கேள்விப்பட்டோம் அதற்கு மேலாக நாங்கள் இருந்த நுவரலியாவிற்கு தகவல்கள் வரவில்லை ஆனாலும் தனது கடைசிக்காலத்தை சொந்தக் கிராமத்தில் இருக்கவேண்டும். அங்கே இறக்கவேண்டும்; என்று மாமி வந்ததாகத் தெரிந்தது.
இராஜாத்தி மாமி வந்த ஆறு மாதத்தில் அதுவரை காலமும் கவனிப்பாரற்றும் வர்ணமிழந்தும்,பாசியேறியுமிருந்த மாதாகோவில் கட்டிடம் புதுப்பொலிவு பெற்றது. தூய வெள்ளை நிறத்தில் வர்ணமடித்து மதில் கட்டப்பட்டது. வாசலில் கறள் ஏறிய இரும்புக் கதவாக இருந்த இடத்தில் புதிய நீல இரும்பு கதவு பொருத்தப்பட்டு அதன் அருகில் பாதையோரத்தில் வீதியில் போவோர்க்கும் அருள் பாலிக்க, குழந்தை யேசு மடியில் தவழும் கன்னிமேரியின் சொருபம் வைக்கப்பட்டது. சேர்ச் பாதருக்கு இவையெல்லாம் ஆறுமாதத்தில், அதுவம் தனது காலத்தில் நடந்ததால் ஆனந்தமாக இருந்தது என ஊர்மக்கள் மத்தியில் பேசப்பட்டது. ஊர்மக்களுக்கு இவற்றை இராஜாத்தி மாமி செய்தது பிடிக்கவில்லை. ஆனாலும் மாதாகோலிலில் நடந்ததால் அவர்களால் எதுவும் பேசமுடியவில்லை.
கிராமத்தில் உள்ளவர்கள் பல வருடங்களாக நடந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள். மீன்பிடியை பெரும்பாலாக நம்யிருந்த அந்தக் கிராமத்தில் கடலில் செல்லத் தடையிருந்தது. படித்தவர்கள் ஓரு சிலர் தென்பகுதியில் வேலை செய்தார்கள் .மற்றவர்கள் வெளிநாடுகளுக்குப் போனவர்கள் அனுப்பிய பணத்தால் சீவியம் நடந்தினார்கள். மிகுதியானவர்கள் அவர்களை நம்பியிருந்தார்கள.
இராசாத்தி உண்மையாகவே உறவு முறைப்படி எங்களுக்கு மாமிமுறை. ஆரம்பத்தில் ஊர் கிராமசங்கத் தலைவராக இருந்தவரை திருமணம் செய்து இரண்டு பிள்ளைகளோடு ஊர் பொறாமைப்பட வாழ்ந்தவர் எனச் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்தத் தலைவர் சில வருடத்தில் கிராமத்தை விட்டுப்போனவர் பலகாலமாகத் திரும்பி வரவில்லை அதன் பின்பு வெளியூரில் இருந்து ஒருவரை மணந்தார். அவரும் இரண்டு பெண் குழந்தைகளைக் வெகுமதியாகக் விட்டு போய்விட்டார். நான் படிக்கும்போது மாமிக்கு நாலு பெண் பிள்ளைகள் இருந்தார்கள் முதல் இரண்டு பெண்கள் நல்ல சிகப்பு நிறம். அவர்களுள் இரண்டாவது பெண் அஜந்தா என்னோடு படித்தாள். ஐந்து வருடங்கள் துணைவனென எவருமில்லாமல் இருந்தபோது மாமிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்தப்பிள்ளையும் சிவப்பாக இருந்தான். சும்மாவே மெல்லுபவர்களுக்கு சுவிங்கம் கிடைத்தது. மாமியைப் பற்றி அரசல் புரசலாக் பெண்கள் மட்டுமே பேசியது போய் இப்போது ஆண்களும் பகிரங்கமாக மாமி பற்றிய கிசுகிசுவில் கலந்துகொண்டார்கள்.
8888888
பாதிரியார் பைபிள் வாசிப்பை நிறுத்திவிட்டு இராஜாத்தியின் ஆவி கர்த்தரையடையட்டும்’என்றார்.
இதைக் கேட்டதும், கலைந்த தலையுடன் வெள்ளை சீலையணிந்திருந்த இளைப்பாறிய ஆசிரியையான திரேசா, நின்ற இடத்தில் இருந்து சில அடிகள் முன்வந்தார். பின்னர் மார்பை மூடிய சீலை சரியாக இருக்கிறதா என சரி பார்த்துவிட்டு, தனது மூக்கு கண்ணாடியூடாக நேரடியாக பார்த்தபடி ‘பாதருக்கு தோத்திரம்’ என்றார். பின்னர் தனது சேலையை சரிசெய்தபடி,
‘இராஜாத்தி கர்த்தரிடம் போகிறாளா இல்லையா என்பது நமக்குத் தெரியப்போவதில்லை. ஆனால் இந்த புனிதமான மேரிமாதாவின் ஆலயத்தில் அவளது உடலை வைத்திருப்பது என்னால் ஏற்கமுடியவில்லை’ என கணீரென்று சொல்லிவிட்டு பின்வாங்கினாள்.
பாதரை எதிர்த்து எவரும் பேசத்துணியாதபோது திரேசா பேசியது கூட்டத்திலிருந்தவர்களுக்கு ஆறுதலாக இருந்தது. நான்கூட நினைத்தேன் இப்படியான பெண்களைத்தான் பாரதி கனவு கண்டரோ என. நிமிர்ந்த நடையும் நேரிய பார்வையும் திரேசாவுக்கு தானாக அமைந்திருந்தது. இது பெண்பற்றிய விடயமானதால் திரேசா முதலடியெடுத்துக் கொடுத்ததை வழிமொழிவதுபோல சிறியபுஸ்பம், கிராமச் சங்கத் தலைவரின் தங்கை, வெளியூரில் வசிப்பவள் தனது கையை உயர்த்தி கூட்டத்தை விலக்கியபடி முன்னால் வந்து ‘பாதர் நானும் திரேசாக்கா சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன். பலரோடு பாவங்கள் செய்த உடலிது. மேரிமதாவின் நிழலில் இருக்கும் தகுதியற்றது’ என்றதும் மேலும் பலரது கைகள் உயர்ந்தன.
ஆண்கள் எதுவும் பேசவில்லை. பெண்களைப் பேசவைத்து மவுனம் காத்தனர்.
‘வேறு யாராவது ஏதாவது புதிதாகக் கூறவிரும்பிறீர்களா? எனக்கேட்டார் பாதர், கூடியிருந்தவர்களைப் பார்த்து கையை உயர்த்தியபடி.
நாங்களும் திரேசக்காவினதும் சிறியபுஸ்பத்தின் கருத்தை ஆதரிக்கிறோம் என்று சொல்லிவிட்டு, தாங்கள் பேசவிருந்த விடயங்களாக மனத்திலும் தொண்டையிலும் நிறைத்திருந்த சுமைகளை இறக்கிவைத்தபின் தங்களை ஆசுவாசப்படுத்தியவர்களாக அங்கிருந்த பெஞ்சுகளில் அமர்ந்திருந்தனர். பெற்றோரைப் பார்த்து பிள்ளைகளும்கூட அமர்ந்தனர். பலருக்கு தூக்கக் கலக்கம். பேசினால் நாக்கு இழுபடலாம் என்பதோடு பாதரிடம் எதிர்த்து பேசுவது கடினமானது என்பதும் காரணமாம். எனது மனைவி மேரி வெளியூர்காரி என்பதால் அவளுக்கு எதுவும் புரியவில்லை. ஆனாலும் நடப்பது நிச்சயமாக சிறந்த நாடகமாக இருக்கவேண்டும் என நினைத்து கண்ணால் சைகை செய்து என்னை அமரும்படி சொன்னாள்.
கையில் இருந்த பைபிளை அந்தோனியிடம் கொடுத்துவிட்டு செபமாலையை உருட்டிபடி ‘நாங்கள் கிறீஸ்தவர்கள். கர்த்தரின் நாமத்தை செபிப்பவர்கள்: பைபிளை வாசிப்பவர்கள் என்பதை மறந்து விடுகிறோம். மற்றயோரின் பாவங்களை தனது குருதியால் கழுவிய தேவபாலனது அடியாட்கள். தேவனின் சன்னிதானம் பாவிகளுக்கும் புனிதர்களுக்கும் சமமானது. நான் இதே ஊரில் உங்களோடு ஒன்றாக வளர்ந்தவன். இராஜாத்தியையும் நன்றாக அறிந்தவன். அவளை நியாயப்படுத்த வரவில்லை. கடந்த ஆறு மாதங்களில் இந்த ஆலயத்தில் புனிதமேரியின் முன்பாக தனது பாவங்களை கண்ணீரால் கழுவியவள். தனது நோயை பாவத்தின் சம்பளமாக ஏற்று மாதாவின் திருவடியில் இறப்பதற்காக வந்தவள். தனது முழுச் சேமிப்பையும் இந்த ஆலயத்தில் செலவு செய்துவிட்டு என்னிடம் பாதர் நீங்களே என்னைப் புதைத்துவிடுங்கள். எனது கல்லறையில் ஒரு தாய் உறங்குகிறாள் என எழுதிவிடுங்கள் என்றாள். அவளது உற்றார் உறவினர்கள் எவருமில்லாதபோது இதை எப்படி நான் மறுக்க முடியும்? அயலவர்களை நேசி என்பதை மதகுருவான நானே மீறமுடியுமா?’
அங்கிருந்த பலர் பாதரின் கூற்றில் உண்மையிருப்பதை அறிந்து தலையை ஆட்டினார்கள்.
திரேசா மீண்டும் ‘எமது சமூகத்தில் எல்லோரும் இராஜாத்தியாகினால் எம்மால் தாங்கமுடியுமா? இளம் பெண்கள் எதை பின்பற்றுவது?’ எனக் கேட்டாள்
அதைக்கேட்ட தற்போதைய கிராமத் தலைவர் தனது அவிழவிருந்த நீல கோடுபோட்ட லுங்கியை இடது கையால் பிடித்தபடி வழுக்கைத்தலையை ஆட்டியபடி முன்னால் வந்து ‘இது சரியானதுதானே. இப்படியான உதாரணங்களை மற்றவர்கள் எடுத்தால் எப்படி நம்மால்த் தடுக்கமுடியும்?’
‘ஆகஸ்ரின், நீங்கள் சொல்வது சரியான விடயம். இராஜாத்தியாக மாறுவது விரும்பி ஏற்கும் விடயமல்ல. அவர்கள் நமது சமூகத்தின் இருள் நிறைந்த இடுக்குகளில் கவனிப்பாரற்றோ ,தள்ளப்பட்டோ விழுந்து விடுகிறார்கள். அதற்கு நாமே பலர் காரணமாக இருக்கிறோம்.
‘நாங்களா காரணம் பாதர்?’
‘நாம் என்பது உதாரணம் இல்லையா? இது மாதிரியான கதை வேதத்தில் உள்ளது. இஸ்ரேலில் மரியமதலாள் பாவம் செய்தாள் என ஊரிலுள்ளவர்கள் கல்லெறிந்தபோது பாவம் செய்யாதவர்கள் மட்டும் யாராவது இருந்தால் இவள் மீது கல்லை எறியுங்கள் என்றார் யேசுநாதர். ஒவ்வொருவரும் கல்லுகளை கீழே எறிந்து விட்டு தம்வழியே சென்றனர். அதன் பின்பு அவருக்கு அடிமையாக சேவகம் செய்தபடி தனது வாழ்நாளைக் கழித்தவள் மரியமதலாள். நான் அப்படி சொல்லவில்லை. எமது குழந்தைகள் மற்றும் உறவினர்களது தவறுகளை நாம் மன்னிக்கமாட்டோமா? சரி, அப்படியாக நினைத்தாலும் உயிரற்ற உடலுக்கு தண்டனை வழங்க முடியுமா? அதையும் எப்படி செய்யவேண்டும் என நீங்களே சொல்லுங்கள்?
ஆரம்பத்தில் அமைதியாக நீரில் விழுந்த சிறுகற்களாக இருந்த வார்த்தைகள் இறுதியில் பாறைகள்போல் அதிர்வுகளை உருவாக்கியது. யேசுபிரானது வாழ்க்கையில் இருந்து எடுத்த உதாரணம் எதிர்த்தவர்களது இதயங்கள் கனமாகியதுடன் பலரது கண்களை நீர் கொண்டு நிரப்பியது.
எவரிடமிருந்தும் எந்தவித பதிலும் வரவில்லை.
சில நிமிடங்கள் மவுனத்தில் கரைந்தது. இது வேண்டுமென்றே இராயப்பு பாதிரியாரால் உருவாக்கப்பட்டது. அவரது வார்த்தைகளிலும் பார்க்க மவுனம் பலமாக இருந்தது. அவர் உருவாக்கிய மவுனத்தைக் கலைத்து ‘உங்களில் எத்தனை பேர் நாளை ராஜாத்தியை இடுகாட்டில் புதைக்க வருவீர்கள்?;’
எல்லோரது கைகளும் உயர்ந்தன. சிறுவர்கள் சிறுமிகள் உட்பட
நான் பாதரின் அருகில் சென்று ‘தோத்திரம் சாமி’ என்றேன்.
‘எப்ப வந்தாய்?’
‘இன்றுதான்’
இருவரும் பல வருடங்கள் ஒன்றகப் படித்தோம். விளையாடினோம்.
எனக்கு பதினொரு வயது இருக்கும். அக்காலத்தில் எனது சகதோழன் இந்த இராயப்பு. மிகவும் குறும்புக்காரன். எங்கள் வகுப்புத் தோழியான அஜந்தாவிடம் ஏன் உன் அம்மாவைப் பொதுக்கிணறு என்கிறார்கள் என கேட்கும்படி சொன்னான். அதன் உள்ளர்த்தம் அவனுக்குத் தெரியுமோ எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு அதை பற்றி சொன்னாலும் புரியாத வயது என்பதால் நேரே கேட்டுவிட்டேன். நான் கேட்டபோது அஜந்தா அதைப் பொருட்படுத்தாமல் சிரித்துவிட்டு சென்றாள்.
மறுநாள் புனித வெள்ளி, உயிர்த்த ஞாயிறு என நான்கு நாள் விடுமுறை. நான் நடந்த சம்பவத்தை மறந்துவிட்டேன். செவ்வாய்கிழமை காலை பாடசாலை செல்வதற்கு சோம்பலாக இருந்தது. நாலு நாள் விடுமுறை வந்ததால் காலையில் இருந்து விளையாட்டு கடற்கரையில் நடக்கும். அத்துடன் ஒரு நாள் கூத்துப் போட்டார்கள். மெதுவாக என்னைத் தள்ளியபடி நடந்து பாடசாலைக்குச் சென்றேன். மற்றவர்கள் ஏற்கனவே சென்றுவிட்டார்கள். சேர்ந்து செல்ல வழியில் மாணவர்கள் யாருமில்லை.காலையில் நடக்கும் பிரார்தனைக்கு மணியடித்துவிட்டார்கள். ஆறு அறைகள் கொண்ட ஆரம்ப பாடசாலையில் உள்ள அறையில் பிரார்த்தனை நடக்கும். அந்த பிரார்த்தனை நடக்கும் இடத்திற்கு நேரடியாக சென்ற என்னைச் சந்தித்த அஜந்தா, ‘உன்னுடைய அப்பா உன்னை வரச்சொன்னார்| என்றாள்;. பாடசாலையில் எனது தந்தையார் ஆசிரியராக இருந்தார்.
எனக்கு எந்த பாடமும் எடுக்காத எனது தந்தைக்கு என்னிடம் என்ன வேலை இருக்கும்? ஏதாவது விடயமானால் வீட்டிலே சொல்லியிருக்கலாமே! பிரார்தனைக்கு செல்லாமல் அழைப்பது ஏன்? .
நான் உள்ளே சென்றபோது இராஜாத்தி மாமி கைக்குழந்தையை இடுப்பில் வைத்தபடி முட்டவரும் காளைமாடாக நின்றார். என்னை அழைத்த அஜந்தா எனக்கு முன்பாக சென்று தாயின் பச்சைச் சீலையில் ஒதுங்கிக் கொண்டாள். அப்பா கதிரையில் இருந்தார். அவருக்கு முன்பாக இருந்த மேசையில் பிரம்பொன்றிருந்தது. கண்களில் கோபம்தெரிய மீசையைத் தடவியபடி கதிரையின் விளிம்பில் இருந்தார். காரணம் புரியாதபோதும் அவசரகால நிலமை புரிந்தது.
என்னை வாசலில் பார்த்ததும் முகத்தில் கோபம் தொனிக்க ‘வாத்தி, உனது மகனுக்கு என்ன படிப்பிக்கிறாய்?’ என்று என்னை இடது கையால் காட்டியபோது நான் எதிரியைக் கண்ட ஆமையாகினேன்.
‘வாடா இங்கே’ என அப்பா எழுந்தபோது நான் அருகில் போகவில்லை. இருவருக்கும் இடையில் பாதுகாப்பு வலயமாக மேசையிருந்தது. அதன் அருகே மரக்கரும்பலகை சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. நான் போகாததால் எழுந்து வந்து வலது கையால் எட்டி கன்னத்தை நோக்கி அடித்ததும் நான் குனிந்தேன். தலையில்பட்டது அடியாக அது அமையாமல் தலையில் கைவைத்து தள்ளியதுபோல் பலமாக அமைந்ததால் நான் சில தூரம் தள்ளப்பட்டு கால்தடுமாறி அங்கிருந்த கரும்பலகையில் சாய்ந்தேன். கரும்பலகை சத்தத்துடன் கீழே விழுந்தது. அந்தச் சத்தத்தைக் கேட்டு அடுத்த வகுப்பாசிரியர் எட்டிப்பார்த்தார். கீழே நான் விழுந்தததையோ கரும்பலகை விழுந்ததால் ஏற்பட்ட ஓசையையோ எதிர்பார்க்காத அப்பா தாமதித்த சில கணத்தில் எழுந்து பாடசாலையில் இருந்து திரும்பிப் பார்க்காது வீட்டுக்கு ஓடிவிட்டேன்.
பாடசாலையில் நடந்ததை அம்மாவிடம் சொன்னதும் ‘அந்த தேவடியாளின் கதையைக் கேட்டு எனது பிள்ளையை அடித்தானே? இந்த முட்டாள் மனிதனுக்கு மூளையில்லையா? இல்லை இவருக்கும் மயக்கமருந்து கொடுத்துவிட்டாளா?’ எனத்திட்டியபடியே என்னை அணைததுவிட்டு ‘இனிமேல் இந்த பள்ளிக்கூடமும் இவர்கள் சகவாசமும் வேணாம்’என்றார்.
சொல்லியபடி சில நாட்களில் நகரத்துப் பாடசாலையில் சேர்ந்தேன். ஹாஸ்டலில் சேர்ந்து படித்தேன். நான் போய் சிலகாலத்தில் இராயப்புவும் செமினறியில் சேர்ந்து விட்டான் என்று அறிந்தேன்.
8888888888
‘இராசாத்தியால் அடி வாங்கியதை மறந்திருக்கமாட்டாயே’ என்றார் இராயப்பு பாதிரியார்.
எல்லாம் உன்னால்தான் என சொல்ல நினைத்தாலும் சொல்லவில்லை.
‘மீண்டும் ஒரு புள்ளியில் இராஜாத்தியால் சந்திக்கிறோம் இல்லையா? பாதர்.’
கைக்கடிகாரத்தை பார்த்துவிட்டு இன்று இரவு எல்லோரினதும் நித்திரை கலைந்துவிட்டது. கர்த்தர் ஆசீர்வதிகட்டும். நாளை சந்திப்போம் எனச் சொல்லி விடைதந்தார்.
888888
இராசாத்தியால் சிறு வயதில் உருவாகிய பிரச்சனை என்னை நகரப்பாடசாலைக்கு அனுப்பியதுடன் பல்கலைக்கழகப் பட்டதாரியாக்கியது. அதன் பின்பும் ஒரு பிரச்சனை வந்தது. அது ஜாடிக்குள் இருந்து வந்த பூதமாக பிரமாண்டமாக எழுந்து என்னை கதிகலங்க வைத்து சரியாக ஒரு கிழமையில் மீண்டும் ஜாடிக்குள் அடங்கிக்கொண்டது. பல்கலைக்கழகத்தில் பட்டதாரியாகி நானும் கண்டிப்பகுதியில் ஆசிரியராகினேன். உப்புக்காற்றை சுவாசித்த எனக்கு ஈரலிப்பான மலைக்காற்று உடலை தழுவது ஆரம்பத்தில் குளிராக இருந்தது. பிற்காலத்தில் அதையே பலகாலம் அனுபவிக்கவேண்டும் எனநினைக்க வைத்தது. மிளகுக்கொடிகள் தழுவியபடி வளர்ந்த அடரத்தியான மரங்கள் மத்தியில் அந்த பாடசாலை அமைந்திருந்தது. மலையக மாணவர்களுக்கு கல்வி புகட்டும் பாடசாலை.
அது ஒரு மழைக்காலம.
பாடசாலையை சுற்றிப் பெய்த மழையால் சிறிய அருவிகள் உருவாகி பாடசாலையின் பின்பகுதியில் பாறைகளின் மேல் விழுவது பறந்து செல்லும் விமானத்தின் ஓசையை ஒத்திருக்கும். அப்படியான ஒரு மதிய இடைவெளியில் தலைமை ஆசிரியரது அறைக்குச் சென்றபோது ஒரு கடிதத்தை தந்தார். அந்தக் கடிதத்தில் உள்ள முகவரி எழுதிய கையெழுத்தைப் பார்த்ததும் அம்மாவுடயதுதெனத் தெரிந்து. அம்மாவினது எழுத்து குண்டுமணிகளை கோர்த்தது மாலைகோத்தது போன்றது. ஆவலுடன் எடுத்து உடைத்தபோது நான் வாழ்க்கையில் எதிர்கொள்ளாத விடயமாக இருந்தது. படித்ததும் என்ன செய்வது என்று திகைப்பாக இருந்தது
‘அன்பு மகனுக்கு
இது மகனுக்கு தாய் எழுதும் விடயமல்ல எனத் தெரிந்தாலும் எழுதுகிறேன் எனது உடல்நிலை உனக்குத் தெரியும். அதில் எதுவித மாற்றமும் இல்லை.
இப்பொழுது உனது அப்பாவைப் பற்றியது. அவர் இராஜாத்தியின் வீட்டுக்கு அடிக்கடி போய்வருகிறார். இந்த வயதில் அவருக்கு பொம்பிளை தேவையா? இல்லை ஏதோ மயக்கத்தில் திரிகிறாரா? இராஜாத்தி ஏதாவது தொடுசல் வைத்திருக்கிறாளோ? இதை நான் எழுதுவதன் காரணம் அப்பாவைப் பற்றி முறைப்பாடாக அல்ல. ஏற்கனவே ஐந்து பிள்ளைகளைப் பெற்றேன் என்ற திருப்தியோடு நான் போய்ச் சேர்ந்து விடுவேன். மற்றவர்கள் மூலமாக உனது அப்பாவைப்பற்றி நீ கேள்விப்படுவதன் முன்பே உனக்குத் தெரியவேண்டும் என்பதால் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். மென்மையான மனத்தையுடய உனக்கு இது கடினமாக இருக்கும் என்பது எனக்குத் தெரியும். எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அதிர்வுகளுக்கு முகங்கொடுக்கக் கூடியவனாக மூத்தவனாக நீ இருக்கவேண்டும் என்பதால் இதை எழுதுகிறேன்.
உனது சுகத்தைப் பார்த்துக் கொள்.
அன்புடன் அம்மா’
படித்தபின் என்ன செய்வது என்று தெரியவில்லை. அம்மா அதை எதிர்பார்க்கவில்லை என்றாலும், என்னால் அப்பாவிடம் இதைப்பற்றி பேசமுடியுமா?
இது நடந்த ஒரு கிழமையின் பின்பு மீண்டும் ஒரு கடிதம் அம்மாவிடமிருந்து வந்தது.அதில் இருந்த விடயத்தில் உள்ளவை மேலும் வியப்பைக் கொடுத்தது.
‘என்னைப் பார்த்து உடல் நலம் விசாரிக்க இராஜாத்தி வந்தபோது அவளோடு எரிஞ்சு விழுந்தேன்.
‘ஏன் மச்சாள் என்ன நடந்தது?’
‘எனது குடும்பத்தை ஏன் அழிக்கிறாய்? நான் என்ன பாதகம் செய்தேன்?’
‘நீ என்ன சொல்கிறாய்? நான் நிரபராதி. எதுவும் அறியதவள். குறைந்தபட்சம் என்ன விடயம் எனச் சொல்லிவிட்டு பேசு.’
‘அப்ப ஏன் உன்னிடம் என் புரிசன் வரவேணும்?’
‘வாத்தியாரை சந்தேகிக்கிறாயா? என்னை சந்தேகிப்பதில் உண்மையிருக்கலாம். ஆனால அது அப்பாவி.எனது மகனை வெளிநாடு அனுப்புவதற்கு உதவி கேட்டேன். அதுவும் காசு பணமில்லை. அவரிடம் படித்த ஒருவன் ஏஜென்டாக இருக்கிறான். அவனிடம் பேசுவதற்காகவும் அதன்பின்பு மகன் மலேசியாவில் விடப்பட்டபோது மீண்டும் அவரது உதவி கேட்டேன்.உன் வீட்டில் வந்து பேசத் தயக்கமாக இருந்தேன். அதனால் வாத்தியார் வந்தார்.’
‘அவர் ஏன் அதை எனக்கு சொல்லவில்லை?’
‘சொன்னால் நீ என்ன சொல்லியிருப்பாய்?’
‘நான் இன்னமும் சிலநாளில் இறந்து விடுவேன். எனது சந்தேகத்தை நீக்குவாயா?’
‘சொல்லு’
‘நேரடியாகவே கேட்டுவிடுகிறேன். உனது மகன் அவருடையதா?
‘மச்சாள் நான் உனக்கு சொல்கிறேன்.என்னைப் பொறுத்தவரை நாலு பெட்டைளை பெத்துவிட்டு ஆண்பிள்ளையில்லாமல் தவித்தேன். அதிலை மூத்ததுகள் இரண்டும் சிவப்பாக இருந்ததால் யாராவது பிடித்துக்கொண்டு போவார்கள் என எனக்கு நம்பிக்கையிருந்தது. மற்றய இரண்டும் என்ன செய்கிறது? குறைந்தது ஒரு ஆம்பிளைப் பிள்ளையை பெத்தால் அவன் ஏதோ அரை வயிற்றுக்கு பெட்டைகளுக்கு உணவளிப்பான் என நினைத்து பலரை அணுகினேன் எதுவும் சரி வரவில்லை.வாத்தியாரை கூட அசைத்துப் பார்த்தேன். அந்த மனிசன் திரும்பிப் பார்க்கவில்லை. கடைசியில் எனது மூத்த புருசன் மகள்மாரைப் பார்க்க வந்தபோது ஏற்பட்ட தொடர்பில் மகன் பிறந்தான். அந்த மனிசன் சிலநாளில் மண்டையைப் போட்டுவிட்டது. நான் ஏதாவது சொல்லி உலகத்தை நம்ப வைக்கமுடியுமா? உனக்கு மட்டும் சொல்கிறேன் நான் படுத்தவன் ஒருவனும் எனக்கு பணம் தரவில்லை. அதேபோல ஆசைப்பட்டோ உடல்த் திமிரிலோ படுக்கவில்லை. உனக்கு ஐந்து ஆப்பிளைப் பிள்ளைகள். அதன் அருமை தெரியாது. ஆனாலும் ஒரு பயல் பெத்தாலும் அவன் நாலு பெண்களையும் என்னையும் பிரான்சுக்கு கூப்பிட ஒழுங்கு பண்ணிவிட்டான்.தாயாக நான் பெருமைப்படுகிறேன். நீ புருசனது உழைப்பில் சாப்பிட்டு பிள்ளைகளைப் பெத்து வளர்த்தனி.நான் ஐந்து பிள்ளைகளுக்கும் உழைத்து சாப்பிட்டு அதுகளுக்கும் கொடுத்தனான். உலகம் என்ன சொன்னாலும் எனக்கு கவலையில்லை. நீ என்னை நம்பிறதும் நம்பாமல் விடுவதும் உனது விருப்பம். நானும் கொஞ்சநாள் வெளிநாட்டில பிள்ளைகளோடு இருந்துவிட்டு வருவம் என முடிவு செய்திருக்கிறேன்.
அவளது முகத்தை வைத்து அவள் உண்மை சொல்கிறாள் என்பது புரிந்தது. நீ வீட்டிற்கு வந்துவிட்டுபோ உன்னைப் பார்க்க ஆசையாக இருக்கிறது.’
88888888
மறு நாள் ஊர்கூடி இராஜாத்தியை புதைத்து அங்கு “ஓரு தாய் உறங்குகிறாள்” என எழுதப்பட்ட கல் வைக்கப்பட்டது. இராயப்பு பாதர் அருகில் வந்து ‘இன்று நான் நிம்மதியாக உறங்குவேன்’என்று எனது முதுகில் தட்டிவிட்டு சென்றார்.
மறுமொழியொன்றை இடுங்கள்