என் எஸ் நடேசன்
உதயம் APRIL 2006
திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் அம்மா ஓ-க பு—–டை என்ற தகாத வார்த்தையால் பிரித்தானிய பாராளுமன்றத்தில் வைத்து தமிழ் ஈழ மதியுரைஞர் பாலசிங்கத்தால் பேசப்பட்டவர் என்ற செய்தி அங்கு உடனிருந்த ஜெயதேவனால் ஐலண்ட் பத்திரிகைக்கு கூறப்பட்டு உதயம் பத்திரிகையிலும் மறு பிரசுரமாகியது.
செல்வம் அடைக்கலநாதன் 86ல் ஒருநாள் டெல்லியில் ஒரு ஹொட்டேலில் (அசோக்காவாக இருக்கலாம்) சந்தித்தேன். புலிகளால் சிறிசபாரட்ணம் கொலை செய்யப்பட்ட பின் செல்வம் பதவி ஏற்று இருந்த நிலையில் இந்திய அரசாங்கத்தால் அழைக்கப்பட்டு உமாமகேஸ்வரன், பிரபாகரன், பத்மநாபா, பாலகுமாருடன் அருகருகே அறைகளில் தங்கவைக்கப்பட்டிருந்தார். அந்த காலகட்டத்தில் செல்வம் என்னுடன் பேசவில்லை. மேலும் புலிகள் தலைவர் பிரபாகரனது அறைக்கு அருகில் தங்கி இருந்தார். அந்த சூழ்நிலையில் எப்படி பேசமுடியும்?
இப்படி நான் கேள்விப்பட்ட இரா.சம்பந்தனையும் அறிமுகமாகி அறிமுகமாகாத செல்வம் அடைக்கல நாதனையும் மெல்போனில் சந்திக்கும் சந்தர்ப்பம் சமீபத்தில் ஏற்பட்டது.
அந்த சந்திப்பில் இரா. சம்பந்தர் ‘சிங்களவரை நம்ப முடியாது. நாங்கள் சண்டைபிடிக்கவேண்டும்” என்று வலியுறுத்தி கூறினார்.
அவ்வாறு சம்பந்தன் கூறியது, இலங்கை வானொலியில் அன்றைய பாடல் நிகழ்ச்சியில் ஒலிபரப்பப்படும் மறைந்த பாடகர்களின் பாட்டுகள்போல் இருந்தது.
என்னடா கோழி கூவிற வயசில் இதைத்தான் தளபதி அமிர்தலிங்கம் ஐயாவும் சொன்னது. இடையில் இரத்த திலகங்களை பெற்றுக்கொண்ட உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தனும் சொன்னது. சிறுவயதாக இருந்தால் விசில் அடித்து ஒன்ஸ்மோர் சொல்லி இருக்கலாம்.
நான் கேட்டுக் கொண்டிருந்தேன், பொறாமையாக. மேலும் பலர் கூர்ந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
சில நேர இடைவெளியில், ‘வெளிநாட்டுத்தமிழரின் மனந்திறந்த கருத்துகளை கேட்க விரும்புகிறேன்” என்று கூறினார்.
நான் நினைத்தேன், மனிசனுக்கு வாய்தவறி வந்து விட்டது வார்த்தைகள்.
‘இப்போது நடந்த ஜெனீவா பேச்சு வார்த்தைகளை பற்றி உங்கள் கருத்து என்ன? என்றேன். ‘இதனால் எதுவும் பிரயோசனம் வராது” என்றார் சம்பந்தன். ‘உங்கள் கருத்துக்கள் இந்த பேச்சுவார்த்தையில் சேர்க்கப்பட்டதா?” என்றேன் மீண்டும்.
‘இல்லை ஆனால் பிரபாகரனுடன் தொடர்பில் உள்ளேன்.
இந்த இடைவேளையில் பலர் பேசினார்கள் அவர்களது கருத்துகளை நான் இங்கு தர போவதில்லை”. என்மனத்தில் நினைத்தேன். பிரபாகரனுக்கு உங்களது தொடர்பை விட ஆஸ்திரேலியாவில் உதயத்தை திருடும் சிலருக்கு அதிகமாக இருக்கும்.
வாய்பேசவில்லை மனத்தில் மட்டும் நினைத்தேன்.
தற்பொழுது வடக்கு கிழக்கில் வாழும் தமிழருக்கு மனத்தில் நினைக்க மட்டுமதானே உரிமை உள்ளது. அந்த உரிமையை நானும் உபயோகித்தேன்.
திரும்பவும் எனக்கு சந்தர்பம் கிடைத்தது.
‘கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினராகிய உங்களிடம் இதை கேட்க விரும்புகிறேன். கிழக்கு மாகாண தமிழர் பலருக்கு வடக்கு மாகாணத்துடன் இணைவதற்கு விருப்பமில்லையே.”
‘அப்படி இல்லை என்று எனக்குத் தெரியும். கிழக்கு மாகாண மக்களை பற்றி தொடர்ச்சியாக எங்களுக்கு ஆதரவு தருகிறார்கள்.”
‘நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொண்டாலும் 65 சதவீதமான மக்கள் தமிழர் அல்லாதவர்கள் ஜனநாயக முறையில் எப்படி இது சாத்தியமாகும்.”
‘சுதந்திரம் பெற்றகாலத்தில் கிழக்குமாகாணத்தில் தமிழர்களே பெரும்பான்மை. எனவே தீர்வு நோக்கி வாக்கெடுப்பு நடத்தினால் 1948ம் ஆண்டுக்கு பின் வந்தவர்கள் வாக்களிக்க முடியாது” என்றார்.
‘நல்ல கருத்துதான். சில பென்சன் எடுக்கும் வயதுடையவர்கள் தான் வாக்கு போடமுடியும். அதுவும் தீர்வு சிலகாலம் சென்ற பின் வந்தால் இறந்தவர்கள் மட்டும் தான் வாக்களிக்க முடியும்”.
இதையும் நான் சொல்லவில்லை. எனக்குள் அரசியல்வாதிகள் பேச்சை நினைத்து சிரித்தேன்.
இரா. சம்பந்தர் ஒருகட்டத்தில் சிங்களவர் போல் பேசுகிறேன் என்றார்.
‘நான் உண்மை நிலையை பேசுகிறேன். மற்றவர்கள் விரும்பும்படி பேசுவதற்கு நான் அரசியல்வாதி இல்லைதானே” என்றேன்.
‘நீங்கள் வெளிநாட்டில் இருந்து பேசுகிறீர்கள்”- என்றார்.
‘உண்மைதான் இலங்கையில் இருந்து பேசினா உயிர் இராதே” என்றேன்”.
இப்படி ஒளிவு மறைவு இல்லாமல் கருத்துகளை மற்றவர்களும் பேசியபோது கருத்துகளை சகிக்க முடியாத ஒருவர் ‘உங்கள் கதைகளை கேட்கமுடியாது” என்று ஜனநாயக முறையில் வெளிநடப்பு செய்தார் அந்த ஜனநாயகவாதி.
மறுமொழியொன்றை இடுங்கள்