இரத்மலானை அகதி முகாமில் இருந்து கப்பல் மூலமாக யாழ்ப்பாணம் வந்து சேர்ந்த இராசம்மா குடும்பத்தினர் நண்பர்கள் உதவியுடன் சுண்டிக்குளியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வாழத்தொடங்கினர். கலவரம் ஓய்ந்தும் மூன்று மாதங்கள் லீவில் நின்ற இராசநாயகம் மீண்டும் கொழும்பு வேலைக்கு வரவேண்டியதாயிற்று. சோபா சுண்டிக்குளி பெண்கள் பாடசாலையிலே சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தாள்.
கலவரத்துக்குச் சில மாதகாலம் முன்புதான் ஹட்டன் நாஷனல் வங்கியில் வேலைக்கு சேர்ந்திருந்தான் கார்த்திக். ஏஜன்சியில் காசுகட்டி வெளிநாட்டுக்கு அவனை அனுப்புவது பற்றி இராசநாயகம் மனைவியிடம் பேசியிருந்தார்.
கார்த்திக் இரத்மலானை அகதி முகாமில் உணவுகள் பரிமாறுதல், உடைகள் விநியோகித்தல் என்று தொண்டு வெலைகள் செய்தான். இறப்புகளையும, காயங்களையும், பட்டினியையும் அங்கு முதன்முதலாக பார்த்தான். மனிதர்கள் மனிதர்களுக்கு செய்த கொடுமைகளை சிலவேளைகளில் இரைமீட்டுப் பார்த்தான்.
இயற்கையால் ஏற்பட்ட அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்கள் அகதிகளாகும்போது அங்கு இயலாமையும் இறையவனின் கொடுமை என்ற ஆற்றாமையும் இறுதியில் நாங்கள ஏதோ புண்ணியத்தால் தப்பிவிட்டோம் என்று ஒரு மனஆறுதலும் ஏற்படும். மனிதர்களால் கட்டவிழித்து விட்ட கலவரங்களில் பாதிக்கப்ட்டவர்களுக்கு மனத்தில் பழிவாங்கும் ஆவேசமும், சிங்கள இனத்தவரின் மேல் கொழுந்து விட்டெரிவதைப் பார்த்தான். இந்தக் கொடுமைகள், தமிழ் பேசும் இனத்தவர் என்றதால் திட்டமிட்டு இழைக்கப்பட்டது. அரசாங்க காவல் படைகளான பொலிஸ், இராணுவம் தமிழ்மக்களுக்கு எந்த பாதுகாப்பும் அளிக்காதது மட்டும் அல்ல, பல இடங்களில் அநியாயாத்துக்கு துணைபோனது என்பதற்கு ஆதாரமான பல சம்பவங்களை அறிந்தான். கொழும்புத் தமிழர்கள் காலம்காலமாக வாக்களித்த ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கம் அமைந்திருந்த காலத்திலேயே இந்த சம்பவங்கள் நடந்தன. ஏராளமான தமிழ் முதலாளிகள், அரசாங்க அதிகாரிகள், உயர்மட்டத்தில் செல்வாக்கோடு இருந்த தமிழர்கள் பலரை அகதிமுகாமில் கார்த்திக் பார்க்க நேர்ந்தது.
தெருவில் வைத்துக் கொலை செய்யப்பட்டவர்கள், பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்ட பெண்கள், எரியும் நெருப்பில் பொசுங்கிய சிறுவர்கள் எனப்பல விடயங்கள் கார்த்திக்கின் இரத்தத்தை கொதிப்படைய வைத்தது.
ஆத்திரம், கோபமாகி பின்பு பழிவாங்கும் வன்ம உணர்வாக அவனது மனத்தில் இரண்டற கலந்துவிட்டது
இருபத்திரண்டு வயது இளைஞனான கார்த்திக் உடல் முழுவதும் நெருப்பை தேக்கி வைத்துக்கொண்டு நித்திரை இழந்து, நிம்மதி இழந்து இரத்மலானை அகதி முகாமிலும், பின் யாழ்ப்பாணத்திலும் அலைந்தான். உடம்பிலே ஏதோ அமானுயமான சக்தி புகுந்து அவனை இயக்கியது போல் அவன் அமைதியிழந்தான்.
இந்தியாவில் தமிழ் இளைஞர்களுக்கு பயிற்சி கொடுப்பதாகப் பத்திரிகைகளில் தகவல் வந்தது. பாடசாலை மாணவர்கள் புத்தகங்களுடன் மறைந்து விடுகிறார்கள். சில வகுப்புகள் பாடசாலையில் இருந்து காணாமல் போய்விட்டது. யாழ்ப்பாணயம் எங்கும் பரவலாக இளைஞர்கள் இயக்கத்தில் இணைவதாக பேசப்பட்டது. கார்த்திக்கும் சிங்கள இராணுவத்தை பழிவாங்க இதுவே ஒரேவழி என முடிவு செய்தான். அவனுக்கு மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியவில்லை. கொழும்பில் பிறந்து வளர்ந்ததால் யாழ்ப்பாணத்தில் நண்பர்களோ, தொடர்புகளோ இருக்கவில்லை. இயக்கங்களோடு ஏதாவது தொடர்பு ஒன்று கிடைக்காதா என ஏங்கினான்.ஸ்ரீ லங்கா ராணுவத்தினரோடு சண்டை இடுவதாக கனாக்காண முயற்சித்தான்.
அவனிடம் இருந்து நித்திரையே பல மாதங்களாக விடைபெற்றுவிட்டதே!. எப்படீ கனவு வரும்?
வெள்ளிக்கிழமை காலையில் நல்லூர் கோயிலுக்கு சென்று அப்படியே பருத்தித்துறை ரோட்டால் மனம் போனபடி சைக்கிளை மிதித்தான். குனிந்தபடீ இரண்டு கிலோ மீட்டர் மிதித்தவன் நிமிர்ந்து பார்த்தபோது கல்வியங்காட்டு சந்தைக்கு வந்து விட்டது தெரிந்தது. சந்தையருகே சென்றவனுக்கு மீன் சந்தைப் பகுதியில் கூடிநின்ற ஒரு கூட்டம் கவனத்தை ஈர்த்தது..
அங்கு ராணுவ உடையில் சில இளைஞர்கள் நின்றார்கள். தொப்பியும் துப்பாக்கியும் பார்ப்பதற்கு கம்பீரமாக இருந்தன.
அவர்களுக்கு மிக அருகில் சென்று கார்த்திக் “அண்ணே, இங்கே என்ன நடக்கிறது?” என்று நடுத்தரவயதானவரைக் கேட்டான்.
“இயக்கத்துக்கு ஆள் சேர்க்கிறார்கள் தம்பி.”
“எந்த இயக்கம்”;.
“ரெலோ இயக்கம்தான். வேறு எந்த இயக்கம் இந்த ஊரில்”?
“யார் தலைவர்”?
“சிறி என்று எங்கட ஊர்ப்பொடியன். நல்ல சிவப்பு நிறம். உயரமான ஆள். பலகாலமாக இயக்கத்தில் இருக்கின்றான். குட்டிமணியையும், தங்கத்துரையையும் சிங்களவர்கள் கொலை செய்தபிறகு இவன்தான் இயக்கத்தை வழி நடத்துகிறான் “;.
குட்டிமணி – தங்கதுரையை வெலிக்கடையில் கொலை செய்தப்பட்டதையும் , குட்டிமணியின் கண்களை தோண்டியதையும் பத்திரிகையில் படித்ததும் மற்றவர்களிடம் கேட்டும் கார்த்திக் அறிந்திருக்கிறான். கொழும்பில் சிங்கள-முஸ்லிம் மாணவர்களோடு படித்து பின்பு பாங்கில் வேலையில் சேர்ந்து இனமத பேதமின்றி எல்லோருடனும் பேசிப்பழகியவன். வீட்டில் பெருமளவு ஆங்கிலமும் ,சிறிதளவு தமிழும் பேசிய குடும்பத்தில் பிறந்தவன். வெள்ளிக்கிழமை வெள்ளவத்தைப் பிள்ளையார் கோவிலுக்கு நெற்றியில் பொட்டு வைத்துக் கொண்டு தாயார் போவதைத் தவிர தமிழர் என்ற எந்த அடையாளமுடம் இல்லாதது இவனது குடும்பம். யாழ்ப்பாணத்தவர்கள் வீணாக இனபேதத்தை வளர்க்கிறார்கள். இவர்களால் கொழும்புத் தமிழரும,; மலையகத் தமிழரும் வீணாக கஸ்டப்படுகிறார்கள் என்ற அர்த்தத்தில் பேசுவதைக் கேட்டிருக்கிறான்.வாழ்வின் சகல விடயங்களிலும் தமிழ் என்ற அடையாளம் தேவையில்லாமல் இருந்தது. இராசநாயகம் குடும்பம் யாழ்ப்பாண அடியானாலும், இளம்வயதிலேயே கொழும்பு வாழ்க்கையில் ஐக்கியமானவர்கள். இப்படியான குடும்பத்தில் வந்த கார்த்திக், இனமத பேதங்களை தங்கள் வாழ்வுக்கு அப்பாற்பட்டதாகத் தோன்றியதில் வியப்பில்லை. இவர்களுக்கு 83ஜலை மாதம் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சோபா காடையர்களால் அம்மணமாக்கப்பட்டது, வீடு எரிந்தது, அகதி முகாமில் வாழ்ந்தது போன்ற விடயங்கள் குரோதத்தையும், வெறுப்பையும் அரசாங்கத்தின் மீதும் சிங்கள இனத்தின்மீதும் கார்திக்கின் மனதில் ஏற்படுத்தியது இயற்கையானது.
கார்த்திக்கால் மீண்டும் வேலைக்கு போய் சிங்களவர் மத்தியில் சீவிப்பது நினைக்கக் கூடமுடியாமல் இருந்தது. இராசநாயகத்தால் மகனின் மனப்பாதிப்யையும் உணர்வுகளின் ஓட்டத்தையும் புரிந்து கொள்ள முடிந்தது. எவ்விதத்தில் ஆறுதல் சொல்லலாம் என்றுதான் அவருக்கு தெரியவில்லை. வெளிநாட்டுக்கு அனுப்பி ஒரு சூழ்நிலையில் மாற்றம் கொண்டுவரமுடியும் என நினைத்தார். அவருடன் வேலை செய்தவர்களும் கனடா, அவுஸ்திரேலியா, ஐரொப்பா என சென்று விட்டார்கள். இன்னும் இரண்டு வருடத்தில் இளைப்பாற இருப்பதால் இலங்கையிலேயே தனது காலத்தை கழிப்பது என்கிற தீர்மானத்திற்கு வந்திருந்தார்
இவர்களின் குடும்பத்தில் பாதிப்பு மிகக் குறைவாக ஏற்பட்டது இராசம்மாவுக்குத்தான். இவளது உலகம் கணவரும் இரண்டு பிள்ளைகளும் மட்டும்தான். இவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாததால் வீடு எரிந்ததைப் பற்றி அக்கறைப்படவில்லை. இதுதான் தாய்மையா? பெண்மையா? இவர்களது சிறு உலகம் புறக்காரணங்களால் பாதிக்கப்டாமல் இருப்பதன் மூலம் தொடர்ச்ச்pயாக மனித வர்க்கத்தின் தொடர்சியை தேர்வடமாக இழுத்து செல்கிறார்களா? இது பெண்களுக்கு மட்டும் உரிய உயரிய கணமா?
சமூக இயலாளர் கருத்துப்படி, மற்றைய பெண் மிருகங்களிலும் இந்த அடிப்படைக் குணம் காணமுடியும். பெண் மிருகங்கள் தங்களது குட்டிகளை பாதுகாக்க மட்டுமே போரிடும். மற்றப்படி சண்டைக்களுக்கே போவதில்லை. ஆண்மிருகங்கள் இடத்துக்காக, காதலுக்காக, உணவுக்காக என பல காரணங்ககளுக்காக சண்டை போடும் இயல்பின.
சோபாவை சுண்டிக்குளிப் பாடசாலையில் சேர்த்ததும் இராசம்மாவின் கவலை தீர்ந்தது. ஆரம்பத்தில் நட்புபேண தெரிந்தவர்கள் இல்லாவிட்டாலும் பின்பு சோபாவின் சகமாணவிகளின் பெற்றோருடன் நட்பை வளர்த்துக் கொண்டாள். திருமணமாகிய பின்பு தான் கொழும்பு வாழ்க்கை என்றாலும் நகரத்துக்கு உரிய ஒட்டியும் ஒட்டாத தன்மையும் இராசம்மாவுக்கு இருந்தது. காணும் போது முகம் நிறைய சிரித்துப் பேசுவதும், அவர்கள் கண்ணில் மறைந்ததும் அவர்களது நினைவுகளை தொலைத்து விடும் நாகரிகத்தன்மை இயற்கையாகவே கொண்டிருந்தாள். மற்றவர்கள் விடயங்களைப் பேசுவதும், சம்பந்தமில்லாத விடயங்களில் மூக்கை துளைக்கும் பழக்கமும் எப்பொழுதும் கிடையாது ராசம்மாவுக்கு.
——-
உயரமான ராணுவ உடுப்போடு நின்ற ஒருவரை அணுகினான் கார்த்திக். மனதில் ஒருதடை ஏற்பட்டு வார்த்தைகள் அடைத்துக் கொண்டன..
‘இவர்களை எப்படி அழைப்பது’. இலங்கை ராணுவத்தினர் துப்பாக்கியுடன் நிற்கும்போது சேர் என அழைப்போம். இங்கே எனது இன விடுதலைப் போராளிகளை ஏன் சேர் என அழைக்க வேண்டும்?.
உடையும், ஆயுதமும் மரியாதையை வரவழைத்தன.
“அண்ணே நீங்கள் எந்த இயக்கம்.? “
“நாங்கள் ரெலோ” இவ்வாறு கூறும்போது இறுமாப்பு தொனித்தது.
“நான் இயக்கத்தில் சேர விரும்புகிறேன்.”
“அப்படியோ” என கூறி வேறு ஒருவரை அழைத்து வந்து “அண்ணே இவர் இயக்கத்தில் சேர விரும்புகிறாராம்”. என்றார் முந்தியவர்.
“எந்த ஊர்”? என்றுகேட்டார் இரண்டாமவர்.
சுண்டிக்குளி. கலவரத்துக்கு முன்பு கொழும்பில் இருந்தனாங்கள். இப்ப அகதியாக யாழ்ப்பாணம் வந்திருக்கிறோம்”“
“விலாசத்தை தாருங்கோ, வந்து சந்திக்கிறோம்.”
“இல்லை. அண்ணை வீட்டை வரவேண்டாம். அம்மாவுக்கு தெரிய வேண்டாம்.”
“அடுத்தகிழமை இந்த நேரம், இதே இடத்தில் சந்திப்போம்.” எனக் கூறிவிட்டு வாகனத்தில் ஏறி மறைந்தனர்.
கள்ளியங்காடு சந்தையில் இருந்து வரும் வழியில் சங்கிலியன் தோப்பு வந்ததும் சைக்கிளின் வேகம் குறைந்தது.
‘நாங்கள் அரசு வைத்து எங்களை ஆண்டோம். இப்பொழுது சிங்களவனிடம் அடி உதை வாங்கும் நிலைக்கு வந்துவிட்டோம். தமிழர்களின் போராட்டத்தில் எனது பங்கை நானும் ஏற்க வேண்டும். அம்மாவும் தங்கச்சியும் அப்பாவும் கவலைப்படுவினம். எனது பயிற்சி முடிந்ததும் அவர்களை சமாதானப்படுத்துவேன்.’ வழி நெடுக இப்படியான எண்ணங்களோடு வீடு வந்து சேர்ந்தான்.
அடுத்த ஞாயிற்று கிழமை வரை காத்திருப்பது மிகவும் கஸ்டமாக இருந்தது. எந்த விடயத்திலும் கவனத்தை செலுத்த முடியவில்லை. வீட்டில் உள்ள ரெலிவிசனை கூட பார்க்க முடியவில்லை. இதேவேளை வீட்டை விட்டு வெளியேறி எங்கும் சுத்தவும் முடியவில்லை. வீட்டுக்குள் சுற்றிசுற்றி நடந்தான்.
“ஏன்டா குட்டி போட்ட நாய் மாதிரி சுத்தி சுத்தி திரிகிறாய்? “ என ராசம்மா கேட்டாள்.
புத்தகங்கள், சினிமா, வீடியோக்கள் என ஓரளவு நேரம் நகர்ந்தது. பெருமபாலான நேரத்தை கட்டிலில் படுத்தபடி கழித்தான். ராணுவத்தை சுட்டுவிழுத்துவதும் இராணுவ உடுப்பு உடுத்தி மரியாதையுடன் மக்கள் மத்தியில் நடப்பதும், சிங்களவர்களுக்கு சமமாக தைரியம் பெற்று 83ம் ஆண்டுக் கலவரத்தில்; ஈடுபட்ட காடையரை உரியமுறையில் தண்டிப்பது போன்ற காட்சிகள் அவன் மனக்கண்களில் விரிந்தன.
தலையணையின் கீழ் உள்ள தன் கடிதத்தைத் திரும்பவும் படித்தான் கார்த்திக்.
அன்புள்ள அம்மா, அப்பா, தங்கச்சி சோபா அறிவது,
இந்தக் கடித்தை படிக்கும்போது நான் உங்களை விட்டு வெகுதூத்தில் இருப்பேன். கொழும்பில் பிறந்து றோயல் கல்லூரியில் படித்து வந்த நாட்களில் நான் தமிழன் என்பதை மறந்து வாழ்ந்தேன். நீங்களும்கூட என்னிடம் ஆங்கிலத்தில் பேசுவதன் மூலம் நாங்கள் கொழும்புவாழ் தமிழர் என்ற தனித்துவத்தை பிரகடனப்படுத்தினீர்கள். சிங்களவரோடு சிங்களத்தில் பேசி அவர்களுக்கு சமமமானவர்கள் என்று நினைத்தோம். மற்றைய பிரதேச தமிழர்களிலும் நாங்கள் உயர்ந்தவர்கள் நாகரிகத்தில் மேலானவர்கள், பண்பானவர்கள். எங்களை இனமத வேறுபாடுகள் பாதிக்காது என்ற கற்பனை உலகத்தை சிருஸ்டித்துக் கொண்டு வாழ்ந்தோம். அப்பாவின் சிங்கள நண்பர்களேஇ எங்கள் நண்பர்களாக நினைத்து அவர்களின் திருமணங்கள், பிறந்தநாள் விழாக்களுக்கு சென்று மகிழ்ந்தோம். என்னோடு படித்த சிங்கள நண்பர்களை உங்கள் பிள்ளைகளாக பார்த்தீர்கள்.அவர்களும் எங்களை வேறுபாடு காட்டாமல் உபசரித்தார்கள்.
ஜ+லை 83 கலவரம் எங்களுக்கு அதிர்ச்சியைத் தந்தது மட்டுமல்ல, எங்களை சுற்றி நாங்கள் உருவாக்கியிருந்த கற்பனை வலைப்பின்னலை கிழித்து எறிந்தது. ஏன் எங்கள் வீட்டை எரித்தார்கள்?. அப்பா சிறுகசிறுக சேமித்து கட்டிய எங்கள் வீடு, தளபாடங்கள், சிறுவயது போட்டோக்கள், அம்மாவின் கூறைசேலை என்று எல்லாம் புகையாகிப்போனபோது அயலவர்கள் வேடிக்கை பார்த்தனர். காடையர்கள் எரித்தார்கள் என்றால் ஏன பொலிசும் இராணுவமும் தடுக்கவில்லை. இதில் இருந்து தெரிவது என்ன? நாங்கள் வேற்று மனிதர்கள். அந்நியமானவர்கள் என்பதுதானே? சோபா எவ்வளவு கஸ்டப்பட்டு அந்த மிருகங்களிடமிருந்து உயிர் தப்பினாள். எத்தனை தமிழ் இளம்பெண்கள் கொடூரமாக துன்புறுத்தப்பட்டார்கள். எத்தனை பேர் கொழுத்தப்பட்டார்கள். இப்படி ஒரு நிகழ்ச்சி திரும்பவும் நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் உண்டு?. இந்தக் கொடுமையை செய்தவர்கள் இன்றும் அரசில் இருக்கிறார்கள். இந்த நிலையில் நானும் அப்பாபோல் கொழும்புக்கு போய் வேலை செய்யமுடியாது. எனது இனத்துக்காகவும், ஏன் எனக்காகவும் நான் விடுதலை இயக்கத்தில் இணைந்து ஆயுதம் ஏந்தி போரிட போகிறேன் உயிருடன் இருந்தால் தமிழ்ஈழத்தில் சந்திப்பேன். இல்லையேல் இனத்துக்காக வீரமரணம் அடைவேன். தயதுசெய்து என்னைத் தேடவேண்டாம்.
என்றும் உங்களை மறவாத
கார்த்திக்.
அந்த ஞாயிற்றுக்கிழமை கடிதத்தை மடித்து தலையணையின் கீழ் வைத்துவிட்டு போனவன்தான.அம்மா அழுது குழறியபடி எங்கும் தேடினாள். இரண்டு நாள்களின்பின் கார்த்திக்கின் சைக்கிளை ஒருவன் கொண்டுவந்து தந்துவிட்டு கார்த்திக் போட்டில் ஏறி இந்தியாவிற்கு சென்று விட்டதாகக் கூறினான்.
இனிமேல் யாழ்ப்பாணத்தில் இருக்க முடியாது கொழும்புக்குப் போகவேண்டும் என ராசம்மா கணவரைக் கேட்டுக் கொண்டாள். யாழ்ப்பாணம் வந்ததே கார்த்திக் இயக்கத்தில் சேரக் காரணம் என்பது அவளது கருத்து. சோபாவின் பத்தாம் வகுப்பு பரீட்சை முடிவடைந்த பின் கொழும்பு திரும்பி போவோம் எனத் தீர்மானம் எடுத்திருந்தாள்.
சிலமாதங்களின் பின் ஒருநாள் கதவு பலமாக தட்டப்பட்டது.
இராசம்மா கதவைத் திறந்தாள். முற்றாக இராணுவ உடையில் கார்த்திக் வாசலில் நின்றான்.
எதுவும் பேசாமல் அவனை அணைத்துக் கொண்டு சிலைபோல் நின்றாள். சிறிது நேரத்தின பின்; “என்ர மகனே எங்கே போனாய்? எங்கே போய் இருந்தாய்? உன்னைக் காணாமல் எத்தனை நாள் உணவு, நித்திரை, நிம்மதி இல்லாமல் அழுது கொண்டிருந்தேன். எப்படியடா உனக்கு எங்களை விட்டுப்போக மனம் வந்தது?”. என அழுதபடி பிரலாபித்தாள்.
“இந்திய இராணுவத்தால் எங்களுக்கு பயிற்சி கிடைத்தது. வடஇந்தியாவில் தங்கி இருந்து பயிற்சி பெற்றோம். எங்களுக்கு தமிழ் ஈழம் கிடைத்துவிடும். சிறிஅண்ணை யுத்தத்திற்காக ஏராளமாக ஆயுதங்களோடு இங்கு வந்து இறங்கியுள்ளார்”;. எனப் படபடவெனப் பொரிந்து தள்ளினான்.
மகனைக் கண்ட சந்தோசமும் சிங்கள இராணவத்தின் மேல் ஏற்பட்ட வெறுப்பும் கார்த்திக்கின் வார்த்தைகளை கேட்க இனிப்பாக இருந்தது இராசம்மாவுக்கு.
“தம்பி வீட்டுக்குள்ளை வா”. தன்னை சுதாகரித்துக் n;காண்டு கண்ணீரை சேலைத்தலைப்பால் துடைத்தாள்.
“இல்லையம்மா. நான் சிறிஅண்ணையோடு ஜீப்பில் வந்தனான். அவர் உள்ளே இருக்கிறார் . ஒரு நிமிடம் என்று சொல்லிவிட்டு வந்தனான்”.
“ஒருவாயாவது சாப்பிட்டுவிட்டு போவன் அண்ணை” என்றாள் சோபா.
“தமிழ் ஈழம் கிடைத்தால் வந்து சாப்பிடுகிறேன்” என கூறிவிட்டு வாசலில் காத்திருந்த ஜீப்பில் ஓடி ஏறினான்.
இந்த சிலநாட்களில் புலி இயக்கத்திற்கும், ரெலொ இயக்கத்த்pனருக்கும் சண்டை நடக்கிறது என்று கேள்விப்பட்டு இராசம்மாவும் சோபாவும் யாழ்ப்பாணம், கொக்குவில், உரும்பிராய், கள்ளியங்காடு என தேடினார்கள். கடைசியில் ஒரு பாதி எரிந்த உடலாக கார்த்திக் கிடைத்தான். கார்த்திக்கை அடக்கம் பண்ணி அடுத்த நாளே இராசநாயகம் குடும்பத்தினர் கொழும்பு வந்து சேர்ந்தனர்.
“சிங்களவர் வீடு வாசலை மட்டுந்தான் எரித்தார்கள். ஆனால் யாழ்ப்பாணத்தவர்கள் என் பிள்ளையைக் எரித்துக் கொண்டு விட்டார்கள். சிங்களவன், தமிழன் என்ற காரணத்தினால் அடித்தார்கள். யாழ்ப்பாணத்தவர்கள் என்ன காரணத்தால் என்பிள்ளையைக் கொன்றார்கள்? என்று புலம்பியபடி இருந்தாள் இராசம்மா.
மீண்டும் வாடகைக்கு கொழும்பில் வீடு எடுத்து கொழும்பு வாழ்க்கை தொடங்கினாலும் சோபா பத்தாம் வகுப்பில் பாஸ் பண்ணவில்லை. புலப் பெயர்வும் எதிர்பாராத சோகங்களும், காரணம் கற்பிக்க இயலாத விரக்திகளும் அவளது படிப்பைப் பாதித்தன. கொழும்பில் பரீட்சை எடுக்கப் படித்துக் கொண்டிருந்த இந்தக் காலத்தில்தான் தூரத்து உறவான சந்திரனுக்கு திருமணம் பேசி நிட்சயமாகி பின் சிட்னிக்கு சோபா பயணிக்க நேர்ந்தது.
இந்த நிகழ்வுகள் பிளாஸ் பாக் போல் இருந்தது. சோபா போட்டோ ஆல்பத்தை மூடிவிட்டு நேரத்தைப் பார்த்தபோது கடிகாரம் நாலுமணி எனக்காட்டியது. சுமன் நல்லா தூங்கிக் கொண்டு இருந்தான்.
தூங்கியவனை தொட்டிலில் இருந்து தூக்கி தனது கட்டிலில் தூக்கி போட்டுவிட்டு ‘நான் மட்டும் நித்திரை வராமல் தவிக்கிறேன் கள்ளப்பயல் எப்படி நித்திரை கொள்கிறான்’. என நினைத்தவாறே லைட்டை அணைத்து விட்டுப் படுத்தாள்.
தொடரும்—-
மறுமொழியொன்றை இடுங்கள்