சிங்கள இலக்கியங்களை தமிழுக்குத்தந்த முஸ்லிம் சகோதரர்கள்.

சொல்லத்தவறிய கதைகள் – அங்கம் 05
சிங்கள மக்கள் மத்தியில் வாழ்ந்தவாறு சிங்கள இலக்கியங்களை தமிழுக்குத்தந்த முஸ்லிம் சகோதரர்கள்
தர்மபோதனை செய்யவேண்டிய தேரர்களை அரசியலுக்குள் இழுத்து தேசத்தையும் கண்டத்துள் சிக்கவைத்த சிங்களத்தலைவர்கள்
முருகபூபதி
இலங்கையில் பிரபல சிங்கள எழுத்தாளர் மார்டின் விக்கிரமசிங்கா, மாத்தறை கொக்கல என்ற பிரதேசத்தைச்சேர்ந்தவர். அவர் எழுதிய கம்பெரலிய நாவலை, தென்னிலங்கை பேருவளையைச்சேர்ந்த கலாநிதி எம். எம் உவைஸ் ” கிராமப்பிறழ்வு” என்ற பெயரில் மொழிபெயர்த்தார். கம்பெரலிய நாவல் மட்டுமன்றி, மார்டின் விக்கிரமசிங்காவின் மடோல்தூவ, யுகாந்தய முதலான நாவல்களும் திரைப்படமாகி விருதுகளையும் பெற்றன.
மடோல் தூவ நாவலை, வீரகேசரியில் பணியாற்றிய ஊர்காவற்துறையைச்சேர்ந்த கே. நித்தியானந்தன், ” மடோல்த்தீவு” என்ற பெயரில் மொழிபெயர்த்து, வீரகேசரியில் தொடராக வெளியிட்டார்.

மஹரகமையைச்சேர்ந்த தெனகம சிரிவர்தன எழுதிய குருபண்டுரு என்ற சிங்கள நாவலை, தென்னிலங்கை பண்டாரகமவைச் சேர்ந்த திக்குவல்லை கமால், குருதட்சணை என்ற பெயரில் மொழிபெயர்த்து தமிழ் வாசகர்களுக்கு வழங்கினார்.

ஹொரணையில் கும்புகே என்ற கிராமத்தைச்சேர்ந்த கருணாசேன ஜயலத் எழுதிய கொளுஹதவத்த என்ற நாவலை, புங்குடுதீவைச்சேர்ந்த, கொழும்பில் வசித்த தம்பிஐயா தேவதாஸ் ஊமை உள்ளம் என்ற பெயரில் மொழிபெயர்த்தார். இதனை வீரகேசரி பிரசுரம் வெளியிட்டது.
மினுவாங்கொடையைச்சேர்ந்த வண. ரத்னவன்ஸ தேரோ, யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த செங்கைஆழியானுடைய வாடைக்காற்று நாவலை சிங்களத்தில் அதே பெயரில் மொழிபெயர்த்தார். அத்துடன் திக்குவல்லை கமாலின் எலிக்கூடு கவிதை நூலையும் சிங்களத்தில் தந்தார்.
வந்துரம்ப என்ற சிங்களப்பிரதேசத்தைச்சேர்ந்த பந்துபால குருகே எழுதிய செனஹசின் உப்பன் தருவோ நாவலை கொழும்பில் வசிக்கும் இரா. சடகோபன் ” உழைப்பால் உயர்ந்தவர்கள்” என்னும் பெயரில் தமிழில் வரவாக்கினார்.

உசுல. பி. விஜயசூரியவின் அம்பரய நாவலை தேவா என்பவர் தமிழில் தந்துள்ளார்.
கண்டி கல்ஹின்னையைச்சேர்ந்த எஸ்.எம். ஹனிபா எழுதிய மகாகவி பாரதியின் சுருக்கமான வரலாற்றை அதே பெயரில் தெஹிவளையில் வசித்த கே.ஜீ. அமரதாஸ சிங்களத்திற்கு வரவாக்கினார்.
இந்தப்பதிவில் படைப்பாளிகளின் பெயர்களையும் அவர்கள் வாழ்ந்த ஊர்களையும் மொழிபெயர்த்தவர்களின் பெயர்களையும் அவர்களின் ஊர்களையும் குறிப்பிடுவதற்கு காரணம் இருக்கிறது.

இவர்கள் அனைவரும் இலங்கையர்! வேறு வேறு இனங்களைச்சேர்ந்தவர்களாகவும் வேறு மொழிகளை தாய்மொழியாகவும், வேறு மதங்களை ( பௌத்தம், இந்து, இஸ்லாம், கத்தோலிக்க) பின்பற்றுபவர்களுமாவர்.
இலங்கையில் தமிழர்களும் முஸ்லிம்களும் தமிழைப்பேசுகின்றனர். தமிழ்பேசும் கத்தோலிக்கர்களும் இங்கு வாழ்கின்றனர். இவர்கள் தேசிய சிறுபான்மை இனத்தவர்கள். பெளத்த மதத்தை பின்பற்றும் பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த சிங்களவர்களும் கத்தோலிக்க மதத்தைப்பின்பற்றும் சிங்களம் பேசும் மக்களும் வாழ்கின்றனர்.
இவர்கள் மத்தியிலிருந்துதான் இங்கு குறிப்பிடும் எழுத்தாளர்களையும் மொழிபெயர்ப்பாளர்களையும் நாம் பெற்றிருக்கின்றோம்.

முஸ்லிம் மக்கள், இலங்கையில் பரவலாக எங்கும் வாழ்வதனாலும் பெரும்பான்மை சிங்களவர் மத்தியில் நெருக்கமாக இருப்பதனாலும் அவர்களுக்கு சிங்களம் பேசுவதற்கும் எழுதுவதற்கும் இலகுவாக இருக்கிறது. அதனால் அவர்கள் மத்தியில் வாழும் மனிதநேயம் படைத்த முஸ்லிம் எழுத்தாளர்களும் மொழிபெயர்ப்பாளர்களும் சிங்கள இலக்கியங்களை நேசித்து தமிழுக்குத்தருகின்றனர். அவ்வாறே சில தமிழர்களும் சிங்களவர்கள் சிலரும் இனம், மொழி, மதம் வேறுபாடின்றி இலக்கியங்களை பரஸ்பரம் மொழிபெயர்த்து இலக்கிய உலகிற்கு வழங்கி வருகின்றனர்.
இந்தப்பின்னணிகளுக்கு மத்தியில்தான் இலங்கையில் தமிழ் – சிங்கள, முஸ்லிம் – சிங்கள இனமுரண்பாடுகளும் இனவாத நெருக்கடிகளும் தோன்றுகின்றன.
யார் இவற்றை தூண்டுகிறார்கள்? என்பதை விளங்கிக்கொள்வது எளிது.
ஹிஸ்ஸல்லே தம்மரத்தின தேரோ என்ற பெளத்த பிக்கு, நான்கு தசாப்தங்களுக்கு முன்னர், இலங்கையில் சிறப்பாக தமிழ்ப்பணியாற்றினார் என்பது இன்றைய தலைமுறையினருக்கும் இலங்கையிலிருக்கும் மூவினங்களையும் சேர்ந்த அரசியல் தலைவர்களுக்கும் தெரியுமா? அல்லது இன்று இனவாதம் கக்கும் பொது பலசேனா, இராவண பலய, ஹெலஉருமய முதலான சக்திகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆட்டிப்படைக்கும் பெளத்த பிக்குகளுக்காவது தெரியுமா? அந்த பௌத்த தேரர், தனது பட்டப்படிப்பிற்கு தமிழை ஒரு பாடமாக பயின்றவர். தமிழ் இலக்கணம் சிங்கள மொழியில் கொண்டிருக்கும் செல்வாக்கு பற்றி ஆய்வு நூல்களை எழுதியவர். இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரத்தை பத்தினி தெய்யோ என்ற பெயரில் சிங்களத்தில் மொழிபெயர்த்தார். திருக்குறளையும் தமிழ்ப்படுத்தினார்.

இவரை பாராட்டும் முகமாக யாழ்ப்பாணத்திலிருந்து டொமினிக்ஜீவா வெளியிட்ட மல்லிகை மாசிகையில், 1972 ஆம் ஆண்டே அட்டைப்பட அதிதியாக கௌரவிக்கப்பட்டார். அத்துடன் நில்லாமல், மினுவாங்கொடையைச்சேர்ந்த தமிழ் அபிமானி பண்டிதர் எம். ரத்னவன்ஸ தேரோவுக்கும் மல்லிகை அதே அட்டைப்பட அதிதி கௌரவத்தை வழங்கியிருக்கிறது. அதுமட்டுமன்றி, மார்டின் விக்கிரசிங்கா, குணசேன விதான, ஆரியரத்தின விதான, சிறிலால் கொடிகார, கே. ஜயதிலக்க, ஜீ.பி. சேனநாயக்கா முதலான சிங்கள இலக்கியவாதிகளின் படைப்புகளையும் மல்லிகை தமிழில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. அவர்களின் சிறுகதைகளை மொழிபெயர்த்தவர்களில் முஸ்லிம்கள்தான் அநேகம்.

கொழும்பிலிருந்து வெளிவரும் ஞானம், யாழ்ப்பாணத்திலிருந்து வரும் ஜீவநதி, மட்டக்களப்பிலிருந்து வரும் மகுடம், அநுராதபுரத்திலிருந்து வரும் படிகள் முதலான இலக்கிய இதழ்களும் பல சிங்களப்படைப்புகளை தமிழுக்குத்தந்துள்ளன. இந்த அரிய பணிகளில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம் சகோதரர்களும் சகோதரிகளும்தான்.
இலங்கையில் இனக்கலவரங்கள் வந்த காலத்தில் அநுராதபுரத்தில் வாழ்ந்த தமிழர்களும் தமிழ்பேசும் முஸ்லிம்களும் தாக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் சென்ற ரயிலில் பயணித்த தமிழர்களுக்கு அநுராதபுரம் ரயில் நிலையம் ஒரு கண்டமாகவே அன்று காட்சியளித்தது. அதனால் அதனை அநியாய புரம் என்றும் நாம் முன்னர் வர்ணித்திருக்கின்றோம்.

பல திகிலூட்டும் செய்திகளை கலவர காலத்தில் தந்த அதே அநுராதபுரத்தில்தான், தமிழர்கள் பலர் இரத்தம் சிந்திய அதே மண்ணில்தான் , வண. வரகாவெஹர தம்ம பாலதேரோ என்பவர் சிங்கள மக்கள் சிலருக்கு தமிழ் கற்பித்துவந்தார். வானொலியிலும் தொலைக்காட்சியிலும் போயா தினங்களில் தமிழில் பெளத்த தர்மம் பற்றி உரையாற்றியிருக்கிறார்.
இவர் எழுதிய நூல்தான், தமிழ் இலக்கண விமர்சனம். தமிழ் கற்க விரும்பும் மாணவர்களுக்கும் – சிங்கள மாணவர்களுக்கு தமிழ் கற்பிக்கும் சிங்கள ஆசிரியர்களுக்கும் பயன் தரக்கூடிய 160 பக்கங்கள் கொண்ட இந்த நூலுக்கு பேராசிரியர் சுனில் ஆரியரத்ன தகவுரையும் அரச மொழிகள் திணைக்களத்தின் இணை ஆய்வு அதிகாரி வஜிர பிரபாத் விஜயசிங்க அணிந்துரையும் எழுதியுள்ளனர்.
இந்த அரிய தகவல்களை இலங்கையில் தினகரன் பத்திரிகையில் பல வருடங்களுக்கு முன்னரே எழுதியிருப்பவரும் ஒரு முஸ்லிம்தான். அவர் பெயர் அபூபாஹிம்.

1978 இல் வெளிவந்த கவிய என்ற சிங்கள ஏட்டில் எங்கள் மஹாகவி உருத்திரமூர்த்தியின் பிரபல்யமான மீண்டும் தொடங்கும் மிடுக்கு என்ற கவிதையை பராக்கிரமகொடிதுவக்கு என்ற சிங்கள எழுத்தாளர் “சுபவேவா ” (நல்வாழ்த்து) என்று சிங்களத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். இந்தத்தகவலையும் தமிழ் வாசகர்களுக்கு மல்லிகை 1979 பெப்ரவரி – மார்ச் இதழில் தந்திருப்பவரும் ஒரு முஸ்லிம்தான். அவர்தான் புத்தளத்தில் வசிக்கும் கவிஞர் ஜவாத்மரைக்கார்.
தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் மத்தியில் வாழ்ந்துகொண்டு தமிழுக்காகவும் தமிழ் இலக்கியத்திற்காகவும் பாடுபட்ட பல முஸ்லிம் எழுத்தாளர்களையும் கல்விமான்களையும் சிரம்தாழ்த்தி வணங்குகின்றேன்.

இவர்கள் செய்திருக்கும் அரிய பணிகளை இன்று முஸ்லிம் மக்களுக்காகவே பிளவுண்டு – அணிதிரண்டு தேர்தல் காலங்களில் வெற்றுவேட்டுத்தீர்க்கும் முஸ்லிம் தலைவர்கள் அறிவார்களா? தமது இனத்திற்கு ஆபத்து வந்தவுடன் வெளிநாட்டிலிருந்து வரும் ஐ.நா. பிரதிநிதிகளிடம் ஒன்றாகச்சேர்ந்து சென்று முறையிடும் இந்தத் தலைவர்கள், தங்களுக்குள் நீடிக்கும் வேற்றுமைகளை களைந்துவிட்டு இனியாவது ஓரணியில் நின்று தங்கள் இனத்தின் நலனுக்காகவும் பாதுகாப்பிற்காகவும் தங்களை அர்ப்பணிக்கமாட்டார்களா?

நடந்து முடிந்த உள்ளுராட்சித்தேர்தல் பிரசார காலத்தில் இந்தத்தலைவர்கள் ஒருவரை ஒருவர் எவ்வாறு தூற்றிக்கொண்டார்கள் என்பதை ஊடகங்களில் வெளியான செய்திகளிலிருந்து பார்க்கலாம்.
இதேவேளை, இன்னும் ஒரு முக்கிய கதையையும் இங்கு சொல்லிவிடுகின்றேன்.
புத்தர் பெருமான், முன்னர் மன்னராக வாழ்ந்தவர். தனக்கு அரசும் வேண்டாம், அரசதிகாரமும் வேண்டாம் என்றுதான் துறவறம் பூண்டு காவியணிந்து வனம் சென்று நீண்ட தவமிருந்து நிர்வாணம் எய்தினார். அன்புமார்க்கத்தையே போதித்தார்.

ஆனால், இன்று இலங்கையில் விஹாரையிலிருந்து தம்மபதம் சொல்லிக்கொண்டிருக்கவேண்டிய பல பிக்குகள் வெளியே வந்து அரசியல்வாதிகளாகியிருக்கின்றனர். இலங்கையில் என்ன தீர்வு வந்தாலும் அந்த செனட்டர்களின் முடிவுக்குத்தான் அரசு காத்திருக்கிறது! பௌத்த பிக்குகள் நாடாளுமன்றமும் சென்றனர். அவர்கள் தங்களின் புலன் அடக்குவதற்காக மதியம் 12 மணிக்கு முன்பே உணவருந்தவேண்டியவர்கள்!
“விக்கா பதங் சமாதிஹாமி” என்று ஒரு வாக்கியம் அவர்களின் பிரார்த்தனையில் வரும். அவர்கள் மதியத்திற்குப்பின்னர் எதனையும் விழுங்கி உண்ணக்கூடாது. புலன்களை அடக்கி, மக்களிடம் சென்று இரந்துண்டு வாழ்பவர்களும், தமது இருப்பிடம் தேடி பக்தர்கள் கொண்டுவரும் உணவை வாங்கி உண்பவர்களும்தான் உண்மையான பௌத்த தேரர்கள் என்பார் மினுவாங்கொடையில் வாழ்ந்த தமிழ் அபிமானி வண. ரத்னவன்ஸ தேரோ. இவருக்கு முதலில் தமிழ் சொல்லித்தந்தவரும் ஒரு முஸ்லிம்தான்! அவர்தான் பத்திரிகையாளர் எம். ஏ. எம். நிலாம்.
எஸ். டபிள்யூ. ஆர்.டீ. பண்டாரநாயக்கா தனது அரசியல் தேவைக்காக பஞ்சமா பலவேகய (ஐம்பெரும் சக்திகள்) என்ற இயக்கத்திற்குள் இந்த பிக்குகளையும் என்றைக்கு இழுத்தாரோ அன்றே அவருக்கும் கண்டம் வந்தது! தேசத்திற்கும் கண்டம் தொடங்கியது!
இந்தச் செய்திகளிலிருந்து அனைத்து பிக்குகளையும் நாம் குற்றம் சொல்ல முடியாது. இந்தப்பதிவில் நான் குறிப்பிடும் ஹிஸ்ஸல்லே தம்மரத்தின தேரோ, ரத்னவன்ஸ தேரோ, வரகாவெஹர தம்ம பாலதேரோ, நான் எங்கள் ஊரில் சந்தித்திருக்கும் தம்மதஸ்ஸி தேரோ முதலான பலர் தமிழ் – சிங்கள – முஸ்லிம் மக்கள் மத்தியில் மதிப்பிற்குரிய அறிஞர்களாகவும் மனிதநேயம் மிக்கவர்களாகவும் திகழ்ந்திருக்கிறார்கள்.

அண்மையில் கண்டியிலும் அதனைச்சூழவுள்ள பிரதேசங்களிலும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடந்த வன்முறைகளின்போது பல பிக்குகள் அந்த வன்முறையில் குளிர்காய்ந்திருந்தாலும் – எரியும் நெருப்புக்கு எண்ணை வார்த்திருந்தாலும் , சில பிக்குகள் சம்பவங்களை கண்டித்துள்ளனர். வருந்தியுள்ளனர். சிலர் வன்முறைகளை தடுத்துள்ளனர்.
இச்சந்தர்ப்பத்தில் யாழ். பொது நூலகம் எரிக்கப்பட்டபோது பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் எழுதிய புத்தரின் படுகொலை என்ற கவிதை நினைவுக்கு வருகிறது!

சிங்களப்பிரதேசங்களில் வாழ்ந்துகொண்டு காலத்துக்குக்காலம் நெருக்கடிகளை சந்தித்தவாறு, தமிழைப்பேசியவர்கள் எழுதியவர்கள், தமிழ் இலக்கியம் படைத்தவர்கள் மொழிபெயர்ப்புகளின் ஊடாக இன நல்லுறவைப்பேணியவர்கள் எமது முஸ்லிம் சகோதரர்கள்தான் என்ற உண்மையையும் தமிழ்த்தேசியம் பேசிக்கொண்டிருக்கும் எங்கள் தமிழ் அரசியல் தலைவர்களும் உணரவேண்டும்.
சிங்கள மக்கள் மத்தியில் வாழ்ந்தவாறு தமிழுக்குத்தொண்டாற்றிய எம். எம். உவைஸ், எஸ். எம். கமால்தீன், ஏ. இக்பால், திக்குவல்லை கமால், எம்.எச்.எம். ஷம்ஸ், அன்பு ஜவஹர்ஷா, ஜவாத்மரைக்கார், கலைவாதி கலீல், மு. பஷீர், எம். ஏ.எம். நிலாம், அனஸ், அமீன், எம். ஏ. நுஃமான், நீள்கரை நம்பி, எம். எம். மன்சூர், எஸ்.எம்.ஜே.பைஸ்தீன், எஸ். எம். ஹனிபா, ஏ.சி. எம். கராமத், சித்தி பரீதா முகம்மத், வெலிகம ரிம்சா முகம்மத், கெக்கிராவ சஹானா, ரிஷான் ஷெரீப், தியத்தலாவ எச். எப். ரிஸ்னா, அஷ்ரப் சிகாப்தீன், ஜின்னா ஷரீப்தீன், மேமன் கவி ஏ.கே. ஏ. ரஸாக், ” படிகள்” வசீம் அக்ரம், எம்.ஸி.ரஸ்மின், அபூபாஹிம், அல். அசூமத், இப்னு அசூமத், ஐயூப், ஆரிஃப் இஸ்மயில், சாஜஹான், மொஹமட் ராசூக் , ப. ஆப்தீன், பி.எம். புண்ணியாமீன் முதலான பல இலக்கியவாதிகளும் ஊடகவியலாளர்களும் தமது வாழ்நாள் முழுவதும் தமிழ் – சிங்கள – முஸ்லிம் உறவுகளைப்பேணுவதற்காகவே தங்கள் பேனையை ஏந்தியவர்கள். அதற்காகவே உழைத்தவர்கள்.

“சிங்களத் தீவிரவாதிகளின் வன்முறைக்கு எதிர்வினையாக தங்களுக்கும் ஆயுதம் தாருங்கள்” என்று கேட்கிறார் ஜனாதிபதிக்கு நெருக்கமான ஒரு முஸ்லிம் தலைவர். ” எங்களையும் ஆயுதம் ஏந்தவைத்துவிடாதீர்கள்” என்று மற்றும் ஒரு முஸ்லிம் தலைவர் நாடாளுமன்றில் குரல் எழுப்புகிறார்!
சிந்தனையைத்தரும் எழுத்தாயுதமா? இரத்தத்தை சிந்தவைக்கும் ஆயுதமா? இதில் இன்று எது தேவை? என்பதை தீர்க்கதரிசனம் மிக்க மூவின மக்களும் தீர்மானிப்பார்கள்.
இச்சந்தர்ப்பத்தில் 2013 ஆம் ஆண்டு நான் எழுதிய ” தமிழ் – சிங்கள இலக்கியப்பரிவர்த்தனையில் எம்மவரின் பயனுள்ள பணிகள்” ( இக்கட்டுரை ஆங்கிலம், சிங்களம் மொழிகளிலும் வெளிவந்துள்ளது) என்ற கட்டுரையில் இடம்பெற்ற சில முக்கிய தகவல்களுடன், புதிய குறிப்புகளையும் இணைத்து பின்வரும் பட்டியலை இங்கு தருகின்றேன். இதிலிருந்து இன நல்லிணக்கத்திற்காக ஆக்கபூர்வமாக உழைத்திருப்பவர்களை தெரிந்துகொள்வீர்கள்.

சிங்களப் படைப்பின் பெயர் முதலாவதாகவும் அதன் ஆசிரியரின் பெயர் அடைப்புக்குறிக்குள்ளும், அதனையடுத்து படைப்பின் தமிழ் ஆக்கமும் அடுத்து மொழிபெயர்த்தவர் பெயர் அடைப்புக்குறிக்குள்ளும் இடம்பெறும் விதமாக இந்தப்பட்டியலை இங்கு தருகின்றேன்.
1. கம்பெரலிய (மார்டின் விக்கிரமசிங்க) கிராமப்பிறழ்வு ( எம்.எம். உவைஸ்)
2. கொழுஹதவத்த (கருணாசேனஜயலத்) ஊமைஉள்ளம் (தம்பிஐயா தேவதாஸ்)
3. சரித்த துனக் ( கே.ஜயதிலக்க) மூன்று பாத்திரங்கள் (தம்பிஐயா தேவதாஸ்)
4. விராகய (மார்டின் விக்கிரமசிங்க) பற்றற்ற வாழ்வு ( சுந்தரம் சௌமியன்)
5. மடோல்தூவ (மார்டின் விக்கிரமசிங்க) மடோல்த்தீவு ( சுந்தரம் சௌமியன்)
6 பாலம யட்ட (குலசேன பொன்சேக்கா ) பாலத்தின் அடியில் (சுந்தரம் சௌமியன்)
7 தீர்க்க கமண (குணசேகர குணசோம) நெடும்பயணம் ( மடுளுகிரியே விஜேரத்தின.)
8 அஹஸ்பொலவ லங்வெலா (ரஞ்சித் தர்மகீர்த்தி) சங்கமம் ( எம்.எச்.எம்.யாக்கூத்)
9 குருபண்டுரு ( தெனகம ஸ்ரீவர்தன) குருதட்சனை ( திக்குவல்லை கமால்)
10 பவஸரன ( சிட்னி மார்க்கஸ் டயஸ்) தொடரும் உறவுகள் (திக்குவல்லை கமால்)
11 தயாபேனலாகே ஜயக்கிரான (விமலதாஸ முதலிகே) வெற்றியின் பங்காளிகள் (திக்குவல்லை கமால்)
12 ஆகாஸகுசும் (பிரசன்ன விதானகே)ஆகாயப்பூக்கள் (ரவிரட்ணவேல்)திரைப்படச்சுவடி.
13 பலா (சிங்கள சிறுகதைகள்) வலை (மடுளுகிரியே விஜேரத்தின.)
14 திதஸ (சேபாலி மாயாதுன்னை ) சொர்க்கம் ( மடுளுகிரியே விஜேரத்தின)
15 வப்மகுல (சோமரத்தின பலசூரிய) ஏர்விழா (மடுளுகிரியே விஜேரத்தின)
16 வெடிஹண்ட ( குணசேகர குணசோம ) நெடும்பயணம் (மடுளுகிரியே விஜேரத்தின)
17 சிங்களச்சிறுகதைகள் (சிங்கள எழுத்தாளர்களின் கதைகள்) நாளையும் மற்றும் ஒரு நாள் ( எம்.ஸி. ரஸ்மின்)
18 அம்மா எனதுட்டு ( சிட்னி மாக்கஸ் டயஸ்) அம்மா வரும்வரை (திக்குவல்லை கமால்)
19 பினிவந்தலாவ ( உபாலி லீலாரத்தின) விடைபெற்ற வசந்தம் (திக்குவல்லை கமால்)
மேலும் பல சிங்கள நூல்கள் தமிழில் வெளியாகியுள்ளன. நாவலியூர் சோமசுந்தரப்புலவரின் பேத்தி சரோஜினி அருணாசலம் டி.பி.இலங்கரத்தினாவின் அம்பயஹலுவோ என்ற நாவலையும் வேறும் பல சிங்கள சிறுவர் இலக்கிய நூல்களையும் தமிழுக்குத்தந்துள்ளார்.
அடுத்து தமிழிலிருந்து சிங்களத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட நூல்களை பார்ப்போம்
1. சிறுகதைகள் (டொமினிக்ஜீவா) பத்ரபிரசூத்திய (இப்னு அசூமத்)
2. சிறுகதைகள் (ஜெயகாந்தன்) கொடிகஸ்ஹந்திய ( உபாலி லீலாரத்ன)
3. அவர்களுக்கு வயது வந்தவிட்டது(அருள். சுப்பிரமணியன்) எயாலாட்ட வயச எவித் (திக்குவல்லை சபருள்ளா)
4. தெரியாத பக்கங்கள் ( சுதாராஜ்) நொபனென பெதி (மொஹமட் ராசூக்
5. உதயபுரம் (திக்குவல்லை கமால்) உதயபுர (அடஸ் பியதஸ்ஸி)
6. நோன்புக்கஞ்சி ( திக்கவல்லை கமால்) குருபண்டுற ( ஏ.ஸி.எம் கராமத்)
7. தமிழ்ச்சிறுகதைகள் – பதிபிட (மடுளுகிரயே விஜேரத்தின)
8. தமிழ்ச்சிறுகதைகள் – உறுமய ( மடுளுகிரியே விஜேரத்தின)
9. நான் எனும் நீ (கவிதைகள்) மமத ஒபமவெமி ( மடுளுகிரியே விஜேரத்தின)
10. செ.யோகநாதன் (துன்பக்கேணியில்) நிரய மடுளுகிரியே விஜேரத்தின)
11. சுதாராஜ் ( கவிதாவின் பூந்தோட்டம்) கவிதாகே மல்வத்தை மொஹமட்ராசூக்
12. தி.ஞானசேகரன் (குருதிமலை) சுவாமிநாதன் விமல்
13. தமிழ்ச்சிறுகதைகள் – சுளிசுலங்க ஏ.ஸி.எம் கராமத்
14. ஜெயகாந்தன் ( தேவன்வருவாரா – சிறுகதைகள்) – போனிக்கா ஏ.ஸி.எம் கராமத்
15. திக்குவல்லை கமால் ( உதயக்கதிர்கள்) ராழியா – ஏ.ஸி.எம்.கராமத்
16. திக்குவல்லை கமால்(கண்ணீரும் கதைசொல்லும்)கந்துல கதாவ –ஏ.ஸி.எம் கராமத்
17. பத்மாசோமகாந்தன் ( கடவுளின் பூக்கள்) தெய்யன்கே மல – உபாலிலீலாரத்தின.
18. சுதாராஜ் (நகரத்திற்கு வந்த கரடி) நகரயட ஆவ வலஸ் – மொஹமட்ரசூக்
19. நீர்வைபொன்னையன் (சிறுகதைகள்) லென்ஹத்துகம – ஜி.ஜி.சரத் ஆனந்த
தவிர உடுவை தில்லை நடராஜாவின் நூல்கள், செ.கணேசலிங்கனின் நீண்டபயணம், தமிழக எழுத்தாளர்கள் கு.சின்னப்பாரதியின் அரங்கம், புதுமைப்பித்தனின் சாபவிமோசனம், டென்மார்க் ஜீவகுமாரனின் சங்கானைச்சண்டியன் என்பனவும் சிங்களத்தில் வந்துள்ளன. அத்துடன் விடுதலைப்புலி போராளி தமிழினி சிவகாமியின் ஒரு கூர்வாளின் நிழலில் நூலும் சிங்களத்திற்கு வந்துள்ளது.
லண்டன் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், அவுஸ்திரேலியா நடேசன், முருகபூபதி ஆகியோரின் நாவல்களும் கதைகளும் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு நூலாகியிருக்கின்றன.
இவற்றை மடுளுகிரியே விஜேரத்ன, ஏ.சி.எம். கராமத் ஆகியோர் சிங்களத்திற்கு வரவாக்கினர்.
letchumananm@gmail.com
—0—

“சிங்கள இலக்கியங்களை தமிழுக்குத்தந்த முஸ்லிம் சகோதரர்கள்.” மீது ஒரு மறுமொழி

  1. Oh! Great service! God bless all! Any link We could read Some books? Thanks for Your Great service to Tamil World !!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: