1983 ஆம் ஆண்டு மீனாவும் சோபாவும் ஒருவகுப்பில் படித்தார்கள். இருவர் வீடுகளுக்கும் அதிக தூரமில்லை.
அன்று காலை பத்துமணிக்கு மீனாவின் வீட்டுக்கு சென்றுவிட்டு சோபா வரும்போது தானும் உடன்வருவதாக கூறி மீனா வந்தாள். இருவரும் தெருவில் வரும்போது ஏதோ சத்தம் கேட்டது திரும்பி பார்த்தவர்களுக்கு கத்தி, வாள் மற்றும் பொல்லுகளுடன் பலர் இருவரைத் துரத்திக்கொண்டு வருவது தெரிந்தது.துரத்தியவர்களின் வாய்களிலிருந்து ஆபாசமான, ஆத்திரமான சிங்கள வார்த்தைகள் வந்தன. வார்த்தைகளின் அர்த்தம் புரியாவிடினும் கெட்டவார்த்தைகள் என்பது புரிந்தது. முன்பாக ஓடியவர்களில் ஒருவன் ஒரு வீட்டின் மதில்மீது ஏறி தப்ப முயன்றபோது துரத்தியவர்களில் ஒருவன் எறிந்த கத்தி கழுத்தில் பட்டதும் அவன் குண்டுபட்ட பறவை போல் நிலத்தில் விழுந்தான்.
விழுந்தவனை மற்றவர்கள் சூழ்ந்துகொண்டு கம்புகளால் அடித்தார்கள். அவனது குரல் சுற்றாடலையே அதிரவைத்தது. ஒருவன் வெள்ளை பிளாஸ்ரிக்கானில் இருந்த திரவத்தை துடிக்கும் மனிதன் மேல் ஊற்றி , அவனது சாரத்தின் மடிப்பில் இருந்த நெருப்புப்பெட்டியில் இருந்து நெருப்பை ஏற்றி குப்பையை கொழுத்துவதுபோல் கொழுத்தினான். இந்த நெருக்கடியில் ஒருவன் தப்பி விட்டான். அந்த பகல் நேரத்தில் ஒரு மனிதன் உயிருடன் எரிக்கப்பட்டான். ஆரம்பத்தில் கதறிய மனிதனது சத்தமும் மெதுவாக அடங்கியது. சிறு ஒழுங்கைக்குள் இது நடந்தபடியால் வீதியில் எவரும் இல்லை. அந்த கொழுத்தியவர்களைத் தவிர மீனாவுக்கும் சோபாவுக்கும் இந்த நிகழ்ச்சி சினிமாப்படமொன்றில் நடப்பது போல் இருந்தது. தமிழர்கள் சிங்களவர்களால் தாக்கப்படுகிறார்கள் என்பது புரிந்தது. மீனா சமயோசிதமாக அங்கு நின்ற காரின் பின் மறைந்தபடி திறந்திருந்த கேட்டினுள் சோபாவின் கையை பிடித்தபடி சென்றுவிட்டாள். வீட்டின் முன்பு தோட்டத்தில் ஒருவரும் இல்லை. பின்பகுதியில் உள்ள வீடும் அமைதியாக இருந்தது. ஓளிந்திருந்த வீடு முன்பக்கத்தில் ஆறு அடி உயரமதிற் சுவர் இருந்தது. மதிற்சுவரில் இடைவெளியூடாக பார்க்க கூடியதாக இருந்தது. அந்தப்பகுதி எங்கும் புகைப்படலம் பரவியது.
“மீனா அம்மா தேடப்போறா. என்ன செய்கிறது”? சோபாவின் கண்கள் கலங்கி இருந்தன.
“இல்லை. நாங்கள் வெளிக்கிட்டால் எங்களுக்கு ஆபத்து. இங்கேயே சிலநேரம் இருந்து விட்டு செல்வோம்” என்றாள் மீனா தீர்க்கமாக.
“என்னடி வெடிச்சத்தம் “?”
“என்னவோ தெரியாது”
“எனக்கு ஒண்ணுக்கு வருகிறது”.
“அதோ அந்த வாழை மரத்துக்கு பின்னாலே போ”.
சோபாவிலும் பார்க்க தைரியசாலியான மீனா சந்தர்ப்பத்தை உணர்ந்து தலைமைப்பொறுப்பை எடுத்தாள். சந்தர்ப்பங்கள் தலைவர்களை உருவாக்குகிறது என்பது உண்மை.
இப்பொழுது மீனாவும் சோபாவும் வாழை மரத்துக்கும் மதில் சுவருக்குத் இடையில் இருந்தார்கள். இந்த மறைவிடம் குளிர்மையாகவும் இருந்தது.
“மீனா எவ்வளவு நேரம் இப்படி இருக்கிறது ?”
மீனா வாயில் கைவைத்து “ஸ்ஸ்”
மதிலின் மறுபுறத்தில் இருவர் நின்று சிகரட் புகைத்துக் கொண்டு சிங்களத்தில் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களது கால் உரோமங்கள் மதில் இடைவெளியூடாக தெரிந்தது. சாரத்தை உயர்த்தி கட்டி இருந்ததால் ஒருவனது உள்ளங்கி தெரிந்தது.
சில நிமிட இடைவெளியில் மதில் சுவரின்மேலாக ஒரு கத்தி வந்து விழுந்தது. விழுந்த கத்தி மீனாவுக்கு சில அடிகள் தள்ளி விழுந்தது. கத்தியில் உள்ள ஈரத்தில் மண் ஒட்டியது.
சுவரோடு நின்றவர்கள் சிகரட்டை எறிந்துவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றதும் மீனா கத்தியை காட்டி “இந்தக்கத்தியால் தான் வெட்டினார்கள என்றாள் “.
சோபாவுக்கு பதில் பேச முடியவில்லை. மயக்கம் வந்தது. அப்படியே வாழை மரத்து அடியில் சாய்ந்தாள்.
“சோபா,சோபா “என முகத்தை தடவினாள் மீனா.
கண்ணை விழித்தவளுக்கு புகைமண்டலம் மிகவும் அருகில் வந்தது. நடுப்பகலில் சூரியனை புகைமண்டலம் மறைத்தது.
அந்த புகைமண்டலம் கொழும்பு தமிழர்களின் உயிர்களும் உடமைகளும் என்பது சோபாவுக்கும், மீனாவுக்கும் புரிந்ததோ தெரியவில்லை. ஆனால் சோபாவுக்கு அந்த சந்தேகம் வந்தது.
“எங்கள் வீடு எரிந்திருக்குமா மீனா?”“
“எங்கம்மா வீட்டில் தனியாக இருக்கிறாள்” என கண்கலங்கினாள் மீனா.
மீனாவின் தந்தை சவூதியில் இருந்து வந்து விடுமுறையை கழித்துவிட்டு இரண்டுவாரங்களுக்கு முன்புதான் மீண்டும் சென்றிருந்தார்.
“ஏய் அங்கே பார்” என சோபா காட்டிய திசையில் மீனா பார்த்தபோது வெள்ளைநிறக் கார் ஒன்று ஒரு கூட்டத்தினால் நிறுத்தப்பட்டது. உள்ளே இருந்தவர்கள் வெளியே இழுக்கப்பட்டு பொல்லுகள் தடிகளால் தாக்கப்பட்டார்கள். வேறு சிலர் காருக்குத் தீ வைத்தார்கள்.
இந்தக்காட்சியைப் பார்க்க சகிக்காமல் மீனாவும் சோபாவும் வாழைமரத்து அடியில் அமர்ந்தார்கள்.
“நாங்கள் இப்ப வெளிக்கிட்டால் எங்களை கொன்றுவிடுவார்கள்.” மீனாவின் குரல் கரகரத்தது.
“அப்ப என்ன செய்கிறது? இரவு வரையும் இங்கே இருக்க வேண்டுமா? எனக்கு தண்ணீர் விடாய்க்கிறது.”
“அதோ அந்த தண்ணீர் பைப்.”
சிறிது தூரத்தில் தண்ணீர் குழாய் பொருத்தப்பட்டிருந்தது. குளாயை கழற்றிவிட்டு இருகைகளாலும் முகத்தை கழுவிவிட்டு தண்ணீர் குடித்தாள் சோபா.
புகைமண்டலம் மறையத் தொடங்கியது. மாலை சூரியன் இரத்தநிறமாக மேற்குத்திசையில் தெரிந்ததால் அப்பொழுதுதான் பலமணி நேரம் இந்த இடத்தில் இருப்பதை இருவரும் உணர்ந்தனர்.
வீட்டின் இரும்பு கேட் கிறீச்சிட திறந்தது. நரைத்த தலையுடன் ஆறுஅடி உயரமான கம்பீரமான மனிதர் உள்ளே வந்தார்.
“ஏய் என்ன செய்கிறீர்கள்.? “
சோபாவும் மீனாவும் நடுங்கியபடி வாழைப்புதரின் வெளியே வந்தனர். அவர்களது உடல் நடுக்கத்தைக் கண்டதும் சிங்களத்தில் “பயப்பட வேண்டாம் “ என்றார்.
தங்களுக்கு தெரிந்த ஆங்கிலத்தில் நடந்தவற்றை விபரித்தனர்.
“எங்கள் மனிதர்களுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. நீங்கள் உள்ளே வாருங்கள். பிரச்சனை முடிந்ததும் நான் உங்கள் வீடுகளுக்கு கொண்டு போய்விடுகிறேன் நீங்கள் பயப்படவேண்டாம் “ என உறுதியளித்தார்.
இருவரும் அவரை வீட்டுக்குள் பின்தொடர்ந்தனர்.
“எனது பெயர் ரத்தினாயக்க. எனது மனைவியும் இங்கே இருக்கிறாள்.”
உள்ளே சென்றதும் கதிரையில் இருக்க சொல்லி விட்டு குளிர்பதன பெட்டியில் இருந்து இரண்டு சோடாப்புட்டிகளைக் கொடுத்துவிட்டு, “பசிக்கிறதா?” என்றார்.
இருவரும் ஒருமித்தமாறு தலையை ஆட்டினர்.
அறையுள் சென்ற இரத்தினாயக்கா ஏதோ பேசிவிட்டு உள்ளே வரும்படி அழைத்தார். தயக்கத்துடன் வாசலில் நின்ற சோபா மீனாவுக்கு அறிமுகப்படுத்தினார்.
“என்மனைவி லீலாவதிக்கு நடக்கமுடியாது. முதுகுத்தண்டில் நோய்…… ”
“பிள்ளைகள் இங்கே வாருங்கள்” என் கூப்பிட்டு அருகில் வந்த இருவரையும் தன்னருகே இழுத்து முத்தமிட்டார். கண்ணீரை துடைத்தபடி தனது கட்டிலில் ஏறி அமரும்படி சைகை காட்டினார்.
பாணும் பருப்பும் இரண்டு தட்டுகளில் கொண்டுவந்து டீபோவில் வைத்தார் ரத்தினாயக்க.
சாப்பிட தொடங்கியவர்களின் தலையை தடவியபடி “பிள்ளைகள் பிள்ளைகள்” என வாயை அசைத்தார், லீலாவதி.
ரேடியோவில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுதாபனத்தின் செய்திகளில் கொழும்பில் நடந்த விடயங்கள் ஒலிபரப்பப்பட்டுக் கொண்டிருந்தன.
“யாழ்ப்பாணத்தில் புலிகள் வெடிவைத்தால் இங்கேயுள்ள மக்கள் என்ன செய்வார்கள். இது என்ன நீதி” என்றாள் லீலாவதி.
“இப்படியான சந்தர்ப்பத்தை பாரத்து கொள்ளையடிக்க நினைத்தவர்கள் தங்கள் கைவரிசையை காட்டுகிறார்கள். ராணுவமும் , பொலிசும் இதற்கு உடந்தையாக இருக்கிறது. வெள்ளைக்காரன் காலத்தில் ராணுவம் எவ்வளவு ஒழுங்காக இருந்தது. இந்த கொள்ளைக்காரரிடம் இருந்து நாட்டுக்கு விடிவு எப்படி வரும்” என அங்கலாய்த்தார் இரத்னாயக்கா.
“வெளியே போய் பார்த்து வாருங்கள். நிலைமை அடங்கி விட்டதா என்று.”?
இரத்நாயக்க வெளியே சென்று பார்த்தபோது இருள் சிறிது கவியத் தொடங்கினாலும் மீண்டும் புகை மண்டலம் கனத்தது. ஒரு சில இடங்கள் இன்னும் எரிந்து கொண்டிருந்தன. ஊரடங்கு சட்டம் பிரகடனப்படுத்த பட்டது அறிவிக்கப்பட்டாலும் சிலர் தடிகளுடனும் ஓர் இருவர் கடைசியாக மிஞ்சிய திருட்டு பொருட்களைக் காவிக்கொண்டும் சென்றார்கள். புராதனமான ஒரு யுத்தகள காட்சியை கொழும்பு மாநகரத் தெருக்களில் கண்களில் நிறுத்தியது.
“தெருக்களில் அமைதியில்லை. கொள்ளைக்காரரும் கொலைகாரரும் இன்னும் அலைகிறார்கள். பிள்ளைகள் உங்கள் வீடுகள் அதிக தூரத்தில் உள்ளதா”? என்றார் ரத்நாயக்கா.
“இல்லை, அருகில்தான்” இருவரும் ஒரே குரலில்; சொன்னார்கள்.
“நாங்கள் பின்பகுதி ஒழுங்கையூடாக போவோம்.”
“வாருங்கள்” சிறிதுநேரத்தில் சோபாவும் மீனாவும் விடைபெற்று கொண்டபோது லீலா “பயப்பிட வேண்டாம் கடவுள் காப்பாற்றுவார் என்று கூறினார்..”
முன்னிரவு இப்பொழுது சிறிது அமைதியாக இருந்தது. மோட்டார் வண்டிகள் அதிகம் பாதைகளில் கண்ணுக்கு தெரியவில்லை. புகையின் எரிச்சல் கண்களை தாக்கியது. மூவரும் ஒழுங்கையை கடந்தபோது ரெலிவிசனை தலையில் வைத்தபடி ஒருவன் வந்தான்.
பயத்துடன் சோபாவும் மீனாவும் ரத்நாயக்காவின் பக்கம் ஒதுங்கிக் கொண்டார்கள்.
“கொள்ளை அடித்த ரெலிவிசனை கொண்டு போகிறான். என்ன மனிதர்கள் இவர்கள்!” என இரத்நாயக்கா
சலித்துக் கொண்டார்.
சில நிமிட நடையில் இரண்டு எரிந்து கிடக்கும் வீடுகளை அடைந்தார்கள் நெருப்பு அணைந்தாலும் புகை வந்து கொண்டிருந்தது. வீட்டுக்கு முன்பு சிறிய கார் கருகியபடி நின்றது.
சோபாவைப் பயம் பிடித்துக் ஆட்டியது. “எங்கள் வீட்டிற்கும் என்ன நடந்திருக்கும்? அம்மா, அப்பாவுக்கு, அண்ணனுக்கு என்ன நடந்திருக்கும்?”
பல கேள்விகளுடன் மீனாவின் கையை இறுகப் பற்றியபடி நடந்தாள்.
ஒரு சிறிய தெருவுக்கு வந்ததும் “ஐயோ எங்கள் வீடு எரிந்து விட்டதே” என் அழுதாள் சோபா. மேலே நடக்காமல் அந்த இடத்திலேயே இருந்து விட்டாள்.
பதறிய ரத்தினாயக்கா “பிள்ளைகள், இங்கே சற்று நில்லுங்கோ. நான் பக்கத்து வீடுகளில் விசாரித்து வருகிறேன்”
சிறிய வீடானாலும், மூன்று அறைகள் கொண்ட வீடு அது. முன்பக்கத்தில் இரும்பு கதவுகள் திறந்தபடி இருந்தது. கூரை எதுவும் மிச்சமில்லாமல் எரிந்துவிட்டது. கருகிய சுவர்கள் மட்டும் எஞ்சி இருந்தது. வாசலில் நின்ற செம்பருத்தியில் சில காம்புகள் கருகித் தெரிந்தது. முன்னறையின் சுவருக்கு பின்னால் சிறிது புகை வந்தது. சோபாவின் சிறுவயது விளையாட்டு பொருட்கள் பொம்மைகள், சிறிதாக போன உடுப்புக்கள் என எதையும் எறியாமல் சேகரித்து வைத்திருந்தாள். அண்ணன் கார்த்திக் அந்த அறைக்கு வந்தால் எப்பொழுது வெளியறுவான் என காத்திருப்பாள். கார்த்திக் பலமுறை சண்டையிட்டு பொம்மைகளை தூக்கி எறிந்தாலும் அழுதபடி மீண்டும் திரும்ப கொண்டுவந்து வைப்பாள். அந்த அறையை தாயார் சுத்தம் பண்ணும் போது தானும் தாயுடன் நிற்பாள். ஆனால் சுத்தப்படுத்த உதவுவதில்லை. தாய் குப்பை என்று ஏதாவதை வெளியே எறிந்துவிடுவாள் என்ற பயம்தான். ஒருநாள் பாடசாலைக்கு போனபின் தாய் சுத்தம் செய்து விட்டாள். பாடசாலை முடிந்ததும் அந்தக் குப்பைகள் கொட்டப்பட்ட இடத்தில் தனது சாமான்கள் இல்லை என குப்பையை கிளறி உறுதி படுத்தினாள். இப்படி காலம் காலமாக பத்திரப்படுத்திய பொருட்கள் புகைந்து கிடப்பதைக் கண்டு மனத்துக்குள் உறைந்து போனாள்.
“ஏய், இதோ பாரடி” என்ற மீனாவின் வார்த்தை இந்த உலகத்திற்கு கொண்டு வந்தது.
ஐந்து காடையர்கள் கத்தி பொல்லுடன் வருவது தெளிவிளக்கு வெளிச்சத்தில் தெரிந்தது. அவர்களது வாயில் ஆபாசமான வார்த்தைகள் வந்தன. இவர்களை அண்மித்ததும் வந்தவர்களில் ஒருவன் “சிங்கள பெண்களா” என சிங்களத்தில் கேட்டான். அவர்களுக்கு வழிவிட ஒதுங்கிய மீனாவும் சோபாவும் பல்லிகளை போல் அந்த மதில் சுவரில் ஒட்டினார்கள் ஆனால் எதுவும் பேசவில்லை. சோபாவின் அருகில் நெருங்கி தமிழ் பெண்களா? என்றான். ஆத்திரத்துடன் தூசண வார்த்தையுடன் சோபாவின் மேல்சட்டையில் கைவைத்து கிழித்தான்.
“அம்மா. . “
மற்றவர்களும் சேர்ந்து கொண்டார்கள்.
மீனாவின் கழுத்தை பிடித்து மதிலோடு அழுத்தினான் ஒருவன். சுற்றி நின்றவர்கள் இறைச்சித்துண்டொன்றை பங்குபோட விரும்பும் வேட்டை நாய்களை போல் நின்றார்கள். வெறிகொண்ட அவர்கள் வீதி வெளிச்சத்தில் இரையை கடீத்து குதற தயாராக காத்திருக்கும் காட்டுவிலங்குகளை நினைவுறுத்தியது. சோபாவின் மேல்சட்டையை கிழித்தவன், பிராவை பிடித்து இழுத்து அறுத்தான். மார்பை கைகளால் பொத்தியபடி கீழே விழுந்தாள். கீழே விழுந்தவளின் நிக்கரை பிடித்து இழுத்தபோது சனிட்டரி டவல் வந்து விழுந்தது. “பெட்டைநாயே” என்று கூறிவிட்டு விலகினான். இதேவேளையில் முழு நிர்வாணமாக்கப்பட்ட மீனா அடிவயிற்றை கையால் மூடியபடி ஐஸ்பெட்டியில் இருந்து எடுத்து வைக்கப்பட்ட மீன்போல விறைத்துபோய் நின்றாள்.
இந்த சிறுஒழுங்கை காலி வீதியில் இருந்து வருவதால் இடைக்கிடை வாகனங்களின் வெளிச்சம் ஓளி வெள்ளமாக வந்தது. அப்பொழுது வந்த வெளிச்சத்தில் நிலத்தில் அரை நிர்வாணமாக புழுப்போல முடங்கியபடி கிடந்த சோபாவும் மதில் சுவரில் நிர்வாணமாக சாய்ந்து கிடந்த மீனாவும் பளிச்சென்று தெரிந்தார்கள். இந்தநேரத்தில் ஒரு வீட்டின் உள்ளிருந்து ரத்நாயக்கா வந்தார்.
“சிறுபிள்ளைகள் தயவு செய்து அவர்களை விடுங்கள்”; என சிங்களத்தில் மன்றாடினார். பொல்லை வைத்திருந்த ஒருவன் ரத்நாயக்காவின் தலையில் அடித்தான். “அம்மே” என கூறியபடி நிலத்தில் விழுந்தார். சிலகணங்களில் எல்லாம் நடந்துவிட்டன.
முன்பு வெளிச்சம் அடித்த வாகனம் ரிவேசில் வந்து ஒழுங்கையில் திரும்பியது. பொலீஸ் ஜீப் என தெரிந்ததும் அங்கு நின்ற காடையர்கள் ஓடத்தொடங்கினர்.
வாகனத்தின் பின்பகுதியால் இறங்கிய பொலிசார் இரத்தம் சிந்தியபடி கிடந்த இரத்நாயக்காவை தூக்க முயன்றனர். முன்பக்கத்தால் இறங்கிய இன்ஸ்பெக்டர் எல்லோரையும் ஜீப்பில் ஏற்றுங்கள் என்று கூறிவிட்டு கிழிந்த சட்டையால் தன்னை மறைத்துக் கொண்டடிருந்த சோபாவிடம் “தமிழா” என்று சிங்களத்தில் கேட்டார்.
“ஆம் “
“யார் இந்த மனிதன் “;?
நடந்த விடயத்தை கேட்டுக்கொண்டிருந்த போது ரத்நாயக்கா நிலத்தில் இருந்து எழுந்தார்.
“ஆஸ்பத்திரிக்கு போவோம் “ என்றார் இன்ஸ்பெக்டர்.
இரத்நாயக்கா சைகையால் மறுத்தார்.
அவரை தாங்கலாக பிடித்திருந்த பொலிசார் “மாத்தையாவின் பெயர் என்ன”? என்றார்.
“இரத்நாயக்கா, நான் ஓய்வுபெற்ற ராணுவ கப்டன்.”
பொலிசார் திடுக்கிட்டபடி, ஜீப்பின் தரையில் ஏற்றவிருந்த ரத்நாயக்கா ஆசனத்தில் ஏற்றப்பட்டார். அவருக்கு அருகில் மீனாவும் சோபாவும் ஏறினார்கள்.
“மாத்தையா நாங்கள் ஆஸ்பத்திரிக்கு போவோம் “ என்றார் ஒரு பொலிஸ்காரர்.
“எனக்கு காயம் இல்லை. இந்தப்பகுதி தமிழர்கள் எங்கே போய்விட்டார்கள்”?
“பெரும்பாலானவர்கள ரத்மலானை அகதிமுகாமில் இருக்கிறார்கள்.”
“அப்படியானால் அங்கே விடவும்.”
முன்சீட்டில் இருந்த இன்ஸ்பெக்டர் “ஆஸ்பத்திரிக்கு போய்விட்டு அகதிமுகாம் போவோம் மாத்தையா” என்றார். மிகவும் மரியாதை கலந்த குரலில்.
“இல்லை இன்ஸ்பெக்டர் தயவுசெய்து இந்த வழியாக உள்ள துணிக்கடை ஒன்றில் ஜீப்பை நிறுத்துங்கள்”.
“இந்தப்பக்கம் துணிக்கடையெல்லாம் எரித்து விட்டார்கள்.”
“அப்ப எனது தங்கச்சி வீடு பக்கத்தில் உள்ளது. அங்கே நிற்பாட்டவும்.”
“ஏன் மாத்தயா?” என்றார் இன்ஸ்பெக்டர்.
“இந்த இரண்டு பெண் பிள்ளைகளும் கிழிந்த துண்டுகளால் மானத்தை மறைக்க கஸ்டப்படுகிறார்கள். நமக்கும் பெண் பிள்ளகைள் இருக்குதானே. இந்த பிள்ளைகளை இவர்களின் பெற்றோர் பார்த்தால் அவர்கள் மனநிலை எப்படி இருக்கும்? நாங்கள் எல்லாம் புத்தசமயத்தவர்கள் எனக் கூறிக்கொண்டு எவ்வளவு அநியாயம் செய்திருக்கிறோம்.”
உள்ளே இருந்தவர்களுக்கு ஒவ்வொரு வார்த்தைகளும் சவுக்கால் அடித்தது போன்று நெஞ்சில பதிந்தது. ரத்தினாயக்கா சொல்லிய இடத்தில் ஜீப் நின்றது.
“தயவு செய்து உள்ளே வாருங்கள் பிள்ளைகள்” என் அழைத்தார் ரத்திநாயக்கா.
வீட்டுக்குள் சென்றதும் மத்திய வயதுடைய பெண் ஒருத்தி “ஐயெ, என்ன நடந்தது?” என பரபரத்தாள். ரத்திநாயக்காவை தொடர்ந்து வந்த சோபாவையும், மீனாவையும் பார்த்ததும் திடுக்கிட்டு நின்றாள்.
“இப்பொழுது பேச நேரமில்லை நங்கி. இருவருக்கும் நல்ல உடுப்பு கொடுத்துவிடு”.
இருவரும் உள்ளே சென்று புதிய உடை அணிந்து வந்தனர்.
“ஐயெ, எங்கே போகிறீர்கள்?” “
“இவர்களின் வீடுகள் எரிக்கப்பட்டது. குடும்பத்தினர் இரத்மலானை காம்பில் இருக்கலாம். அதுதான் அங்கே கொண்டுபோகிறேன்.”
“உங்களுக்கு என்ன நடந்தது? தலையில் இரத்தக்காயம் தெரிகிறேதே?”
“நான் பிறகு வந்து சொல்கிறேன். பிள்ளைகள் வாருங்கள்” என்று கூறிவிட்டு வெளியேறினர்.
காலிவீதியில் ஜீப்பில் போகும்போது பல தீக்கிரையாக்கப்பட்ட கடைகள் தெரிந்தன. பெரும்பாலான கடைகள் திறந்தே கிடந்தன. அவை கொள்ளையடிக்கப்பட்ட பின் தீக்கிரையாகியதைக் காட்டின. சில சிங்கள கடைகள் தமிழர் கடைகளுக்கு பக்கத்தில் இருந்ததால் தீக்கிரையாகின. அந்த கடைகள் பூட்டப்பட்டிருந்தன.
ரோட்டில் வாகனங்கள் இல்லாதபடியால், ஜீப் வேகமாக இரத்மலானை விமான நிலையத்தை அடைந்தது. பல வாகனங்கள் எயார்போட் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது. விமானம் நிறுத்தும் கொட்டகையின் முன்பாக வாகனங்களும் அவற்றைச் சுற்றி பலரும் கூட்டமாக நின்றனர். ஜீப் நின்றதும் வாகனத்தைவிட்டு இறங்கிய சோபாவுக்கும் மீனாவுக்கும் திகைப்பாக இருந்தது. விமானம் நிறுத்தும் கொட்டகை மனிதர்களால் நிறைந்து வழிந்தது.
“கவலைப்பட வேண்டாம் “;. என்றபடி இருவரையும் இரண்டு கைகளில் பிடித்தபடி ரத்நாயக்கா பொலிசாருக்கு நன்றி சொன்னார்.
இவர்களைச்சுற்றி ஒரு கூட்டம் கூடி “எங்கிருந்து வருகிறீர்கள்? என கேட்டனர்.
எதுவித பதிலும் சொல்லாமல் ரத்திநாயக்கா “எங்கே நிர்வாகம்? “ என ஆங்கிலத்தில் கேட்டார்.
“இங்கே நிர்வாகம் இல்லை. சாப்பாடும் இல்லை. எல்லோரும் அப்படி வந்தபடியே இருக்கிறோம்” என்றார். நடுத்தரவயதான மனிதர்கள், விரக்தியுடன்
வெவ்வேறு பகுதியில் இருந்து வந்தவர்கள், எந்த ஒழுங்கு முறையில்லாமல் ஒரே கொட்டகைக்குள் தகரத்தில் அடைக்கப்பட்ட சாடின்மீன்களை போல் தள்ளி விடப்பட்டிருப்பது தெரிந்தது.
“அம்மா” என்றபடி சோபா கூட்டத்தினுள் ஓடினாள். சோபாவின் தாயாரும் “மேளே” என்றபடி ஓடிவந்தாள். தாயை தொடர்ந்து இராசநாயகம் வந்தார்.
மாறிமாறி சோபாவை முத்தமிட்டபடி இரத்நாயக்காவிடம் “மீனாவை பற்றி கவலைப்படவேண்டாம். அவளது தாய் ஒரு முஸ்லிம் குடும்பத்தோடு தங்கியிருக்கிறார். நாங்கள் தகவல் அனுப்புவோம் “;.
இராசநாயகம் முன்னால் வந்து “மாத்தையாவின் பெயர் என்ன? என்றதும் என்பெயர் இரத்நாயக்கா ராணுவ கப்டனாக இருந்த எனக்கே இப்படி நிலைமை வந்து விட்டது” என கூறி தனது தலைக்காயத்தை காட்டினார்.
“உங்களை வாழ்நாள் முழுவதும் மறக்கவே மாட்டோம் “.
“இந்த அவலநிலைமை வெகுசீக்கரம் மாறவேண்டும். நான் வருகிறேன் “;. ஏன இத்நாயக்கா கூறி விட்டுசோபா, மீனாவின் தலைகளைத் அன்புடன் தடவிக் கொடுத்தார்..
“இப்படி மனிசரும் சிங்களவரில் இருக்கினம்” என இராசநாயகம் வியந்தார்.
“பிள்ளைகள் சாப்பிட்டீர்களா”?
“ஆம் என்று பதில் கூறிய சோபா அண்ணா எங்கே “? என்று கேட்டாள்.
“இந்தக் காம்பை பராமரிப்பவர்களுக்கு உதவி செய்யப் போயிருக்கிறான்” என்று இராசநாயகம். புதிலளித்தார்.
அன்று இரவு நிலத்தில் எல்லோரும் நித்திரை கொண்டார்கள். ஒருவரும் ஒருவரிடமும் பேசவில்லை. ஐம்பதினாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் அந்த விமானக் கொட்டகையில் அந்த நீள்இரவுகளைக் கழித்தார்கள்.
மறுமொழியொன்றை இடுங்கள்