இனவாதப்பாம்பு

நடேசன்

இலங்கையில் மீண்டும் தலைதூக்கியிருக்கும் இனவாதப் பாம்பு. சிங்களவருக்கோ தமிழருக்கோ இஸ்லாமியருக்கோ ஏன் முழு இலங்கைக்குமே நல்லதல்ல. புற்றுக்குள் ஓய்ந்திருக்கும் பாம்பு இரை தேடி வருவது போல், இந்த இனவாதப்பாம்பும் சந்தர்ப்பத்திற்காக காத்திருந்து வெளியே வரும். இந்த விவகாரத்தை சமூகநலன் கருதி தீர்க்கதரிசனத்துடன் அணுகவேண்டும்.

உணர்ச்சிவசப்படுதலை புறம் ஒதுக்கி அறிவுபூர்வமாக சிந்தித்து செயல்படல்வேண்டும். அம்பாறையிலும் கண்டி திகன பிரதேசத்திலும் அண்மையில் நடந்திருக்கும் அசம்பாவிதங்களில் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் நமது
நமது இஸ்லாமிய சகோதரர்கள்.

நல்லெண்ணம் கொண்ட தமிழர்கள் மட்டுமல்ல சிங்களவர்களும் இந்த அசாதாரண நெருக்கடியை கண்டித்திருக்கிறார்கள். இவ்வேளையில் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்களுக்கு குறைந்த பட்சம ஆறுதல் வார்த்தைகளாவது கூறவேண்டும்.

அதனைவிடுத்து முன்னைய கலவரங்களில் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டவேளையில் நிகழ்ந்த சம்பவங்களையும் ஒப்பிட்டு, அவர்கள் மீது முகநூல்களில் தவறான புரிதல்களை உருவாக்கும் செயல்களில் எவர் ஈடுபட்டாலும் கண்டிக்கத்தக்கதே.

பாதிப்புக்கள் எவருக்கும் எந்நேரத்திலும் எந்த ரூபத்திலும் வரலாம். இனவாதப்பாம்பு தலைதூக்குவதுபோன்று இயற்கை அநர்த்தங்களும் வரலாம். அதனால் எவரும் பாதிக்கப்படலாம். அத்தகைய தருணங்களில் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்பதே நியாயமானது. அத்துடன் பாதிப்புகளின் தோற்றுவாய் என்ன என்பதை கண்டறிந்து எதிர்காலத்தில் அவ்வாறு நிகழாதிருக்கவும் விழிப்புடன் இருக்கவேண்டியதும் சமுதாயக்கடமையாகும்.

முக்கியமாக நவீன தொடர்பாடல் ஊடகங்கள் மூலம் தவாறான பரப்புரைகளும் அதன்ஊடாக மேலும் மேலும் இனமுறுகளுக்கு தூபம்போடும் செயல்களும் விரும்பத்தக்கது அல்ல. முன்னர் இலங்கையில் நடந்த கலவரங்களில் வதந்திகள் விஷமாக பரவி மேலும் நெருக்கடிகளை உக்கிரப்படுத்தியிருந்ததை அறிவோம்.

சமகாலத்தில் அத்தகைய வதந்திகள் வாய்மொழியாக பரவாமல், நவீன ஊடகங்களின் வாயிலாக மின்னல் வேகத்தில் பரப்புரை செய்யப்படுகிறது.

இலங்கையில் கடந்த காலங்களில் கலவரம் நடந்தவேளைகளில் குறிப்பாக 1958, 1977, 1981, 1983 ஆகிய ஆண்டுகளில் இலங்கையை சிக்கலுக்குண்டாக்கிய காலங்களில் தமிழர்கள் பாதிக்கப்பட்டபோது இஸ்லாமியர்களும் பௌத்தர்களும் பாதுகப்பு வழங்கியுள்ளனர். அதனால் பலரதும் உயிர்கள் காக்கப்பட்டன.

இனவாத சக்திகளை தூண்டுவதற்கென்று இயங்கும் மிலேச்சர்கள் எங்கும் இருக்கிறார்கள். மதம், இனம், மொழி என்று உணர்ச்சியூட்டி அதில் குளிர் காயும் தீயவர்கள் அரசியல் அரங்கிலும் சமூகத்திலும் இருக்கவே செய்கிறார்கள்.

ஒரு நாட்டில் இனரீதியான கலவரங்கள் தோன்றினால், அது ஒரு குறிப்பிட்ட இனத்தை மாத்திரம் பாதிக்கமாட்டாது, முழுநாட்டினதும் பொருளாதாரத்தையும் பெரிதும் பாதிக்கும்.

அதனால் வாழ்க்கை செலவீனங்கள உயரும். பாதிக்கப்பட்டவர்களுக்காக வழங்கப்படவேண்டிய நட்ட ஈட்டை அரசு வேறு வழிகளில் மக்களிடமே விலை உயர்வுகளை திணித்து பொருளாதார நெருக்கடிகளை சுமத்திவிடும்.

அதனால் எந்தவொரு கலவரமும் அனைத்து சமூகங்களையும்தான் பாதிக்கும் என்பதை தீர்க்கதரிசனத்துடன் பார்க்கவேண்டும்.

இச்சந்தர்ப்பத்தில் மக்களிடம் வாக்குப்பெற்று அரசு அதிகாரத்திற்குச்செல்லும் தலைவர்களுக்கும் பதவிக்கு வரும் அரசுகளுக்கும் பாரிய பொறுப்பு இருப்பதையும் சுட்டிக்காண்பிக்க விரும்புகின்றோம்.

இலங்கைத்திருநாடு மூவின மக்களினதும் தேசம். இதில் பெரும்பான்மை – சிறுபான்மை வித்தியாசங்கள் இருந்தபோதிலும் அவரவர் வாழும் உரிமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்கள் நாட்டின் பிரஜைகள். அவர்களை பாதுகாப்பது அரசின் கடமை. அத்துடன் பாதுகாப்புத்துறையானது பக்கச்சார்பின்றி இன, மொழி, மத கண்ணோட்டமின்றி இயங்கவேண்டும்.

பிரதேசங்களில் மூவின மக்களின் பிரதிநிதிகளும் அங்கம் வகிக்கும் பிரஜைகள் குழுக்களுக்கும் பாதுகாப்புத்துறையில் திணைக்களமாக இயங்கும் பொலிஸாருக்கும் இடையில் காலத்துக்காலம் சமாதானப்பணிகள் முன்னெடுக்கப்படவேண்டும்.

இனமுறுகளை ஏற்படுத்தும் பொதுச்சொத்துக்களையும் தனியார் உடமைகளையும் பாரிய சேதத்திற்குள்ளாக்கும், மனித உயிர்களை அழிக்கும் சக்திகளுக்கு கடுமையான தண்டனை வழங்கும் சட்டங்கள் அமுல்படுத்தப்படல்வேண்டும்.

“இனவாதப்பாம்பு” அதற்கு 4 மறுமொழிகள்

  1. Dear Nadesan,
    Read
    Shared
    To be circulated among our Tamil community
    Best Wishes

    VAAN
    INDIA

  2. True! Police shd Take firm action! But They neglected their duty! It happened before!
    Safety,HR,dignity,freedom,Equality,Harmony are essential base towards Unity & Progress

  3. இவ்வாறான இனமோதல்களைத் தடுக்க ஒரே வழி; பல இனங்களை, பல மதங்களை சமனாகப் பேணுவதேயாகும். இதற்கு எதிராகப் பௌத்த சிங்கள நாடென இலங்கை அரசு செயற்படுவதால் மென்மேலும் இனமோதல்கள் தோன்ற இடமுண்டு. எனவே, இலங்கை அரசு தனது செயற்பாட்டை மாற்றி எல்லா இனங்களுக்கும் எல்லா மதங்களுக்கும் சம உரிமை உண்டெனப் பேணினால் இலங்கையில் அமைதி ஏற்பட வாய்ப்பு உண்டு.

  4. நன்றி நண்பரே . அரசு மட்டுமல்ல மக்களிடம் அந்தப்பொறுப்பு உள்ளது .

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: