செஞ்சதுக்கம் என்பது எனது இளமைக்காலத்தில் அதிகமாக காதில் வந்த விழுந்த அதேசமயம் படித்த வார்த்தையுமாகும்.இஸ்லாமியருக்கு மக்காவாகவும் கத்தோலிக்கர்களுக்கு ரோமாபுரியாகவும் புனிதமாக போற்றப்பட்டதுபோல், இடதுசாரி அரசியல்பற்றுள்ள இளைஞர்கள் மத்தியில் சோவியத் அரசு மற்றும் மாஸ்கோ மீது பற்றுதலைத்தோற்றுவித்தது.
அக்காலத்தைய எண்ணம் இப்போது இல்லாதபோதும் மாஸ்கோவிற்கு சென்று அங்குள்ள செஞ்சதுக்கத்தைப் பார்ப்பது என்பது மனதில் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. கமியூனிஸ்டுகளால் செஞ்சதுக்கம் என்ற பெயர் வந்ததோ எனமுன்பு நினைத்திருந்தேன்.
அந்தப்பகுதி முழுவதும் சிவப்புகற்கள் பதிக்கப்பட்டு சிவப்பாகவே காட்சியளித்தமையால்தான் செஞ்சதுக்கம் என்ற பெயர் வந்திருக்கிறது என்பதை நேரில் பார்த்த பின்னர்தான் தெளிவாகியது.
அதிலும் இரவில் சென்று மின்சார ஒளியில் பார்க்கும்போது கண்ணை கவ்வியெடுக்கும் அழகான பிரதேசமாக காட்சிதந்தது
நாங்கள்போவதற்கு முதல்நாள் வெடிகுண்டுப் புரளியால் 15000 பேர் அவசரமாக அங்கிருந்து வெளியேறினார்கள். நாங்கள் அன்று இரவு ஒரு மணி நேரம் அந்த இடத்தில் அலைந்து திரிந்தபோது மனதில் முதல்நாள் குண்டுப்புரளி நினைவில் வந்தபடியிருந்தது.
செஞ்சதுக்கத்தின் ஒரு பகுதியில் கிரம்ளின் என்படும் ரஸ்சிய அரச அலுவலகம் மாஸ்கோ நதியருகே கோட்டையாக அமைந்துள்ளது. அதுவும் சிவப்பு நிறமே. வண்ண வண்ண பம்பாய் வெங்காயம் போன்ற முட்டிகளைக் கொண்டது புனித பசில் தேவாலம்.
கிரம்ளினுக்கு எதிரே லெனினது உடலை இன்னமும் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் நினைவுச் சதுக்கமும் உள்ளது.அருகில் மிகப் பெரிய சொப்பிங் சென்ரரும் உள்ளது. தற்போது இந்தப்பகுதி ஐக்கிய நாடுகள் கலாசாரப்பிரிவால் பாதுகாக்கப்படுகிறது.
செஞ்சதுக்கம் உல்லாசப்பிரயாணிகளால் நிரம்பி வழிகிறது. அவர்களில் பெரும்பகுதியினர் சீனரே என்பதை செஞ்சதுக்கத்தில் நிரம்பி வழிந்த மாண்டரின் மொழி உரக்கச் சொல்லியது.
காலையில் கிரம்ளின் உள்ளே சென்றபோது, ஒருகாலத்தில் செங்காவலர்கள் எனக் கூறப்படும் காவலர் அணியினர் கடமையைமுடித்து மறு அணியினர் மாறிக்கொண்டிருந்தார்கள்.
எல்லோரும் அப்பொழுதுதான் மீசை முளைத்த இளைஞர்களாக தோற்றம் கொண்டிருந்தனர். அவர்களுடன் போட்டோ எடுத்துக்கொள்ள பலர் முனைந்தார்கள் அதில் சீனப்பெண்கள் முன்னிலை வகித்தார்கள்.
கிரம்ளின் மாளிகையை வெளியே நின்றே பார்க்க முடிந்தது. கமியூனிஸ்டுகளினது ஆட்சிக்காலத்தில் இங்குதான் கட்சியின் காங்கிரஸ் பிரமாண்டமான அரங்கத்தில் நடைபெறும். அரசியலுக்கு மட்டுமல்ல இங்கு நாடகங்கள் முதலான கலைநிகழ்ச்சிகளுக்கும் அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பிரபலமான மாஸ்கோ போல்சே தியேட்டரில் இசை நிகழ்ச்சிகள் நடக்கும். 6000 பேர் வசதியாக இருந்து பார்க்கக்கூடிய அரங்கமிது.தற்போதைய பளிங்கால் அழகாகக்கட்டப்பட்ட இந்த அரங்கு குருஷ்ஷேவ் காலத்தில் கட்டப்பட்டது
கிரமளினுக்குள்ளே மிகப்பெரிய பீரங்கியும், இராட்சத மணியும் உள்ளது. இவற்றை ஜாரின் பீரங்கி, ஜாரின் மணி என்பார்கள். அந்த பீரங்கி என்றைக்கும் சுட்டதில்லை. அதேபோன்று அந்த மணியும் அடித்ததில்லை.
அந்த பிரமாண்டமான மணி உலகிலே மிகப்பெரியது( 201,924 kilograms) 10 ஆம் நூற்றாண்டுகாலத்தில் அங்கு தீப்பிடித்தாலோ அல்லது எதிரிகளது தாக்குதல் நேர்ந்தாலோ எச்சரிக்கை தரும் அபாய அறிவிப்பிற்காக உருவாக்கப்பட்டது.
17 ஆம் நுற்றாண்டில் கிரம்ளின் தீப்பிடித்தபோது மணி வைக்கப்பட்ட மரப்பீடம் தீப்பிடித்ததும் அதனை அணைக்க தண்ணீர் ஊற்றியபோது மணி உடைந்து குழிக்குள் வீழ்ந்தது. மாஸ்கோவைக் கைப்பற்றிய நெப்போலியன் மணியை எடுத்துச் செல்ல முயன்றாலும் அதன் பாரத்தால் முடியவில்லை. தற்பொழுது மணி, கற்பீடத்தில் உள்ளது. அதேபோல் பீரங்கி(39.312 தொன்கள்). இது வெண்கலத்தாலானது. எங்காலத்திலும் பாவிக்கவில்லை. இரும்பு அல்லது ஈயக்குண்டுகளை வைத்து சுடும்போது வெண்கலம் தாங்காது என்பதால் பாவிக்கமுடியாது.
லெனின் நினைவுச் சதுக்கத்தை பார்ப்பதற்கு எங்களது குழுவில் எவருமில்லை. நான் மட்டும் சென்று விசாரித்தபோது கிழமையில் சில நாட்கள் மட்டுமே திறக்கப்படுவதாக கூறினார்கள். மேலும் சுற்றிவர திருத்த வேலைகள் நடந்தன. ஒரு காலத்தில் மக்கள் தினமும் கிலோமீட்டர் நீளத்திற்கு வரிசையாக நிற்பார்கள் என்றார்கள்
செஞ்சதுக்கத்தில் உள்ள மற்றையது கசான் தேவாலயம். இது 1939 முற்றாக ஜோசப் ஸ்ராலினால் உடைக்கப்பட்டது. தற்போது மீண்டும் புதிதாக கட்டியெழுப்பி ஆராதனைகள் நடத்துகிறார்கள்.நாங்கள் சென்றபோது அங்கு ஆராதனைகள் நடைபெற்றன. வாசலில் சென்று எட்டிப்பார்த்தேன்.வாசலில் நின்று பியானோ வாசித்தபரட்டைத் தலையுடைய மனிதர் என்னைப் பார்த்தபோது, அவரிடம் இரண்டு ரூபிள்கள் கொடுத்துவிட்டு விலகினேன்
மதியமானதால் பக்கத்தில் இருந்த சொப்பிங் சென்டரில் உணவருந்தினோம். மற்றைய ஐரோப்பிய நாடுகளைவிட இங்கு உணவு மலிவானது. மாலையில் கடைகளுக்குச் சென்றோம். ரஸ்சியப்பொருட்கள் மலிவாக இருந்தன.ஆனால், மேற்கு ஐரோப்பிய நாடுகளின் தடையால் விஸ்கி, சீஸ் போன்றவை அதிக விலையில் இருந்தன. ஐரோப்பிய பழங்களுக்குப் பதிலாக துருக்கிய பழங்கள் இருந்தன.உடைகள், எலக்ரோனிக் பொருட்கள் உலகெங்கும் சீனாவே அனுப்புகிறது. ரஸ்சியா போன்ற பிரமாண்டமான ஒரு தேசத்தை வர்த்தகத் தடைமூலம் அடிபணிய நினைக்கும் அமரிக்காவின் கனவு, கனவாகவே இருக்கும்
மறுமொழியொன்றை இடுங்கள்