இலங்கையில் மூவின மக்களின் நலனுக்காக
மெல்பனில் கெயர்லங்கா (Care Lanka ) தகவல் அமர்வு
இலங்கையில் அனைத்து சமூகங்களினதும் நலன்களையும் அபிலாஷைகளையும் கவனிக்கும் பொருட்டும், கல்வி, வாழ்வாதாரம், சுகாதாரம், நல்லிணக்கம், சமாதான சகவாழ்வு முதலான நோக்கங்களுடனும், அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் மூவின சமூகங்களின் பிரதிநிதிகளும் இணைந்து செயற்படும் கெயர்லங்கா (Care Lanka ) அமைப்பின் தகவல் அமர்வு அண்மையில் நடந்தது.
மெல்பனில் கடந்த ஆண்டு இறுதி முதல் இதற்கான ஆலோசனைக்கூட்டங்கள் நடந்தன. கடந்த சனிக்கிழமை 24 ஆம் திகதி VERMONT SOUTH COMMUNITY CENTRE மண்டபத்தில் இந்த அமைப்பின் தகவல் அமர்வும் செயல்திட்டங்களின் காணொளிக்காட்சியும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் இந்த அமைப்பின் பொருளாளர், இலங்கை தூதரகத்தின் விக்ரோரியா மாநிலத்தின் முன்னாள் Consulate திரு. பந்து திஸாநாயக்க உரையாற்றுகையில் ” எமது தாயகத்தில் வாழும் மூவின மக்களின் எண்ணங்களையும் கவனத்தில் கொண்டு அவர்களின் தேவைகளுக்கு எவ்வாறு இங்கிருந்து உதவுவது என்பதை ஆராய்ந்து, அரசமட்டங்களில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் இன ஐக்கியத்திற்கு பாடுபடுவதற்கும் எம்மத்தியில் ஒரு அமைப்பின் தேவை குறித்து நீண்டகாலமாக ஆலோசித்துவந்தோம். இதுவிடயத்தில் இங்கு வாழும் சமூகரீதியாக நல்லெண்ணம் படைத்த சிலர் ஒன்றிணைந்து எங்கள் தாயகத்தின் நன்மை கருதி “கெயர்லங்கா” என்ற அமைப்பினை உருவாக்குவதற்கு ஆலோசித்தோம். இன்று எமது அமைப்பின் நோக்கம் நிறைவேறியிருக்கிறது. தொடர்ச்சியாக தொடர்பாடல்களை மூவின மக்களிடமும் ஏற்படுத்துவதுடன் காலத்துக்கு காலம் அரச மட்டத்திலும் பேச்சுவார்த்தைகளை இந்த அமைப்பு நடத்தும்” என்றார்.
கெயர் லங்கா அமைப்பின் தலைவரான டொக்டர் நடேசன் உரையாற்றுகையில், ” இன, மத வேறுபாடின்றி இலங்கையில் அனைத்து சமூகங்களினதும் நலன்களை ஆக்கபூர்வமாக கவனிப்பதன் ஊடாக நல்லிணக்கத்தை பேணமுடியும்.” என்றார்.
அமைப்பின் துணைச்செயலாளர் திரு. இராஜரட்ணம் சிவநாதன்,” மக்களின் நலன்கள், தேவைகள் கருதியும் அவர்களின் வாழ்வாதாரம் குறித்தும் எந்த அடிப்படையில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளமுடியும் என்பதை காணொளிக்காட்சி மூலம் விளங்கப்படுத்தினார்.
டொக்டர் ரஞ்சித் ஹெட்டியாராய்ச்சி உரையாற்றுகையில் “இலங்கையில் 2004 இறுதியில் சுநாமி கடற்கோள் அநர்த்தத்தின்போது மக்கள் இன மதவேறுபாடின்றி புனர்வாழ்வுப்பணிகளில் ஈடுபட்டதை சுட்டிக்காண்பித்து, மனிதநேயம் ஒவ்வொருவர் மனதிலும் குடியிருக்கிறது. அந்தப்பண்புகளின் ஊடாக இதர பிரச்சினைகளுக்கும் நாம் தீர்வு காணமுடியும்.” என்றார்.
” இலங்கையில் மருத்துவத்துறையில் மேலும் முன்னேற்றங்களை காண்பதற்கும் கெயார் லங்கா, முயற்சிகளை மேற்கொள்ளவிருப்பதாகவும், இதுவிடயத்திலும் எமது அமைப்பு தீவிரமாக இயங்கவேண்டிய தேவை இருப்பதாகவும் அமைப்பின் துணைத்தலைவரான டொக்டர் விஜய ஞானசேன தெரிவித்தார்.
திரு. இம்தியாஸ் முகம்மட் பேசுகையில், ” இலங்கையில் மேற்கொள்ளவிருக்கும் அபிவிருத்திகளுக்கு இனமுரண்பாடு பல சந்தர்ப்பங்களில் குந்தகமாகவே இருக்கிறது. அதனைக்களைவதற்கும் புகலிடத்தில் வாழும் எம்மவர்கள் தீவிரமாக அக்கறை காண்பிக்கவேண்டும். அதற்கு கெயர் லங்கா அமைப்பு பாடுபடவேண்டும்” என்றார்.
தமிழ், சிங்கள, முஸ்லிம் அன்பர்கள் கலந்துகொண்ட கெயர் லங்கா அங்குரார்ப்பண நிகழ்வு புரிந்துணர்வு மிக்க கலந்துரையாடலுடன் நிறைவுபெற்றது. எதிர்வரும் ஏப்ரில் மாதம் கெயர் லங்காவின் மற்றும் ஒரு ஒன்றுகூடல் சந்திப்பு ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. அமைப்பின் செயற்திட்டங்கள் அவ்வப்போது தெரிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் இக்கூட்டத்தில் சொல்லப்பட்டது.
மறுமொழியொன்றை இடுங்கள்