பரிசோதனை டிஸ்ஸில் வளர்ந்த பக்டீரியா கொலனிகளை மேசையில் வைத்து கீழே குனிந்தபடி எண்ணிக் கொண்டிருந்த சந்திரனின் முதுகில் பலத்த அடி விழுந்தது.
எரிச்சலுடன் திரும்பியபோது குண்டலராவ் நின்றான். முகத்தில் சந்தோசம் வந்தது.
“எப்படி உன் ஆராய்ச்சி போகிறது” என்றான் சந்திரன்.
“பரவாயில்லை ஏதோ போகிறது” என்றான் சலித்தபடி.
இந்த ஆய்வுகூடத்தில் கலாநிதிப் பட்டத்திற்கு படிக்கும் மூன்றாவது மாணவன் அவன். இந்தியாவில் ஆந்திரப்பிரதேசத்தில் இருந்து வந்து ஸ்கொலசிப்பில் படிக்கிறான்.
“என்ன இலங்கை-இந்திய மகாநாடு நடக்கிறதா”? எனக் கேட்டபடி சிண்டியும் வந்து சேர்ந்தாள்.
“உங்களுக்குத் தெரியுமா? அபரோஜினல் சிறுவன் ஒருத்தன் ரெட்போன் பொலிஸ் துரத்தும்போது கம்பிவேலியில் பாய்ந்து இறந்து விட்டான். ரெட்போனில் எங்கும் கலவரமாம்” என்றாள் சிண்டி பரபரப்பாக.
சிண்டிக்கு அபரோஜினல் விடயங்கள் உடனடியாக தெரியவரும். இவள் அடிக்கடி அவுஸ்திரேலிய கிறீன் கட்சி விவாதங்களில் பங்குபற்றுவாள்.
“ரெட்போனில் எப்போதும் பிரச்சனைதான்”. குண்டல்ராவ் சலிப்பு கலந்த குரலில கூறினான்
குண்டலராவுக்கு இப்படியான அரசியல் விடயங்களில் அக்கறை கிடையாது. ஆந்திர மாநிலத்தில் பண்ணையார் குடும்பத்தில் இருந்து வந்தவன். சாதி சமய நம்பிக்கைகளில் பிடிப்புள்ளவன்.
சிண்டி விடவில்லை. “ரெட்போன் பிரச்சனைக்கு அங்குள்ள மக்கள் காரணம் இல்லை. அந்தப்பகுதியை அபிவிருத்தி செய்யாமல்.புறக்கணிக்கும் அரசாங்கந்தான் காரணம். உனக்கு ஒரு பெண் போன் பண்ணினாள்” என்று சந்திரனிடம் ஒரு நம்பரை தந்தாள்.
ஆச்சரியத்துடன் அந்த தொலைபேசி இலக்கத்தை வாங்கிக் கொண்டான். குண்டல்ராவும் சிண்டியும் விடைபெற்றுக் கொண்டனர்.
அன்று சனிக்கிழமை. குண்டலராவின் வீட்டுக்கு வருவதாக ஒப்புக் கொண்டிருந்தான். காலையில் பிளெமிங்ரன் மாக்கெட்டில் மீன் வாங்கி வந்து வாகாக குழம்பு சமைத்தான். மீன் வெட்ட சோபாவுக்கு தெரியாது. அப்படி வெட்டிக் கறி வைத்தாலும் உப்பு புளி கூடிக் குறைந்து இருக்கும். ஆரம்பத்தில் இந்த விடயத்தில் மனத்தாங்கல் ஏற்பட்டது. சுமன் பிறந்தபின் மீன் இறைச்சி சமைப்பதை சந்திரன் செய்வதால் குறைந்த பட்சம் அந்த விடயத்திலாவது பிரச்சனை தவிர்க்கப்பட்டது..
“மதிய சாப்பாடுக்கு பின் சோபா என்னுடன் படிக்கும் குண்டலராவ் வீட்டுக்கு இன்று வருவதாக சொல்லி இருந்தேன் என தகவல் சொன்னான்.
“அதுக்கென்ன நீங்கள் போங்கள்.”
.
“நீயும் வந்தால் நல்லது.” உரையாடலில் எதுவித ஈடுபாடும் காட்டாது விட்டேத்தியாக ரெலிவிசனை பார்த்தபடி இருந்தாள். சந்திரனுக்கு இந்த நடத்தை எரிச்சலை ஊட்டினாலும் இப்படியான விடயங்களில் சண்டையில் ஈடுபடுவதில்லை எனத் தனக்குள் ஒரு தீர்மானம் செய்திருந்தான்.
மதிய நேரமாதலால் டிவியில் ரக்பி நடந்து கொண்டிருந்தது. சந்திரனுக்கு கிரகிக்க முடியாத விடயங்களில் அதுவும் ஒன்று சனிக்கிழமையானால் டிவியில் இந்த ரக்பி ஆக்கிரமிக்கும். சிட்னி மோர்ணிங் கெரால்ட் பத்திரிகையை எடுத்துக் கொண்டு படுக்கைக்கு சென்றான். பக்கத்தில் தொட்டிலில் படுத்து நித்திரை கொள்ளும் சுமனின் கன்னத்தில் மெதுவாக முத்தமிட்டு விட்டு வாசிக்க முனைந்தான்.
சுற்று கண்ணயர்ந்த பிறகு விழித்தபோது பக்கத்தில் சுமன் இல்லை. சுமனை மடியில் வைத்து ரெலிவிசனை பார்த்துக்கொண்டிருந்தாள் சோபா.
“சோபா வெளிக்கிடு. இப்ப வெளிக்கிட்டாதான் ரிச்மண்டுக்கு போய்வரமுடியும்.”
எந்தவிதமான மறுப்பும் இல்லாமல் உடைமாற்றச் சென்றாள். ஊர்க்காரப் பெண் எனக் கொழும்பில் இருந்துவந்த போட்டோவை பார்த்து தான் திருமணத்திற்கு சம்மதித்தான். மருண்ட கண்களும், நீள் வட்ட முகமும் ஏதோ ஒரு தமிழ்ப்பட நடிகைளின் சாயலைக் காட்டியது. பல்கலைகழக காதலில் ஏற்பட்ட தழும்புகளை தடவிக்கொண்டு சோக ராகம் ஒன்றை இசைத்துக்கொண்டிருந்த சந்திரனுக்கு சோபாவின் போட்டோ ஒருவடிகாலாக இருந்தது. போட்டோவைப் பார்த்து சம்மதித்தாலும் மனத்தில் பெண்ணை நேரடியாக பார்க்காமல் திருமணத்திற்க்கு சம்மதம் தெரிவிப்பதற்கு மனத்தில் தயக்கம் இருந்தது. அந்த தயக்கம் சிட்னி கிங்ஸ்போட் விமான நிலையத்தில் சோபா வந்து இறங்கிய போது விலகிவிட்டது. தனது மணப்பெண் தெரிவுக்கு தன்னை மெச்சிக்கொண்டான்.
சிவப்பு சேலை உடுத்தி அதன் மேலே பச்சை வூலன் ஜம்பரைப் போட்டுக் கொண்டும் வெளியே வந்தாள். சுமனை தூக்கியபடி வந்த சந்திரன் காரின் பின் சீட்டில் குழந்தைகக்கான கப்பிசியூலில் சுமனை வைத்துக் கட்டியபின் “சோபா முன்னுக்கிருக்கிறாயா?” என்று கேட்டான்.
“இல்லை. நானும் பின்சீட்டில் இருக்கிறேன்” எனக்கூறிவிட்டு காரில் ஏறினாள்.
குண்டல்ரெட்டி திருப்பதி பல்கலைக் கழகத்தில் படித்துவிட்டு அவுஸ்திரேலியாவுக்கு வரும்பேர்து திருமணம் செய்து கொண்டவன். ஆந்திரப்பிரதேசத்தில வாழும் பண்ணையார் குடும்பம். இவனை நினைக்கும்போது சந்திரன் மனதில் வரும் கதை ஒன்று உண்டு.
“சந்திரன் நான் அவுஸ்திரேலியாவுக்கு படிக்க வரும்போது எங்கள் பண்ணையில் வேலைசெய்யும் தொழிலாளர்கள் பெரிய கொண்டாட்டத்தை பண்ணiயில் ஒழுங்கு செய்தார்கள்.”
“ஏன் நீ எல்லோருக்கும் பிடித்த முதலாளியாக இருந்தாயா”?
“இல்லை நான் வெளிநாடு போவது அவர்களுக்கு சந்தோசம். நான் கண்டிப்பாக வேலை வாங்குவது அவர்களுக்கு பிடிக்காது.”
சனிக்கிழமை என்றாலும் வீதியில் நெரிசல் இருந்தது. சோபாவின் மெனனம் எரிச்சலை மூட்டியது.
குண்டல்ராவின் வீடு பல்கலைக்கழகத்துக்கு அண்மையில் உள்ளது. வீட்டின் முன்பகுதி சிறிதாக இருந்தாலும் அழகாக புல் வெட்டப்பட்டிருந்தது. புல்வெளியை சுற்றி பலவண்ண ரோசாக்கள் பூத்திருந்தது . காரில் இருந்து இறங்கியதும் குண்டல்ரெட்டி மனைவியுடன் வாசலில் நின்று வரவேற்றான்.
“இலகுவாக கண்டுபிடித்தீர்களா? “என விசாரித்துக் கொண்டே வீட்டின் உள்ளே அழைத்து சென்றான். ரமாவை பலமுறை பல்கலைக்கழகத்தில் சந்தித்ததால் சோபவுக்கு மட்டும் அறிமுகம் செய்தான்.
ரமா சுமனை தனது கையில் வாங்கியபடி “ஆம்பிள்ளைப்பிள்ளை! எத்தனை மாதம்?;” என்று ஆசையாக கேட்டாள்.
“ஆறுமாதம்”, என்று சொல்லிக்கொண்டு சமையல் அறைக்குள் ரமாவுடன் சென்றாள் சோபா.
“குண்டல், உனது தோட்டம் நல்லா இருக்கிறதே! புல்லுவெட்டுவது நீதானா?”
“அந்தப் பகுதி எல்லாம் ரமாதான்”.
“நீ அதிர்டஸ்சாலி”, என்றான். இருவரும் வரவேற்பு அறையில் அமர்ந்தனர்.
“உன் மாமா மாமி உன்னுடன் தானே?.”
“இல்லை அவை தனியாக இருக்கினம்.”
வார்த்தைகளில் தெரிந்த சங்கடத்தை உணர்ந்தபடியால் “சந்திரன் பியர் குடிக்கிறாயா?” என்று பிரிஜிலிருந்து பியர் கான்கள் சிலவற்றைக் கொண்டு வந்தான் குண்டல்ரெட்டி.
ஆந்திர சமையல் காரமாக இருந்தது. சந்திரனுக்கு பியருடன் காரம் தெரியவில்லை. சோபாவின் கண்களில் கண்ணீர் வந்தது.
ரமா சாப்பிடும்போது சுமனை தூக்கி வைத்திருந்தபடி “பிள்ளைக்கு தாய்பால் கொடுக்கிறதா? “, என எதார்த்தமாக கேட்டாள்.
சாப்பிட்டுக் கொண்டிருந்த சோபாவுக்கு புரை ஏறியது.
“இல்லை”, என்றான் சந்திரன்.
பிள்ளை பிறந்து ஒருமாத்தில் தாய்ப்பால் நிறுத்தப்பட்டது. சந்திரனே அதை செய்வித்தான். சுமன் பிறந்து ஒரு வாரத்தில் நித்திரை கொள்ள முடியாமல் உடல் எரிவு, நெஞ்சில் நோ, வயிற்றுவலி என பல விடயங்களால் சோபா துன்பப்பட்டாள் எப்பொழுதும் அழுகையும் கண்ணீரும்தான்;. பிள்ளை பிறந்ததால்தான் .இவை எனக்கூறி மருத்துவர் தாய்க்கு மருந்துகள் கொடுத்தார். தாய் சாப்பிட்ட மருந்துகள் பிள்ளைக்கு கூடாது என்ற காரணத்தால் தாய்ப்பாலூட்டுதல் நிறத்தப்பட்டது. புட்டிப்பாலுடன் இசைவு பெறுவதில் சுமன் சிரமப்படவில்லை. சோபா பால்கட்டியாக நெஞ்சு நோ என அழுதாள். சுந்திரன் அவள் துடிப்பதைப்பார்த்து தனது வாயால் தாய்ப்பாலை எடுத்து சந்திரன் மார்பு நோவை குறைத்தான்.
குழந்தையின் பராமரிப்பை மனதிற்கொண்டு சோபாவும் தாய் தந்தையரை ஏற்கனவே அவுஸ்திரேலியாவுக்கு வரவழைத்திருந்தாள். இவர்கள் வந்தபின் சந்திரனுக்கும் இவர்களுக்கும் ஏற்பட்ட பிணக்குகள் தொடர்கதையானது. எப்படி இவற்றை ரமாவிடம் விளக்க முடியும்?
காரில் திரும்பும்போது சோபா “அந்த மனிசி இப்படி கேட்டுவிட்டதே, நான் பால் கொடுத்தால் என்ன?, கொடுக்கா விட்டால் என்ன?” என முணுமுணுத்தாள்.
“சோபா இது சாதாரணமான கேள்வி. ரமா கிராமத்துப்பெண். வஞ்சகம் இல்லாமல் கேட்டாள். நீ ஏன் இதனை பெரிதாக எடுக்க்pறாய்?”
சந்திரனின் வார்த்தைகளை மீறி பேசாவிடினும் சோபாவின் மனக்கலக்கம் கண்களிலும் முகத்திலும் தெரிவது சந்திரனுக்கு காரின் ரியர்வியூ மிரரில் தெரிந்தது.
வீட்டை அடைந்ததும் சுமனை தொட்டிலில் போட்டுவிட்டு உடையை மாற்றிக்கொண்டு படுக்கைக்கு வந்தாள். சந்திரன் அந்தக்கிழமை வெளிவந்த டைம்ஸ் மகசீனை படிக்க முயன்றான். குடித்த இரு பியர்களால் மனத்தை ஒருமுகப்படுத்த முடியவில்லை. மகசீனை மூடிவைத்தபோது சோபா உள்ளே வந்தாள். இளநீல நைட்டியை அணிந்திருந்தாள். கட்டிலில் தலைப்பகுதியில் இருந்த விளக்கு வெளிச்சம் அந்த நைட்டியை ஊடுருவி சென்றது. தலையின் கலைந்த தோற்றம் தன்னை அலங்கரிக்கவில்லை என்று காட்டியது. கட்டிலில் படுத்தவள் மீது தான் போர்த்த போர்வையை இழுத்து உடலைப் போர்த்தான்;. அவளது முகத்தை பார்த்தபோது ஏற்பட்ட மாற்றத்தை கவனித்துவிட்டு, “ஐம் சொறி, பியர் மணக்குதா? “ என்றான்.
“இல்லை” எனச் சிரித்தாள்.
இந்தச் சிரிப்பை பலநாள்களாக பார்க்கவில்லை. கன்னத்தை வருடியபடி “எவ்வளவு அழகாக இருக்கிறாய்” என கையை கழுத்துக்கு தளர்த்தினான். நிதானமாக அவனைப் பார்த்தபடி உதடுகளை அசைத்தாள் உதட்டசைவில் நிதானம் இழந்து அவளுக்கு உதட்டில் முத்தம் கொடுத்தான். அவளும் அவனோடு நெருங்கி வந்தாள்.
சுமன் பிறந்த காலத்தில் இருந்தே சோபாவிடம் உடல் உறவுக்கு நெருங்க முடியவில்லை. ஆரம்பத்தில் குழந்தை பெற்றவள் பின்பு நோயாளிப்பெண் எனக் காரணங்கள் இருந்தன. குழந்தையை பராமரிக்க வந்த இராசம்மா மகளின் கட்டிலில் படுத்துக் கொண்டாள். குழந்தை அழுவதும் இரவில் நப்பி மாத்துவது காரணங்களாகி சந்திரனை வரவேற்று அறையின் சோபாவில் துயில் கொள்ள வைத்தது. மாமனார் இராசநாயகம் அடுத்த அறையில் படுப்பது வழக்கம்.
மாமன் மாமியிடம் பிணக்கு ஏற்பட்டு அவர்கள் கோம்புஸ்சுக்கு தனியாகச் சென்றபின் இருவரும் ஒன்றாக படுத்தாலும், ஏதோ தயக்கத்தால் இருவரும் நெருங்கவில்லை.
மெல்லிய நீலநிற ஸீதுறூ நைட்டியும், குண்டல் ரெட்டியின் பியரும்க காமத்தை கிளறி விட்டன. அந்த காம உணர்வு சந்திரனது குருதியில் பாய்ந்து உடலில் வெம்மையை கூட்டி ஆண்குறியை விறைக்கப்பண்ணியது. சோபாவின் உடல் பல நாள் பனிபாறைக்குள் அகப்படடு இறந்த துருவ விலங்கொன்றின் உடலைப் போல் இறுக்கம் கண்டது. சந்திரன் தனது கைகளை எடுத்து சோபாவின் மார்புகளை தடவிய போது அவள் விலக்கினாள். கட்டிலின் ஓரத்துக்கு சென்றாள். சந்திரன் காமத்தின் உச்சத்தில் நின்றபோது சோபா தனது போர்வையில் இருந்து விலகி குலுங்கி குலுங்கி அழுதாள். முகத்தை தனது கைகளால் மூடிக்கொண்டு தனது தனது முழங்காலில் முகத்தைப் பதித்துக்கொண்டு விம்மினாள். தலைமயிர் விரிந்து முகத்துக்கு மூடுதிரை போட்டது.
சந்திரன் தான் ஏதோ பெரிய தவறை செய்துவிட்டது போல உணர்ந்தான். கவறு என்னவென்று தான் விளங்கவில்லை. காமஉணர்வு ஓட்டைவிழுந்த ரயரில் இருந்த காற்றுப்போல் காற்றோடு கலந்து மறைந்தது.
“ஏய் என்ன நடந்தது. உனக்கு பிடிக்கவில்லை என்றால் சொல்ல வேண்டியதுதானே” எனக் கூறியவாறு அவளது கைகளை முகத்தில் இருந்து விலக்கினான்.
கைகளை முகத்தில் இருந்து பிரித்து அவனை அணைத்தபடி அழுதாள். உடலில் உள்ள நைட்டி அப்படியே விலகி விழுந்தது. முழு நிர்வாணமாக இருந்தாள். அவளது தோற்றம் மீண்டும் சலனத்தை உருவாக்காமல் இருக்க தன்னை மெதுவாக விடுவித்துக் கொண்டான். முழங்காலில் முகம் புதைத்து கேவிக்கேவி அழுதாள்.
“சோபா” என அழைத்து அவளது உச்சந்தலையில் மெதுவாக முத்தம் கொடுத்து விட்டு, அடுத்த அறைக்கு சென்றான். சேன்றவன் மீண்டும் வந்து விளக்கை அணைத்துவிட்டுச் சென்றான்.
சந்திரன் விளக்கை அணைத்துவிட்டு வெளியே சென்றபோது படுக்கையில் நிர்வாணமாக செதுக்கியசிலை போல இருந்தாள் சோபா. இருட்டில் அவளது உடலில் எவ்வித அசைவுகளும் தென்படவில்லை. மனதில் எரிமலை கொதித்து தணல்களை அள்ளிவீசிக் கொண்டு இருந்தது. நினைவுகள் தொடர்பற்று பல துண்டுகளாக அறுந்த சங்கிலி போல் தோன்றியது. இருளடைந்த பாதாள கிணற்றுள் விழுந்துகொண்டிருப்பது போன்ற உணர்வு அவளது உள்ளத்திலே ஏற்பட்டது
‘நான் சந்திரனை வெறுக்கிறேனா? அவனது காமத்தின் அணுகுமுறை பிடிக்கவில்லையா? முன்பு அவனது அணைப்பும் மெய் தீண்டலும் இன்பமளித்ததே! சுமன் பிறப்பதற்கு முன் இப்படி இருக்கவில்லையே? ஒவ்வொருநாளும் உடல் உறவில் என்னை மறந்தேனே. எத்தனை பகல் பொழுதுகள் கட்டிலில் கழித்தோம்? எப்போது வேலை முடிந்து வருவான் என யன்னலைத் திறந்து பார்ப்பேன். ஒரு பிள்ளையின் பின் பெண்மையின்
தாபம் என்னிடம் இருந்து விடை பெற்றுவிட்டதா?. அவர் தொட்டவுடன் ஏன் உடல் நெருப்பாக கொதிக்கிறது? சிலவேளை ஐசாக விறைக்கிறது. இப்படியாக எதிரும் புதிருமான தீவிர உணர்வுக்கு ஏன் எனது உடலும், மனமும் செல்கிறது?’
இப்படிச் சில கேள்விகள் அவளுடைய மனசை மொய்த்துக் கொண்டன.
அந்தக் கேள்விகளுக்கு அவளுக்குப் பதில் கிடைக்கவில்லை. குப்புற படுக்கையில் படுத்தால் நித்திரை வரவில்லை. ஏதோ ஒரு உருவம் நிழலாக வருவது போல் தோன்றியதும் பதட்டத்துடன் லைட்டைப் போட்டாள். வெளியே எட்டிப்பார்த்த போது எவருமில்லை. அடுத்த அறையில் சந்திரனின் லேசான குறட்டை ஒலி கேட்டது. சமையல் அறையில் உள்ள குளாயில் இருந்து தண்ணீர் எடுத்துக் குடித்துவிட்டு மீண்டும் கட்டிலுக்கு வந்தாள்.
கட்டிலுக்கு பக்கத்தில் உள்ள மேசையில் கிடந்த போட்டோ அல்பத்தைப் புரட்டினாள். தன்னுடன் படித்த தோழிகள் எப்படி எங்கே இருப்பார்கள்? என நினைத்துக் கொண்டு புரட்டியபோது மீனாவுடன் எடுத்த போட்டோவை பார்த்தாள்.
மீனா எப்போதும் மறக்கமுடியாமல் மனத்தில் நிறைந்திருக்கும் தோழி. சோபாவின் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவங்களில் மீனாவும் இருந்தாள். அந்த சம்பவங்கள் இன்றைக்கு நடந்தது போல் இருக்கிறது.
தொடரும்
மறுமொழியொன்றை இடுங்கள்