அன்னா கரினா
வடக்கின் வெனிஸ்’எனப்படும் பீட்டர்ஸ்பேக்கில் இருந்து எங்களது குழு மாஸ்கோ செல்லவேண்டும். அதிகாலையில் எழுந்து புறப்பட்டோம் பெருந்தொகையான மக்கள்கூட்டமும் ஏராளமான பிளட்பாரமும் உள்ள ரயில்வே நிலையத்தில் ஒருவர் பின்ஒருவராக சென்று ரயிலில் ஏறினோம். குழுவாகப் போகும்போது பாடசாலை மாணவர்கள் போன்ற உணர்வு ஏற்படும். மொழி புரியாத இடமென்பதால் அதிக கவனம். அத்துடன் தற்போது ரஸ்சியாவில், உல்லாசபிரயாணிகளிடம் பிக்பொக்கட் அடிப்பவர்கள் பெருகிவிட்டாரகளாம்.
இதுவரையும் மாஸ்கோ எனும்போது கிரம்லின்(Kremlin) என்ற சொற்றொடர் மனத்தில் வரும். ரஸ்சியா சென்ற பின்பே கிரம்லின் என்பது அவர்கள் மொழியில் கோட்டை என்றது தெரிந்தது. தமிழ்நாட்டிலும், கோட்டையில் யார் என்பது ஆட்சியாளரைக் குறிப்பதே என நினைத்தேன். அதுபோல் ஷார்( Czar or Tzar) )என்பது கிரேக்கத்து சீசரை பொருள் கொள்ளும்.
வாழ்கையில் எத்தனையோ விடயங்களில், கருத்தைப் புரிந்து கொள்ளாது பாவிக்கிறோம்.
ரஸ்சியாவின் சரித்திரம் மாஸ்கோவில் தொடங்கி, பின்பு பீட்டர்ஸ்பேர்கில் வந்து, மீண்டும் 2017ல் நிரந்தரமாக மாஸ்கோ வந்துவிட்டது. ஐவான் என்ற அரசனே ஜெங்கிஸ்கானின வாரிசுகளான தத்தாரியர்களை வென்று, மாஸ்கோவி நதியால் சூழப்பட்ட நில அமைப்பைக்கொண்ட பாதுகாப்பான இடமான மாஸ்கோவைத் தேர்தெடுத்தான். பிற்காலத்தில் ஸ்ராலின், ஐவனை தனது முன்னுதாரணமாகக் கொண்டு நடந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
‘
மாஸ்கோ சென்றடைய 700 கிலோ மீட்டர் தூரம். நான்கு மணி நேரத்தில் துரிதமாக புலட் இரயில் சென்றோம். எங்கள் எல்லோருக்கு விசேடமான கொம்பாட்மென்ட் ஒதுக்கபட்டிருந்தது. மிகவும் வசதியானது. காலை நேரத்தில் புறப்பட்டு மதியத்திற்கு பின்பாக மாஸ்கோ அடையும். பீடடர்ஸ்பேக்கின் மத்தியில் இருந்து மொஸ்கோவின் நகர் மத்திக்குச் செல்வதால், விமானப்பயணத்தை தவிர்த்து பெரும்பாலான உல்லாசப் பிரயாணிகள் இரயிலில் செல்வார்கள். தற்போதைய புலட் இரயில் ஜெர்மன் கொம்பனியால் செய்யப்பட்டது. இதைவிட இரவு செல்லும் சாதாரண இரயில்களும் ஓடுகின்றன. இவைகள் 700 கிலோமீட்டரைக் கடக்க எட்டு மணிநேரத்தை எடுக்கும்
ரஸ்சியாவில் 19 நூற்றாண்டின் நடுப்பகுதியில் நிக்கொல்லஸ் 1 மன்னனால் இந்த ரயில்வே பாதை பீட்டர்ஸ்பேர்கில் இருந்து மாஸ்கோவரை போடப்பட்டது. மாஸ்கோ, பீட்டஸ்ர்பேர்க் ரஸ்சியாவின் முக்கிய இரு அதிகாரமுள்ள நகரங்கள் என்பதால் ஆரம்பத்தில் அதிகாரிகள், பிரபுக்கள் மட்டுமே பயணித்தார்கள்.
பிற்காலத்தில் ரஸ்சியா போன்ற பெரியநாட்டில் சரக்குகள் ரயில்களின் தேவை அதிகமானதால் நாடெங்கும் ரயில் ரோட்டுகள் போடப்பட்டது. அக்காலத்தில் இருந்து இக்காலம் வரையும் அதிக அளவு பண்டங்கள் ரயிலாலே கொண்டு செல்லப்படுகிறது.கமியூனிஸ்டுகளின் காலத்தில் சரக்கு வண்டிகளினால் வரும் இலாபத்தில் பிரயாணிகள் பயணக்கட்டணங்கள் மிகக்குறைவாக இருந்தன.
அன்னா கரினா நாவலில் ரயில்ப் பாதையில் கதாநாயகி விழுந்து தற்கொலை செய்வது மட்டுமல்லாது இரயில் முக்கிய பாத்திரமாகிறது. டால்ஸ்டாயை பொறுத்தவரையில் ரயிலின் வருகையை, மனித வளங்களிற்கு எதிரான ஒன்றாகப் பார்க்கிறார். போக்குவரத்திற்கு குதிரை வண்டிகள், அதன் சாரதிகள் என்று நம்பியிருந்த சமூகம் திடீரென காணாமல் போவதை அவரால் சகிக்கமுடியவில்லை. மனிதர்களையும், குதிரைகளையும் வைத்து தனது உலகத்தை உருவாக்கியவர். ரயில்வேயின் வருகையைத் தீயசக்தியாக உருவகிப்பதற்காக அன்னாவின் தற்கொலை ஓடும் ரயிலில் நடந்தது.
மாஸ்கோ சென்ற இரவு நேரத்தில், மாஸ்கோ மெட்ரோ என்ற நகர நிலக்கீழ் ரெயிலில் சென்று பல ரயில் நிலையங்களை இறங்கிப்பார்த்தோம். ஒவ்வொரு நிலையமும் கலைக்கூடமாக உருவகித்திருந்தார்கள். சிலைகள், ஓவியங்கள், மொசாய்க் ஓவியங்கள் எனப் பார்ப்பதற்கு பரவசமான இடமாக அமைத்திருந்தார்கள்.
‘புரட்சிக்கு முன்பு அரசர்களும், பிரபுக்களும் தங்களுக்கு மாளிகைகளைக் கட்டி கலைப் பொருட்களையும், ஓவியங்களையும் அங்கு வைத்துப் பாதுகாத்தார்கள். நாங்கள் சாதாரண மக்கள் பாவனைக்காக மாளிகைகளை அமைக்கிறோம்’ என்று ஜோசப் ஸ்ராலின் உருவாகியது இந்த மெட்ரோ இரயில் அமைப்பு.
ஐந்து ரயில்வே நிலயங்களில் இரவில் இறங்கிப் பார்த்தபோது, எந்த ஐரோப்பிய நகர்களிலும் பார்க்காத கலைவடிவமாக அந்த ரயில்வே நிலயங்கள் காட்சியளித்து. இரண்டு நிமிட நேரத்துக்கு ஒரு முறை ரயில் வந்தபடியே இருந்தது. பார்ப்பதற்குப் பிரமிப்பாக இருந்தது.
மறுமொழியொன்றை இடுங்கள்