sholokhov
இரண்டு மணி நேரமாகத் தியேட்டரில் அறுநூற்றுக்கு மேற்பட்டவர்கள் கோசக்கியரது நடன நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்தபோது, அதில் நடனமாடிய கோசாக்கிய அழகி மேடையில் இருந்து இறங்கி வந்து எனது கையைப் பிடித்து மேடைக்கு அழைத்துச் சென்றாள்.அது நான் எதிர்பார்க்காத விடயம். ஆனால் எந்த எதிர்ப்பும் காட்டாமல் அவளது கைகளால் மேடைக்கு இழுக்கப்பட்டு சென்றேன். அப்படியே நடனம் தொடர்ந்தது. வான்வெளியில் உலவுவதுபோல் இருந்தது.முடிந்தவரையில் கால்களை அசைத்தேன்.அது ஒரு கிராமிய நடனமானதாலும் 20 பேருக்கு மேற்பட்ட இளைஞர்களும் பெண்களும் ஆடுவதால் அவர்களுக்குள் ஒருவனாக இருந்தேன். ஐந்து நிமிடம் ஐந்து மணித்தியாலமாக ஊர்ந்தது.
நடனம் முடிந்தவுடன் கண்ணை பட்டாம்பபூச்சியின் இறகுகளாக்கி கன்னத்தருகே ‘பிராவோ’ என்றாள். என்னைத் தொலைத்த நான் அவளது கன்னத்தில் முத்தம் கொடுத்தேன். கீழிருந்து வந்த கைதட்டல் ஒலி அதிர மேடையில் இறங்கினேன்.
இருக்கைக்குச் சென்றபோது இதுவரையும் நடனமாடுவதை எனது மனைவி போட்டோ எடுத்தபடியிருந்தார்.பக்கத்திலிருந்த ஒரு கனடாப் பெண் ‘நடனம் நன்றாக இருந்தது ஆனால் காலில் பூட்ஸ் பொருத்தமாக இல்லை’ என்ற வார்த்தை இறகின் கனமாக காதையடைந்தது. நான் முத்தத்தின் மயக்கத்தில் இருந்து மீளவில்லை.
கோசாக்கியர் நடனம் பீட்டர்ஸ்பேர்க் தியேட்டரில் நடந்தது. போர், காதல் என்பவற்றைக் கலந்த கதையாகும். ஆண்கள் பெண்கள் கலந்த நடன நிகழ்ச்சி. ஈட்டிகளும் தீப்பந்தங்களும் பாவித்த வேகமான நடன நிகழ்ச்சி. அவள் நடனத்தின் முடிவிலே என்னை அழைத்தது எனக்கு கிளைமாக்ஸ்சாக எனக்குத் தெரிந்தது.
கோசாக்கியர் வரலாறு மிகவும் வித்தியாசமானது.
ரஸ்சியாவின் பண்ணையடிமை முறையில் இருந்து தப்பியோடியவர்கள் ரஸ்யாவின் கிழக்கே குளிரான சைபீரியா போகமுடியாது. மேற்கே கத்தோலிக்க மதத்தவர்களைக் கொண்ட போலந்து. தெற்கே இஸ்லாமியர்கள் என்பதால் அவர்கள் சென்ற இடம் தென்மேற்கு கோக்கஸ் மலையடிவாரம். அங்கு சென்று குடியேறியவர்கள் சுதந்திர மனப்பான்மையுடன் விவசாயாகளாகினார்கள்.
16 -17ம் நூற்றாண்டுகளில் பிற்காலத்தில் அவர்கள் தனித்துவமான விவசாயச் சமூகமாக மாறினார்கள். குதிரையேற்றம் மற்றும் போரைத் ஒரு கலைத்திறமையோடு செய்யும் இவர்கள் குதிரைகளைத் தீவிரமாக நேசிப்பார்கள். அதேவேளையில் குதிரைகளிலும் கீழாகப் பெண்களை நடத்துவார்கள் என்று இவர்களில் இருந்து வந்த நோபல்பரிசு பெற்ற சோலக்கோ கூறினார்
18ம் நூற்றாண்டில் ரஸ்சிய மன்னரது ஆட்சியை ஏற்று அவரது படையில் சுதந்திரமான படைவீரர்களாகவும், அதே நேரத்தின் கோசாககியர்களது கலாச்சார வாழ்வு, பொருளாதாரத்தில் தலையிடுவதில்லை என்பதோடு, அவர்கள் தங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கக்கூடிய ஒரு சுயாதீனமான சமூகம் என்ற அங்கீகாரத்துடன் ஒப்பந்தமாகினார்கள்.
ரஸ்சியாவின்மீது படையெடுப்பில் ஈடுபட்ட நெப்போலியனது ஐரோப்பியப் படையை கொரில்லா தாக்குதல் மூலம் கிலி கொள்ளவைத்தவர்கள் இந்த கோசாக்கியார்களே. இதை பிரான்சிய இலக்கியங்கள் மூலமறியலாம்.
கிரமியன் யுத்தத்தில்(The Crimean War) அவர்களோடு சேர்ந்து போரிட்ட லியோ டால்டாய் அவர்களைப்பற்றி பல கதைகள் எழுதினார்கள்.வீரர்களாக இருந்த இவர்கள் சமூக உறவில் முக்கியமாகப் பெண்களை நடத்துவதில் பழமையைப் பேணுபவர்களாக நடப்பார்கள்.
ரஸ்சிய மன்னன் சார்பாக போரிடுவதாக இவர்கள் சபதமெடுத்தவர்கள் என்பதால் பிற்காலத்தில் புரட்சியின் பின் இவர்கள் போல்ஸ்சுவிக்குகளுக்கு எதிராக இருந்தார்கள். இதனால் இவர்களது காணிகள் பலாத்காரமாகப் பறிமுதல் செய்யப்பட்டும், இலட்சக்கணக்கில் கொலை செய்யப்பட்டும், சைபீரியாவிற்கு கடத்தப்பட்டார்கள். இறுதியில் மொத்தமான அழிக்கப்பட்டது சமூகமாகியது.
இவர்களில் இருந்து நாவலை சோலைக்கோ(And Quiet Flows the Don By Mikhail Sholokhov) எழுதினார். இந்த நாவல் நடந்த காலம் 19 நூற்றாண்டில் இருந்து முதலாவது உலகயுத்தத்தில் போல்ஸ்சுவிக்களால் அவர்கள் நிலங்கள், கலாச்சாரம் அழிவதைப் நமக்குக் காட்டுகிறது.
சோலக்கோ, சோவியத் கம்மியுனிஸ்ட் கட்சியின் அங்கத்தவராகவும் ஸ்ராலினோடு நட்பாக இருந்த ஒரு எழுத்தாளர் மட்டுமல்ல, ஸ்டாலினது 60 வது வயதில் வைன் போத்தலை ஒன்றாகப் பருகிக் கொண்டாடியவர். பல தடவை, பல எழுத்தாளர்களை புரட்சிக்கு எதிரானவர்கள் எனக் கொலை செய்ய முயற்சித்தபோது உயிர் தப்பவைத்தவர். தனது பிரதேசத்தில் பஞ்சம் ஏற்பட்டபோது நேரடியாக ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி உணவுப்பொருட்களை அனுப்புவதற்கு ஆவன செய்தவர்.
ரஸ்சிய மக்களால் மிகவும் மதிக்கப்பட்ட இலக்கியவாதியாக இருந்தவர் ஆனால் ஒரு முறை ரஸ்சியப் புரட்சிக்கு எதிரான கலைஞர்கள் சுடப்படவேண்டும் என்றார். அப்போது ஒரு பெண் ‘ கொம்ரேட் சோலக்கோ, இதுவரையும் ரஸ்சிய இலக்கியம் பாதிக்கப்பட்டவர்கள் பக்கமாக இருந்தது. எப்படி உம்மால் இப்படிச் சொல்லமுடிகிறது? இது இலக்கியத்தின் மலட்டுத்தன்மை ‘ எனக் கடிதம் எழுதினார். இதன் பின் அவரது நாவலின் 10000 பிரதிகள் வாசகர்களால் திருப்பியனுப்பப்பட்டது.
எப்படியிருந்தபோதும் புரட்சிக்குப் பின்வந்த முக்கிய இலக்கியவாதியாகவும், கோசாக்கியர் வாழ்வு, கலாச்சாரத்தை உலகறிய வைத்தவர்
நாங்கள் பார்த்த நடனமும் கோசாக்கியர் தங்களது கலாச்சாரத்தின் சில வடிவங்களை உயிர்ப்போடு வைத்திருக்கும் முயற்சியாகும்.
மறுமொழியொன்றை இடுங்கள்