அத்தியாயம் 1
சந்திரன் படுக்கையை விட்டு எழுந்து, திறந்திருந்த யன்னலை நோக்கிச் சென்றான். ஒவ்வொரு காலடிகளுக்கும் கோல்கோஸ்ட் எனப்படும் அந்த கடற்கரை நகரத்தின் இரவுப்போர்வை அவனது கண்களில் விரிவடைந்தது. யன்னலை அடைந்ததும் கம்பியில் கைவைத்தபடி வெறித்த பார்வையை வீசினான். கண்கள் வெளியே பார்த்தாலும், கருநீலமான பசுபிக் சமுத்திரம் அவனுக்குப் புலனாகவில்லை.
தனிமை அவனுக்கு கொடுமையாக இருந்தது. அவ்வளவு பெரிய ஹொட்டலில் தான் மட்டும் தனியாக இருப்பது போல் உணர்ந்தான். வெறுமையான ஏக்கம் நெஞ்செங்கும் நிரம்பி இருந்தது. தனிமை உளம் சார்ந்தது. ‘இந்த ஹோட்டலில் குறைந்தது ஆயிரம் மனிதர்கள் இருப்பார்களா?’ என அவன் நினைத்துக்கொண்டான்.
சடுதியாக வேறோர் உணர்வு குறுக்கிட, “பெண் உடலைத் தழுவி பன்னிரண்டு மாசங்களுக்கு மேலாகி விட்டதே” என சிறிது சத்தமாக கூறினான். எந்த உடற்குறையும் அற்ற, ஆறு அடிக்கு ஒரிரு அங்குலம் குறைவாக உள்ள முப்பது வயது ஆண் ஒருவனுக்கு வரவேண்டிய நினைப்புத்தான். இச்சந்தர்ப்பத்தில், அவனது நினைவில் அவனுடன் பழகிய பல பெண்கள் வயது வித்தியாசம் இன்றி கற்பனை வெளியில் அணிவகுத்தனர். இரத்த சம்பந்த உறவு உள்ளவர்களைவிட, மற்றவர்களின் அழகிய அவயங்கள் அந்நினைவுகளில் உல்லாசமாக ஊஞ்சலாடின.
‘ஆண்மகன் நித்திரைக்கு செல்லும் போதும் பின் கண்விழிக்கும் போதும் காமவசப்படுகின்றானா? இல்லை, நவீன மனிதன் இந்த நேரத்தில் மட்டும் ஓய்வாக இருக்கிறான் என்பதால் இந்த எண்ணங்கள் வந்து போகிறதா?” சமாதானம் தேடி அவன் மனசிலே இக்கேள்விகள் எழுந்தன. உணர்வுகளுக்கு உட்பட்டாலும் சந்திரனுக்கு விளக்கம் தேவைப்பட்டது.
ஆரோக்கியமான இளைஞனின் மனதில் இந்த எண்ணங்கள் ஏற்படுவது சாதாரணமானதுதான். சந்திரன் சராசரிக்கும் மேலானவன். விஞ்ஞானத்துறை ஒன்றிலே கலாநிதிப்பட்டம் பெறுவதற்கான ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளவன். திருமணமாகிய இரண்டு வருடங்களில் அதன் விளைவை அறிவிப்பது போல் ஆறுமாதத்தில் ஒரு குழந்தையும்; உள்ளது.
சந்திரனோடு வந்த சகஆராய்ச்சியாளனும் நண்பனுமாகிய குண்டல்ராவ் இன்று காலையே சிட்னி சென்று விட்டான். இவர்கள் இருவருக்குமாக இவர்களது பல்கலைக்கழகம் இரண்டு அறை கொண்ட சூட் ஒன்றை மூன்று நாள் வாடகைக்கு எடுத்திருந்தது. கோல்கோஸ்ட் கொன்பிரன்ஸில் இரண்டு நாள் சுற்று சூழல் பற்றிய உலக விஞ்ஞானிகளின் சந்திப்பு நடந்தது. பல்கலைக்கழகம் சார்பாக சந்திரனும் குண்டல்ராவும் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்திருந்தார்கள்.
சோபா வந்திருக்கலாம்! நான் கேட்டேனே. அவள்தான் வரவில்லை என்றாள். வந்திருந்தால் கோல்கோஸ்டை சுத்திப்பார்த்திருக்கலாம்” இடைவெட்டில் சந்திரனின் மனசு அங்கலாய்த்தது.
“அவள்தான் வரும் நிலையில் இல்லையா? சுமன் பிறந்ததில் இருந்து ஒரே சிடுசிடுப்பு, சிலவேளைகளில எரிந்தும் விழுகிறாள். பலவேளைகளில் மௌனமாகி விடுகிறாள். என்னவோ அந்தரங்கத்தில் உரையாடுகிறாளே? சமையல் வீட்டில் ஒழுங்காக நடப்பதில்லை. கடந்த ஒருவருடத்தில் கட்டிலில் ஒன்றாக படுத்த நாள்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
குடும்ப வைத்தியரை கேட்டால், “சில பெண்களுக்கு பிள்ளை பிறந்தபின் இப்படித்தான் இருக்கும்: இது ஒருவகை மனஅழுத்தம்” என்று கூறுகிறார். “பிள்ளைக்குப் பால் கொடுப்பதால் மருந்துகள் தேவையில்லை. அன்பான கவனிப்பும், பராமரிப்பும் மட்டும் இதை குணமாக்கும்” என்ற விளக்கவுரையையும் சேர்க்கிறார். அன்போடு இவளை அணுக முடிகிறதில்லை. இவளைத்தான் முடியாவிட்டாலும் குழந்தையை கொஞ்சினாலும் சிடுசிடுக்கிறாளே.
இப்படியான மனகுழப்பத்தில் சந்திரன் இருந்த காலத்திலேயே இந்த கொன்பிரென்சுக்கு அழைப்பு வந்தது.
யன்னலை விட்டு விலகி வந்து கதிரையில் அமர்ந்தபடி தொலைக்காட்சியின் ரிமோட்டை அழுத்தினான். பல சானல்கள் மாறின. அவன் மனம் எந்த சானலிலும் லயிக்கவில்லை. கட்டிலில் அருகே இருந்த கடிகாரம் இரவு எட்டுமணி என்று காட்டியது. குளியல் அறைக்குள் சென்று வெந்நீPரில் குளித்தபோது மனதிலே கவிந்திருந்த மூட்டம் விலகியது போல் இருந்தது.
மீண்டும் அதே ஜன்னல் ஊடாக பார்த்தபோது கருநீல நிறமாக கடல் பரந்து தெரிந்தது.
உயரத்தில் எறித்த நிலா தனது கீழ்ப்குதியில் உள்ள கடலின் பகுதியை மட்டும் வெண்கலத்தை உருக்கி வார்த்தது போல் ஜொலிக்க வைத்தது. மற்றைய பகுதிக்கு நான் பொறுப்பில்லை என மனிதர்கள் போல் சுயநலமாக இருந்தது. இந்த நிலாவெளிச்சத்தில் மெதுவாக சிறிய அலைகள் நெளிந்தும் குழைந்தும் புதுக்காதலர்கள் போல் போக்கு காட்டின. தரையில் இருந்து வீசும் மின்விளக்குகளின் ஒளிமட்டும் சமத்துவமாக கடற்கரையின் எல்லாப்பகுதியையும் தங்க மணற்பரப்பாக, தங்க கோல்ட் கோஸ்ட் என்ற பெயரை வெளிக்காட்டியது. தங்க மணற்பரப்பில் மோதும் அலைகளில் நெருக்கமான இளம்ஜோடி ஒன்று கால் நனைத்து விளையாடுவது தெரிந்தது. அந்த காட்சிகள் சந்திரனின் ஏதோ உணர்ச்சிகளை சீண்டிக் கொண்டிருந்தன.
உடையை மாற்றிக் கொண்டு வெளியே வந்தான்.சற்று தூரத்தில் தெரிந்த கசினோ உள்ள ஹோட்டலை நோக்கி நடந்தான்.
புரொட்பீச் எனப்படும் அந்த கடற்கரை பகுதியில் அமைந்துள்ள உணவு விடுதிகளையும், மதுசாலைகளையும் கடந்து வரும்போது சிறியதடாகம் ஒன்று எதிர்ப்பட்டது. அந்த நீர்நிலையில் சாம்பல் நிற வாத்து ஒன்று தண்ணீரில் மிதப்பது தெரிந்தது. சந்திரன் அந்த இடத்தை நெருங்கியதும் அந்த வாத்து பலமாக இறக்கைகளை அடித்தது.
‘நீயும் என்னைப்போல் தனியாக இருக்கின்றாய் போல’, என் நினைத்துக்கொண்டு பசுபிக் நெடுஞ்சாலையைத் தாண்டிச் சென்றான்.
கசினோவில் ஜனக்கூட்டம் நிரம்பி வழிந்தது. இடதுபுறத்தில் இருந்த மதுபான பாருக்கு சென்றான். மது பரிமாறும் இளம் பெண்ணிடம் “கொனியாக்” என்றான். அவள் பரிமாறிய மதுகிளாசுடன் காலியாக எங்கே இடம் கிடைக்கும் எனக் கண்களால் துலாவினான்.
மூலையில் இருந்த கதிரை ஒன்றில் சுமார் நாற்பது வயது மதிக்கத்தக்க வெள்ளைக்கார மாது இருந்தாள். அவளுக்கு முன்பாக போடப்பட்டிருந்த நாற்காலி காலியாக இருந்தது.
“எப்படி சுகம்? நான் அமரலாமா”?” என அவுஸ்திரேலிய பாணியில் ஆங்கிலத்தில் கேட்டான்.
“இருக்கலாமே. இது எனக்குரிமையான இடம் இல்லை” என நகைத்தாள்.
நேரடியான நகைச்சுவை மனத்தில் சங்கோசத்தை ஏற்படுத்தினாலும், சிரிப்பும் தனது கிளாசை நகர்த்த்திய நளினமும் அவளுடைய வரவேற்கும் பண்பினை வெளிக்காட்டியது.
வட்டமான முகத்தில் முகப்பூச்சுகள் எதுவும் இல்லை. கண்ணுக்கு கீழே சில சுருக்கங்கள். பொன்னிறமான தலைமயிர் பின்பகுதியில் பந்தாகக் கட்டப்பட்டிருந்தது. செந்நிற மேற்சட்டை கழுத்துக்கு கீழே தாராளமாக திறந்து மார்புகளின் கவர்ச்சிப் பகுதியை வெளிக்காட்டியது. கழுத்தில் கருமணிமாலை படர்ந்து நெளிந்து பள்ளத்தில் மறைந்து இருந்தது. காதில் சிறு தோடுகள். இவைகள் மட்டுமே அணிகலன்களாக தெரிந்தவை.
“கிளாஸில் இருப்பது கொனியாக்வா” என கண்களை விரித்தாள்.
“ஆம்”, என சந்திரன் கூறியதும் தனது கைப்பையுள் இருந்த சிகரட் லைட்டரை எடுத்துக் கிளாசின் கீழ்பகுதியை சில நிமிடம் சூடாக்கினாள்.
அவள் செய்கையை சந்திரன் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
“இப்பொழுது குடியுங்கள்”
அந்த மதுபானம் சூடாக தொண்டையில் இறங்கியது.
கிளாசை மேசையில் வைத்துவிட்டு, “என் பெயர் சந்திரன். நான் சிட்னியில் இருந்து வந்திருக்கிறேன்”.
“அங்கு என்ன செய்கிறீர்கள்”?
“பல்கலைக்கழகத்தில் கலாநிதிப்பட்டத்திற்கான ஆய்வில் ஆராய்ச்சி பண்ணுகிறேன்”.
“கோல்கோஸ்ட்டில் என்ன ஆராய்ச்சி பண்ணுகிறீர்கள்”? எனக் குறும்பு தூக்கலாகக் கேட்டாள்.
அந்த குறும்புத்தனம் ரசிக்க கூடியதாக இருந்தது. அவளுடைய அகல விரிந்த கண்களும், ஏறி இறங்கும் மார்புகளும் சந்திரனை கவர்ந்தன.
“எங்களுக்கு ஒரு கொன்பிரென்ஸ் இருந்தது.”
வார்த்தைகளில் இருந்த நகைச்சுவையைச் சந்திரன் புரியாதது போலக் கூறிய பதில் அவளுக்குச் சிறிது ஏமாற்றத்தை கொடுத்திருக்கலாம்.
“நானும் சிட்னிதான். என் மகளைப்பார்க்க வந்திருக்கிறேன். அவள் வேறு ஹொட்டல் ஒன்றில் வேலை செய்கிறாள். இங்கு தனது போய்பிறென்டுடன் வந்து சந்திப்பதாக கூறி இருந்தாள்.”
“ஏதாவது குடிப்பீர்களா? நான் வாங்குகிறேன்.”
“நீங்கள் வரமுன் தான் குடித்தேன்”, என்று கூறி தனது கிளாசை காட்டினாள். இப்படிப் அவர்கள் பேசிக்கெண்டிருக்கும்போது அங்கு இளம் ஜோடி ஒன்று வந்தது.
“எனது மகள் வருகிறாள்”. என்றதும் சந்திரன் எழ முயன்றான்.
“உட்காருங்கள். நான் அறிமுகம் செய்து வைக்கிறேன்”.
சுருக்கமான அறிமுகம் நடந்தது. சிபில் தலைமயிரை கட்டையாக வெட்டியிருந்தாள். மற்றப்படி தாயின் மறுபதிப்பு. பாய்பிரென்ட் ஆறடி உயரத்தில் இருந்தான்.
அறிமுகம் முடிந்ததும் சந்திரன் தனது கிளாசை எடுத்துக் கொண்டு வேறு இடத்தை நோக்கிச் சென்றான்.
இடம் எதுவும் காலியானதாக இல்லாததால் மதுபான கவுண்டர் அருகில் சென்று மீதியை அருந்திவிட்டு நைட்கிளப் பகுதியை நோக்கி நடந்தான்.
ஜோடி ஜோடியாக கைகோர்த்தபடி ஒட்டி உரசுபவர்கள் சந்திரனுக்கு உள்ளார்ந்த உணர்வுகளைக் கிளறினர். இரத்தத்தில் இருந்த மதுரசம் மேலும் விரகதாபத்தை அதிகரித்தது. சித்திரை மாதம், கோல்கோஸ்டின் மிதமான வெப்பநிலை நிலவும் காலமாகும். பெண்கள் மிகவும் அவசியமாக மறைக்க வேண்டியவைகளை மட்டுமே மறைத்து மற்றவற்றை வெளித்தெரியும்படி உடை உடுத்தியிருந்தார்கள். சந்திரனின் கண்கள் முள்செடியில் சிக்கிய ஆடைபோல் அலங்கோலப்பட்டது. உணர்வுகளின் காங்கையைத் தாங்கமுடியாமல் நைட்கிளப்பிலிருந்து வெளிப்பட்டு, சூதாட்டம் ஆடும் கசினோ பகுதிக்கு வந்து சேர்ந்தான்.
கசினோவில் உள்ளே பார்த்தபோது சீனர்களின் முகங்களே பெரும்பாலாக தெரிந்தன. தென்கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனிசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, மலேசியாவில் வாழும் சீனச் செல்வந்தர்கள் சூதாட்டம் ஆடுவதற்கு அவுஸ்திரேலியா வருவார்கள். இவர்களது நாடுகளில் இப்படியான காசினோ இல்லை. அவுஸ்திரேலியாவில் கோல்ட்கோஸ்டுக்கு வருவது அவர்களுக்கு தீர்த்த யாத்திரை போன்ற விடயமாகும். சிலர் வாராவாரம் வருவார்கள். இவர்களுக்குப் பிரத்தியேக அறைகள், விசேட போக்குவரத்து வசதி என்பவற்றை கசினோ நிர்வாகம் கவனித்து கொள்ளும். இவர்கள் இழக்கும் பணத்தின் அளவு சாதாரணமா? கசினோ அருகிலே பாங்கு உண்டு. ஏன் கசினோ கூட கடன் கொடுக்கும் என சந்திரன் கேள்விப்பட்டிருந்தான்.
இப்படிப்பட்டவர்கள் பணங்களை இழப்பதை சந்திரன் வேடிக்கை பார்த்தான். பணத்தை இவன் இழக்க விரும்பினாலும் முடியாது. டாக்டர் பட்டத்திற்கு கொலஸிப் பணத்தில் ஆராய்ச்சி செய்பவனுக்கு கிடைக்கும் பணத்தில் அரைவாசி சிட்னியில் வீட்டு வாடகைக்கு மட்டுமே போய்விடும். மீதியில் மனைவி குழந்தை போக்குவரத்து என்றும் செலவழித்தால் எதுவும் மிஞ்சாது.
ஆசை விடவில்லை. இருந்த நூறு டொலர் நோட்டைச் சூதாட்டக்காய்களாக மாற்றிவிட்டு அதிர்ஸ்டச் சக்கரத்தை நோக்கி சென்றான்.
அந்தச் சக்கரத்தை சுற்றிக் கொண்டிருந்த இளம் பெண் சந்திரனிடம் ‘காசுகளை என்னிடம் இழந்துவிடு’ என கண்களால் கூறினாள்.
அவளது அழகிய முகமும், மேற்சட்டையை விட்டு வெளியே வரத் துடிக்கும் மார்பகங்களும் சில டாலர்களை இழக்கலாம் என்ற முடிவுக்குத் தள்ளின. சந்திரன் காய்களைப் பல இடங்களிலும் வைத்தான். மற்றவர்களும் வைத்தபின் சக்கரத்தை அவள் எட்டிச் சுழற்றினாள். எம்பியபோது உயர்ந்த அவளது சட்டை உயர தொடைகளின் பெரும்பகுதி வெளித்தெரிந்து, மீண்டும் சந்திரனது சிந்தையை மின்சாரம் போல் தாக்கியது. மற்றவர்கள் அதிஸ்டசக்கரம் எந்த புள்ளியில் நிற்கும் என் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சந்திரன் மட்டும் சக்கரத்தை பார்க்காது அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான். இதனை உணர்ந்து கொண்ட அவளும் சிரித்தாள்.
சந்திரனது முட்டாள்தனம் அப்படியே புரிந்திருக்க வேண்டும். சிலநாள் உணவற்று இருந்த நாலுகால் ஜந்துவின் பார்வையை ஒத்திருப்பதாக நினைத்திருக்க வேண்டும். சுற்றிய சக்கரம் நின்றபோது இருபதில் நின்றது. சந்திரனுக்கு பத்து காய்கள் கிடைத்தன. அதிர்டஸ்த்தை மெச்சியபடி மீண்டும் காய்களை வைக்க முற்பட்டபோது பல சீனபெண்கள் கூட்டமாகச் சந்திரனை பின் தள்ளினார்கள். பெருமூச்சுவிட்டு அந்த சக்கரம் சுற்றிய அழகியின் இடத்தை விட்டு விலகினான்.
எல்லா சூதாட்ட மேசைகளிலும் சூதாடுவோர் கூட்டம் நிரம்பி வழிந்தது. காசுகளை வைக்காமல் காய்களை வைத்து விளையாடும்போது காசு இழப்பது தெரிவதில்லை. மதுவும் தொடர்ச்ச்சியாக பரிமாறப்படுவதால் மதுவின் மயக்கம் சூதாட்டத்தை உற்சாகப்படுத்துகி;றது.
சந்திரனது ஆராய்ச்சி மூளை விளித்துக் கொண்டதால் மீண்டும் காய்களை காசாக்கினான். இப்போது நிகரலாபமாக நூறுடொலர்கள் அவனது பர்சில் சேர்ந்தன.
பசி உணர்வு வந்தபோது கடிகாரம் பத்துமணியைக் காட்டியது.
மீண்டும் மதுபாரை அடைந்தபோது அதே மேசையில் அதேபெண் அமர்ந்திருந்தாள். இப்போது அவளது கையில் கோக் போத்தல் இருந்தது.
“என்ன இங்கே இருக்கிறீர்கள்? “ என்றான்.
“மகள் போய்விட்டாள். சாப்பிட்டுப் போகலாம் என நினைக்கிறேன்.”
“நான் கசினோவில் நூறு டொலர் சம்பாதித்தேன்.”
“உங்களுக்கு இன்று நல்லநாள் போலிருக்கிறது.”
“ஏதாவது குடிக்கிறீர்களா”?
“இல்லை” என்று தனது கோக்போத்தலை காட்டினாள்.
“சரி நான் எப்படி சாப்பிடப்போகிறேன். என்னுடன் சேர்ந்து சாப்பிடமுடியுமா?”.
“விடமாட்டீர்கள் போல் இருக்க்pறது” என வார்த்தைகளை இழுத்தவாறு புன்னகைத்தாள்.
“என்ன ஓடர் பண்ணட்டும். எனக்கு நல்ல பசி”
“எனக்கு வெஜிட்டேரியன் சிப்சும் சலட்டும் போதும.;”
ஓடர் பாரில் கொடுத்துவிட்டு கோனியாக் கிண்ணத்துடன் மேசைக்கு மீண்டும் வந்தமர்ந்தவன் “உங்களுக்கு ஒருமகள் மட்டுமா”, என மதுவை சுவைத்தபடி சந்திரன் கேட்டான்.
“ ஒரு மகனும் உண்டு—சிட்னியில் . . . “
“எவ்வளவு காலமாக வெஜிடேரியன்? எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. உங்கள் முன் அமர்ந்து மாமிசம் உண்பது எனக்கு சங்கடமாகவும் இருக்கிறது”
“டோன்ட்பி சில்லி”- என கையை அசைத்து சிரித்தாள்.
சாப்பாடு பரிமாறும் பெண் சந்திரனுக்கு முன் ரோஸ் பீவ்வையும், ஜீலியா முன் சிப்சும், சலட்டும் பரப்பிய பிளேட்டையும் வைத்தாள்.
“இப்பொழுது இந்தியர் ஒருவர் பீவ் சாப்பிடுவது புதுமையாக இருக்கிறது” என்றாள் ஜீலியா.
“நான் இந்தியன் அல்ல. இந்தியாவில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் பீவ் சாப்பிடுவார்கள். ஏன் இந்துக்கள்கூட ஆதிகாலத்தில் சாப்பிட்டார்களே”. . .
“அப்போ நீங்கள் எந்த இடம்?”
“நான் சிலோன் என்றழைக்கப்பட்ட் சிறிலங்கா”
“நான் பலகாலம் இந்தியா போக நினைத்தேன். ஆனால் காலம் வரவில்லை” என சிப்சைக்கடித்தாள்.
“எப்போது சிட்னி போகிறீர்கள?;.”
“நாளைக்குத்தான் விமான டிக்கட் போட்டிருக்கு.”
“இரவு எங்கு தங்கப்போகிறீர்கள்”?
“பெண் சிநேகிதியின் வீட்டில் – – -முகவரி இருக்கிறது.”
“ஏற்கனவே பத்துமணியாகி விட்டது” என ஆச்சரியம் கலந்த குரலில்.
“நான் மகளோடு தங்குவது என நினைத்துத்தான் வந்தேன். இப்போது அவளது போய்பிரண்டின் நண்பர்கள் வந்து தங்கியிருக்கிறார்கள் என்பதால் தான் சினேகிதியின் விட்டில் தங்க முடிவு செய்தேன். குரலில் தயக்கம் இருந்தது.
“பக்கத்து ஹோட்டலில் நானும் எனது நண்டனும் இரண்டு அறைகள் எடுத்து தங்கியிருந்தோம். காலை எனது நண்பன் வீடு திரும்பிவிட்டான். இந்த இரண்டு அறைகளும் எமது பல்கலைக்கழகத்தினால் வாடகைக்கு எடுக்கப்பட்டது. சம்மதம் என்றால் நண்பனது அறையில் நீங்கள் தங்கலாம்”
“உங்களுக்கு சிரமம் தரவிரும்பவில்லை”.
“இதில் எனக்கு என்ன சிரமம்?”
சிறிதுநேரம் அமைதியான சிந்தனையின் பின்பு “சரி” என்றாள்.
சந்திரனது உணவுப்பாத்திரம் காலியாகி விட்டது. உள்ளே சென்ற மது பசியைத் தூண்டியிருந்தது. அவளது பாத்திரத்தில் உணவு பாதிக்கு மேல் மீதமிருந்தது.
“எனக்கு நல்ல பசி. . .”
“எனக்குப் பசி இல்லை”.
“உங்களுக்குக் கோப்பி தேநீர் ஏதாவது”?
“சோட் பிளக் கொபி”
சந்திரன் எழுந்து பாருக்கு சென்று தனக்கு ஒரு போட் வைனும், அவளுக்கு சோட் பிளாக்கும் எடுத்து வந்தான்.
“ஒழுங்காக மது அருந்துகிறீர்களே” என்றாள் ஆச்சரியம் கலந்த சிரிப்புடன்.
“எப்போதாவது மட்டும்தான்”.
“அடுத்து சம்புக்காவா”?”
“விருந்தினராக நீங்கள் இருப்பதால் இத்துடன் நிறுத்துகிறேன். நீங்கள் சூட்கேஸை தாருங்கள்” என்று சொல்லிக்கொண்டே எழுந்தான்.
“அதிக பாரமில்லை.”
சந்திரன் வற்புறுத்தவில்லை. மதுபோதை சிறிது தடுமாற வைத்தது. இருவரும் வெளியே வந்து நடந்தனர். பசுபிக் நெடுஞ்சாலையைக் கடந்தபோது தலைக்கு மேலாக மொனோ ரயில் சென்றது. கபேக்களில் கூட்டம் இன்னம் இந்தது. சந்திரன் வரும்போது தனியே இருந்த வாத்தை எட்டிப்பார்த்தான். அது அங்கே இல்லை.
“துணையை தேடிப் போயிருக்கும்” என சிறிது சத்தமாக சொன்னான்.
“என்ன சொல்கிறீர்கள்”? என்றாள் ஜீலியா.
“இல்லை, நான் இந்த வழியால் இரண்டு மணி நேரம் முன்பு வந்தபோது ஒரு வாத்து நின்றது. அது இப்பவும் நிற்கிறதா என் பார்த்தேன்”;.
ஏழாவது மாடியில் உள்ள அறையானதால் லிப்டில் ஏறினார்கள். லிப்டின் ஒருபகுதி கண்ணாடியானதால் பசுபிக் சமுத்திரம் அப்படியே கருநீற நிறத்தில் எவ்வித சலனமும் அற்று தெரிந்தது. மனிதமனங்கள் கூட சமுத்திரம் போன்றது. எங்கிருந்து பார்க்கிறோம் என்பதை பொறுத்தது என சந்திரன் நினைத்தபடி தனது அறைக்கு வந்து, உள்பக்கமாக திறந்து எதிர் அறைக்கதவை திறந்து விட்டான்.
“இதுதான் உங்கள் அறை.”
“மிகவசதியானது” எனக் கூறியபடி தனது சூட்கேசை கட்டிலில் வைத்தாள்.
சந்திரன் தனது அறைக்குச் சென்று கதவை மூடிவிட்டு ரெலிவினை உயிர்ப்பித்தான். படுக்கையில் அமர்ந்தபடி ரெலிவிசன் நியூசை பார்த்தான்.
கதவு தட்டும் சத்தம் கேட்டது.
வெள்ளை இரவு உடுப்புடன் “உள்ளே வரலாமா” என்று கேட்டபடி ஜீலியா நின்றாள்.
“வாருங்கள்” என்று படுக்கையில் நிமிர்ந்து உட்கார்ந்தான்.
“பயணக்களைப்புக்கு குளித்தது புத்துணர்வாக இருக்கிறது” என கூறியபடி ரெலிவிசனுக்கு பக்கத்தில் உள்ள கதிரையில் அமர்ந்தாள்.
இப்படி உரிமையோடு வந்து இருப்பவளிடம் எதைப்பற்றி பேசுவது? எனது குடும்ப விடயத்தையோ அவளது குடும்ப விடயத்தையோ விசாரிப்பது நாகரீகம் இல்லை. மதுவின் மயக்கத்தில் வார்த்தைகளைச் சீராகக் கோர்ப்பதில் சிரமம் இருந்தது.
“உங்களைப் பார்க்க நித்திரைக்கு தயாரானவர்போல் இருக்கிறது. நானும் படுக்கைக்குப் போகிறேன். குட்நைட்”என்றாள்.
நாற்பதுக்கு மேலாக இருந்தாலும் வாளிப்பான பின்பகுதி சந்திரனை திணற வைத்தது. கண்ணியமாக நடக்கவேண்டி “குட்நைட்”, என பதிலுக்கு கூறிவிட்டு போர்வைக்குள் புகுந்து கொண்டான்.
———– .
குரல் கேட்டு கண்களை கசக்கியபடி எழுந்தான்.
தலைமயிர்கள் மார்பில் படர வெள்ளை மேல்சட்டையும், சாம்பல்நிற ஜீன்ஸ் அணிந்தபடி சிவப்புசாய உதடுகளை விரித்து “குட்மோனிங் இது பிளாக்கோப்பி. இரவு குடித்த அல்ககோலுக்கு நன்றாக இருக்கும்” என்றபடி கப்பை நீட்டினாள்.
“நன்றி, நான் நன்றாகத் தூங்கி விட்டேன்.” என்று கூறினாலும் சந்திரன் படுக்கையை விட்டு எழும்பவில்லை. அரை நிர்வாணமாக போர்வைக்குள் இருந்தான்.
“நீங்கள் இப்பொழுதே போகத்தயாராக விட்டீர்கள் போல் தெரிகிறது” என்றான் கோப்பியை ருசித்தபடி.
“இப்பொழுது பஸ் எடுத்து பிரிஸ்பேண் போகிறேன். மகள் என்னை பஸ்நிலையத்தில் சந்திப்பதாகச் சொல்லி இருக்கிறாள்.”
“நீங்கள் உங்கள் அறையில் சில நிமிட நேரம் இருங்கள். நான் பல்துலக்கி ரெடியாகி விடுகிறேன்.”
ஜீன்ஸில் பத்து வருடங்கள் குறைந்துவிட்டீர்கள் என் சொல்ல நினைத்தான். சொல்லவில்லை.
சில நிமிடநேரத்தில் அவளது அறையைத் தட்டி “நீங்கள் தயாரா” என்றான்.
“உங்களுக்கு ஏன் சிரமம். . “
“நான் வாசல் வரை வருகிறேன்” எனக் கூறி சூட்கேசை கையில் எடுத்தான்.
அறையை விட்டு வெளியே வந்தபோது ஒருவன் வழக்கமான பாணியில் “குட்டே”என்றான்.
அதேபாணியில் இவனுக்கு பதில் அளித்துவிட்டு ஏதோ மறந்தவனை போல “உங்கள் பெயரை கேட்கவில்லையே,“, என்றான் சந்திரன்.
“நீங்கள் உடனே கேட்டிருக்க வேண்டிய விடயம் . . அதுவும் ஒரு இரவு கழிந்தபிறகு கேட்கிறீர்கள்”, என்றாள் புன்சிரிப்புடன்.
“நேற்று இரவு நான் நல்லமூட்டில் இருக்கவில்லை மனசில் வேறு பலவிடயங்களை நினைத்துக்கொண்டிருந்ததால் அப்படி நடந்துகொண்டேன்.”
“நல்லமூட்டில் இல்லாதபோதே எனக்கு உதவி செய்து பண்பாக நடந்து கொண்டீர்கள் எதிர்காலத்தில் நீங்கள் நல்ல மூட்டில் இருக்கும்போது எப்படி இருப்பீர்கள் எனப்பார்க்க விரும்புகிறன்.” இவ்வாறு கூறி லிப்டுக்குள் நுழைந்தாள்.
லிப்டில் அருகே நின்றதால் தலையில் வைத்த சம்புவின் மணம் நாசிக்குள் சென்று உடல் எங்கும் ஆக்கிரமித்தது. மௌனத்தால் உரையாடுவது போன்ற மயல்..
வெளிவந்தவர்களுக்கு காத்திருந்தது போல் டாக்சி வந்து நின்றது. பூட்டில் சூட்கேசை வைத்துவிட்டு காரின் கதவை திறந்து “ஏறுங்கள்” என்றான்.
“உங்கள் உதவிக்கு நன்றி”, என்ற கூறியபடி சந்திரன் கன்னத்தில் உதடுகளை பதித்தாள்.
இது சந்திரன் சற்றும் எதிர்பார்க்காமல் சடுதியில் நடந்ததால் சிறிது தடுமாறியபடி “நான் என்ன செய்தேன்” என்று விலகி நின்று அவள் ஏறியதும் தனது விசிட்டிங் காட்டை கொடுத்தான்.
கை அசைத்து விடைபெற்றாள்.
தொடரும்
Avudaiappan Velayutham க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி