செங்கதிரோன் –
2000இல் எழுதப் பெற்றுப் பின் 2003இல் பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களின் மணிவிழாச் சிறப்பு மலரில் இடம்பிடித்த அவரது ~சார்வாகன்| குறுநாவல், ~மௌனம்| எனும் மகுடம் இட்ட இம் மணிவிழாச் சிறப்பு மலரின் உள்ளே இவ்வளவு காலமும் மௌனித்துக் கிடந்த பின் இப்போது நூலுருப்பெற்று இன்று வெளிவருகிறது.
மகாபாரத இதிகாசக் கதையை மையப்படுத்தி பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்குமிடையே நடைபெற்று முடிந்த குருஷேத்திர யுத்தத்தை நாவலின் கருப்பொருளாக்கி அதன்மூலமாக யுத்தத்திற்கு எதிரான மனிதகுலத்தின் ஒட்டுமொத்தக் குரலாகச் ~சார்வாகன்| எனும் தலைப்பிலான இக்குறுநாவலைப் பேராசிரியர் சி.மௌனகுரு அவர்கள் பின்னியிருக்கிறார்.
இக்குறுநாவலின் நாயகன் சார்வாகன், வேதங்களும் உபநிடதங்களும் ஏனைய புராண இதிகாசங்களும் கட்டமைத்த சுவர்க்கம், நரகம், தேவர் எனும் கற்பனப் படிமங்களை மறுதலித்து – அவை போதித்த வர்ணாச்சிரம தர்மத்தைக் கேள்விக்குள்ளாக்கி – மக்களையும்; அம்மக்களின் இவ்வுலக வாழ்வையுமே முதன்மைப்படுத்தும் ~சார்வாகம்| எனும் இந்தியாவின் பழம்பெரும் சிந்தனை மரபின் குறியீடாகப் படைக்கப்பட்டுள்ளான்.
அதிகார வேட்கை கொண்ட அணிகளுக்கிடையிலான அதிகாரப் போட்டியால் உருவாகும் யுத்தத்தில் களப்பலியாவது அப்பாவி மக்களே என்பதை எடுத்துச் சொல்லி யுத்த மோகம் கொண்ட அதிகார வர்க்கத்திற்கும் அவ்வதிகாரத்தின் வால்பிடியாளர்களுக்கும் எதிராக மக்கள் நலன் சார்ந்து நின்று குரல் எழுப்பும் மக்களின் பிரதிநிதியாகச் சார்வாகன் இக்குறுநாவல் முழுவதிலும் உலா வருகிறான்.
நாவலின் முதலாவது அத்தியாயத்திலே யுத்தம் முடிந்து வெறிச்சோடிக் கிடக்கும் குருஷேத்திரகளத்தை மிகவும் தத்ரூபமாகக் காட்சிப்படுத்தியுள்ளார் மௌனகுரு அவர்கள். அவரது மொழிப் புலமையும் அதனைக்கையாளும் திறமையும் அவருக்குக் கைகட்டிச் சேவகம் செய்துள்ளன. பாரதப்போர் முடிந்து ஒருமாதகாலமாகிவிட்ட யுத்தகளத்தை அவர் காட்சிப்படுத்தும் போது ஒரு கட்டத்;தில்,
~சிறிய மலைகள் உருகி ஓடுவதுபோல இறந்த யானைக் குவியல்களிலிருந்து நிணம் ஒழுகிக் கொண்டிருந்தது.| என்று கூறியிருப்பது அவரது மொழி ஆளுமைக்கு ஓர் உதாரணம்.
குருஷேத்திர யுத்தம் மூலம் அத்தினாபுரி அரண்மனை அதிகாரம் கௌரவர்களிடமிருந்து பாண்டவர்களினிடம் கைமாறியதே தவிர அந்த யுத்தத்தில் தர்மங்களும் நியாயங்களும் புதையுண்டன. குடிமக்கள் அனைவரினதும் நலன்கள் யாவும் பலிகொடுக்கப்பட்டன. இந்த உண்மை நாவலின் அத்தனை அத்தியாயங்களிலும் இழையோடிக் கிடக்கிறது.
இன்று உலகில் கண்டங்களுக்கிடையேயும் – நாடுகளுக்கிடையேயும் – இனங்களுக்கிடையேயும் – மொழிகளுக்கிடையேயும் – மதங்களுக்கிடையேயும் – ஊர்களுக்கிடையேயும் – பிராந்தியங்களுக்கிடையேயும் போட்டியும் பூசலும் குரோதமும் உருவாகி எங்கும் யுத்த மேகங்கள் கருக்கட்டும் சூழலில் யுத்தத்திற்கு எதிரான மனிதகுலத்தின் குரலாகச் சார்வாகன் இந்நாவலில் அடையாளப்படுத்தப்படுகின்றான். யுத்தத்தின் அடிப்படை அதிகார மோகமே; அதிகார வர்க்கமும் அதிகாரவர்க்கத்தை வால்பிடித்து அதனால் அடையப்பெறும் சுகபோகங்களைச் சுகிக்கின்ற சுயநலக் கூட்டமுமே அம்மோகத்தை வளர்க்கின்றன என்பதை இந்நாவல் வரிக்கு வரி விளக்குகிறது.
“அனைத்துச் செயற்பாடுகளுக்கும் அதிகாரமே அடிநாதம். ஆளும் கூட்டத்தினர் அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொள்கிறார்கள். அறிஞர்களும் இலக்கியங்களும் மதங்களும் அதிகாரத்திற்குச் சார்பாகவேயுள்ளனர். தம் கருத்துக்களால் மக்கள் மனதிலே அதிகாரத்தை ஞாயப்படுத்தும் மனோநிலையை உருவாக்கி விடுகிறார்கள். அதிகாரம் சார்ந்த கருத்துக்கள் உருவாக்கப்படுகின்றன. உருவாக்கப்பட்ட கருத்துக்களுக்கு மக்களும் அடிமைகளாகி விடுகிறார்கள்.” என்ற சார்வாகன் வாயிலான பேராசிரியர் மௌனகுரு அவர்களின் கூற்று சமகால இலங்கைத் தமிழ் அரசியலுக்கும் – தென்னிலங்கை அரசியலுக்கும் – இந்துசமுத்திரப் பிராந்திய அரசியலுக்கும் – பூகோள அரசியலுக்கும் கூடப் பொருந்துமாறு உள்ளது.
குருஷேத்திர யுத்தம் என்றாலும் சரி – நடைபெற்ற இரண்டு உலக மகா யுத்தங்கள் என்றாலும் சரி – அண்மைக் காலத்தில் நாடுகளுக்கிடையே நடைபெற்ற அல்லது அண்மைக் காலமாக நடைபெறும் யுத்தங்கள் என்றாலும் சரி – இலங்கையினதும் இலங்கைத் தமிழ்ச் சமூகத்தினதும் அனுபவத்தில் உள்நாட்டில் நடந்து முடிந்த முள்ளிவாய்க்கால் யுத்தம் என்றாலும் சரி, எல்லா யுத்தங்களினதும் நோக்கமும் குணாம்சமும் ஒரே மாதிரியானவைதான். அடைய நினைக்கும் அல்லது அடைந்து கொண்ட அதிகாரத்தின் தன்மை – அதிகாரத்தின் வீச்செல்லை – அதிகாரத்தின் கனதி மாறுபடலாமே தவிர இந்த எல்லா யுத்தங்களின் போதும் மக்கள் நலன்கள் முதன்மைப் படுத்தப்படவில்லை. ஏதோ ஒரு மட்டத்தில் அதிகாரங்களைப் பெற முற்பட்ட அதிகாரவர்க்கம் சார்ந்த அணிகளுக்கிடையேயான யுத்தங்கள்தான் இவை.
நாவலின் இறுதியில் அதிகார வர்க்கத்தினருக்கு எதிராகவும் – யுத்தத்திற்கு எதிராகவும் குரல்கொடுத்த சார்வாகன் அதிகார வர்க்கத்தின் சதியினால் எரித்துக் கொல்லப்படுகிறான். அதைக் கண்ட
“அவர்கள் (மக்கள்) மனங்கள் குருஷேத்திர களங்களாயின”
என்ற வாக்கியத்துடன் நாவல் நிறைவுறுகிறபோது யுத்தத்திற்கான எதிர்ப்பு என்பது இன்னும் பல யுத்த களங்களைத் தோற்றுவிக்குமா? என்ற வினாவும் விஸ்வரூபம் எடுக்கிறது.
மொத்தத்தில் உலக சமாதானத்தை விரும்பும் அனைவரும் ஊன்றிப்படிக்க வேண்டிய நாவல் இது. யுத்தத்தை நாடுபவர்களும் யுத்த அவலங்களை உணர்ந்து திருத்துவதற்கும் இந் நாவலைப் படிக்க வேண்டியது அவசியம்.
மேலும் இந் நாவலின் நாயகன் சார்வாகன் வெளிப்படுத்தும் கூற்றுக்களை சமகால இலங்கைத் தமிழ் அரசியலோடு பொருத்திப் பார்ப்பதை என்னால் தவிர்க்க இயலவில்லை.
சார்வாகன் சுட்டும் மகாபாரத குருஷேத்திர யுத்த களத்தை இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் 2006 ஆகஸ்ட் மாதம் மாவிலாறு அணைக்கட்டில் ஆரம்பமாகி 2009 மே 18 அன்று வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்த ஸ்ரீ லங்கா அரசபடையினருக்கும் புலிகளுக்கும் இடையிலான இறுதிக்கட்ட யுத்தத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது என்னில் எழும் உணர்வுகளையும் தடுக்க முடியவில்லை.
உண்மையில் குருஷேத்திர யுத்தமானது அத்தினாபுர ஆட்சியதிகாரத்தைக் கௌரவர்களிடமிருந்து பாண்டவர்கள் கைமாற்றிக் கொண்ட யுத்தமே தவிர இது குடிமக்கள் நலனை முதன்மைப்படுத்தியது அல்ல. ஆனால் அதிகாரவர்க்கத்தினரால் இந்த யுத்தம் அதர்மத்துக்கும் தர்மத்துக்கும் இடையிலான போர் என்று காட்டப்பட்டு மக்கள் மூளைச்சலவை செய்யப்பட்டார்கள் என்பது சார்வாகன் தரும் விளக்கம்.
இங்கேயும் முள்ளிவாய்க்கால் யுத்தம் உண்மையில் பௌத்த சிங்களப் பேரினவாதத்திற்கும் குறுந்தமிழ்த் தேசியவாதத்திற்கும் இடையிலான அதிகாரப்போட்டியே தவிர இது சிங்கள மக்களினதோ அல்லது தமிழ் மக்களினதோ நலனைச் சார்ந்தது அல்ல. ஆனால் இந்த யுத்தம் சமாதானத்திற்கான யுத்தம் என்று பௌத்த சிங்களப் பேரினவாதத் தரப்பும் தமிழ்த் தேசியத்திற்கான யுத்தம் என்று குறுந்தமிழ்த் தேசியவாதத் தரப்பும் மக்களை மூளைச்சலவை செய்திருந்தன. இன்று யுத்தக் கொடுமைகளையும் – யுத்தத்தின் பின் விளைவுகளான அவலங்களையும் அனுபவித்துக் கொண்டிருப்பது சாமான்ய மக்களே தவிர அதிகாரவர்க்கமோ அல்லது அதற்குச் சாமரை வீசியவர்களோ அல்ல.
இந்த இடத்திலே இந் நாவலின் மூன்றாம் அத்தியாயத்திலே (பக்கம் 18) சார்வாகன் கூறுவதைக் கேளுங்கள்.
“அத்தினாபுரத்து மக்களே, குருசேத்திர யுத்த களத்திலே கணவர்களை இழந்த மனைவியாரே, காதலனை இழந்த காதலிகளோ, புதல்வரை இழந்த பெற்றோரே, சகோதரர்களையும் அன்புக்குரியவர்களையும் அன்புக்குரிய ஆனை குதிரைகளையும் போரிலே பறிகொடுத்த பாவிகளே! சற்று உங்கள் செவிகளை என் சொற்களுக்குக் கடன் கொடுங்கள்.”
“பெரும் சூதாட்டக்காரனும் தன் மனைவியின் சம்மதம் கேட்காது அவளைச் சூதிலே பணயம் வைத்தவனும் வில்வித்தை பயிற்றிய குருவான துரோணரைக் கொல்;ல யுத்த களத்திலே பொய் சொன்னவனும் மகா தர்மவான் என்று பிராமணர்களால் பிரசாரப் படுத்தப்பட்டவனுமான தர்மன் முடிசூடப்போகின்றான். தம்பியர் நூற்றுவரைக் கொன்று தனையர்கள் பலரைப் பலிகொடுத்து ஆயிரக்கணக்கான வீரர்களின் குருதியை கங்கை நதியோரத்தில் ஓடவிட்ட கயவன், வெட்கமில்லாது புரோகிதர்கள் யாகம் செய்ய, பூரணக் கலசங்கள் வைக்க நாளை முடிசூடப்போகின்றான்.”
“துரியோதனனுக்குரிய அத்தினாபுர நகரம் பாண்டவர்கள் கைகளுக்கு மாறிவிட்டது. அதிகாரத்தைக் கைப்பற்ற இரண்டு அதிகாரக் கும்பல்களுக்குமிடையே நடந்த யுத்தத்தில் நீங்கள் மந்தைகளாக யாரோ ஒருவர் பக்கம் நின்றீர்கள். வெறியுடன் ஒருவரை ஒருவர் கொன்றீர்கள். வெறியடங்கியது. பாண்டவர் வென்றார்கள். மற்றவர்கள் தோற்றார்கள், மக்களும் தோற்றார்கள்.”
இக்கூற்றினை இலங்கையின் முள்ளிவாய்க்கால் யுத்த அனுபவத்துடன் பொருத்திப் பாருங்கள். உண்மைகள் பல புரியும்.
இன்று போர்க்குற்ற விசாரணை வேண்டி ஜெனீவாவுக்கு விமானத்தில் பறந்த தமிழ் அரசியலின் அதிகாரவர்க்கத்தினர் போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் அப்பாவி மக்களைக் காப்பாற்ற எந்தவிதமான இராஜதந்திர நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. இன்று போர்க்குற்ற விசாரணை கோரி போர்க்கோலம் பூணும் தமிழ் அரசியல் அதிகார வர்க்கத்தினர் உண்மையில் அன்று யுத்தகாலத்தில் பாராளுமன்றப் படிக்கட்டில் அமர்ந்து போர்நிறுத்தம் வேண்டிச் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்திருக்க வேண்டும். இதுதானே மக்களுக்கான உண்மையான அகிம்சைப் போராட்டம். போராடத்தானே மக்களிடம் இவர்கள் வாக்குக் கேட்டார்கள். செய்தார்களா? இல்லை.
இவர்களும் ஒருவகையில் போருக்கு எண்ணெய் வார்த்தவர்களே. ஏனெனில் ஏதோ ஒரு வகையில் அதிகாரத்தில் தொடர்ந்து இருப்பதற்கு இவர்களுக்கும் யுத்தம் தேவைப்பட்டது. பௌத்த சிங்களப் பேரினவாதத்திற்கும் குறுந்;தமிழ்த் தேசியவாதத்திற்குமிடையே அதிகாரத்தின் தன்மை – அதன் வீச்செல்லை – அதன் கனதி, இவற்றில் வித்தியாசம் இருந்ததே தவிர நோக்கமும் குணாம்சமும் இரு தரப்புக்கும் ஒன்றே.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை இந்த யுத்தம் பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொண்டும் – பல கோடிச் சொத்துக்களை அழித்தும் – இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் சுமார் 89,000 கணவனை இழந்த விதவைக் குடும்பங்களை உருவாக்கியும் – பலரைக் காணமல் போனவர்கள் ஆக்கியும் – உளவியல் தாக்கங்களையும் உடல் ஊனங்களையும் ஏற்படுத்தியும் – இன்னும் பல வெளிச்சொல்ல முடியாத கலாசாரச் சீரழிவுகளை விளைவித்தும் பாரிய இழப்புக்களை அறுவடையாகத் தந்திருப்பதே யதார்த்தம். தமிழ் அரசியல் அதிகாரவர்க்கம் எதிர்க்கட்சித் தலைமைப் பதவியைப் பெறுவதற்கு அப்பாவி மக்கள் கொடுத்துள்ள விலை மிகமிக அதிகம்.
விஷயமறிந்தவர்களும் கற்றோரும் கூடியிருக்கும் இந்த அவையிலே தமிழ் அரசியல் அதிகாரவர்க்கத்தினரைப் பற்றி இதற்குமேல் விபரிப்பது அவசியமில்லை; அது உசிதமுமில்லை என எண்ணுகின்றேன். இவற்றை எனது கூற்றாக எடுத்துக் கொள்ளாமல் சார்வாகன் கூற்றாகவே எடுத்துக் கொள்ளுமாறு அவையோரை அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். ஏனெனில் இந்தச் ‘சார்வாகன்’ குறுநாவலைப் படித்து முடித்த போது ‘சார்வாகன்’ என்னுள் புகுந்து என்னையும் ஒரு ‘சார்வாகன்’ ஆகவே மாற்றிவிட்டிருந்தான். அந்த உணர்வினையே எனது உரையில் இங்கு நான் வெளிப்படுத்தினேன். சார்வாகன் குருஷேத்திர யுத்த களத்தை வெறித்து நோக்கியது போல நான் முள்ளிவாய்க்கால் யுத்த பூமியை வெறித்து நோக்கினேன். அதன் விளைவுதான் மேற்படி எனது கூற்று.
இந்த நாவலை ஊன்றிப்படிக்கும் – சிரத்தையோடு படிக்கும் நியாயபுத்தி படைத்த எவரும் தங்களுக்குள்ளே ‘சார்வாகன்’ ஆக மாற்றமுறுவது தவிர்க்க முடியாததே. இது ஒரு வகையில் இந்த நாவலின் மேலதிக வெற்றியும் கூட.
“மக்கள் எப்போதுதான் போரை விரும்பினார்கள்? அவர்கள் விரும்பியதெல்லாம் நிம்மதியான வாழ்வு. அமைதியான வாழ்வு. மகிழ்ச்சிகரமான வாழ்வு. பிரச்சனைகள் இல்லாத வாழ்வு”
என்று இந்நாவலில் வரும் வரிகளே எக்காலத்திலும் உண்மையாகும்.
பேராசிரியர் மௌனகுரு அவர்கள் வரலாற்றில் பேசப்படுவதற்கு இந்நாவலின் வருகை ஒன்றே போதும். இந்நாவல் ஆங்கிலத்திலே மொழிபெயர்க்கப்பெற்றால் இலக்கியத்திற்கான சர்வதேசமட்டப் பரிசுகள் கூட கிடைக்கலாம். ஏனெனில் ரவீந்திரநாத் தாஹ_ரின் ‘கீதாஞ்சலி’ கவிதைநூல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பெற்றதனாலேயே அதற்கு இலக்கியத்திற்கான ‘நோபல்’ பரிசு கிடைத்தது. இல்லாவிட்டால் அதற்கு நோபல் பரிசு கிடைக்கச் சாத்தியம் இல்லாது போயிருக்கும்.
இனி, இந்நாவலின் மீதான எனது வேறுசில அவதானங்களைக் குறிப்பிட்டு எனது உரையை நிறைவுசெய்ய விழைகின்றேன்.
முதலாவது அவதானம் அட்டடைப்படம் பற்றியது.
இந்நாவலின் நாயகன் ‘சார்வாகன்’ நாவலின் முதலாம் அத்தியாயத்திலே இவ்வாறுதான் அறிமுகம் செய்யப்படுகின்றான்.
“யோக தண்டத்தை ஒரு கையால் பூமியில் ஊன்றிக் கொண்டு மறுகையை இடுப்பிற் பதித்தபடி அவன் நின்ற நிலை ஒரு சிற்பத்தை நினைவூட்டியது.
நாற்பது ஆண்டு பிராயத்தினன்.,
கௌபீனதாரி,
உடல் முழுவதும் சாம்பல் பூச்சு,
கையிலே ஒரு தண்டம்,
சுடலையில் ஆடியபின் கேசங்கள் கலைய நிற்கும் ருத்ர சிவனை அவன் தோற்றம் நினைவூட்டுகிறது.
தலையின் சடாமுடிகள் மார்பிலும் முதுகிலும் தவழ,
சிவந்த கண்களால் யுத்த களத்தை வெறித்துப்பார்த்தபடி நீண்ட நேரம் அவன் நின்று கொண்டிருந்தான்.”
ஆனால் அட்டைப்படத்தில் உள்ள சார்வாகன் ஒரு கையை இடுப்பில் பதிக்கவில்லை. சார்வாகன் பயணிக்கும் தோற்றமும் இது அல்ல. ஏனெனில் மனித கபாலம் ஒன்றின் மீது கால் வைத்துள்ளான். இது நிற்கும் தோற்றமே.
இரண்டாவது அவதானம் நாவலின் முதலாவது அத்தியாயத்தின் இறுதிப் பந்தி மீதானது.
“வெறுமை நிறைந்த யுத்த பூமியில் தன்னந் தனியாக நிற்கும் அவனை ஒரு நாய் தூரத்திலிருந்து பார்த்துப் பயத் தொனியில் குரைக்கிறது. சார்வாகன் பார்த்த பார்வையில் அதன் குரைப்பு மெல்ல மெல்ல அடங்கி ஓய்கிறது.
பின் தூரத்தில் ஓடிச்சென்று தன் முன்னங்காலைத் தூக்கி சிறு நீர் கழித்து விட்டு ஓடிச் சென்று சார்வாகன் பார்வையை விட்டு மறைகிறது.”
நாய் பின்னங்காலைத் தூக்கித்தான் சிறுநீர் கழிக்கும். முன்னங்காலையல்ல. இது நாவலாசிரியரான பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களுக்குத் தெரியாதது அல்ல. இது அச்சுப்பிழையாக இருக்கலாம். ஒரு வேளை இப்படியிருக்கலாமோ? என்று ஊகித்தேன்.
குருஷேத்திர களத்தில் தர்மங்கள் யாவும் தலைகீழாகப் போயின. ஆதலால் யுத்தகளத்தில் நிற்கும் சார்வாகனைத் தூரத்திலிருந்து பார்த்த நாயும் எல்லாமே தலைகீழாகப் போன நிலையில் அதுவும் வழமைக்கு மாறாக முன்னங்காலைத் தூக்கிச் சிறுநீர் கழித்ததோ? எல்லாம் தலைகீழாகப் போகின என்பதை உட்கிடையாக வைத்து நாவலாசிரியர் நாயும் வழமைக்கு மாறாக பின்னங்காலைத் தூக்கிச் சிறுநீர்கழியாது முன்னங்காலைத் தூக்க வைத்தாரோ? ஏற்புரையின் போது நாவலாசிரியர் இதனை விளக்குவார் என்பது எனது எதிர்பார்ப்பு.
மூன்றாவது அவதானம் நாவலின் இறுதிப் பந்தி மீதானது.
“திடீரென ஓர் நெருப்புச் சுவாலை எழுந்தது.
சார்வாகன் எரிந்து கொண்டிருந்தான்.
சார்வாகனின் உண்மை கலந்த சமாதானத்தின் தொனி காலையில் அவன் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தோரின் மனங்களில் ஒலித்தபடி இருந்தன.
எரிந்து கொண்டிருக்கும் சார்வாகனின் சடலத்தைக் காப்பாற்ற வழி தெரியாது அவர்கள் திக்பிரமையுடன் நின்று கொண்டிருந்தனர்.
அவர்கள் மனங்களை சார்வாகன் வார்த்தைகள் அக்கினி ஜூவாலையாகப் பற்றிக் கொண்டன
அவர்கள் மனங்கள் குருசேத்திர களங்களாயின.”
‘அவர்கள் (மக்களின்) மனங்களை சார்வாகன் வார்த்தைகள் அக்கினி ஜூவாலையாகப் பற்றிக் கொண்டன.’
என்ற வாக்கியத்துடன் நாவல் நிறைவு பெற்றிருந்தால் சார்வாகன் கூறிய யுத்த எதிர்ப்புச் சிந்தனைகள் மக்களின் மனங்களைப் பற்றிக் கொண்டன எனும் அர்த்தத்தில் யுத்த எதிர்ப்பை வலியுறுத்தும் இந்நாவலின் நோக்கத்துடன் உடன்பாடனதாய் அமைந்திருக்கும்.
ஆனால் ‘அவர்கள் (மக்கள்) மனங்கள் குருஷேத்திர களங்களாயின’ என்ற வாக்கியத்துடன் நிறைவுறுகிறபோது யுத்த எதிர்ப்புச் சிந்தனைகள் மேலும் பல யுத்தகளங்களைத் தோற்றுவிக்கக் காரணமாக அமையுமா? என்ற வினாவை எழுப்புகையில் அது இந்நூலின் நோக்கத்திற்கு முரணாக அமைகிறது.
எனவே இந்நாவலின் ‘அவர்கள் மனங்கள் குருஷேத்திர களங்களாயின’ என்ற இறுதி வாக்கியம் தவிர்க்கப்பட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.
எது எப்படியிருப்பினும் மேற்கூறப்பெற்ற இந்த எனது மூன்று அவதானங்களும் குறைபாடுகள் அல்ல. இவை எனது அவதானங்கள் மட்டுமே. இந்த எனது அவதானங்கள் எந்தவகையிலும் இந்நாவலின் மவுசைக் குறைத்துவிடவில்லையென்பதையும் நான் கூறித்தான் ஆகவேண்டும். அதுவே தர்மம்.
மறுமொழியொன்றை இடுங்கள்