பொப் இசைச்சக்கரவர்த்தி ஏ.ஈ.மனோகரன்

ஈழத்தின் இயற்கை எழிலையும் பொருளாதார வளத்தையும் இன ஐக்கியத்தையும் பொப்பிசையில் பேசுபொருளாக்கிய கலைஞன்
தமிழ்த்திரையுலகிலும் காலூன்றிய பொப் இசைச்சக்கரவர்த்தி ஏ.ஈ.மனோகரன்
முருகபூபதி
இலங்கையில் பாரதி நூற்றாண்டு கொண்டாட்டங்களை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய வேளையில், 1983 தொடக்கத்தில் தமிழக எழுத்தாளர்கள் பேராசிரியர் எஸ். இராமகிருஷ்ணன், ராஜம் கிருஷ்ணன், தொ.மு. சி. ரகுநாதன் ஆகியோரையும் அழைத்திருந்தது.
இவர்களில் ரகுநாதன் பாரதி இயல் ஆய்வாளர். புதுமைப்பித்தனின் நெருங்கிய நண்பர். அத்துடன் அவர் எனது அப்பாவின் வழியில் உறவினர். எனக்கு பாட்டா முறை.
இலங்கை நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு அவர் தமிழகத்திற்கு திரும்புவதற்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்தபோது ” இங்கிருந்து எடுத்துச்செல்வதற்கு உங்களுக்கு என்ன வேண்டும்?” எனக்கேட்டேன்.

உடனே அவர் ஏ.ஈ. மனோகரனின் ” சுராங்கணி…. சுராங்கணி… சுராங்கணிட்ட மாலு கெனாவா..?” என்ற பாடல் கஸட் வாங்கித்தரமுடியுமா?” என்று கேட்டார்.
நான் மூர்ச்சையாகி விழாமல், அவரையே கண்இமைக்காமல் சில கணங்கள் பார்த்தேன். இலங்கையிலிருந்து அவர் எடுத்துச்செல்லவிரும்பிய ஈழத்தின் பொப்பிசைச்சக்கரவர்த்தியின் அந்தப்பாடல் இன்றும் பல மொழிகளில் பலரால் பாடப்படுகிறது.
அண்மையில் வேற்று நாட்டு மங்கையொருவராலும் இந்தப்பாடல் கிராமிய காட்சிகளுடன் ஒளிப்பதிவுசெய்யப்பட்டு ஒலித்துக்கொண்டிருப்பதை பார்த்திருக்கின்றேன்.
அவ்வாறு படித்தவர் முதல் பாமரர்கள் வரையில் பெரிதும் கவரப்பட்ட பொப்பிசைப்பிதா என அழைக்கப்பட்ட ஏ.ஈ. மனோகரன் சென்னையில் மறைந்துவிட்டார்.
1970 களில் இலங்கையில் நகரங்கள் முதல் கிராமங்கள் வரையில் ஒலிக்கத்தொடங்கிய பொப்பிசைப்பாடல்கள் பிரசித்தமானவை.

ஏ.ஈ. மனோகரன், நித்தி கனகரத்தினம், அமுதன் அண்ணாமலை, இராமச்சந்திரன், முத்தழகு, ஶ்ரீதர் பிச்சையப்பா முதலானோர் தமிழில் பொப்பிசையை பரவலாக அறிமுகப்படுத்தி இளம் தலைமுறையை கட்டிப்போட்டனர்.
சிங்கள மக்கள் மத்தியில் எம்.எஸ்.பெர்ணான்டோ, மில்டன் மல்லவராச்சி, எச்.ஆர்.ஜோதிபால, பிரடீ சில்வா, ஷெல்டன் பெரேரா உட்பட பல பாடகர்கள் இந்தத்துறையில் பிரசித்தமாகியிருந்தனர்.
ஏ.ஈ.மனோகரன் தமிழ், சிங்களம், ஆங்கிலம் உட்பட இந்திய மொழிகளிலும் பாடும் ஆற்றல் மிக்கவர். இலங்கையில் சிங்கள கலைஞர்களுக்கு இணையாக புகழ்பெற்றவர். அதனால் இவருக்கு சிங்கள ரசிகர்களும் விசிறிகளும் ஏராளமாக இருந்தனர்.
தமிழகத்தில் கானா பாடல்களுக்கு கிட்டியிருக்கும் புகழும் வரவேற்பும் போன்று இலங்கையில் தமிழிசைப்பாரம்பரியத்தில் பொப்பிசைப் பாடல்களுக்கும் ஒருகாலத்தில் மகத்தான வரவேற்பு கிட்டியது. மனோகரன் இலங்கையிலும் இந்தியாவிலும் தமது பொப்பிசைப்பாடல்களினால் புகழ் பெற்றவர்.

அந்தப்புகழை மூலதனமாகக்கொண்டே தமிழகத்திலும் கேரளாவிலும் திரையுலகப்பிரவேசம் கண்டவர். பெரும்பாலும் வில்லன் பாத்திரங்களே அவருக்குத்தரப்பட்டன. 1970 களில் ஹிப்பித்தலையுடன், மெல்லிசை இரவு நிகழ்ச்சிகளில் தலையை சிலுப்பி பாடி ஆடும் மனோகரனின் தோற்றம் பின்னாளில் அவர் திரையில் தோன்றியதும் மாறிவிட்டது.

நடிப்பாற்றலும் கொண்டிருந்த மனோகரன் இலங்கையில் ஜோ தேவானந்த்தின் பாசநிலா, வி.பி. கணேசனின் புதிய காற்று, ஏ. சிவதாசனின் வாடைக்காற்று ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.
செங்கை ஆழியானின் வாடைக்காற்று கதை திரைப்படமானபோது கதையில் வரும் செமியோன் என்ற பாத்திரமேற்றிருந்தார். இலங்கைப்படங்களில் அவர் குணச்சித்திரப்பாத்திரமே ஏற்றவர். ஆனால், இந்தியாவுக்குச்சென்றதும் அவர் நடித்த நூறுக்கும் மேற்பட்ட படங்களில் வில்லனாகவோ, வசனம் ஏதும் பேசாத துணைப்பாத்திரமாகவோதான் தோன்றியிருப்பார்.
சிவாஜி, ரஜினி, கமல், மம்முட்டி ஆகியோர் நடித்த படங்களிலும் இடம்பெற்றார். அங்கு ஐந்துமொழிகளில் வெளிவந்த படங்களில் அவர் நடித்திருப்பதாக அறியப்படுகிறது.
இலங்கைக் கலைஞர்கள் தமிழக திரையுலகில் கால் ஊன்றுவதற்கு கடும் பிரயத்தனம் வேண்டும். மனோகரன் தமிழக திரையுலகில் வில்லனாகத்தோன்றியிருந்தாலும் தன்னை அங்கு தக்கவைத்துக்கொண்டார்.

ஆயினும் அவரது பொப்பிசை உலகம்தான் அவருக்கான புகழையும் வளர்ச்சியையும் வரையறை செய்திருக்கிறது.

எமது சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் மதநம்பிக்கைகளையும் அதேசமயம் மூட நம்பிக்கைகளையும் கிராமப்புறங்களின் வெள்ளாந்திக்குணத்தையும் நகரப்புரத்து போலித்தனங்களையும் நவநாகரீகங்களையும் அடிக்கடி மாறும் பண்பாட்டுக்கோலங்களையும் விலைவாசி ஏற்றங்களையும் மனோகரனின் பொப்பிசைப்பாடல்கள் பேசுபொருளாக்கியிருந்தன.
அதனால், அவரது பாடல்கள் மக்களுக்கு நெருக்கமாகியிருந்தன
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் ஆண் -பெண் இருபாலரையும் அவரது பாடல்கள் பெரிதும் கவர்ந்தன. அவர்களின் வாய் அந்தப்பாடல்களை முணுமுணுத்தன.
வீடுகளில் நடக்கும் பிறந்த தினக்கொண்டாட்டங்கள், உறவினர் ஒன்றுகூடல்கள், திருமண நினைவு வருடாந்த நிகழ்ச்சிகள் ( Wedding Anniversary) முதலானவற்றில் விருந்துகளின் நடுவே இந்தப்பொப்பிசைப்பாடல்களும் இடம்பெறும்.
“இலங்கை என்பது எமது தாய்த்திருநாடு” – “தாராரே தாரைப் போடுடா” – ” சுராங்கணி” ” மால்மருகா எழில் வேல் முருகா” – கண்டிநகர் சென்று வருகிறோமம்மா” ” யாழ்ப்பாணம் போக ரெடியா” முதலான அவரது பாடல்கள் இன்றும் எங்காவது ஒலித்துக்கொண்டிருக்கும்.
அவருக்கு மும்மொழியிலும் பேசும் பாடும் ஆற்றல் இருந்தமையால் இலங்கையில் அனைத்து ரசிகர்களினதும் அபிமானத்தைப்பெற்றிருந்தார். இலங்கை பற்றிய பாடல்களில் அதன் இயற்கை எழிலும் பொருளாதார வளமும் மக்களிடம் அவர் வேண்டியிருந்த, எதிர்பார்த்த இன ஐக்கியமும் பேசுபொருளாகியிருக்கும்.

“கந்தளாய் இனித்திடுமே… கல்லோயா மயக்கிடுமே….!” என்றும் கருத்துச்செறிவோடு நயமாகவும் பாடுவார். “யாழ்ப்பாணம் போக ரெடியா மாம்பழம் தின்ன ஆசையா…?” பாடலில் வடபுலத்தின் உணவு நாகரீகம், பொருளாதார வளம், ஊரின் பெருமைகளை யெல்லாம் ரசிகர்களிடம் தமது பொப்பிசைப்பாடல்கள் ஊடாக கொண்டுசென்ற தனித்துவமான கலைஞன் அவர்.
தமிழ்வரிகளையே உடனுக்குடன் சிங்கள – ஆங்கில மொழிகளிலும் மாற்றிப் பாடும் ஆற்றல் கொண்டிருந்தவர்.

1976 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நண்பர் மேமன் கவியின் முதலாவது கவிதை நூல் யுகராகங்கள் வெளியீட்டு நிகழ்வுக்காக கோட்டையிலிருந்து புறப்பட்ட காலை ரயிலில் பயணித்தபோதுதான் மனோகரனுடன் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது.

அன்றையதினம் மாலை கிளிநொச்சி மைதானத்தில் நடக்கவிருந்த கலை நிகழ்ச்சிக்காக அவருடன் மரைக்கார் ராமதாஸ், உபாலி செல்வசேகரன், கே.எஸ்.ராஜா, மணிமேகலை ஆகியோர் பயணித்த பெட்டியிலேயே நாமும் சென்றோம்.

மனோகரனைக்கண்டதும் அதில் பயணித்த தமிழ், சிங்கள பயணிகளும் அவரைச்சூழ்ந்துகொண்டு தத்தமக்கு பிடித்தமான பாடல்களை பாடச்சொல்லி அவரை உற்சாகப்படுத்தினர்.
அந்தக்கலகலப்புக்கு மத்தியில் அவர் எங்களுடன் நகைச்சுவை ததும்ப உரையாடினார். “மக்களிடத்தில் நல்ல கருத்துக்களை பரப்புவதற்கு பாடல்கள் சிறந்த ஊடகம் எனவும், அவர்களின் அன்றாட வாழ்க்கையையும் அதில் சித்திரிக்கும்போது நகைச்சுவையையும் சேர்த்துக்கொண்டால் நன்கு ரசிப்பார்கள். சிங்கள பைலா பாடல்கள் பலவற்றிலும் இந்தத்தன்மை இருக்கிறது” என்றார்.
“உடனுக்குடன் எதுகை மோனையுடனும் கருத்தாழத்துடனும் பாடல் புனைந்து பாடும் ஆற்றல் மிக்க பல சிங்களப்பாடகர்களை இலங்கையில் தாம் பார்த்திருப்பதனால், தமிழிலும் அத்தகைய பாடல்களுக்கும் வரவேற்பு இருக்கும் என்று தானும் தன்னைப்போன்ற நித்தி கனகரத்தினம் முதலான கலைஞர்களும் பொப்பிசைப்பாடல்களில் மக்களின் அன்றாடப்பிரச்சினைகளையே எடுத்தாண்டோம்” என்றார்.

ஏ.ஈ.மனோகரன் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் பாடிய பாடல்களை இன்றைய குழந்தைகளும் தமது மழலைக்குரலில் பாடுகின்றனர்.

காலம் கடந்தும் பேசப்படும் கலைஞர் ஏ. ஈ. மனோகரனின் குரல் பரந்தகாற்றுவெளியில் தொடர்ந்து பரவிக்கொண்டேயிருக்கும். காற்றுக்கென்ன வேலி…?
letchumananm@gmail.com

“பொப் இசைச்சக்கரவர்த்தி ஏ.ஈ.மனோகரன்” அதற்கு 3 மறுமொழிகள்

  1. AE.Manoharan : Great singer! Great legend!
    Great Tamil! Great Human! Great Goodwill Ambassador for SL-Tamils!

  2. Dear Nadesan,
    I was on Tour Andhra Tirupathi &Chennai
    Read today
    1

    பொப் இசைச்சக்கரவர்த்தி ஏ.ஈ.மனோகரன்noelnadesan

    2
    ஈழத்தின் இயற்கை எழிலையும் பொருளாதார வளத்தையும் இன ஐக்கியத்தையும்
    பொப்பிசையில் பேசுபொருளாக்கிய கலைஞன்

    தமிழ்த்திரையுலகிலும் காலூன்றிய பொப் இசைச்சக்கரவர்த்தி ஏ.ஈ.மனோகரன்

    முருகபூபதி
    Very Good
    Aye one
    Send more and more to read all of your new posts
    I am reading all your old Noelnadesan’s Blog
    அண்மைய பதிவுகள்
    அண்மைய பின்னூட்டங்கள்
    காப்பகம் MAY 2010 to JAN 2018
    Thanks
    V.Avudaiappan B.Pharm
    Kadayanallur
    India

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: