நாசரத்தை சேர்ந்த யேசு என்பவர் இறந்ததற்கு ரோம சாம்ராச்சியத்தில் ஒரு பதிவு இருந்தாலும் அவர் சிலுவையில் இறந்ததற்கு எந்தப் பதிவுகளிலும் இல்லை என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். ஆனால் கிஸ்துவ மதத்தை ஸ்தாபித்த புனித போலால் ( St Paul) எங்கு சிலுவையைக் கண்டாலும் நாம் யேசுநாதரை நினைக்கிறோம். அதாவது ஐக்கோன்(Icon) எனப்படும் இலச்சினை. இப்படியான இலச்சினைகளை மதங்கள் மட்டுமல்ல, அரசியல் இயக்கங்களும் உருவாக்கினர்கள். நாம் அரிவாள், சுத்திலைப் பார்த்தால் கம்மியயூனிஸ்ட் இயக்கத்தை நினைப்போம்.
சில கோடுகளால் பாரதியை உருவாக்கி தனது முகப்பு புத்தகத்தில் வைத்திருந்தார். அவரது முகப்புத்தகத்தில் ஒவ்வொரு முறையும் நான் பார்க்கும்போது அது பாரதியை குறிப்பது என்பதற்குப் பதிலாக அது என்னிடத்தில் பாரதியையும் ஞானியையும் சேர்த்து கலவையான உணர்வை உருவாக்கும்.
வருங்காலத்தில் அந்த இலச்சினையை எவரும் திருடாமல் இருக்கவேண்டும்.
ஞாநியின் தாம்தரிகட சஞ்சிகைகளையும் கட்டுரைகளைப் படித்தும் இருப்பதால் அவர் முக்கியமான பத்திரிகையாளர் என்று நினைத்தேன் பிற்காலத்தில் தேனீ இணையத்தளத்தில் அவரது ஈழத்தமிழர் சம்பந்தமான அரசியல் கட்டுரைகள் சிலவற்றை வாசித்தபோது வழமையான தமிழ்நாட்டு எழுத்துக்கு மாறாக அறிவுபூர்வமாக இருந்தது.
இலங்கை அகதிகள் விடயத்தில் தமிழகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக நானும் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியமும் ஜுலை 2009 ல் இலங்கையில் இருந்து இந்தியாவுக்குச் சென்றபோது ஞாநி வீட்டிற்கு அழைத்து எங்களை செவி மடுத்ததோடு உணவும் அளித்தார். பல அரசியல் தொடர்புகளை ஏற்படுத்தித் தந்தார். பத்திரிகைகளைச் சந்திக்க ஆவன செய்தபோது நாம் மறுத்துவிட்டோம்.
2015ல் புத்தகக் கண்காட்சியில் சந்தித்தபோது ஆரத்தழுவி பேசிக்கொண்டிருந்தோம். அரைமணி நேரம் அவரது ஸ்டாலில் இருந்தேன். எவரிடத்திலும் மனம்விட்டு உரையாடும் தன்மையும், நினைத்ததை எழுதும் மற்றும் வெளிப்படையாகப் பேசும் தன்மையும் என்னைக் கவர்ந்தது.
பிற்காலத்தில், தேர்தலில் நின்றபோது அவரது நோக்கத்தையும், நட்பையும் நேசித்து ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் அவரது வங்கி இலக்கத்தைக் கேட்டு தகவல் அனுப்பினேன். அவர் எதுவித பதிலும் போடவில்லை என்பதால் எனது தமிழ்நாட்டு நண்பனிடம் அவருக்குக் கொடுக்கும்படி சிறுதொகை அனுப்பியபோது அதை வாங்காது நன்றி சொல்லி அனுப்பினார்.
நான் இலங்கையன் அல்லது அவுஸ்திரேலியன் என்பதால் மறுத்திருக்கவேண்டும் என நினைத்தேன் .
அதனால் எனது மனத்தில் மேலும் உயர்ந்தார்.
அவரது முகநூலில் மரணதண்டனைக்கு எதிராக எழுதியபோது, நான் எழுதினேன் ‘தொடர்ச்சியான சீரியல் கொலையாளிகளும், சிறிய பிள்ளைகளை வன்கலவிக்கு உட்படுத்துபவர்களும் எக்காலத்திலும் திருந்தாதவர்கள். அவர்களை வைத்திருக்க அவுஸ்திரேலியாவில் வருடத்திற்கு 60000 டாலர்கள் செலவு செய்யவேண்டியுள்ளது. இது சராசரியான அவுஸ்திரேலியன் ஒருவனது வருட வருமானத்திலும் அதிகம் இவர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றுவது எனக்கு தவறாகப் படவில்லை’
அதற்குப் பதிலாக ‘ஒரு நாகரிகமான சமுதாயம், அந்தச் செலவை ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று – அப்பொழுது நினைத்தேன் – இந்த மனிதன் ஐம்பது வருடங்களாவது முந்தி தமிழகத்தில் பிறந்திருக்கிறார். தனது சிந்தனைப் போக்கிற்கு ஏற்ப சமூகம், இனம், நாடு வரவேண்டுமென சிந்தித்து, செயல்பட்டு வாழ்ந்த ஞாநியை-அவரது முகத்தை மறந்தாலும் , அவரது பாரதி இலச்சினை என்னைத் தொடர்ந்து வரும்.
மறுமொழியொன்றை இடுங்கள்