எனது இரத்தத்தில் இருந்து ,துளி துளியாக அடிமைத் தன்மையை சிறிது சிறிதாக அகற்றவேண்டியிருக்கிறது என்றார் அன்ரன் செகோவ். அவரது பேரன் ஒரு பண்ணையடிமை. வைத்தியராகவும் , புகழ்பெற்ற எழுத்தாளரான அன்ரன் செகோவ் இப்படி சொல்லுவதன் மூலம் அக்கால பண்ணையடிமை முறை எவ்வளவு கொடுமையானது என்பதைப்புரிந்து கொள்ளலாம்.
ஏராளமான பண்ணை அடிமைகளை ரஸ்சியாவில் வைத்திருந்தார்கள். அடிமைகள் பண்ணையாரால் கொலை செய்யபபடுவது தண்டனைக்குரிய குற்றமல்லவென பலகாலமாக இருந்தது.18 ம் நூற்றாண்டிலே சட்டம் திருத்தப்பட்டு அடிமைகள் கொலை செய்வது, தண்டனைக்குரிய குற்றமாகியது.
பீட்டர்ஸ்பேக்கின் நேவா நதிக்கரையின் புருவத்தில் அமைந்திருந்த மாளிகைகள் , தேவாலயங்கள் மற்றும் கலைப்பொக்கிசங்கள் என்பவற்றைப் பார்த்தபோது ரஸ்சிய மன்னர்களும் , பிரபுக்களும் எவ்வளவு செல்வத்தை வைத்திருந்தார்கள் என்பதைப் புரிந்து கொள்ளமுடியும். 1917 ல் ஆட்சியைக் கைப்பற்றிய போல்சிவிக்கள் ஓரளவாவது மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறுவதற்கான காரணத்தை நாம் புரிந்துகொள்ள இந்த மாளிகையில் உள்ள செல்வங்கள் மற்றும் கலைப்பொருட்களே சான்று பகரும்.
நாங்கள் சென்ற கத்தரின் மாளிகை நமது கண்ணை அள்ளிக்கொண்டு செல்லும்.
என்னிடம் புது ரக கனன் கமரா இருந்தபோதும் இந்தக் கமராவால் பிரயோசனம் இல்லை என்ற எண்ணம் ஏற்பட்டது. பீட்டரஸ்பேக்கில் முதல் நாளே இந்த எண்ணம் எழுந்து கத்தரின் மாளிகையில் இறுதியான முடிவுக்கு வந்தது.
பால்டிக் கடற்கரையருகே உள்ள நகருக்கு பெயர் புஷ்கின் நகரம். இங்குதான் அக்கால ரஸ்சிய அரசிகளின் ஆரம்ப அரசியான கத்தரினது பெயரால் மிகவும் அழகான மாளிகை உள்ளது. தங்க முலாமிட்ட சிலைகள், அலங்கார நீரூற்றுகள் வாசலை அலங்கரித்தன. இந்த மாளிகையைச் சுற்றி அழகான கத்தரின்பூங்கா உள்ளது.
ரஸ்சிய சரித்திரத்தில் மூன்று பெண்கள் சர்வ வல்லமை பொருந்திய அரசிகளாக இருந்தது முக்கியமான விடயம். அதிலும் ஐரோப்பாவில் நடப்பது இலகுவானதல்ல.
இந்த மாளிகையை அமைத்த பெண் கத்தரீன் 1 ரஸ்சிய இராணுவ அணிக்கு துணி துவைப்பதற்காக வந்த ஜெர்மனியப் பெண். இவரது அழகும்,அறிவும் மகாபீட்டர் அரசனைக் கவர்ந்ததால் இரண்டாவது மனைவியானார். போர்க்களத்திற்க்கு அரசருடன் சென்று மதியுரை சொல்லும் அறிவிருந்ததாகவும் ஒருமுறை மகா பீட்டர் உயிர் தப்பியதன் காரணமே கத்தரின் என வரலாறு சொல்கிறது.
இந்த மாளிகையின் மிக அருகில் பால்டிக் கடல் உள்ளது.நாங்கள் சென்ற நேரம் மழையும் காற்றுமாக இருந்தது. எதிரில் இருந்த பால்டிக் கடல் கண்ணுக்குத் தெரியவில்லை. கோடைகால வாசஸ்தலமாக . ஜெர்மன் கட்டக்கலைஞரால் வடிவமைக்கப்பட்டு கத்தரீன்1ஆல் கட்டப்பட்டது. மகாபீட்டரின் பேத்தியான மகா கத்தரின் காலத்தில் இந்த மாளிகை பெரிதாகியது. இந்த மாளிகையின் பகுதிகளுக்கு 100 தொன் பொன் பாவித்து முலாமிட்டார்கள். திருப்திகரமாக வருவதற்காக இந்த மாளிகை ஆறு முறை இடித்து கட்டப்பட்டது.
இந்தப்பிரதேசம் தற்பொழுது யுனஸ்கோவால் அங்கீகாரம் பெற்ற பாதுகாக்கப்படவேண்டிய பகுதியாக இருக்கிறது.
இந்தமாளிகையில் உள்ள அம்பர் அறை எட்டாவது உலக அதிசயமாக பிரசித்தி பெற்றது. அம்பரால் உருவாக்கப்பட்ட இந்த அறை அக்கால ஜெர்மனி அரசனால் மகா பீட்டருக்கு பரிசளிக்கப்பட்டது.
45 சதுர மீட்டர் அகலமான பிரேமில் பதிக்கப்பட்ட அம்பர்களின் மொத்தப் பாரம் ஆறு தொன்.அதைவிட பல இரத்தினங்கள் இடையே பதிக்கப்பட்டுள்ளது.
1941இல் நாசிகள் கைப்பற்றுவதற்கு முன்பாக கத்தரின் மாளிகையில் இருந்து விலையுயர்ந்த கலைப்பொருட்களை பாதுகாப்பாக அகற்றிய சோவியத் அரசாங்கத்தினர் அம்பர் சுவர் சட்டங்களை அகற்றினால் அவை சிதைந்துபோகும் என்ற காரணத்தால் பாதுகாப்பாக இந்த அம்பர் அறையை மறைத்து கடுதாசிகளை ஒட்டினார்கள். இந்த அம்பர் அறை மொத்தமாக நாசிப்படையினரால் திருடப்பட்டு ஜேர்மனிக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு மறைந்துவிட்டது. இன்னமும் அந்த மர்மம் துலங்கவில்லை.
2003ல் வந்த பீட்டரஸ்பேக்கின் உருவாக்கதின் 300 வருட நிறைவிற்காக மீண்டும் காலின்கிராட்டில் கிடைத்த அம்பரால் மீளுருவாக்கியதையே நாங்கள் பார்த்தோம்
அம்பர் என்பது மரத்தில் இருந்து உருவாகிய பால், மண்ணில் விழுந்து பல மில்லியன் வருடங்களின் பின்பு, தங்க நிறத்தில்,கரி வைரமாவதுபோல் கடினமாகும். பால்டிக் அம்பர் பைன்மரத்தில் இருந்து உருவாகியது. மஞ்சள் நிறத்தில் ஒளிர்வதோடு இவை வண்டுகள் இலைகள் என்பவற்றை உள்ளே வைத்திருக்கும். அம்பரை, மிகவும் விலை உயர்ந்த அலங்காரத்திற்கு, ஆபரணத்திற்கு மற்றும் மதச் சின்னங்களை உருவாக்க பயன்படுத்துகிறார்கள்.
அம்பர் அறை தெறிக்கும் ஒளியில் கண்களை கூசவைக்கும் அழகுடன் பிரகாசித்தது. மிகவும் அதிகமான கூட்டமானதால் நிற்காமல் தள்ளப்பட்டு அந்த இடத்தை விட்டு விலக விருப்பமில்லாமல் விலகினோம்.
இந்த மாளிகையில் அழகான விசாலமான நாட்டிய கூடம் இருந்தது. தங்கத்தால் முலாம் பூசப்பட்ட கூரைகள், சித்திரவேலைப்பாடுகள் உள்ள சுவர்கள் மற்றும் கால்வைக்கத் தயங்கும் தரைகளைக்கொண்ட நாட்டிய கூடம் என்பது ரஸ்சிய மன்னர்களிடம் குவிந்திருந்த செல்வத்தைக் காட்டியது
,
மறுமொழியொன்றை இடுங்கள்