பீட்டர்ஸ்பேக்கின் முக்கியமான இந்த தேவாலயம் கட்டுவதற்கு 24 வருடங்கள் சென்றன. போலஸ்சுவிக்குகள் தமது ஆரம்பகாலத்தில் மதத்தை இல்லாதொழிக்கும் நோக்கத்தில் தேவாலயங்களை புறக்கணித்தார்கள். அதன் பின்பாக ஜேர்மன் குண்டுவீச்சால் அழிந்த இந்தத் தேவாலயத்தை புதுப்பிக்க 27 வருடங்கள் எடுத்தது. இந்த புதுப்பித்தல் முடியும்போது 1991ம் ஆண்டு சோவியத் ரஸ்சியா உடைந்துபோனது.
ரஸ்சியாவில் பண்ணை அடிமைகளை விடுவித்த மன்னனை (அலக்சாண்டர்11) இந்தத் தேவாலயம் இருந்த இடத்ததில் குண்டெறிந்து கொலை செய்தார்கள். குண்டெறிந்தவன் மன்னனது, பண்ணை அடிமைகளை விடுவிக்கும் செயலை எதிர்க்கும் கொள்கை கொண்டவன். மன்னனின் நினைவாக அவரது மகனால் தேவாலயம் கட்டப்பட்டது. இதனால் மீட்பாரின் குருதி சிந்திய இடமென்பார்கள். அலக்சாண்டர்11 ரஸ்சிய ஷார்களில் புகழ் பெற்றவன்.
இந்த தேவாலயத்தில் உள்ள அலங்காரங்கள் எல்லாம் மொசாக் முறையிலானவை. வண்ணக் கண்ணாடிகளைப் பசையினால் ஒட்டி ஓவியத்தை உருவாக்கும் முறையே இந்த மொசாக் முறையிலான அலங்காரங்களாகும். மொசாக் அலங்கார பாணி மேற்காசியாவில் இருந்து கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாக ஐரோப்பா சென்றது என்பார்கள். தேவாலயத்தில் நான் கண்ட இந்த மொசாக் ஓவியங்கள் மிகவும் அழகானவை. இங்குள்ளவைதான் ஐரோப்பாவிலே அதிகமானதும் அற்புதமானதாக இருப்பதாகவும் சொல்கிறார்கள்.
இத்தேவாலயம் இரண்டாம் உலக யுத்தகாலத்தின்போது பொருட்களைப் பாதுகாக்கும் களஞ்சியமாகவும், பிரேதங்களை வைக்கும் பிணவறையாக பாவிக்கப்பட்டது. நாசிகளின் முற்றுகைக் காலத்தில் தேவாலய முன்றலில் விவசாயம் செய்யப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் வீசப்பட்ட குண்டு 1961 ம் ஆண்டில் தேவாலயக் கூரையின் மத்திய பகுதியில் வெடிக்காமல் கிடந்து அகற்றப்பட்டது. தற்பொழுது கலாச்சார மியூசியமாக இயங்குகிறது.
1)கோலிபிளவர் விவசாயம் 2)நாடகசெட்டுகளை வைத்திருக்கும் படம்.
இந்த தேவாலயம் இருக்குமிடம் கிரிபைடோ கால்வாய் ( Griboyedov Canal) பகுதியிலுள்ளது. இந்தக் கால்வாய் நேவா நதியில் விழும் இரண்டு கிளை ஆறுகளை இணைக்கும் கால்வாயாகும். ஆரம்பத்தில் மகா கத்தரின் ராணியின் பெயரால் அழைக்கப்பட்டது. பின்பு 19ம் நூற்றாண்டின் நாடக ஆசிரியரும் கொலை செய்யப்பட்ட ரஸ்சியாவின் பாரசீகத்து இராஜதந்திரியின் பெயரான கிரிபைடோ இடப்பட்டது.
இந்தக் கால்வாய் அருகேதான் தாஸ்கோவிகியின் குற்றமும் தண்டனையும் நாவலில் வரும் கதாநாயகன் ரஸ்கோலின்கோவ் (Raskolnikov) உலா வருகிறான். இந்த கால்வாய்க்கு எதிரே அந்த அடைவு பிடிக்கும் பெண்ணினது அபாட்மெண்ட் இருக்கிறது. பல தடவை இந்த கால்வாயின் மேலுள்ள பாலத்தை ரஸ்கோலின்கோவ் கடக்கிறான். இந்தக் கால்வாய் அழுக்கான இடமாக நாவலில் சித்தரிக்கப்படுகிறது.
போலஸ்சுவிக் ஆட்சிக்கு முந்திய இரஸ்சியாவை உலகெங்கும் எடுத்துச் சென்றவர்கள் இலக்கியவாதிகளே ஆவர். என்னைப்போன்று இலக்கியத்தில் ஆவலுள்ளவர்கள் எவரும் தாஸ்தவஸ்கியை நினைக்காமல் பீட்டர்ஸ்பேர்கைப் பார்க்கமுடியாது. எமது வழிகாட்டி அதோ அந்த அப்பாட்மெண்டே அந்தக்காலத்தில் குற்றமும் தண்டனையும் நாவலில் சோனியா வாழ்ந்த இடம் என்றாள். இன்று அந்த இடங்கள் மாறிவிட்டன.
தாஸ்தவஸ்கியின் நாவல்களுக்கு அப்பால் எனக்குப் பிடித்தவை அவரது சைபீரிய சிறை அனுபவம். இறந்தவர்களின் வீடு(The House of the dead) என்ற பெயரில் நாவல் அவர் எழுதியது. அதைப்போல் இந்த முறை விடுமுறையில் படிக்க கையில் எடுத்துக்கொண்டு போனது அவரது நோட் புறம் அண்டகிரவுண்( Notes from underground) அவரது முதலாவது மனைவி இறந்தபோது ரஸ்சிய ஓர்தோடொஸ் வழக்கப்படி சில நாட்கள் உடலை வீட்டில் வைத்திருக்கவேண்டும். அப்படி மேசையில் வைத்திருந்தபோது அவர் எழுதியதாகச் சொல்லப்படும் ‘நோட்புறம் அண்டகிரவுண்’ என்ற படைப்பு நொவலா என்ற குறுநாவல் தன்மை கொண்டது.
தாஸ்தவஸ்கி மனிதரில் மிகவும் கசப்புணர்வு உள்ளவனைக் கதாபாத்திரமாக்குகிறார். நான் கெட்ட, கபடமான, அருவருக்கத்தக்க மனிதன் என அவர் எழுதும் ஆரம்ப வசனம் தொடங்குகிறது. தனது கசப்புணர்வை மற்றவர்களிடம் வெளிப்படுத்தும்போது அவன் சந்தோசமடைவதாக அந்தக் கதை தொடர்ந்து செல்லும்.
அவரது எழுதுக்களில் எனக்கு பிரமிப்புடன் ஆச்சரியம் கொடுத்த வார்த்தைகள் : ஒருவன் பல்வலியால் துன்புறும்போது அவன் முனங்குவது. அந்த வலியில் அவன் இன்பமடைகிறான். தனது வலியை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தும்போது அவனுக்கு அது பேரின்பத்தை அளிக்கிறது.
இரண்டும் இரண்டும் நாலு என்பதை ஏற்றுக்கொள்வதைவிட சொர்க்கத்தின் யன்னலூடாகக் குதிப்பதற்குத் தயாராகிறான். இங்கு ஒரு கசப்பான மனிதனை அல்லது மனித மனத்தில் உள்ள எதிர்த்தன்மையை வெளிப்படுத்துவதே தாஸ்தவஸ்கியின் நோக்கம்.
இந்தப் பாத்திரம் காதல், அன்பு என்பன மனிதனது சுதந்திரத்தை அழிக்கிறது என்கிறது. அவனை ஒரு பாதாள மனிதனாக தாஸ்தவஸ்கி சித்தரிக்கிறார். விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட நண்பர்கள் விருந்தில் தன்னுடன் பேசவில்லை என்பதால் மற்றவர்களை அவமானப்படுத்திவிட்டு – குடித்து போதையின் காரணமாக – அவர்களது செயல்கள் தன்னை அவமானப்படுத்துவதாக எண்ணி பிட்டர்ஸ்பேக்கின் பனிக்கால இரவில் ஒரு விபசாரப் பெண்ணினது வீட்டிற்கு செல்லுகிறான். அங்கே அந்தப் பெண்ணுக்கு விபச்சாரத் தொழிலில் இருந்து விலகு என புத்திமதி கூறியது மட்டுமல்லாது, தனது சோகத்தை அவளிடம் வெளிப்படுத்தி விலாசத்தை கொடுத்துவிட்டும் வந்துவிடுகிறான். ஆனால் வந்தபின் அவள் தன்னைத்தேடி வந்துவிடக்கூடாதே என்ற ஏக்கம் சில நாட்களுக்கு அவனை அலைக்கழிக்கும். இறுதியில் அவள் வந்தபோது அவளை அவமானப்படுத்தியதையும் அந்தப் பெண் சகித்துவிட்ட அதரவாக அணைக்கும்போது உடலுறவு கொள்கிறான். காலையில் அவள் வெளியேறும்போது 5 ரூபிள் கொடுப்பான். அவள் அதை எறிந்து விட்டு வெளியேறுவது மிகவும் ஆழமான இடமாக எனக்குத் தெரிந்தது.
இந்த இருவரை விட மூன்றாவது முக்கிய கதாபாத்திரம் வயதான வேலையாள். அடிக்கடி உற்றுப் பார்பதும் தன்னை துன்புறுத்துவதாக நினைத்து அவனது சம்பளத்தை கொடுக்க மறுப்பது போன்றவற்றால் வெளிப்படாத மனித மனத்தின் ஒரு பகுதிக்கு உருவம் கொடுத்திருக்கிறது இந்த நொவலா.
மனித மனத்தை அதிலும் முக்கியமாக ஆண்களின் மனங்களை இலத்திரன் மைக்கிரஸ்கோப்புள் போட்டு பார்த்த ஒரே கதாசிரியர் தாஸ்தவஸ்கி.
தாஸ்தவஸ்கியின் இரண்டாவது மனைவி தாஸ்தவஸ்கி 1881ம் ஆண்டில் இறந்த பின்னரும் 37 வருடங்கள் வாழ்ந்தார். ஆன்னாவின் இறப்பு பரிதாபமானது.
பீட்டஸ்பேர்க்கை போல்ஸ்சுவிக்குகள் கைப்பற்றிய பின்னர் ஒரு உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது ஆன்னா உணவற்று இருந்ததை ஏழு நாட்களின்பின் கேள்விப்பட்ட ஒருவர் புதிதாகத் தயாரிக்கப்பட்ட பாணைக் கொண்டு வந்து கொடுத்தாராம். அதிக அளவில் பாணைச் சாப்பிட்டு அதன்பின் நீரைக் குடித்துவிட்டதால் வயிறு வீங்கிப்போய் அன்றே ஆன்னா பரிதாபமாக மரணடைகிறார்.
மறுமொழியொன்றை இடுங்கள்