Uspenski Cathedral
பதில் சொல்ல முடியாத கேள்விகள்: அந்தக்காலத்தில் பரசிற்ரோலஜி( Parasitology) வாய்மொழிப் பரீட்சைபோல் இருந்தது. பரீட்சைகள் மாணவப் பருவத்தில் மட்டுமல்ல வயதாகி இளைப்பாறும் தறுவாயிலும் ஏற்படும் என்பதை சமீபத்திய ரஸ்சியப் பயணத்தில் அறிந்துகொண்டேன்.
பயணத்தின் ஆரம்பம் பின்லாந்து தலைநகரான ஹெல்சிங்கியில் இருந்தது. அங்கு செல்ல மூனிச்சில் விமானம் மாறியபோதுஐரோப்பிய ஒன்றியத்தின் செங்கன்(Schengen Zone/ Agreement) எனப்படும் ஒன்றிணைந்த பிரதேசத்திற்குள் வந்ததால் ஓர் விமானநிலயத்தில் பாஸ்போட்டில் குத்தப்பட்ட முத்திரை எல்லா ஐரோப்யிய ஒன்றிய நாடுகளுக்கும் போதுமானது.
நாங்கள் வந்திறங்கிய மூனிச் விமானநிலயம் மிகப்பெரியது மட்டுமல்ல, அதன் அமைப்பு தலையைச்சுற்றியது. இருபது மணித்தியாலப் பயணத்தின் பின்பு தட்டுத் தடுமாறியே அங்கிருந்து ஹெல்சிங்கி சென்றோம்.
ஹெல்சிங்கி விமான நிலயத்தை அடைந்ததும் அங்கு எங்களுக்கு எந்த விசாரணையும் இருக்கவில்லை.ஆனால் பொதிகளுக்கு இரு மணித்தியாலங்கள் காவல் நின்றால், அவை வந்து சேரவில்லை. நாற்பது நாட்கள் பயணத்திற்கு என்னிடம்கைப்பொதியில் மேலதிகமாக இரண்டு சோடி உடுப்புகள் சியாமளாவிடம் எதுவுமில்லை. இலகுவான பயணத்திற்காக அவரது கைப்பொதியும் விமானத்தில் லக்கேஜ் ஆகியிருந்தது. பழனி முருகனை விட முதற்கிழமை இலங்கையில் தரிசித்த கதிர்காமத்துக் கந்தனே எனது நினைவில். நமது ஊரில் கடவுளுக்கு சிறு சல்லடம் போதும், இங்கு குளிர்.உடல் தாங்காது
விமான நிலயத்தில் பொதிகளுக்கு பொறுப்பாக உள்ள பெண்ணிடம் பேசினோம். நாங்கள் சொல்லச் சொல்ல எழுதினார்.பொதிகளின் அமைப்பு? என்ன தயாரிப்பு? என்று கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை.பதில் சொல்ல முடியாதகேள்விகள்: அந்தக்காலத்தில் பரசிற்ரோலஜி ( Parasitology) வாய்மொழிப் பரீட்சைபோல் இருந்தது.
இனிமேல் பாஸ்போட்டை தொலைபேசியில் படம் எடுப்பதுபோல், பொதிகளையும் எடுக்கவேண்டுமென்று நினைத்தேன்.
எங்களது ஹோட்டேல் விலாசத்தை கொடுத்து, ஜெர்மனியில் தவறவிட்டிருக்கலாம் எனச் சொல்லிவிட்டு சென்றோம். சிங்கப்பூர் விமானசேவையென்பதால் ஒளிக்கீற்றாக
நம்பிக்கையிருந்தது.
நோர்வே ,இரஸ்சியா போன்ற நாடுகளில் செப்டம்பரிலே குளிர் தொடங்கிவிடும் என்பதால் குளிர் உடுப்பு தேவை. ஹோட்டேல் எதிரே மார்க் அன்ட் பென்சர் இருந்தது. வாங்கிய பின்பே நிம்மதியாக மூச்சு விட்டோம்.விடுமுறைக்கு முன் இப்படி நடக்கிறதே என்ற அங்கலாய்ப்பு ஆனால் இருவருக்கும் சகுனத்தில் நம்பிக்கையில்லை.
இதுவரையும் ஸ்கண்டினேவிய தீபகற்பத்தில் பின்லாந்து ஒரு பகுதியென நினைத்து வந்தேன். ஆனால் அது தவறானது எனப்புரிந்துகொள்ள பின்லாந்து வரவேண்டியிருந்து. இங்வளவிற்கும் புவியலில் நான் புலி என நினைத்திருந்தேன்.
பின்லாந்து,பல நூற்றாண்டு காலமாக சுவிடனின் அரசின் கீழ் இருந்தது. சுவீடன் 1809 ரஸ்சிய அரசால் தோற்கடிக்கப்பட்டதும் பின்லாந்து, ரஸ்சிய சாமராச்சியத்தின் ஒரு பகுதியாகியது. 1917 இரஸ்சியாவில் போல்சிவிக் ஆட்சிக்கு வந்ததும், பின்லாந்து சுதந்திரமானதாக அறிவிக்கப்பட்டாலும் அங்கு மக்கள் யுத்தம் (Civil War) கம்மினிஸ்ட் சார்பானவர்களுக்கும், எதிரானவர்களுக்குமிடையே நடந்து இறுதியில் எதிரானவர்கள் வென்றார்கள். பிற்காலத்தில் இரஸ்சியாவுடன் மூன்று மாதம் போர் நடந்தது. இரண்டாவது உலக யுத்தத்தில் ஜெர்மனிக்கு ஆதரவாக இருந்த நாடுகளில் பின்லாந்தும் ஒன்று. நாஜி படைகளுடன் ஒன்றிணைந்து ரஸ்சியா மீது படையெடுத்தார்கள். இது அறியாத விடயம் மட்டுமல்ல மேற்கு நாடுகள் பேசாத விடயம்.
பின்லாந்து மொழி ஸ்கண்டிநேவிய நாடுகளில் பேசப்படும் மொழியில் இருந்து மாறுபட்டது. பல்கேரிய மொழியை சகோதர மொழியாகக்கொண்டது( தமிழும் மலையாளமும்போல) இப்பொழுது இரஸ்சியப் பகுதியான, யூரல் மலை அடிவாரம் மற்றும் வல்கா நதிக்கரை அருகிலுள்ள பகுதியில் இருந்து வந்த மக்கள் என நம்பப்படுகிறது. இதனால் யுராலி(Uralic) மொழிக்குடும்பம் என்பார்கள்.
பின்லாந்து கல்விக்கு சிறப்பானது. 7 வயதிலே குழந்தைகள் பாடசாலை செல்வதும் முக்கியமானது. இலத்திரன் துறைசார்நத தொழில்களில் சிறப்படைந்த நாடு
நாங்கள் மூன்று நாட்கள் தங்கிய ஹெல்சிங்கி நகரில் ஆறு இலட்சம்(600000) மக்கள் வசிக்கிறார்கள். சிறிய நகரமானாலும் மிகவும் அழகானதுடன் கட்டிடங்கள், பாதைகள் மிகவும் இலகுவாக ஒழுங்கமைப்பட்டது. பஸ், ட்ராம், இரயில் என பொது போக்குவரத்து வசதிகள் இருப்பதால் அதிக வாகன நெருக்கமற்ற நகரம்.நகரத்தின் மத்தியில் இருந்து துறைமுகப்பகுதியை இணைப்பது அழகான பூங்கா.அதனூடாக நடந்து துறைமுகத்தை அடையமுடியும்.ஹெல்சிங்கி நடப்பதற்காக உருவாக்கப்பட்ட நகரமாகத் தெரிந்தது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ளதால் யுரோ நாணயம் புழக்கத்தில் உள்ளது. குளிர் உடுப்புகள் வாங்கும்போதே கடன் அட்டையை மிகவும் வேகமாக விழுங்கும் நாடு எனப்புரிந்துகொண்டாலும் ஒரு ரெஸ்ரோரண்டில் போய் சாப்பிட்டபின்பு அந்த பில், நெத்தியில் அடியாக விழுந்தது.. ‘இப்படியான இடங்களில் தொடர்ந்து சாப்பிடுவதானால் நான் நாளைக்கே அவுஸ்திரேலியா போறன்’ என ஒரு குரல் பக்கத்தில் இருந்து வந்தது. இராஜதந்திரியின் பாணியில் பதில் சொல்லாததுடன், கேட்காத மாதிரி இருந்தேன்
அடுத்தநாள் காலையில் நல்ல செய்தியுடன் விடிந்தது. சிங்கப்பூர் விமானசேவையால் ஹோட்டேலுக்கு கொண்டுவந்து தரப்பட்டது.இலங்கையில் இருந்து சிங்கப்பூர், அங்கிருந்து மூனிச், இறுதியில் ஹெல்சிங்கி என்பது, பொதிகளை மாற்றியவர்களுக்கு தலை சுற்றியிருக்கவேண்டும்.
இரண்டு நாட்கள் தங்கி பார்த்த ஹெல்சிங்கி நகரத்தின், துறைமுகப்பிரதேசம் பால்டிக் கடலில் அமைந்துள்ளது. பால்டிக் கடல் உப்புத்தன்மை குறைந்தது. பால்டிக் நாடுகளில் 0.6 வீதம் டென்மார்க் அருகே 1.5 வீதமும் உள்ளது. இது கடல் நீரில் 3.5 வீதத்திலும் மிககுறைவானது வாயில் வைத்துப் பார்த்தபோது எங்களுர் கிணற்றுத்தண்ணிபோல் இருந்தது. காரணம் ஏராளமான ஆறுகள் இங்கு கலப்பதோடு டென்மார்க் அருகே சிறிய அளவே அத்திலாந்திக் சமுத்திரத்தோடு தொடர்பாக உள்ளதே.
நாங்கள் இருந்த ஹோட்டேலின் அருகாமையில் சந்தை சதுக்கமிருந்தது அங்கு உணவு மற்றும் கைவினைப்பொருள்கள் விற்றார்கள். எதிரே அழகான லூதரன் தேவாலயம் உள்ளது. பெரும்பாலான பின்லாந்து மக்கள் லூதரன் (Lutheran Church) என்ற கிறிஸ்தவப்பிரிவை சேர்ந்தவர்கள். துறைமுகம் அருகே, மேற்கைரோப்பாவில் பெரிய அழகிய ரஸ்சிய ஓதோடொக்ஸ் தேவாலயம் உள்ளது.(Uspenski Cathedral) கத்தோலிக்க தேவாலங்களைவிட ஓதோடொக்ஸ் தேவாலயங்கள் அழகாக இருந்ததாக தெரிந்தது.
ரஸ்சியாவின் பகுதியாக பின்லாந்திருந்தபோது ரஸ்சிய மன்னரில் இருந்து பிரபுக்கள் ஹெல்சிங்கியில் மாளிகைகளை உருவாக்கி தங்கினார்கள். ரஸ்சிய மன்னர்கள், பிரபுக்கள் தொடர்ச்சியாக உள்சதியால் கொலை செய்யப்படுவது வழமையான விடயம். பீட்டஸ்பேக்கிலும் பார்க்க இங்கு அவர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.
“மூன்று மணி நேரத்தில் காரில் பீட்டஸ்பேக் போய்விடலாம்” என நாங்கள் சந்தித்த ரஸ்சிய இளம் பெண் சொன்னாள். அவளே அந்தப்பகுதியில் எங்களது புகைப்படப்பிடிப்பாளராகினாள்.
ஒரு காலத்தில் புகழ்பெற்ற நோக்கியா பின்லாந்தில் இருந்து ஆனால் இப்பொழுது மங்கிவிட்டது. துருவக்கடலில் பாவிக்கப்படும் பனி உடைக்கும் கப்பல்களில்( Ice breakers)) 60 வீதம் பின்லாந்திலே கட்டப்படுகிறது.
பின்லாந்தின் 19 ம் நூற்றாண்டு புகழ்பெற்ற சங்கீத மேதை ஜேன் சிபலஸ் (Jean Sibelius ) நினைவாக பைப்புகளால் ஆன நினைவுச்சின்னம் பார்பதற்கு அழைத்துச் சென்றார்கள். அது அமைந்திருந்த பூங்காவும் இந்த நாட்டில் ஒரு சங்கீத மேதையை எப்படி கவுரவிக்கிறார்கள் என்பதை காட்டியது. ஒரு விதத்தில் பாரதிபோல் தாகூரைபோன்று பின்லாந்து தேசியத்தை உருவாக்கியவாராக கொண்டாடப்படுகிறார்.
மறுமொழியொன்றை இடுங்கள்