பெருமாள் முருகன் எழுதிய பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை

நூல் அறிமுகம் :

நடேசன்

பெருமாள் முருகன் தனது முன்னுரையில் தான் அறிந்த ஐந்து விலங்குகளில் மாடுகளை பன்றிகளை பற்றி எழுதமுடியாது. நாய்களும் பூனைகளும் கவிதைக்கானவை என்கிறார். வெள்ளாடுகள் சுறுசுறுப்பானவை என்பதால் அவற்றை வைத்து நாவல் எழுதியிருக்கிறார். தெய்வங்களைப்பற்றி எழுத பேரச்சம் எனவே அசுரர்களை பற்றி எழுதுகிறேன் என்கிறார்.

இப்படி அவர் எழுதிய நாவல் புனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை .

கோகுல் எழுதிய ஓவர்கோட்டை(Gogol’s ‘Overcoat’)ஆவிகளின் கதை என்றால் பெருமாள் முருகன் எழுதியது ஆடுகளின் கதை. ஆனால் ஓவர்கோட்டை மற்றவர்கள் ரஷ்ஷியாவில் நிலவிய வறுமையை எடுத்துரைக்கும் குறியீட்டு சிறுகதையாக நினைத்தால் , பெருமாள் முருகனும் தமிழகத்தின் வறுமையையும் அரசியலில் மக்களுக்கும் அரசுக்கும் உள்ள தூரத்தையும் எழுதியிருக்கிறார் எனலாம்.

அவரது நாவலைப் பார்ப்போம்

எங்கே பிறந்தது எனத்தெரியாத ஒரு நாள் வயது ஆட்டுக்குட்டியை வளர்ந்தால் ஒரே ஈற்றில் ஏழு குட்டிகள்போடும் என்று சொல்லி எங்கிருந்தோ வந்த ஒருவனால் ஒரு கிழவனுக்கு கொடுக்கப்படுகிறது. அந்த ஆட்டுக்குட்டியை ஒரு கிழவனும் கிழவியும் வளர்க்கும் கதையே இந்த நாவல்.

இந்நாவலை ஆட்டுக்கதை என நினைக்கலாம். ஆனால், இது ஒரு அரசியல் குறியீட்டு நாவல். மழையற்று வரண்ட மக்களது கதை.
பட்டினி பஞ்சம் என்பது என்ன என்பதை மட்டுமல்ல அங்குள்ள மக்களது வாழ்வின் போராட்டமும் அவைதான் என்பதையும் படம் பிடித்துக்காட்டியுள்ளார்.

எந்த விவசாயிக்கும் சாதாரணமாகத் தோன்றும் கனவே இங்கு நாவலாக விரிகிறது. இதை நாவல் என்று சொல்வதைவிட ‘நொவலா’ எனலாம். கிழவன் கிழவி மற்றும் அந்த ஆட்டுக்குட்டியே பிரதான பாத்திரங்கள். மற்றவை இவர்களுக்காக உருவாக்கப்பட்டவை.

நாவலுக்கான உச்சமோ முரண்பாடுகளோ அற்ற நேர்கோட்டுக்கதை. பெருமாள்முருகன் அதை மிகத்திறமையாக, கதையை ஆவலோடு வாசிக்க எம்மை ஒரு மழையற்ற கிராமத்திற்கு அழைத்து சென்றிருக்கிறார்.

அரசியல்

சர்க்காரது பிடி எப்படி மக்களின் மேல் வலையாக பின்னப்பட்டிருக்கிறது என்பதை ஆடுகளை கணக்கெடுத்து பதிவதிலும், அவற்றிற்கு காதுகுத்தி அடையாளமிடுவதிலும் சொல்லப்படுகிறது.

அதற்கு மேல் அரசாங்கத்தின் கொடுமையை புரியவைக்க பாவித்த வார்த்தைகள் சில:

“வாயிருப்பது மூடிக்கொள்ள, கையிருப்பது கும்பிடுபோட, காலிருப்பது மண்டியிட, முதுகிருப்பது குனிய, உடலிருப்பது ஒடுங்க”

“தன்மக்களை எந்தக்கணத்திலும் எதிரிகளாக்கி, துரோகிகளாக்கும் வல்லமை படைத்தது அரசாங்கம்”.

“குனிவைத் தளை என உணராத பாக்கியம் பெற்றவை செம்மறியாடுகள்”

தற்கால ஊடகங்களுக்கு

செய்திக்காக – நிருபர் பேட்டி எடுக்கும்போது “ஏழு குட்டி போடும் வெள்ளாட்டை எல்லோரும் வளர்க்க வேண்டும். அப்பதான் நாடு முன்னேறி பேரரசாகும்” என்று சொல்லும்படி கிழவனிடமும் கிழவியிடமும் கேட்க, அவர்களும் “சரி அப்படியே சொல்லலாம்” என்கிறர்கள்.

கதையின் மென்மையான பகுதிகள்

ஆடுக்குட்டி வந்ததும். கிழவனும் கிழவியும் ஒருவருக்குள் ஒருவர் பேசிக்கொள்கின்றனர். அப்படியான பேச்சு அவர்களிடம் பல காலமாக நடந்ததில்லை.

மேற்கூறிய பகுதி பலருக்குப் பொருந்தும். எங்கள் குடும்பத்தில் வேலை முடிந்து நானும் மனைவியும் வீடு திரும்பினால், எமது வீட்டின் செல்லப்பிராணி சிண்டி எனப்படும் நாய்க்கு, சாப்பாடு வைத்ததா என்ற கேள்வியே முதலாவது வார்த்தையாக இருக்கும். இவ்வாறு வளர்ப்பு மிருகங்கள் மனிதர்களின் உறவுகளை இறுக்கமாக்குகின்றன.

வயதான கிழவி, ஆனால் சிறிய ஆட்டுக்குட்டிக்கு காது குத்தும்போது இரத்தம் வந்ததால் சர்க்கார் அதிகாரியுடன் சண்டைக்குச் செல்கிறார். அந்த தார்மீகமான துணிவு எங்கிருந்து வந்தது? அன்பு செலுத்தும் குட்டியை நினைத்து தன்னை மறந்து வரும் கோபம், அடிப்படையான மனிதப் பண்பாகும்.

நகைச்சுவை

அதிகாரிகள் கறுப்பாட்டை வெறுக்கிறார்கள் காரணம் மனிதர்களிலும் கருமையை வெறுக்கிறார்கள். குற்றம் செய்தவர்கள் கறுப்பாக இருந்தால் இருளில் மறைந்துவிடுவார்கள். கண்டுபிடிப்பது கடினமென்பதால்.

இந்த வசனத்தை நினைத்தபோது நான் நினைத்தேன் இந்தியா மட்டுமல்ல நமது இலங்கையிலும் இதற்குத்தான் வெள்ளைப் பெண்ணைத்தேடுகிறார்கள்?

யதார்த்தம்

கிழவி தான் வளர்த்த ஆட்டின் இறைச்சியை உண்ணமாட்டேன் என பல இடத்தில் சொல்கிறாள். ஆனால், நேசம் பாசம் ஒரு அளவுதான். கொடிய பஞ்சம் வரும்போது வளர்த்த குட்டியை உப்புப்போட்டு தின்கிற இடம் உண்மையில் மிகவும் யதார்த்தமானது.

சோகம்

கிடாய்களின் விதையடிப்பு விபரித்த இடம் என்னை வெகுவாக பாதித்தது.

இந்த நாவலில் நவீன கதையின் முத்திரைகளையும் காணலாம். ஒரு விடயத்தை வார்த்தைகளால் சொல்லாமல் வரிகளால் படம் பிடித்துக்காண்பித்த தருணங்கள் பல இடங்களில் எனக்குப்பிடித்தது. மனத்தில் பதியவைத்த இடம்:

“சட்டென்று குட்டியைத் தூக்கி கிழவன் கையில் வைத்தான். சம்மட்டி உரசியதுபோலிருந்தது அடுத்த கணம் கையில் ஒரு பூ”

பெருமாள்முருகனின் ஆட்டைப்பற்றிய ஆழமான அறிவு அதிலும் இனப்பெருக்கம் சம்பந்தமான அறிவு மிருகவைத்தியனாக என்னால் மெச்சக்கூடியது

நாவலில் உள்ள சில நெருடும் இடங்களை புறந்தள்ளமுடியவில்லை. ஆரம்பத்திலே அந்தக்கிராமம் அசுர உலகக் கிராமம் என கோடுகாட்டியபோது மாய யதார்த்தமானதென்பதைப்புரிந்து கொண்டாலும். தொடர்ச்சியான யதார்த்த சித்திரிப்பு கதையை கிராமியக்கதையாக்கி எமது மனதில் நடைபோட வைக்கிறது.
இறுதியில், முடிவின் மாயமாக காட்டும்போது சப்பென்றுபோனது. வாசகர்களுக்கு இடையில் கொஞ்சமாவது கோடு காட்டியிக்கவேண்டும். சினிமாவில் இருவர் பேசிக் கொண்டிருக்கும்போது, அங்கு இருவரிடையே துப்பாக்கி சண்டை நடந்தால் நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம். குறைந்தது சில தடவைகள் அந்தத் துப்பாக்கிகள் அவரவர் இடுப்பில் இருப்பதைக் காட்டவேண்டும். இதுவே நம்பகத் தன்மையை உருவாக்கும். இலக்கிய மொழியில் போர் சடோவிங்(Foreshadowing) என்பார்கள்.

ஆரம்பத்தில் சர்க்காரை வார்தைகளால் காட்டியவிதத்தில் ஜோர்ச் ஓவலின்1984 பாணியில் அல்லது சோவியத் ஸ்டாலினின் மிகவும் கொடுமையான அரசாக வரும் என்றால் அந்த எதிர்பார்ப்பு பொய்த்துவிட்டது. இந்த அரசு பஞ்சம் வரும்போது வீட்டுக்கு வீடு கூழ்காய்ச்சியும் அரைப்படி மாவும் கொடுத்த அரசாக வருகிறது. அதுவே இணக்க செயலாக மாறிவிடுகிறது.

மூன்று மாதத்தில் இரண்டு முறை வாசித்த நாவல் பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை.

இரண்டாவது முறை வாசித்தபோது புது விடயங்கள் இடைவெளிகள் தெரிந்தன.

( அவுஸ்திரேலியத்தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வாசிப்பு அனுபவப்பகிர்வில் சமர்ப்பிக்கப்பட்ட உரை)
—0—

“பெருமாள் முருகன் எழுதிய பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை” மீது ஒரு மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: