சாந்தி சிவகுமாரின் வாசிப்பனுபவம்
”நைல் நதிக்கரையோரம்” நான் படித்த முதல் பயணநூல். அதனால், எந்த அனுமானங்களும், எதிர்பார்ப்புகளுமின்றி படிக்க துவங்கினேன்.
முதல் இரண்டு அத்தியாயங்கள் பயணநூல் போன்று இருக்கலாம். அதன் பின் உள்ள அத்தியாயங்களை படிக்கும்பொழுது வரலாற்று நூலை படிப்பதை போலத்தான் உணர்ந்தேன்.
முதல் அத்தியாயத்தில் முதல் வரியை அவர் தொடங்கியுள்ள விதம் பலருக்கு அதிர்ச்சியாகவும், சிலருக்கு வியப்பாகவும் இருக்கலாம். ஆனால், ஒரு மருத்துவர் எனும் முத்திரையாகவே நான் அதை பார்க்கிறேன்.
மருத்துவர் என்பதை கடந்து ஓர் ஆய்வாளர்போல் வரலாற்று கதைகளையும், நிகழ்வுகளையும் துல்லியமாகவும், சுவாரசியமாகவும் பகிர்ந்துள்ளார். உதாரணத்திற்கு, நாம் ஓலை சுவடிகளில் எழுதியதைப்போல எகிப்தியர்கள் பாபிரஸ் (papyrus) என்ற இலையில் எழுதியதையும் பிற்காலத்தில் அதுவே பேப்பராக ஆக மாறியது போன்ற சுவையான செய்திகள் புத்தகம் முழுவதும் உள்ளது.
பிரமிடுகள், அடிமைகளால் கட்டப்பட்டது என்றுதான் நானும் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் 90,000 தொழிலாளர்களுக்கு 20 வருடங்கள் எடுத்தன என்பதும், நைல் நதியில் வருடத்தில் மூன்று மாதங்கள் நீரோட்டம் குறைவதால் அந்த மூன்று மாதங்கள் மட்டுமே பிரமிட் கட்டும் வேலையில் ஈடுபட்டிருக்கின்றனர். ஏனைய நாட்களில் விவசாயமே செய்துள்ளனர் என்ற செய்தி வியப்பளித்தது. மேலும், ஏன் பிரமிட்டை கட்டவேண்டும் என்று எகிப்தியர்களுக்கு தோன்றியது, அதனுள் ஏன் மம்மிக்களை வைத்தனர் போன்ற தகவல்களையும் அளித்துள்ளார்.
”இரா” என்றால் பழைய எகிப்திய மொழியில் சூரியன் என்று பொருள். எகிப்தியர்கள் சூரியனை வழிபடுபவர்கள். அதனால், பல அரசர்கள் ”இரா” வை தன் பெயருக்கு முன் சேர்த்துகொண்டனர். இராம்சி என்னும் அரசன் 67 ஆண்டுகள் எகிப்தை ஆண்டான். அது எகிப்தின் செழுமையான காலம். திரு. நடேசன் அவர்களின் ஆதர்சமான மன்னர். அவர் இராம்சியை பற்றி அளித்துள்ள தகவல்களை படித்த பின்பு இராம்சி நமக்கும் ஆதர்சமாகிவிடுவார் என்பதில் ஐயமில்லை. துட்டன்காமன் என்னும் புகழ் பெற்ற அரசனைப் பற்றியும் விரிவாக எழுதியுள்ளார்.
தெற்கிலிருந்து வடக்காகப்பாயும் ஓரே முக்கிய நதி, நைல் நதி. ஆகவே, நைல் நதிப்பயணம் எகிப்தியர்களுக்கு இலகுவானது. காற்றுக்கு இசைவாக கப்பலோட்டம் இருந்ததால் எகிப்தியர்கள் பெரிய கப்பல்களையோ, தேர்ச்சிபெற்ற மாலுமிகளையோ உருவாக்கவில்லை எனும் வரலாற்றாசிரியர்களின் கருத்தை பதிவு செய்துள்ளார்.
இந்த புத்தகத்தை வாசிக்கும்பொழுது, எகிப்திற்கும் இந்தியாவிற்குமான வரலாற்று, பண்பாட்டு ஒற்றுமைகளை கவனிக்காமல், புறந்தள்ள இயலாது.
ஆங்கிலேயர்கள் எப்படி இந்தியாவை 300 வருடங்கள் ஆண்டார்களோ, அதே போன்று கிரேக்கர்கள் எகிப்தை ஆண்டுள்ளார்கள். இந்தியப் பண்பாட்டில் எப்படி பல சிறு தெய்வங்கள் உள்ளதோ அதே போன்று எகிப்தியர்களுக்கும் கலைகளுக்கு ஒரு தெய்வம், விவசாயத்திற்கு ஒரு தெய்வம், உயிர் காக்கும் தெய்வம் என பல தெய்வங்கள் உள்ளன. குதிரைகள், மொகலாயர்களால் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டது போல் ஹிஸ்கோஸ் என்பவர்களால் (இக்கால பாலஸ்தீனமாக இருக்கலாம்) எகிப்திற்கு வந்தன. கோயில்களின் அமைப்பும் இந்(து)தியக் கோயில்களின் அமைப்பை ஒத்து இருப்பதை குறிப்பிடுகிறார்.
”நட்” என்ற வானமும், ”ஹெப்” என்ற பூமியும் நான்கு கடவுளைத் தருகிறது. இந்த நான்கு கடவுளையும் கடந்து நாம் எகிப்தின் வரலாற்றை பார்க்கமுடியாது. புத்தகம் முழுக்க கர்ணபரம்பரை கதை என எகிப்தியர்களின் இதிகாச, வரலாற்று கதைகளை சரியான இடத்தில், சுருக்கமாக சொல்லி செல்கிறார். வரலாற்று நாயகர்களையும் இதிகாச நாயகர்களையும் பிரித்து பார்க்க முடியாதபடி பின்னிப் பிணைந்துள்ளன.
2000 வருடங்கள் முன்பே உலகத்தின் எந்த நாட்டின் வரலாற்றிலும் இல்லாத அளவு பெண்கள் முக்கியத்துவமடைந்துள்ளார்கள். பெண்ணை மணந்தவரும் அரசாளலாம் என்பதால் வெளியில் மணமுடிக்காமல் ஒன்றுவிட்ட சகோதரனை/சகோதரியை திருமணம் செய்யும் வழக்கம் இருந்துள்ளது.
ஹட்ஷிபுட், நெப்ரிட்டி, நெபிரட்றி மற்றும் கடைசி அரசி கிளியோபாட்ரா போன்று பல பெண்கள் ஆளுமையுடன் இருந்துள்ளனர். கிளியோபாட்ரா பேரழகி மட்டுமல்லாமல் அறிவும், ஆற்றலும் பெற்றவள். பல மொழிகளில் தேர்ச்சி பெற்றவள். அவள் அறிவையும் ஆற்றலையும் பார்த்து ஜுலியஸ் சீசர் ஆச்சரியப்பட்டான். அக்காலத்தில் ரோமாபுரிப் பெண்கள் படிப்பற்று இருந்துள்ளனர். ஹட்ஷிபுட் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசாண்டாள். உலகத்தின் முதல் தாவரவியல் பூங்கா, விலங்கியல் பூங்கா என்பன 3500 வருடங்களுக்கு முன்பு ஹட்ஷிபுட்டினால் எகிப்தில் உருவாக்கப்படுகின்றன. ஒரு பெண்ணரசியின் பெயர் வரலாற்றில் இடம் பெறுவதை விரும்பாத எகிப்திய சமூகம் அவர் பெயரை வரலாற்றிலிருந்து அகற்றியது போன்ற வரலாற்று செய்திகளையும் முன்வைக்கிறார்.
வரலாற்றை மட்டும் பேசாமல் முபாரக், இஸ்ரேல்- பாலஸ்தீன சிக்கல் என சமகால அரசியலையும், கேள்விகளையும் நம் பார்வைக்கு வைத்துள்ளார்.
கால்நடை மருத்துவர் என்பதால் இறுதி இரண்டு அத்தியாயங்களிலும் எகிப்திய மருத்துவ விவரங்களை தொகுத்து அளித்துள்ளார்.
நைல் நதிக்கரையோரம் படித்த கடந்த மூன்று வாரங்களும் பிரமிட்டுகள், மம்மிக்கள் என சிந்தனை முழுவதும் எகிப்தியர்கள் இருந்ததுமட்டுமல்லாமல் இவற்றை நேரில் சென்று பார்க்கவேண்டும் எனும் ஆவல் மேலோங்கியிருப்பது இந்தப் புத்தகத்தின் வெற்றியே.
அவுஸ்திரேலிய தமிழ் கலை இலக்கிய சங்கத்தின் நிகழ்வில் பேசியது
மறுமொழியொன்றை இடுங்கள்