சந்தியாகோ-சிலி

தென்னமெரிக்கா நாட்குறிப்புகள்.

நடேசன்
salvador-allende3
கவிஞர்களுக்கும் புரட்சியாளர்களுக்கும் கனவுதேசங்களாக தென்னமரிக்கா பலகாலமாக இருந்தது.எனக்கு இதுவரையும் செல்லாத இடங்கள், ஆனால் செல்வதற்காக ஆவலாக இருந்தேன். தென்னமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்காவை இலத்தீன் அமெரிக்கா என்பார்கள்.. இலத்தீன் மொழியில் இருந்து உருவாகிய இரு மொழிகளான போர்த்துக்கீஸையும் ஸ்பானிஸ் மொழியையும் பேசுபவர்களைக் கொண்டவை தென்னமெரிக்க நாடுகள். 15ஆம் நூற்றாண்டில் மத்தியதரைக்கடல் நாடுகளான ஸ்பெயினும் போர்த்துகலும் உலகத்தை இரண்டாகப் பிரித்துக் கொண்டன. அவை ஒன்றோடு ஒன்று சண்டை போடாமல் இருக்க பாப்பாண்டவர் அவர்களுக்கிடையே ஒப்பந்தத்தை ((Treaty of Tordesillas) உருவாக்கினார். இதன் பிரகாரம் அவர்களால் காலனிகளை முக்கியமாக தென்னமெரிக்காவில் அதிக சச்சரவு இன்றி பங்கு போடமுடிந்தது.

நெப்போலியனால் ஸ்பெயின் தோற்கடிக்கப்பட்டபோது படிப்படியாக இந்த தென்னமெரிக்க நாடுகள் சுதந்திரமடைந்தாலும் தொடர்ச்சியாக அங்கு அமைதி நிலவவில்லை

20 ஆம் நூற்றாண்டில் இடதுசாரி கம்யூனிஸ்ட் இயக்கங்களும் அதற்கு எதிராக இராணுவ எதிர்புரட்சியுமாக இரத்த ஆறு ஓடிய நிலமாக இருந்தது. தற்போது எக்காலத்திலும் இல்லாத அமைதி நிலவுகிறது . அதிகமாக உல்லாசப்பிரயாணிகள் செல்கிறார்கள். சிலி , ஆர்ஜன்ரீனா, பிரேசில் என்பன வளர்ச்சியடைந்து வருகின்றன. ஜனநாயகமுறையில் அரசாங்கங்கள் மாறுகின்றன. மக்கள் அதிருப்தியைக் காட்டத் தெருவுக்கு பயமற்று இறங்கமுடிகிறது. என்னைப் பொறுத்தவரை மிருகவைத்திய சர்வதேச மகாநாடு கொலம்பியாவில் நடப்பதே அங்கு ஓரளவு அமைதி நிலவுகிறது என்பதற்கு அறிகுறி என்பேன். அவுஸ்திரேலியாவில் இருந்து மனைவியோடு ஆறு நாடுகள் பிரயாணம் செய்ய முடிவு செய்தேன்.

அவுஸ்திரேலியாவின் குவாண்டஸ் விமானம் தென்னமெரிக்காவில் சிலி நாட்டின் தலைநகரான சந்தியாகோவுக்குத்தான் செல்லும். ஆனால், எமது பயணம் கொலம்பியாவை நோக்கியிருந்தது. அங்கு வேறு விமானத்தில் பிரயாணம் செய்யவேண்டும் .

சிட்னியில் இருந்து அகலமான பசுபிக் சமுத்திரத்தை 13 மணிநேரத்தில் கடந்து மதியத்தில் அதே நாளில் மாலையில் போய் இறங்குவதற்கு முடிந்தது. சிலி உலகத்திலே வடக்கு தெற்காக நாலாயிரம் கிலோமீட்டர் மேல் நீளமான நாடு. மேற்கே பசுபிக் கடலும் கிழக்கே அந்தீஸ் மலைத்தொடர் எல்லைகொண்ட நாடு. சிலியின் வடபகுதி நீர் அதிகமற்ற வறண்ட பாலைவனம் . அதில் பெரும்பகுதி பொலிவியாவிடம் இருந்து கைப்பற்றியது. நடுப்பகுதியில்தான் சந்தியாகோ. அந்தீஸ் மலையின் பள்ளத்தாக்கில் உள்ளது. இந்த நகரத்திலே நாட்டுமக்களில் 75 வீதமானவர்கள் வாழ்கிறார்கள்.

எமது விமானம் வெண்பனி படர்ந்த மலைகளுக்கும் அதன் மேல் போர்த்திருந்த முகில்களுக்கும் இடையே பறந்து, மாலைநேரத்தில் இறங்குவது இதயத்துடிப்பைக் கூட்டினாலும், விமானத்தின் கண்ணாடியூடாகத் தெரிந்த அழகான காட்சிமட்டுமல்ல இது வரையில் விபத்தைச் சந்திக்காத குவான்டஸ் நிறுவனத்தின் விமானம் என்பதும் நிம்மதியைக் கொடுத்தது. எதற்கும் தயாராக அவுஸ்திரேலியாவில் இருந்து புறப்பட முன்பாக உயில் எழுதி பிள்ளைகள் இருவரிடம் கையெழுத்து வாங்கியிருந்தேன்.

1972 ஆம் ஆண்டில் உருகுவேயில் இருந்து விளையாட்டு வீரர்கள் உட்பட 45 பேருடன் சன்ரியாகோ செல்லப்புறப்பட்ட விமானம் 3600 மீட்டர் உயரத்தில் பொலிவியா – ஆஜன்ரீனா எல்லையில் சிதறியபோது அச்சம்பவத்தில் உயிர் தப்பிவாழ்ந்தவர்கள், இறந்தவர்களினது மனித சடலங்களை உண்டு வாழ்ந்து 72 நாட்களின் பின்பு 16 பேர் உயிர் தப்பினார்கள். இந்தக் கதையை நான் என்மனைவி சியாமளாவிடம் சொல்லவில்லை. அவரைப் பொறுத்தவரை ஒருமாதம் பேரக்குழந்தையை பார்க்காமல் இருக்கவேண்டுமே என்பதும் வளர்ப்பு நாயை எங்கோ தூரத்தில் அறிமுகமற்றவர்கள் இடத்தில் விட்டுவிட்டோமே என்பது பிரதான காரணங்களாக இருந்தது. மெல்பனில் இருந்து 50 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் நாய்களைப் பராமரிக்கும் ஒரு இடத்தில் எங்களது வளர்ப்பு நாய் சிண்டியைப் பார்த்துக்கொள்ள கொடுத்திருந்தோம்.படுக்கையறையில் கட்டிலின் அருகே படுத்திருக்கும் சிண்டி எப்படி புது இடத்தில் இருக்கும் என்ற கவலைகள் மனைவிக்கு முக்கியமாக இருந்தது. சில விடயங்ளைத் தெரியாமல் இருப்பது எங்வளவு நல்லது.

பனிதழுவிய மலைச்சிகரங்களை ஊடறுத்துப் பறக்கும் கங்காரு விமானம் சநதியாகோ விமான நிலயத்தில் குழந்தையை தாய் தொட்டிலில் போடுவதுபோல் எந்த குலுக்கலுமற்று இறங்கியது. அமெரிக்கர்களாக இருந்தால் கை தட்டுவார்கள்.அவுஸ்திரேலியர்கள் அதைப் பொருட்படுத்துவதில்லை.

மாலையில் இறங்கியபோது ஏற்கனவே எமக்காக ஒழுங்கு செய்யப்பட்ட வழிகாட்டி உதவியுடன் ஹோட்டலுக்குச் சென்றோம். அந்த ஹோட்டல் நூறு வருடங்களுக்கு மேல் பழமையானது. ஆனால், நகரின் மத்தியில் இருந்தது. ஹோட்டல்காரரை விட்டால் தென்னமெரிக்காவில் ஆங்கிலத்தை நம்பி பிரயோசனமில்லை.
இரவு சாப்பிடுவதற்கு வெளியே வந்து பார்த்தோம். நகரம் மிகவும் அழகாகக் கண்களில் விரிந்தது. பூங்காக்கள் தெருக்களின் இடையே இருந்தது. நகரத்தை ஊடறுத்து அந்தீஸ் மலையில் இருந்துவரும் மப்பச்சோ ( Mapocho River) ஆறு ஓடுகிறது.
img_6920

சல்வடோர் அலன்டே

நாங்கள் இருந்த பகுதி பல பல்கலைக்கழகங்களை கொண்டிருந்ததால் எங்கும் மாணவர்களும் மாணவிகளும் நிறைந்து , இளவயதினர் மட்டும்வசிக்கும் நகரம் என நினைக்கத் தோன்றியது. மற்றைய இடங்களில் நைட்கிளப் மியூசிக் உள்ளேதான் கேட்கும். ஆனால், சநதியாகோவில் முழு நகரமும் சங்கீதத்தால் நிரம்பி வழிந்தது . நைட் கிளப்புகள் உள்ளே மட்டுமல்ல நடனங்கள் நடைபாதையெங்கும் வழிந்தது.
ஒவ்வொரு உணவுக்கடைகளிலும் வாசலில் நின்ற பெண்கள் உணவுக்கு உள்ளே அழைத்தனர். ஸ்பானிய மொழியில் எது பேசினாலும் சங்கீதமாகத் தெரிந்தது. ஆனால் புரியவில்லை.

சிலி, தென் அமரிக்காவில் முன்னேறிய நாடு மட்டுமல்ல மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது திருட்டு வழிப்பறி குறைவானது என்பதால் அன்று இரவு துணிந்து பல இடங்களுக்கும் நடந்தோம்.

தென்னமெரிக்காவில் நல்ல சாப்பாடு சாப்பிடவேண்டுமென்றால் மாட்டிறைச்சியை தவிர்க்க முடியாது. மாடு ஐரோப்பியரால் அங்கு எடுத்துச் செல்லப்பட்டது. சீன, இந்திய உணவகங்களைக் காணக்கிடைக்கவில்லை. மாட்டிறைச்சியோடு குடிப்பதற்கு ஏராளமான வைன்கள் இருந்தன. அவுஸ்திரேலியாவின் விலையில் பார்த்தால் இங்கு அரைவிலைக்கு கிடைக்கும். சிலியில் மத்தியதரைக்கடல் சுவாத்தியம் இருப்பதால் மிகவும் அருமையான திராட்சைகள் வளர்க்கிறார்கள். சகலவிதமான வெள்ளை சிவப்பு வைன்களும் கிடைக்கும். மீன் சாப்பிட நினைத்தால் பெரும்பாலும் நன்னீர் மீன்களான ரவுட் சமன் மட்டுமே கிடைக்கும்.

சிலியில் மற்றைய தென்னாபிரிக்க நாடுகளை ஒப்பிடும்போது பெரும்பாலானவர்கள் ஐரோப்பிய வம்சாவழியினர். மிகவும் குறைந்தவர்களே அந்தீஸ் மக்கள். மப்போட் எனப்படும். அவர்கள் சிலியின் தென்பகுதியில் வாழ்கிறார்கள். பசுபிக் கடல்பகுதியில் அடிமை வியாபாரம் நடக்காததால் கருப்பின மக்கள் இங்கில்லை..

சிலி என்றவுடன் என் போன்று 80களில் இடதுசாரியாக இருந்தவர்களுக்கு நினைவுக்கு வருவது ஆயிரம் நாட்கள் சிலியை ஆண்ட சல்வடோர் அலன்டே. அவரை இராணுவப் புரட்சி மூலம் கவிழ்த்த ஜெனரல் ஆகஸ்ரோ பினோச்சே மற்றும்இலக்கியத்தில் போற்றப்பட்ட நோபல் பரிசுபெற்ற கவிஞர் பாப்லோ நேருடா.
தற்பொழுது இசபல் அலண்டேயின்(இசபலின் தந்தையும் சல்வடோரும் ஒன்று விட்ட சகோதரர்கள்) எழுத்துக்களைப் பார்த்தால் எதிர்காலத்தில்இன்னுமொரு பெரிய பரிசு சிலிக்கு காத்திருக்கிறது என எண்ணமுடியும்.

16 ஆம்நூற்றாண்டில் வந்த ஸ்பானியர்களின் காலனியாக இருந்த சிலி, நெப்போலியன் ஸ்பெயினை கைப்பற்றியதால் சுதந்திரமாகியது. ஆனால் ஸ்பானியர்கள் வருவதற்கு முன்பாக சிலியின் தெற்கே மப்போட் என்ற அந்தீஸ் மக்கள் 1.5 மில்லியன் வசித்தார்கள். சிலியின் வடபகுதி இன்கா மக்களின் பகுதியாக இருந்தது. தெற்கே இருந்த மப்பசே (Mapuche) மக்கள் தொடர்ச்சியாக ஸ்பானியரோடும் பின்னர், சிலிய அரசாங்கத்தோடும் ஆயுதப்போராட்டம் செய்தார்கள்
சமீபத்திய தொல்பொருள் ஆராய்ச்சியில் மிகவும் ஆச்சரியான உண்மைகள் வெளியாகி உள்ளன. ) 1975 ஆம் ஆண்டு சிலியின் தென்பகுதியில் மொனரே விடே ( Monte Verde) கண்டெடுக்கப்பட்டவை இந்த இடத்தில்14000 வருடங்களின் முன்பான உணவும் பொருட்கள் இருந்ததும் மக்கள் கூட்டமாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது . 13000 வருடங்கள் முன்பான உருளைக்கிழங்கு, மாமிசம் ,கடல் பாசி எனப் பல உணவுப் பொருட்கள் இருந்திருக்கின்றன என்பது காபன் 14 படி தெரிகிறது. 20 -30 பேர் கொண்ட ஒரு கிராமமாக இந்தப் பகுதி இருந்திருக்கிறது. இதனால் தென் அமெரிக்காவில் நாடோடியான மக்கள் வாழ்ந்த ஆதி குடியிருப்பாகிறது. இதுவரையும் ஆசியாவில் இருந்து அலஸ்கா பகுதிவழியாக பியரிங் கடல் வழியாக வட அமரிக்காவுக்கும் பின் தென் அமரிக்காவிற்கு மக்கள் குடிபெயர்ந்தார்கள் என்ற கருத்தை சிதற வைக்கிறது. சிலியின் தென்பகுதிக்கு மனிதர்கள் கடல்மார்க்கமாக சென்றார்கள் என்பதை நம்பவேண்டியுள்ளது. பல கடல்சார்ந்த நெய்தல்மக்கள் குடியேற்றங்கள் பெருவின் கடற்கரைப்பகுதியில் தற்பொழுது கண்டு பிடிக்கப்படுகிறது. சிலியின் அட்டகாமா பாலைவனப்பகுதியில் (Atacama Desert) 7000 வருடங்கள் முற்பட்ட மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எகிப்திய மம்மிகளுக்கு 2000 வருடங்கள் முந்தியவை. இதைச் நான் குறிபிடுவதன் காரணம் 15000 வருடங்கள் மனித வரலாறும் கிட்டத்தட்ட10000 வருடங்கள் நாகரிகமான குடியேற்றமும் இருந்த தென்அமரிக்க நாகரீகம் 16ம் நூற்றாண்டில் ஐரோப்பியரால் அழிக்கப்பட்டதால் தற்போது தென்னமரிக்க மக்களின் வரலாறு தொலைந்துபோனவர்களின் வரலாறு என சொல்கிறர்கள் வரலாற்றாசிரியர்கள்.

சந்தியாகோவில் இரண்டு நாட்கள் மட்டும் நிற்கவிருந்தோம். என்பதால் விரைவில் பார்க்கமுடிந்ததை சுற்றிப் பார்க்க வழிகாட்டி விரும்பினோம். நகரெங்கு உள்ள கட்டிடங்கள் ஸ்பானிய கட்டிடக்கலையைத் தழுவிக் கட்டப்பட்டிருந்தது. நகரின் செனட் கட்டிடத்தின் அருகே சல்வடோர் அடன்டேயின் சிலையிருந்தது. அதனருகே இருந்த அரசமாளிகை 73 ம் ஆண்டு சிலியின் ஆகாயப்படையால்குண்டு வீசித் தாக்கப்பட்டது. அப்பொழுது ஜனாதிபதியாகவிருந்த சல்வடோர் அலண்டே பிடல் காஸ்ரோ கொடுத்த ஏகே 47 துப்பாக்கியால் தன்னை சுட்டுத் தற்கொலை செய்த விடயமும் நினைவுக்கு வந்தது. அந்தப் புரட்சிக்கு அமரிக்காவும் அதனது உளவுப்பிரிவும் பின்னால் இருந்தது என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயமாகப் பேசப்பட்டது.

இந்தப் புரட்சியை நடத்திய ஆகஸ்ரோ பினேச்சேக்கு எங்கும் நினைவுச் சின்னம் கிடையாத போதிலும் 17 வருடங்கள் சிலியை ஆண்டபோது ஏராளமானவர்கள் கொலைகள் செய்யப்பட்டும் சித்திரவதைகள் நடந்தது.. காணமல்போனவர்கள் பலரது குடும்பங்கள் இன்னமும் விடை தெரியாமல்த் தவிக்கிறார்கள்;. இரும்புக் கரம்கொண்டு ஆகஸ்ரோ பினேச்சேஅதிகாரம் செலுத்தியவர்.அமரிக்க உதவியோடு திறந்த பொருளாதார கொள்கையினை கடைப்பிடித்ததால் சிலியில் பல அன்னிய முதலீடுகள் நடந்து தென்னமரிக்காவில் முன்னேறிய நாடாகியது. பிற்காலத்தில் அவர் மீது சித்திரவதை கொலைகள் ஊழல் என வழக்குகள் நீதிமன்றத்தில் கொண்டு செல்லப்பட்டிருந்த இருந்த காலத்தில் இறந்தார்.
dscn0110
நேருடாவின் சந்தியாகோ வீடு

மதியத்தில் சிலியின் பவ்வலோ நேருடாவின் சந்தியாகோ வீட்டை சென்று பார்த்தோம். அது கண்காட்சி சாலையாக வைக்கப்பட்டுள்ளது அந்த வீட்டுக்குள் படம் எடுக்க அனுமதியில்லை ஆனால் மலைக்குன்றில் வடிவமைக்கப்பட்ட வீடு தொடர்ச்சியாக இல்லாது வெவ்வேறு பகுதிகளாக இருந்தது. ஆனால் ஒன்றில் இருந்து ஒன்றுக்குப் போக முடியும். அப்படிப் போகும் வழிகள் சிறிய பூந்தோட்டப் பாதைகளாக இருந்தது . வீட்டின் முன் பகுதிகளில் பல நாடுகளில் இருந்து பல ஓவியர்களது ஓவியங்கள் சிற்பங்கள் கண்ணடி பாத்திரங்கள் சிலைகள் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன

படுக்கையறையைத் தாண்டி உள்ளே சென்றதும் ஓவியங்கள் கலைப்பொருட்கள் இருந்தன.அதில் இந்தியாவில் இருந்து வந்த மரக்குதிரையும் இருந்தது. என்னைக் கவர்ந்த ஓவியம் ஒன்று அவரது மூன்றாவது மனைவியான மட்டில்லாவை இரண்டு தலையுடன் வரைந்துபிரான்சிய ஓவியர் பரிசளித்தது. அவரது மதுபான கூடமும் அதைக் கடந்து சென்றால் அவரது கிடைத்த விருதுகள் அவற்றில் நோபல் பரிசு லெனின்விருது மற்றும் பிரான்சிய அரசின் விருதுகள் இருந்தன. கடைசி அறையில் அவரது புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

சீனாவின்அதிபர் மாவோவிடமும் இரஸ்சிய அதிபர் ஸ்ராலினிடமும் நட்பாக இருந்தவர் பவ்வலோ நேருடா. பிற்காலத்தில் இருவரும் செய்தகொலைகள் அவரை மனமுடைய வைத்தது. சிலி கம்யூனிஸ்ட் கட்சியின் செனட்டராகவும் பல நாடுகளில் தூதுவராகவும் இருந்தவர் இலங்கையில் தூதுவராலயத்தில் பணிப்பெண்ணாக வந்த தமிழ் பெண்றொருத்தியை பாலியல் வன்புணர்வுசெய்ததாக ஒப்புக் கொள்கிறார். புற்றுநோயால் பீடிக்கப்பட்டு இராணுவப்புரட்சியின காலத்தில் மரணமடைந்தார். ஆரம்பத்தில் அவர் மரணம் இராணுவத்தின் சதியாக இருக்கலாம் எனச் சந்தேகப்பட்டபோதிலும் பிற்காலத்தில் மீண்டும் நடந்த பரிசோதனைகளில் அது நோயால் ஏற்றப்பட்ட மரணம் என நிருபணமானது. நாங்கள் பார்வையிட்ட சந்தியாகோ வீடு இராணுவப் பரட்சியின்போது காடையரால் உடைக்கப்பட்டது. தற்பொழுது சிலியின் தேசியகவியாகக்கொண்டாடப்படுகிறார். அவரது மற்றைய இரு வீடுகளும் இதேபோல் கண்காட்சிசாலையாக மாறறப்பட்டுளளது.
dscn0115

மாலையின் சன்டியாகே தெருவழியாக நடந்தபோது கே(Gay) லெஸ்பின்(Lesbian) மக்களும் அவர்கள்ஆதரவாளர்களும் கூடி சமவுரிமைக்கான போராட்டம் நடந்தது. அந்தப் போராட்ட இடத்தில் பாட்டுகளும் ஆட்டமுமாக நடந்தது . தென் அமரிக்கள் போராட்டத்திலும் மகிழ்வான தருணமாக எடுத்துக் கொள்வது ஆச்சரியத்தைக் கொடுத்து.பிரதான தெருவிற்கு இடையில் இருந்த பூங்காவனம் காதலர்கள் இடமாகவும் பிக்னிக் இடமாகவும் அத்துடன்புத்தகங்களை படிக்கும் இடமாக இருந்தது. நடந்து சென்ற எம்மைக்கடந்து பஸ் ஒன்று போனபோது அதில் ஏறுவதற்கு என்னிடம் இருந்த சிலியன் பீசோவை வெளியால் எடுத்தபோது பஸ்ஸல் இருந்த ஒரு பெண்மணி காசை உள்ளே வைக்கும்படி எனக்கு சமிக்கை செய்தாள் பஸ்சில் ஏறிய நாங்கள் பணம் கொடுத்தபோது சாரதி அதை வாங்காமல் எம்மை ஒரு பிளாசாவில் இறக்கிவிட்டார். இதுவரையும் உடல் மொழியில் பேசி நன்றி மட்டும் கிராற்சே என ஸ்பானிய மொழில் சொல்லிவிட்டு பிளாசாவிற்குள் சென்றோம்.

“சந்தியாகோ-சிலி” அதற்கு 4 மறுமொழிகள்

 1. Dear friend,
  Read your detailed New post
  சந்தியாகோ-சிலி
  தென்னமெரிக்கா நாட்குறிப்புகள்
  Very interesting
  Informations are in detail.
  Best Wishes
  Forwaded your New Post to my friends.
  Send more and more
  If possible please send your old posts also
  I shall try to get it from your Noelnadesan’s Blog .
  Thanks
  V. Avudaiappan . .BPharm
  India

 2. நல்ல வாய்ப்பு இதைப் போன்ற இடங்களை காண்பதற்கு ….அருமையான நடை நன்று

 3. மிக்க நன்றிகள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: